Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 13

ஒருவரின் இல்லம் என்பது வெறும் கட்டுமான பொருட்களால் ஆனது மட்டுமில்லை. அதையும் தாண்டி அங்கே நிறைய நிறைய உணர்வுகளும், உரிமைகளும் நடக்கம்.. இவையனைத்தையும் திகட்ட திகட்ட அனுபவித்தவனுக்கும், கண் முன்னே இருந்தும் கூட தன்னுரிமை என்று தெரிந்தும் தள்ளி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்த மனிதர்களுக்குத் தான் அந்த அருமை புரியும்.. உணர்ந்துகொள்ளவும் முடியும்..

இதில் பமீலா முதல் ரகம் என்றால், கமலி இரண்டாவது ரகம்.. கண் முன்னே அனைத்தும் இருந்தும், அவளுக்கான அந்த உரிமையும் இருந்தும் இதுநாள் வரைக்கும் அவ்வீட்டினில் அவளுக்கென்று எதுவுமில்லை..

இந்த வீட்டினை முழுதாய் அவள் பார்த்தது கூட கிடையாது. மகுடேஸ்வரன் மரணத்தின் போதுகூட, வரவேற்பறையில் மட்டுமே அவள் அமர்ந்திருந்தாள். பமீலாவைப் போல இவ்வீட்டின் உரியவளாய் அவள் அன்று எதுவும் செய்யவில்லை.. ஆக இன்றுதான் இந்த வீட்டினை முழுதாய் பார்க்கும் நேரம் வந்தது என்று ஒவ்வொரு இடமாய் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

சிவகாசியின் பிரசித்திப் பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைத்துதான் வனமாலிக்கும் கமலிக்கும் திருமணம் நடந்தது.. இருபக்கத்து உறவினர்கள், பின்னே முரளியின் குடும்பத்தினர் இவ்வளவுதான்.. நரசிம்மன் வந்திருந்தார்.. அதற்குமேல் யாருமல்ல.. பமீலா இந்திரா வரவில்லையா என்று ஒருசிலர் கேட்டனர்.

மணிராதா அதற்கு பதில் சொல்லாமலேயே இருந்துகொண்டார். சிவகாமி திருமணம் முடியும் வரைக்கும் மணிராதாவோடு தான் நின்றிருந்தார். வார்த்தைகள் பேசிக்கொள்ளவில்லை என்றாலும், இருவருக்கும் இருவரின் உணர்வுகளும் நன்கு புரிந்தது.

முரளியின் அம்மா வந்து “இப்போதான் சந்தோசமா இருக்கு.. முன்னமே சொல்லிருந்தா ரெண்டு கல்யாணத்தையும் ஒரேதா செஞ்சிருக்கலாம்..” என்றார்..

முரளியும் அதையே வனமாலியிடம் சொல்ல “இல்ல மச்சான் அவ்வளோ லேட் செய்ய முடியாது..” என்று வனமாலி எதோ ஒரு யோசனையில் சொல்லிவிட,

“அடடா பார்த்து மச்சான் நீங்க ரொம்ப ஸ்பீடா போறீங்க...” என்று முரளி கிண்டல் செய்ய, கமலிக்கு இவர்கள் பேசுவது எல்லாம் கொஞ்சம் வேடிக்கையாய் இருந்தது..

அவள்தான் யாரிடமும் இப்படி பேசியதில்லையே..

வந்தனா வந்து “அண்ணன் பொண்டாட்டி ஆகிட்ட.. அண்ணி சொல்லணுமா???” என்று கமலியிடம் கேட்க,

“கண்டிப்பா சொல்லணும்...” என்று பதில் சொன்னது வனமாலி..

கமலியோ அவனை முறைத்து “என்னைத்தானே கேட்டாங்க...” என, “ஹலோ ம்மா கல்யாணம் ஆகிடுச்சு.. இனி நீ வேற நான் வேற இல்லை புரிஞ்சதா...” என்றான் ஒரு பார்வை பார்த்து..

‘அட.. இவன் இன்னும் இந்த வார்த்தையை விடலையா???!!’ என்று கமலி பார்க்க,

“அண்ணா... நேரமாகுது.. கொஞ்சம் போட்டோஸ் மட்டும் தனியா நீங்க எடுத்தா, எல்லாம் கிளம்பிடலாம்..” என்றுசொல்ல,

கமலி வேண்டுமென்றே அவனிடம் “நீங்க எப்படி என்னை அண்ணி சொல்வீங்களா??” என்றாள் வேடிக்கையாய்..

என்னவோ அவளுக்கு அதை கேட்கவேண்டும் போலிருக்க, வந்தனா கூட இதை பார்த்தவள் “ஆமாம்னு சொல்லிடு தனா.. எதுக்கும் இப்போவே துண்டு போட்டிடுவோம்..” என, இவர்களுக்குள் சொல்லாமல் கொள்ளாமல் ஒரு ஒட்டுதல் வந்து ஒட்டிக்கொண்டது. அவர்களோடு வந்து முரளியும் நின்றுகொண்டான்.

மணிராதா இதனை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். இத்தனை வருடங்களில் பமீலா இப்படி வீட்டினரோடு சிரித்து பேசியது கிடையாது, அதிலும் வந்தனா வனமாலி கோவர்த்தனோடு இப்படி ஒன்றாய் நின்று பேசியதெல்லாம் கிடையாது..

அவரையும் அறியாது பமீலா கமலியிடையே ஒரு ஒப்பீடு மனம் செய்ய, “ச்சே ச்சே பமீலா நான் வளர்த்த பொண்ணு... இவ சிவகாமி பொண்ணு..” என்று தன்னை மீட்டுக்கொண்டார்.

ஆனால் இருவருமே தன் தம்பியின் மகள்கள் என்று எண்ணத் தோன்றவில்லை போல..

இறைவன் சந்நிதியை ஒருமுறை சுற்றிவந்து, பின் புகைப்படங்கள் எடுத்து என்று எல்லாம் முடிந்து அனைவரும் வீடு கிளம்ப, ‘கோவர்த்தனா..’ என்று அழைத்த மணிராதா,

மகன் தன்னருகே வரவும் “எல்லாரையும் ஹோட்டலுக்கு கூட்டிட்டு போயிடு... அப்புறம் நீ வா வீட்டுக்கு..” என்றார்..

அங்கே வந்ததில் இருந்து இப்போதுதான் பேசியிருக்கிறார்.. சில பல விஷயங்கள் என்னதான் நாம் எதிர்பாராதது பிடிக்காதது நடந்தாலும், நம்மின் குணம் நம்மை விட்டு போகாது அல்லவா.. அதுவும் பிறரை அதட்டி உறுட்டும் சுபாவம் கொண்ட மணிராதா இத்தனை நேரம் சும்மா இருந்ததே பெருசு..

யாராவது தன்னோடு பேசுவார்கள் என்று பார்த்தால், அனைவருமே அவரவர் வேலையைப் பார்த்துகொண்டு இருக்க, இத்தனை வருடங்கள் எதிலும் கலந்துகொள்ளாமல் இருந்த சிவகாமி கூட எளிதில் அனைவரோடும் கலந்துவிட்டார், ஆனால் தான் மட்டும் தனித்து நிற்பதாய் தோன்ற, வாய் பூட்டு கழண்டு விட்டது.

கோவர்த்தனும் சரியென்று சொல்லி அனைவரையும் கூட்டிக்கொண்டு ஹோட்டல் செல்ல, “நீங்களும் கூட போயிட்டு வாங்க...” என்று சங்கிலிநாதனை சிவகாமி அனுப்பி வைத்தார்..

வீட்டினர் மட்டுமே இருக்க, “ம்மா கிளம்பலாமா???” என்று வனமாலி கேட்க,

“இன்னும் நம்ம இவங்க கூட தனியா போட்டோ எடுக்கலை...” என்றாள் கமலி..

வந்தனாவிற்கோ ஒருப்பக்கம் சிரிப்பு.. இந்த கமலியை எதில் சேர்ப்பது.. அவள் சும்மா இருந்தாலும் அவள் செய்வது எல்லாம் ஏதாவது யாரையாவது தாக்குவதாகவே இருந்தது. வனமாலி கமலியை முறைக்க, “என்ன??” என்றாள் புரியாது..

சிவகாமியோ “கமலி.. அத்தைன்னு சொல்லணும்..” என்றுசொல்ல,

“ஓ....!! முன்ன பின்ன சொல்லிருந்தா, டக்குனு வந்திருக்கும்.. இனிமே பழகிக்கிறேன் ம்மா...” என்றுவிட, வனமாலிக்கோ வீட்டிற்கு போனால் போதும் என்றானது.

மணிராதா பல்லைக் கடித்து நிற்க “ம்மா வா நம்ம எல்லாம் சேர்ந்து போட்டோ எடுத்துப்போம்..” என்று வந்தனா அழைத்து, அண்ணன் அண்ணியோடு நிற்க வைக்க “அதெல்லாம் வேண்டாம்...” என்று பிகு செய்துகொண்டார் அவர்..

“அட சும்மா நில்லும்மா..” என்று வனமாலி அவரின் தோளில் கை போட்டு இறுக்கி பிடித்துக்கொள்ள,

“டேய் விடு டா...” என்று திமிறினாலும், மணிராதாவின் முகம் கேமராவைப் பார்க்க, சிவகாமி இதனை ஒரு சிரிப்போடு பார்த்துகொண்டு இருக்க,

“ம்மா நீயும் வா...” என்றாள் கமலி..

“இல்ல நீங்க எடுங்க...”
 
“ம்ம்ச் வா ம்மா..” என்று அவரைப் பிடித்து இழுத்தவள், ஒருமுறை வனமாலி அவனின் அம்மாவை எப்படி பிடித்திருக்கிறான் என்று பார்த்துவிட்டு அதேபோலே சிவகாமியை கமலியும் பிடித்துக்கொள்ள,

வந்தனாவோ “ண்ணா உனக்கேத்த ஜோடி தான் போ...” என்று சொல்லி சிரித்துக்கொண்டே புகைப்படங்கள் எடுத்தாள்.

அந்தா இந்தாவென்று அனைவரும் வீட்டிற்கு கிளம்பிட, முதலில் வனமாலியின் வீட்டிற்குதான் சென்றனர்.. வந்தனா ஆரத்தி எடுக்க, “இந்த பமீலா பொண்ணு எங்க??” என்றார் அப்போதும் முரளியின் அம்மா..

“அவ இந்திரா கூட இருக்கா...” என்ற மணிராதாவிற்கு ‘இவ சும்மாவாது இங்க வந்து நிக்க வேண்டியது தானே...’ என்று இருந்தது.

இங்கே விளக்கேற்றி, சம்பிரதாயங்கள் முடித்து, அடுத்து பெண்ணின் வீடு செல்லவேண்டும் என்று எல்லாம் சொல்ல, சிவகாமி மகளின் முகம் பார்த்தார்.. அவள் என்ன நினைத்தாளோ “அம்மா வீட்டுக்கு போகலாம்..” என்றுசொல்ல, லேசாய் சிவகாமியின் முகத்தினில் ஒரு பிரகாசம்.

அங்கேயும் சென்று விளக்கேற்றி, எல்லாம் முடிய, ராணி வந்து “அக்கா பெரிய வீட்ல தான் மத்த ஏற்பாடு எல்லாம் பண்ணிருக்கு..” என்றார்..

“ம்ம்.. அங்க யாரும் எதுவும் சொல்லலையா???”

“அம்மாவும் மகளும் ரூம் விட்டு வெளிய வரலை...”

“ம்ம் சரி.. நல்ல நேரம் பார்த்து கூட்டிட்டு போங்க.. நான் வர முடியாது.. நீ தான் பார்த்துக்கணும்..” என, “நீங்க ஒன்னும் கவலைப் பட வேணாம்..” என்று சொல்லிவிட்டு போக, இவர்கள் சாப்பிடவென உணவு இங்கே சிவகாமியின் வீட்டிற்கே வந்துவிட்டது..

அங்கே வனமாலியின் வீட்டில் மணிராதாவும் இன்னும் சிலரும் இருக்க, வந்தனா “ண்ணா அம்மா இங்க வருவாங்களா தெரியாதே..” என்றுபோய் அண்ணனிடம் நின்றாள்..

“ஏன் என்னாச்சு??”

“இல்ல சாப்பாடு இங்க வந்து இறக்கிட்டாங்க..”

“ஓ... தனா கிட்ட சொல்லி அங்க எத்தனை பேர் இருக்காங்களோ அவங்களுக்கு அனுப்ப சொல்லு..” என,

கமலி இதனைப் பார்த்தவள் “நானே அங்க வரப் போறேன்.. ஏன் அவங்க இங்க வர மாட்டாங்களா??” என்றாள் வனமாலியைப் பார்த்து..

அவள் சொல்வது புரிந்தும் “யாரை சொல்ற??” என்று இவன் வேண்டுமென்றே கேட்க, வந்தனா நகர்ந்துவிட்டாள் இவர்கள் பேசட்டும் என்றெண்ணி..

“ம்ம்ம் உங்க அம்மா தான்..”

“எனக்கு அம்மானா உனக்கு யாரு???”

“எனக்கு யாரா இருந்தாலும் உங்களுக்கு அம்மாதானே.. அப்போ அப்படித்தான் சொல்ல முடியும்..”

“ம்ம்ச் கமலி.. என்னைப் பிடிக்கவே பிடிக்காது பமீலா கூட வனா மாமா ன்னு சொல்றா.. நீ அப்படி கூட என்னை சொல்லவேணாம்.. மத்தவங்களை முறை வச்சு சொல்லலாமில்ல..” என்று அவன் இலகுவாய் தான் சொன்னான், ஆனால் கமலியோ,

அவன் முகத்தினை ஒருவித தீவிர பாவத்தில் பார்த்தவள் “என்னை யாரும் அப்படி நினைச்சாங்களா??” என்று கேட்டுவிட,

‘இப்போ இந்த பேச்சு தேவையா வனா??!!’ என்றிருந்தது அவனுக்கு.

“என்ன அமைதியா இருக்கீங்க....??” என்றவள் “சிலது என்னை கம்ப்பல் பண்ண கூடாது இல்லன்னா இப்படிதான் பேசுவேன்..” என,

“ம்ம்ம் பேசு பேசு.. பாப்போம்...” என்றான் வெறுமெனே..

“என்ன பாப்பீங்க...??”

“ஷ்...!!!!! ஒண்ணு பேசிட்டே இரு.. இல்லையோ பேசாமையே இரு...” என்றான் வனமாலி அவளை சீண்டும் விதமாய்.

ஒன்றுமட்டும் அவளை நன்கு புரிந்துகொண்டான், கிண்டல் கேலியாய் என்ன பேசினாலும் கமலி அதனை இலகுவாய் எடுத்துக்கொள்கிறாள். முகத்தை சீரியசாய் வைத்துக்கொண்டு ஏதாவது சொன்னால் அவளும் அதுபோலவே ஆகிவிடுகிறாள். ஆகையால் எது சொன்னாலும் இனி இப்படித்தான் பேசவேண்டும் என்று முடிவே செய்துவிட்டான்.

கமலியோ ஒன்றுமே சொல்லாது அவனின் முகத்தைப் பார்க்க “என்ன கமலி??” என்றான்..

“நேத்து அவ்வளோ கோவமா பேசினீங்க.. இப்போ இப்படி பேசுறீங்க???”

“நீ கூட தான்.. என்னை பிடிச்சு கல்யாணம் செய்யலைன்னு தெரியும்.. ஆனாலும் இப்போ கொஞ்சம் நல்லா பேசுறியே...”

“ஹா ஹா அதுவா...” என்றவள் “உங்களைன்னு இல்ல யாரை கல்யாணம் பண்ணிருந்தாலும் இப்படிதான். என்ன நீங்க கொஞ்சம் தெரிஞ்சவரா போயிட்டீங்க.. அவ்வளோதான்.. இதுக்கு முன்ன சண்டை எல்லாம் போட்டோமா அதான் கேசுவலா பேச முடியுது...” என,

‘அடப்பாவி...’ என்றுதான் பார்த்தான்..

“சண்டை போட்ட கேசுவலா பேச முடியுமா??”

“நீங்களும் நானும் பேசிக்கிறோமே...” என்றவள் “என் மைன்ட் செட் பண்ணிக்கிட்டேன் இப்படிதான் என் லைப்னு.. கொஞ்சம் கஷ்டம்தான் உங்களோட.. பட்.. பாப்போம்...” என,

“ம்ம்ம்... நீ பேசு மா...” என்றதோடு நிறுத்திக்கொண்டான் வனமாலி.

அவனுக்குத் தெரியும், எப்படியும் அடுத்து ஒரு சண்டை சச்சரவுகள் வரும் என்று. அப்போதும் கமலி இப்படி பேச மாட்டாள் என்று.. ஆக இப்போதே எதற்கு வாய் கொடுப்பது என்று கொஞ்சம் அடக்கியே தான் வாசித்தான். வனமாலிக்கு யார் யாரிடம் எப்போது எப்படி பேசினால் காரியம் நடக்கும் என்பது நன்கு தெரியும்.. ஆக கொஞ்சம் பொறுமையாகவே போவது என்றிருந்தான்..

அங்கே ராணி வந்து கமலியிடம் “நேரமாச்சு கமலி...” என்றுசொல்ல,

“ஓ..!!!” என்றவள் வனமாலியைப் பார்க்க, “என்னை என்ன பாக்குற.. நீதானே கேட்ட..” என்றான்..

“ம்ம் சரி...” என்றவள், இங்கேயே குளித்து முடித்து உடை மாற்றி தயாராகியே வந்தாள்.

வனமாலியும் அதற்குள் தயாராகி இருக்க, இருவரையும் ராணியும், முரளியின் அம்மாவும் தான் அங்கே மகுடேஸ்வரன் வீட்டிற்கு அழைத்து சென்றனர். வந்தனாவும் மணிராதாவும் ஏற்கனவே அங்கே இருந்தார்கள்.. பமீலாவும் இந்திராவும் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.

கோவர்த்தனிடம் “என்னடா??” என்று வனமாலி கேட்க,
 
“இவ்வளோ நேரம் பமீலா காட்டு கத்தல்.. இந்திரா அத்தை வம்படியா உள்ள இழுத்துட்டு போயிருக்காங்க...” என,

“ம்ம்..” என்றுமட்டும் சொல்லிக்கொண்டான் வனமாலி.

ராணி வந்து “அண்ணி.. பத்து மணிக்கு தான் நல்ல நேரம்..” என, “ஓ..சரி..” என்ற மணிராதா, முரளியின் அம்மாவிடம் “நீங்க இருந்து பாருங்க...” என்றுவிட்டு கிளம்பிவிட்டார்..

வனமாலி கோவர்த்தனிடம் பேச அமர்ந்துவிட, வந்தனா இருந்த கொஞ்ச நஞ்ச வேலைகள் செய்துகொண்டு இருக்க, கமலிக்கு அப்போதுதான் இந்த வீட்டினை முழுதாய் சுற்றிப் பார்க்கும் நேரம் வந்தது..

அங்கே ஒரு பக்கத்து சுவரில் மகுடேஸ்வரனின் புகைப்படம் பெரிதாய் இருக்க, மறு பக்கத்தில் முழுக்க முழுக்க, மகுடேஸ்வரன், இந்திரா பமீலா மூவரும் இணைந்து, தனி தனியாய் இப்படி மாறி மாறி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.. இவைகளை எல்லாம் பார்க்கையில் கமலிக்கு அடி மனதில் மெதுவாய் ஒரு ஏக்கம் எட்டிப் பார்த்தது. பமீலா அத்தனை உரிமையோடும், புன்னகையோடும் மகுடேஸ்வரன் அருகே நின்றிருந்தாள்.. மூவரின் முகத்திலும் அப்படியொரு சந்தோசம்.. கமலிக்கு தன்னையும் அறியாது அவள் வீட்டினில் மாட்டியிருந்த புகைப்படங்கள் நினைவு வந்தது..

வெகு சில புகைப்படங்களே.. அதிலும் இவள் அப்பா அம்மாவோடு எடுத்துக்கொண்டது என்பது கடைசியாய் எப்போது என்றுகூட நினைவில் இல்லை.. சிறிய பெண் அப்போது.. அதன் பின் கமலியின் மறுப்பு அதிகாமகவும் சிவகாமியும் புகைப்படங்கள் எடுப்பதை நிறுத்திக்கொண்டார்.. ஆனால் இப்போது நினைக்க மனதில் ஏக்கமாய் இருந்தது..

‘மகுடேஸ்வரன்...’ விபரம் தெரிந்து அவரை அப்பா என்று அழைத்ததில்லை. ஆனால் அப்பாவை ரசிக்காத மகளில்லை கமலி.. ஒருவித கோபம் அவரின்மேல்.. தனக்கும் தன் அம்மாவிற்கும் இவர் துரோகம் செய்துவிட்டார் என்று.

அந்த கோபத்தையே இப்போது வரைக்கும் கெட்டியாய் பிடித்துக்கொண்டும் இருக்கிறாள்.. ஆனால் யார் அவளிடம் உன் அப்பா யார் என்று கேட்டால் வேகமாய் சொல்வாள் ‘மகுடேஸ்வரன்...’ என்று.. அதன்பின் அம்மா யார் என்ற கேள்வி வரும்போது, அப்பா பெயரை சொல்லும் அந்த உணர்வு அப்படியே மாறிப் போகும்..

ஆனால் இப்போதோ கண்களில் நீர் கோடுகள் எட்டிப் பார்க்க, ஒவ்வொரு புகைப்படமாய் பார்த்துக்கொண்டே அப்படியே நின்றிருந்தாள்.

‘என்னடா இவளின் சத்தமே இல்லையே...’ என்று வனமாலி பார்க்க, அவளோ இப்படி நிற்பது கண்டு அவனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது..

கோவர்த்தன் கூட “என்னண்ணா??!!” என்று கேட்க,

“விடு.. அவ இப்போதானே இதெல்லாம் பாக்குறா..” என்றவன், “அவளே ப்ரீ ஆகட்டும்..” என்றுவிட்டான்..

ராணி கூட வந்து “அவளை கூப்பிடுங்க..” என்றுசொல்ல,

“கமலிக்குன்னு ஒரு பர்சனல் ஸ்பேஸ் இருக்குமில்லையா..” என்றுவிட்டான்.

கமலிக்கு இதெல்லாம் தெரியாது, அதை கவனிக்கும் நிலையிலும் இல்லை. மெதுவாய் நகன்று ஒவ்வொரு அறையாய் பார்த்தவள், மாடிக்கு ஏறி சென்றுவிட்டாள்.

“அண்ணா நான் போய் பேசட்டுமா...” என்று வந்தனா கேட்க,

“இல்ல வேணாம்.. மேல ரூம் தானே ரெடி பண்ணிருக்காங்க.. நான் பார்த்துக்கிறேன்..” என்று அவளையும் மறுத்துவிட்டான் வனமாலி.

நேரம் சென்றது, கமலிக்கோ, ‘ச்சே இங்க வந்தே இருக்கக் கூடாதோ...’ என்று தோன்றியது.. தனக்கே இப்படியென்றால், இங்கே சில ஆண்டுகள் வாழ்ந்த சிவகாமிக்கு எப்படி இருக்கும் என்று தோன்ற,

‘அம்மா சொன்னதும் சரியோ...’ என்று எண்ணினாள்.

அப்படியொரு அழுகை வந்தது கமலிக்கு.. இத்தனை வருடங்களாய் வைராக்கியத்தின் பேரிலும், கோபம் மற்றும் பிடிவாதத்தின் பேரிலும் இழுத்து இழுத்து வைத்திருந்த தன் உணர்வுகளை எல்லாம் இந்த சில நேர பொழுதில் கமலி தளர்த்த நேரிடும் என்று அவளே எதிர்பார்க்கவில்லை.

அவளின் திடம் உறுகி கண்ணீராய் வழிய, வனமாலி கொஞ்ச நேரத்தில் மேலேறி வந்தான்.. எங்கேடா இவள் என்று பார்க்க, அவளோ மொட்டை மாடியில் ஒரு ஓரத்தில் கீழே அமர்ந்திருக்க, ‘இங்க என்ன பண்றா??’ என்ற யோசனையோடு அவளின் அருகே செல்ல,

அவளோ “நான் அழுதுட்டு இருக்கேன் வரவேணாம்..” என்றாள் வேகமாய்..

“ஹா...”

“நான் இப்போ உங்களை பார்க்கல...”

“சரி நான் பார்க்கணும்.. எந்திரிச்சு வா...”

“கொஞ்ச நேரம் போகட்டும்...”

“ரொம்ப நேரமாச்சு கமலி... நீ அழுது வடிஞ்சு.. நாளைக்கு அப்புரோ உன்னை பார்க்கிறவங்க எல்லாம் என்னை தப்பா நினைப்பாங்க...” என்று வனமாலி சிரிக்க,

“இப்படிதான் பேசுவாங்களா...” என்றபடி முகத்தை துடைத்து எழுந்து வந்தாள்.

“ஹா ஹா...” என்று சிரித்தவன் “இன்னிக்கு போய் அழுவாங்களா???” என்றான் கொஞ்சம் தன்மையாய்..

“இன்னிக்குதான் இங்கே வந்தேன்.. அதான்..”

“ம்ம் இதுக்குதான் இப்போதைக்கு இங்க எதுவும் வேணாம் நினைச்சேன்..” என்றான் அவனும்..

“அப்.. அப்போ நீங்க நினைச்சீங்களா...??”

“ஹ்ம்ம் உன்னை கல்யாணம் செய்யணும்னே நினைச்சேன் இதை நினைச்சிருக்க மாட்டேனா??” என்று அவன் கேட்க,

இருவரும் பேசியபடியே அறைக்குள் வந்திருந்தனர்.. இவளோடு ‘இத்தனை இலகுவாய் நானா..? என்று அவனும்,

‘நானா இப்படி...’ என்று அவளும் மாறி மாறி நினைக்க, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டானர்.



 
Top