Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaseegara Vanamaali - 10

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 1௦

வனமாலியின் கேள்வி, அவன் அறிந்து கேட்டானா இல்லை அவனையும் மீறி கேட்டானா அது அவனுக்கே தெரியாது.. ஆனால் கேட்டவனும் திகைத்தான், அந்த கேள்வியை தாங்கியவளும் திகைத்தாள். இருவரின் பேச்சும் நின்றுவிட, கமலியின் கண்ணீர் அவள் விழிகளிலேயே தங்கிவிட, இமைக்கவும் மறந்து, இதழ்கள் லேசாய் விரிந்து, பார்வை அவன் முகத்தினில் நிலைத்திட, வனமாலியும் ஏறக்குறைய அதே நிலையில் தான் இருந்தான்.

அவனின் பார்வையில் ஒரு தீவிரம்.. இதற்கு பதில் சொல்லிவிடேன் என்ற ஒரு தீவிரம் அது.. உன்னால் முடியுமா என்ற தீவிரம் அது.. அவன் சொன்ன வார்த்தைகள் எல்லாம் பேச்சிற்கு வரவில்லை, அவன் மனதினில் இருந்து வந்தது என்று அவனின் அந்த பார்வை சொல்லிவிட, கமலிக்கு சத்தியமாய் இது பதில் சொல்ல முடியாத ஓர் நிலைதான்..

வனமாலிக்குமே கூட அடுத்து என்ன பேச என்று தெரியாத ஓர் நிலை. ஆக மொத்தம் இருவருக்குமே தன்னிலை மறந்த நிலை அது.

அத்தனை நேரம் கமலியின் மனதில் இருந்த வேதனை, சிவகாமியின் உடல்நிலை எண்ணி மனதில் இருந்த ஒருவித பயம் எல்லாம் தாண்டி இப்போது, இங்கே வனமாலியின் அருகே, அவனின் பார்வையை தாங்கி அவள் மனதில் ஓர் அமைதி ஏற்பட, ஆனால் கமலிக்கு அவ்வமைதியை பிடித்து வைத்துகொள்ள பிடிக்கவில்லை.

இவனால் எனக்கு இப்படியொரு அமைதியும் நிம்மதியும் வேண்டவும் வேண்டாம் என்ற வெறுப்பு அவளுள் அப்போது பிறக்க, வேகமாய் பார்வையைத் திருப்பிக்கொண்டாள்..

நொடிப் பொழுது தடுமாற்றம், அவன் கண்டிருப்பானோ என்ற ஐயம்.. கண்டிருந்தாலும் பரவாயில்லை, இவனால் எனக்கு எவ்வித மன நிறைவும் வேண்டாம் என்ற பிடிவாதமும் சேர்ந்த, கண்களையும் முகத்தையும் அழுந்த துடைத்தவள்,

“நீங்க கிளம்பலாம்...” என்று வெற்று குரலில் சொல்ல,

“என்னைப் பார்த்து சொல்லு..” என்றான் அவனோ பிடிவாதமாய்.

“ம்ம்ச்... நான் பார்த்துப்பேன் நீங்க போங்க...”

“ஒண்ணு என்னைப் பார்த்து சொல்லு.. சொன்னாலும் நான் போகப்போறதில்லை..” என்ற அவனின் பேச்சில் திரும்பியவள்,

“தெரியாம கூப்பிட்டுட்டேன் உங்களை..” என்றாள் வெடுக்கென்று..

“அது உன்னிஷ்டம்.. பட் நான் உனக்காக வரலை..” என்று கடுப்பாய் சொன்னவன், கைகளை கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்து அமர்ந்துகொள்ள, கமலியோ பழையபடி ஜன்னல் கம்பியில் சாய்ந்துகொண்டாள்..

சிவகாமிக்கு எதுவும் அச்ச்சம்கொள்ளும் விதத்தில் இருக்காது என்று இருவரின் உள்ளுணர்வுமே சொல்ல, அதையும் தாண்டி மருத்துவர்கள் வந்து என்னவென்று சொல்லும்வரைக்கும் ஒருவித படபடப்பு இருந்தது நிஜம்தான். ஆனால் இப்போதோ அது மட்டுப்பட்டு இருக்க, வனமாலியின் பார்வை கமலியின் முகத்தினில் நிலைத்திருந்தது.

அவன் பார்க்கிறான் என்று தெரிந்தும் சிறிது நேரம் சும்மா இருந்தவள், பின் இவன்புறம் திரும்பாமலே “நீங்க கிளம்புங்களேன்...” என,

அவள் குரலில் முன்னிருந்த அந்த பிடிவாதம் அற்று, இப்போது வேறென்னவோ ஓர் உணர்வு.. நீ என்னை பார்ப்பதை என்னால் தாங்க முடியவில்லை என்ற ஓர் உணர்வு அதில் பிரதிபலிக்க,

வனமாலியோ அப்போதும் “என்னைப் பார்த்து சொல்லேன்...” என்றான் அவளைப் போலவே..

“ப்ச்...” என்று உதடு மட்டும் அசைத்தவள், அப்படியே அமர்ந்திருக்க, அதன்பின்னே வனமாலியும் எதுவும் கேட்கவில்லை..

மீண்டும் ஓர் மௌனம்.. ஏற்கனவே நள்ளிரவு.. அந்த இரவு நேர மௌனத்தையும் தாண்டி இவர்களுக்குள் வலுக்காட்டயமாய் ஒரு மௌனபாசை நடந்தேரிக்கொண்டு இருக்க, அதை கலைக்கும் விதமாய் நல்ல வேலையாக மருத்துவர் அவர் பணி முடித்து வெளியே வந்தார்..

கதவு திறக்கும் சத்தம் கேட்டு இருவருமே வேகமாய் எழுந்திவிட, இவர்களை நோக்கி வந்த மருத்துவரோ “நத்திங் டூ வொர்ரி.. ப்ரசர் ரொம்ப இன்க்ரீஸ் ஆகிருக்கு. அல்ரடி கொஞ்சம் டிப்ரஷன்ல இருப்பாங்க போல. ட்ரீட்மென்ட் பண்ணிருக்கோம்.. எதுக்கும் ஒரு டூ டேஸ் இங்க இருக்கட்டும்.. நாளைக்கு மார்னிங் ரூம்க்கு மாத்திடுவாங்க.. டேக் கேர்...” என்று சொல்லிச் செல்ல,

இருவருக்குமே மனதில் ‘அப்பாடி...’ என்ற ஒரு உணர்வு..

ஆனாலும் சிவகாமியின் நிலை எண்ணி, அவர் வாழ்வில் கடந்து வந்த பாதை எண்ணி ஒரு வருத்தம்.. இத்தனை வருடங்கள் திடமாய் இருந்துவிட்டார் ஆனால் இப்போது வயாதாக ஆக அவராலும் தான் எத்தனை தாங்கிட முடியும்.. எத்தனை கடந்திட முடியும்..

சிறப்பு பிரிவு அறைக்கு எதிரே இருந்த இருக்கை ஒன்றில் கமலி இப்போது அமர்ந்துகொள்ள, வனமாலியோ

“திடீர்னு ஏன் அத்தைக்கு இப்படியாச்சு..” என்று கேட்டான்..

வந்தமைக்கு இத்தனை நேரத்தில் கேட்டிருக்கவேண்டும் ஆனால் இப்போது கேட்க, அவளோ “ரொம்ப சீக்கிரம் கேட்டாச்சு..” என்றாள் குத்தலாய்..

“சரி நீயும் லேட் பண்ணாம பதில் சொல்லு..” என்று கேட்டவனும் அவளின் அருகே வந்து அமர,

“ம்ம் கொஞ்சம் டென்சன் ஆகிட்டாங்க..” என்றாள் முகத்தை வேறுபக்கம் திருப்பி..

‘எதோ நடந்திருக்கு...’ என்று யூகித்தவன்,

“ஏன் நீ எதுவும் சண்டை போட்டியா??” என்று கேட்க, அவளோ “ம்ம்ச் என்னைப் பார்த்தா சும்மா சும்மா எல்லார் கூடவும் சண்டை போடறவ போல இருக்கா??” என்றாள் வேகமாய்..

“அட நான் நார்மலாதான் கேட்டேன்..”

“அம்மாவும் இதைதான் கேட்டாங்க... இப்போ நீங்க.. நான் என்ன சண்டையா போடுறேன் எப்பவும்...” என்று வெடுக்வெடுக்கென்று அவளின் வார்த்தைகள் வர,

‘ஹ்ம்ம் இப்போ இவ என்ன சமையலா செய்றா...’ என்று ஒரு கேள்வி வந்து கிண்டியது அவன் மனதை..

“என்ன அமைதியா இருக்கீங்க... உங்கக்கூட சண்டை போட்டேனான்னு அம்மாவும், அம்மா கூட சண்டை போட்டியான்னு நீங்களும் கேட்டா நான் என்ன சொல்ல?? அப்போ எதுவுமே நான் பேசக்கூடாதா??” என்றவளின் முகம் கசங்கலாய் ஒரு பாவனையை வெளிப்படுத்த,
 
“சரி சரி கூல் டவுன்.. நான் எதுவும் கேட்கலை.. போதுமா..” என்றான் சமாதானமாய்..

“ம்ம்ம்... யாரும் எதுவும் கேட்கவேண்டாம்.. நான் என்னவோ செஞ்சிட்டுப் போறேன்..”

“சரி என்ன செய்யப் போற..”

“கேட்க வேண்டாம்ன் சொன்னேன்...” என்றாள் முறைப்பாய்..

“சரி சரி கேட்கலை...” என்று சொன்னவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது, கமலி எதோ ஒருவகையில் அவளின் மன அழுத்தங்களை தன்னிடம் வெளிப்படுத்துகிறாள் என்று..

பேச்சுக் கொடுத்தால் தேவையில்லாது ஏதாவது சொல்வாள்., ஆக அவளே பேசட்டும் என்று அமைதியாய் இருக்க, கொஞ்ச நேரத்தில் அவளே

“நீங்க வந்தீங்கன்னு அம்மாக்கிட்ட சொன்னேன்...” என்றாள் அவனைப் பார்க்காமலே..

“ம்ம்..”

“உடனே சண்டையான்னு கேட்கிறாங்க...” என்று அவனைப் பார்த்தவள், “ஆனா நீங்க அங்க சொன்னதை அம்மாக்கிட்ட சொல்லலை...” என,

“ஏன்?? சொல்லிருக்கலாமே..” என்றான் இவனும்..

“ம்ம்ச்.. ஏன் சொல்லணும்..”

“ஏன் சொல்லக்கூடாது..”

“அர்த்தமில்லாததை பேசி பயனில்லை.. அதான் ஜஸ்ட் நீங்க வந்ததை மட்டும் சொன்னேன்..” என்று பேச்சை நிறுத்தியவள், “எ.. எனக்குத் தெரியாது அம்மா எனக்கு கல்யாணம் பத்தி பேசிருப்பாங்கன்னு..” என்றும்சொல்ல,

‘அடடா நம்மதான் சொதப்பிட்டோமோ..’ என்று எண்ணிக்கொண்டான்..

“உனக்குத் தெரியாதுன்னு எனக்குத் தெரியாதே..”

“ம்ம் என்னவோ.. ஆனா கல்யாணம் எல்லாம் எனக்கு செட்டாகாது.. இதை அம்மாகிட்ட சொன்னேன் டென்சன் ஆகிட்டாங்க..”

“ம்ம்ம்... எதையும் கொஞ்சம் யோசிச்சு செய்யணும் கமலி..”

இருவரும் இருவருக்குமான பதிலை தங்களின் பதில் மூலமாய் சொல்லிக்கொள்ள, பேச்சு நீண்டுகொண்டே போனது.

பொழுது எப்போது விடிந்தது, இருவரும் எப்போது பேசி எப்போது உறங்கினர் இதெல்லாம் இருவருக்கும் தெரியவில்லை, அவள் ஒருபுறம் தலைசாய்த்திருக்க, அவன் ஒரு பக்கம் அயர்ந்திருந்தான். நேரம் சென்றுகொண்டு இருக்க, வனமாலியின் அலைபேசி ஒலியில் இருவருமே திடுக்கிட்டு கண் விழிக்க,

யாரென்று கண்களை தேய்த்துப் பார்த்தவனுக்கு அழைப்பது அவனின் அம்மா என்று தெரியவும் இப்போது பேசவேண்டுமா என்று இருந்தது.

ஆனால் எப்போது என்றாலும் பேசிதானே ஆகவேண்டும்.. எடுத்து “ஹலோ..” என்றுமட்டும் சொல்ல,

“வனா எங்க இருக்க நீ?? நைட்டே கிளம்பிட்டன்னு பமீலா சொல்றா ?? என்ன விஷயம்...” என்று விசாரித்தார்..

ஆக பமீலா எதையோ பார்த்துவிட்டு சொல்லியிருக்கிறாள் என்று எண்ணியவன் “ம்மா சிவகாமி அத்தைக்கு முடியலை ஹாஸ்பிட்டல்ல இருக்கோம்..” என்று அமர்த்தலாய் மொழிந்தவன்,

“நான் வர கொஞ்சம் நேரமாகும்.. வந்து பேசுறேன்...” என்று வைத்துவிட்டான்..

இதற்குமேல் பேசினால் தேவையில்லாத பேச்சுக்கள், அதுவும் இங்கே இந்த சூழலில் அது எதுவுமே சரியாய் இருக்காது. ஆக அழைப்பை துண்டித்துவிட,

மணிராதாவோ “வந்தனா... வந்தனா...” என்று மகளை கத்தி அழைத்துக்கொண்டு இருந்தார் வீட்டினில்..

“என்னம்மா....”

“வனா கிளம்பினது உனக்குத் தெரியுமா??” என்று அவர் கேட்கும்போதே வந்தனாவின் பார்வை பமீலா மீது பாய,

“அவளை ஏன் பாக்குற.. நான் ஒருத்தி இருக்கேனே எதுவும் சொல்லவேணாமா??” என்றார் இன்னும் சத்தமாய்..

அந்த சத்தத்தில் கோவர்த்தனும் வந்துவிட, வந்தனாவோ “ம்மா அண்ணன் வந்து சாப்பிடக் கூட இல்லை.. எதோ டென்சன்ல படுத்திருந்தான்.. பால் கொண்டுபோனேன் அப்போதான் போன் வந்தது சரி உங்களை அந்த டைம்ல டென்சன் பண்ண வேணாம்னு சொல்லலை..” என்றாள் இப்போதும் பமீலாவை முறைத்து.

“வந்தனா அதுக்கேன் என்னை முறைக்கிற.. அத்தை கேட்டதுக்கு நான் பதில் மட்டும் தான் சொன்னேன்.. மத்தபடி யார் எங்க போறா யாரைப் பாக்குறான்னு எல்லாம் எனக்குத் தெரியாது..” என்றவளை கோவர்த்தன் “பமீ...” என்று அடக்க,

“அடுத்து நீங்களா...” என்று கேட்டவள், உள்ளே சென்றுவிட்டாள்.

எப்போதுமே இந்த அலட்சியம் அவளுக்கு கோவர்த்தனிடம் உண்டு.. அது அத்தை மகன் என்ற உரிமையின் பேரில் வந்ததுவா, இல்லை கோவர்த்தன் கொஞ்சம் சாதுவான குணம் கொண்டமையால் வந்ததுவா என்று தெரியாது..

ஆனால் எப்போதுமே பிறர் முன் அவனிடம் எப்படி நடக்கவேண்டுமோ அப்படி நடந்ததில்லை அவள்.. இது மணிராதாவிற்கும் பிடிக்காது ஆனால் ஏதாவது சொன்னால் அதற்கும் ஒரு ஆட்டம் ஆடுவாள் என்று சும்மா இருப்பார்..

இப்போதோ வனமாலி அங்கே போனது எல்லாம் சேர்ந்து ஒரு எரிச்சல் கொடுக்க, “ஏய் பமீலா என்ன.. எல்லாம் பேசிட்டு இருக்கோம் உள்ள போற..” என்றார் அதட்டலாய்..

அவளின் அறைக்குள் நுழைய இருந்தவள் மணிராதாவின் அதட்டலில் நின்று திரும்பி “நான் ஒன்னும் உங்கக்கிட்ட சொல்லாம கொள்ளாம எங்கயும் போகலை..” என்றுசொல்லிவிட்டு கதவை சத்தம் எழுப்பி சாத்திக்கொண்டாள்..

அதுவோ இங்கே நிற்பவர்கள் மூவரின் முகத்திலும் அடிப்பது போலிருக்க, கோவர்த்தனோ “என்னம்மா ஏன் காலைலயே இப்படி சத்தம்..” என்றான்..

“எனக்கென்னடா தெரியும்.. எழுந்து வரவுமே பமீலா தான் சொன்னா.. வனாக்கு போன் போட்டா பேசிட்டு இருக்கும்போதே வைக்கிறான்.. எல்லாம் இதோ இவ கல்யாணம் வரைக்கும்தான்.. நான் பொறுமையா போனா எல்லாம் இஷ்டத்துக்கு ஆடுறீங்க...” என்று பிள்ளைகளை திட்டிவிட்டு உள்ளே சென்றவர்,

“வந்தனா அவனுக்கு போன் போட்டு வர சொல்லு..” என்றார்..

வந்தனாவும், கோவர்த்தனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, அங்கே கமலியோ வனமாலியிடம் “நீங்க கிளம்புங்க...” என்று தள்ளாத குறையாய் சொல்லிக்கொண்டு இருந்தாள்.

“அத்தையை ரூமுக்கு ஷிபிட் பண்ணட்டும் கமலி.. சங்கிலி தாத்தா வீட்ல இருந்து யாராவது வரட்டும்.. அப்புறம் கிளம்புறேன்..” என்று அவனும் சொல்லிக்கொண்டு இருக்க,

“இல்லை நான் இருந்துப்பேன்.. நீங்க போங்க..” என்றாள் பிடிவாதமாய்..

“கமலி.. ஒருதடவ சொன்னா கேட்கமாட்ட..” என்று வனமாலி கோபமாய் பேசும்போதே, ஸ்ட்ரெச்சரில் வைத்து சிவகாமியை தனியறைக்கு மாற்ற அழைத்து வந்தனர்.

இருவரின் பேச்சும் அத்தோடு நின்றுவிட, சிவகாமி தனியறைக்கு வரவும், நர்ஸ் தான் “நல்லா தூங்குறாங்க.. முழிச்சுப் பார்த்தாலும் வேண்டாதது எதுவும் பேசவேணாம்..” என்றுவிட்டு போக, வனமாலி நேரம் பார்த்தான்..

காலை ஏழு மணி.. சங்கிலிநாதன் விழித்திருப்பார் என்று தெரியவும் அவருக்கு அழைத்து மெதுவாகவே விஷயம் சொன்னவன், அவர்கள் வரும்வரைக்கும் காத்திருக்க, கமலியோ சிவகாமியின் அருகே மெதுவாய் போய் அமர்ந்துகொண்டாள்..

‘என்ன செய்றா..’ என்று இவன் பார்க்க, அவளோ சிவகாமியின் முகத்தை விட்டு பார்வையை திருப்பவில்லை, லேசாய் விசும்புவது போலிருக்க, “ம்ம்ச் கமலி..” என்று கண்டிப்புக் குரல் அவனிடம் இருந்து வந்தது..

கண்களைத் துடைத்தவள் எழுந்துவந்து தள்ளி அமர்ந்துகொள்ள, நர்ஸ் திரும்ப வந்தவரோ “சார்.. பில் கட்டனும்..” என்றுசொல்லி பில்லை நீட்ட, கமலிக்கு அப்போது தான் விளங்கியது தான் ஒன்றுமே எடுத்து வராதது..

அவளின் பர்ஸ், அலைபேசி என்று எதுவும் அவள் கொண்டுவரவில்லை. அப்படியே வீட்டை பூட்டி காரில் ஏறிவிட்டாள்.

‘இப்போ என்ன பண்ண.. சங்கிலி தாத்தவ கொண்டு வர சொல்வோமா..’ என்று அவன் நினைக்கும் போதே,

“நான் பே பண்ணிட்டு வர்றேன்.. உனக்கு எதுவும் வேணுமா??” என்றான் வனமாலி..

“இல்.. அது.. பணம்??!!”

“நான் வர்றப்போவே எடுத்துட்டு வந்தேன்.. காபி வாங்கிட்டு வரவா??”

“வேணாம்.. உ.. உங்க போன் வேணும்.. சங்கிலி தாத்தாக்கு...” என்றுசொல்லும் போதே அவளைப் பார்த்தவன்,

“இப்போ நான் பே பண்றேன்.. அவ்வளோதான்.. நீ எப்போ கொடுப்பியோ குடு.. சீன் போடாம இருந்தா போதும்...” என்று கடிந்துவிட்டு சென்றுவிட்டான்..

இந்த நேரத்தில் வீண் பேச்சுக்கள் வேண்டாம் என்று கமலியும் அமைதியாய் இருக்க, கொஞ்ச நேரத்தில் சங்கிலிநாதனும், ராணியும் வந்துவிட, வனமாலியும் அவர்களோடு பேசிக்கொண்டு இருந்தான்.
 
அனைவருமே எப்போதடா சிவகாமி கண் விழிப்பார் என்று பார்த்துக்கொண்டு இருக்க, அந்த இந்தாவென்று சிவகாமி கண் விழிக்க மணி பத்தாகிவிட்டது.

“ம்மா..” என்று கமலி அவரின் அருகே செல்ல, அவளை பார்த்தவரோ பின் மெதுவாய் பார்வையை சுழல விட, சங்கிலிநாதன், ராணி, சற்று தள்ளி வனமாலி நிற்பது கண்டு அவரின் முகம் பிரகாசமாய் தோன்ற, இங்கே வா என்பதுபோல் இமைகளை வனமாலியை பார்த்து அசைத்தார்..

“ம்மா..” என்று கமலி இப்போது பிடிவாதமாய் அவரை அழைக்க,

“என்ன அத்தை.. ” என்று இலகுவாய் கேட்டபடி வனமாலி அவரின் அருகே வர, சிவகாமியே மெதுவாய் “உக்கார்..” என்று சொன்னார்..

தான் ஒருத்தி இருப்பதை விட்டு இவனோடு என்ன பேச்சு என்று கமலியோ “ம்மா இங்க பாரும்மா..” என்றுசொல்ல,

அவளை முறைத்தவர் “வனா... எ.. எனக்கு பயமாருக்கு..” என்றார் மெதுவாய் வார்த்தைகளை கோர்த்து..

சிவகாமி இப்படி சொன்னது அனைவருக்குமே ஒரு திகைப்பைக் கொடுத்தாலும், வனமாலி சுதாரித்து

“என்ன அத்தை.. உங்களுக்கு ஒண்ணுமில்ல.. நாளைக்கே வீட்டுக்கு போயிடலாம்..” என்றான் சமாதானமாய்..

“ம்ம்ஹும்...” என்று தலையை ஆட்டியவர், “இவளை நினைச்சு...” என்றுசொல்ல,

“ம்மா..!!!!” என்று அதிர்ந்து போய் பார்த்தாள் கமலி..

“என்னத்தை...” என்று வனமாலியும் புரியாது பார்க்க,

“அவ.. கல்யாணம்..” என்று எதுவோ அவர் சொல்ல வர,

“அத்தை ப்ளீஸ்.. இப்போ எதுவும் பேச வேணாமே... நாளைக்கு வீட்டுக்கு போயிட்டு, நீங்க நல்லாகிட்டு பேசலாமே..” என்று வனமாலி சொல்லும்போதே,

“ம்மா ப்ளீஸ் ம்மா... நீ என்ன சொன்னாலும் நான் கேட்டுப்பேன் சரியா...” என்றாள் கமலி கண்ணீரோடு..

சங்கிலிநாதனோ “என்ன சிவகாமி பேச்சு...” என்று கண்டிக்க,

“இல்ல..” என்று தலையை ஆட்டியவர், மகளை நேருக்கு நேராய்ப் பார்த்து “அ.. அப்போ நான் யாரை சொன்னாலும் பண்ணிக்கணும்...” என்று கேட்க,

“ம்ம் சரி...” என்றாள் யோசிக்கவே யோசிக்காது..

வனமாலிக்கும் அவ்விடத்தில் வேறெதுவும் யோசிக்க முடியவில்லை, அவனின் பார்வை சிவகாமி கமலி என்று மாறி மாறி பார்த்துக்கொண்டு இருக்க, மகள் சரி என்று சொன்ன அடுத்த நொடி சிவகாமி வனமாலியிடம்

“வனா நீ கமலியை கல்யாணம் பண்ணிக்கணும்...” என்றார் முடிவாய்..

அவன் முடிவை கேட்கவில்லை.. ஆனா சிவகாமி முடிவெடுத்துவிட்டார்..
 
Top