Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thogaikku Thoothuvan Yaro - 20

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
தோகை 20:

நகத்தைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் சக்தி.பின்னே காலையில் சொல்கிறேன் என்று சொல்லி தூங்கியவன்... இன்னமும் அறையை விட்டு வெளியே வராமல் இருக்க..அவனை எதிர்பார்த்து காத்திருந்தவளுக்கு கடுப்பு தான் மிஞ்சியது.

“எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்கவ...?” என்று பாட்டி கேட்க..

“வேலை வெட்டி இல்லை..அதான்..!” என்றவள்..அன்றைய நாளிதழை எடுத்து புரட்ட..

அன்றைய திரைத்துளி பக்கத்தில்...”மூன்றெழுத்து கதாநாயகனும்... மூன்றெழுத்து கதாநாயகியும்....காதலை முறித்துக் கொண்டனர். நாயகன்...கிராமத்துக் குயிலுடன் திருமணம்..நாயகியின் நிலை..?” என்று எழுதியிருக்க..அவளுக்குத் தெளிவாய் தெரிந்து போனது...அதில் எழுதியிருப்பது அஜய்யைப் பற்றி தான் என்று.

இறங்கியிருந்த வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏற....மனதில் உள்ள கோபத்தை வெளிப்படுத்தாமல் அமைதியாய் இருந்தாள். அவள் படிக்கத் தொடங்கும் போதே...அவளைப் பார்த்து விட்ட சாந்தா.... அவளின் முக மாறுதல்களைப் பார்த்து திருப்தி கொண்டவராய் அமர்ந்திருக்க.. இதை அறியாத சக்தி...அவரின் வலையில் விழுந்திருந்தாள்.ஆனால் அவள் கவனிக்காதது எல்லாம்...பாட்டியின் கண்களில் இருந்து தப்பவில்லை.

கிராமத்து கழுகுப் பார்வைக்கு முன்..சாந்தாவின் சாதூர்யமெல்லாம் தோற்றுப் போகும் என்று அவருக்கு என்ன தெரியும்..?

“இதை இப்படியே விட்டா சரி வராதே..?” என்று எண்ணிய பாட்டி...

“சக்தி..நாம ஊருக்கு போகலாமா..?” என்றார்.

அந்த கேள்வியில் சக்தியின் முகம் பிரகாசம் அடைந்ததைக் காட்டிலும்..சாந்தாவின் முகம் அதி பிரகாசமாய் மின்னியது.

“போகலாம் பாட்டி..!” என்று வேகமான பதிலைத் தந்தாள் சக்தி.

“மக்கு..எவ்வளவு வேகமா சொல்றா..? இங்க மாமியாக்காரி அவளுக்கு குழி தோண்டிட்டு இருக்கா...அது தெரியாம இவ வேற..போகலாம்ன்னு உடனே சொல்றா...! இந்த புள்ளைய வச்சுகிட்டு என்ன பண்றது..?” என்று பாட்டி யோசிக்க...

“பாட்டி..பாட்டி..போகலாம் பாட்டி..!” என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“எங்க போகலாம்..!” என்ற குரலில் திரும்பிப் பார்க்க..சட்டையின் கையை மடித்தவாறே நடந்து வந்து கொண்டிருந்தான் அஜய்.
நீல நிற ஜீன்சும்..வெள்ளை நிற சட்டையும்..அவனுக்கு பாந்தமாய் பொருந்த...அவனைப் பார்த்த மயக்கத்தில் அப்படியே நின்றாள் சக்தி.

“படத்துல இவன் மேக்கப் போடுவானா...? இல்லையா..? சும்மாவே இப்படி இருந்து தொலைக்கிறான்..!” என்று எண்ணியவள்..அப்பாவியைப் போல் மூஞ்சியை வைத்துக் கொள்ள..

“உன்னை நானறிவேன்..!” என்ற பாடலை அவன் முனுமுனுக்க...அதைக் கேட்ட சக்திக்கு குப்பென்று வியர்த்தது.

இதையெல்லாம் சாந்தா பல்லைக் கடித்துக் கொண்டு பார்த்திருக்க... கண்ணனோ..எட்டாம் அதிசயம் போல் அஜய்யை பார்த்திருந்தான்.

“என்ன பாட்டி..? எதையோ தீவிரமா பேசிட்டு இருந்திங்க போல..!” என்றான்.

“அது ஒண்ணுமில்ல தம்பி...ஒரு சின்ன விஷயம்..!” என்றார் சாந்தாவைப் பார்த்துக் கொண்டே..

“இந்த கிழவி இப்ப என்ன சொல்ல போகுது..?” என்று சாந்தா யோசிக்க..

“சொல்லுங்க பாட்டி..!” என்றான்.

“நானும் சக்தியும் ஊருக்கு ஒரு எட்டு போயிட்டு வந்துடலாம்ன்னு...” என்று அவர் இழுக்க..

“என்னாச்சு..? சக்தி அப்பாவுக்கு ஏதும்..?” என்று அவன் பதற..

“ஐயோ..! அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை தம்பி...அங்க கோயில்ல ஒரு வேண்டுதல் இருக்கு.சக்தி பிரச்சனை முடிஞ்சதுன்னா...புருஷன் பொண்டாட்டி சகிதம் வந்து பொங்கல் வைக்கிறதா...!

உங்களுக்கு வேலை இருக்கும்..! அதான் சக்தியை மட்டும் கூட்டிட்டு போயிட்டு வந்துடலாம்ன்னு..!” என்று அவர் லேசாய் ஒரு க்கன்னா வைத்து பேச...

“அப்படியா..?” என்று ஒரு நிமிடம் யோசித்தவன்..சக்தியைப் பார்த்தான்.அவள் முகத்தில் இருந்த மலர்ச்சியைப் பார்த்தவன்...

“இவ அங்க போயிட்டு..திரும்பி வரமாட்டேன்னு சொல்லிட்டா..என்ன பண்றது...இப்பதான் கொஞ்சம் நல்லா பேசுறா..” என்று யோசித்தவன்..

“நானும் வரேன் பாட்டி..!” என்றான்.

“உங்களுக்கு வேலை..” என்று அவர் இழுக்க...

“வேலை இருக்கத்தான் செய்யும் பாட்டி..அதுக்காக குடும்பத்துக்காக, பொண்டாட்டிக்காக நேரம் ஒதுக்காம இருக்க முடியுமா..? அதுவும் இஷ்ட்டபட்டு கட்டிகிட்ட..புதுப் பொண்டாட்டி வேற..” என்று அவன் உல்லாசமாய் கூற..அவனை முறைத்தாள் சக்தி.

“விவஸ்தை கெட்டவன்..எப்படி பேசுறான்...பாட்டி என்ன நினைப்பாங்க..?” என்று முறைக்க..

“ஒன்னும் நினைக்க மாட்டாங்க..!” என்றான் மனம் அறிந்தவனாய்.

“என்ன நடக்குது அஜய்..? நானும் இங்க தான் இருக்கேன்..கொஞ்சமாவது பெத்த தாயின்னு மரியாதை இருக்கா..?” என்றார்.

“இபோ உங்க மரியாதையில் என்ன குறை வந்தது..?” என்றான்.

“நீ எவ்வளவு பெரிய ஆள்...சும்மா அங்க எல்லாம் போக முடியுமா..? பப்ளிக்ல போனா உனக்கு தான் பிரச்சனை..அவ்வளவு ஈசிய நீ வெளிய நடமாட முடியாது..!” என்றார்.

“அது என் பிரச்சனை..நீங்க கவலைப் படாதிங்க..!” என்றான்.

“ஷூட்டிங் கேன்சல் பண்ணி..அப்படி போக வேண்டிய அவசியம் என்ன..?” என்றார்.

“ம்ம்...பணம் பெருசு இல்லை..எனக்கு என் பொண்டாட்டியும்..என் தனிப்பட்ட வாழ்க்கையும் முக்கியம்ன்னு அர்த்தம்..!” என்றான் பட்டென்று.

“இதுக்கு நான் சம்மதிக்க முடியாது..!” என்றார்.

“நான் எப்போ உங்ககிட்ட அனுமதி கேட்டேன்..!” என்றான்.

“நேத்து வந்தவ உனக்கு பெருசா போயிட்டா..அவ முன்னாடி என்னை அசிங்கப் படுத்துறியா..?” என்றார்.

“அசிங்கத்தைப் பத்தி நீங்க பேசாதிங்க..! இன்னைக்கு மூன்றெழுத்து நடிகர்..மூன்றெழுத்து நடிகை காதல் முறிவு..கிராமத்து குயிலுடன் திருமணம்....ன்னு நீங்க தான துணுக்கு போட சொன்னிங்க..!” என்றான்.

“என்ன சொல்ற அஜய்..! நான் ஏன் அப்படி செய்யணும்...? என் பையனைப் பத்தி நானே வதந்தி பரப்புவேனா..? அதனால எனக்கு என்ன லாபம்..!” என்றார்.

“இதோ இவ அந்த செய்தியை படிக்கணும்..சண்டை போடணும்..அவ வீட்டுக்கு திரும்பிப் போகணும்..அப்பதான நீங்க போட்ட..போடப் போற திட்டம் எல்லாம் நிறைவேறும்..!” என்றான் பிசிர் தட்டாத குரலில்.

“அஜய்..!” என்று அதிர்ந்தார் சாந்தா.

“எனக்குத் தெரியாதுன்னு நினச்சுகிட்டு நீங்க செய்யுற ஒவ்வொரு வேலையும்.. எனக்கு கண்டிப்பா தெரிஞ்சுடும்..அதுவும் அடுத்த நிமிஷமே..!” என்றான் கோபமாய்.

“அஜய்..! அது வந்து..இவ உனக்கு எந்த விதத்திலும் பொருத்தம் இல்லை..!” என்றார்.

“இது தான் முதலும் கடைசியும்..நீங்க இப்படி பேசுறது..எனக்கு மனைவின்னு ஒருத்தின்னா அது சக்தி மட்டும் தான்..இந்த ஜென்மத்துல. நீங்க நினைக்கிற எதுவும் நடக்க போறதில்லை...அதை மட்டும் நல்லா நியாபகத்துல வச்சுக்கங்க..!” என்றான் தெளிவாய்..அதே சமயம் கோபமாய்.

“சபாஷ்..!” என்று மனதிற்குள் அவனை மெச்சிக் கொண்டான் கண்ணன்.

அஜய்யின் வார்த்தைகள்..சக்தியின் மனதிற்குள் சாமரம் வீசியது.”இந்த ஜென்மத்திற்கு இவள் தான் என் மனைவி..” என்ற வாக்கியம் அவள் காதுகளில் திரும்பத் திரும்ப ஒலிக்க...அவள் அறிந்தே..முதன் முதலாய் அவள் மனதில் இடம் பிடித்தான் அஜய்.

“கண்ணன்..! நீங்க இவங்களை கூட்டிட்டு கிளம்புங்க..! நானும் சக்தியும் என் காரில் வரோம்..!” என்றான்.

“ஏன் எல்லாரும் ஒரே கார்லயே போகலாம்..!” என்றாள் சக்தி.

அவளை முறைத்தவன்...”பாட்டி..நீங்க கிளம்பிட்டு..கண்ணன் கிட்ட சொல்லுங்க..அவன் உங்களை கூட்டிட்டு வருவான்.நான் சக்தியை அழைச்சுட்டு வரேன்..! உங்களுக்கு இதில் வருத்தம் இல்லையே..?” என்றான்.

“எனக்கு ஒரு வருத்தமும் இல்லை தம்பி..!” என்றபடி கிழவி உள்ளே செல்ல...

“இப்போ எதுக்கு ரெண்டு கார்..?” என்றாள் கோபமாய்.

“அடியேய்..! வேண்டாம்..சும்மா என் வாயைக் கிளறாத...நீ நைட்டு ஒரு கேள்வி கேட்டியே...நான் கூட காலைல பதில் சொல்றேன்னு சொன்னேனே..!” என்று அவன் நியாபகப் படுத்த..

“ஆமாம்..நான் அதை மறந்தே போயிட்டேன்..! சரி..இப்ப சொல்லுங்க.. பிளீஸ்.!” என்றாள்.

“முடியாது..என்கூட கார்ல வா..! அப்போ சொல்றேன்..!” என்றான்.

“அப்படின்னா வரேன்..!” என்றாள்.

“சரியான ஆளுடி நீ..! உனக்கு காரியம் ஆகணும்ன்னா மட்டும் என் காலைப் பிடிக்கிற..ம்ம்ம்..” என்று புருவத்தை உயர்த்த..அந்த செய்கையில் கவரப்பட்டாள் சக்தி.

அவள் அப்படியே நிற்க..”என்ன போய் கிளம்பு போ..!” என்றான்.

“இதோ..!” என்றபடி அவள் ஓட..அவளை ரசனையுடன் பார்த்துக் கொண்டு நின்றான்.

“சார்..!”

“சொல்லுங்க கண்ணன்..!”

“இது உங்களுக்கே நியாயமா சார்..!” என்றான்.

“ஏன்..? என்னாச்சு..?”

“எப்படி சார்...நான் பாட்டிக் கூட...அவ்வளவு தூரம் தனியா வரது..பார்ட்டி கூட போற வயசு சார் எனக்கு...உங்களுக்கு என் மேல கோபம்ன்னா ரெண்டு அடி கூட அடிச்சுக்கங்க..ஆனா இப்படி பெரிய தண்டனை எல்லாம் குடுக்காதிங்க சார்...” என்றான்.
அவன் சொன்ன தோரணையில் வாய்விட்டு சிரித்தவன்...”சும்மா..அவளை மிரட்ட சொன்னேன் கண்ணன்..எல்லாரும் ஒரே கார்ல தான் போறோம்..போய் ரெடி பண்ணுங்க..!” என்றான்.

“அப்பாடா....ரொம்ப நன்றி சார்..! கொஞ்ச நேரத்துல பயந்துட்டேன்..!” என்று பெருமூச்சு விட்டபடி அவன் செல்ல..

“கண்ணன்..” என்று அழைத்தான் அஜய்.

“சார்..!”

“நான் கிளம்புறது மீடியாவுக்கு எக்காரணம் கொண்டும் தெரியகூடாது.. அம்மா மூலமா கூட நியூஸ் போனாலும்..அது வெளிய
வரக் கூடாது..” என்றான்.

“கண்டிப்பா சார்..!” என்றபடி சென்றான் கண்ணன்.

மனதில் சந்தோஷத்துடன்...விசில் அடித்தபடி அறைக்குள் செல்ல...அங்கு சக்தியோ...”நான் கிளம்பிட்டேன்..!” என்றபடி வந்து நின்றாள்.

“வாவ்..!” என்று வாயைப் பிளந்து நின்றான் அஜய்.

தாமரை வண்ண சேலையில்....கழுத்தில் தாலி செயின்,காதுகளில் எப்போதும் தொங்கும் ஒரு தோடு..கையில் இரண்டு வளையல்..ஒற்றை ரோஜா...சகிதம் நின்றவளைப் பார்க்க பார்க்க..அவனுக்கு ஆச்சரியமும், காதலும் ஒன்றாய் தோன்ற...
“என்ன அதுக்குள்ள ரெடி ஆகிட்ட..?” என்றான்.

“நானே லேட் ஆச்சுன்னு நினச்சுட்டு இருக்கேன்...! நீங்க வேற..வாங்க போகலாம்..!” என்று இயல்பாய் அவன் கையைப்ப் பிடித்து இழுக்க... மொத்தமாய் விழுந்தான் அஜய்.

“சக்தி...!” என்றான் ஹஸ்கி வாய்சில்...

“இப்போ எதுக்கு...பேயப் பார்த்த மாதிரி பேசுறிங்க..?” என்றாள்.

“பேய்தான்..!” என்றான்.

“பேயா..?” என்று அவள் மருண்டு விழிக்க..

“ஆமா..! அதுவும் மோகினிப் பேய்..என்னை மயக்குறதுக்குன்னே வந்த கிராமத்து பேய்..!” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க...

அவன் சொல்ல வந்ததன் அர்த்தம் புரிந்தவள்....’உங்களை’...என்று அடிக்க போக...அவளின் கையைப் பிடித்து அருகில் இழுத்தவன்...

“சக்தி..!” என்றான் ஆழ்ந்த குரலில்.

அவ்வளவு நெருக்கத்தில் அவனைப் பார்த்தவளுக்கு பேச்சு வராமல் போக..”ம்ம்” என்று காத்து தான் வந்தது.

“செம்மையா இருக்கடி..!” என்றான்..அவளை இடுப்போடு சேர்த்து அணைத்தபடி.

“ம்ம்” என்றாள்.

“ஒரே ஒரு கிஸ்..பிளீஸ்..” என்றான்.

“ம்ஹூம்..” என்றாள்.

“ப்ளீஸ்டி..என்னைப் பார்த்தா உனக்கு பாவமா தெரியலையா..?” என்றான்.

“தெரியலை..!” என்றாள் உள்ளே போன குரலில்.

“இப்போ கிஸ் குடுத்தா..அந்த போட்டோ உண்மையை சொல்வேன்..!” என்றான்.

“எனக்கு ஒன்னும் சொல்ல வேண்டாம்..!” என்று முறுக்கிக் கொண்டாள்.

“அப்போ விடு...!” என்று அவன் சாதாரணமாய் சொல்ல..அவன் கைகளைப் பிடித்தவள்...

“ஒன்னே ஒன்னு தான்...நீங்க சொல்லிடனும்..!” என்றாள்.

“இந்த அஜய் என்னைக்கும் பேச்சு மாற மாட்டான்ப்பா..!” என்றான் சிரித்தபடி.

“சரி..” என்று அவன் முகத்தருகில் செல்வதற்குள் அவளுக்கு வேர்த்துக் கொட்டியது.

“என்னடி ஏதோ பேய்க்கு முத்தம் குடுக்குற மாதிரி முகத்தை வச்சிருக்க...நான் உன் புருஷண்டி..!” என்றான்.

“சும்மா..வளவளன்னு பேசாதிங்க..! அப்பறம் நான் தர மாட்டேன்..!” என்றாள்.

“சரி பேசலை..” என்றபடி அவன் நிற்க...

அவனின் அருகில் வந்தவள்....மெல்ல முகத்தருகே அவள் முகத்தை கொண்டு செல்ல..எதிர்பார்த்து நின்றான் அஜய்.
அவனின் காதுக்கு அருகில் சென்றவள்..”நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்..!” என்றவள்...சட்டென்று அவனை கட்டிலில் தள்ளிவிட்டு ஓட..

“ஹேய் சக்தி..!” என்று கத்தியவன்..

“எங்க போய்ட போற..?” என்று சிரித்தவனாய் கீழே சென்றான்.
 
Top