Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu - 16.2

Advertisement

Part 2

மற்றவர்களுக்கு ஹர்ஷூவை ஷக்தி அடித்தும் அவள் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்காதது ஆச்சர்யம் என்றால், அதை விட பெரிய அதிர்ச்சி இன்றைக்கு அவள் பேசியது.

ஆம், இந்த நாளில் ஹர்ஷூ யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசமாட்டாள். அப்படிப்பட்டவள் தன் கணவனிடம் பேசியது அதிர்ச்சியிலும் பேரதிர்ச்சி தான்.

ஆனால் அதையெல்லாம் கவனிக்காத பரணியின் கருத்தில் பட்டது ஷக்தி தன் மகளை பைத்தியக்காரி என கூறிய வார்த்தை தான்.
பரமேஷ்வரன் கூட நிதானத்தை கடைபிடித்த நேரத்தில் வெகுண்டுவிட்டார் பரணி. ஷக்தியின் கோவத்தை அதிகரிக்கும் வண்ணம் பரணியின் பேச்சு அமைத்துவிட்டது.

“எங்க முன்னாடியே என்னோட பொண்ணை கைநீட்டி அடிக்கிற அளவுக்கு எவ்வளோ துணிச்சல் இருக்கனும் உங்களுக்கு? என் பொண்ணை இதுக்காகவா உங்களுக்கு கல்யாணம் செய்துவச்சோம்? அதுவுமில்லாம அவளை பைத்தியக்காரின்னு சொல்றீங்க?. என்ன அவ முன்னாடி அப்படி இருந்ததை குத்திக்காட்டறீங்களா?...”

முடிந்தது. இதுவரை எந்த விஷயம் ஷக்தியின் காதுக்கு செல்லகூடாது என நினைத்து பொறுமை காத்தனரோ அதையெல்லாம் ஒரு நொடி ஆத்திரத்தில் அறிவை கடன்கொடுத்த பரணி வாய்தவறி சொல்லிவிட்டார்.

ஷக்தியால் தான் கேட்டது உண்மைதானா என நம்பமுடியாமல் திகைத்துபோய் நிற்க அனைவரும் வாயடைத்துபோயினர். நிஷாந்த் தலையில் கைவைத்து கொண்டான்.

“தன்னுடைய ஹர்ஷூ பைத்தியமாக இருந்தாளா?...” அவனால் இந்த உண்மையை ஜீரணிக்க முடியவில்லை. கால்கள் தள்ளாட தொப்பென்று இருக்கையில் அமர்ந்தவனுக்கு உலகமே தட்டாமலை சுற்றியது.

பரமேஷ்வரன் நெஞ்சை பிடித்துகொண்டார். அவருக்கு இனி ஷக்தி எடுக்க போகும் முடிவு என்னவாக இருக்குமோ என்ற பயம் ஒருபக்கம், இதை மறைத்ததற்காக தன் நண்பனின் முகத்தில் எப்படி விளிப்பது என்றும் அவரது நட்பை இழக்க நேரிடுமோ என்று அஞ்ச ஆரம்பித்து விட்டார்.

பரணி அத்தோடு நில்லாமல், “இனிமே உங்களுக்கும் என் பொண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எப்போ அவளை கைநீட்டி அடிச்சீங்களோ அப்போவே உங்களோட உறவு எங்களுக்கு வேண்டாம். அவ காலம் பூரா என்னோட பொண்ணாவே இருக்கட்டும்...” எனவும் நிஷாந்திற்கு வந்ததே கோவம்.

“போதும் பரணிம்மா, இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட பேசிடாதீங்க. நீங்க உங்களோட கோவத்தால நம்ம ஹர்ஷூவோட வாழ்க்கையை இப்போ கேள்விக்குறி ஆக்கிட்டீங்களே? இதுக்கு மேல நீங்க அத்தானை ஒரு வார்த்தை கூட பேச கூடாது. அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன்...”

இதுவரை பரணிம்மா என்ற வார்த்தைக்கு வலிக்குமோ என்பது போல் அன்பாகவே பேசி பார்த்த நிஷாந்த் இன்று தன்னிடமே மிக கடுமையாக குரலுயர்த்தி தன்னை கட்டளையிடும் அளவிற்கு நான் என்ன செய்துவிட்டேன் என யோசித்தார்.

“அத்தான் செஞ்சதில எந்த தப்பும் இல்லைன்னு நான் நினைக்கேன். அவரோட இடத்தில யாரா இருந்தாலும் அப்படித்தான் நடந்திருப்பாங்க. காலையில இருந்து பொண்டாட்டியை காணோம்னா எந்த மனுஷனுக்கும் கோவம் வருவது இயல்பு தானே?...”

“அதுவும் ஹர்ஷூ இங்க வரப்போறதை பத்தி ஒரு வார்த்தை கூட அவர்கிட்ட சொல்லலை. அவர் எப்படியெல்லாம் தேடியிருப்பாரு? அவர் முகத்தை பாருங்க. அதுவுமில்லாம தப்பு செஞ்சது நாம. அவர்கிட்ட ஹர்ஷூவை பத்தி நாம முதல்லையே சொல்லியிருக்கனும்...”

“அதை மறைத்து நாம தான் அவரை ஏமாத்தியிருக்கோம். எங்க நம்ம ஹர்ஷூவுக்கு கல்யாணமே நடக்காம போய்ருமோன்னு நீங்க எத்தனை கடவுளை வேண்டியிருப்பீங்க? அவர் நம்ம ஹர்ஷூ மேல வச்சிருக்கற காதலால அவரை நம்மோட சுயநலத்துக்காக பயன்படுத்தியிருக்கோம். உங்களால இதை மறுக்க முடியுமா பரணிம்மா?...”

நிஷாந்தின் பேச்சுக்கள் அனைத்தும் பரணியை மட்டுமல்ல அங்கிருந்த பரமேஷ்வரன், செல்வம், சரஸ்வதியையும் சேர்த்தே தாக்கியது. பரணியின் கோவம் குறைந்து நிதானத்திற்கு வந்தவர்,
“என்ன ஒரு காரியம் செய்துவிட்டேன்?. என் மகளோட வாழ்க்கையை நானே நாசமாக்கிட்டேனே?...” என உள்ளம் பதற ஷக்தியை பார்த்து கைகூப்ப அவனோ அதை கண்டுகொள்ளவில்லை. கண்டுகொள்ளும் நிலையில்லை என்பதே உண்மை.

“நிஷாந்த்...” அழுத்தமான அழைப்பில் ஷக்தியின் குரல் நடுக்கத்தை அனைவராலும் உணர்ந்துகொள்ள முடிந்தது.

“இனி மறைக்க ஒண்ணுமே இல்லை அத்தான். நீங்க என்னோட வாங்க. உண்மையை சொன்னாத்தான் எங்களாலயும் முக்கியமா என்னால குற்றவுணர்ச்சி இல்லாமல் இருக்க முடியும்...” என்றவன் ஒரு நொடி ஷக்தியை ஆழ்ந்து பார்த்துவிட்டு,
“உங்களோட முடிவு எதுவா இருந்தாலும் நாங்க மனசார ஏத்துப்போம் அத்தான். ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருக்கு. ஹர்ஷூ உங்க மேல வச்சிருக்கிற காதலால வந்த நம்பிக்கை. இப்போ பார்த்ததுமே தெரிஞ்சுகிட்டேன்...” என்றவனின் பேச்சு அந்த நேரத்திலும் ஷக்திக்கு இதழ்கடையில் ஒரு சிறு புன்னகையை தோற்றுவித்தது.

“இப்போ கூட என்னை லாக் பன்றானே இந்த பொடியன்?...”என நினையாமல் இருக்க முடியவில்லை ஷக்தியால். மனதை திடப்படுத்திக்கொண்டு அவனோடு சென்றான் மொட்டைமாடிக்கு.

ஷக்தி நிஷாந்தே பேச்சை ஆரம்பிக்கட்டும் என மௌனம் காக்க நிஷாந்திற்கோ ஒரு வேகத்தில் சொல்ல வந்து விட்டாலும் கொஞ்சம் தயக்கமும் எட்டி பார்க்கத்தான் செய்தது.

சொல்லுவதை சரியாக சொல்லவேண்டும், அதே நேரத்தில் அதை ஷக்தியும் சரியாக புரிந்துகொள்ள வேண்டுமென வேண்டினான்.
அவனின் வேண்டுதல் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க அதில் பொறுமையிழந்த ஷக்தி சேகருக்கு அழைத்து ஹர்ஷூ வந்துவிட்ட தகவலை தன் தந்தையிடம் கூறிவிடுமாறு சொல்ல அதை தான் ஏற்கனவே சொல்லிவிட்டதாகவும், இங்கே ஒரு நண்பனின் ரூமிற்கு செல்வதாகவும் சொல்லி ஷக்தியை கொஞ்சம் நிம்மதியாக்கினான் சேகர்.

அவனுக்கு நன்றி கூறிவிட்டு நிஷாந்தின் புறம் திரும்ப அவன் இன்னும் யோசனையில் இருப்பதை பார்த்து,
“நிஷாந்த், ஹர்ஷூ எப்போ இங்க வந்தா? அவ வந்ததும் எனக்கோ இல்லை அப்பாவுக்கோ நீ ஏன் தகவல் சொல்லலை?...”

“அவ காலையில ப்ளைட்ல இங்க வந்துட்டா. அவ வரமாட்டான்னு தான் நேத்து வரைக்கும் நினைச்சேன். அதே நேரம் அவ எப்படியாவது வந்துவிடுவான்னும் நினச்சேன். ஆனா காலையில அங்க வந்து நின்னதும் நானும் கொஞ்சம் ஷாக் ஆனது உண்மைதான்...”

“ப்ளைட்லயா? தனியாவா?. எப்படி?...” என அதிர்ந்து போய் கேட்க,

“நீங்க இப்போ எப்படி வந்தீங்களோ அப்படித்தான் அவளும் வந்தா அத்தான். அவளோட தைரியம் உங்களுக்கு தெரியாததா?...” எனவும் தானும் அப்படித்தான் வந்தேனென்று இவனுக்கு தெரியுமா என நினைத்தான் ஷக்தி.

ஆனால் நிஷாந்த் ஒரு யூகத்தில் தான் அப்படி சொன்னான். ஷக்தி அப்படித்தான் வந்திருக்க வேண்டும் என்ற யூகம். அவனது ட்ரெஸ். கழுத்தில் கிடந்த ஐடி கார்ட் அனைத்தும் அப்படித்தான் சொல்லியது.

“அப்போ ஏன் அவ வந்தது மாமாவுக்கோ அத்தைக்கோ தெரியலை? உன்னோட நம்பருக்கு நான் ட்ரை பண்ணினேன்...”
“அது சுவிட்ச் ஆஃப்ல இருந்திருக்கும். ஹர்ஷூ வந்ததை நானும் யாருக்கும் சொல்லலை. தோணலை. நேரா ஹர்ஷூ நாங்க எப்போவும் போற இடத்துக்கு வந்துட்டா...”

“எப்போவும் போற இடம்னா? புரியலை நிஷாந்த்...”

“எங்களோட தீட்சண்யாவை தேடி. அவ இருக்கிற இடத்துக்கு போனோம்...” சொல்லும் போதே குரல் கரகரத்துபோய், துக்கம் தொண்டையடைக்க கண்ணீர் அணையுடைத்து வெளியேற ஆரம்பித்தது நிஷாந்திற்கு.

“யார் அவங்க?. அது எந்த இடம்?..” ஷக்தியின் எதிர்பார்ப்பு நொடிக்கு நொடி அதிகரித்தது.

“அவ எங்களோட உயிர். அவ இப்போ நிம்மதியில்லாம உறங்கிட்டு இருக்கிற இடம். அவளோட மூச்சுக்காத்து கலந்திருக்கும் இடம். இப்போவும் அவளோட மனசு சாந்தியடையாம அக்கினி பிழம்பாக தீயாக உலாவிட்டு இருக்கிற இடம். எப்போவும் அவளோட நினைவு நாளன்னைக்கு எங்களை அவ எதிர்பார்த்திட்டிருக்கும் இடம். அவளோட நினைவு மண்டபம்...”

சத்தியமாக ஷக்தி இதை எதிர்பார்க்கவே இல்லை. யார் அந்த தீட்சண்யா? அவள் இப்போது உயிரோடில்லை. ஆனால் ஏன்?
அதற்கான விடையை நிஷாந்த் சொல்ல சொல்ல உணர்ச்சிக்குவியலாக மாறிப்போனான் ஷக்தி. இப்படியும் ஒரு பெண்ணா என தீட்சண்யாவை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

முடிவில் ஷக்தி சர்வாங்கமும் ஆடிப்போய் அமர்ந்திருந்தான். தீட்சண்யாவிற்கு ஏன் இப்படியெல்லாம் நடந்தது? என்று நெஞ்சம் விம்மியது ஷக்திக்கு.

தன்னவளின் கடந்த காலம் கொடுத்த தாக்கத்தில் அதிர்ச்சியில் உறைந்திருந்தவன் இனி எடுக்க போகும் முடிவுதான் என்ன?
ஹர்ஷூவை எந்த விதமான உறுத்தலும் இல்லாமல் ஏற்றுக்கொள்வானா?
இனி தீட்சண்யா......


நதி பாயும்...
Nice
 
Top