Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiyae Paainthodu 9.2

Advertisement

Admin

Admin
Member
தன் நண்பனின் முகம் முதலில் குழம்பி பின் கொஞ்சம் தெளிவதை பார்த்த திருவேங்கடம், “டேய் சோமா, இப்போதாண்டா இந்த வீட்டுக்கு ஒரு களையே வந்திருக்கு...” என வாசலில் இருந்து வீட்டை திரும்பி பார்த்துக்கொண்டே கூறியவர் மீண்டும் துர்காவின் நினைவுகளுக்கு செல்ல இருந்த புருஷோத்தமனை கண்டு தன்னையே திட்டிக்கொண்டு,

“சரிடா வா உள்ள போலாம். சாப்பிடுவோம். டைம் ஆகுது பாரு. உள்ள காத்திட்டு இருப்பாங்க...” என இழுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

“என்ன ரெண்டு பெரும் பேசி முடிச்சிட்டீங்களா?, சாப்பிட நேரம் ஆகுதே? ஊர்ல இருந்து வந்த அலுப்போட அரட்டையா ரெண்டு பேருக்கும்?. சாப்பிட்டு போய் பேசாம படுத்து தூங்குங்க...” என மென்மையாக கடிந்து கொண்டே அனைவருக்கும் பரிமாற ஆரம்பித்தார் சகுந்தலா.

இரண்டு வருடங்களுக்கு பிறகு அந்த வீட்டில் பேச்சும் சிரிப்பும் களைகட்டியது. ஏனோ ஷக்தியால் சாப்பிடவே முடியவில்லை. மனம் முழுவதும் துர்காவே நிறைந்திருந்தார். அவனது நினைவு தந்த தாக்கம் தனிமையை நாட தோன்றியது அவனுக்கு. அதற்கு மேல் இருக்க முடியாமல்,

“எனக்கு போதும் அத்தை, இதுக்கு மேல சாப்பிட முடியாது. ரொம்ப டயர்டா வேற இருக்கு. நான் ரூம்க்கு போறேன். ஹர்ஷூ சாப்ட்டு மேல வா. ரூம் தெரியும் தானே...” என எழுந்து கொண்டவனை ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு பின் கண்டுகொள்ளாமல் ஹர்ஷூ சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துக்கொண்டிருந்தாள்.

நிஷாந்த் அவளின் கையை இடித்து காண்பிக்க அவளோ அதையெல்லாம் கண்டுகொண்டால் தானே? புருஷோத்தமனை சங்கடமாக பார்த்த நிஷாந்த்,

“ஹரி, அத்தான் சரியா சாப்பிடாம போய்ட்டாங்க. போய் உன் புருஷனை கவனி...” என முணுமுணுப்பாக கூற,

“அவளை எதுக்கு நிஷாந்த் தொந்தரவு செய்யுற. ஹர்ஷூ நீ சாப்பிட்டே போடாம்மா...” என்ற சகுந்தலாவை மீறி அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் அன்னம்மா வந்து டேபிளை ஒதுக்க சகுந்தலாவிற்கு உதவினார்.

திருவேங்கடமும், புருஷோத்தமனும் பின்பக்கம் தோட்டத்தில் போய் அமர ஹர்ஷூ நிஷாந்தை இழுத்துக்கொண்டு முன்பக்கமாக ஓடினாள்.

“எதுக்கு ஹரி இப்டி இழுத்துட்டு வர, டைம் ஆகுது. எனக்கு தூக்கம் வேற வருதுடா...”

“நீயெல்லாம் எதுக்கு நிஷூ இப்டி இருக்க? ராமன் அங்கிள் வீட்டு விஷயமா உன் கிட்ட கேட்டதுக்கு பதிலே சொல்ல மாட்டேன்னு சொல்றியே? மீனுக்குட்டி பாவம்டா...”

“ஹரி, நான் ஊருக்கு போனதும் விசாரிச்சுட்டு சொல்றேன். இப்போதைக்கு அமைதியா இரு. அவன் இந்த ஊர்ல தானே இருக்கான். நான் போய்ட்டு மாப்பிள்ளை வீட்டை பத்தி தெரிஞ்சிட்டு மறுபடியும் கிளம்பி வரேன். இங்க வந்துதானே மாப்பிள்ளையை பத்தின மேட்டர்ஸ் எல்லாம் கலெக்ட் செய்யனும். அதுவரைக்கும் அமைதியா இரு...”

“கல்யாணம் ஆகிவிட்டதென சொல்லி இனி நீ அமைதியாக இரு. இது போன்ற விஷயங்களில் தலையிடாதே...” என கூறினால் ஹர்ஷூ நிச்சயம் கேட்கமாட்டாள் என்று நிஷாந்திற்கு நன்றாக தெரியும். ஆகவே தான் திரும்பி வருவதாக பொய்யுரைத்தான்.

அந்த பொய்யை ஹர்ஷூ மெய்யாக்க போவதை அவன் அறியவில்லை. தானே அவளை தேடி வரபோவதும் அவனின் அறிவுக்கு எட்டவில்லை. ஹர்ஷூவாலேயே தன் வாழ்க்கை திசைமாறப்போவதையும் அறியவில்லை.

நிஷாந்தின் பேச்சிலும் சமாதானமாகாமல், “மீனுக்குட்டி பாவம்டா. உனக்குத்தான் தெரியுமே, யாராச்சும் கொஞ்சம் சத்தமா பேசினா கூட அழுதிடுவா. அவ்வளோ சாஃப்ட். மாப்பிள்ளை நல்லவனா, அவளை புரிஞ்சிக்கறவனா இருந்தா ஹேப்பி தான். ஆனாலும் ராமன் அங்கிள் எதையோ மறைக்கிறாருடா. தப்பில்லைனா பையன் யாருன்னு சொல்ல வேண்டியதுதானே? எதுக்காக மூடுமந்திரம்?...”

ஹர்ஷூ சொல்வதை போல நிஷாந்திற்கும் இந்த திருமண விஷயத்தில் நெருடல் தான். ராமன் எனப்படுபவர் தன் மகளின் திருமணத்தை யாரும் தடுத்துவிட கூடாதென்பதில் அதிக கவனமாக இருப்பது அவரின் நடவடிக்கையிலேயே தெரிந்தது. அதில் தான் அவர் மேலேயான சந்தேகமும் வலுத்தது.

அந்த மீனுவின் முகத்தை ஒரு கணம் கண்முன் கொண்டுவந்தான். கொஞ்சம் அதிகமாவே பூசினாற்போல உடல்வாகு இருந்தாலும் அழகி தான். ஆனால் அப்பாவிக்களை அப்பட்டமாக முகத்தில் கொட்டிக்கிடக்கும். நினைக்கும் போதே கொஞ்சம் பரிதாபமாக இருந்தது நிஷாந்திற்கு.

“குண்டம்மா, உங்கப்பா பேச்சை கேட்டுக்கிட்டு எந்த குழில விழபோறியோ. என் ஹரிக்காக உன்னை கட்டிக்கபோறவனை தெரிஞ்சுக்க முயற்சி பண்ணி தொலைக்குறேன்...” என மானசீகமாக நினைத்துகொண்டிருக்க,

“இப்டிதான் நிஷூ நம்மோட குறிக்கோள்ல கவனமா இருக்கனும். நீ ஏதோ ப்ளான் பண்ணிட்டன்னு நினைக்கேன். ஐ ஆம் ப்ரவுட் ஆஃப் யூ நிஷூ டியர்...” பெருமையாக நிஷாந்தை தட்டிகொடுத்துவிட்டு உள்ளே சென்றவளின் பாவனையை பார்த்தவனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

அவள் சென்றதை உறுதிபடுத்தி கொண்டவன் இன்னும் கொஞ்சம் தள்ளி கேட் பக்கமாக போய் விழுந்து விழுந்து சிரித்தான்.

“ஊர்ல இருக்கிறவனை எல்லாம் இவ பேக்குன்னு சொல்றா. நான் நினச்சது என்ன இவ சொல்லிட்டு போறது என்ன?...” என இன்னுமின்னும் அடக்கமுடியாமல் சிரித்து கொண்டிருந்தான்.

ஹர்ஷூ உள்ளே வந்ததும் அவளை தன்னருகில் அமர்த்திக்கொண்ட சகுந்தலா சிறிதுநேரம் இங்க எப்படி இருக்கவேண்டும் அது, இதென பேசி கடைசியில் ஷக்தியிடம் கொண்டுவந்து நிறுத்தினார். துர்கா, புருஷோத்தமன் திருமணத்தில் ஆரம்பித்து இன்றைய நிலை வரைக்கும் கூறியவர்,

“இனி நீதான் ஹர்ஷூ இவங்களுக்கு எல்லாமே. ஷக்திக்கு துர்கான்னா அவ்வளோ உயிர். நார்மலாவே அம்மா மேல பாசம் இருக்கும் தான். ஆனா இது அதுக்கும் கொஞ்சம் மேல தான் ஹர்ஷூ. துர்காவோட இழப்பை தாங்கமுடியாம இந்த வீட்டை பூட்டிவச்சிட்டு வெளில தங்கியிருந்தவங்க இன்னைக்கு உனக்காகத்தான் இங்க மறுபடியும் வந்திருக்காங்க...”

ஹர்ஷூவிற்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. இப்போது சகுந்தலாவிற்கு என்னமாதிரி பதிலளிப்பது என்றும் பிடிபடவில்லை.

“இனிமே ஷக்திக்கும், சோமன் அண்ணாவுக்கும் எல்லாமே நீ தான் ஹர்ஷூ. அவங்களை எந்த சூழ்நிலையிலையும் நீ கஷ்டப்படுத்திடாத. ஷக்திக்கு துர்கா நினைப்பு வந்திட்டதால சரியா சாப்பிடாம கூட போய்ட்டான். இந்த பாலை கொண்டு போய் குடு. அவனுக்கு ஆறுதலா பேசு...”

திகைப்பாக அமர்ந்திருந்தவளை பார்த்த சகுந்தலா, “கல்யாணம் ஆனதும் பெரிய பொறுப்பை சுமக்க வச்சிட்டோம்னு நினைக்கிறியா ஹர்ஷூ. எங்களோட ஹர்ஷூக்கு இதெல்லாம் ரொம்ப சின்ன விஷயமாச்சே...” என அவளை உற்சாகபடுத்தியவர்,

“சோமன் அண்ணா தொலைஞ்சு போன சந்தோசம் உன் மூலமா திரும்ப கிடைக்கும்னு நம்பறாருடா ஹர்ஷூ. உன்னோட இயல்பை மாத்திக்கோன்னு சொல்லமாட்டேன். ஆனா அவங்களுக்காகவும் கொஞ்சம் உன்னை பழக்கிக்கோ...” அவர் பேசியதை ஏனோ மறுக்க தோன்றவில்லை ஹர்ஷூவிற்கு. தன்னையறியாமல் தலையை ஆட்டினாள்.

“நேரமாச்சு போய் தூங்கு. போய் ஷக்திக்கு இந்த பாலை குடிக்க குடு ஹர்ஷூம்மா...” அவள் எழுந்து சென்றதும் சகுந்தலாவிற்கு “ஹர்ஷூ இந்தளவிற்கேனும் பொறுமையாக கேட்டாளே அதுவே போதும்...” என நினைத்து சந்தோஷமாக இருந்தது.

மாடிக்கு சென்றதும் அறையில் இருந்த பால்கனியில் நின்றுகொண்டிருந்த ஷக்தி இவளது பார்வை வட்டத்திற்குள் விழுந்தான். இவளுக்கு முதுகை காட்டி நின்றதும் பாலை கட்டிலின் அருகில் இருந்த டீப்பாயில் வைத்துவிட்டு தன்னுடையை நைட்சூட்டை எடுத்துகொண்டு பாத்ரூம் சென்று தன்னை ப்ரெஷ் ஆக்கிக்கொண்டு வந்தாள்.

அப்போதும் அதே நிலையில் ஷக்தி நின்றிருக்க தன் தாயை நினைத்துக்கொண்டிருக்கிறானோ என வருந்தியவள் அவனருகே சென்றாள்.

“கௌரவ்...” அழைத்தது மட்டுமே நியாபத்தில் இருந்தது. இப்போது அவனின் இறுக்கிய அணைப்பிலும் அவனின் இதழணைப்பிலும் இருந்தாள்.

மின்னல் வேகத்தில் திரும்பியவன் அவளை தன் கைவளைவிற்குள் கொண்டு வந்து காற்று புகமுடியாத அளவிற்கு இறுக்கியவன் அதே வேகத்தில் அவளது இதழ்களை முற்றுகையிட்டான்.

அவனின் தாக்குதலில் முதலில் அதிர்ந்தவள் அவனது கன்னங்களில் வழிந்திருந்த ஈரத்தை உணர்ந்தவள் நடப்பதை தடுக்க நினைக்காமல் அவனோடு ஒன்றி தன்னை ஒப்புக்கொடுத்தாள். சில நொடிகளில் தன்னிடமிருந்து அவளை விலக்கியவனின் கலங்கிய விழிகளை கண்டவள் உள்ளுக்குள் உருகிக்கொண்டிருந்தாள்.

“ரிலாக்ஸ் கௌரவ்...” என ஹர்ஷூ அவனது கன்னத்தை மென்மையாக வருட அவளின் அருகாமையை தன் தாயின் பிரிவுத்துயருக்கான வடிகால் என நினைத்தானோ?

“ப்ளீஸ் தேனு...” மீண்டும் அவளை அணைத்துக்கொள்ளவும், சகுந்தலாவின் மூலம் தெரிய வந்த ஷக்தியின் கடந்தகாலம் ஹர்ஷூவின் மனதை கனக்கச்செய்திருந்தது. அவளுக்கும் அந்த அணைப்பு அந்நேரம் தேவையாக இருந்ததோ எதுவும் பேசாமல் அவனுக்குள் சுகமாக அடங்கினாள்.

தன் கணவனின் கவலையை துடைக்க ஆறுதலாக தன்னை கொடுத்தவளுக்கு தெரியவில்லை இதுவும் காதலென்று. அவளின் காதலை உணரவென்றே ஆண்டவன் அவளவனை குற்றுயிராக உயிருக்கு போராட விடபோவதை அறிந்திருந்தால் இன்றைக்கே தன் காதலை உணர்ந்திருப்பாளோ இந்த தலைவனின் நாயகி?

நதி பாயும்...
 
Top