Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiyae Paainthodu - 4 ( Re-run )

Advertisement

அவன் சென்ற சில நொடிகளில் புயல் போல உள்ளே நுழைந்தான் கௌரவ் ஷக்திவேல். இந்த நேரத்தில் அவனை பார்த்ததும் என்ன சொல்லி சமாளிக்க என திகைத்துப்போனார் பரணி.

“ஹர்ஷூக்கு என்னாச்சு அத்தை?... நாளைக்கு ஹர்ஷூவை வெளில அழைச்சிட்டு போகலாமான்னு கேட்க வீட்டுக்கு திரும்ப வந்தேன். அப்போதான் வாட்ச்மேன் சொன்னார். ஏன் எனக்கு யாருமே போன் பண்ணலை?...” என கேட்டுக்கொண்டே சோர்ந்துபோய் படுத்திருந்த ஹர்ஷிவ்தாவின் முகத்தை கவலையோடு பார்த்தது அவனது விழிகள்.

உண்மையில் அவன் ஹர்ஷிவ்தாவை மீண்டும் பார்க்கவேண்டும் என்ற உந்துதலில் தான் வெளியில் அழைத்துச்செல்ல கேட்பது போல அவளை பார்க்க இதை சாக்கிட்டு கேட்கவந்தான்.

பரணிக்கு ஏனோ ஹர்ஷூவின் உண்மை நிலையை சொல்ல மனம் வரவில்லை. அது தெரியும் போது தெரியட்டும் என்று தான் நினைக்க தோன்றியது. தான் எதுவும் சொல்லி அதன் காரணமாக கூட திருமணத்தில் எந்த விதமான தடங்களும் வந்துவிட கூடாது என்று நினைத்தார். அதனால் தன்னை சமாளித்துக்கொண்டு,

“அதொண்ணுமில்லை மாப்பிள்ளை, இன்னைக்கு காலையில நடந்த விஷயம் தான் உங்களுக்கு தெரியுமே? நாங்க திட்டுவோம்னு பயந்துட்டு சரியா சாப்பிடாம் இருந்திருக்கா. நானும் கோவத்தில் கவனிக்கலை. இப்போ உங்க நிச்சயதார்த்தம் அவளுக்கு பெரிய அதிர்ச்சியா இருந்திருக்கு. அதனால் ஏற்பட்ட மயக்கம் தான் டாக்டர் ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டாங்க. நாளைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு சொல்லிட்டாங்க...”என மனப்பாடம் செய்தது போல கடகடவென ஒப்பித்தார்.

ஷக்தி வருவதை தூரத்திலிருந்து பார்த்த நிஷாந்த் வேகமாக வருவதற்குள் ஹர்ஷிவ்தாவை பற்றி பரணியிடம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டான். பரணியின் இப்போதைய எண்ணம் தான் நிஷாந்தின் மனதிலும் ஓடிகொண்டிருந்தது. அதனால் தான் அவரை தடுத்துவிடவேண்டும் என நினைக்கு போது அவரே சமாளித்த விதம் நிஷாந்திற்கு நிம்மதியை உண்டாக்கியது.

முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டு அப்போதுதான் உள்ளே நுழைபவன் போல, “வாங்கத்தான். உங்களுக்கு எப்படி தெரியும் நாங்க இங்க இருக்கிறது?...” என குரலில் சாதாரணத்தை வரவழைத்துகொண்டு கேட்கவும்,

“வாட்ச்மேன் சொன்னான் நிஷாந்த். நீ எங்க போய்ட்ட அத்தையை தனியா விட்டுட்டு?...”

“பரணிம்மா வீட்லயும் எதுவும் சாப்பிடலை. அதான் அவங்களுக்கு குடிக்க எதாச்சு வாங்கலாம்னு போனேன். கேன்டீன்ல கூட்டம் கம்மியா இருக்கு. டிபனும் இருந்தது. அதான் நர்ஸை இருக்க சொல்லிட்டு அவங்களை கூட்டிட்டு போய் சாப்பிட வைக்கலாமேன்னு வந்தேன்...”

“ஹ்ம், ஓகே. நீங்க போய் சாப்பிட்டு வாங்க அத்தை. நான் ஹர்ஷூவோட இருக்கேன்...” என்றவனை பார்த்த பரணி வேண்டாம் என மறுக்க அவரை வற்புறுத்தி நிஷாந்த்தோடு அனுப்பிவைத்து விட்டு ஹர்ஷிவ்தாவின் கரத்தை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்து பொத்திகொண்டவன் அதை நீவியபடியே அவளை பார்த்திருந்தான்.

ஹர்ஷிவ்தாவிற்கு சில நிமிடங்களில் மயக்கம் அரைகுறையாக கலைய தன் முன்னே அமர்ந்திருந்த ஷக்தியை பார்த்தவள் அவனை கண்டு மெல்ல முறுவல் பூத்தாள். அதில் ஆச்சர்யம் அடைந்தவன் அடுத்து அவள் பேசியதில் அதிசயித்து போனான்.

மெல்லிய குரலில் “என்ன கௌரவ், பயந்துட்டியா?... எங்க நீ என் கிட்ட தோத்துடுவியோன்னு?... அதுக்காக அவசரப்பட்டு எனக்கு பெஸ்ட் ஆஃப் லக் சொல்லிடாத...” என்றவளை பார்த்தவனுக்கு புரிந்தது அவள் சுயநினைவில் உணர்ந்து பேசவில்லை என்று. ஆனாலும் எப்படி இப்படி ஒரு சூழ்நிலையில் தன்னை உணர்ந்து எப்படி அவளால் பேச முடிந்தது என்று நம்பமுடியவில்லை.

சிறிது நேரத்திற்கு முன்பு வரை தான் அவளை ஈர்க்கவில்லையோ?... அவளுக்கு துளியளவேனும் தான் பிடித்தமானவன் இல்லையோ என சஞ்சலம் கொண்டிருந்தவன் இப்போது அவளின் பேச்சிலிருந்தே புரிந்துகொண்டான் ஏதோ ஒரு விதத்தில் அவளினுள் தன் மீதான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளோம் என்று.

அதனால் உண்டான அளப்பறியா காதலில் கொஞ்சம் கரகரத்துபோன குரலில், “தேனு, தேனுடா. இல்லை, நான் உனக்கு கண்டிப்பா பெஸ்ட் ஆஃப் லக் சொல்லமாட்டேன். என்னோட சண்டிராணியை யாருக்காகவும் நான் விட்டுத்தரமாட்டேன்...”என்று கண்கள் சிரிக்க உற்சாகமாக பேச,

“ஹ்ம், எதுக்கும் தயாரா இரு. மேரேஜ்க்கு அப்றம் நீ தாங்க வேண்டியது எவ்வளவோ இருக்கு. நான் உன்னை சும்மா விடமாட்டேன். வெய்ட் அன் சி மேன்...” என கூறியவள் புன்னைகையோடே மீண்டும் மயக்கத்திற்குள் சென்றாள்.

அதில் கொஞ்சம் கலவரமடைந்தவன் டாக்டரை அழைக்க அவர் வந்து மீண்டும் செக் செய்துவிட்டு வேறொரு ட்ரிப்ஸ் போட்டுவிட்டு அவனிடம் ஒரு அறிமுகப்படலத்தையும் நிகழ்த்திவிட்டு பயப்பட ஒன்றுமில்லை என கூறிச்சென்றார்.

சிறிது நேரம் கழித்து பரணியும் நிஷாந்தும் வர அவர்களிடம் நாளை வருவதாக சொல்லிக்கொண்டு கிளம்பினான் ஷக்தி. ஹர்ஷிவ்தாவின் பேச்சில் மெய் மறந்து தனி உலகில் சஞ்சரித்து கொண்டிருந்தவனது ஆழ் மனதில் உறுத்தி கொண்டிருந்தது பரணியின் தடுமாற்றமான பேச்சு. அவர் பேசியதையும், மயக்கத்திற்கான காரணத்தையும் நிச்சயம் நம்பவில்லை.

அவரை துருவிதுருவி கேட்க அவன் மனமும் இடம் தரவில்லை. முதலில் திருமணம் முடியட்டும், பின் அவர்களாக சொல்லும் வரை தான் எதுவும் கேட்க கூடாது என நினைத்துகொண்டான்.

இந்த விஷயம் சம்பந்தமாக எதுவும் கேட்காமல் தள்ளி போட்டதற்க்கு இன்னொரு காரணமும் உண்டு. பிரச்சனை என்னெவென்று தெரிந்து அது தனக்கு பிடிக்காமலோ, விஷயம் மிக பெரிதாக இருந்தாலோ எங்கே இந்த திருமணத்தை தானே நிறுத்திவிடும் அளவிற்கு இந்த பிரச்சனையின் காரணம் இருந்துவிட்டால் ஹர்ஷிவ்தாவை எங்கே இழந்துவிடுவோமோ என்ற பயமே. அவள் தனக்கு மனைவியாகிவிட்டால் எந்த சூழ்நிலையானாலும் தான் அவளுக்கு உறுதுணையாக இருப்போம் என நம்பினான்.

ஆனால் அவளது பிரச்சனை தெரிய வரும் போது இதே திடத்துடன், மன உறுதியுடன் அந்த பிரச்சனையை கையாள்வானா? இதை தெரிந்துகொள்ளும்போது தன்னுடைய தூக்கமும் நிம்மதியும் மொத்தமாக பறிபோக போவதை அறிவானா?

இப்போதைக்கு இதை நினையாமல் இருப்பதே நல்லது என எண்ணி மொத்தாமாக அதை ஒதுக்கித்தள்ளினான். அப்படி இவனை நிம்மதியாக இருக்க விடுவாளா அவனின் சண்டிராணி?

நேராக திருவேங்கடத்தின் வீட்டிற்கு சென்றவன் உள்ளே செல்லும் முன்னே ஹர்ஷிவ்தாவை பற்றி யாரிடம் சொல்லவேண்டாம் என்று முடிவெடுத்துக்கொண்டான். என்ன பிரச்சனை என்று தெரியாமலேயே இங்கிருப்பவர்களின் மனதில் குழப்பத்தை உண்டாக்கவேண்டாம் என எண்ணிக்கொண்டே.

“ப்ருத்வி, நான் சொல்றதை கேளுடா. எல்லா விஷயத்துக்கும் கோவப்படாதே, அவங்க நம்ம ஷக்தி, நம்ம ஹர்ஷூடா...” என கெஞ்சிக்கொண்டிருந்தார் சகுந்தலா.

கல்யாணம் நின்றுவிட்ட கோவத்தில் இங்கேயே இருந்தால் அனைவரின் கேலிப்பார்வைக்கு ஆளாகிவிடுவோம் என்ற வெறுப்பில் மும்பையில் இருக்கும் தன் நண்பனின் வீட்டிற்கு சென்றுவிட்டான் ப்ருத்வி. இப்போதைய தன் நிலைக்கு காரணமானவளுக்கு திருமணம், அதுவும் தன் தாய் தந்தையரே முன்னின்று பேசி முடித்திருக்கின்றனர் என்ற உச்சகட்ட கொதிப்பில் சகுந்தலாவிடம் பொரிந்துகொண்டிருந்தான்.

திருவேங்கடமும் புருஷோத்தமனும் அமைதியாகவே அமர்ந்திருந்தனர். சகுந்தலா ப்ருத்வியின் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் தடுமாறியபடி திருவேங்கடத்தை பார்த்துவிட்டு ஷக்தியை பார்த்ததும் சங்கடமாக உணர அதையெல்லாம் கண்டுகொள்ளாதவன் அவரிடமிருந்து போனை வாங்கி,

“உனக்கு என்ன பிரச்சனை ப்ருத்வி?.. என் கிட்ட சொல்லு. நான் தான் அத்தையையும் மாமாவையும் கட்டாயப்படுத்தி அழைச்சிட்டு போனேன். எதுவானாலும் என்கிட்டே பேசு நீ...” என அதட்டலாக கூற எப்போதுமே கௌரவ் ஷக்திவேலை பார்த்தால் ப்ருத்விக்கு இயல்பாகவே பய உணர்வு தலைதூக்கும்.

அவனின் உருவத்தினாலா, இல்லை அவனது பார்வையிலேயே இருக்கும் கண்டிப்பு தொனியினாலா, இல்லை இலகுவாக பேசாமல் எப்போதும் அவனிடம் இறுக்கமாகவே இருக்கும் பாவத்தினாலா எதுவென்று பிரித்தறியாத வகையில் அவனை பார்த்தால் அவனையும் மீறிய பய உணர்வு எப்போதுமே தன்னாலே தலைதூக்கிவிடும்.

அவனை பார்க்க நேரும் தருணங்களை மிக கவனமாக தவிர்த்துவிடுவான். எப்போதாவது சிக்கிகொண்டால் ஓரிரு வார்த்தைகளோடு தலைமறைவாகிவிடுவான். இப்போது அவனே லைனில் வருவானென்று எதிர்பார்க்காததால் பேச்சு வராமல் நா உலர்ந்து ஒட்டிக்கொண்டது.

“அது வந்து அண்ணா, நான்.... அம்மா...” என தடுமாற,

“இங்க பாரு ப்ருத்வி. ஹர்ஷூ உன் கல்யாணத்தை நிறுத்தினது எனக்கு தெரியும். மாமா என்கிட்டே எல்லாமே சொல்லிட்டாங்க. அவள் செஞ்சதில எனக்கொண்ணும் தப்பா தெரியலை. உன்னோட செயல்களுக்கான பிரதிபலன் இதுதான். உன்னை முதல்ல நீ மாத்திக்க பாரு...” என்றவன்,

“அப்புறம் மாமாவை, அத்தையை இன்னொரு தடவை என் கல்யாணவிஷயத்தை வச்சு ஏதாவது பேசின பார்த்துக்கோ. என் கல்யாணத்தை அவங்கதான் முன்ன இருந்து நடத்தி வைப்பாங்க. எனக்கான உரிமையை உனக்காக கூட விட்டுத்தர முடியாது. முடிஞ்சா விருப்பம் இருந்தா நீ கல்யாணத்துக்கு வா. இல்லைனா பேசாம அங்கேயே இரு. புரியுதா?... என அதே குரலில் கூறவும் மாட்டேன் என்றா சொல்லுவான்?

“சரிங்கண்ணா. நான் எதுவுமே இனிமே சொல்லமாட்டேன். சாரி...”

“ஹ்ம். இவ்வளோ நேரம் தூங்காம என்ன செய்யுற? போ போய் நேரத்துல தூங்கு. உன்னை நீ சரி பண்ணு. உன் வாழ்க்கை தானா சரியாகும். பை. குட்நைட்...” என்று கூறிவிட்டு போனை வைக்க விட்டால் போதும் என எங்கே மீண்டும் அழைத்து பேசிவிடுவானோ என்ற பயத்தில் அலறியடித்துக்கொண்டு இழுத்துபோர்த்தி படுத்துக்கொண்டான் ப்ருத்வி.

அவன் பேசுவதையெல்லாம் நமுட்டுச்சிரிப்போடு கவனித்துகொண்டிருந்த திருவேங்கடம், “சகு இனி உன் பிள்ளை வேற யார் போன் பண்ணினாலும் பதறப்போறான் பாரேன்...” என கூறி இடியென சிரிக்க அதை ஆமோதித்து சகுந்தலாவும் சிரிப்பில் இணைந்துகொண்டார்.

“பாருடா ஷக்தி, நீ ப்ருத்வியை பிடிச்சு லெப்ட் அண்ட் ரைட் வாங்கிருக்க. அவனை பெத்த இதுக ரெண்டும் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம சிரிக்குதுங்க பாரேன். என்னத்தை சொல்ல? நான் பெத்ததும் சரியில்லை. என் கூட வளர்ந்ததும் சரியில்லை...” என நொந்துகொள்வது போல பாவனை செய்ய அவரது அந்த பாவம் அனைவரையும் மேலும் சிரிப்பை உண்டாக்கியது.

“நீ வேற சோமா, அவன் இவன் ஒருத்தனுக்காகனாலும் கொஞ்சம் அடங்கி போறானேன்னு நான் சந்தோஷப்படறேன். அது பொறுக்கலையா உனக்கு...” என்றவர் குரலில் கொஞ்சம் கவலை எட்டிப்பார்த்ததோ. அதை கண்டு,

“விடு திரு. சின்னப்பையன் தானே. எல்லாம் போக போக சரியாகிடும். இல்லையா என் மருமகக்கிட்ட சொல்லி மந்திரிக்க வேண்டியதுதான்...” எனவும்,

“ப்ச் புருஷ்...” என ஷக்தி அதட்ட,

“இவன் வேற ஆரம்பிச்சுட்டான்டா. புருஷூ, பேஸ்ட்டுன்னு. அட போடா...” என நொந்துகொண்டார் புருஷோத்தமன்.

அதை கண்டுகொள்ளாமல், “ஓகே மாமா நான் ஹோட்டலுக்கு கிளம்பறேன். ப்ரெண்ட்ஸ் வெய்ட் பண்ணுவாங்க. நாளைக்கு வீட்டுக்கு வரேன் மாமா...”

“என்னடா நீ. இவ்வளோ பெரிய வீடு இருக்கும் போது நீ ஹோட்டல்ல தங்கினா எப்படி? நான் தான் நீ வரும்போதே சொன்னேன்ல. இங்கதான் தங்கனும்னு...” என ஷக்தியை ஆட்சேபிக்க,

“ஹைய்யோ மாமா. நான் என்ன நம்ம வீட்டு விசேஷத்துக்கு வந்துட்டா ஹோட்டல்ல தங்கினேன். ப்ரெண்ட் கல்யாணத்துக்கு ஆபிஸ்ல கூட வொர்க் பன்ற எல்லோரோட வந்திருக்கேன். அவங்களோட வந்துட்டு தனியா இங்க வந்து தங்கறது மரியாதையா இருக்குமா? ப்ளீஸ்...” என கெஞ்சாமல் கொஞ்சியவனிடம் மறுப்பை தெரிவிக்க முடியாமல் அவனின் கூற்றை ஏற்றுக்கொண்டனர்.

“சரி எப்போ சென்னை கிளம்பற?...”

“நாளைக்கு வரை லீவ் போட்டிருந்தேன். இன்னொரு நாள் எக்ஸ்டைன் பண்ணனும். நாளை மறுநாள் கிளம்ப டிக்கெட் புக் பண்ணனும் மாமா. ஓகே வரேன் மாமா...” என்றவன் சகுந்தலாவிடமும் தன் தந்தையிடமும் கூறிக்கொண்டு திருவேங்கடத்தின் காரில் ஹோட்டலை நோக்கி செல்ல அவனது நினைவும் நேற்று தன் சண்டிராணியை தான் முதன் முதலாக பார்த்த தருணத்தை நோக்கி பின்னே சென்றது.

அந்த நினைவு தந்த சுகந்தத்தில் மனம் மயங்கி போனான். தான் அவளை பார்த்த அந்த நிமிடத்தில் ஹர்ஷிவ்தாவின் முகத்தில் ஜொலித்த ஆயிரமாயிரம் பாவங்கள் அவனை அவளின் புறம் அடியோடு சாய்த்தது.

அவனளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவிற்காவது ஷக்தியின் காதலுக்கான பிரதிப்பலிப்பு ஹர்ஷிவ்தாவிடம் ஏற்படுமா? தீட்சண்யா விஷயத்தில் ஹர்ஷிவ்தாவிற்கு ஆதரவாக செயல்படுவானா ஷக்தி?



நதி பாயும்..



superb sis
 
Top