Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sameera’s மனைத்தக்க மாண்புடையாள் - 8

Advertisement

Sameera?

Well-known member
Member
அத்தியாயம் 8

இருள் படர தொடங்கிய அந்தி மாலை வேளையில் மொட்டை மாடியின் குட்டி சுவற்றில் தனியே அமர்ந்திருந்தாள் உதயா.



அங்கே சுழன்ற குளுமையான வாடை காற்று அவளை தழுவி அவளுள் இருந்த வெக்கையை தணிக்க முயன்று தோற்றது.

இன்றோடு நான்கு நாட்கள் ஓடிவிட்டது.ஆனால் அன்றைய தாக்கம் சிறிதும் குறையவில்லை.ஆசையாய் கட்டிய மணல் கோட்டையை ஒற்றை அலை அடித்து சென்றுவிட்டதை ஏற்க முடியாமல் தவிக்கும் குழந்தைப்போல் அவள் மனம் ஊமையாய் அழுதது.



'நீ..நான்..நாம என்கிற பேச்சுக்கே இடம் கிடையாது..'



என்ற அவனது வார்த்தைகள் அவள் காதில் ரீங்காரமாய் வட்டமடிக்க கண்கள் தாமாய் கலங்கியது.அவன் எளிதாய் கூறிவிட்டான்.ஆனால் அவனை தூக்கி எறிவது அவளுக்கு அவ்வளவு சுலபம் இல்லையே..!!அதே சமயம் அவர்கள் உறவில் உள்ள சிக்கல்..அதுவும் சிறியது கிடையாது..



ஏன் உதயாவிற்கே வெண்பாவின் தம்பி என்பவன் மீது மலையளவு கோபமும் ஆத்திரமும் இருந்தது.ஏனெனில் அன்றைய பிரச்சனையின் அடியாழம் வரை அவளுக்கு தெரியாது என்றாலும் வெறும் பேச்சு வார்த்தைகளில் இருந்த பிரச்சனை..அப்படியே கூட அடங்கி போயிருக்கலாம்..இவன் தலையிட்டு பேசி கைநீட்டவும் தான் வார்த்தைகள் தடித்தது.கைகலப்பு ஆனது.இருக்குடும்பமும் நிரந்தரமாய் பிரிந்து வெண்பாவும் தனக்குள்ளே ஒடுங்கிபோனது.அனைத்திற்கும் காரணம் இவன் தான் என்று பலமுறை உதயாவே சபித்திருக்கிறாள்.



இன்று அவன்மீதே தான் காதல் கொண்டு நிற்கும் நிலையில் அவள்..!!விதியின் விளையாட்டு எவ்வளவு தந்திரமானது..!!



அவனை வேண்டாம் என்று ஒதுக்கவும் முடியாமல் அவன் மட்டுமே வேண்டும் என்று உறுதியும் கொள்ள முடியாமல் நரகவேதனையாய் இருக்க,

"ஏண்டா..இந்த காதல் என்னுள் வந்தது.."

என்று உள்ளம் அடித்துக் கொள்ள தன்னை கட்டுபடுத்திக் கொள்ள இயலாமல் வாய்விட்டு அழுதாள்.அந்த இருள் படர்ந்த வேளையின் தனிமையும் அதற்கு துணையாய் அமைய மனதின் பாரம் மொத்தமும் கண்ணீராய் கரைந்து போக வேண்டும் என்று நினைத்தவள் போல் அழுது தீர்த்தாள்.



காதல் நீ..

காயம் நீ..நீ

கானல் நீயே..மறைந்தாயே...




நேரம் செல்ல செல்ல அழுகை சற்று மட்டுப்பட தன்னை யாரும் தேடி வரும்முன் கீழே சென்றுவிட நினைத்து எழுந்தவள் அப்பொழுது வாசலில் நிறுத்தப்பட்ட பைக் சத்ததில் திரும்பி பார்த்தாள்.



தன் நண்பனின் பின்னால் அமர்ந்திருந்த ஜெகன் அவனிடம் விடைக்கொடுத்துவிட்டு தோளில் பேக்கை மாட்டிக் கொண்டு வாசலில் உள்ள இரும்பு கேட்டை நோக்கி வந்தான்.

அவனை கண்டதும் மற்றவை மறைய அவசரமாய் கீழே ஓடினாள்.



இரண்டு நாட்களாய் அவனிடம் அழைப்பே இல்லை.என்ன ஆனது..ஏது என்று ஒன்றும் தெரியவில்லை.உதய் பிரச்சனையில் அவளுக்கும் அவனுக்கு அழைத்து கேட்கவே தோன்றவில்லை.எனவே அவன் திடீரென்று வந்து நிற்கவும் பரபரப்பானவள் முதல் ஆளாய் சென்று கதவை திறந்தாள்.



"எரும..ஏண்டா ரெண்டு நாளா கால் பண்ணல.."



திறந்த நொடி வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாய் கேள்வி வந்து விழுக,



"வெளியூர் சென்று திரும்பிய தமையனிற்கு நல்ல வரவேற்பு..நல்ல வரவேற்பு.."

என்றான் பெருமூச்சோடு..



"போன காரியம் என்னாச்சுனு சொல்லு..உன்னை ஆரத்தி எடுத்தே வரவேற்கிறேன்.."

என்றதும் ஸ்டெய்லாய் காலரை தூக்கி விட்டுக் கொண்டு,



"ராஜா..கைய வச்சா..அது ராங்கா பூடுமாடா.."

என்று கமல்ஹாசன் போல் சொல்லியவன் அப்பொழுது தான் தங்கையின் கண்களிலும் கன்னங்களிலும் கண்ணீர் தடயத்தை கண்டான்.



"வாவ்..சூப்பர் ஜெகா.."

என்று அவன் கையை பற்றி குதித்தவள் மனம் அவனுக்காக சந்தோஷம் அடைந்தது.



ஆனால் ஜெகனோ அவள் கண்ணீரை கண்டு என்ன எதென்று மனம் பதற அதனை கேட்கும் முன் ஆழிக்கண்ணனும் தயாவும் வந்துவிட்டனர்.



"என்ன உதயா..இன்னைக்கு ஜெகனிற்கு வரவேற்பு பலமாய் இருக்கு..ஜெகா..என்னடா ஜாப்ல ப்லேஸ் ஆகிட்டியா.."



என்று தயா கேட்க சந்தோஷமாய் ஓடி வந்து,



"அண்ணா கேளுண்ணா..சர் பெரிய பெரிய வேலை எல்லாம் செஞ்சிருக்கார்.."

என்று அவன் தோளை இடித்து ஜெகனிடம் பழிப்பு காட்ட,



"என்னடா அப்படி பண்ணின.."

என்றார் ஆழிக்கண்ணனும்...அதற்குள் அனைவரும் வந்துவிட்டனர்.



பிறகு என்ன..?? ஜெகன் ஆதியில் இருந்து அந்தமாய் அனைத்தையும் கூற எல்லோரும் திகைத்து,கடிந்து,வெடித்து பின் இறுதியில் அவன் தைரியத்தையும் மனத்துணிச்சலையும் கண்டு பெருமைக் கொண்டு என்று பல்வேறு உணர்ச்சி குவியலோடு அந்த குடும்பமே அவன் வெற்றியை கொண்டாடியது.



"இதுக்கு தான் ரெண்டு நாளா ஏதோ யோசனையிலே இருந்தீயா நீ..நான் என்னவோ ஏதோனு பயந்துட்டேன்..ரிஸ்கான ஒரு ப்ரோஃபஷன் தான் உதயா..ஆனால் நம்ம ஜெகன் திறமைக்கு எங்கே இருந்தாலும் சிறந்து இருப்பான்..இதுக்காக நீ மனச குழப்பிக்காத..எங்க உதயா எப்பவும் சிரிச்ச முகமா தான் இருக்கணும்.."



வாடிய முகத்தோடு வளைய வந்த உதயாவை வெண்பா கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.கேட்டாலும் அவள் சரியாக பதில் சொல்லவில்லை.ஆஷிகிடம் விசாரிக்கலாமா என்று யோசனையில் தான் இருந்தாள்.ஜெகனை கண்டதும் அவளின் மலர்ச்சியை கண்டதும் இது தான் காரணம் என்று யூகித்துக் கொண்டவள் ஆறுதலாய் பேசி அவள் கூந்தலை கோதிக் கொடுக்க கலங்கமில்லாத அவளது அன்பில் உதயாவின் நெஞ்சம் நெகிழ்ந்து தான் போனது.



"உதய் மேல இதைவிட எவ்வளவு பாசம் வைச்சிருப்பாங்க..அவரோட அக்காவை நிரந்தரமா அவருக்கு இல்லாமல் செஞ்சிட்டோமே..அது அவருக்கு எவ்வளவு வலித்திருக்கும்.."



திடீரென்று மனம் உதய்யின் பக்கம் யோசிக்க,

'அஹ்ஹ்ஹ்ஹ்..என் சிந்தனையில கூட விட்டு போக மாடேங்கிறானே...' பல்லை கடிக்க தோன்றியது.



மதி,தயா,ஆழிக்கண்ணன் மூவரிடமும் மாட்டி ஜெகன் ஒருவழியாகிவிட அவர்களை சமாளித்து சாந்தப்படுத்துவதுக்குள் போதும் போதும் என்றானது.இரவு உணவு உண்ட பின் ஜெகன் உதயாவோடு திண்ணையில் வந்து அமர்ந்தான்.



நிலவொளியில் அமர்ந்து அன்றாட நிகழ்வுகளை பகீர்ந்து கொள்வதும் விளையாடுவதும் சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு ஒரு பழக்கம்.சில நேரங்களில் அனைவருமும் அங்கே கூடி கொட்டம் அடிக்கவும் செய்வர்.இன்று அதே போல் இருவரும் அமர்ந்திருக்க,



"சரி..என்ன விஷயம்..சொல்லிடு உதயா.."

என்று அவன் ஆரம்பிக்க புரியாமல் பார்த்து,



"என்ன..என்ன சொல்ல சொல்ற..புரியலடா.."

என்றாள்.



"நான் வருவதற்கு கொஞ்ச நேரம் முன்னாடி அழுத்துட்டு இருந்திருக்க..அதுக்கு காரணம் என்னானு தான் கேட்கறேன்.."



பதிலின்றி வானை நோக்கியவள் பின் மென் குரலில் அனைத்தையும் கூறினாள்.இறுதியாய் அவன் கூறியது வரை..!!



"நான் இப்படி எல்லாம் நடக்கும்னு நினைத்து நடிக்க போகல ஜெகா..ஜெஸ்ட் ஒரு இன்ரெஸ்டிங் ஆன எக்ஸ்பிரியன்ஸாக இருக்குமேன்னு தான் நினைச்சேன்..ப்ளீஸ் தப்பா எடுத்துக்காத.."



ஏனோ செய்யும் பொழுது தெரியவில்லை.ஆனால் அதனை சொல்லும்போது தான் வீட்டில் அவர்கள் வைத்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்திக் கொண்டோமோ என்று உறுத்தியது.



அவளை புரிந்தவனாய், "ஹே..புரியுதுடா..நீ விளக்கம் எல்லாம் சொல்லணுமா.." என்று ஆதூரமாய் மொழிந்தவன், "ஸோ..உதய் யாருன்னு தெரியாமல் அவனை லவ் பண்ணிட்ட இல்லையா.." என்று கேட்க ஆம் என்பதாய் தலையசைத்தாள்.



"அதான் இப்போ தெரிந்திடுச்சே..அவனும் உன்னை லவ் பண்ணலேன்னு சொல்லிட்டான்..இனி இது தொடராது இல்லையா..??"

ஆழம் பார்க்கும் தொனியில் அவன் கேட்க பதிலின்றி தலையை தொங்க போட்டு அமர்ந்திருந்தாள்.



உதயாவின் மனதை துல்லியமாய் அறிந்துக் கொண்டான்.ஆனால் அவள் மனம் சொல்வதை அறிவு ஏற்க மறுக்க இரண்டுக்கும் நடுவில் அல்லோல்படுகிறாள் என்று புரிந்தது.





"ம்ம்ம்..சீரியஸ்லீ உதயா..உனக்கு இந்த லவ் போயும் போயும் அந்த உதய் மேலையா வரணும்..எனக்கு அவனை நல்லாவே நியாபகம் இருக்கு..உனக்கு பார்க்கும் போது அவன் ரொம்பவே சுமார் தான்.."

சிரிப்பை அடக்கிய குரலில் சொல்ல அதுவரை அமைதியாய் இருந்த உதயா சட்டென்று நிமிர்ந்து,



"ஜெகா..வேணாம் அவரை அப்படி சொல்லாத.."

என்றாள் உண்மையான கோபத்தோடு..



"ஓய்..என்ன..இந்த ஸீன்ல ஒரு அண்ணனா உன் லவ் ஸ்டோரி கேட்டு நான் தான் கோபப்படணும்..உனக்கு ஏன் கோபம் வருது..உண்மையை சொன்னால் கசக்குதா..அவன் சுமார் ரகம் தான்..எழும்பன்.."



சீண்டியவனை முறைத்து, "நீ எப்பவோ பார்த்ததை வைச்சு பேசாத..அவரு எழும்பன் எல்லாம் இல்ல..ஜிம்பாடி தான்.."

என்றாள் ரோஷத்தோடு..



"இந்த சப்ப கட்டெல்லாம் கட்டாத..ஆளு தான் வளர்த்தியா இருப்பான்...முசுமுசுன்னு கோபம் தான் வருமே தவிர வேற ஒண்ணுலையும் திறம் இருக்காது..அவனுக்கு இந்த காலேஜ்ல ப்ரோப்போஸ் செஞ்சன்னு சொன்னீயே சுனீல் அவனே தேவலாம்.."



என்று அவன் பேச பேச பொறுமையிழந்தவள் சரமாரியாய் அவன் தோளில் அடித்தபடி,



"அவரை இப்படி பேசாதேன்னு சொல்றேனா..எனக்கு அவர் மட்டும் தான் இந்த உலகத்திலே அழகு..என்ன தெரியும் உனக்கு அவரை பத்தி.."

என்றவள் "யூ ஆர் ஹர்டிங் மை ஃபீலீங்ஸ் ஜெகன்.." என்னும்போது கண்களில் கண்ணீர் படர்ந்தது.



"அடடா..என் அஞ்சலி பாப்பா.."

என்று அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.அவன் செல்லம் கொஞ்சும் போது அபூர்வமாய் வரும் அழைப்பு இது.!!இவனிற்கு நன்றாக விபரம் புரியும் வயதில் அஞ்சலி படம் பார்க்கும் போது உதயா கிட்டதட்ட அதே போல் தான் இருப்பாள்.அதனாலே அப்படி அழைத்து தான் கொஞ்சுவான்.



"ஸீ..இது தான் உன் மனசு உதயா..யெஸ்..எனக்கு இப்பவும் அவனை பிடிக்கலை தான்..ஆனால் என் அஞ்சலி பாப்பாக்கு இனி அவனை தவிர யாரையும் பிடிக்க போறது இல்லைன்னு புரிஞ்சிடுச்சு.."



என்றவன் அவள் முகத்தை நிமிர்த்தி,



"லவ் பண்ணினால் சும்மாவா..அதோடு கான்ஸீகுவன்ஸை பேஸ் பண்ணி தான் ஆகணும்..விடுடா..அவனவன் கண்டம் விட்டு கண்டமே கல்யாணம் பண்றான்..உதய் எம்மாதிரம்..?? விடு பார்த்துக்கலாம்..உங்களால தான் நம்ம ஃபேமிலீ சேரணும்னு இருக்கோ..என்னவோ.."



என்று அவன் நம்பிக்கையாய் பேச அவளுக்கும் சிறிதாய் தெளிவு பிறந்தது.



.

.

.



நொடிகளில் குறும்படத்தை இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என்று தன் இன்ஸ்டக்ராம் பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை உதய் குமார் பதிவு செய்திருக்க அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு வந்து நம்பிக்கை தந்தது.



போஸ்ட் ப்ரோடெக்‌ஷன் வேலைகளில் சற்று அதிகம் செலவு வைக்கும் வேலைகள் கடைசி நேரம் வரை இழுத்துக் கொண்டிருக்க தற்போது அதுவும் முடியவும் தான் ஆசுவாசமடைந்தவன் வீடு திரும்பினான்.



பைக்கை பார்க் செய்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தவன் ஹாலில் தொலைகாட்சியில் மூழ்கியிருந்த சரண்யாவை,



"ஹாய் ம்மா..என்ன..உங்க சிரியல் கொடுமை தாங்க முடியாமல் அப்பா தூங்க போயிட்டாரா.."

என்று வம்பிழுத்தபடி அவன் மாடியேற, "இல்ல..உங்க டேரக்டர் படம் தான் ஓடிட்டு இருந்தது..அதான் எஸ்கேப்பாகிட்டார்.."

என்று பதிலுக்கு வாரியவர்,



"சாப்பாடு எடுத்து வைக்கவாடா..?"

என்று எழும்ப, "இல்லம்மா..சாப்பிட்டு தான் வந்தேன்..வேணாம்.." என்றான்.இரவு சில நேரங்களில் நண்பர்களோடு சாப்பிட்டு வந்துவிடுவது வழக்கம் தான் என்பதால் அவரும் விட்டுவிட்டார்.



தன் அறைக்கு வந்தவன் கீயை கோல்டரில் மாட்டிவிட்டு அலைப்பேசியை மேசைமீது வைத்துவிட்டு குளியலறைக்குள் சென்றான்.



அவன் அறையில் சுவரெங்கும் அவன் குடும்ப புகைப்படம் இருந்ததை விட நிறைய சினிமா படங்கள் தொடர்பான சுவரொட்டிகள் தான் ஒட்டி இருந்தது.எல்லாம் அவன் பள்ளி படித்தபோது சேகரித்து ஒட்டியது.சிறுவயதில் இருந்தே சினிமா கலை மீது அவனுக்கு தீராத காதல்.மொழி வித்தியாசம் இன்றி எல்லா மொழிப் படங்களையும் பார்த்து இரசிப்பவன் மிகவும் பிடித்த கதாபாத்திரங்களை தன் அறையில் ஒட்டி வைத்துக் கொள்வான்.கமல்ஹாசனில் தொடங்கி ஐயன்மேன் வரை அனைவருக்கும் அவன் அறையில் இடம் உண்டு..!! வளர்ந்த பின்பும் அவற்றை இரசிப்பவனாய் அதனை மாற்றாமல் வைத்திருந்தான்.





ரெஃப்ரெஸாகி வந்ததும் மொபலை எடுத்துக் கொண்டு கட்டிலில் விழுந்தவன் குவிந்திருந்த நோட்டிஃபிகேஷன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான்.



நிறைய நண்பர்கள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரவர் ஸ்டோரியில் பதிவு செய்து இவனை டேக் செய்து வாழ்த்தியிருக்க அனைவருக்கும் நன்றி தெரிவித்தவன் மீண்டும் அந்த புகைப்படத்தை திறந்து பார்த்தான்.



அதில் ஆஷிக்கும் உதயாவும் அருகருகே ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தபடி நிற்க இருவரின் கையிலும் முதுகு பின்னால் மறைக்கப்பட்ட கத்தி..!!



அவன் பார்வை உதயாவின் முகத்தில் நிலைத்தது.பால் நிலவில் செய்த சிலையாய் அத்தனை அழகி..!! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத தேர்ந்த கலைஞன் வரைந்த ஓவியமாய் அவள் முகமும் அழகும் யாருக்கு தான் பிடிக்காமல் போகும்..ஆள் மட்டுமா அழகு..மனசு அதற்குமேல் அழகு அல்லவா.!!!



இவள் தன்னை விரும்புகிறேன் என்று சொன்னபோது அவனுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லை.அதுவும் அவள் தனக்காகவே நடிக்க வந்தது எல்லாம் உண்மையில் அவனை ஆச்சரியத்தில் ஆழ்தியது.அதை எவ்வளவு எளிதாய் அவனிடம் கூறிவிட்டாள்.எந்த பூசலும் இன்றி இது தான்..இப்படி தான் என்று அவள் காதல் சொன்ன அழகு கூட தற்போது இரசனையாக தான் பார்க்க தோன்றியது.



'எதை கொண்டு இவளுக்கு நம்மீது காதல் என் மீது காதல் வந்தது..'

என்று ஆயிரம் முறை தன்னை அன்று கேட்டு இருப்பான்.போகும் போதும் வரும் போதும் முகத்தை கண்ணாடியில் பலமுறை அப்படி இப்படி திருப்பி பார்த்திருந்தான்.ஆனாலும் அவனுக்கு காரணம் தான் எதுவும் கிடைக்கவில்லை.



இவ்வாறு அவள் காதலை வியந்து பார்த்தானே தவிர நாமும் அவளை காதலிக்கிறோமா என்றெல்லாம் யோசிக்கவில்லை.அவனுக்கு இந்த காதல் சரிவராது என்பதை ஐயந்திரிபற உணர்ந்திருந்தான்.அதனால் தான் அவளிடம் அதனை சொல்லும் போது எந்த தடுமாற்றமும் இல்லை.அவளும் பதில் கூறாமல் சென்றதில் புரிந்துக் கொண்டிருப்பாள் என்று நம்பினான்.

வாழ்க்கையை ப்ராக்டிகளாய் பார்க்கும் உதய் இந்த விஷயத்திலும் அவ்வாறே நிதர்சனம் உணர்ந்து விலக்கி வைக்க நினைத்தான்.





பெருமூச்சோடு மொபைலை அணைத்து வைக்க அவன் முற்படும்போது மீண்டும் வாட்ஸப் டோன் ஒலிக்க திரையில் உதயாவின் பெயரை கண்டு எடுத்து பார்த்தான்.



'ஐ ஸ்டில் லவ் யூ உதய்...'

என்ற குறுஞ்செய்தியை பார்த்து 'இவ புரிஞ்சி தான் பேசுறாளா..' என்று எரிச்சலாகி,



"லூசா நீ.."

என்று பதில் போட்டான்.



'நல்லா தெளிவா தான் இருக்கேன்..நீங்க யாராக இருந்தாலும் என் லவ் உங்களுக்கு மட்டும் தான்..காற்றுக்கு மட்டுமா வேலி இல்ல..என் காதலுக்கும் தான்..'



என்ற மெசேஜோடு கண்ணடிக்கும் எமோஜியை அவள் போட்டு வைக்க "அட ஆண்டவா..இவளை என்ன செய்வது.."

என்று மலைத்து போனான்.
 
Last edited:
Top