Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Rishiram's kaathal pookkum kaalam chapter 16

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 16

ஜன்னல் வெளியே பரிதாபமாய் நிற்கும் சரவணனைக் கண்டதும் கண்ணில் நீர் பெருகத் தொடங்கியது தேவிக்கு.
பஸ்ஸில் ஜென்சி குரலில் 'ஆனந்த ராகம்...வீசும் காலம்...' இசைக்க அது வேறு மனசைப் பிசைந்தது.
கண்ணீருடன் புக்சை வாங்கிக் கொண்டாள். கைகள் புக்சை வாங்கியதேதவிர பெருகி வழியும் கண்ணீரில் கூட தெளிவற்ற நிலையிலும் சரவணன் அழகாய்த் தெரிந்தான் தேவிக்கு.
இருவரும் பார்த்துக் கொண்டே இருக்க, சரசு தேவியின் தோள்பட்டைய்லில் இடித்தாள்.
'டீ தேவி! கன்ட்ரோல்.. யாராவது பாத்துரப் போறாங்க.'
தேவி சட் என்று திரும்பி சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். மடியில் இருந்த அவனது நோட் ஒன்றைத் திறந்தாள்.
முதல் பக்கம் அவனது பெயர்
இரண்டாவது பக்கத்தை திருப்பினாள்.
அணிற்பிள்ளையின் குட்டிக் கண்கள்
குளிக்கும்போது ஊற்றும் முதல் கப் தண்ணீர்
கன்னம் குழிய சிரிக்கும் குழந்தை
வாலைக் குழைத்து ஓடி வரும் டாமி
உதட்டின் நடுவில் உள்ள கருப்பு மச்சம்
மார்கழி காலையில் கோலம் போடும் தாவணி
பஸ்ஸில் கேட்கும் ஜென்சியின் 'தந்தன தந்தன'
பாசத்தைக் கூட கோபமாகக் காட்டும் அப்பா
கோபத்தைக் கூட பாசமாகக் காட்டும் அம்மா
இவை மட்டுமல்ல.
தேவி...
உன் பேர் கூட கவிதை தான்...!
தேவி நெகிழ்ந்தாள்.
அடுத்த பக்கத்தைப் புரட்டினாள்.
பல்லி தோளில் விழுந்தால்
பிடித்தவர் கண்ணில் படுவராம்
காலண்டரின் பின்பக்கம் போட்டிருந்ததைப் படித்ததும்
பல்லி இருக்கும் சுவரின் பக்கம் நகர்ந்தது என் தோள்
தேவி நீ என் கண்ணில் பட...
தேவிக்கு மனம் ஆகாயத்தில் பறந்தது.
தன்னைப் போலவே அவனும் காணத் துடித்திருக்கிறான்.
நோட்டை மூடி வைத்து விட்டு பின்பக்கம் திரும்பிப் பார்த்தாள். இரண்டு ஆண்கள் பின்னால் கம்பியைப் பிடித்து நின்று கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் சரவணனைப் பார்த்தாள். அப்போதே ஓடிச் சென்று 'சத்யா' பட அமலா போல அவன் அருகில் போய் நிற்கலாம் போல் இருந்தது. தன்னை அடக்கிக் கொண்டாள்.
கண்டக்டர் டிக்கெட் கொடுத்துச் செல்ல சரசு வாங்கினாள்.
ஒவ்வொரு பஸ் நிறுத்தமாய் நின்று பயணிகளை உதிர்த்து விட்டு புதியவர்களை ஏற்றிக் கொண்டு பஸ் தன் பயணத்தைத் தொடர தேவிக்குரஒரு யுகம் போவது போல் இருந்தது.
சரசுவிடம் 'எந்த பஸ் ஸ்டாப் இது?' என்றாள்.
'வரதராஜபுரம்'.
அடுத்த பஸ் ஸ்டாப் வந்தவுடன் 'இது எந்த பஸ் ஸ்டாப்?' என்றாள்.
'ராதாகிருஷ்ணன் மில். என்னடி இது இந்த ரூட்ல போயிராத மாதிரி கேட்குற?' என்று அவளை ஒரு தினுசாய் பார்த்தாள் சரசு.
தேவியோ கழுத்தில் உள்ள டாலர் செயினின் பதக்கத்தை வாயில் வைத்து கடித்தபடி கண்கள் பரபரக்க பெருமாள் கோவில் ஸ்டாப்பை எதிர் நோக்கி இருந்தாள்.
பெருமாள் கோவில் பஸ் ஸ்டாப்பும் வந்தது.
தேவியும், சரசுவும் முன் புறமாக இறங்க, சரவணன் பின் வழியாக இறங்கினான்.
தேவி தன்னை நோக்கி நடந்து வரும் அவனயே பார்க்க யாரோ தோள் தொட்டது உணர்ந்து திரும்பினாள்.
ஷீபா!
'என்னம்மா! பின் சீட்ல உக்காந்திருந்த நாத்தனார் கண்ல தெரியலயா?'
தேவி அவள் கைகளைப் பிடித்துக்கொண்டாள். கைகள் நடுங்கத் தொடங்கின.
'ஏய்! தேவி! என்ன இது. அதான் வந்துட்டானே.'
'இ..இ..இல்ல..' தேவிக்கு நா குழறத் தொடங்கியது.
சரவணன் அருகில் வந்தான்.
ஷீபா அவளை விட்டு நகர்ந்து சரசுவுடன் சேர்ந்து கோவிலின் ஆர்ச்சை கடக்கத் தொடங்கினாள்.
சரவணன் தேவியின் அருகில் வந்து அவளை உரசினாற் போல் நடந்தான்.
தேவி தலையைக் குனிந்தவாறு நடந்தாள்.
அவர்கள் இருவரின் மௌனம் தங்களுக்குள் பேசிக்கொண்டன.
கோவில் வாசல் வரவும் பூக்கடை அருகே செருப்பை விட்டனர். சரவணன் ஜாதிமல்லி இரு முழம் வாங்கி தேவியின் கைகளில் தந்தான். அவள் திரும்பி நின்று தன் கழுத்துச் செயினில் இருந்த ஹூக் எடுத்து அவனிடம் தந்து திரும்பி நின்று கொண்டாள். குறிப்பை உணர்ந்த சரவணன் ஒரு முறை அக்கம் பக்கம் பார்க்க, பூக்காரி சீண்டினாள்.
'சும்மா வச்சு விடு தம்பி. காதலிக்கத் தெரியுது. தைரியம் பத்தலயே'
அவன் வெட்கத்துடன் அவளது தலை முடியைப் பற்றி ஜாதிமல்லி பூச்சரத்தை ஹூக் கொண்டு அவளது தலை முடியில் செருகினான்.
தேவிக்கு நெஞ்சம் எல்லாம் நிறைந்தது. கோபுரத்தை கைகளால் சேவித்தவள் முதற்படியைத் தாண்டினாள். அவனும் அவளைத் தொடர்ந்தான்.
சனிக்கிழமை என்பதால் கோவில் களை கட்டியது. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் என்று. கொடி மரத்தைத் தாண்டி உள்ளே நுழைய சாமி சன்னதி முன்பு நீளளளளளளளளளளளள க்யூ. க்யூவில் ரெண்டு பேர் முன்னாடி நின்ற ஷீபாவும் சரசுவும் இவர்களை நோக்கி கை காட்டினர்.
'மண்டபம் போயிரலாமா?' என்று கேட்டாள் தேவி.
சரவணன் 'பெருமாள பாக்க வேண்டாமா?' என்றான்.
'நான் பாத்துட்டென்' என்று அவனது கண்களை உற்று நோக்கினாள் தேவி.
'மண்டபம் வேண்டாம். யாராவது பாத்துரப் போறாங்க. கோவிலுக்கு பின்னால ஒரு சின்ன காடு இருக்கு. அங்க போய் உக்காந்து பேசலாமா?'
தேவிக்கும் யார் கண்ணிலாவது பட்டு விட்டால் விபரீதமாகி விடும் என்பது பட்டதால் ஒத்துக் கொண்டு வாசலை நோக்கித் திரும்பினாள். சரவணன் சென்று ஷீபாவிடம், 'நாங்க பின்னால இருக்ற காட்டுல உக்காந்து பேசிட்டிருக்கோம். நீங்க தரிசனம் முடிச்சிட்டு வாங்க அங்க.' என்றான்.
ஷீபா குறும்பாய் கண்ணடித்துக் கொண்டே 'பேசிட்டு மட்டும் இருங்க.' என்று பேசிட்டுக்கு ஒரு அழுத்தம் கொடுத்தாள்.
சரவணன் சிரித்தபடி சரசுவிடமும் சொல்லிக் கொண்டு தேவியின் அருகில் வந்தான்.
கோவில் வாசலில் ஜோடியாய் வந்தவர்களைப் பார்த்த பூக்காரி 'அதற்குள் தரிசனம் முடித்து விட்டார்களா என்ன' என்று 'ஙீ' என்று பார்த்தாள்.
அவர்கள் இருவரும் அவளது கடையின் வாசலில் இருந்த செருப்புக்களை மாட்டிக் கொண்டு ஒன்றும் சொல்லாது கோவிலின் பின்புறம் நகர்ந்தனர்.
'ஓகோ! ஜோடி காட்டுப் பக்கம் போவுதா?' என்று நினைத்த பூக்காரி தன் கணவனை நினைத்து 'ம்ம்' என்று ஒரு பெருமூச்சு விட்டாள்.
அந்த காலங்களில் கோவில்களை ஊரின் ஒதுக்குப் புறமாய்த்தான் அமைப்பார்கள். வீடுகள் தெருக்களில் சிறிதும் பெரிதுமாக அமைந்திருக்க கோவில் திருவிழா நடத்த வேண்டும் என்றால் இடம் பத்தாது. அதனால் ஊரின் ஒதுக்குப்புறமாய் இருக்கும் கோவில்களில் இடம் தாராளமாய் இருக்கும். கோவிலின் பின் பக்கம் இருக்கும் இடத்தின் பரப்பில் கொஞ்சம் மக்களுக்காக சுத்தம் செய்வார்கள். ஆர்கெஸ்ட்ரா, கரகம், வில்லுப்பாட்டு, பொய்க்கால் குதிரை என்று திருவிழா களை கட்டும்.
பொய்க்கால் குதிரையில் கட்டைக் கால்கள் இருப்பது இதற்குத்தான். குதிரையாட்டம் ஆடும்போது தரையில் உள்ள பாம்பு போன்ற விஷ ஜந்துகள் காலில் மிதிபடாமல் இருக்கத்தான்.
இந்தக் கோவிலின் பின்புறமும் உயர்ந்த மரங்கள் கொண்ட சிறிய காடு காட்சியளித்தது. சேலை சரசரக்க தெரிந்த ஒற்றையடிப் பாதையில் இருவரும் நடந்தனர். சுமார் ஒரு அரை கிலோ மீட்டர் தூரம் நடந்ததும் திரும்பிப் பார்த்தனர். கோவிலும் கோவிலைச் சுற்றிய இடமும் கண்களை விட்டு அகன்றிருந்தன.
அங்கே தெரிந்த ஒரு உயரமான மரத்தின் பருத்த அடித்தண்டில் அமர்ந்தான் சரவணன். அவன் அருகில் அமர்ந்த தேவி அவன் தோளைப் பற்றி அவன் மேல் சாய்ந்து கொண்டு விசும்பினாள்.
'ப்ச். அழாத. என்னால தாங்க முடியாது.'
அவள் ஏங்க ஆரம்பித்தாள்.
'ப்ச். தேவி. இங்க பாரு.' அவன் அவளது முகத்தை உயர்த்தினான். அவள் முகம் கேவலால் விசுக் விசுக் என்று மேலும் கீழும் இழுத்தது.
'கொஞ்சம் ஒன்ன ஆசுவாசப் படுத்திக்கோ. நான் தான் வந்துட்டேன்ல.' தன் கர்சீப்பால் அவள் கண்களைத் துடைத்தான். ஒரு நிமிடம் அமைதியாய் இருக்க சிறிது அழுகை அடங்கியது தேவிக்கு.
அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். அவன் சட்டையின் வழியாக வந்த அவன் வாசம் அவளை அணைத்துக் கொண்டது. அவளது தோள்களைப் பிடித்துக் கொண்டான் சரவணன்.
மரத்தில் தண்டில் சாய்ந்து கொண்டான். இரண்டு பேரும் அன்பின் அரவணைப்பில் கட்டுண்டு இருந்தனர்.
அப்போது சரவணனின் நெற்றியில் ஒரு மரக்கட்டை சடார் என்று அடிக்க அவன் 'ஆஆ' என்று அலறி நெற்றியைப் பிடித்துக் கொண்டான். வலி பின்னியது. மூளை முழுவதும் மடார் மடார் என கை எல்லாம் கொட கொட என்று ரத்தம். அவன் சத்தத்தைக் கேட்டு அதிர்ந்து கண்களைத் திறந்த தேவி முகம் வெளிறி எழுந்து நின்றாள்.

(தொடரும்)

 
Nice epi.
Kovilukku ponal, poona karyathilum karanam illa ippol maatti kondachu inni?
Unexpected twist, interesting.
 
Top