Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - 24

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் 24
பண்டிகை நேரம் எதுவில்லாமல் இருந்ததாலும், அது காலை நேரமாக இருந்ததாலும் அன்று கோவிலில் கூட்டம் அவ்வளவாக இல்லை. இதையே தான் அவ்யுக்த் தன் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான். கௌசியும் தலையை ‘ஆமாம்’ என்பது போல் ஆட்டினார்.
“அம்மா இன்னும் கொஞ்ச நேரத்தில் கூட்டம் வந்துடும் இல்லைமா.” என்று அவரை வம்பிழுத்தான் அவ்யுக்த்.
“சஹி ஒண்ணும் அவ்வளவு குண்டு இல்லையே.. எதுக்குடா கூட்டம் சேர்ந்துடும்னு சொன்ன?” என்றார் தன் மகனின் காலை வாரியபடி.
“நான் ஒண்ணும் அவளை மட்டும் சொல்லலை.. நம்ம நாலு பாமிலியும் சேர்ந்தா கூட்டமா தானே இருக்கும்.. அதை சொன்னேன்மா.. இப்ப தான் என் காதல் கைகூடி இந்த அளவுக்கு வந்து நிக்குது. கூதுகலமா இருக்கிற எங்க வாழ்க்கையில கும்மி அடிச்சுடாதீங்க என் மம்மி”
“ஹா..ஹா..ஹா.. அந்த பயம் இருக்கட்டும்டா, சரி சரி அங்கப் பாரு சஹி வரா.” என்றார் கௌசி.
மயில் கழுத்து நிறத்தில் மைசூர் சில்க் புடவை அணிந்திருந்தாள் சஹி. அதற்கேற்றார் போல் அணிந்திருந்த நகைகளும் அவளின் அழகுக்கு மேலும் அழகு சேர்த்தன. அவ்யுக்திற்கு இன்றே அவர்களின் திருமணநாளாக இருக்க கூடாதா என்றிருந்தது. அவனருகே வந்த பரத், “அவ்யுக்த் உன் வாயிலிருந்து வர வாட்டர்பால்சை க்ளோஸ் பண்ணு டா.” என்று சிரித்தான்.
“அது எதுக்கு டா க்ளோஸ் செஞ்சு கிட்டு... அதான் நீ இருக்கியே இந்த தண்ணி எல்லாம் கிளீன் செய்ய மாட்டியா, என்ன?”
“இல்லைடா, சாரி இன்னிக்கு அய்யா கொஞ்சம் பிஸி.. அதான் முன்னெச்செரிக்கையாக க்ளோஸ் பண்ணுன்னு சொல்லிட்டேன்.” எனும்போதே அங்கே நளினாவும் அவள் குடும்பத்தாரும் கோவிலுக்குள் பிரவேசித்தனர்.
அடர் பச்சையில் மெலிதான ஜரிகை வேலைப்பாடுள்ள காஞ்சிப் பட்டுடனும், அதற்கேற்ற நகைகளுடனும் வந்திருந்தாள் நளினா.
கடைசியாக பரத்தின் குடும்பம் உள்ளே நுழைந்தது. ஜானுவும், சரத்தும் மிகுந்த உற்சாகத்துடன் வந்துக்கொண்டிருந்தார்கள். சரத் மற்றும் பரத்தை பெற்றவர்களோ, மகனின் கல்யாண விஷயம் உற்சாகத்தை கொடுத்தாலும்.. அந்த மகனிடம் நடந்துகொண்ட முறைக்காக மனதில் தோன்றிய குற்ற உணர்ச்சியுடன் தலையை தொங்கப் போட்டப்படியே உள்ளே நுழைந்தனர்.
“ஹாய் நளினா, ஹாய் சஹி.” என்று ஆரம்பித்த ஜானுவுடன் சஹியும், நளினாவும் பேச ஆரம்பித்தனர். கூடவே நளினாவின் அக்காவும் சேர்ந்துகொண்டாள். மற்றொரு புறத்தில் கௌசி, பரத்தின் அம்மா கையைப் பிடித்து பேசியபடி இருந்தார். அவர்களின் அருகிலேயே சஹியின் அம்மாவும், நளினாவின் அம்மாவும் இருந்தார்கள்.
பெண்கள் மட்டும் தான் கூட்டணி அமைத்து பேசுகிறார்கள் என்று நினைத்தால் இங்கே ஆண்களும் அதையே தான் செய்துக் கொண்டிருந்தார்கள். இளையவர்கள் நால்வரும் (அவ்யுக்த், பரத், சரத் மற்றும் நளினாவின் அக்காவின் கணவர்) ஒரு பக்கமும், பெரியவர்கள் (வேணுகோபால், ராகவன், பரத்தின் அப்பா மற்றும் நளினாவின் அப்பா) ஓர் பக்கமும் நின்றுக்கொண்டு பேசிக்கொண்டிருந்தனர்.
பரத் வெகு சுவாரஸ்யமாக அவ்யுக்தின் காதலைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தான். “அவ்யுக்த் எனக்கு ஒரு சந்தேகம் டா.. “ என்றான் பரத்.
“என்னடா?”
“அதுவாடா, சும்மாவே கிடைக்கக் கூடிய பொருளை காசுக்கொடுத்து வாங்கிய கேனையனைப் பற்றிய சந்தேகம் தாண்டா எனக்கு.. சஹி தான் வீட்டிற்கு செல்லமான ஒரே பெண், அவளின் திருமணம் மூலம் உனக்கு கிடைத்திருக்கும் வீட்டை இப்படி கோட்டை விட்டுட்டியேடா, எனக்கு தான் அந்த கொடுப்பினை இல்லை.. சகலைங்கற பேர்ல இவர் நின்னுட்டு இருக்கார்.. உனக்கோ கிடைத்த வாய்ப்பை இப்படி மிஸ் பண்ணிட்டியே டா.” என்று வம்பிழுத்தான் பரத்.
அவ்யுக்திற்கும், நளினாவின் அக்கா கணவருக்கும் பரத் வம்பிழுப்பது புரிந்தது. சரத்திற்கு மட்டும் ‘பரத்தா இப்படி சொத்துக்கு ஆசைப் படறான்?’ என்று ஒரே ஒரு கணம் தோன்றினாலும் பரத்தின் கண்ணில் இருந்த குறும்பு அவனுக்கு உண்மையை விளக்கியது.
“நீ அப்படியாடா சொல்ற பரத், போடா எனக்கு ஒண்ணுமே புரியலைடா.. நம்ம பஞ்சாயத்துக்கு நாட்டமை தான் வைக்கணும் போல இருக்கே.. பேசாம நாட்டமையா நம்ம நளினாவையே போட்டுடலாமா பிரதர்?” என்று நளினாவின் அக்கா கணவரைப் பார்த்துக் கேட்டான் அவ்யுக்த்.
“செய்யலாம் பிரதர், இதுக்கு அவளை தவிர யாராலையும் தீர்ப்பே சொல்ல முடியாது.” என்றார் அவர்.
“இதுக்கு பேர் தான் சொந்த செலவுல சூன்யம் வச்சுக்கறதுன்னு சொல்லுவாங்களோ.. பிரதர்ஸ், நாம எல்லாம் ஒன்னுக்குள்ள ஒண்ணு.. இதைப் போய் பெரிசா எடுத்துக்கிட்டு.. நாம வேற ஏதாவது பேசுவோமா?” என்ற பரத்தைப் பார்த்து, “ஹா..ஹா..ஹா.. பரத், ஜானு உன்னை ஏன் வெத்துவெட்டுன்னு சொன்னான்னு இப்ப தான் எனக்கு புரியுது... ஹா..ஹா..” என்றான் சரத்.
சரத்தும் அவர்களுடன் கலந்துக்கொண்டது அவ்யுக்திற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதைவிட, “நீ எப்படின்னு ஜானு கிட்டயே கேட்டுடலாமா?” என்று பரத் சரத்திடம் வம்பிழுப்பதுப் போல் பேசியது மிகவும் சந்தோஷமாக இருந்தது அவனுக்கு. அவர்களையேப் பார்த்துக்கொண்டிருந்த அவ்யுக்த் “மாப்பிள்ளை” என்ற அழைப்பில் பின்னால் திரும்பிப் பார்த்தான். அங்கே சஹியின் அப்பா ராகவன் நின்றுக்கொண்டிருந்தார்.
“சொல்லுங்க மாமா.” என்றான்.
“நீங்க பேசிட்டு இருந்ததையெல்லாம் நான் கேட்டுட்டு தான் இருந்தேன். பரத் தம்பி சொல்லுவதைப்போல் இந்த வீடு சஹிக்கு தான்.. பட், நடுவுல என்னோட பிஸ்னெஸ் ஆசையால வீடு விக்கற மாதிரி ஆகிடுச்சு.. இப்போ பிஸ்னெஸ் ஐடியா எல்லாத்தையும் மூட்டைக் கட்டி வச்சாச்சு.. வீடு வித்தப் பணமும் அப்படியே பேங்க்ல தூங்கிக்கிட்டு தான் இருக்கு. அந்தப் பணத்தையெல்லாம் சஹிக்கே கொடுத்துடுவேன் மாப்பிள்ளை.. இதைப் பற்றி நானே முன்னாடியே சொல்லியிருக்கணும்..” என்றவர் பரத்தைப் பார்த்து, “தேங்க்ஸ் தம்பி நீங்க இந்தப் பேச்சை இப்போ ஆரம்பிக்கலைன்னா நான் மறந்தேப் போயிருப்பேன். என்றார்.
அவரின் பேச்சை கேட்ட பரத், “அய்யோ அப்பா, நான் அவனை சும்மா கிண்டல் தான் செஞ்சேன். உங்களுக்கு அவனைப் புரிஞ்சிக்க இன்னும் கொஞ்ச நாள் ஆகும். அவனுக்கு பணமோ, சொத்தோ முக்கியம் கிடையாது.. அவன் மனிதர்களை நேசிப்பவன்.” என்று அவரிடம் பேசிவிட்டு “சாரிடா, அவ்யுக்த் நான் பெரியவங்க இருக்கும்போது இந்த மாதிரி விளையாட்டுத் தனமா பேசியிருக்கக் கூடாது. உன்னை இப்படி இக்கட்டில் மாட்டி விட்டதுக்கு சாரி டா.” என்று அவ்யுக்த்தைப் பார்த்து பேசியப் படியே திரும்பிய பரத்திற்கு, அங்கு அவனின் அப்பா ஏக்கமாக அவனைப் பார்த்தப் படி நின்றிருந்தது கண்ணில் பட்டது.
“எதுக்கு இப்படி ஒருப் பார்வை?” என்று யோசித்தவனுக்கு அப்பொழுதுதான் புரிந்தது, தாம் சஹியின் அப்பாவை ‘அப்பா’ என்று கூப்பிட்டு பேசியது. சஹி வார்த்தைக்கு வார்த்தை அவனை ‘அண்ணா’ என்று அழைப்பதால் தன் மனதில் அவள் மீது தோன்றியிருந்த சகோதரப் பாசத்தால் தான் ராகவனைப் பார்த்ததுமே அப்பா என்றழைத்து பேச வைத்தது. இதை தன்னைப் பெற்றவர் ஏக்கத்தோடே பார்க்ககூடுமென்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. அவனுக்கு அவரைப் பார்த்தப் பிறகு என்ன பேசுவதென்றே தெரியவில்லையாதலால் அவ்யுக்திடம் “ப்ளீஸ் ஹெல்ப் மீ” என்றான் உதட்டசைவிலேயே. அவ்யுக்தும் தான் பார்த்துக் கொள்வதாக கண்ணசைவிலேயே கூறினான்.
“பரத் நீ விடுடா, சஹி அப்பா கிட்ட நான் பேசிக்கறேன்.” என்ற அவ்யுக்த், உடனே திரும்பி சஹியின் அப்பாவிடம் பேச தொடங்கினான். “மாமா, நீங்க அந்தப் பணத்தை வச்சு உங்க ஆசைப் போல பிஸ்னெஸ் ஆரம்பிங்க.. உங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் கூட இருந்து நாங்க எல்லோருமே பார்த்துக்கொள்கிறோம்.. அதுமட்டுமில்லை மாமா, நீங்க வீட்டை விற்காமல் இருந்திருந்தால் நான் எப்படி என் தியாவைப் பார்த்திருக்க முடியும்?, எங்கள் காதலின் நினைவு சின்னம் மாமா அந்த வீடு.. இந்த வீட்டிற்காகவோ, இல்லை உங்களிடம் இருக்கும் பணத்திற்காகவோ நான் தியாவை விரும்பவில்லை.. தயவு செஞ்சு அதைப் புரிஞ்சுக்கங்க மாமா.. பிரண்ட்ஸ்குள் விளையாட்டுத்தனமாக பேசிய எதையும் சீரியஸா எடுத்துக்கொள்ளாதீர்கள் மாமா ப்ளீஸ்.. இன்னிக்கு தான் எங்க காதலுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லைன்னு நினைத்தேன்.. அதைப் பொய்யாக்கி வீடாதீர்கள்.. எனக்கென்று சிலவிதிமுறைகளும், கோட்பாடுகளும் வைத்திருக்கிறேன்.. அதில் முதலாவதே இது தான் மாமா. நான் திருமணம் செய்யும் பெண்ணிடமிருந்து எந்த விதமான வரதக்ஷிணையையும் பெறக் கூடாது என்பது தான் அது. தயவு செஞ்சு இதை இப்படியே விட்டுடுங்க.. பெரிசு பண்ணிடாதீங்க..” என்று கைக் கூப்பினான் அவ்யுக்த்.
கூப்பிய கைகளைப் பிடித்த ராகவன், “மாப்பிள்ளை, நீங்க இவ்வளவு வருத்தப்படும்படி நான் ஒன்றுமே பேசலை.. நீங்களே யோசிச்சுப் பாருங்க.. பெற்றவர்கள் சம்பாதிப்பது தம் பிள்ளைகளுக்காகத் தானே.. எனக்கிருப்பதோ ஒரே பெண் அவளுக்கு செய்யாமல் நான் வேறு யார்க்கு செய்யப் போறேன்.. நீங்களும் கொஞ்சம் புரிஞ்சுக்கங்க மாப்பிள்ளை.” என்றார் அவர்.
“ஏன் மாமா மாப்பிள்ளைன்னெல்லாம் கூப்பிட்டுக்கிட்டு அவ்யுக்த்ன்னே கூப்பிடுங்க.. நீங்க சொல்றது கரெக்ட் தான் மாமா.. பட் என் மனைவி, பிள்ளைகளுக்கானதை என்னால் சம்பாதிக்க முடியும். அதனால என்னை விட்டுடுங்க.. இப்போ உங்களுக்கு பிஸ்னெஸ் பண்ண இஷ்டம் இல்லன்னா ஒண்ணு பண்ணுங்க.. உங்க கிட்ட இருக்கிறப் பணத்தை வச்சு எவ்வளவு குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க முடியுமோ அவ்வளவு பேருக்கு கல்வி கொடுங்க.. அள்ள அள்ள குறையாதது கல்வி செல்வம் மட்டுமே மாமா.. எப்போதுமே அக்கல்வி நமக்கு கை கொடுக்கும். நானும், பரத்தும் தலா பத்து குழந்தைகளின் கல்விப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். முடிஞ்சா நீங்களும் அதை செய்ங்க.. பட் நான் உங்களை கம்பெல் செய்யலை.. இதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே செய்ய சொல்கிறேன்.. ப்ளீஸ் மாமா, என்னைப் புரிஞ்சுக்கங்க..” என்றான் அவ்யுக்த்.
“சரி மாப்.. இல்லல்ல.. அவ்யுக்த், நானும் அதே மாதிரியே செய்யறேன்...என் பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை மட்டுமில்லை நல்ல மனசு படைச்சவராகவும் கிடைச்சதுக்கு நான் கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும்.. உள்ளே போய் நான் சொல்லிட்டு வரேன்.. நீங்க பேசிட்டு இருங்க..” என்றபடியே அவர் சென்றார்.
அவ்யுக்த் அடுத்து பரத்தின் அப்பாவை நோக்கி சென்றான். அவ்யுக்த் ராகவனிடம் பேச ஆரம்பித்ததுமே நாகரீகம் கருதி அவர் தள்ளி சென்றிருந்தார். அவரின் அருகே சென்ற அவ்யுக்த், “என்ன அங்கிள், பரத் மாமாவை அப்பான்னு கூப்பிட்டதும் உங்க முகம் மாறிடுச்சே ஏன் அங்கிள்?” என்று நேரடியாகவே ஆரம்பித்தான்.
அவர் அவனைப் பார்த்து பதிலேதும் பேசாமல் மெலிதாய் புன்னகைத்தார். அந்தப் புன்னகையில் மலர்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் வெறுமை மட்டுமே குடிக்கொண்டிருந்தது.
“அங்கிள், நான் கேட்டதுக்கு பதில் இல்லையா?”
“என்ன சொல்றதுப்பா? அவன் கிட்ட மன்னிப்பு கேட்டதுலேர்ந்து அவன் வந்து என் கிட்ட சகஜமா பேசுவான் என்று வெயிட் பண்ணிட்டு இருக்கேன். பட் அவன் பேசலை.. இதுல நான் அவனை குறை சொல்லலை.. இருந்தாலும் அவன் அப்பா என்று ராகவனை சொன்னதும், என்னை எப்போது அப்படி அழைப்பான்? என்கிற ஏக்கம் வந்துவிட்டதுப்பா..” என்றார்.
“அவனுக்கும் உங்களிடம் சகஜமாக பேச கொஞ்ச கால அவகாசம் கொடுத்தா தப்பில்லைன்னு எனக்கு படுது அங்கிள். சரத் கிட்ட இப்போ தான் பேச ஆரம்பிச்சிருக்கான்.. அவன் உங்களிடம் பேசனும்ன்னு எதிர்ப்பார்க்காம சரத் மாதிரி நீங்களாவே அவனிடம் பேசுங்க.. கடந்து போனதைப் பற்றியே பேசாமல் ஜாலியா பேசுங்க... நீங்க அவனுக்கு செஞ்சதெல்லாம் தப்புன்னு புரிஞ்சுக்கிட்டாச்சு இல்லை.. சோ இனிமே இப்படி ஒதுங்கி நிக்காம குடும்ப தலைவரா கூட நின்னு பரத் கல்யாண ஏற்பாட்டை கவனீங்க.. வாங்க அங்கிள்..” என்று அவரின் கையைப் பிடித்து உள்ளே அழைத்து சென்றான்.
இதற்குள் சரத்தும், நளினாவின் அக்கா கணவரும் தம் தமது மனைவிமார்களுக்கு இங்கே நடந்ததை மெசேஜ் அனுப்பி வைத்தனர். இதைப்படித்ததும் இந்த இறுக்கமான சூழ்நிலையை மாற்ற எண்ணிய ஜான்வி, நளினாவிடம் பரத்தின் சொத்து ஆசையை போட்டுக்கொடுத்தாள். அருகிலேயே இருந்த நளினாவின் அக்காவும் அவளுக்கு ஒத்துப் பாடினாள். நளினாவிற்கு வந்த கோபத்தில் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க பரத்தின் அருகில் சென்றாள்.
“ஹே!! செல்லம், இப்போ தான் இந்த மாமனைக் கண்டுக்க மனசு வந்ததா?” என்று அங்கிருப்பவர்களை பொருட்படுத்தாமல் காதல் வசனம் பேசினான் பரத்.
“உனக்கு வீடு கேட்குதோ?” என்ற அவளுக்கும் அருகில் இருப்பவர்களைப் பற்றிய எந்த எண்ணமும் இல்லை.
திடீரென்று வீட்டைப் பற்றி பேசியதும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் தங்கள் தனிமைக்கு வீடு அவசியம் என்று புரிந்துக்கொண்டு, “எஸ் மேடம்” என்றவன் அவளின் காதருகே சென்று “வீட்டுக்கு போகலாமா இப்ப?” என்று ரகசியம் பேசினான்.
இதை கேட்டதும் மிகுந்த கோபம் கொண்ட நளினா, “யூ..யூ.. இடி..” என்று ஆரம்பித்தவளை, சஹி அவள் கைபிடித்து நிறுத்தி, “கன்ட்ரோல் யூவர் ஸெல்ப் நளின்” என்றாள். பிறகு தான் அனைவரும் அங்கிருப்பதை உணர்ந்தாள் நளினா. அதற்குமேல் ஒன்றும் பேசாமல் தன் கோபத்தை வெளிப் படுத்த பற்களை நற நறவென்று கடிக்க ஆரம்பித்தாள்.
“ஹே பட்டாசு, என்ன ஆச்சு? ஏன் என் மேல் இந்த கொலைவெறி?”
இதைப் பார்த்துக்கொண்டிருந்த சரத்தும் ஜான்வியும் கையால் வாயை மூடி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டனர். அவ்யுக்தும் அதே மாதிரி தான் செய்துக்கொண்டிருந்தான். அவனுக்கு ஜானு, அவர்களருகே வந்ததுமே தன் மெசெஜை காட்டியிருந்தாள்.
“அதுவா மாப்பிள்ளை, உங்களுக்கு சொத்தாக கிடைப்பதை பங்குப் போட இவரும் இருக்கிறாராமே” என்று ஆரம்பித்த நளினாவின் அக்காவிற்கு அதற்குமேல் பேச முடியாமல் சிரிப்பு வந்துவிட்டது.
பரத்திற்கு விஷயம் புரிந்து தன்னுடைய தோழமைகளை கேள்வியாய் பார்த்தான். “யாருடா என் பட்டாசுக்கிட்ட என்னைப் போட்டுக் கொடுத்தது?” என்றிருந்தது அந்தப்பார்வை.
சிறியவர்கள் அனைவரும் ஏதோ கலாட்டாவில் ஈடுபட்டு இருப்பது பெரியவர்களுக்கு புரிந்ததால் அங்கே நிற்காமல் சற்று தள்ளி நின்று கல்யாண தேதியை முடிவு செய்ய பேச ஆரம்பித்தனர்.
 
அழகிய தருணம்
அப்பாவின். ஏக்கம் கொஞ்சம் பாவமாக இருக்கு
 
Top