Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - 23

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் 23

ஜானுவிற்கு அவ்யுக்தின் கேள்வியை கேட்டதும் சிரிப்பு வந்தது. அதனால் சத்தமாக சிரித்தப் படியே அவ்யுக்த்தையேப் பார்த்திருந்தாள்.
“ஜானு நீ இப்போ சிரிப்பை நிறுத்திட்டு பதில் சொல்லப் போறியா, இல்லையா?” என்றான் அவ்யுக்த் முகத்தில் தோன்றிய லேசான கடுப்புடன்.
ஜானு சிறிது அசடு வழிந்தப் படியே, “அது டா அவ்யுக்த், தப்பு என் பேர்ல இருக்கும்போது, என்னைப் பார்த்தவுடனே நீங்க ரெண்டு பேரும் தாம் தூம்ன்னு குதிச்சிட்டா என்னப் பண்றது? பொது இடத்துல என் இமேஜை காப்பாத்திக்க தான் அப்படி பேசினேன். என்ன கொஞ்சம் ஜாஸ்த்தியாகிடுச்சு அவ்வளவு தான்.”
“அதாவது முதல்லேயே குரலை உசத்திவிட்டால் நம்ம மேலே தப்பே இருந்தாலும் வெளிய தெரியாது அப்படித்தானே ஜானு?, அதுசரி, இந்த இமேஜ் எல்லாம் உனக்கு மட்டும் தான் இருக்குமா?, எங்களுக்கில்லையா? கொஞ்சமா, அதிகமா?ங்கறதை நாங்க சொல்லனும்.” என்றபடியே சிரிக்க ஆரம்பித்தான்.
அவன் கூட சேர்ந்து சிரித்தப் படியே வந்த ஜானு. “இமேஜா? யாருக்கு உங்களுக்கா? ஐயோ கடவுளே!”, என்றபடியே வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தவள் மேலே தொடர்ந்தாள். “இப்போ என்ன?, நான் அதிகமா தான் பேசிட்டேன், அதுக்கு இப்போ சாரி கேட்டுக்கிறேன் போதுமா? என்றாள். அவள் குரலில் மன்னிப்பை கேட்கும் தொனி மருந்துக்கும் இல்லை, மாறாக அவள் குரலில் விஷமமும், குறும்பும் மட்டுமே இருந்தது.
“ஜானு, இதுக்கு நீ சாரி கேட்காமலே இருந்திருக்கலாம்..., இப்படி தான் உன் இன்லாஸ் கிட்டயும் மன்னிப்பு கேட்டியோ?”
“இல்லை, அவங்கக்கிட்ட உண்மையா சாரி கேட்கணும்ன்னு தோணிச்சு.. சோ, நல்லவிதமா தான் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டேன். உன் கிட்ட எனக்கு அப்படி கேட்கணும்ன்னு தோணலை..”
“ம்ம் புரியுது ஜானு, என் கிட்ட என்னவோ சொல்லி சமாளிச்சுட்ட, பட், பரத் கிட்ட என்ன சொல்லப் போறியோ?, ஐ திங், அவன் உன் மேல கொலைவெறில இருப்பான்னு நினைக்கிறேன்....”
“பரத்தை சமாளிக்கிறது எனக்கு பிரச்சினையே கிடையாது டா அதெல்லாம் கரெக்டா செஞ்சுடுவேன். இப்போ நீ அதை விடு, சஹியை பத்தி சொல்லு.. உன் கிட்ட போய் எப்படிடா ஒருத்தி மாட்டிக்கிட்டா? பாவம் டா சஹி.”
“ஹேய் உன்னை!!” என்ற அவ்யுக்த் தான் கோபமாக இருப்பதுபோல் முகத்தை ‘உர்ர்’ என்று வைத்துக்கொண்டான்.
“ஏற்கனவே உன் மூஞ்சி இஞ்சி தின்ன ஏதோ மாதிரி தான் இருக்கு.. இதுல நீ இப்படி ‘உர்ர்’ ன்னு வச்சிட்டு வந்தா சகிக்கலை டா.. சோ, நீ முகத்தை ஒழுங்கா வச்சிக்கிட்டு, சஹியைப் பத்தி சொல்லு... எனக்கும் ஹோட்டல்க்கு போற வரைக்கும் பொழுதாவது போகும்.” என்று பொய்யாக சலித்துக்கொண்டாள்.
ஜானுவின் பேச்சு அவ்யுக்த்தை கல்லூரி நாட்களுக்கே இழுத்துச்சென்றது. ஒருவரையொருவர் கிண்டல் செய்துக்கொண்டும், நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டும், படிக்கும் நேரத்தில் படித்துக்கொண்டும் என்று இருந்த அந்த நாட்கள் திரும்ப வராதா? என்று நினைத்தவாறே ஜான்வியிடம் பேச ஆரம்பித்தான். “சரத் பாவம் ஜானு, நீ அவருக்கு பேச சான்ஸ் எல்லாம் கொடுப்பியா, இல்லையா?” என்று கேட்டுவிட்டு அதற்கு ஜான்வி பதில் அளிக்கும் முன்னரே சஹியைப் பற்றி கூறலானான். அவளைப் பற்றி பேசுவது மனதிற்கு இதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்ததால் ஹோட்டல்க்கு அருகே வரும் வரை அவளைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டு வந்தான் அவ்யுக்த்.
“அவ்யுக்த், உன்னை ஒரு பேச்சுக்கு தான்டா சஹியைப் பத்தி சொல்ல சொன்னேன்.. அதுக்காக என் காதுலேர்ந்து இரத்தம் வரும் வரையா பேசுவது?” என்ற ஜான்வி திடீரென்று கத்த ஆரம்பித்தாள். “பாருடா.. பாருடா.., உன் பேச்சு சுவாரஸ்யத்தில் இந்த சிக்னல்ல நீ யூ டர்ன் எடுக்கவேயில்லை.., ஐயோ! இனி அடுத்த டர்ன் வரவரைக்கும் உன் பேச்ச கேட்கணுமா? என்ன கொடுமைடா சாமி?” என்று கத்தினாள்.
அதுவரை சஹியின் பேச்சில் ஒரு கவனமும், சாலையின் மேல் ஒரு கவனமும் வைத்திருந்த அவ்யுக்திற்கு ஒரு கணம், “ஐயோ! இவ்வளவு கவனக்குறைவா நானா வண்டி ஓட்டினேன்?” என்று நினைத்து, திரும்ப நன்றாக சாலையை கவனித்தான். சரியான திருப்பத்திருக்கு அருகே தான் வந்துக்கொண்டிருந்தது அவனுக்கு புரிந்தது. உடனே, “ஜானு, டிரைவிங்கில் எனக்கு கவனம் சிதறினா நான் வண்டியே ஓட்டமாட்டேன்னு உனக்கு தெரியாதா?” என்றான் சிறிது கோபத்துடன்.
வண்டி ஓட்டும் போது சாலையிலிருந்து நம் கவனம் சிதறினால், நமக்குமட்டுமில்லாது அது அடுத்தவருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று கல்லூரி காலத்திலேர்ந்தே அவ்யுக்த் சொல்லுவான் என்பது ஜானுவிற்கு நன்றாக நினைவிருந்தது. அதனால், “ம் தெரியும் அவ்யுக்த், சும்மா தான் கிண்டல் செஞ்சேன்..” எனும்போதே ஹோட்டலுக்குள் அவர்களின் கார் வந்து, அவர்களின் பேச்சை முடிவிற்கு கொண்டு வந்தது.
ஹோட்டலுக்குள் சென்று இறங்கியவுடன் அங்கே வந்த ஹோட்டலின் காவலாளியிடம் காரின் கீயை கொடுத்துவிட்டு ஜானுவுடன் லிப்ட்டிற்குள் நுழைந்தான் அவ்யுக்த்.
காருக்குள் உற்சாமாக வம்பிழுத்துக் கொண்டிருந்த அந்த தோழமைகளுக்கு ஹோட்டலுக்குள் வந்தவுடன் அங்கே இருக்கும் மற்றொரு தோழமையின் நிலை எப்படி இருக்குமோ? என்ற உணர்வே மேலோங்கியிருந்ததால் அவர்களிடையே ஒரு கனத்த மௌனம் சூழ்ந்துக்கொண்டது. இருவரும் சரத்தின் அறை வாசலுக்கு வந்தவுடன் லேசாக கதவை தட்டிய ஜானு, திரும்பி அவ்யுக்த்தைப் பார்த்தாள்.
அவ்யுக்த் ஜான்வியைப் பார்க்காமல் மூடியிருந்த கதவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். சில நொடிகளில் கதவை திறந்த சரத், “வா அவ்யுக்த்” என்றபடியே அவனின் கையைப் பிடித்து உள்ளே அழைத்தான். ஜான்வி நேராக பரத்தின் அருகே சென்று அமர்ந்தாள். அவ்யுக்த் அவளருகே அமர்ந்து பெரியவர்களைப் பார்த்து லேசாக முறுவலித்தான்.
ஜானுவை திரும்பிப் பார்த்த பரத் அவளைப் பார்த்து லேசாக முறுவலித்தபடியே அவளிடம் பேச ஆரம்பித்தான்.
“ஜானு நீ என் கிட்ட சொல்லாம என்னன்னெமோ செஞ்சிருக்க.. எனக்காக உன் லைப்பை கெடுத்துக்க நினைச்சது தப்பு ஜானு, இருந்தாலும் எனக்காக இதையெல்லாம் செஞ்சதுக்கு தேங்க்ஸ்... பை ஜானு நாங்க கிளம்பறோம்.” என்றபடியே எழுந்தான் பரத்.
அவனின் கையைப் பிடித்து தடுத்த ஜானு, “டேய் பெரியமனுஷா, கொஞ்சம் வெயிட் பண்ணுடா.. நாம இன்னும் பேசவேயில்லையே... சொல்லு..சொல்லு உன்னோட நளின் பத்தி சொல்லு.”
பரத்திற்கு அதுவரையிருந்த தயக்கமும், கோபமும்.. தன்னுடைய தோழமைகளைப் பார்த்ததுமே சற்று குறைந்தது. இப்பொழுது ஜானு நளினாவைப் பற்றி கேட்டதும் கோபமும், தயக்கமும் இருந்த இடம் தெரியாமல் சென்றது. கூடவே பரத்தின் முகத்தில் வெட்கப் புன்னகையும் வந்து ஓட்டிக்கொண்டது.
ஜானு பரத்திடம் பேச ஆரம்பித்ததுமே பெரியவர்கள் அவர்களின் அறைக்கு சென்றனர். சிறியவர்கள் தங்களின் குறுக்கீடு இல்லாமல் மனம் விட்டு பேசட்டும் என்று தான் அவர்கள் கிளம்பி சென்றனர். அவர்கள் கிளம்பியதுமே ஜானுவிற்கு, அவளின் குறும்புத் தனம் தலைத்தூக்கியது.
“பார்றா, பரத்துக்கு வெட்கப்பட கூட தெரியுமா?” என்றாள் ஜானு.
“ஜானு, இவன் நளினாவைப் பற்றி சொல்லுவதை விட, இவன் எப்படி அவள் பின்னால் சுற்றினான் என்று நான் சொல்றேன்.” என்றான் அவ்யுக்த்.
“டேய் நீ பேசாம இரு.” என்று அவ்யுக்தை கோபித்தான் பரத்.
“இப்போ அவன் எதுக்கு பேசாம இருக்கணும், நீ சொல்லு அவ்யுக்த்.” என்றாள் ஜான்வி.
“அதுவா ஜானு, நளினா பரத் கார்ல இடிச்சு கீழே விழ் ன்..ந்..” என்று அவ்யுக்த் ஆரம்பிக்கும்போதே அவன் வாயை அடைத்திருந்தான் பரத்.
“அவ்யுக்த் நீ பேசாம இருடா.. இதையெல்லாம் ஜானுகிட்ட சொன்னா அவ என்னை ஒருவழி பண்ணிடுவா.. கொஞ்சம் அடக்கி வாசிடா..” என்ற பரத்தை சரத் வியப்பாக பார்த்திருந்தான்.
அதுவரை ஏதோ ஒரு சிறையில் கைதியாக இருப்பது போல் முகத்தை, இறுக்கமாகவும், சோகமாகவும் வைத்திருந்தான் பரத். இப்பொழுதோ சிறு பிள்ளையின் உற்சாகத்துடன் தன் தோழமைகளுடன் பேசி சிரிப்பதைப் பார்த்து, சரத்திற்கு, பரத்தை எந்த அளவிற்கு தான் ஒதுக்கியிருக்கிறோம் என்று புரிய ஆரம்பித்ததால், வியப்பாகப் பார்த்திருந்ததை விட்டுவிட்டு இப்பொழுது குற்ற உணர்வுடனும், மனதிலேயே மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்பது போன்ற பாவனையில் பரத்தைப் பார்த்தான் சரத்.
“பரத், நீ இப்போ அவ்யுக்த்தை சொல்ல விடப்போறியா? இல்லையா?” என்றாள் ஜானு.
“ஜானு, என் கதை இருக்கட்டும்.. சஹி-அவ்யுக்த் கதையை சொல்றேன் கேட்டுக்கோ..., நாங்க நளின் பர்த்டேக்கு போயிருக்கும்போது.., நம்ம நட்பு அவனின் காதலியைப் பார்த்து விட்ட ஜொள்ளில் ஹோட்டலே மூழ்கிப் போச்சு.. தெரியுமா?, ஹோட்டல் சர்வர் எல்லாம் ஒண்ணு கூடி, என் கிட்ட வந்து, ‘அய்யா நீங்க தான் எங்களை காப்பத்தணும்’ ன்னு ஒரே அன்பு தொல்லை..” என்று நிறுத்தினான்.
“ஆமா ஜானு, இவன் தான் வந்து அந்த தண்ணியெல்லாம் துடைச்சு எடுத்தான்.. ஆளைப்பாரு.., ஜானு, முதல் மீட்டிங்கே நளினாவுக்கும் அய்யாவுக்கும் மோதல்ல தான் ஆரம்பித்தது.. அடுத்த மீட்டிங்ல நம்ம அய்யாவுக்கு கன்னம் பழுத்திருக்கும்.. அண்ணாத்தே ஜஸ்ட் எஸ்கேப் ஆகிட்டான்…. மனசுல பெரிய மாதவன்னு நினைப்பு..” என்று ஆரம்பித்து நளினா – பரத் காதலை சுருக்கமாக சொல்லி முடித்தான்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ஜானு, வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள். “ஹா..ஹா..ஹா! அவ்யுக்த் இவனா இப்படி ரொமாண்டிக்கா பேசினான்? என்னால நம்பவே முடியலை டா.. இதை மட்டும் இவன் கிட்ட ப்ரொபோஸ் செஞ்ச வைஷாலி கிட்ட சொல்லணும்.. ‘இவனாவது ரொமாண்டிக்கா பேசுவதாவது.. உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா?’ ன்னு சொல்லி என்னை ஒரு வழி பண்ணியிருப்பா.. அவ்யுக்த் நீயே சொல்லு வைஷாலி ப்ரொபோஸ் பண்ணும்போது நெற்றிக்கண்ணை திறக்காத குறையா எப்படி கோபப்பட்டான்.. அவனா இப்படி பேசினான்? நிஜம்மா என்னால நம்பவே முடியலைடா.. இதுக்காகவே எனக்கு நளினாவை உடனே பார்க்கணும்..”
“கண்டிப்பா பார்க்கலாம் ஜானு.. நளினாவும் நீயும் சேர்ந்து அவனை ஒரு வழி பண்ணினால்..” என்ற அவ்யுக்த் தலையை மேலே உயர்த்தி அந்த காட்சி நடக்கிறார் போல் நினைத்துப்பார்த்தான். “ஆஹா.. ஆஹா! நினைச்சுப் பார்த்தாலே சும்மா அதிருதே.. இன்னும் நேர்ல நடந்தா அருமையா இருக்கும் போல..” என்ற அவ்யுக்த்திற்கு சரத்தும் அவர்களுடன் நிற்பது தெரிந்தது. அதனால், ”சாரி சரத், நாங்க மூணு பேருமே பேசிக்கிட்டு இருந்துட்டோம்..” என்றான்.
“சாரி எல்லாம் எதுக்கு அவ்யுக்த், பரத் உங்களோட இவ்வளவு மகிழ்ச்சியா இருக்கிறதைப் பார்க்கவே ரொம்ப சந்தோஷம்மா இருக்கு.. அதான் அவனையே பார்த்துட்டு இருந்தேன்..”

சரத் அவ்வாறு சொன்னதும், நத்தை தன் ஓட்டுக்குள் ஒளிந்துக் கொள்வதைப் போல பரத்தும் தன் கூட்டிற்குள் சென்றான்.
இவர்களையேப் பார்த்துக்கொண்டிருந்த ஜான்வி, “ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது மச்சான். நம்ம சோக சீன் எல்லாம் முடிஞ்சுடுச்சு.. இனிமே பட பட பட்டாசு கிட்ட நம்ம வெத்துவேட்டு என்ன பாடு படப் போறான்ங்கறதை தவிர வேறொண்ணும் பேச உங்களுக்கு அனுமதியில்லை..” என்று சரத்தைப் பார்த்து கூறினாள்.
“ஜானு உனக்கு நான் வெத்துவேட்டா?” என்று பல்லைக்கடித்தான் பரத்.
“ஹா..ஹா..ஹா.. ஜானு, இப்பவே களக்கட்டுதே...சூப்பர் ஜானு.. “ ஜானுவிற்கு ஹை-பை கொடுத்தான் அவ்யுக்த்.
அந்த நேரம் பார்த்து நளினா பரத்திற்கு கால் செய்ய, பரத்தோ போனை எடுக்காமல் தன் வாட்சைப் பார்த்தவாறே, “ஸ்..சூ” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே போனை ஆன் செய்தான்.
அவ்யுக்தும் ஜான்வியும் “ஓ..ஓஹோ..” என்று மெளனமாக தலையை அசைத்துக்கொண்டனர்.
போனை எடுத்து ஆன் செய்தது தான் பரத்திற்கு தெரியும்.. அவன் அதை காதருகே எடுத்துச்செல்லும் முன்னரே ஜானு கையில் போன் சிக்கியது.
“ஹாய் நளின்.. நான் ஜானு.”
“சொல்லுங்க அண்ணி.. எப்படி இருக்கீங்க?, நாம எப்போ மீட் பண்ணலாம்?”
“நளின்... நீ சொல்லு எப்போ மீட் பண்ணலாம்?ன்னு எனக்கும் கொஞ்சம் ஷாப்பிங் போக வேண்டியிருக்கு.. பட் ஒன் கண்டிஷன், இதுகள(பரத், அவ்யுக்த், சரத்) எல்லாம் டீல்ல விட்டுட்டு தான் வரணும்.” என்று ஜானு சொல்லிக்கொண்டே போனை ஸ்பீக்கர் மோடில் போட்டாள்.
“அண்ணி, எனக்கு அதுங்க எல்லாம் யாருன்னே தெரியாது அண்ணி.. நாம ஜாலியா போயிட்டு வரலாம்.. நாளைக்கு ஓகே வா.. சஹிகிட்டயும் சொல்லிடறேன்.”
“நீங்க வொர்க் பண்றீங்க இல்லை.. லீவ் எல்லாம் சொல்ல வேண்டாமா? என்றாள் ஜானு பரத்தை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தவாறே..
“அய்யோ அண்ணி.. நீங்க இன்னும் வளரனும் அண்ணி.. இதுக்கு தான் பரத் கூட சேரக் கூடாதுன்னு சொல்றது... அவனை மாதிரியே சின்னப்புள்ள தனமாவே பேசறீங்களே... கம்பெனியோட பாஸ் யார் கிட்ட போய் லீவ் சொல்ல முடியும்?”
“நளின்.. என்னமா நீ பரத் இதைக் கேட்டுட்டு தான் இருக்கான்” என்றாள் வேண்டுமென்றே.
“ம்ம் தெரியும் அண்ணி.. கூடவே நீங்களும் கேட்கறீங்கன்னு தான் இன்னிக்கு நான் கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்கேன்.. பரத் மட்டும் தனியே மாட்டினான் அவ்வளவு தான்..”
“ஹா..ஹா.., உன்னை மாதிரி ஒரு ஆளு தான் பரத்திற்கு தேவை.. சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வா.. இரண்டு பேரும் சேர்ந்து அவனை ஒரு வழி பண்ணலாம்..”
“ஐ அம் வெயிட்டிங் அண்ணி.”
“சூப்பர் நளின்.. இரு பரத் கிட்ட தரேன்..”
“அதான் போன் ஸ்பீக்கர்ல தான இருக்கு சொல்லு நளின்.. என்ன விஷயம்?” என்று கேட்கும்போதே ஜானு போனின் மோடை ஹன்ட்செட்க்கு மாற்றி அவனிடம் கொடுத்தாள்.
பரத்தும் போனை வாங்கி ரூமில் இருந்த ஜன்னலின் அருகே சென்று பேச ஆரம்பித்தான். அவர்களின் பேச்சு அடுத்த இருபது நிமிடத்திற்கு நீடித்தது. போனை அனைத்ததும் திரும்பிய பரத் அங்கே அவ்யுக்தின் கையைப் பிடித்தபடி ஏதோ பேசிக்கொண்டிருந்த சரத்தைப் பார்த்தான்.
பரத் அவர்களின் அருகே வந்ததும் பரத்தின் தோளில் கையைப் போட்டான் அவ்யுக்த். ஜான்விக்கு தன் தோழமைகளுடன் கணவரும் கை கோர்த்து நிற்பது காணக் கிடைக்காத காட்சி போல் தோன்றியதால் தன் கையிலிருந்த ஐபோனில் படம் பிடித்துக் கொண்டாள். நால்வரும் மேலும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்து விட்டு அவ்யுக்தும் பரத்தும் பெரியவர்களின் அறைக்குச் சென்று சொல்லிக்கொண்டு கிளம்பினர்.
அவ்யுக்த் பரத்தை தன் வீட்டிற்கே அழைத்துச் சென்றான். காரில் வரும்போது இருவருக்கிடையேயும் மௌனமே நிலவியது. அவ்யுக்த்தை திரும்பிப் பார்த்த பரத், “டேய் என்னடா அமைதியா வர? நான் என்ன முடிவு எடுக்கட்டும்?ன்னு சொல்லுடா” என்றான்.
“பரத், கணவன் – மனைவிக்கு இடையே மட்டும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து போகனும்ன்னு இல்லை டா. அது மற்ற உறவுகளுக்கும் பொருந்தும். ஏன் அது நட்புக்கும் பொருந்தும்.” என்று நிறுத்தி சில நொடிகளில் மேலே தொடர்ந்தான்.
“இது ரொம்ப சென்சிடிவான விஷயம் டா. அவர்களுக்கும் ஒரு சான்ஸ் கொடுக்கத்தான் உன்னை அவங்கக் கிட்ட பேசச் சொன்னேன். பட் முடிவு நீதான் டா எடுக்கணும். அது நீ அவங்களோட சந்தோஷமா சேர்ந்து இருந்தாலும் சரி.. இல்லன்னா அவர்கள் உன்னை ஒதுக்கியதைப் போல் அவர்களை நீ ஒதுக்கினாலும் சரி.. உன் நிலையை கூடவே இருந்துப் பார்த்தவன் என்ற முறையில் அதை நான் தப்பும் சொல்லமாட்டேன். பட், என் நண்பன் நல்ல முடிவா எடுப்பான் என்ற நினைப்பில் தான் நான் முதலில் விட்டுக்கொடுப்பதைப் பற்றியே பேசினேன்.. யோசி பரத்.. இதில் யாருடைய யோசனையையும் ஏற்பதற்கு பதில் நீயே யோசித்து முடிவு எடுடா. அதில் நளினாவும் அடக்கம் தான். அது தான் சரியும் கூட. கண்டிப்பா நான் சொல்வதை தான் நளினாவும் சொல்வாள்.” எனும்போதே அவ்யுக்த் தன் வீட்டை அடைந்திருந்தான்.
வாசலிலேயே அவனை எதிர்க்கொண்ட கௌசி, “அவ்யுக்த், உனக்கு போன் பண்ண தான் நான் போனை எடுத்தேன்.. அதுக்குள்ள நீயே வந்துட்ட.. நா...நா..நாளைக்கு சஹியைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க போகிறார்களாம்.” என்றாள்.
அவ்யுக்தின் காதல் கொண்ட மனதிற்கு அம்மாவின் வார்த்தைளை புரிந்துக்கொள்ள தெரியவில்லை. அதனால், அன்று காலையில் தியா அனுப்பியிருந்த மெசேஜும் மறந்து, அம்மாவின் ‘மாப்பிள்ளை விட்டுக்காரங்க போகிறார்கள்’ என்ற வார்த்தையை புரிந்துக்கொள்ளும் திறனையும் இழந்தான்.
‘மாப்பிள்ளை பெண்ணைப் பார்க்க வருகிறார்கள்’ என்று தானே சொல்லணும் ஏன் இந்த கௌசிமா ‘போகிறார்கள்’ என்று சொல்லணும்? என்று பரத் யோசித்துக்கொண்டிருந்தான்.
“மகனே என்னடா ஆச்சு? நின்னுக்கிட்டே தூங்கறியா, என்ன?” என்ற அம்மாவின் கேலியில் தன் அம்மாவை திரும்பிப்பார்த்தான் அவ்யுக்த்.
“அம்மா, கொஞ்ச நேரம் பேசாம இருங்க.. நானே தியா வீட்டுல ஏன் இப்படி செய்யறாங்க?ன்னு யோசிச்சுட்டு இருக்கேன்.. இதுல நீங்க வேற.” என்றான் கடுப்புடன்.
“என்னைப் பெத்த ராசா, என் செல்லமே, உனக்குமாடா இந்த நிலைமை? ஐயகோ! நெஞ்சு பொறுக்குதில்லையே.. என் மகனின் நிலைக்கண்டு என் நெஞ்சு பொறுக்குதில்லையே..” என்று நாடக பாணியில் வசனம் பேசினாள் கௌசி.
இதைக்கேட்ட பரத்திற்கு சிரிப்பு பீறிட்டு கிளம்பியது. அவ்யுக்தின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று அடக்க முற்பட்டான், ஆனாலும் பரத்தின் நகையொலி அவனறியாமலே வெளிப்பட்டு விட்டது. பரத்தின் சிரிப்பைக் கேட்டு மிகுந்த கோபம் கொண்ட அவ்யுக்த் “அம்..ம்...ம்..மா” என்று பல்லைக்கடித்தான்.
“பின்ன என்னடா மகனே.. உன் காதலை என்னிடம் சொல்லும்போது கூஜாவைப் பற்றி சொல்லி என்னை கடுப்படிச்ச இல்ல அதான், இப்போ இப்படி மாத்தி சொன்னேன். இதுல உங்கப்பா வேற, ‘என் பையனைப் போல் வருமா? அவன் அதிபுத்திசாலி, அவனை உன்னால் ஏமாத்த முடியாது’ன்னு ஒரே பீத்தல். அதான் பீத்தல் பீதாம்பரத்தை உள்ளேயே இருக்க சொல்லிட்டு நான் மட்டும் வந்தா.. ஐயோ! ஐயோ! பயபுள்ள ஏமாந்துடுச்சு..”
“அம்மா காதல் வந்தா பத்தும் பறந்துடும்ன்னு கேள்வி பட்டதில்லையா? அது மாதிரி தான் எனக்கு ஆகிடுச்சு.. இதைப் போய் பெரிசா சொல்லிக்கிட்டு.. தியா வீட்டுல என்ன சொன்னாங்க அதை சொல்லுங்க முதல்ல? தேவையில்லாம பேசிட்டு இருக்காதீங்க..” என்றான் அவ்யுக்த்.
“கீழ விழுந்தாலும் மீசைல மண்ணு ஓட்டலைங்கறது இதுதான் டா பரத்.. என்னமா சமாளிக்கறான்.. பொழச்சு போடா மகனே.. நாளைக்கு நம்மள கோவில்ல வந்து பொண்ணுப் பார்க்க வர சொன்னாங்க.. நானும் சரின்னு சொல்லிட்டு, நான் ஜானு கிட்ட பேசி அவங்க எல்லாரையும் கோவிலுக்கு வர சொல்லியிருக்கேன். நளினா வீட்டுக்கும் சொல்லிட்டேன். அவங்களும் வந்துடுவாங்க.. அவ்யுக்த் நீதான் ஏற்கனவே சொல்லிட்டியே பரத் கல்யாணம் முடிஞ்சு தான் நீ கல்யாணம் செய்வேன்னு.. எதுக்கு கல்யாணத்தை தள்ளி போடணும்.. இரண்டு கல்யாணத்தையும் சேர்த்தே செஞ்சுடலாம்னு தான் எல்லாருக்கும் கால் செஞ்சுட்டேன். நாளைக்கு எல்லோரும் அங்கே ஆஜர் ஆகிடுவாங்க. நீங்களும் நைட் சீக்கிரம் சாப்பிட்டு தூங்கற வேலையைப் பாருங்க.. கனா கினான்னு எதையாவது கண்டுக்கிட்டு தூங்காம இருந்தீங்கன்னா.. ஐயோ இந்த மாப்பிள்ளைங்க வேண்டாம்ன்னு சொல்லிட்டு ஓடிடப் போறாங்க பொண்ணுங்க.” என்று சிரித்து பேசியவாறே மூவரும் உள்ளே சென்றனர். அவ்யுக்தும் பரத்தும் தங்களது காதலிகளை எண்ணியவாறே சாப்பிட்டு தூங்க சென்றனர்.
 
Top