Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - 22

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் 22

அம்மாவின் பேச்சை கேட்டு யோசித்தபடியே நின்று கொண்டிருந்த சஹியை “என்ன சஹி?” என்ற அம்மாவின் குரல் அவளை யோசனையிலிருந்து மீட்டது.
தன் அம்மாவை பார்த்த சஹி, “அம்மா, நீ ஏன் இப்படி பேசற? நான் தான் அவ்யுக்த்தை விரும்பறேன்னு சொல்றேனே.. அப்புறமும் நீ பொண்ணு பார்க்க ஏற்பாடு பண்ண சொன்னா என்ன அர்த்தம்?” என்று கேட்டாள்.
“என்னடி நான் இப்போ சொல்லிட்டேன்... முதல்ல பொண்ணு பார்க்க வர சொன்னது மார்கழி மாசத்துலங்கறதை அந்த மாமி கிட்ட சொன்னேன்... அதுக்கு அந்த மாமி ஒரே திட்டு.. நல்ல காரியத்தை கொஞ்சம் நிதானிச்சு தை மாசம் பிறந்த உடனே பண்ண வேண்டியது தானேன்னு திட்டி தீர்த்துட்டாங்க.. அதுலேர்ந்தே என் மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு.. அதே கோயில்ல மறுபடியும் உன்னை பொண்ணுப்பார்க்க வச்சு கல்யாணம் பண்ணி வைக்க தான் நான் அப்படி சொன்னேன்... என்னப் பார்க்கிற? இது ஒண்ணும் அந்த மாமி சொன்ன பரிகாரமில்லை... நான் நினைச்ச மாதிரியே உனக்கு பண்ணினா தான் எனக்கு திருப்தியா இருக்கும்.. அதுக்குதான் இப்படி சொல்றேன்.”
“அம்மா அதுக்காக என்னால வேற மாப்பிள்ளை முன்னாடியெல்லாம் வந்து நிக்க முடியாது” என்று கோபமாக இடையிட்டாள் சஹி.
“நான் எப்படீ வேற மாப்பிள்ளை பார்க்க சொன்னேன்? பொண்ணு பார்க்க ஏற்பாடு பண்ணுங்கன்னு தானே சொன்னேன்... ஏன் இந்த மாப்பிள்ளை அங்கே வந்து உன்னைப் பொண்ணுப் பார்க்க வரமாட்டாரா? அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா இவரு?” என்று சிரித்த பங்கஜத்தை மிகுந்த சந்தோஷத்துடன் கட்டிக்கொண்டாள் சஹி.
“கஜு, சொல்றது தான் சொல்ற கொஞ்சம் பொறுமையாகவும் புரியும்படியும் சொல்றதுக்கு என்ன?, சஹி உங்கம்மா மாப்பிள்ளையை எப்படி சொல்றா பாரு?”
“ஏன் இப்படி சொன்னதுனால உங்க பொண்ணுக்கு என்ன குறை வந்துச்சு இப்போ? இந்த போட்டு கொடுக்கிற வேலையெல்லாம் இங்க வச்சுக்காதீங்க ஆமா சொல்லிட்டேன்.. நான் என்ன அவரு முன்னாடியா சொன்னேன்?”
“அம்மா, நீங்க இதை தான் சொல்றீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியலைமா... உன்னை எப்பவும் புரிஞ்சுக்கும் இந்த ராகவுக்கும் புரியலை போலிருக்கு... இல்லைன்னா எனக்கு கண்ணுலேயே ஜாடை காண்பிச்சிருக்கும்.. ஏன்ப்பா உனக்கு நிஜமாலுமே புரியலையா? என்னால நம்பமுயடியலை..” என்று தன் அப்பாவிடம் சொல்லிவிட்டு திரும்பி தன் அம்மாவைப்பார்த்து “அம்மா, அவ்யுக்த் வீட்டுலயும் இந்த கூத்து நடந்திருக்கு.. அது எப்போ நடந்ததுன்னெல்லாம் எனக்கு தெரியாது.. சோ இதுலயும் எங்களுக்குள்ள ஒற்றுமை இருக்குமா.” என்றாள் சஹி.
“இல்லை சஹி, என் கவனமெல்லாம் உன் கிட்ட தான் இருந்தது.. அதான் அதைப்பத்தி நான் யோசிக்கலை.. ஒருவேளை நீ ஆபீஸ் போனதுக்கு அப்புறம் யோசிச்சிருந்தேன்னா புரிஞ்சிருக்குமோ, என்னமோ...“ என்றார் ராகவன்.
“ஆமாம் உங்களுக்கு என் பேரை கொலை செய்யறதுலேயே கவனம் இருந்திருக்கும்.. சஹி, நீ சொன்னது கூட இவருக்கு எவ்வளவு தூரம் புரிஞ்சுதுன்னு தெரியலை எனக்கு? உங்க பொண்ணு சொன்னது புரிஞ்சுதா, இல்லை நான் திருப்பி சொல்லட்டுமா?” என்றாள் பங்கஜம்.
“என்னம்மா நீ அப்பாட்ட இப்படி பேசற?” என்ற சஹியைப்பார்த்து, “விடும்மா சஹி, அவளைப்பத்தி எனக்கு தெரியாதா? பேச்சுல எப்பவும் ஒரு அடாவடித்தனம்..“ என்று நிறுத்தினார் ராகவன்.
“என்ன உங்க பொண்ணுக்கிட்ட என்னைப்பத்தி சொல்லியாச்சில்லை அப்புறம் ஏன் இங்கயே நின்னுக்கிட்டு இருக்கீங்க? உங்க போனை கொடுங்க, அந்த மாமிக்கு கால் பண்ணி என்னிக்கு நல்ல நாள்?ன்னு பார்க்க சொல்றேன்.. நீங்களும் என் பேரை பத்தி யோசிக்காம சம்பந்தி வீட்டுல எப்படி பேசலாம்னு யோசிங்க.. நீ என்னடி இன்னும் ரெடியாகலியா? போ சீக்கிரம் கிளம்பு.”
“அப்பா, நீங்க கிரேட் ப்பா, இந்த அடாவடிக்கூட குடுத்தனம் செஞ்சு இருக்கீங்களே..” என்று சொல்லிவிட்டு நிற்காமல் தன் அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டாள் சஹி. அவளுக்கு தெரியும் அங்கே நின்றால் அம்மா அவளை ஒருவழி பண்ணிவிடுவார்களென்று அதான் உள்ளே சென்று கதவை தாளிட்டுக்கொண்டாள்.
அதைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்த ராகவன், “என்ன உங்க பொண்ணு என்னை கிண்டல் பண்ணினதும் சந்தோஷம் பொங்குதோ?” என்ற பங்கஜத்தின் குரலில் தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றார்.
அறைக்குள் சென்ற சஹி மிகுந்த சந்தோஷத்துடன் தன் போனை எடுத்து அவ்யுக்திற்கு எஸ் எம் எஸ் செய்தாள். இன்று அவன் ஏர்போர்ட் செல்வது குறித்து மெசேஜ் அனுப்பியிருந்ததால் அவனை தொந்தரவு செய்ய மனம் வரவில்லை சஹிக்கு, ஆனால் இந்த சந்தோஷமான விஷயத்தை அவனிடம் பகிர்ந்துக்கொள்ளாமலும் அவளால் இருக்க முடியவில்லை. அதனால் சுருக்கமான செய்தியில் மெசேஜ் அனுப்பிவிட்டு தன் அறையை விட்டு வெளியே வந்தாள்.
அம்மாவிடமும் அப்பாவிடமும் சொல்லிவிட்டு தன் வண்டியை ஸ்டார்ட் செய்ய போகும்போது அவளின் போனில் மெசேஜ் வந்தற்கான ஒலி கேட்டு போனை எடுத்துப்பார்த்தாள். அவ்யுக்த் தான் அனுப்பியிருந்தான். அவனின் மகிழ்ச்சியை முதலில் குறிப்பிட்டு பிறகு தன் கல்லூரி தோழியை சந்திப்பதையும் சொல்லி அந்த தோழி யார் என்பதையும் சுருக்கமாக சொல்லியிருந்தான். கடைசியாக அவளை நாளை சந்திப்பதாக சொல்லி முடித்திருந்தான். அதைப்படித்த சஹி முகத்தில் பூத்த புன்முறுவலுடன் ‘ஓகே’ என்ற பதிலை மெசேஜ் அனுப்பிவிட்டு ஆபீஸ் கிளம்பினாள்.
ஹோட்டல் அறையில் தன் தம்பியைப் பார்த்தப்படி அமர்ந்திருந்தான் சரத். அவ்யுக்த் அவனை ட்ராப் செய்துவிட்டு சிறிதுநேரம் பொதுவாக பேசிக்கொண்டிருந்துவிட்டு ஜான்வியுடன் அவன் வீட்டிற்கு சென்றுவிட்டான். பரத் எதுவுமே பேசாமல் அறையிலிருந்த அலங்காரப் பொருட்களை வேடிக்கைப் பார்ப்பதுபோல் அமர்ந்திருந்தான். சரத்தின் அறையில் அவர்கள் தனியே இருந்தார்கள், அவர்களை பெற்றவர்கள் வேறு ஒரு அறையில் இருந்தார்கள். ஏற்கனவே அவர்கள் இரண்டு அறை புக் பண்ணியிருந்ததால் அவர்களை அங்கேயே இருக்குமாறு சொல்லிவிட்டான் சரத். அவனுக்கு பரத்திடம் ஒரு முப்பது நிமிடமாவது தனியே பேசவேண்டியிருந்தது. அதனால் தான் அவர்களை சிறிது நேரம் கழித்து தன் அறைக்கு வருமாறு சொல்லிவிட்டான். அறையில் தனியே இருந்தாலும் பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று புரியவில்லை சரத்திற்கு. “எப்படியும் பேசித்தானே ஆகவேண்டும்” என்று நினைத்துக்கொண்டு லேசாக தொண்டையை கனைத்து, “பரத் சாரிடா” என்று பேச ஆரம்பித்தான்.
பரத் திரும்பி “எதுக்கு?” என்பதுபோல் பார்த்தானேயொழிய வாய் திறந்து பேசவில்லை.
பரத் பேசாமலே இருந்தாலும் அதை ஒதுக்கி சரத் மேலே பேசத்தொடங்கினான். “உனக்கும் எனக்கும் ஐந்து வருட இடைவெளி, நீ பிறக்கும் வரை அந்த வீட்டிற்கு நான் தான் செல்லப்பிள்ளை. நீ பிறந்தவுடன் அது மாறியது. அம்மா எப்பொழுதும் உன்னுடன் இருக்க ஆரம்பித்தார்கள். அப்பா அவருடைய பிஸ்னசில் மூழ்க ஆரம்பித்தார். அதனாலேயே எனக்கு உன் மேல் அப்பவே பொறாமை உணர்வு வந்திட்டதுன்னு நினைக்கிறேன். உனக்கு மூன்று, நாலு வயசு ஆகும்போது அப்பாவின் பிஸ்னஸ் டல் ஆக ஆரம்பித்ததும் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ஜோதிடகாரர்களைப் பார்க்கவும், அவர்கள் சொன்ன பரிகாரங்களை நிறைவேத்தவும் தான் நேரம் சரியாயிருந்தது.. நம்மளை கவனிக்க அவர்களுக்கு நேரமில்லை.. அந்த சமயத்தில் உன்னிடம் அவர்கள் ஒதுக்கம் காட்ட தொடங்கியது எனக்கு உற்சாகமாக இருந்தது. என்னுடைய வயசு அப்படி பரத்.. இதை சொல்லி திருத்த அப்போ யாரும் இல்லைடா.. ஏற்கனவே நான் உன் மேல் பொறாமைப்பட்டுக்கொண்டிருந்தேன்.. இதில் இவர்களும் உன்னிடம் ஒதுக்கம் காட்டவும் நானும் உன்னை விட்டு ஒதுங்க ஆரம்பித்தேன். நாங்கள் அனைவரும் காட்டும் ஒதுக்கத்தில் தான் நீ முரடானாகி போனாய் என்று புரிந்துக்கொள்ளாமலே மனதில் உன்னைப்பற்றி தவறாக நினைக்க ஆரம்பித்தேன். இவனைப்போல் நாமும் முரடானாகயிருக்க கூடாதென்று தினமும் ஒருமுறையாவது மனதிற்குள் கூறி கொள்வேன். பிறகு நான் வளர வளர உன்னைப்பற்றி நல்லவிதமாக புரிந்துக்கொண்டாலும் என்னுடைய ஈகோ உன்னிடம் பேசிப்பழக ஒத்துக்கவில்லை.. நம்மைப்பெற்றவர்களும் நம்மிடையே ஒரு பாசப்பிணைப்பை ஏற்படுத்த தவறியதும் ஒரு காரணம் பரத்..”
“இந்த தப்பில் அவர்களுக்கு பெரும்பங்கிருந்தாலும் அதே அளவிற்கு குறையாமல் எனக்கும் பங்கிருக்கிறது.. இதெல்லாம் எனக்கு நான் காலேஜ் படிக்கும்போதே புரிய ஆரம்பித்தது.. ஆனாலும் உன்னுடனான அந்த சுமூக உறவிற்கு என்னுடைய ஈகோ தயாராகயில்லை.. இப்போக்கூட நான் உன்னிடம் பேசியிருப்பேனோ, என்னமோ? எனக்கு தெரியலை.. என் வாழ்க்கையில் ஜான்வி வந்திருக்காவிட்டால் கண்டிப்பாக நான் உன்னிடம் இப்படி பேசியிருக்க மாட்டேன் பரத்..”
“சாரி பரத், உன்னுடன் இயல்பான விளையாட்டுடனும் சிறு சிறு சண்டையுடனும் கழிந்திருக்க வேண்டிய நாட்களை என்னுடைய ஈகோவினால் இழந்து விட்டேன். இதில் நான் இழந்ததை விட நீ இழந்தது தான் மிகவும் அதிகம்...”
“நல்லவேளை உனக்கு அவ்யுக்த் மாதிரியும் ஜான்வி மாதிரியும் நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்.. உனக்குத் தெரியுமா ஜான்வி என் வாழ்க்கையில் எப்படி வந்தாள்?ன்னு” என்று நிறுத்தி பரத்தைப் பார்த்தான் சரத்.
பரத் “தனக்கு தெரியாது” என்பதுபோல் தலையசைக்க, சரத் “நானே சொல்றேன்” என்று ஜான்வியைப் பற்றி சொல்ல ஆரம்பித்தான். அதே சமயத்தில் ஜான்வியும் அவ்யுக்திடம் தன் வாழ்க்கையில் நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.
அவ்யுக்த் ஜான்வியைக் கூட்டிக்கொண்டு தன் வீட்டை அடைந்தான். வீட்டினுள் நுழைந்ததும் ஜான்வி, கௌசியிடம் பேச உள்ளே சென்றாள்.
“வா..வா! ஜானு, எப்படி இருக்க?” என்ற கௌசியை “நான் ரொம்ப நல்லா இருக்கேன் ஆன்ட்டி, நீங்க எப்படி இருக்கீங்க?” என்றபடியே கட்டிக்கொண்டாள் ஜான்வி.
“சொல்லு ஜானு, கார்ல வரும்போது வீட்டுக்கு போய் எல்லாம் சொல்றேன்னு சொன்ன இல்ல, அதை இப்போ சொல்லு அப்புறமா அம்மாக்கிட்ட செல்லம் கொஞ்சலாம்” என்றான் அவ்யுக்த் சிறிது கோபமாக.
“டேய் இருடா, எல்லாம் சொல்லுவா, வந்து டிபன் காபி சாப்பிடுங்க மெதுவா பேசிக்கலாம்.” என்றார் கௌசி.
“இல்லை ஆன்ட்டி, எனக்கு பசிக்கலை.. இன்னும் நான் வாயைத் திறக்காம இருந்தா உங்கப் பையன் ருத்ர தாண்டவம் ஆடிடுவான்... நீங்களும் இங்கயே உட்காருங்க.. நான் எல்லாமே சொல்றேன்.”
கௌசியும் அவ்யுக்த்தின் முகத்தைப் பார்த்தப்படியே “சரி ஜானு” என்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார். அவர் அருகில் அமர்ந்துக்கொண்ட ஜானு, “சாரி அவ்யுக்த், உன்னோட மெயில்களுக்கெல்லாம் நான் வேணும்னே தான் ரிப்ளை பண்ணலை..” என்று நிறுத்தி அவ்யுக்த்தைப் பார்த்து விட்டு மேலே தொடர்ந்தாள்.
“அவ்யுக்த் உனக்கே தெரியும், நான் என் அப்பாவோட வேலைக் காரணமா தான் காலேஜ் மட்டும் ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சேன்னு.. பரத்திற்கு ஸ்கூல் டேஸ்லேர்ந்தே ஹாஸ்டல் வாழ்க்கை தான்.. உங்க ரெண்டுப் பேரோட நட்பைப் பார்த்து எனக்கு உங்க கூட பிரண்ட்ஷிப் வச்சுக்கணும்னு ஆசை வந்தது... நீங்களும் என் கூட உண்மையான நட்போட பழகினீங்க.. இன்னமும் அப்படி தான் பழகிட்டிருக்கீறீங்க.”
“எனக்கும் பரத்துக்கும் என்ன சண்டை வந்தாலும் அது எங்களுக்குள்ளே தான் இருக்கும்.. உன்னை தவிர அதில் யாரையுமே தலையிட அனுமதிக்க மாட்டோம்.” என்றவளை இடைமறித்தான் அவ்யுக்த்.
“நிறுத்து ஜானு, இதெல்லாம் தெரிஞ்சது தான.. எனக்கு நீ இரண்டு கேள்விக்கு பதில் சொன்னா போதும்.. நம்பர் ஒன், நீ எப்படி சரத் வைப் ஆன?, நம்பர் டு, ஏன் எனக்கு ரிப்ளை பண்ணலை? அதை சொல்லு போதும்.. நம்ம காலேஜ் கதை எல்லாம் இங்க வேண்டாம்.. நிறைய நிறைய விளையாட்டுக்களும், சண்டைகளும், குறும்பும், மகிழ்ச்சியும், சிரிப்பும், சிற்சில வருத்தங்களும், கூடவே படிப்பும் கலந்து என்று காலேஜ் போய் படித்த எல்லோருக்கும் கிடைக்கும் கல்லூரி வாழ்க்கை தான் நமக்கும், சோ அதை விடு ஜானு.. நீ எப்படி எங்களை விட்டு விலகி போன? அதை எங்களுக்கும் உன்னோட மத்த பிரண்ட்ஸ்க்கும் தெரியாம எப்படி செஞ்ச? அதை சொல்லு போதும்..” என்று கேட்டுவிட்டு அருகில் பாட்டிலில் இருந்த சில் வாட்டரை மட மடவென்று குடித்தான் அவ்யுக்த்.
அவனைப்பார்த்த ஜான்வி, “பரத் நம்மளை தவிர வேறு யாரிடமும் பேசிப் பழக மாட்டான்.. உனக்கு அடுத்து என்னை வச்சிருந்தான்.. நானும் பரத்தை ஒரு நல்ல நண்பனாகத்தான் பார்த்தேன். ஆனால் என்னுடன் தங்கியிருந்த ஹாஸ்டல் மேட்ஸ் சில பேர் என்னையும் பரத்தையும் சேர்த்து வைத்து பேசினார்கள். இது காலேஜ்ல சஹஜம் தான், அந்த வயசுல கூடப் படித்தவர்களை யாருடனாவது இணைத்துப் பேசி கலாய்ப்பது நடக்கிற விஷயம் என்று நான் அதை அப்போ பெரிசா எடுத்துக்கலை. எனக்கோ பரத்திற்கோ மனசுல நட்பை தவிர வேறு எந்தவிதமான எண்ணமும் இல்லைங்கறதுனாலயும் நான் அந்த விஷயத்தை பெரிசா எடுத்துக்கலை..
“நாம ரெண்டு பேரும் கம்பஸ் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணவேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டோம்.. பரத்தையும் நாம அட்டென்ட் பண்ண வேண்டாம்ன்னு தான் சொன்னோம்.. உன்னுடன் சேர்ந்து பிஸ்னஸ் பண்ண அவனை அழைத்தும் அவன் அதை ஏற்காமல் மறுத்து, நாம சொன்னதை கேட்காமல் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணியும் அவனுக்கு அங்கே வேலை கிடைக்கலை. இதை நாம பெரிசா எடுத்துக்காம பரத்தை சீயர்அப் பண்ணினதும், நீ அவனை உன்னுடன் உங்க வீட்டுக்கு அழைச்சுட்டு போன, நான் என்னோட ரூம்க்கு கிளம்பி போற வழிலேயே என்னோட ஹாஸ்டல் மேட்ஸ், விசாகாவும் வைஷாலியும் என்னைப் பிடிச்சிக்கிட்டாங்க.. அவங்க ரெண்டுப் பேரும் உங்க ரெண்டு பேருக்கிட்டயும் ப்ரொபோஸ் பண்ணினவுங்க உனக்கு நினைவிருக்கா அவ்யுக்த்?” என்று கேட்டுவிட்டு அவ்யுக்தைப் பார்த்தாள்.
அவ்யுக்தும் “நினைவிருக்கு” என்பதுபோல் தலையை ஆட்டினான். அவனின் தலையாட்டலின் மூலம் பதிலைப் பெற்ற ஜான்வி மேலே தொடர்ந்தாள்.
“அவங்க ரெண்டு பேருமே பரத்தை ரொம்ப டீஸ் செஞ்சாங்க. அதிலும் பரத்திடம் ரொம்ப வழிசலோட ப்ரொபோஸ் செஞ்சு அவன் கிட்ட நல்லா திட்டு வாங்கின வைஷாலி ரொம்பவே பேசினா.. “ என்று அன்றைய நாள் நினைவுகளில் மூழ்கினாள் ஜான்வி.
”ஜான்வி, அவனுக்கு தான் வேலை கிடைக்கலையே.. இப்போவே வேலை கிடைக்கல வெளில போய் தேடினா மட்டும் கிடைக்கவா போகுது? அவனோட ராசி அப்படி.. அவ்யுக்தோட சேர்ந்து பிஸ்னஸ் செஞ்சாலும் பரத்தோட ராசி அந்த கம்பெனியை இழுத்து மூட வைக்கும்.. அவ்யுக்த்க்கு பிரச்சினையில்லை அவங்க அப்பா எதாவது செய்வார்.. பட் பரத் சாப்பாட்டிற்கே சிங்கி அடிக்க வேண்டியதுதான்.. ஏன்னு கேட்கறியா? அவ்யுக்த்க்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னா பரத் என்ன பண்ணுவான்? அதான் சொல்றேன் நீயே அவனைக் கல்யாணம் பண்ணி அவனுக்கு வாழ்க்கை கொடு.. கவலைப் படாதே அவனோட ராசினால உன் லைப்ல சேஞ்சஸ் வராது.. அப்படியே வந்தாலும் உன்னோட பேரன்ட்ஸ் உனக்கும், உனக்கு தாலி கட்டின பாவத்திற்காக பரத்திற்கும் கஞ்சி ஊத்திடுவாங்க... நீ பயப்படாம அவனை கல்யாணம் செஞ்சுக்கோ, உனக்கும் ஒரு சம்பளமில்லா வேலைக்காரன் கிடைத்த மாதிரியும் இருக்கும்.. ஹே ஜானு! இதுல ஒரு விஷயம் கவனிச்சியா? நீயும் பரத்தும் ஒரே ஜாதி வேற.. நான் பாரு உனக்கு தெரிஞ்ச விஷயத்தையே சொல்றேன்.. அவன் உன்னோட ஜாதிங்கறதுனால தான பரத் கூடயே நீ பழக ஆரம்பிச்சிருப்ப.. சோ உங்க வீட்டுலயும் இந்த கல்யாணத்திற்கு பிரச்சினை இருக்காது.. ஜானு, உன்னை விட்டா அவனுக்கு வாழ்க்கைப் பிச்சை போட யாருமில்லை” ன்னு ரொம்ப பேசினா வைஷாலி. அன்னிக்கு அவளை நல்லா திட்டிட்டு வந்துட்டேன். நீ எப்பவும் சொல்லுவியே அவ்யுக்த், சாக்கடை மாதிரி யாராவது பேசினா அந்த இடத்தை விட்டு நகர்ந்து வந்துடனும் இல்லைனா அது நம்ம மேலேயே தெரிக்கும்ன்னு, பட் நான் நகராம பதிலடிக்கொடுக்க போய் ரொம்ப அசிங்கப்பட்டேன்.”
“அன்னிக்கு வைஷாலி பேசும்போது என்னால் நகர்ந்துக்க முடியலை, அவளுக்கு சரியாய் ஒரு பஜாரி மாதிரி பேசிட்டேன்டா அவ்யுக்த். அது உன் கிட்ட ப்ரொபோஸ் செஞ்ச விசாகா மூலம் எங்க ஹாஸ்டல் புல்லா பரவிடுச்சு. எல்லாரும் நான் தப்பு செஞ்ச மாதிரியே பேசினாங்க..” என்று நிறுத்தி மீண்டும் அன்றைய நாளுக்கே சென்றாள் ஜான்வி.
 
Top