Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - 22(part2)

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் 22 தொடர்ச்சி

“குத்தமுள்ள நெஞ்சு தான குறுகுறுக்கும், இவ மனசுல கல்மிஷம் இல்லாமலா, பரத்தை பற்றி வைஷாலி சொன்னதும் இவளுக்கு இவ்வளவு கோபம் வரும்? இவளை போய் நம்பினோமே”
ன்னு என்னோட பிரண்ட்ஸ் கூட சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.. எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது. என் கூட இத்தனை வருஷம் பழகியும் என்னைப் புரிஞ்சுக்காதது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.. நான் கோபத்தில் பேசின வார்த்தைகளைக்கொண்டே வைஷாலியும், விசாகாவும் விளையாடியது எனக்கு லேட்டாதான் புரிந்தது. அவர்களில் சிலர் என்னை நம்பினார்கள். அவர்கள் எனக்காக பரிந்துப் பேசுவது போல பேசி என்னை ஏமாற்றியது இரண்டு நாட்கள் கழித்து தான் தெரியும். எனக்காக பரிந்து பேசி பேசியே என்னை ஒரு வழி செய்தார்கள். ஒரு கட்டத்தில் எனக்கு அவர்களிடமும் கோபப்படும் நிலை ஏற்பட்டது. நான் அவர்களிடமும் கோப பட, இதை வைத்தும் என்னை கேலி பொருளாக்கினார்கள் அந்த வைசாலியும் விசாகாவும்.
“இதையெல்லாம் பார்க்கப் பார்க்க எனக்கு கோபமும், ஆத்திரமும் பெருகியது,” என்று நிறுத்தி அவ்யுக்தின் முகத்தை திரும்பிப் பார்த்து, “எனக்கு கோபம் இவர்கள் மேல் வரவில்லை.. மாறாக, பரத்தின் பாமிலி மேல் என் கோபம் திரும்பியது. எப்படியாவது அவர்களை பழி வாங்கவேண்டுமென்ற வைராக்கியம் என்னுள் எழுந்தது... இதை உங்களிடம் சொல்லாமல் செய்யவேண்டும் என்றும் என் மனதில் தீர்மானித்துக்கொண்டேன்... உன்னிடம் சொன்னால் கண்டிப்பாக நீ மறுத்திருப்பாய்..., அவர்களை பழி வாங்க நாம் யார்? இதில் எனக்கு துளி கூட இஷ்டமில்லை.. நாம் பரத்திற்கு எப்போதும் துணையிருப்போம், அவனை சந்தோஷமாக வைத்திருப்போம்.. அவர்களுக்கு பாடம் கற்பிக்க நமக்கு வயதில்லை. காலம் அவர்களை மாற்றும், அதுவரை நாம் பொறுத்திருப்போமென்ற காந்திய வார்த்தைகளை தவிர உன்னிடமிருந்து வேற எதுவுமே வராதுன்னு தெரிஞ்சு தான் நானே முடிவெடுத்தேன். பரத்திடம் சொன்னால் அவனுக்கு இருக்கும் கோபத்தில் என் ஹாஸ்டல் மேட்சை திட்டி, சண்டை போட்டு என் இமேஜை மேலும் டேமேஜ் பண்ணியிருப்பான்.. அதான் அவனிடமும் சொல்லவில்லை.”
“நீங்கள் இருவருமே பெண்களிடம் ஒரு வரைமுறையோடு தான் பழகுவீர்கள், அதிலும் உனக்கு பாதி நேரம் பரத்தை சமாதானப் படுத்தவே நேரம் சரியாயிருக்கும் என்று தெரியும். அதுமட்டுமில்லை அப்பொழுது நமக்கு பைனல் செம் வேற நடக்க இருந்தது. அதனால் யாருக்குமே இதைப்பற்றி பேச நேரமும் இல்லை. இதுல எனக்கு இன்னொரு சாதகமான விஷயம் என்னவென்றால், என்னைப்பற்றி அவதூறு சொல்லிக்கொண்டு உங்கள் முன்னால் ஒருவரும் நிற்கமுடியாதென்பதும் எனக்கு சாதகமாக போய்விட்டது. எல்லா சாதகப் பாதகங்களையும் யோசித்து தான் பரத்தின் குடும்பத்தை பழி வாங்க முடிவெடுத்தேன்.” என்று சிறிது நிறுத்தினாள் ஜான்வி.
“எப்படியும் இந்த விஷயம் உங்களுக்கு தெரிய வாய்ப்பு கம்மி என்று தான் நான் அந்த மாதிரி ஒரு முடிவெடுத்தேன். எப்படியாவது உங்களுக்கு இந்த விஷயம் தெரியும்போது நான் உங்கள் அருகில் இருக்க கூடாதென்றும் மனதில் தீர்மானித்துக்கொண்டேன்.. நம் படிப்பும் முடிந்தது... என் அப்பாவின் வேலைக் காரணமாக சில நாட்கள் நான் ஹாஸ்டல்லையே தங்கும் நிலையில் நான் இருந்ததால், என்னை உன் வீட்டிற்க்கே வந்து தங்கிக் கொள்ள நீ வரசொன்ன.”
“பட், எனக்கு தனியே யோசிக்க இட மாற்றம் தேவையாயிருந்தது.. உங்களிடம் சொல்லாமல் போகவும் நினைத்தேன்.. அதை நீங்கள் உணரும்போது நான் உங்கள் அருகே இருக்க கூடாதென்றும் நினைத்துக்கொண்டிருக்கும்போது என் அப்பா எனக்கு கால் செஞ்சார். அவருக்கு அமெரிக்கால ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு என்ன பண்ணட்டும்னு கேட்டார். நீங்க உடனே ஒத்துக்கோங்கன்னு சொல்லிட்டேன் அவ்யுக்த். எனக்கும் அங்க ஏதாவது ஜாப் பார்த்து வைங்கன்னும் சொல்லிட்டேன். அதையெல்லாம் நான் உங்களிடம் சொல்லாமல் மறைத்தேன். உங்களுக்கு தெரியாமலே பாஸ்போர்ட் அப்ளை செஞ்சேன். பாஸ்போர்ட் வந்ததும் விசாவுக்கும் அப்ளை செஞ்சேன். எதுவுமே உங்க கிட்ட சொல்லலை. எனக்கு விசா கிடைக்க கொஞ்சம் டிலே ஆகும் போல இருந்தது. ஆனால் எனக்கு இங்க இருக்கப் பிடிக்கலை. “செய்பவை எல்லாம் நன்றே செய், அதையும் இன்றே செய்”ங்கற மாதிரி உடனே எல்லாத்தையும் செய்து முடிக்கணும்ன்னு முடிவு செஞ்சேன். ஆனா நான் செய்ய நினைத்தது நல்லதா,கெட்டதா?ன்னு தான் எனக்கு தெரியலை.”
“எனக்கு விசா கிடைக்கறவரைக்கும் என்ன பண்றதுன்னு யோசிச்சப்ப தான் என் சித்தி பொண்ணு கல்யாணம் வந்தது. உங்க ரெண்டு பேர் கிட்டயும் சொல்லிட்டு கல்யாணம் அட்டென்ட் பண்ண ஊருக்கு போய்ட்டேன். அங்க இருக்கும்போது முதல் ரெண்டு நாள் என் மொபைல்லேர்ந்தே உனக்கு நான் கால் செஞ்சேன். மறுநாள் ஒரு பப்ளிக் பூத்லேர்ந்து கால் செஞ்சு, என் மொபைல் மிஸ் பண்ணிட்டேன்னு சொல்லிட்டு, ஊருக்கு வந்து உன் கூட பேசறேன்னு சொல்லிட்டு வச்சுட்டேன். நியாபகமிருக்கா அவ்யுக்த்?” என்று கேட்டு நிறுத்தினாள் ஜானு.
அவ்யுக்திற்கு என்ன பேசினோம் என்பது நினைவில் இல்லாவிட்டாலும் ஏதோ பேசினோம் என்பது மட்டும் நினைவிலிருந்ததால் தலையை “ம்ம்” என்பது போல் ஆட்டி வைத்தான்.
அவ்யுக்த் எதுவும் பேசாததை கண்ட ஜானு, அவளே மேலே பேச்சை தொடங்கினாள்.
“நான் உன்னை அதன் பிறகு காண்டக்ட் செய்யவேயில்லை. அதை நீ உணர்ந்து, எனக்கு நீ மெயில் பண்ணும் போது பதினைந்து நாட்கள் கடந்து போயிருந்தன அவ்யுக்த். அந்த மெயில்க்கு, நான் இரண்டு வாரம் கழித்து தான் ஊருக்கு வருவேன்னு உனக்கு மெயில் பண்ணினது தான் கடைசி மெயில். அப்புறம் உன் கிட்டயிருந்து வந்த எந்த மெயில்க்கும் ரிப்ளை பண்ணவேயில்லை. மத்த பிரண்ட்ஸ் க்கும் ரிப்ளை பண்ணவேயில்லை.”
“எனக்கு அமெரிக்கா போக விசா கிடைக்க ஆறு மாதம் ஆனது. அதுவரைக்கும் தெரிந்த சொந்தக்காரர்கள், தெரிந்து பார்த்தேயிராத சொந்தங்கள், என்று அவர்களின் வீடுகளில் தங்கிக்கொண்டேன். அங்கு தங்கியதும் எனக்கு நல்லதாய் போனது. ஏனென்றால், அப்போது தான் சரத்திற்கு பெண் தேடுவது எனக்கு தெரிய வந்தது. அது வரை அவர்களை பழி வாங்க என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை. இந்த விஷயம் கேள்வி பட்டதும் அவர்களின் மருமகளானால் என் எண்ணம் சீக்கிரம் ஈடேறும் என்று உடனே முடிவு செய்தேன். கூடயிருந்தே குழிப் பறிப்பது தான் அவர்களுக்கு சரியான தண்டனைன்னு முடிவு செஞ்சு, உடனே எங்க அப்பாவிற்கு கால் செஞ்சேன். ஏன்னா, நான் லேட் பண்ணினால் வேற பொண்ண பார்த்து முடிவு செஞ்சுடுவாங்கன்னு தான் உடனே அப்பாக் கிட்ட பேசினேன். என் கல்யாணத்தை பத்தி நானே பேசுவதற்கு ரொம்ப கூச்சமா தான் இருந்தது. பட், எனக்கு வேற வழி தெரியலை.
“எனக்கு சரத்தை ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னேன். உனக்கு அவனை எப்படி தெரியும்? ன்னு அப்பா என் கிட்ட கேட்டபோது, நம்ம சொந்தகாரங்க வீட்டுல சரத் பாமிலி போட்டோ பார்த்தேன், சரத்தை பார்த்ததும் பிடிச்சிருச்சுப்பான்னு பொய் சொன்னேன். அவங்க வீட்டுல சரத்துக்கு பொண்ணுப் பார்த்துட்டு இருக்காங்கப்பா அதனால சீக்கிரம் முடிவெடுங்கப்பான்னு அப்பாவ போட்டு படுத்தினேன். என்னமோ எனக்கு அவர் மேல ரொம்ப காதல்ன்னு அப்பா நினைச்சுக்கிட்டார். அதனால இந்த கல்யாணத்தை சீக்கிரம் நல்லபடியா நடத்தனும்னு முடிவெடுத்தார். அப்பாவும் அமெரிக்காலயே இருந்ததுனால நேரவே அவங்க வீட்டுக்கு போய் சம்பந்தம் பேசினாங்க. சரத் குடும்பத்துக்கும் என் அப்பாவை தெரிந்ததால் அவர்கள் சம்மதமும் உடனே கிடைத்தது.”
“இதுக்கு நடுவிலேயே எனக்கும் விசா கிடைச்சது. டென் டேஸ் கேப் லேயே நான் அமெரிக்காக்கு பறந்துட்டேன். அங்க போனதும் தான் சரத்தைப் பார்த்தேன். என்ன தான் பழி வாங்க தான் இந்த கல்யாணம் என்றாலும் நானும் பெண் தானே, சரத்தை பார்த்ததுமே என் மனம் தடுமாற ஆரம்பிச்சிடுச்சு. “ என்று நிறுத்தினாள்.
“ஹே ஜானு! நீ என்ன லூசா? பழிக்கு பழி அது இதுன்னு சொல்லிக்கிட்டு உன் வாழ்க்கையை அழிச்சுக்க நினைச்சிருக்க.. கொஞ்சமாவது யோசிச்சியா?” உன் லைப் போச்சுன்னா உன் பேரன்ட்ஸ் எவ்வளவு கஷ்டப்படுவாங்க.. பரத்தையே அந்த பாடு படுத்தியிருக்காங்கன்னு தெரிஞ்சும் அந்த குடும்பத்துக்குள்ள போக நினைச்சிருக்கியே.. உன்னை என்ன செய்யறது?” என்று தன் ஆதங்கத்தை தெரிவித்தான் அவ்யுக்த்.
“டேய் இப்போ என்னைப் பார்த்தா சந்தோஷமா வாழாத மாதிரியா இருக்கு?” என்று கேட்ட ஜான்வியை ஏறிட்ட அவ்யுக்திற்கு அவள் மிகவும் சந்தோஷமான வாழ்வே வாழ்ந்துக்கொண்டிருப்பதை உணர முடிந்ததனால் “இல்லை” என்பதுபோல் தலையசைத்து, “ஆனாலும்..” என்று அவ்யுக்த் ஆரம்பிக்கும்போதே, “வெயிட் அவ்யுக்த் நான் முடிச்சுடறேன்.” என்றாள் ஜான்வி.
“டேய், என் வாழ்க்கையை நானே அழிச்சுக்க நினைச்சது தப்பு தான் டா, பட் எனக்கு, அவர்களை பழி வாங்க இதை விட வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்ன்னு தோணலை டா. அதான் ரிஸ்க் எடுக்க முடிவு பண்ணினேன். பட் நான் சரத்தை பார்த்ததும் கொஞ்சமே கொஞ்சம் தடுமாறினேன். என்று சொல்லிவிட்டு அவ்யுக்த்தை பார்த்து லேசாக புன்னகைத்தாள் ஜான்வி.
“ஜானு, என்ன பார்த்தவுடனே லவ்ஸா?” பாருடா, வெட்கமெல்லாம் வருது உனக்கு.” என்று கிண்டல் செய்து சிரித்தான் அவ்யுக்த்.
“டேய், நீ இப்போ வாய மூடுடா.. நான் டிபன் சாப்பிட சொன்னதுக்கு அந்த குதி குதிச்சு அவளை சாப்பிட விடாம பண்ணின.. சரி கொஞ்சம் வம்பாவது கலெக்ட் செய்யலாம்ன்னு நீங்க பேசறதை கவனிச்சா, சீரியல்ல சஸ்பென்ஸ் வச்சு தொடரும் ன்னு போடற மாதிரி.. கரெக்டா நிறுத்திட்டா இந்த ஜானு. இதுல நீ வேற குறுக்க குறுக்க பேசிக்கிட்டு..” என்று கோபப்பட்டாள் கௌசி.
“ஜானு, இந்த உலகத்துல அடுத்தவங்க விஷயம்ன்னா எப்படி மெய் மறந்து போய் வம்பு கேக்கறாங்கப் பாரு!” என்று அம்மாவின் காலை வாரினான் அவ்யுக்த்.
“டேய் நான் ஒண்ணும் அதுக்கு கேட்கலைடா, நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆகும் போது சஹிகிட்ட எப்படியெல்லாம் நடந்துக்கலாம்னு தான் கேட்டேன் டா..”
“நீ நிஜமா அதுக்கு தான் கேட்டியாம்மா?”
“நிஜமா நான் அதுக்கு தான் கேட்டேன் டா அவ்யுக்த்” என்று நமட்டு சிரிப்பு சிரித்தாள் கௌசி. அந்த சிரிப்பில் அவ்யுக்தும் பங்குக்கொண்டான்.
அம்மா கூடவே சேர்ந்து சிரிக்கும் அவ்யுக்த்தைப் பார்த்து, “சஹியா? அது யாருடா அவ்யுக்த்? பரத் தான் மாட்டிக்கிட்டான்னா, நீயுமா?” என்று கேட்டாள் ஜானு.
ஏதோ சொல்ல வந்த அவ்யுக்தின் கையைப் பிடித்து தடுத்த கௌசி, “ஜானு நான் சொல்றேன்..” என்று ஆரம்பித்து, சஹி – அவ்யுக்தின் காதலை சுருக்கமாக சொல்லிமுடித்துவிட்டு, “ஜானு, அவ்யுக்த் கிட்ட இப்போ நீ என்ன கேட்கனும்னு நினைக்கறியோ அதையெல்லாம் அப்புறமா கேட்டுக்கோ.. நீ உன் விஷயத்தை பர்ஸ்ட் முடிச்சுடு..” என்றாள் கௌசி.
“ம்ம் சரி ஆன்ட்டி, சஹி பரத் கம்பெனில தான் வேலை செய்யறாளா?” என்ற ஜானுவை முறைத்துப் பார்த்த கௌசி, “ஜானு, நீ உன் லைப்ல என்ன நடந்ததுன்னு புல்லா சொன்னா தான இந்த ரைட்டர் ஸ்டோரிய முடிப்பாங்க.. நம்ம வாசககர்கள் பாவம் இல்லையா? இந்த ரைட்டர் மாதிரியே லேட்டா இருந்தீன்னா என்ன அர்த்தம்?”.
“கரெக்ட் தான் ஆன்ட்டி, உங்களுக்காக இல்லைன்னாலும் நம்ம வாசகர்களுக்காக சீக்கிரம் சொல்றேன்.”
“நான் சரத்தை பார்த்து தடுமாறினாலும் மனதில் பரத்திற்காக இவனையும் பழிவாங்க தான் வேண்டும் என்று உறுதியெடுத்துக்கொண்டு சரத்திடம் பழக ஆரம்பித்தேன். சீக்கிரமே கல்யாணம் செய்துக்கொள்ளலாமென்று சரத்தை வற்புறுத்தினேன். எங்க கல்யாணம் அமெரிக்காலேயே நடக்கட்டும் என்றும் சொல்லிவிட்டேன். இந்தியால நடந்தா என்னால உங்களை இன்வைட் பண்ணாம இருக்க முடியாது. சரத் கல்யாணம்னு தெரிஞ்சா கண்டிப்பா பரத் வரமாட்டான்.. அப்படியே நீ வற்புறுத்தி அவனை கல்யாணத்திற்கு அனுப்பி வச்சா என்னோட எண்ணம் ஈடேறாது. அதான் கல்யாணத்தை அங்கேயே நடத்த திட்டமிட்டேன்.”
“நிச்சயத்தின் போதே சரத் அவருடைய குடும்பத்தை பத்தி எல்லாமே சொல்லி மிகவும் வருத்தப்பட்டார். அதுவும் பரத்தைப் பற்றி பேசும்போதெல்லாம் அவரின் தப்பை நன்கு உணர்ந்திருந்தது சரத் கண்ணில் நன்றாக தெரிந்ததினால் அவரிடம் மட்டும் என்னைக் காட்டிக்கொண்டேன். பரத்தின் தோழி என்றறிந்ததுமே சரத்திற்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. சரத் என் கிட்ட, ‘எங்களை பழி வாங்க தான் என்னை தேர்ந்தெடுத்தியா, என் மேல் உனக்கு லவ் இல்லையா?’ ன்னு கேட்டார். நானும் ‘உங்களை நேர்ல பார்க்கிற வரைக்கும் லவ் இல்லை.. பார்த்த பிறகு லவ் வந்துடுச்சு.. அதான் உங்க கிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டேன்’னு சரத் கிட்ட சொன்னேன் டா அவ்யுக்த்.”
“சரத்தும் புரிஞ்சுக்கிட்டார், கல்யாணத்தைப் பத்தி பரத்திற்கு மெயில் பண்றேன்னு சரத் என் கிட்ட சொல்லி பரத்தின் பெர்சனல் மெயில் ஐடி கேட்டார். நான் பரத்தின் ஐடி கொடுத்தேன். பரத்திற்கு எங்க கல்யாணம் அமெரிக்கால நடக்கறதைப் பத்தி எழுதினதுக்கு பிறகு, எங்க இன்விடேசனை அட்டாச் செஞ்சு மெயில் அனுப்ப சரத்திடம் சொன்னேன் நான். எனக்கு தெரியும் பரத் அதை ஓபன் பண்ணி பார்க்கமாட்டான்னு.. உன் கிட்ட கல்யாணத்தைப் பத்தி பரத் சொன்னாலும் கல்யாணம் அமெரிக்கால நடக்கறதுனால நீயும் பொண்ணு யாரு என்னன்னு பெரிசா கேட்டுக்க மாட்டேன்னு தெரியும். அதான் தைரியமா இன்விடேசன் அனுப்ப சொன்னேன்.” என்று ஜானு சொல்லிக்கொண்டிருந்த அதே வினாடியில் சரத்தும் பரத்திடம் அதையே தான் சொல்லிக்கொண்டிருந்தான்.
“அதே மாதிரியே நீயும் ஓபன் பண்ணாமலேயே, எனக்கு வாழ்த்துகள் மட்டும் போட்டு ரிப்ளை செஞ்சுருந்த, அதுமட்டுமில்லை உன்னோட பெர்சனல் ஐடி எனக்கு எப்படி தெரியவந்தது என்று கூட நீ கேட்கவேயில்லை.” என்று சரத் பரத்திடம் சொன்னான்.
“ஜானு நீ என்னையும், அவ்யுக்த்தையும் நல்லா புரிஞ்சு வச்சுருக்க” என்று மனதில் தங்கள் தோழியுடன் பேசிக்கொண்டான் பரத்.
“எங்க கல்யாணத்திற்கு முன்னாடியே நான் நம்ம குடும்பத்தை பத்தியும், உன்னைப் பத்தியும் ஜானு கிட்ட சொல்லிட்டேன்.. நான் செய்த தப்பு எனக்குப் புரிந்ததால், நானே ஜானுவின் எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்தேன்.”
பரத் ஒன்றும் புரியாமல் பார்க்க, சரத்தே விஷயத்தை கூறலானான். “எங்க கல்யாணத்திற்கு பிறகு நானே அம்மாவையும் அப்பாவையும் ஒதுக்க ஆரம்பித்தேன்.. சொத்தையெல்லாம் என் பேருக்கு மாற்ற சொன்னேன்.. அதையெல்லாம் ஜானுவின் பெயரில் உடனே மாற்றி எழுதி அதையும் அவர்களுக்கு தெரியப்படுத்தினேன். ஜானு அவர்களை எதிர்த்து பேசும்போதெல்லாம் வாயை மூடிக்கொண்டிருந்தேன். சில சமயம் அவர்களுக்கு உதவி செய்வது போல் செய்து அதையும் ஜானுவை விட்டே சொல்லிக்காண்பிக்க வச்சேன். இருவரையும் நன்றாக வேலை வாங்கினேன். ஜானுவும் வேலைக்கு போனதால் அவள் வேலைகளையும் அவர்களையே செய்ய வைத்தாள் ஜானு. இதுவும் நான் சொல்லி தான் செய்தாள்.”
“இடையிடையே, உங்களுக்கு நான் மட்டும் பிள்ளை இல்லை, இங்கேயே இருந்துக்கொண்டு எங்கள் உயிரை எடுக்காதீர்கள் என்றெல்லாம் நானே பேசினேன். ஜானுவிற்கே அவர்களை நினைத்து மிகவும் கஷ்டமாக இருந்தது.. இப்படியெல்லாம் பேசவேண்டாம் என்றும் சொன்னாள்.”
“அந்த சமயத்தில் தான் தான் நீ பிஸ்னஸ் ஆரம்பிக்கப் போவதாக அப்பாவிடம் சொன்னாய்.. அதை என்னிடம் சொன்னார்கள். இது தான் நல்ல சமயம் உன் பிஸ்னஸ்க்கு நானும் ஜானுவும் ஹெல்ப் செய்யலாம்ன்னு இந்தியா கிளம்ப ஆயத்தமாகும் போது, நம் அப்பா, அம்மா இருவரும் உன் ராசியைப் பற்றியே பேசியது, இதெல்லாம் உனக்கு தேவை தானா? அவ்யுக்திடமே வேலை பார்க்கவேண்டியது தானேன்னு சொன்னது எல்லாமே எங்கள் காதில் விழுந்தது.”
“இவர்களுக்கு உன்னை புரிந்துக்கொள்ள இன்னும் கொஞ்சம் காலம் தேவைபடுகிறது என்று புரிந்துக்கொண்டோம். உன் பிஸ்னெஸ்க்கும் அவ்யுக்தின் அப்பா உதவி செய்வதாகவும் தெரிந்துக்கொண்டேன். அதனால் நம்மைப் பெற்றவர்களுக்கு, இன்னும் நிறைய நிறைய சிக்கல்களை ஏற்படுத்தினோம்.”
“உன் பிஸ்னஸ் வெற்றியையும் அவ்வபொழுது அவர்களுக்கு தெரியுமாறு செய்தோம். இதெல்லாம் செய்ய செய்ய அவர்களுக்கு உன் பக்கத்து நியாயம் புரிய ஆரம்பித்தது.”
“இந்த சமயத்தில் தான் நீ நளினாவைப் பற்றி கூறுவதற்கு கால் செய்தாய்.. அப்பொழுதே அப்பா உன்னிடம் தங்களைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். இதையெல்லாம் நான் எதேச்சையாக ஆபீசிலிருந்து வீட்டுக்கு வந்தபோது கேட்க நேரிட்டது. என்னை திரும்பிப் பார்த்த அப்பா, மிகவும் பயந்துவிட்டார். ஏற்கனவே தொல்லைகள் செய்கிறானே.. நான் பேசுவது எல்லாம் கேட்டு இன்னும் என்னனென்ன செய்வானோன்னு ரொம்ப பயந்துட்டார், அவர் கண்ணில் அந்த பயத்தைப் பார்த்ததும் தான் அவரின் மன மாற்றம் புரிய ஆரம்பித்தது.”
“ஜானுவும் ஆபீசிலிருந்து வந்ததும், இருவரும் அவர்களிடம் சென்று உண்மையைக் கூறினோம். இந்தியா கிளம்ப போவதாகவும் சொன்னோம். அவர்களுக்கு ஜானுவை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது. நண்பனுக்காக தன் வாழ்வையே பணயம் வைத்த ஜானுவின் மேல் அவர்களுக்கு மிகுந்த பாசம் ஏற்பட்டது. அவளும் நானும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டோம். அவர்களும் இந்தியா வருவதாக சொல்லியதால் எல்லோருமே கிளம்பி வந்தோம்.”
“இனிமே நீ தான் சொல்லவேண்டும். எங்களின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, எங்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும்.. சிறு வயதில் எங்களிடமிருந்து உனக்கு கிடைக்காத அன்பையும், அரவணைப்பையும், பாசத்தையும் இப்பொழுது தருகிறோம் பரத்.. எங்களை மன்னித்துவிடு.. உன் தோழிக்காகவாவது எங்களை ஏற்றுக்கொள் பரத்.” என்று பரத்திடம் சொல்லிக்கொண்டே ரூமில் இருந்த இன்டெர்காமில் தங்களைப் பெற்றவர்களை அழைத்தான் சரத்.
சரத் அழைப்பதற்காகவே காத்திருந்த அவர்கள், அழைத்த சில நொடிகளிலேயே சரத்தின் அறைக்குள் சென்றனர்.
அமர்ந்திருந்த பரத் அவர்களை கண்டவுடன் உடனே எழுந்து நின்றுக்கொண்டான். பரத்தின் அருகே செல்ல நினைத்த அவனின் பெற்றவர்கள், அவன் முகத்தில் பெருமளவு இறுக்கத்தை கண்டவுடன் இருந்த இடத்திலேயே நின்று பேச ஆரம்பித்தனர்.
“பரத், உன் கிட்ட மன்னிப்பு கேட்க கூட எங்களுக்கு வெட்கமா இருக்குப்பா, இருந்தாலும் நாங்க மன்னிப்பு கேட்கத்தான் வேண்டும்.. எங்களோட ஜோசிய வெறியால் ரொம்ப பாதிக்கப்பட்டது நீதான்.. உன்னை ரொம்ப படுத்திட்டோம்.. உன்னோட சிறு வயது குறும்புகளை ரசிக்காமல் கொண்டு போய் ஹாஸ்டல்ல சேர்த்து..” என்று பரத்தின் அப்பா சொல்லிக்கொண்டிருக்கும் போதே பரத்திற்கு அந்த நாட்கள் கண் முன்னே விரிந்து விழிகளில் நீர் கோர்த்தன. அவனையே பார்த்துக்கொண்டிருந்த சரத்திற்கும் அவன் வலி புரிந்ததால் அவன் கண்களும் கண்ணீரில் நனைந்தது.
சில நிமிடங்களில் தன்னிலை அடைந்த பரத் அவர்களை ஒரு பார்வை பார்த்தான். அந்த பார்வையில் என்ன இருந்தது?, கோபமா, வருத்தமா இல்லை தன் குடும்பத்துக்காக ஏங்கும் ஏக்கமா? தெரியவில்லையே என்று குடும்பத்தினர் அனைவருமே வருந்தினர்.
அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த பரத் தன் வாயை திறந்து பேச ஆரம்பித்தான்.
“ம்க்கும்” என்று தொண்டையை சரி செய்துக்கொண்ட பரத், “நீங்க எல்லோரும் எனக்கு செய்ததை நான் தப்பு என்றோ இல்லை நியாமில்லை என்றோ, என்று முடிந்து போனதைப் பற்றி பேச எனக்கு இஷ்டமில்லை. அதற்காக நீங்க என்னிடம் மன்னிப்பு கேட்டதும் உங்களை மன்னித்து உங்களிடம் சாதரணமாக நடக்கவும் என்னால் முடியாது. சினிமா இல்லை இது, நிஜ வாழ்க்கை. சினிமாவில் தான் முதல் சீனில் கெட்டவனாக நடித்தவன் கடைசியில் திருந்தி வரும்போது மற்றவர்களால் ஏற்றுக்கொள்ள முடியும். நாமும் அதை ரசித்து பார்ப்போம். பட் எனக்கு உங்களை எல்லாம் பார்க்கும் போது என் மனதில் இறுக்கம் தானாக வந்துவிடுகிறது. இதில் என்னால் எப்படி உங்களிடம் இயல்பாக நடந்துக்கொள்ள முடியும். உங்களுக்கும் இத்தனை வருஷத்திற்கு பிறகு என்னுடன் சகஜமாக நடக்க கஷ்டமாகத் தான் இருக்கும். இல்லையென்றால் அங்கே வீட்டிற்கு வந்து என்னுடன் தங்காமல் ஹோட்டலில் ரூம் புக் செய்திருக்க மாட்டீர்கள். இதில் ஒன்றும் தப்பில்லை.”
“இப்பொழுது நான் பேசுவதே உங்கள் வயதிற்கு மரியாதை கொடுத்து தான், தயவு செய்து அதைப் புரிந்துக்கொள்ளுங்கள். அதுமட்டுமில்லை, யாரிடமும் எடுத்தெறிஞ்சு பேச கௌசிமா எனக்கு கற்று கொடுக்கவுமில்லை. அவர்கள் என்னை அப்படி வளர்க்கவுமில்லை.” என்று பேசிக்கொண்டிருக்கும்போதே மற்றவர்களுக்கு மனதில் வேதனை அதிகரித்தது. இப்படி பெற்றவர்களிடமே அவனின் வளர்ப்பு முறைப் பற்றி அவனே பேசியது, வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சியது போல் இருந்தது அவர்களுக்கு. முகத்தில் அவர்களின் வேதனை அப்பட்டமாக தெரிந்தது. அதைப் பார்த்த பரத்திற்கு தான் பேசிய வார்த்தைகளின் வீரியம் புரிந்தது. அது மட்டுமில்லாமல் பேசிய வார்த்தைகளை திரும்ப பெற முடியாதென்றும் புரிந்துக்கொண்டான். கௌசிமா எப்பொழுதும் சொல்லும் “வார்த்தையை கொட்டாதே டா பரத், திரும்ப அள்ள முடியாது டா” என்ற வார்த்தைகள் அவன் மனதில் காலம் கடந்து வந்து போயின. ஆனாலும் அவர்களிடம் மன்னிப்புக் கோர அவன் மனம் அவனுக்கு இடம் தரவில்லை. அதனால், தான் பேசியதையே ஒரு பொருட்டாக எண்ணாமல், பெற்றவர்களின் வயதையும், மனதையும் கவனத்தில் கொண்டு மேலே பேச ஆரம்பித்தான்.
“எனக்கும் கால அவகாசம் தேவைப்படுகிறது. என் கல்யாணத்தை கூட இருந்து நடத்தி தாருங்கள்.. மற்றதை என் மனம் மாறிய பிறகு பார்த்துக்கலாம்.. இப்பொழுது நான் கிளம்புகிறேன். அவ்யுக்த் வந்தால் நான் கிளம்பிவிட்டதாக சொல்லிடுங்க” என்றவாறே கிளம்ப எத்தனித்தான்.
பரத்தின் கையைப் பிடித்து தடுத்த சரத், “நாங்க உன்னிடம் மன்னிப்பு கேட்டதுமே நீ எங்களை மன்னித்து ஏற்றுக்கொள்வாய் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை டா பரத், உன் மனதும் எனக்கு புரியுதுடா, ப்ளீஸ் பரத் அவ்யுக்த் வரவரைக்கும் எங்களோட இருடா. அது போதும் டா, உன்னை எப்பவும் எங்களுடனே இரு என்று வற்புறுத்த மாட்டோம்டா. என்னடா இவன் வார்த்தைக்கு வார்த்தை ‘டா’ போடறானேன்னு நினைக்காதடா, என் தப்பு எப்போ எனக்கு புரிய ஆரம்பிச்சதோ, அன்னிலேர்ந்தே என் மனதுக்குள் உன்னை அப்படி தான் டா கூப்பிடுவேன். ப்ளீஸ் டா இன்னும் கொஞ்ச நேரம் இருடா.” என்ற சரத் தன் பெற்றவர்களை திரும்பிப் பார்த்தான்.
சரத்தின் பார்வையில் பரத்தின் அருகே சென்ற அவர்கள், சட்டென்று பரத்தின் கையைப் பற்றி கண்ணில் ஒற்றிக்கொண்டே, “எங்களை மன்னித்துவிடப்பா, இன்னும் சிறிது நேராமவது எங்களுடன் இருப்பா” என்ற அவர்களுக்கு மேலே என்ன பேசுவது என்றே தெரியாமல் பரத்தின் கையை மிகவும் அழுத்தமாகப் பற்றி தங்களின் மன்னிப்பை யாசித்தனர்..
“பரத், நாங்க ஹோட்டல்ல தங்கறதுக்கு காரணம், எங்களின் மனநிலையை உனக்கு உணர்த்திய பிறகு உன்னுடன் வந்து தங்குவது தான் எங்களின்.. இல்லை.. இல்லை.... என்னுடைய எண்ணம். ஜானுவுக்கு இதில் விருப்பமில்லை.. நேரே அங்கே வீட்டுக்கு போகலாமென்று தான் அவள் சொன்னாள்.. எனக்கு தான் உன்னிடம் பேசியப் பிறகு வரலாம் என்று தோன்றியது.” இது தானே தவிர எங்களுக்கு தயக்கமில்லை.”
“உன் மன்னிப்பு எங்களுக்கு எப்போ கிடைக்குமோ? இல்லை கிடைக்காமலே போனாலும் அதைப் பற்றி நான் கவலைப் படப்போவதில்லை, இங்கிருக்கும் வரைக்கும், பிறகு, இனிமேல் இங்கு வரும்போதெல்லாம் உன்னுடன் தங்கி நல்ல நண்பனைப் போல பழகப்போறேன் டா, பரத்” என்றான் சரத்.
பரத்தின் மௌனம் தொடர, அதைப் பார்த்த சரத்தும் தன் வாயை மூடிக்கொண்டான். சரத் தன் மனதில், “டேய், அவனை ஒரேடியாக ஒதுக்கி தள்ளிட்டு இப்போ இப்படி ஓவரா பாச மழை பொழிஞ்சா பரத்துக்கும் பயமாத்தானே இருக்கும். பயந்து ஓடாம இருக்கானே, அதுவே பெரிய விஷயம் தான்.. இனிமே நாம கொஞ்சம் அடக்கித் தான் வாசிக்கணும்.” என்று சொல்லிக்கொண்டான்.
பரத் அவ்யுக்த் வரும்வரை இருக்க முடிவு செய்து அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தான். அதைப் பார்த்த சரத்தும் அவனருகில் சென்று அமர்ந்தான். அவர்களைப் பெற்றவர்களோ பரத்தின் அருகே சென்று அமர முடியாமல், கூனி குறுகி நின்ற இடத்திலேயே நின்றுக் கொண்டிருந்தார்கள்.
அதே நேரத்தில் ஜானுவும் கௌசியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள். அவ்யுக்தும் அவளை ஹோட்டலில் கொண்டு விடுவதற்காக ஜானுவுடன் கிளம்பினான்.
“ஜானு, அது என்ன ஏர்போர்ட்ல எங்களைப் பார்த்ததும், இருக்கேனா, செத்தேனா?ன்னு பார்க்க நாதியில்லை அது இல்லை ன்னு என்னென்னமோ சொன்ன? எதுக்கு அப்படியெல்லாம் பேசின? நீ தானே எங்களை விட்டு தள்ளியிருந்த, நீயே இப்படி பேசலாமா?” என்றவாறே தன் காரை ஸ்டார்ட் செய்தான் அவ்யுக்த்.
 
மிகவும் அருமையான பதிவு,
சத்யாஸ்ரீராம் டியர்
 
Last edited:
Top