Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NENA 19.1

Advertisement

Admin

Admin
Member
இறுதிப் பகுதி

ஜெனி வேறு எதையோ நினைத்து விஜயிடமிருந்து விலக.... விஜய் தன்னிடம்தான் குறை என்று அவனையே வருத்திக்கொள்வது ஜெனிக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது.

காலையில் அவன் தாமதமாகத்தான் எழுவான் என்று தெரிந்தும், அவனுக்குச் செல்லில் முயன்று கொண்டே இருந்தாள். கல்லூரிக்கு கிளம்பும் போதும், செல் அவள் காதிலேயே இருந்தது.

ஸ்டீபன் அவளை வித்தியாசமாகப் பார்த்தாரே தவிர ஒன்றும் சொல்லவில்லை.... அவர் ஜெனியிடம் தன் கண்டிப்பை தளர்த்தித்தான் இருந்தார்.

“என்ன ஜெனி இது... காலையில இருந்த போன்னை காதிலேயே வச்சிட்டு இருக்க? போன்னை வச்சிட்டு ஒழுங்கா சாப்பிடு...” லீனா அதட்ட...

“அவங்களுக்கு ஜுரம்மா.... இப்ப எப்படி இருக்காங்கன்னு கேட்கலாம்ன்னு போன் பண்ணா எடுக்கவே மாட்றாங்க.” ஜெனி கவலையாகச் சொல்ல...

“அவங்க எடுக்கலைன்னா... உங்க அத்தைக்குப் போன் பண்ணி கேளேன்.” லீனா மகளுக்கு யோசனை சொல்ல....

“வேண்டாம்... அத்தை டென்ஷன் ஆவாங்கன்னு விஜய் அத்தான் சொன்னாங்களோ இல்லையோ... இருக்கட்டும் நான் விஜய் அத்தான்கிட்டயே பேசிக்கிறேன். நீங்களும் அத்தைக்குப் போன் பண்ணாதீங்க.” சொல்லிவிட்டு ஜெனி கல்லூரிக்கு கிளம்ப.... ஸ்டீபன்னும் லீனாவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டனர்.

கல்லூரிக்கு வந்த ஜெனிக்கு விஜயின் நினைப்பாகவே இருக்க... முதல் இரண்டு மணிநேரம் கல்லூரியில் இருந்தவள். அதற்கு மேல் இருக்க முடியாமல்... கல்லூரியில் இருந்து வெளியே வந்து, அங்கே தினமும் அவள் பார்க்கும் ஆட்டோகாரரிடம் சென்று விஜயின் ஹோட்டல் முகவரி சொல்லி வரமுடியுமா என்று கேட்க....



“இங்க இருந்து ரொம்பத் தூரம் டிராபிக் வேற அதிகம் இருக்கும். ஐநூறு ரூபாய் ஆகும்.” என்றார் ஆட்டோகாரர்.

“போயிட்டு உடனே உங்க ஆட்டோவிலேயே திரும்பிடாலாம். அதனால கம்மி பண்ணிக்கோங்க.” ஜெனி பேரம் பேச...

“சரி அப்படின்னா மொத்தமா எட்நூறு கொடு.” என்றதும், ஜெனி சரி என்று ஆட்டோவில் ஏறிக்கொள்ள... ஆட்டோ பறந்தது.

விஜயை பார்க்க கிளம்பிவிட்டாலும் ஜெனிக்கு மனதிற்குள் திக் திக்கென்று அடித்துக்கொண்டே இருந்தது. அதற்கு ஏற்றார் போல ஆட்டோ ஓட்டுனர் வேறு குறுக்கு வழியில் செல்ல.... ஜெனிக்கு அவன் செல்லும் பாதை ஒன்றும் புரியவில்லை... அவன் கடத்திக்கொண்டு போனால் கூடத் தெரியாது. அதனால் போகும் வழியெல்லாம் பயந்து கொண்டே சென்றாள்.

ஒன்னரை மணி நேரம் சென்று விஜயின் உணவகத்தில் பத்திரமாக இறங்கியதும்தான் மூச்சு சீராக வந்தது. சற்று முன்தான் விஜயும் வந்திருந்தான். அதனால் வெளியேவே மனேஜர் விபினுடன் நின்று பேசிக்கொண்டிருந்தவன், ஆட்டோ சத்தம் கேட்டு கஸ்டமர் யாரோ தான் வருகிறார்கள் என்று திரும்பி பார்த்தவன், ஜெனியை பார்த்தும் அதிர்ந்தான்.

அவனுக்கு ஜெனியை பார்த்ததும் சந்தோஷம் எல்லாம் வரவில்லை... பயம்தான் வந்தது. இவ எதுக்கு இப்படித் திடிர்ன்னு வந்திருக்கா?... உன்னைப் பிடிக்கலை.... இந்தக் கல்யாணத்தில் இஷ்ட்டம் இல்லை... இப்படி எதுவும் சொல்லத்தான் வந்திருக்காளோ.... என்று கண்டதையும் நினைத்து மனம் குழம்ப.... ஜெனியிடம் சென்றான்.

விஜய் உற்சாகமாக வரவேற்கவில்லை என்றதும், இன்னும் கோபமாகத்தான் இருக்காங்களோ... என்று ஜெனிக்குப் பயம் இன்னும் அதிகமாகியது.

விஜய் ஜெனியை அவனது அறைக்கு அழைத்துக்கொண்டு சென்றான். செல்லும் வழியெல்லாம் இருவரும் ஏதேதோ கற்பனை செய்து, மனதிற்குள் தங்களையே வதைத்துக்கொண்டு இருந்தனர்.

அறைக்குள் வந்ததும் கதவை சாற்றிய விஜய் “சொல்லு ஜெனி எதுக்கு இப்படித் திடிர்ன்னு வந்திருக்க?” என்று அவனுக்கே சரியாகக் கேட்காத குரலில் கேட்க....

ஜெனி பதில் சொல்லாமல் விஜயின் நெற்றியில் கைவைத்து பார்த்தவள், பின் அவன் கழுத்தடியில் கைவைத்து “இன்னும் சுடுதே ஜுரம் போகலையா....” என்றபோது விஜய்க்கு நம்பவே முடியவில்லை....

தனக்கு உடம்பு சரியில்லை என்றுதான் பார்க்க வந்தாளா என்று நினைத்தவன், அடுத்த நொடி அவளை இறுக அனைத்துக்கொள்ள.... ஜெனியும் அவனுடன் ஒன்றிக்கொண்டாள்.

சிறிது நேரம் தங்கள் தவிப்பு நீங்க... இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடியே இருந்தனர். “உனக்கு என்னைப் பிடிக்குமா ஜெனி...” விஜய் நெகிழ்ச்சியாகக் கேட்க.... அவனுக்கு வார்த்தையால் பதில் சொல்லாமல் ஜெனி அவன் முகமெங்கும் முத்தமிட.... விஜயும் அதில் ஆர்வமாக பங்கெடுத்துக் கொண்டான்.


“ஏண்டி ஒரு நாளாவது வாய் திறந்து என்னைப் பிடிக்கும்ன்னு சொல்லி இருக்கியா...”

“நான் உங்களைப் பிடிக்கலைன்னும் சொன்னது இல்லையே.... உங்களைப் பிடிக்காமலா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.” ஜெனி சொல்வதும் சரி என்றே விஜய்க்கு தோன்றியது.

“சரி என்கிட்டே என்ன பிடிக்கும் சொல்லு?”

விஜயின் மார்பிலிருந்து முகத்தை நிமிர்த்தியவள் “ம்ம்... நீங்க சிரிக்கும் போது சிரிக்கும் உங்க கண்ணு பிடிக்கும். அப்புறம் உங்க கன்னத்துக் குழி அது ரொம்பப் பிடிக்கும். அப்புறம்....”

“ம்ம்... சொல்லு.....” விஜய் எடுத்துக்கொடுக்க...

“நீங்க சிரிச்சா உங்க பல்வரிசை ரொம்ப அழகா தெரியும். அப்புறம் நீங்க கோபபட்டாலும் அழகா இருப்பீங்க. எல்லாத்தையும் விட நீங்க உங்க அம்மா மேல வச்சிருக்கப் பாசம் ரொம்பப் பிடிக்கும்.” ஜெனி பேசப் பேச விஜய் எங்கோ பறந்து கொண்டிருந்தான்.

“இவ்வளவு மனசுல வச்சிக்கிட்டு... ஒருநாளாவது சொல்லி இருக்கியா...”

“நிறைய உங்களைத் தேடி இருக்கேன். உங்க போன் காலுக்காக நிறைய நாள் காத்திருந்திருக்கேன். ஆனா எனக்கா உங்களைக் கூப்பிட எதோ தயக்கம்.”

“இப்ப மட்டும் ஏன்டி வந்த?

“இப்பதான் எனக்கு உங்க கஷ்ட்டம் புரிஞ்சது விஜய். நீங்க என்னை விட்டு விலகினா எனக்கு ரொம்ப மனசு வலிக்குது... அப்படித்தானே உங்களுக்கும் இருந்திருக்கும். இனியும் இப்படியே இருந்தா உங்களை இழந்திடுவேனோன்னு பயமா இருக்கு.” ஜெனி கலங்கிய கண்களை விஜயின் மார்பில் மறைக்க....
“யாரு உன்னை விடுறதா இருந்தா?... நீ என்னோட ஜெனி.” என்ற விஜய் இன்னும் ஆவேசமாக அவளைத் தழுவ....

விஜயாக அவளை விடப்போவதில்லை என்பதை உணர்ந்த ஜெனி “நான் போகணும் விஜய். வெளிய ஆட்டோ வெயிட் பண்ணுது.” என்றபடி விளக்கினாள்.

“அந்த ஆட்டோ போனாப் போகட்டும், நீ மெதுவா போகலாம்.” விஜய் ஜெனியை மீண்டும் இழுத்து அணைக்க....

“வேற ஆட்டோவில போனா திரும்பப் பயந்திட்டே இருக்கணும். நான் இதுலையே போறேன். நான் மூன்னு மணிக்குள்ள போகணும்.” ஜெனி சொல்ல... விஜய்க்கு எதற்குப் பயம் என்று புரியவில்லை....

“எதுக்குப் பயம் ஜெனி?”

“வரும் போது ஆட்டோ குறுக்கு வழியில வந்துச்சு....” ஜெனி மேற்கொண்டு பேசமுடியாமல் அழ...
“நீ அதைப் பார்த்து பயந்திட்டியா...” என்ற விஜய் அவள் கண்களைத் துடைத்து விட்டவன் “ஏன் தனியா ஆட்டோவில வந்த? எனக்கு ஒரு போன் செஞ்சு பேசி இருந்தா போதும். இல்லை என்ன வான்னு சொன்னா வந்திருக்கப் போறேன். நீ ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கிற?”

“உங்க போன் ஸ்விட்ச் ஆப். பிறகு எப்படிப் பேசுறதாம்?” ஜெனி விசும்பியபடி பேச....

“சாரி... தப்பு என் மேலதான். நான் வேணும்ன்னு பண்ணலை.... தெரியாம சுவிட்ச் ஆப் ஆகிடுச்சு.”

“ஜெனி எனக்கு ரொம்பக் கோபம் வரும். அதே போல வந்த வேகத்தில அது திரும்பியும் போய்டும். அது என்னோட குணம். நான் கண்டிப்பா என்னை மாத்திக்க ட்ரை பண்றேன். அதனால் என்னை நினைச்சு இனி நீ இப்படி எதுவும் யோசிக்காம செய்யாத. நீ காலேஜ்ல இருக்கன்னுதான் எல்லோரும் நினைச்சிட்டு இருப்பாங்க. இப்படி யாருக்கும் தெரியாம தனியா இவ்வளவு தூரம் ஆட்டோவில வந்தது தப்பு.” என்றவன், விபினை அழைத்து ஆட்டோவை பணம் கொடுத்து அனுப்ப சொன்னான்.

“நான் இப்ப எப்படிப் போவேன்?” ஜெனி கேட்டதற்கு “நான் கொண்டு போய் விடுறேன்.” என்ற விஜய், அந்த அறையில் இருந்த ரெஸ்ட் ரூமை காட்டி “போய்க் கொஞ்சம் பிரெஷ் ஆகிட்டு வா...” என்றவன், ஜெனிக்கு உணவு வரவழைத்தான்.

ஜெனி முகம் கழுவி வர... அவளுக்காகச் சூடான மட்டன் பிரியாணி தயாராக இருந்தது. விஜயே அவளுக்குப் பரிமாற... அவன் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு வந்திருப்பான் என்று ஜெனிக்கு தெரியும். அதனால் அவள் மட்டும் உட்கார்ந்து சாப்பிட்டாள்.

“பிரியாணிதான் இப்ப அவசரத்திற்கு ரெடியா இருந்தது.” விஜய் சொல்ல.... “ரொம்ப நல்லா இருக்கு...” என்றபடி ஜெனி ரசித்துச் சாப்பிட...

“மேடம்... நீங்க இப்படி மெதுவா சாப்பிட்டா.... போக லேட் ஆகும்... பரவாயில்லையா....” விஜய் சிரித்துக்கொண்டே சொல்ல... ஜெனி வேகமாகச் சாப்பிட்டவள் “எனக்கு ஒரு ஸ்டாபெர்ரி மில்க்க்ஷேக் வேணும் ஒரே வெயில் ஜில்லுன்னு குடிச்சா நல்லா இருக்கும்.” என்றாள்.

“ம்ம்... அப்படியா... நீ என்னைப் பார்க்க வந்த மாதிரி தெரியலை... நல்லா சாப்பிட வந்த மாதிரி இருக்கு. எதுக்கும் பார்சல் எடுத்திட்டு போறியா...” விஜய் கிண்டலடிக்க...
ஜெனியின் முகம் வாட “நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன்.” என்றாள் உள்ளே சென்ற குரலில்....

அவளைக் கனிவாகப் பார்த்த விஜய் “சும்மா சொன்னேன் டா.... இனி இது உன் ஹோட்டல். நீ தானே இதைப் பார்த்துக்கப் போறே...” என்றான்.

“நானா அப்ப நீங்க.... புது ஹோட்டல் ஆரம்பிக்கப் போறீங்களா...”

“இல்லை.... இந்த விஷயத்தை உன்கிட்ட மட்டும்தான் சொல்றேன் கேட்டுக்கோ.... வேற ஹோட்டல் ஏதும் ஆரம்பிக்கிற ஐடியா இப்ப எனக்கு இல்லை... இந்த ஹோட்டல்ல இருந்து வர்ற வருமானமே தேவைக்கு அதிமா இருக்கு...”

“ரொம்பப் பணத்துக்குப் பின்னாடி ஓட ஆரம்பிச்சா ஓடிட்டே இருக்கணும். பிறகு வேற எதுக்கும் நேரம் இருக்காது. நம்ம குடும்பத்துக்கான நேரத்தை நான் குடுக்கணும்ன்னு ஆசைபடுறேன் ஜெனி.”

“நம்ம பிள்ளைங்களோட நேரத்தை செலவு பண்ணாம வெறும் பணத்தை மட்டும் கொடுக்கிற அப்பாவா இருந்தா... அவங்களுக்கு நான் ஒரு ATM மெஷின்னா தான் தெரிவேன். அவங்க வளர்ச்சிய நான் ரசிச்சு பார்க்கணும் ஜெனி....” விஜய் மனதை திறந்து பேச...

“ம்ம்... இன்னும் பிறக்காத உங்க குழந்தைங்க மேல இப்பவே அக்கறை... எனக்காக இல்லை...” ஜெனி முகம் திருப்ப...

“ஹே... செல்லம் நீ தாண்டி பர்ஸ்ட்.” விஜய் அவளைக் கொஞ்ச....

“தள்ளிப்போங்க நான் சாப்பிடனும்.” என்ற ஜெனி “அப்ப அத்தை சொன்னாங்களே நீங்க புது ஹோட்டல் ஆரம்பிக்கப் போறதா.... ஏன் அப்படிச் சொன்னாங்க?” என்றாள்.

“அது நான் இந்த ஹோட்டல் தொடங்க ப்ரித்வியும், ஜெப்ரியும் பணம் கொடுத்தாங்க. நானும் நிறையத் தடவை திருப்பிக் குடுக்கிறேன்னு சொல்லிட்டேன். வாங்கிக்க மாட்டேங்கிறாங்க. அதனால அவங்களுக்கு இடமா வாங்கிக் கொடுப்போம்ன்னு நினைச்சேன்.”


“அவங்களுக்கு இடம் பார்க்கிறதா சொன்னா... அம்மா அப்பாவே வேண்டாம்ன்னு சொல்வாங்க. அதனாலதான் ஹோட்டல்ன்னு சொல்லி கதை விட்டு வச்சிருக்கேன். நம்ம கல்யாணத்திற்கு அவங்க இங்க வரும் போது... அவங்க பேர்ல ரெஜிஸ்டர் பண்ணிடலாம்.” என்றான் விஜய்.
ஜெனிக்கு அவன் சொல்வது சரி என்று பட்டதால்... மேலும் அதைப் பற்றி விவாதிக்காமல் வேகமாகச் சாப்பிட்டவள், ஜூசையும் ஒரே மூச்சில் குடித்து முடிக்க... விஜய் அவளை அழைத்துக்கொண்டு சென்றான்.
 
Top