Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Neeyindri Vaazhveno 1

Advertisement

Admin

Admin
Member
நீயின்றி வாழ்வேனோ




பகுதி – 1

“டேய் ! சொன்னது எல்லாம் நியாபகம் இருக்கு இல்ல... இந்தத் தடவை நாம தான் ஜெயிக்கணும். அவனுங்க எப்படி இந்தத் தடவை ஏலம் எடுக்கிறாங்கன்னு பார்க்கலாம். அவனை அந்த எடுத்துலையே சமாதி ஆக்கிடுங்க.”


வெற்றி தன் ஆட்களிடம் பேசியபடி செல்ல.... அதை இருளின் மறைவில் நின்று கேட்ட சாதனாவிற்கு நெஞ்சு பதறியது. ஆட்டை கடித்து மாட்டைக் கடித்துக் கடைசியில் மனுஷனை கடிக்கிற மாதிரி.... இப்ப கொலை வரை இறங்கியாச்சா.... ஐயோ ! இதை எப்படியாவது தடுக்கனுமே.... என நினைத்தவள், அங்கிருந்து விரைந்து சென்றாள்.

அவர்கள் பேசுவது ரிஷியை பற்றி. ரிஷியின் அப்பா ராஜ்மோகனும் வெற்றியின் அப்பா சந்தானமும் தொழில் எதிரிகள். அதோடு அரசியலிலும் வேறு வேறு கட்சிகளில் முக்கியப் பொறுப்பில் இருக்கின்றனர். எப்போதும் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும்.

அடிதடி கட்ட பஞ்சாயத்து என்று பண்ணாத அட்டுழியம் இல்லை.... இவர்கள் பகையை இப்போது அடுத்தத் தலைமுறையும் வழிமொழிகிறது. ரிஷி வெற்றி இருவரும் தங்கள் தகப்பன்மார்களையே மிஞ்சும் நிலையில் இருக்கின்றனர். இவர்களால் பாதிக்கபடுவது அப்பாவி பொது மக்கள்தான்.

அந்த ஸ்டார் ஓட்டலின் பார்கிங் ஏரியாவில் காருக்குள்ளே வெற்றியின் ஆட்கள் ரிஷிக்காகக் காத்திருந்தனர்.

“டேய் நிஜமாவே போட்டு தள்ளிட வேண்டியது தானா....” காருக்குள் இருந்து ஒருவன் மற்றொருவனிடம் கேட்க....

“கிட்டத்தட்ட அப்படித்தான். ஆனா.... உயிர் போகக்கூடாது. எதுக்குடா உயிரோட இருக்கிறோம்னு அவன் நினைக்கணும் அந்த அளவுக்கு இருக்கணும்..” என்ற மற்றொருவன் தொடர்ந்து,

“இந்த நடிகையைப் பார்க்க அவன் தனியா தான் வருவான். எப்ப வருவான்னே யாருக்கும் தெரியாது. இந்தத் தடவை அவன் இங்க வர்ற நியூஸ் எப்படியோ நம்ம வெற்றி அண்ணன் காதுக்கு வந்திருக்கு. அவன் கார் எடுக்க எப்படியும் இங்க வந்து தான ஆகணும். அப்ப அவனை அடிச்சு தூக்கிடுறோம்.” என்றான் அங்கிருந்த மற்றொருவன்.

இவர்கள் ரிஷிகாகக் காத்திருந்த வேளையில், சாதனாவும் அங்கே இருளின் மறைவில் ரிஷியின் வருகைக்காகக் காத்திருந்தாள். அவன் படி வழியாக வருவானா இல்லை.... லிப்டில் வருவானா என்று தெரியாமல் இருபக்கமும் பார்த்தபடியே இருந்தாள்.

சிறிது நேரத்தில் லிப்ட் திறக்கும் ஒலி கேட்கவும், அங்கே பாய்ந்து சென்றவள், ரிஷி வெளியே வருவதற்குள் வழியை மறைத்தபடி இவள் உள்ளே செல்ல....

யாரோ என நினைத்த ரிஷி அவளுக்கு நகர்ந்து வழிவிட்டு வெளியே செல்ல பார்க்க... அவன் கையைப் பிடித்து உள்ளுக்குள் இழுத்த சாதனா “ஷ்.... சத்தம் போடதீங்க.” என ஜாடை செய்தவள், லிப்டின் பெத்தானை ஐந்தாவது மாடிக்கு அழுத்தினாள்.

ரிஷி அப்போது தான் சாதனாவை நன்றாகப் பார்த்தான். அவனுக்கு அவளை நன்றாகத் தெரியும். ஆனால் பேசியது இல்லை. இவள் எதுக்குத் தன்னை வழிமறிக்கிறாள் என அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“உங்களைக் கொல்ல கீழ பார்கிங் கிட்ட ஆளுங்க இருக்காங்க. அதனால கீழ போகாதீங்க.” சாதனா பதட்டமாகச் சொல்ல.... ரிஷி அவளைச் சந்தேகமாகப் பார்த்தான்.

எதிரி வீட்டு பெண்ணுக்கு தன் மேல் என்ன அக்கறை என்று தான் புரியவில்லை.... இதில் எதாவது சூழ்ச்சி இருக்குமோ என அவனுக்குச் சந்தேகமாக இருந்தது.

யோசனையாக அவன் தாடையைச் சொரிந்தவன் “யாரு...” என்றான் சாதனாவை பார்த்து...

யாரு என்றதும், அவன் தன்னைத் தான் கேட்கிறானோ என நினைத்து “நான் சாதனா....”” என்றாள்.

சாதனாவே நல்ல உயரம்தான். ஆனால் ரிஷி அவளை விடவும் நல்ல உயரம். அதனால் அவனை நிமிர்ந்து பார்த்து தான் பேச வேண்டியது இருந்தது.

“உன்னைச் சொல்லலை... என்னை யாரு கொல்ல பார்க்கிறதுன்னு கேட்டேன்.”

“நான் சொல்ல மாட்டேன். அது உங்களுக்குத் தேவை இல்லாதது.” சாதனா வேறு எங்கோ பார்த்துக்கொண்டு சொல்ல...

“உங்க அண்ணனா...” என்றான் ரிஷி சரியாக....

அவன் கேட்டதும் திக்கென்று இருந்தது சாதனாவிற்கு . இனி இவன் அவனைப் பழி வாங்க கிளம்புவான்னே.... அதனால் “உங்களுக்கு ஆபத்துன்னு சொல்லிட்டேன். இனி உங்களைக் காப்பாத்திகிறது உங்க சாமர்த்தியம்.” எனச் சாதனா லிப்டில் இருந்து வெளியே செல்ல பார்க்க....

அவளைத் தடுத்த ரிஷி “உன்னை எப்படி நம்புறது? அதனால நீயும் என்னோட வா...” என்றவன், லிப்டில் திரும்பக் கீழே செல்லும் பெத்தானை அழுத்தினான்.

அதைப் பார்த்து பயந்த சாதனா “உங்களுக்கு என்ன பைத்தியமா... அவங்க உங்களைப் பார்த்தா கொன்னுடுவாங்க.” அவள் பதற.... அதற்குள் லிப்ட் கீழ் தளத்திற்கு வந்திருந்தது.

சாதனாவை இழுத்துக்கொண்டு பார்கிங் வந்த ரிஷி சத்தமாக “எவன்டா அவன் என்னைக் கொல்ல வந்தவன்? தைரியம் இருந்தா முன்னாடி வாங்கடா. இங்க என்னோட இன்னொருத்தரும் இருக்காங்க..” என்றவன்,

சாதனாவை வெளிச்சம் படும் இடத்தில் நிற்க வைத்து “உங்களை அனுப்பினவன்கிட்ட சொல்லுங்க, அவன் தங்கச்சி என்கிட்டே இருக்கான்னு.” என்றபடியே, அவளின் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்து அவளைத் தன் காருக்குள் தள்ளிவிட்டு தானும் ஏறியவன், நொடிப்பொழுதில் அங்கிருந்து மறைந்தும் விட்டான்.

அவனைத் தாக்க வந்தவர்களுக்குதான், ஒரு நிமிடம் என்ன நடந்தது என்றே புரியவில்லை.... பிறகு புரிந்ததும், வெற்றியை அழைத்து நடந்ததைச் சொல்ல.... அதைக் கேட்ட வெற்றிக்கு ரத்தம் கொதித்தது. அவனுக்குத் தன் தங்கை எப்படி அங்கே சென்றாள் என்றே புரியவில்லை.

வெற்றி ரிஷியை செல்லில் அழைக்க.... அவன் அழைப்பான் என்று ரிஷிக்கு நன்றாகவே தெரியும்.

“ஹலோ மச்சான், சொல்லுங்க என்ன இந்த நேரத்தில போன்?...” ரிஷியின் நக்கலான விசாரணை வெற்றியின் ஆத்திரத்தை மேலும் அதிகமாக்கியது.


“என் தங்கச்சியை எதுக்கு டா நீ பிடிச்சு வச்சிருக்க?”

“நாளைக்கு நாங்க அந்த ஏலம் எடுக்கக் கூடாதுன்னு தான நீ என்னைப் போட்டு தள்ள பார்த்த.... நான் அதே காரணத்துக்காகத் தான் உன் தங்கச்சியைத் தூக்கிட்டேன். உனக்கு அவ பத்திரமா வேணும்னா... நாளை ஏலம் நடக்கிற இடம் பக்கம் கூட நீ வரக்கூடாது. ஏலம் முடிஞ்சதும், அவளை நானே உன்கிட்ட பத்திரமா ஒப்படைக்கிறேன்.”

“வேண்டாம் ரிஷி, நான் போலீஸ்ல சொல்வேன்.”

“தாராளமா சொல்லு.... நானும் சொல்வேன்.” என்று ஒரு நொடி ரிஷி பேச்சை நிறுத்த... வெற்றி, சாதனா இருவருமே அவன் சொல்வதைக் கூர்ந்து கவனிக்க...

“நான் நைட் போனதே உன் தங்கச்சிகிட்டன்னு சொல்வேன். பரவாயில்லையா....எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப நாளா தொடர்பு இருக்குன்னு சொல்வேன்.” ரிஷி திமிராகச் சொல்ல.... வெற்றி பின் வாங்கினான். இந்த முறையும் அவனிடம் தோற்றத்தை எண்ணி வெற்றிக்கு உள்ளம் கொதித்தது.

ரிஷி திரும்பி சாதனாவை பார்க்க “அவளின் ஒட்டு மொத்த ரத்தமும் முகத்தில் பாய்ந்தது போல் முகம் அவமானத்தில் சிவந்து இருந்தது.

தன் உயிரை காப்பாற்ற வந்தவளை பற்றிக் கேவலமாகப் பேசி விட்டோமே என்ற குற்ற உணர்வு அவனுக்கு இருந்தாலும், அதை வெளியே காட்டாமல் அலட்சியமாகக் காரை ஓட்டினான். அது தான் ரிஷி. தன்னைப் பற்றி யார் என்ன நினைத்தாலும் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டான்.

“ரிஷி, ப்ளீஸ் என்னைப் போக விடுங்க. நீங்க இப்படிப் பண்ணுவீங்கன்னு நான் நிச்சயமா எதிர்பார்க்கலை....இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன்.”

“இந்த அறிவு அப்பவே இருந்திருக்கணும். நைட் நேரம் தனியா வந்திருக்க.... நான் இப்ப உன்னை என்ன வேணா பண்ணலாம் தெரியுமா.... இல்லை வர்ற வழியில எவன் கிட்டயாவது மாட்டிருந்தா.... கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா நீ....”

ரிஷி சொன்னதைக் கேட்டதும் சாதனாவிற்கு மிகவும் பயமாக இருந்தது. அவன் சொல்வது சரி தானே..... எதோ ஒரு ஆர்வகோளாறில் உடனே கிளம்பி வந்து விட்டாள்.

வரும் வழியில் எதாவது ஆபத்தில் மாட்டி இருந்தாள். அல்லது இப்போது ரிஷி தான் அவளிடம் தவறாக நடக்க முயன்றால் அவளால் என்ன செய்ய முடியும்? மனம் கலங்க அவள் ரிஷியை பார்க்க.... அப்போது அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

சாதனா அணிந்திருந்த கண்ணாடியை மீறி அவளின் கண்களில் பயம் வெளிப்படையாகத் தெரிந்தது.

“பயப்படாத.... உன்னை எதுவும் பண்ண மாட்டேன். நீயா தான் என்னைத் தேடி வந்த, வந்ததுக்கு எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணிட்டு போ....” கூலாகச் சொன்னான் ரிஷி.

இவனிடம் இதற்கு மேல் பேசுவது பிரோஜனம் இல்லை எனபதை உணர்ந்த சாதனாவிற்கு , இந்த விஷயம் தன் தந்தைக்குத் தெரியும் போது.... எவ்வளவு பிரச்சனை ஆகும் என்ற கவலை பிறந்தது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் ரிஷி கவலைப்படுபவன் போல் இல்லை.... காரில் இருந்த ப்ளேயரில் இளையராஜா பாடலை ஓட விட்டபடி.... கூடச் சேர்ந்து அவனும் பாடிக்கொண்டு இருந்தான்.
 
Top