Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MP 9

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் – 9

அன்பரசி நடந்ததை கூற ஆரம்பித்த காலம், ஐந்து வருடங்களுக்கு முன் நடந்தது! அப்போது தான் பி.எட். மற்றும் எம்.எஸ்.சி முடித்துவிட்டு, ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக அமர்ந்த காலம்.

வினோத் மெகானிக்கல் இஞ்சினியரிங் முடித்து, ஒரு பிரபல கார் கம்பெனில் இரண்டு வருடமாக வேலை செய்துக் கொண்டிருந்தான். இருவருடைய நட்பும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் காலம் முதற்கொண்டு தொடக்கம்.

அன்பரசி பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சவீதா சிஸ்டர் நடத்திய ஆசிரமத்தில் தான். அங்கு வளர்ந்த எல்லோரும் பள்ளி பயின்றது, பக்கத்தில் இருந்த அரசு பள்ளியில். அங்கு தான் அவளுக்கு வினோத்தின் அறிமுகம் கிடைத்தது.

பள்ளியில் சேர்ந்த புதிதில், தன் நண்பர்களை கல்லால் அடிப்பது வினோத்துக்கு பிடித்தமான விளையாட்டு! அப்படி ஒரு நாள் அவன் அடித்த போது, ஓடி வந்த அன்பரசியின் நெற்றியில் கல் பட்டுவிட, குட்டி அன்பு ஓவென பெரிய குரல் எடுத்து மைதானத்தில் இருந்த அனைவரையும் கூட்டினாள். நெற்றியோ சிறு பந்தைப் போல, சிறிது நேரத்திலேயே வீங்கி விட்டது….

அப்போது பார்த்தா அவனின் அன்னை யமுனா வந்து அவனை அழைத்துச் செல்ல வேண்டும்?? என்ன நடந்தது என யமுனாவிற்க்கு ஒரு மாணவன் சொல்ல, கீழே இருந்த ஒரு கொம்பை எடுத்து, தர்ம அடி கொடுத்தார் வினோத்துக்கு.

வினோத் வலி தாங்காமல் ஓடவும், யமுனா துரத்தித் துரத்தி அடிக்க, முதலில் கண்களை துடைத்து நடப்பவற்றை அதிசயமாக புன்னகையுடன் பார்த்தாள் அன்பு. பிறகு, ஒரு கையில் நெற்றியை பிடித்துக் கொண்டு இவளும் அவர்களிடம் விரைந்தாள்.

வினோத் இப்போது வலி தாங்காமல், ‘வேணாமா வேணாமா’ என அழுதுக் கொண்டிருக்க, யமுனாவின் கைகளை பிடித்தாள் அன்பு. ‘வேணா.. பாபம்(பாவம்)’ என்று கூறிவிட்டு, வினோத்தின் அருகே சென்றாள்.

அவனின் கண்களை அவள் துடைக்கவும், யமுனாவுக்கு உருகிப் போயிற்று. அதற்குப் பின், வினோத்தை அவளிடம் ‘சாரி’ எனச் சொல்ல வைத்தார், சிரித்துக் கொண்டே தான்!! பிறகு, அன்புவிடம் பேச்சு கொடுத்த போது தான், தெரிந்தது அவள் ஆசிரமத்தில் வளர்வது. அன்று முதல் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்றே நினைத்துக் கொள்வார்.

யமுனாவின் கணவரும் குடி போதைக்கு அடிமையாகி, ஒரு வருடம் முன்பு தான் இறந்திருந்தார். ஆறு வயதேயான வினோத்தை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணமே, அவரை பிறர் வீடுகளில் வேலை, தையல் வேலை என எல்லாம் செய்து அவரின் வாழ்க்கையை நடத்த உதவியது.

அவரின் வீடும் சவீதா சிஸ்டர் நடத்தும் ஆசிரமத்துக்கு அருகில் இருந்ததால், அவரும் அங்கு சில முறை சென்றிருக்கிறார். வறுமை காரணமாக தான் அவர் அன்பரசியை ஆசிரமத்திலேயே விட்டது. இல்லை என்றால், கண்டிப்பாக அவரே வளர்த்திருப்பார்.

அன்பரசியும் வளர வளர தாய் இல்லை என்ற உணர்வை கொண்டதே இல்லை… அவளுக்கு எதுவாகினும், ‘அம்மா’ தான். வினோத்தும் அன்பை கூட பிறக்காத சகோதரியாகவே நடத்தினான். பாதி நாட்கள் அவர்களின் வீட்டில் தான் இருப்பாள்.

அன்பரசி பருவம் அடைந்ததும் யமுனா வினோத்தை கூப்பிட்டு, அறிவுரை கூறினார். “வினோ, இனிமே தான் நீ அன்பை நல்லா பார்த்துக்கனும். அவ வெளிய போகும் போது, கூடவே போ. அவளுக்கு நம்மள விட்டா வேற யாருமில்ல. அதை மனசுல வச்சுக்கோ…. நான் போயிட்ட பிறகும் கூட, நீ தான் அன்பரசியை ஒரு அண்ணா மாதிரி இருந்து பார்த்துக்கனும். சரியா?”

“அம்மா.. அதெல்லாம் நான் நல்லா தான் பார்த்துப்பேன். நீயும் எல்லாம் பார்க்க தான் போற… அப்புறம் அவ என்னை விட ரெண்டு மாசம் பெரியவமா. நீ என்னடான்னா அண்ணா மாதிரினு சொல்லுற? அந்த லூசு தான் பெருசு…”

அவன் தலையில் நறுக்கென்று கொட்டிவிட்டு, “இப்போ அது தான் ரொம்ப முக்கியம் பாரு.” என்றார் எரிச்சலாக. தலையை தடவிக் கொண்டு புன்னகையுடன் பதிலளித்தான் புதல்வன்.

“அம்மா அவ நம்மளோட லவ்ஸ்மா… நான் பார்த்துக்காம வேற யாரு பார்த்துப்பா?” கவனிக்காத பாவனை காட்டினாலும், தன்னுடைய ‘லவ்ஸ்’ பற்றி அன்னை கூறியதை மனதில் நன்றாக பதிவு செய்து வினோத்.

ஆம், சிறு வயதில் திரைப்படத்தில் பார்த்து, வினோத் அவன் அம்மாவை நச்சரித்த விஷயங்களில் ஒன்று தான், ‘லவ்’. “அம்மா லவ்வுனா என்னமா? சொல்லு சொல்லு??” என கேட்டதுக்கு பதிலாக அவர், “லவ்வுனா அன்புடா” என்று விடை அளிக்க, அன்று முதல் அன்பரசி அவனுக்கு, ‘லவ்ஸ்’ ஆகிப் போனாள்!

அதன் அர்த்தம் புரியாத வயதில் அன்பு எதுவும் சொல்லவில்லை. சக மாணவர்களின் கிண்டலில் அவளுக்கு புரிந்த போது, “டேய், இனிமே என்னை லவ்ஸுனு கூப்பிடாத.” என்று போர் கொடி தூக்கினாள்.

வினோத் அதை எல்லாம் எங்கே மதித்தான்? அவன் இப்போழுதும் அதை தானே கூறுகிறான்! சில சமயம் வேண்டுமென்றே வெறுப்பேற்றுவதர்கும் பயன்படுத்துவான்.

இந்த சிறு வயது கதையெல்லாம் வினோத்தின் வாயிலாக முதியவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். வினோத்தும் அன்பரசியும் ஒரு முதியோர் இல்லத்துக்கு வந்திருந்தனர். அங்கு இருக்கும் வயதான முதியவர்களிடம் அன்பாக பேசுவது, அவர்களுடன் வாக்கிங் போவது, பக்கத்தில் இருக்கும் மருத்துவரை அழைத்து வந்து அவர்களுக்கு வைத்தியம் பார்ப்பது, என இருவரும் நேரம் கிடைக்கும் போது செய்வர்.

கதை கேட்ட ஒரு முதியவர், “உங்களோட அம்மாவையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல? நாங்களும் பார்த்திருப்போம்லபா?” என வினவினார். அதை கேட்டதும், வினோத்தின் முகம் பொலிவிழந்தது என்றால், மூதாட்டி ஒருவரின் கால்களில் தையிலம் தேயித்து கொன்டிருந்த அன்புவின் கைகள் நின்றன.

“எங்கம்மா ரெண்டு வருஷம் முன்னாடி இறந்துட்டாங்க தாத்தா. அப்போ தான் எனக்கு வேலை கிடைச்ச புதுசு. இவளும் காலேஜுல படிச்சிட்டு இருந்தா. ஹார்ட் அட்டாக் போல… ராத்திரியோட ராத்திரியா… போயிட்டாங்க!”

வினோத்தின் ஆழமான குரலில், அன்பரசி அழ ஆரம்பிக்கவும் மற்றவர்கள் அவளை தேற்றினார்கள். “நாங்க இருக்கோம்ல கண்ணு…. ஏன் அழுவுற? கண்ண தொடடா ராசாத்தி.”

அன்புவும் கண்களை துடைத்துக் கொண்டே பேசினாள். “இல்ல பாட்டி… அம்மா தான் எனக்கு எல்லாமே பண்ணாங்க. இருவத்தியொரு வயசுக்கு அப்புறம் என்னோட ஆசிரமத்துல இருக்க கூடாது. அம்மா தான் ஹாஸ்டல் சேர்த்துவிட்டு, மேல படிக்கறதுக்கு பேங்க்ல லோன் எல்லாம் வாங்கி கொடுத்தாங்க… அம்மாவும் இவனும் இல்லனா நான் ஒண்ணுமே இல்ல பாட்டி.”

நெகிழ்ந்து போன மூதாட்டியோ, வாய் நிறைய வாழ்த்தினார். “கவலப்படாதமா. இனிமே எல்லாம் நல்லது தான் நடக்கும் உங்க ரெண்டு பேருக்கும். உன்னோட நல்ல மனசுக்கு, உன்னை தங்க தட்டுல தாங்குற மாதிரி மகராசன் வருவான் பாரு.”

மூதாட்டி கூறியதை கேட்டு, சிரிக்க ஆரம்பித்த வினோத்தை பார்த்து அன்பரசி முறைத்தாள். “பாட்டி டீச்சரம்மாவோட மனசு எல்லாம் நல்ல மனசு தான். ஆனா, மூளை தான் சின்ன வயசுல நான் அடிச்சதுல மங்கி போச்சு! அடிக்கடி வேலை செய்யாது… பாவம் கட்டிக்க போறவன்” எல்லோரும் கொல்லென சிரித்துவிட்டு, அந்தி சாயும் நேரமானதால் களைந்து செல்ல, அன்பரசி வினோத்திடம் வந்து சண்டை பிடித்தாள்.

“எதுக்குடா சும்மா இதையே சொல்லிட்டிருக்க? ரொம்ப பண்ற நீ வரவர… என்னை கட்டிக்கப் போறவன் பாவமா?”

“நான் கரக்டா தான்மா சொல்றேன். ஆமா, நீ எப்போவும் கர்ண பிரபுவோட டெரக்ட் வாரிசு மாதிரி, இல்லனா மதர் தெரேஸாவோட தூரத்து சொந்தம் மாதிரி இல்ல வேலை பார்ப்ப? சோஷியல் சேர்வீஸ்னு போவனு பார்த்தா கல்யாணம் பண்ணிக்க சரின்னு சொல்ற…. இது சரியில்லையே!!”

சில நாட்களாக இதை கூறியே வம்பிழுக்கிறான் வினோத். இன்றும் கூறவும், ஒரு அசால்டான முகத்துடன் அவனை எதிர் கொண்டாள் அன்பரசி. “இதையே சொல்லி சொல்லி, என்னை கடுப்பேத்துறத எப்போ தான் விடப்போறியோ தெரியல… நான் ஒண்ணும் அன்னை தெரேசா இல்ல. எனக்கும் கல்யாணம் குழந்தை குட்டினு ஆசை எல்லா இருக்கு.

அதனால, நான் எப்போ மாப்பிள்ளை பாருனு சொல்றேனோ அப்போ நீ தான் எனக்கு மாப்பிள்ளை பார்க்குற. சொல்லிட்டேன்.”

ஆம், சிறு வயதில் இருந்தே ஆசிரமத்தில் இருப்பதால், தனக்கென்று ஒரு குடும்பம் வேண்டும் என்பது அன்பரசியின் ஆசை. யமுனா இறந்தது முதற்கொண்டு அவளுக்கு இது மிகவும் தோண்ற ஆரம்பித்தது. என்ன தான் தாயாய் பிள்ளையாக பழகினாலும், வினோத்துக்கென்று தனியாக ஒரு குடும்பம் அமையும் காலம் வரும்.

அப்போது தனக்கும் ஒர் குடும்பம் வேண்டும் என அவள் எண்ணினாள். அதே போல, யமுனா அம்மாவின் முதல் திதி கொடுத்த அன்றே, அன்பரசி வினோத்திடம் கூறிவிட்டாள், “உனக்கு நான் தான் பொண்ணு பார்ப்பேன். அதே மாதிரி எனக்கு நீ தான் மாப்பிள்ளை பார்க்கனும்” என்று.

“ஹே…. நான் வேணும்னா உனக்கு மாப்பிள்ளை பார்க்கறேன். நீ தான் லவ்வுனா திரும்பிக் கூட பார்க்க மாட்ட! பட், அதுக்காக என்னையும் லவ் பண்ண விடாம நீயே பொண்ணு பார்க்குறது எல்லாம் ஓவர். சொல்லிட்டேன்!”

இதை கேட்டு அன்பரசியின் முகம் புன்னகை பூத்தது… “சரி சரி. லவ் பண்ணு வேணாம்னு சொல்லல. ஆனா, பொண்ண ஒரு தடவ கண்ணுல காட்டுப்பா! கல்யாணத்துக்காவது கூப்பிடுவீங்களா? இல்ல, நீங்களே பண்ணிப்பீங்களா?”

“ஹே ஹே… அதெல்லாம் ஒரு பொண்ணை பிடிச்சிருக்குனு தோணுச்சுனா உடனே உன்கிட்ட அப்ரூவல் வாங்க வருவேன். டோன்ட் வொரி”

இப்படியாக வேலை, ரூம், ஆசிரமம், பிற வேலைகள் என அவர்கள் வாழ்க்கை சென்றுக் கொண்டிருந்த வேளையில் தான் சூறாவளியாக வந்தான் ஜீவா. ஓர் இரவு பொழுது, மணி பத்தே முக்கால் இருக்கும். அப்போது தான் ரூம்மிற்க்கு கொண்டு வந்த பேப்பர்களை எல்லாம் திருத்தி முடித்துவிட்டு படுத்தாள் அன்பரசி.

அந்நேரம் பார்த்து அவள் செல்போன் ஒலித்தது. யாரென பார்த்தால், புது நம்பராக இருந்தது. யோசனையுடன் காதில் செல்போனை வைத்ததால், ஒரு பதற்றமான குரல் எதிர்புறத்தில் பேசியது.

“ஹே கனேஷ்… நான் ஜீவா பேசறேன்டா… நான் பேசறத மட்டும் கேளு இப்போ. என்னை யாரோ கடத்திட்டாங்கடா! நான் இப்போ மஹாபலிபுரம் கிட்ட இருக்கேன்னு நினைக்கிறேன். இங்க ஏதாவது சி ஷோர் ரிசாட் இருக்கான்னு பாருடா. அங்க தான் என்னை வெச்சுருக்காங்க போல. அப்படி தான்டா இங்க பேசிக்கிட்டாங்க.

என்னோட அப்பா அம்மா ரெண்டு பேருமே ஃபோன் எடுக்க மாட்றாங்க. எப்படியாவது இங்க வரப்பாருடா. இதுக்கப்புறம் நான் போன் பண்ண முடியுமான்னு தெரியல. நீயும் இந்த மொபைலுக்கு ட்ரை பண்ணாத… நான் மாட்டிப்பேன்! சீக்கிரமா வாடா…. எதோ சத்தம் கேக்குது… பை”

அவ்வளவு தான்!! கால் டிஸ்கனக்ட் ஆகியது. அன்பரசிக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை. இரண்டு நிமிடங்கள் கழிந்த நிலையில் தான் அவளுக்கு சூழ்நிலையின் தீவிரம் புரிய உடனே வினோத்திற்கு கால் செய்தாள்.

அன்பரசி தங்கி இருந்தது ஒரு லேடிஸ் ஹாஸ்டலில்… வினோத் அவன் அன்னை இறந்தது முதல் அவர்கள் இருந்த வாடகை வீட்டை காலி செய்துவிட்டு, ஒரு அப்பார்மென்டில் பேயிங் கெஸ்டாக குடி புகுந்தான்.

அதுவும் அவள் ஹாஸ்டலில் இருந்து பத்து நிமிடம் தான். அன்பரசியின் கால் வந்த வேளையில் ஆழ்ந்த உறக்கத்தின் பிடியில் இருந்த வினோத், காதில் செல்போனை வைத்துக் கொண்டே கண்களை திறக்காமல் பேசினான்.

“ஹே எதுக்கு நடு ராத்திரி டிஸ்டெர்ப் பண்ற?? என்னாச்சு??”

அவன் எரிச்சலை மதிக்காமல், தனக்கு வந்த தொலைப்பேசி அழைப்பை பற்றி கூறினாள். அரை தூக்கத்தில் இருந்த வினோத்துக்கு காதில் ஒழுங்காக எதுவும் விழவில்லை. “ஹே இன்னோரு வாட்டி சொல்லு.. எனக்கு புரியல…”

“ஹே எருமை! முதல்ல எழுந்து உக்காரு. நான் சொல்றத காதுல வாங்கு… யாரோ ஜீவானு ஒருத்தர் என்னை அவங்களோட பிரெண்டு கனேஷ்னு நினைச்சுட்டு பேசுனாங்க. அவங்க சொன்னது இது தான்…” என போனில் ஜீவா கூறியதை ஒப்பித்துவிட்டு, மீண்டும் தொடர்ந்தாள்.

“நாம இப்போவே கிளம்பி அங்க போகனும். சீக்கிரமா நீ இங்க ஹாஸ்டலுக்கு வா. நாம அந்த ரிசார்ட்டுக்கு போகலாம்.”

வினோத்துக்கு வந்ததே கோபம்! “ஹே லூசு… நாம போலீஸுக்கு சொல்லிடலாம். அவங்க பார்த்துப்பாங்க. நாம அங்க போறது சேஃப் இல்ல. புரிஞ்சுக்கோ?”

“நான் உன்னை வரியானு கேக்கல! போலாம்னு தான் சொன்னேன். எனக்கு தெரியாதா போலீஸ் கிட்ட சொல்லனும்னு? அதெல்லாம் அங்க போற வழியில பார்த்துக்கலாம். நீ இப்போ வரலனா நான் தனியா கிளம்பி போவேன். சொல்லிட்டேன்… என்ன வரியா இல்லையா??”

“வரேன்மா வரேன்… ஆனாலும் உனக்கு இவ்வளவு தில் இருக்க கூடாது. மாடர்ன் டே ஜான்சி ராணின்னு நினைப்பு மனசுல! முடியல உன் கூட!!!” திட்டிக் கொண்டே கிளம்பி, ஐந்தே நிமிடத்தில் அவள் ஹாஸ்டலின் முன் பைக்குடன் நின்றான்.

“பெட்ரோல் இருக்காடா? ரொம்ப தூரம் போகனும்…”

“ஹா எல்லாம் இருக்கு இருக்கு. நீ உக்காரு. டைம் ஆகுது” இப்போது அவனையும் பதற்றம் தொற்றியது. அவர்கள் இருந்தது தாம்பரத்தில். அங்கிருந்து போகும் வழியில் நூறை அழைத்து, போலீஸுக்கு விஷயத்தை கூற முயன்றாள்.

முதலில் சிக்னல் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தால் அவர்கள் பேசியது இவளுக்கு கேட்கவில்லை அல்லது, எதிர்காற்று வீசிய வேகத்தில் இவள் பேசியது அவர்களுக்கு கேட்கவில்லை.

சரி அங்கு போய் பார்த்துக் கொள்ளலாம் என எண்ணி வினோத்தை விரைவாக செல்லச் சொன்னாள். அவளுக்கு கூகுளில் அந்த ரிசாட்டிற்க்கு வழி பார்த்து, சொல்லும் வேலை வேறு!

ஒன்றரை மணி நேரத்தில் வர வேண்டியவர்கள், முக்கால் மணி நேரத்துக்குள்ளாகவே அங்கு சென்றடைந்தனர். வெளியிலிருந்து விரைவாக உள்ளே சென்று, அங்கு இருப்பவர்களின் பட்டியலை ரிசப்ஷனிஸ்டிடம் கேட்டான் வினோத்.

வார நாள் ஆனதால், பெரிதாக யாரும் இல்லை. இரண்டே வாடிக்கையாளர்கள் இருந்தனர் என்று கூறினாள் அந்த ரிசப்ஷனிஸ்ட். அதிலும் ஒருவர் தனியாக வந்த ஃபாரினர் என்றும், இன்னோரு வாடிக்கையாளர் தான் கூட்டமாக வந்திருக்கின்றனர் என்றும் கூறினாள்.

அவளிடம் விஷயத்தை சுருக்கமாக கூறி, அந்த கூட்டத்தோடு வந்தவரின் அறைக்கு அழைத்து செல்ல சொன்னாள் அன்பரசி. போலீஸுக்கு தகவல் அளித்துவிட்டு, செக்யூரிட்டி ஆட்களையும் கூட்டிக் கொண்டு எல்லோரும் அங்கே பதட்டமுடன் விரைந்தனர்.

அவர்கள் இருந்த காட்டேஜின் வெளியே நின்று கதவை தட்டினான் வினோத். அவன் அருகில் கையில் கத்தியோடு அன்பரசி…

‘போன ஜென்மத்துல சி.ஐ.டி. சகுந்தலவா பொறந்துருப்பா போல! இவளோட அலம்பல் தாங்க முடியல! கேட்டா சேஃட்டிக்காம்…’ வினோத்தின் எண்ணங்கள் இப்படியிருக்க, அன்பரசியோ கதவை திறந்தவன் முன் கத்தியை காட்டி, “ஹே எங்கடா கடத்தி வெச்சுருக்கீங்க?” என்று மிரட்ட, எதிரில் இருந்தவனோ பயந்து எல்லோரும் உள்ளே வர வழிவிட்டான்.

உள்ளே பார்த்தால், ஒரு ஆறேழு பேர் இருந்தனர். எல்லோரும் எழுந்து வந்தனர் இவர்களை பார்த்து. “மேடம் மேடம்… ஒரு நிமிஷம் சொல்றத கேளுங்க” எதிரில் இருந்தவன் பயந்து போய் கூறவும், அன்பு மீண்டும் கத்தினாள்.

“ஹே எங்கடா வெச்சுருக்கீங்க அந்த ஜீவாவை?? மரியாதையா சொல்லிடு. போலீஸ் வந்துட்டு இருக்கு இங்க. நீங்க தப்பிக்கவே முடியாது!” அன்பரசி கூறியதை கேட்டு எல்லோர் முகத்திலும் பீதி தென்பட்டது.

ஒருவன் மட்டும் முன் வந்து, “நான் தான் ஜீவா…” என்றான் ஆச்சரியமாக. திரும்பி அவனை பார்த்த அன்பரசி மற்றும் வினோத்திற்கு குழப்பம் அதிகமாகியது. மீண்டும் ஜீவாவே தொடர்ந்தான்.

“கொஞ்சம் நான் சொல்றதை கேளுங்க, ப்ளீஸ். கத்தியை கீழ போடுங்க.” அன்பரசி கத்தியை அங்கு இருந்த டேபிளில் வைக்கவும், ஜீவா விம் போட்டு நடந்ததை விளக்கினான்.

“ஆக்சுவலா இவங்க எல்லோருமே என்னோட பிரண்ட்ஸ். எனக்கு நாளைக்கு பேர்த்டே. அதுக்கு எனக்கு ஒரு ஸர்ப்ரைஸ் குடுக்கனும்னு இப்படி ஒரு பிளான் போட்டு, எனக்கே தெரியாம கடத்திட்டு வந்துட்டாங்க. இங்க வந்ததும் என்னை அந்த ரூம்முக்குள்ள அடச்சி வைச்சிட்டாங்க.

நான் உங்களுக்கு போன் பண்றப்போ அங்க தான் இருந்தேன். இதுல இந்த பிளானை என்னோட அப்பா, அம்மாகிட்டயும் சொல்லிட்டு நான் பண்ணா போன் எடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க, இந்த லூசு பசங்க.

இதோ நிக்கறானே இந்த கனேஷுக்கு தான் நான் ட்ரை பண்ணேன். தெரியாம அவசரத்துல உங்க நம்பர் டையல் பண்ணிட்டேன் போலுருக்கு. இந்த விஷயம் இப்போ தான் ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி தான் எனக்கே தெரியும்.

நானே கால் பண்ணலாம்னு…” அன்பரசியின் கோபமான முகத்தை பார்த்து நிறுத்தினான் ஜீவா. அவளோ இவன் பார்ப்பதை கவனிக்காமல், ஜீவாவின் நன்பர்களை ஒருவர் மாற்றி ஒருவர் கோபமாக முறைத்துக் கொண்டிருந்தாள்.

‘அப்பப்பா… என்ன கோபம் மேடமுக்கு… முகமே சிவந்து போச்சு!’ அவளையே சுவாரசியமாக பார்த்தான் ஜீவா.


அந்த கோபமான முகத்தோடு தான் அவன் இதயத்தில் அன்றைக்கு அடி எடுத்து வைத்தாள். அந்த இரவின் முடிவில் அவன் இதயத்தில் சிம்மாசனமிட்டு ராணியாக அமர்ந்தும் கொண்டாள், அவள் அறியாமல்! இன்று வரை ஜீவாவால் அவளை அதிலிருந்து அகற்ற முடியவில்லை!
 
Last edited:
Top