Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Marabu Veli Episode 26 Part 2

Advertisement

AshrafHameedaT

Administrator
அங்கேயோ அங்கை ராஜராஜனை கண்டுகொள்ளவே இல்லை , முழுக்க முழுக்க தில்லையுடன் இருந்தாள் அவரிடம் பேசிக் கொண்டு. ராஜன் ரதியை தூக்கிக் கொண்டு உறங்க அறைக்குள் சென்று விட்டான்.

ராஜலக்ஷ்மியாக “வாங்க அண்ணி தூங்கலாம்” என்று அவரை அழைத்து செல்ல,
கரிஷ்மாவை அழைத்த மனோ, விகாஸையும் ஸ்ருஷ்டியையும் தூங்க அனுப்பி விட்டவன்,

“அம்மு ஏன் ராஜன்க்கு ஆட்டம் காமிச்சிட்டு இருக்க, என்ன பிரச்சனை சொல்லு, உனக்கு தெரியாதது ஏதாவது எனக்கு தெரியலாம். ஏன் விஷயங்கள் வளர்ந்துட்டே போகுது? ராஜன் கிட்ட எதுவும் பேசணுமா? அவன் ரொம்ப பண்றானா?” என்னவோ பஞ்சாயத்து ஆஃபிசரின் தோரணையோடு.

அன்பழகன் அவனை பிடித்து வாங்கியிருந்தார், நீ அங்கையை கவனிப்பது இல்லை என்பது போல, அதனால் இந்த பேச்சு. மனோ அப்பாவிற்கு அடங்கின பிள்ளை மட்டுமல்ல, பயந்த பிள்ளையும் தானே!

“சொல்ற மாதிரி எதுவுமில்லை” என்றாள் அலட்சிய பாவனையில்.
“கல்யாணமாகி ரெண்டு வருஷம் தனியா இருந்தீங்க, சேர்ந்து வாழ ஆரம்பிச்ச பிறகும், முட்டிகிட்டு மோதிகிட்டு இருக்கீங்க. இப்போ என்ன பிரச்சனை? அப்பா ரொம்ப கவலைப்படறார். உனக்கு பிடிக்காதுன்னு தெரியும். ஆனாலும் அப்பா சொன்னார்ன்னு தான் பேசறேன்” என்று தெளிவாய் சொல்லி விட்டான்.

ஏனென்றால் அவளின் பாவனையே சொல்லியது “உன் வேலையை பார்த்துட்டு போடா” என்பது போல.
அப்பா என்றதும் தான் பதில் பேசினாள், “என்ன பிரச்சனை வேணா இருக்கட்டும், அதை நான் யார் கிட்டயும் சொல்லணும்னு இல்லை. அப்பாக்கிட்ட சொல்லு. என்னால என் பிரச்னையை தீர்க்க முடிஞ்சா சரி, இல்லை அது பிரச்சனையாவே இருந்துட்டு போகட்டும். மத்தவங்க அதை தீர்க்கணும்னு இல்லை” என்றாள் திமிராய்.

அங்கையின் பதிலில் ஈர்க்கப்பட்டவனாய், “வாவ்” என்று நினைத்து “அம்மாடி, நானெல்லாம் என்ன கலெக்டர்க்கு படிச்சு கிழிச்சேன். இவ பாவமா ராஜன் பாவமான்னு நம்மளால இதுவரை கண்டு பிடிக்கவே முடியலையே” என்று மனதிற்குள் கௌண்டர் அவனுக்கு அவனே கௌண்டர் கொடுத்துக் கொண்டான்.

“இது தான் அண்ணா லாஸ்ட் உனக்கு, அப்பாக்கு, அம்மாக்கு, எல்லோருக்கும். எனக்கு அட்வைசும் பண்ணக்கூடாது, எப்படி நடக்கணும்னு டைரக்ஷன்ஸ்சும் குடுக்க கூடாது”

“நான் வந்து சொன்னேனா எங்களுக்கு சண்டைன்னு இல்லை ராஜன் சொன்னானா. அவங்க அவங்க வேலையை அவங்க அவங்க பார்த்தா போதும்”
அப்போதும் மனோ விட்டேனா என்று “உனக்கு அங்க எதுவும் அட்ஜஸ்ட் பண்ண முடியலையா, அந்த சூழ்நிலை, வில்லேஜ் லைஃப் எதுவும் பிடிக்கலையா, உன்னால அங்க இருக்க முடியலையா சொல்லு” என்றான் கனிவாய்.

அவனை சிறிது நேரம் பார்த்தவள் “பிடிக்கலைன்னா என்ன பண்ணுவ?” என்றாள்.

“தெரியலை, இனிமே தான் யோசிக்கணும். ஆனா ஏதாவது பண்ணுவேன்” என்றான் இதுவரை இருந்த இலகுத்தன்மை மறைந்து.
அவளுமே தீவிரமான குரலில் பேச ஆரம்பித்தாள். “எனக்கு பிடிக்கலைன்னா ரெண்டு சாய்ஸ் தான் இருக்கு. ஒன்னு ராஜனை நான் பிரியணும் இல்லை ராஜன் அங்க இருந்து வீட்டை விட்டு வெளிய வரணும், இது எதுவுமே நடக்காது. அதனால் இனி நீ இந்த கேள்வியை கேட்க கூடாது”

“இப்படி இன்னொரு தடவை பேசினா, நான் இங்க வர்றதை பத்தி யோசிக்க வேண்டி இருக்கும். நீயும் தெரிஞ்சிக்கோ அப்பா கிட்டயும் சொல்லு” என்று கடினமான குரலில் சொல்ல,

“ஹேய், என்ன இது, எதுக்கு இவ்வளவு கோபம்?” என்று வெகுவாக அங்கையை மனோ சமாதானம் செய்தான்.

“நீ கலக்டரா இருக்கலாம், கரிஷ்மாவோட புருஷனா இருக்கலாம், உங்கப்பாவோட பையனா இருக்கலாம், ஆனா எனக்கு நீ அண்ணன் மட்டும் தான். இனி என்னை பத்தி ராஜன் பத்தி நீ யோசிக்கக் கூடாது. ஏன்னா நாங்க எங்க சண்டை தொடர தான் செய்வோம், அவனும் ஷார்ப் நானும் ஷார்ப் அப்போ இப்படி தான் இருப்போம்”

“நாங்க ஒருத்தரை ஒருத்தர் எங்களை ப்ளீஸ் பண்ணிக்கணும்னு நினைச்சதே இல்லை. விட்டு குடுத்து வாழற வாழ்க்கையெல்லாம் எங்களுக்கு வேண்டாம். நாங்க நாங்களா இருக்குற வாழ்க்கை தான் வேணும்”

“நீ அண்ணி பின்ன சுத்துற மாதிரியோ, இல்லை அண்ணி உன் ஒரு ஒரு பார்வையில எல்லா வேலையும் செய்யற மாதிரியோ, நானும் ராஜனும் கிடையாது. அவன் என் பின்ன சுத்த மாட்டான், அவன் கழுத்து சுளுக்கற அளவுக்கு என்னை பார்த்தாலும் எனக்கு செய்ய தோணினா தான் அந்த வேலையை செய்வேன்”

“அதே மாதிரி தான் அப்பாவும், நம்ம முன்னே இல்லைன்னாலும் அம்மா பின்ன தான் சுத்துவார். அம்மாவும் அப்பா பேச்சை மீறவே மாட்டாங்க, தனியா இருக்கும் போது கூடராஜன் லவர் பாய் எல்லாம் கிடையாது”

“சின்ன வயசுல இருந்தே அவனுக்கு நிறைய நிறைய ரெஸ்பான்சிபிலிடீஸ். பொறுப்பாவே இருந்துட்டான், அவனுக்கு அவனோட வீடு, அவனோட ஆளுங்க, அவனோட பழக்க வழக்கம், பாரம்பர்யம் எல்லாம் முக்கியம். எனக்கு அது என்னன்னு கூட தெரியாது”

“அவனை சுத்தி ஒரு வேலி போட்டுட்டு இருக்கான். அதுல இருந்து வெளில வர மாட்டான். சில நேரம் நான் அந்த வேலிக்கு உள்ள இருப்பேன் பல நேரம் நான் வெளில இருப்பேன்”

“எப்போ எப்படி இருப்பேன்னு சொல்ல முடியாது. ஆனா எப்படி இருந்தாலும் அவனோட தான் இருப்பேன்”

“இவ்வளவு பேசற நீ, எதுக்கு மாசக் கணக்குல டெஹ்ராடூன் போன ராஜனை விட்டு”

“அண்ணா டேய், அவன் விரதம் இருந்தான் டா, நீ பார்த்த தானே அவன் மேல நான் எப்படி தூங்கினேன்னு. அவனை விரதம் முடியற வரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு போனேன் போதுமா” என்று சொல்லிவிட,

மனோவின் முகம் கவலைகள் எல்லாம் போய் மலர்ந்து விட்டது.
“கூட சில பிரச்சனை வந்தாலும் அதை கூட இருந்து பார்த்திருப்பேன். அண்ணா டேய், இந்த கம்பனி ரகசியத்தை வெளில சொன்ன தொலைச்சிடுவேன்”

“சொல்லுவேனே” என்று குதூகலமாய் மனோ சொல்ல,

“யார் கிட்ட வேணா சொல்லிக்கோ, எனக்கு ஒன்னுமில்லை. ஆனா ராஜன்கு தெரியக் கூடாது. அவனுக்கு இந்த பேச்செல்லாம் வெளில பேசறது ஈஸியா எடுக்க மாட்டான். முகத்தை தூக்கி வெச்சிக்குவான். நாம இப்படி, அப்படி, நம்ம மரபு இது நம்ம பண்பாடு இது நம்ம கலாசாரம் இது அதுன்னு என்னை கொன்னு எடுப்பான்”

“உனக்கு தெரியுமா நான் அவனை மிரட்ட என்ன செய்வேன்னு? ரொம்ப பேசின பப்ளிக்ல உன்னை கிஸ் பண்ணிடுவேன்னு சொல்லுவேன்” என சொல்ல,
மனோ அப்படி சிரித்து விட்டான்.

“அதனால இனி யாரும் எங்க வாழ்க்கையை பத்தி பேசக் கூடாது. போ, போய் புள்ள குட்டியை தூங்க வை, கிளம்பு முதல்ல நீ” என்றாள் அதிகாரமாக.

“ம்ம், டைலாக் தூள் பறக்குது” என்று சிரித்தபடியே மனோ எழ,

“நீ இப்போ போகலை, அடுத்தது என் கைல இருந்து ஏதாவது உன்னை பார்த்து பறக்கும், அப்புறம் அண்ணி வந்து என் புருஷனை அடிக்காதன்னு கண்ணை கசக்கிட்டு நிற்க போறாங்க, பார்த்துக்கோ!”

மனோவிற்கு அப்படி ஒரு சிரிப்பு பொங்கி பொங்கி.
ராஜராஜனிற்கு மனோவின் சிரிப்பு சத்தம் நன்கு கேட்டது. ஏனென்றால் எல்லோர் அரை கதவும் மூடி இருக்க அவன் இருந்தது மட்டுமே திறந்து இருந்தது.

“சரி, நீ போ. நான் கதவை எல்லாம் லாக் பண்ணி செக் பண்ணனும்”

“என்ன? என்கிட்டே பேசினதை அப்பா கிட்ட ஒப்பிக்கணுமா?”

“சே, சே, தேவையில்லை, ரெகார்ட் பண்ணிட்டேன். அனுப்பிடுவேன், நான் சொன்னா அப்பா நம்பறதேயில்லை. நான் உன்னை சரியா கவனிக்கலை சொல்றாங்க”

“அண்ணா டேய்” என்று அவனை அடிக்க வர,
“ராஜன், இவ என்னை அடிக்க வர்றா” என்று மனோ கத்தினான்.

“டேய் லூசு அண்ணா, வாயை மூடு” என்று அவள் சொல்லும் போதே அரை வாயிலிற்கு ராஜன் வந்து விட்டான்.

“ராஜன் இவ என்னை அடிக்க வர்றா?” என்றான் அவனை பார்த்து மீண்டும்.

ரதி உறங்கியிருக்க, பதில் சொல்லாமல் அவன் வாயிலில் வந்து கதவில் சாய்ந்து கை கட்டி அவர்களை பார்த்து நின்றான் தோரணையாய்.

அவனின் தோரணையில் ஈர்க்கப் பட்டவள் அதனை காண்பிக்காமல் “என்ன? என்ன லுக்கு? இங்க என்ன அடி தடி ஷோ காமிக்கறோமா, போங்க உள்ளே. எங்கண்ணா இமேஜ் டேமேஜ் ஆகறதை நீங்க பார்க்க வேண்டாம்” என்றாள்.
பதில் சொல்லாமல் அவன் அப்படியே நிற்க,

“அண்ணா டேய், நாளைக்கு அடி வாங்கிக்கோ, இப்போ போ” என்று பெரிய மனது கொண்டு சொல்வது போல சொல்ல,

“நாளைக்கு ஃபுல் டைம் இவளோடவே இருங்க, தனியா விடாதீங்க” என்று ராஜனை பார்த்து மனோ சொல்ல,

“அதெல்லாம் நீ பேசக் கூடாது” என்றாள் அங்கை.
“ஏன்? ஏன் பேசக் கூடாது?” என்று மனோ நிற்க,

“ம்ம், வருஷத்துக்கு ரெண்டு ஹனி மூன் போறல்ல. என்னை அனுப்பினியா நீ, எங்கயும் அனுப்பலை, அதனால் அவர் என்னை தனியா விடாம என்னோடவே இருக்குறதை பத்தி நீ பேசக் கூடாது”

“ம்ம், இதை நீ என்னை பார்த்து கேட்க கூடாது. உன் வீட்டுக்காரரை பார்த்து கேளு” என்று மனோ போட்டுக் கொடுக்க,
“அச்சோ” என்று மானசீகமாக தலையில் கை வைத்தான் ராஜன்.

“அவரை ஏன் கேட்கணும்?” என்றான் புரியாமல்.
“பலமுறை சொல்லிட்டேன், ஒரு முறை டிக்கட் கூட போட்டுட்டேன். அப்போ கூட அசையலை. எப்பவும் ஏதாவது ஒரு காரணம் அந்த வேலை இந்த வேலைன்னு”

“உனக்கு சர்பரைஸ் கொடுக்கன்னு சில முறை சொன்னேன். அப்புறம் இவர் ஒத்துக்காம உன்கிட்ட சொல்லிட்டு, இவர் வரலைன்னா நீ அப்செட் ஆகிடுவன்னு சொல்லலை” என்று முழுவதும் சொல்லிவிட,

“பத்த வெச்சிட்டியே பரட்டை” என்று மனதிற்குள் மனோவை ராஜன் வசைபாடினான். ஆனாலும், அப்போதும், ராஜன் அசையவில்லை, பேசவில்லை, எதுவும் செய்யவில்லை, நின்றது நின்றபடி நின்றான்.

அங்கை நின்று அவனையே பார்க்க ,
எதையும் எதிர்கொள்ளும் பாவனையில் நின்றான்!

எண்ணமும் எழுத்தும்

மல்லிகா மணிவண்ணன்
 
Top