Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MALARE MOUNAMAA? - 26

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 26


இரு வருடங்கள் கழித்து,

BREAKING NEWS:

"
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் விக்கி என்ற விநாயகம் மற்றும் மத்திய அமைச்சர் சகாயம் இருவருக்கும் கோவை குண்டு வெடிப்பு மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்பு - காவல் நிலையத்தில் புகார்.”


அனைத்து ஊடகங்களிலும் முக்கிய செய்தியாக ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தது.

மத்திய அமைச்சர் ஒருவர் சம்பந்த பட்டிருப்பதால், தேசிய ஊடகங்களும் அதையே தான் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தது.

எதிர்கட்சி, ஆளும்கட்சி மற்றும் சாமானிய நபர்களுடன் காரசாரமான விவாதங்களும் ஊடகங்களில் நடந்துக்கொண்டிருந்தது.

இதற்கு நடுவில் ஆளும் கட்சிக்கு சொந்தமான தொலைக்காட்சியில் விக்கியின் பேட்டி ஒளிபரப்பானது.

"எங்கள் கட்சியின் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியில் எதிர்க்கட்சியினர் கொடுத்த பொய்யான புகார் இது. வழக்கு நடக்கும் போது உண்மை வெளிவரும். புகார் அளித்தவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். எங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றத்தை களைந்து கட்சியின் பெயரை மீட்டெடுப்போம்.. அது வரை நான் சட்டமன்றத்திற்கு செல்ல மாட்டேன். நன்றி."

பேட்டி முடித்து காரில் ஏறி செல்வது வரை அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

'அமைச்சர் சகாயத்துடன் நேர் காணல் - இன்று இரவு 9 மணிக்கு உங்கள் *****டிவியில் காணத் தவறாதீர்கள்.' என்று விக்கி பேட்டியின் போதே அதே தொலைக்காட்சியில் கீழே முக்கிய செய்தியாக சென்று கொண்டிருந்தது.

அந்த தொலைக்காட்சியையே வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் சமீரா.

இப்பொழுது அவள் தேசிய அளவில் இருக்கும் ஊடகம் ஒன்றிற்கு தமிழ் நாட்டிலிருந்து பணி புரிகிறாள்.

அன்று சமர்த்திடம் பேசிவிட்டு தன் தந்தையுடன் திருச்சி புறப்பட்டு சென்றவளை இனிமையாக வரவேற்று அரவணைத்தது காயத்ரியின் குடும்பம்.

கோதையின் துடுக்குத்தனம் சமீராவிற்கு நிரம்ப பிடித்தது. கோவிந்த் சொன்னது போல் வாய் ஓயாமல் தான் பேசிக்கொண்டிருந்தாள் கோதை. அவளுடன் கழிந்த பொழுதுகளில் சமீராவின் மௌனம் கூட சில சமயங்கள் கட்டவிழ்ந்தது.

கண்ணன் அவளுக்கு தன் மனைவி பவித்ராவின் புகைப்படத்தை காண்பித்து, தினம் ஒரு கதை சொன்னார். அதில் இருந்த மனைவி மீதான காதல் சமீராவின் மனதை பிசைந்தது.

குழந்தையை தொலைத்து, அதனால் தன் வாழ்க்கை துணையை இழந்து, இத்தனை காலங்கள் ஆனாலும், தன் மனைவி பற்றி பேசும்போது கண்ணில் தெரியும் பரவசம், ஏதோ இன்று தான் நடந்தது போல் இருந்தது.

அதைப்பார்ப்பதற்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது சமீராவிற்கு.

அவளுக்கு அவரின் பவித்ரா மீதான பிரியம் சற்று பொறாமையை கூட கொடுத்தது. தானும் இதுபோன்ற பிரியத்தை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சமர்த்திற்கு தர வேண்டும் என்ற ஆவலும் கூடவே எழுந்தது.

இங்கு வந்ததும் அவளின் வாழ்வு முறை சற்றே அழகானதாக மாறியது. அலைபேசி மூலம் சமர்த்திடம் காதல் பயிரை வளர்த்துக்கொள்ளவும் மறக்கவில்லை.

கோவிந்தும் தினமும் அவளை தொடர்புக்கொண்டு அவர்களின் உறவை மேலும் வளர்த்தான்.

எது எப்படி இருந்தாலும் அவள் இன்னும் 'சமீரா' வாகவே இருந்தாள். 'மீரா' வாக மாற சொல்லி அங்கு யாருமே அவளை வற்புறுத்தவில்லை.

அவளை அவளாகவே ஏற்றுக்கொண்ட குடும்பத்தின் மீது பெருகிய பாசம் அவளை இளக்கி, அவ்வப்பொழுது அவளின் மௌனத்தையும் சிறிதளவு கலைத்தது.


அங்கு வந்து ஒரு மாதங்கள் கடந்திருந்த நிலையில் தான், தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள் பனிரெண்டு பேர்களுடன் சேர்ந்து அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதை செய்திகள் மூலம் அறிந்துக்கொண்டாள் சமீரா.

அவளின் பத்திரிகை அறிவு நடந்ததை அறிந்துக்கொள்ள தூண்டியது.

அடி முதல் நுனி ஆழம் வரை தூத்துக்குடியில் நடந்தவற்றை ஆராய்ந்து அறிந்துக்கொண்டாள்.

அந்த ஆலையினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதை இழுத்து மூட அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினருடன் இணைந்து நடத்திய போராட்டம், அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவை கொடுத்திருந்தது.

அனைத்து ஊடகங்களிலும் தொடர்ந்து இதனை விவாத பொருளாக்கி தினம் தினம் அந்த கட்சியை கேலி கூத்தாக்கி கொண்டு இருந்ததை ஏற்கனவே அறிந்திருந்தாள் சமீரா.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிக்கு அந்த ஆலையில் இருந்த பெரும் பங்குகள் தான்.

அதைப் பற்றி எந்தவிதமான தகவல்கள் எங்குமே பகிரப்பட்டு இருக்கவில்லை. அதை மட்டும் ஊடகங்கள் அடக்கியே வாசித்தது.

சமீரா போன்ற ஆர்வம் மிக்க பத்திரிக்கையாளராகள் மட்டுமே அறிந்த அந்த தகவலை அவள் உட்பட யாருமே வெளியிடவில்லை.

பத்திரிக்கைகளுக்கு என்று ஒரு சுதந்திரம் இருப்பதைப்போல தொழில் நடத்துவோருக்கு என்று இருந்த சுதந்திரத்தில் தலையிட அவளுக்கு விருப்பம் இல்லை.

ஆனாலும் அரசாங்க விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் நடக்கும் எந்தவிதமான தொழில்களையும் யார் நடத்தினாலும் அதை தட்டிக் கேட்க வேண்டும் என்பதைப் புரிந்தவள், அந்த ஆலையில் இருக்கும் பங்குகள் யார் வசம்? என்ற தலைப்பில் பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பினாள். சமீர் என்ற பெயரில் தான் எழுதி அனுப்பினாள்.

ஆனால் அது பிரசுரம் தான் ஆகவில்லை. இப்பொழுது அவள் எந்த பத்திரிகை நிறுவனத்திலும் வேலையில் இல்லாததாலோ, என்னவோ அவள் அனுப்பிய எந்த தகவலும் பிரசுரம் ஆகவில்லை.

இன்னும் கொஞ்சம் தகவல்கள் சேர்க்க தூத்துக்குடிக்கு சுற்றுலா என்ற பெயரில் தந்தை கண்ணனுடன் கிளம்பிச் சென்றாள்.

அங்கு அவளுக்கு நிறைய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன.
 
விக்கி தான், எதிர்க்கட்சியினர் என்ற போர்வையில் அவனுடைய ஆட்களை விட்டு சட்ட மன்ற உறுப்பினரை கொல்ல திட்டமிட்டு, அவர் மட்டும் இறந்தால், கட்சியின் மேல் பரிதாப அலைகள் வீசாது என்ற காரணத்தை கூறி அப்பாவி பொதுமக்கள் பத்து பேரை தீர்த்துக்கட்ட சொன்னதும் அவன் தான் என்பது அவளுக்கு தெரியவந்தது.

அவனின் விசுவாசத்தை பெற அவனுடைய ஆட்கள் மேலும் இருவரை போட்டு தள்ளியிருந்ததையும் அவள் தெரிந்துக்கொண்டாள்.

காவல்துறைக்கு தகவல் தெரிவித்தாலும் எதுவும் நடக்காது என்ற நிதர்சனத்தையும் புரிந்துக்கொண்டாள். ஏனென்றால் இவளுக்கு கிடைத்த இந்த தகவல்கள் எல்லாம், மிகவும் எளிதாக கிடைத்தது.

கண்டிப்பாக இந்த தகவல்கள் காவல் துறையினருக்கும் தெரிந்திருக்கும். ஆனாலும் அவர்கள் நடவடிக்கை எதுவுமே எடுக்காதது குறித்து, அவளுக்கு வருத்தம் தான் ஏற்பட்டது.

எதையுமே செய்ய இயலாமல் திரும்பவும் திருச்சிக்கே வந்து சேர்ந்தனர்.

சில நாட்கள் கழித்து, தூத்துக்குடி இடை தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் “விக்கி என்ற விநாயகம் பி.எ. போட்டி” என்ற முக்கியச் செய்தியின் மூலம் தெரிந்து கோபமானாள் சமீரா.

படிப்பின் வாசம் அறவே அற்றவன் பி.எ. பட்டதாரி என்ற பட்டத்துடன் விக்கி என்ற ரௌடிக்கு விநாயகம் என்று புதிதாக நாமகரணம் சூட்டப்பட்டு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும் தந்தது ஆளும் கட்சி.

இதையெல்லாம் பார்த்து மெளனமாக கோபப்பட தான் முடிந்தது சமீராவினால்.

அவளின் குடும்ப பிரச்சினைகள் அவளை சூழ்ந்துக்கொண்டதால் அவளால் விக்கியின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

நடவடிக்கை எதுவும் எடுக்கவே முடியாது என்பது வேறு விஷயம் தான், ஆனாலும் அதை முயற்சித்து கூடப் பார்க்காதது குறித்து வருத்தம் தான் அவளுக்கு.

சமர்த்தின் அன்னை லட்சுமிக்கு சமீரா அவர்களின் மருமகளாக வருவது அறவே பிடிக்கவில்லை. அதை சமர்த்திடம் திண்ணமாக கூறியும் இருந்தார். அவரை சமாதானம் செய்வதுக் குறித்து நிறைய முயற்சிகள் எடுத்தான் சமர்த்.

பலன் என்னவோ பூஜ்யம் தான்!!

சமர்த்தின் அலுவலக வேலைகள் அவனை சூழ்ந்ததும், சமர்த்தின் அன்னையை சமாளிக்கும் பொறுப்பை ஏற்றது, கோவிந்த். இடையிடையே சமர்த்தும் அவனின் பொறுப்பை ஏற்கத்தான் செய்தான்.

சமீரா சமர்த்தின் அன்னையை சமாதானம் செய்ய முயற்சிக்கவேயில்லை. எங்கே ஏதாவது செய்து அவரின் வெறுப்பை அதிகமாக சம்பாதித்துவிடுவோமோ என்ற பயம் அவளிடம் அறவேயில்லை.

அவளின் மனம் அவரை சமாதானம் செய்ய சம்மதிக்கவில்லை. அதுமட்டுமில்லை அவளுக்கு கண்ணனை தந்தையாக மிகவும் பிடிக்க ஆரம்பித்தது. அவருடன் சில நாட்கள் அமைதியுடன் கழிக்க விரும்பினாள். தந்தை இப்ராஹீமை கண்ணனின் பாசத்தில் கண்டாள் சமீரா.

இத்தனை நாட்கள் குடும்ப உறவுகளே இல்லாமல் இருந்தவள், சமர்த்தின் மூலம் கிடைத்த உறவுகளை மிகவும் நேசித்தாள். அந்த உறவுகள் தான் தன்னுடைய உண்மையான உறவினர்கள் என்று தெரிந்ததும், அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அதற்காக அவள் இப்ராஹீம் மற்றும் பேகத்தை என்றுமே மறக்கவில்லை.

அவளைப் பொறுத்தவரை அவளுக்கு பெற்றவர்கள் என்றால் அது இப்ராஹீம் மற்றும் பேகம் மட்டுமே!!

அவள் திருச்சிக்கு வந்து ஆறு மாதங்கள் கடந்திருந்தது.

அவ்வப்பொழுது, தாய் தந்தையுருடன் அங்கு வந்து சென்றான் கோவிந்த். சில சமயம் அவர்களுடன் இணைந்து சமர்த்தின் அன்னை லட்சுமியும் வந்து சென்றார்.

அவருக்கு கண்ணனை மிகவும் பிடிக்கும். அவரை பார்ப்பதற்காகவே வந்து சென்றார் லட்சுமி.

அதேப்போல சமீராவை கண்ணனின் மகளாக பார்ப்பதற்கு, லட்சுமிக்கு குறையாக இருக்கவில்லை. அவளை தனது மருமகளாக வர விடுவதில் தான் பெரும் குறையை கண்டார்.

கண்ணனுக்கும் லட்சுமியின் வருகை சிறிது உவகையை தான் தந்தது. என்றாவது தன் மகளை லட்சுமி ஏற்றுக்கொள்வார் என்று மிகுந்த நம்பிக்கையுடன், அவர் சொந்தங்களுடன் அளவளாவி மகிழ்ந்தார்.

இதற்கு நடுவில் காயத்ரி தன் பெண் கோதை மற்றும் கோவிந்தின் திருமணம் குறித்து சுமித்ராவிடம் பேச ஆரம்பித்தார்.

சுமித்ராவும் குடும்பத்தினருடன் கலந்து அந்த மாத இறுதியில் திருமண நிச்சயத்தை செய்து அதற்கு வரும் அடுத்த முகூர்த்தத்தில் திருமணத்தை நடத்த திட்டமிட்டார்.

குடும்பத்தில் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. கோவிந்த்தின் அக்கா நப்பின்னைக்கு திருமணம் முடிந்து சில வருடங்கள் ஆகியிருந்தது. அதற்கு அடுத்து குடும்பத்தில் வரும் திருமணத்தை, அவர்கள் ரொம்பவும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

அதிலும் தன் தங்கை கிடைத்தால் தான் திருமணம் என்ற உறுதியுடன் இருந்த கோவிந்தின் மனது போலவே சமீராவும் அவர்களுடன் இருப்பது கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்தது. அதனால் திருமண நிகழ்வுகளை பட்டியிலிட ஆரம்பித்தனர்.

அவர்களின் மகிழ்ச்சியை குலைப்பது போல், "இப்போதைக்கு இந்த கல்யாணம் நடக்கறதுல நேக்கு விருப்பமில்லை!!" என்றான் கோவிந்த்.

காரணம் கேட்ட குடும்பத்திற்கு, ‘தங்கையின் வாழ்வு சீராகாமல் தன்னுடைய வாழ்வில் திருமணம் இல்லை!!’ என்று தெரிவித்தான் கோவிந்த்.

அவனின் முடிவை கேட்டதும் குடும்பத்தினர் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

சமர்த் அவனிடம் இந்த முடிவை மாற்றிக் கொள்ள சொன்னான். குடும்பத்தினரின் வெறுப்பு சமீராவிடம் திரும்பும் என்று அவன் எவ்வளவோ எடுத்து சொல்லியும், கோவிந்த் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள மறுத்தான்.

சமீராவும் கோதையிடம் பேசினாள். கோதையோ,

“மன்னி, நேக்கு அவர்ட்ட பிடிச்சதே குடும்பத்து மேல அவர் காட்ற அக்கறையும், பிரியமும் தான். அவரோட பொறுப்புணர்ச்சியும் ரொம்ப பிடிக்கும். அதையெல்லாம் பார்த்து தான் நேக்கு அவர் மேல காதல் வந்ததே!! சமர்த் அண்ணாக்கிட்டயும் இந்த குணங்களை நீங்கப் பார்க்கலாம்.!!

நானும் அவரும் கலந்து பேசி தான் இந்த முடிவை எடுத்திருக்கோம். கண்டிப்பா நல்ல பலன் கிடைக்கும். நமக்கு தேவை கொஞ்சம் பொறுமை!!” என்றதுடன் முடித்துக்கொண்டாள் கோதை.

சின்னப்பெண் என்று நினைத்திருந்தவளுக்குள், காதலன் மேல் இருக்கும் புரிதலைப் பார்த்து பிரமித்து தான் போனாள் சமீரா.

சமர்த் பயந்ததுப் போல் கோவிந்த்தின் அக்கா நப்பின்னையின் கோபத்தை சம்பாதித்து இருந்தாள் சமீரா.

நேரடியாக தன்னுடைய வெறுப்பை காட்டவில்லையே தவிர மறைமுகமாக காட்டிக்கொண்டிருந்தாள் நப்பின்னை.

சுமித்ரா எடுத்துச்சொல்லியும் தன்னுடைய கோபத்தை மாற்றிக் கொள்ள முயலவில்லை நப்பின்னை.

மேலும் ஆறு மாதங்கள் கடந்த நிலையில் சமீராவிடம் முழுமையாக பேச்சை நிறுத்தியிருந்தாள் நப்பின்னை. தம்பி வாழ்வை குலைக்க வந்தவளாகவே தான் சமீராவை பார்த்தாள் நப்பின்னை.

கோவிந்தின் முடிவில் ஏதும் மாற்றம் இருக்கவில்லை.

சமர்த்தின் தாய் லட்சுமியிடம் அனைவருக்கும் கோபம் இருந்தாலும் அவரிடம் சமர்த் – சமீரா திருமணத்தை வற்புறுத்தவில்லை. அதுவே அவருக்கு ஒரு வித குற்ற உணர்வைக் கொடுத்தது.

நடப்பதை கவனித்துக் கொண்டிருந்த லட்சுமி தான், என்ன முடிவெடுப்பது என்று சில நாட்கள் தவித்தார்.

பின் எதையோ முடிவு செய்தவராக சொந்தங்களை அழைத்து பேசினார். கண்ணனையும் சமீராவையும் காஞ்சீபுரத்திற்கு வரவழைத்தார்.

"கண்ணாண்ணா, உங்க பொண்ண எங்காத்துக்கு மாட்டுப்பெண்ணாக்கிக்கறேன். சமர்த்ட்டயும் பேசிட்டேன்." என்றவர் பின் தன் மன்னியிடம் திரும்பி, "சுமி மன்னி நீங்க நம்ம கோவிந்தா - கோதை கல்யாண வேலையைப் பார்க்க ஆரம்பிங்கோ!! கொழந்தேள் ரெண்டு பேரும் ரொம்ப நாளா காத்துண்ட்ருக்கா. முதல்ல அவா கல்யாணத்தை முடிச்சிடலாம்."

"இல்ல அத்தை, முதல்ல என் தங்க(தங்கை) கல்யாணம் ஆகட்டும். அதுக்கப்பறம் தான் நேக்கு கல்யாணம்." என்றான் கோவிந்த்.

"என்னடாப்பா நோக்கு என் மேல நம்பிக்கை வரலியோ? சரி விடு!! யார் கல்யாணம் முன்னாடி நடந்தாத்தான் என்ன?" என்ற லட்சுமி, தன் அண்ணன் கிருஷ்ணனிடம் பேச ஆரம்பித்தார்.
"அண்ணா, அடுத்த முகூர்த்தத்துலயே ஒரு நல்ல நாள் பாருங்கோ! சமர்த் - மீரா கல்யாணத்தை முடிச்சுடலாம். ஆனா, நேக்கு ஒரே ஒரு நிபந்தனை தான்!!" என்று நிறுத்தி அனைவரையும் பார்த்தார்.

"என்ன அத்தை அந்த நிபந்தனை?"

"இப்போ கொஞ்சமானும் அத்த மேல நம்பிக்கை வர்றதா கோவிந்தா?"

"அத்தை ப்ளீஸ் சொல்லுங்கோ!!" என்றான் கோவிந்த்.

"நேக்கு, சொந்தங்களை அழைத்து பந்தக்கால் நட்டு, விரதமிருந்து, மந்திரங்கள் ஓத நாமப் பண்ற கல்யாண முறைல அவா கல்யாணம் நடக்கறதுல விருப்பமில்லை. மீராவ அதெல்லாம் செய்யவைக்க, நேக்கு சுத்தமா பிடிக்கவும் இல்ல. மனைல உட்கார்ந்துண்டு அவளை தாரம் வார்த்துக் கொடுக்கிறதை எல்லாம் என்னால பார்க்கவே முடியாது.

இத சொல்றதுனால என் மேல உங்க எல்லாத்துக்கும் கோபம் வரலாம். பரவாயில்லை அதுல நேக்கு வருத்தமில்லை!! மீராக்கு எப்படி நம்ம ஆத்தை புரிஞ்சுண்டு நடந்துக்க நாள் ஆகுமோ, அப்படித்தான் மீராவை புரிஞ்சுக்கறதுக்கு நேக்கும் நாளாகும்.

இதுக்கு ஒரே வழி தான் இருக்கு. அது தான் என்னோட நிபந்தனை கூட. அவாளுக்கு பதிவு திருமணம் தான் பண்ணணும்ங்கறது தான் என்னோட நிபந்தனை."

"அத்தை!!" என்று சொல்ல ஆரம்பித்த கோவிந்த்தை நிறுத்தினார் லட்சுமி.

"கோவிந்தா, சித்த இரு நான் முடிச்சுடறேன். அடுத்த முகூர்த்தத்துலேயே நோக்கும் கோதைக்கும் கல்யாணம். ரெண்டு தம்பதிகளையும் சேர்த்து வச்சு ஒரே கல்யாண ரிசப்ஷன்!! இது தான் என்னோட நிபந்தனையே!! இதுக்கு நீங்க யாரும் மறுக்கமாட்டேள்ன்னு நினைக்கிறேன்.

சமர்த் அப்பாக்கும் இதுல சம்மதம் தான். என்னால இதுக்கு மேல விட்டு தர முடியாது. இதெல்லாம் கூட கோவிந்தக்காகத்தான்!! ஆத்துல எல்லாரும் கலந்து பேசி ஒரு நல்ல முடிவுக்கு வாங்கோ!!” என்றவர் அனைவரிடமும் விடைப்பெற்று அவரின் இல்லத்திற்கு கிளம்பினார்.

சமர்த்தின் தந்தை வந்திருக்கவில்லை. அவரை தனியே விட்டு வந்திருப்பது லட்சுமியின் மனதை உறுத்தியதால், நிறைய நேரம் செலவளிக்காமல் அங்கிருந்து விடைப்பெற்றார்.

சமீரா சமர்த்திடம் அலைபேசி மூலம், அவனின் தாய் லட்சுமியின் சம்மதத்தை தெரிவித்தாள். அதில் மனம் மகிழ்ந்தான் சமர்த்.

ஏற்கனவே அவனும் பதிவு திருமணம் தான் செய்யவேண்டும் என்ற முடிவில் தான் இருந்தான். அதனால் குடும்பத்தினர் அனைவரிடமும் பேசி அவர்களின் திருமணத்திற்கு சம்மதம் வாங்கினான்.

கண்ணனுக்கு சற்று வருத்தமிருந்தாலும், இந்த அளவு லட்சுமி இறங்கி வந்ததே போதுமென்று நினைத்து அவரும் சம்மதம் தெரிவித்தார்.

அலைபேசி மூலம் காயத்ரி குடும்பத்திற்கு தகவல் பறந்தது.

அடுத்து வந்த நல்ல நாளில் கோதை - கோவிந்த் திருமண நிச்சயம் கோலாகலமாக நடந்தது.

நிச்சயம் நடந்து இரண்டு வாரங்கள் கழித்து, சமர்த் - சமீரா பதிவு திருமணம் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நடந்தது.

அடுத்த முகூர்த்தத்தில் நடந்த கோவிந்த் - கோதை திருமணத்தின் போது, சில சொந்தங்கள் மற்றும் அக்கம் பக்கத்தவர்களின் வெறுப்பு மற்றும் கேலி கிண்டலுக்கு ஆளானதை சற்றும் பொருட்படுத்தவில்லை சமர்த்தும், சமீராவும்.

நெருங்கிய உறவுகளின் ஆசீர்வாதம் இருக்கும்போது மற்றவர்களின் கேலியும் கிண்டலும் அவர்களை சிறிதும் பாதிக்கவில்லை.

சுற்றமும், நட்பும் புடை சூழ இரண்டு தம்பதிகளுக்கும் சேர்த்து மிக பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக சிறப்புடன் நடந்தது.
 
இனி மேல் குழப்பம் இருக்குமா
கோவிந் கோதை உயர்ந்த குணம்
 
Top