Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MALARE MOUNAMAA? - 25

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 25
ஒரு மாதம் கழித்து,

சமர்த்தின் கால்கள் கொஞ்சம் சரியாகி இருந்ததால் ஊன்றுகோலின் உதவி இல்லாமலேயே நடக்க ஆரம்பித்திருந்தான். அலுவலகத்தில் வேலைப்பளு மிகுதியாக இருந்ததினால், அவனால் குடும்பத்தாருடன் காஞ்சீபுரம் செல்ல இயலாமல் போனது.

கோவிந்த் சமீராவை 'மீரா' வாக அடையாளம் காட்டிய கையுடன் காஞ்சீபுரம் கிளம்பினான். அவனுக்கும் வேலைப்பளு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

சுமித்ரா தன் கணவர் கிருஷ்ணனுடன் மேலும் ஒரு வாரம் சமர்த்திற்கு துணையாக இருந்துவிட்டு காஞ்சீபுரம் சென்றிருந்தனர்.

கண்ணன் தன் பெண் மீராவை 'சமீரா' வாகவே ஏற்றுக்கொண்டு அவளுடன் காஞ்சீபுரம் திரும்பி அன்றுடன் பத்து நாட்கள் ஆகியிருந்தது.

தன் பெண்ணுடன் நேரம் செலவழிப்பதை மட்டுமே வேலையாக கொண்டிருந்தார்.

அவருக்கு தன் இளமை திரும்பியது போல் இருந்தது. அதனால் சமயத்தில் சமீராவை ஒருவயது குழந்தையாக எண்ணி கொஞ்சி விளையாடி மகிழ்ந்தார்.

சமீராவிற்கு அவரின் பாசம் புரிந்தாலும் இதுநாள் வரை அவள் அனுபவித்திருந்த தனிமை மற்றும் இப்ராஹீமின் மேல் வைத்திருந்த தந்தை பாசம் போன்றவை, கண்ணனுடன் சில பல சமயங்கள் ஒன்ற விடாமல் செய்தது.

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், கண்ணன் தன் அன்பையும் பாசத்தையும் காட்டிக்கொண்டிருந்தது அவளுள் ஒரு மாற்றத்தை கொண்டுவரத்தான் செய்தது.

மீரா 'சமீரா' வாக இருப்பது அங்கு இருந்த அக்ரஹாரத்தில் குடியிருந்த மக்களின் கண்களுக்கு உறுத்திக் கொண்டிருந்தது பாவம் கண்ணனுக்கு தெரியவில்லை. அவர் தன் பெண்ணை தவிர வேறெதிலேயும் கவனம் செலுத்தவேயில்லை.

அங்கிருந்த பிராமண குடும்பத்தில் இருந்து ஒருவர் அன்று கிருஷ்ணனின் ஆத்திற்கு வந்திருந்தார்.

"அடியேன் நமஸ்காரம் சுவாமி!! வாங்கோ! உள்ளே வாங்கோ ஸ்வாமி! ஆத்துல எல்லோரும் சௌக்கியம் தானே?" என்று வரவேற்றார் கிருஷ்ணன்.

"அடியேன் நமஸ்காரம் சுவாமி!!" என்றவர், “ஹான்.ம்ம் ம்ம்!! என்று தலையை 'எல்லோரும் சௌக்கியம்' என்பது போல அசைத்தார் வந்திருந்த சுவாமி.

"சொல்லுங்கோ சுவாமி! எதானும் பேசணுமா?"

"சித்த வெளிய வரேளா கிருஷ்ணன்?" என்று அந்த சுவாமி சொன்னதும் தான் கவனித்தார் அவர் வீட்டு வாசலிலேயே நின்றிருப்பது.

முகத்தில் தோன்றிய கேள்விக்குறியுடன் வெளியே சென்றார் கிருஷ்ணன்.

"இதோ பாருங்கோ கிருஷ்ணன், உங்க ஆத்துல இருக்கிறவா கிட்ட இருந்து இதை நாங்க எல்லாம் எதிர்பார்க்கவேயில்லை!"

"என்ன ஸ்வாமி சொல்றேள்? நேக்கு ஒண்ணுமே புரியலையே!!" என்றார் கிருஷ்ணன்.

"இங்க பாரும் ஒய்! நான் நேராவே விஷயத்தை சொல்றேன். இது கோவிலை சுத்தி இருக்கிற மாடவீதி. இங்க எல்லாரும் மடியா, ஆச்சாரமா இருக்கறவா! இப்படி இருக்கறச்ச உங்க ஆத்துல இருக்கற பொண்ணு தொழுகையெல்லாம் பண்றது அவ்ளோ நன்னாயில்லை சுவாமி! உங்களண்ட வந்து எப்படி சொல்றதுன்னு அவாளெல்லாம் தவிச்சுண்டு இருந்தா! அதான் நானே வந்து சொல்றேன்.

பெருமாள் ஏளப் (தோளில் தூக்கிக்கொண்டு வருவது) பண்ற இடத்துல இதெல்லாம் கொஞ்சம் கூட நன்னாயில்லை. அவ தான் உங்காத்து பொண்ணு இல்லையே. அந்த கண்ணனுடன் வேற எங்கயானும் அனுப்பிடுங்கோ!

உங்காத்தோட எந்த பகையுமில்ல எங்களுக்கு. ஆனா மாடவீதில இதெல்லாம் நடக்கறத பார்த்துண்டு சும்மா இருக்க முடியாது. கண்ணன் கிட்ட சொல்லி நல்ல முடிவா எடுங்கோ கிருஷ்ணன்! அடியேன் உத்தரவு வாங்கிக்கறேன்! என்று சொல்ல வந்ததை சொல்லிவிட்டு சென்றார் அந்த சுவாமி.

"அண்ணா! அவா சொல்றதுல ஒண்ணும் தப்பில்லையே!!" என்றபடியே அங்கு வந்தார் சமர்த்தின் அம்மா லட்சுமி.

அவருக்கு மீராவை 'சமீரா' வாக பார்ப்பதற்கு பிடித்தம் இல்லை. அது ஒன்றே சமர்த்திற்கு அவள் வேண்டாம் என்ற முடிவையும் எடுக்க வைத்திருந்தது. கணவர் சாரதியின் உடல்நிலை சற்று தேறி இருப்பதால், இதைப் பற்றி சமர்த்துடன் பேச இந்த வாரம் அவர் கோவை செல்கிறார்.

"என்ன லக்ஷ்மி சொல்ற? இத்தன நாள் கண்ணன் பட்ற பாட்டை நீ கண்ணால பார்த்துண்டு தான் இருந்தியோன்னோ! அப்றம் வந்து இப்படி பேசிண்டிருக்கியே!!" என்று கடிந்தார் கிருஷ்ணன்.

"நான் கண்ணன் அண்ணாவை குறை சொல்லலியேண்ணா! நேக்கு மீரா பண்றதுல தான் குறை. அதை நீங்கல்லாம் கண்டும் காணாத மாறி போறது தான் ரொம்ப குறை!"

"எப்படிம்மா இத்தன நாள் அவள் வளர்ந்த முறையை உடனே மாத்திக்கோன்னு சொல்ல முடியும்? அவளுக்கும் நம்ம கூட பழகறதற்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க வேண்டாமா?"

"என்னமோண்ணா நடக்கறத எல்லாம் பார்க்கறச்ச மனசுக்கு ஒண்ணும் அவ்ளோ திருப்தியா படல! நாளைக்கு சமர்த்ட்ட போன்ல பேசப்போறேன்.. இந்த கல்யாணம் நடக்கறதுல நேக்கு விருப்பம் இல்ல!" என்ற லட்சுமியை அதிர்ச்சியுடன் பார்த்தார் கண்ணன்.

அறைக்குள்ளிருந்து வாசலுக்கு வந்துகொண்டிருந்த கண்ணனின் காதுகளில் விழுந்த வார்த்தைகள் அதிர்ச்சியாக இருந்தன.

நல்லவேளை(!) அந்த சுவாமி சொன்னதையெல்லாம் அவர் கேட்க நேரிடவில்லை.

சமர்த்திற்கு தன் பெண்ணை கொடுத்தால் அவளின் அருகிலேயே இருக்கலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் இப்பொழுது லட்சுமி பேசுவதைக் கேட்டு என்ன செய்வது என்று தடுமாறினார் கண்ணன்.

"இதெல்லாம் உடனே முடிவெடுக்கற விஷயம் இல்ல லக்ஷ்மி!! எல்லாத்தையும் சித்த ஆறப்போடு!!" என்ற கிருஷ்ணனுக்கு கண்ணன் பதிலளித்தார்.

"விட்டுடுங்கோ கிருஷ்ணன், அவளுக்கு பிடிக்கலைன்னா வேண்டாம்!" என்றார் கண்ணன்.

இவர்கள் பேசுவதையெல்லாம் அறையினுள் இருந்த சமீராவும் கேட்டுக்கொண்டுதான் இருந்தாள்.

சமர்த்தின் தாய் பேசியது மட்டுமில்லை, கிருஷ்ணனுடன் அந்த சுவாமி பேசியதையும் தான் அவள் கேட்டிருந்தாள்.

மனதில் கோபமும், எங்காவது வெளியே சென்றுவிடும் எண்ணமும் சமீராவிற்கு வந்ததுதான்.

ஆனால் சமர்த் அவளிடம் பொறுமையை கடைபிடிக்க சொல்லியிருந்ததால், மௌனத்தை துணைக்கு அழைத்துக்கொண்டு கோபத்தை அடக்கினாள் சமீரா.

அன்று கோவிந்த் மீராவை அடையாளம் காட்டியதுமே மற்ற சொந்தங்களுக்கும் தகவல் தெரிவித்திருந்தார் சுமித்ரா.

அதில் பரவசம் அடைந்து கோவை வந்தார் சமர்த்தின் தாய் லட்சுமி. உடல் நிலை சரியில்லாத கணவர் சாரதியை, சுமித்ராவின் பெண் மற்றும் கோவிந்தின் அக்காவான நப்பின்னையிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு தான் அவர் கோவை சென்றதே.

லட்சுமி மட்டுமில்லை, கண்ணனின் தங்கை காயத்ரியும் தன் பெண் கோதையுடன் சமீராவைப் பார்ப்பதற்கு வந்தார்.

காயத்ரியும், கோதையும் சமீராவுடன் நன்கு பழகினர். அதிலும் காயத்ரிக்கு தன் பவி மன்னியைப் பற்றி அவரின் மகளான சமீராவிடம் சொல்வதற்கு ஆயிரம் விஷயங்கள் இருந்ததால், அவர் சமீராவை விட்டு விலகவேயில்லை.

சமர்த்தின் தாய் லட்சுமி மீராவைப் பார்த்து, முதலில் மகிழ்ச்சியுற்றாலும், அவள் வேற்று மதத்தினரால் வளர்க்கப்பட்டவள் என்று தெரிந்ததும் ஒதுங்க ஆரம்பித்தார்.

அதில் சற்று மனதுடைந்து தான் போனாள் சமீரா.

சமர்த்திற்கு தாயை புரிந்ததால், சமீராவிடம் பொறுமையுடனும், தைரியத்துடனும் இருக்க சொல்லியிருந்தான். பின் அன்னையிடமும் சமீராவின் பெருமைகளையும் எடுத்துக் கூறவும் மறக்கவில்லை.

என்ன சொல்லி தான் என்ன பயன்?

லட்சுமிக்கு வேற்று மதத்து பெண்ணை தன் சொந்தம் என்ற நினைவே கசந்தது. அந்த கசப்பு சில நேரங்களில் சமீராவிடம் கோபமாக பேசவும் வைத்தது.

லட்சுமி தன்னிடம் கோபமாக பேசுகிறார் என்று சுமியிடமோ, காயத்ரியிடமோ ஏன் சமர்த்திடம் கூட சமீரா கூறவில்லை.

கண்ணன் அதை கவனிக்கும் மனநிலையிலும் இல்லை. அவருக்கு தன் பெண் மட்டுமே உலகம் என்றிருந்தார்.

சமர்த்தின் தாய் லட்சுமியும் யாரேனும் அருகில் இருந்தால் தன்னுடைய கோபத்தை அடக்கி, சமீரா தனியே இருக்கும் போது மட்டுமே தன் கோபத்தையும் வெறுப்பையும் காட்டினார்.

அவர் அங்கிருந்த இரண்டு நாட்களிலும் சமீராவிடம் சாதாரணமாக பேசிய வார்த்தைகள் மிகவும் குறைவு. அதை கவனித்திருந்த சமர்த், சமீராவிற்கு தேவையான தைரியத்தையும், பொறுமையையும் தன் அன்பின் மூலம் கற்றுக்கொடுத்தான்.

சமர்த் சமீராவிற்கு ஆறுதலாக பேசியதுக் கூட ஒருவிதத்தில் லட்சுமியின் கோபத்தை அதிகப்படுத்தியிருந்தது.

சமர்த் மற்றும் சமீராவிற்கு அவரின் கோபம் புரிந்தாலும், திருமணத்திற்கு மறுப்பார் என்று நினைத்தேப் பார்த்ததில்லை.

சமீராவிற்கு இன்று தான் அவரின் மனநிலையை அறிய நேர்ந்தது.

அதிலும் சமர்த் அருகில் இல்லாமல் இருக்கும் இந்த நேரத்தில் அறிய நேரிட்டது, அவளின் மன திடத்தை குறைத்தது. மனதின்அடி ஆழத்தில் இருக்கும் சமர்த்தின் வார்த்தைகளை நினைவிற்கு கொண்டுவந்து, பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள் சமீரா.

ஆனால் அவளின் தந்தையோ இதற்கு எதிர் மாறான முடிவில் இருப்பது அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வாசலில் பேச்சுக்குரல் கேட்கவும் மனதை திடப்படுத்திக்கொண்டு கேட்க ஆரம்பித்தாள் சமீரா.

"கண்ணன் கொஞ்சம் பொறுமையா இருங்கோ!! என்றார் கிருஷ்ணன்.

"மன்னி மாவு திரிக்க(அரைக்க) மிஷின்க்கு போய்ருக்கா! அவா வரதுக்குள்ள நான் பேசிடறேன் கிருஷ்ணன்." என்ற கண்ணனை கேள்வியுடன் பார்த்தார் கிருஷ்ணன்.

"என் பொண்ண அழைச்சுண்டு நான் எங்காத்துல போய் இருந்துட்டு வரேன்!! மறுத்துடாதீங்கோ கிருஷ்ணன். நேக்கு கொஞ்சம் தனியா என் பொண்ணோட பொழுதை கழிக்கணும். அவளுக்கு என் கையால தளிகை பண்ணி போடணும்.. அவ அம்மா இருந்த ஆத்தை அவ பார்க்கவேண்டாமா கிருஷ்ணன்?
 
லக்ஷ்மி இப்படி பேசறதுனால, நான் இந்த முடிவ எடுக்கல கிருஷ்ணன். என் பொண்ணு திரும்ப வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டா இதெல்லாம் சாத்யமில்லைன்னு நேக்கு படறது. அதான் இந்த முடிவு. நான் நாள ராத்திரி ட்ரெயின்ல கிளம்பறேன். கண்டிப்பா திரும்ப வருவோம்!" என்றார் கண்ணன்.

"கண்ணாண்ணா என் மனசுல படறதை தான் நான் பேசினேன். இதெல்லாம் என்னால ஜீரணிச்சுக்க முடியலண்ணா!! தப்பா எடுத்துக்காதீங்கோ!" என்றார் லட்சுமி.

"நீ சொல்றது எல்லாம் வாஸ்தவம் தானே லக்ஷ்மி!! ஆனா நீ சொல்றதுக்காக என் பொண்ண இந்த ஆத்துக்கு தகுந்த மாதிரி மாத்திக்கோன்னு வற்புறுத்த முடியுமா? இந்த ஜென்மத்துல என் பொண்ண கண்ணால பார்த்துடமாட்டேனான்னு ஏங்கிண்டு இருக்கறச்ச, எம்பெருமான் க்ருபைனால என் பொண்ண பார்த்துட்டேன். நேக்கு அது போறும். அவ வளர்ந்த குலம், கோத்ரமெல்லாம் நேக்கு வேண்டாம். கண்டிப்பா என் பொண்ண உங்காத்து மாட்டுப்பொண்ணா ஆக்கிக்கோன்னு வற்புறுத்தமாட்டேன் லக்ஷ்மி!! நாளைக்கு போய்ட்டு கொஞ்ச நாள் அங்க இருந்துட்டு வரோம்.." என்ற கண்ணன் உள்ளே சென்றார்.

"அண்ணா நான் வேணும்ன்னு பண்ணல. முதல்ல சமர்த்ட்ட பேசிட்டு அப்றமா தான் உங்க எல்லார்ட்டயும் சொல்லணும்ன்னு நினைச்சேன். ஆனா இங்க வரச்ச, பக்கத்தாத்து ஸ்வாமி பேசிண்டிருந்தத கேட்டதும், மனசுல இருக்கறதெல்லாம் பொங்கிடுத்து. இப்போ அவா கிளம்பறேன் சொல்றாளே, தப்பு பண்றேனா?" என்று தன் அண்ணன் கிருஷ்ணனிடம் கேட்டார் லட்சுமி.

"தெரில லக்ஷ்மி! ஆனா, நீ இந்த விஷயத்தை சித்த ஆறபோட்ருக்கலாம்." என்ற கிருஷ்ணனுடன் இணைந்து வீட்டினுள் நுழைந்தார் லட்சுமி.

சமீரா இருந்த அறைக்குள் வந்த கண்ணன், ஜன்னலின் அருகில் நின்றிருந்த சமீராவைப் பார்த்ததும் முதலில் அதிர்ந்து, பின் எப்படியும் தெரிவது நல்லது தான் என்று எண்ணிக்கொண்டார்.

"மீரா, எல்லாமே நீ கேட்டுண்டு தான இருந்த! நாம நாளைக்கு கிளம்பலாம். நாம இனிமே அங்கயே இருந்துடலாம். நோக்கு வேலையையும் அங்கயே தேடிண்டுடு. இப்போதைக்கு நம்ம முடிவை இவா கிட்டல்லாம் சொல்லவேண்டாம். என்ன மீரா நான் சொல்றது சரிதானே? என்ற கிருஷ்ணனுக்கு என்ன பதில் சொல்வதென்று யோசித்தாள் சமீரா.

"நீ எப்படி இருந்தாலும் நேக்கு கவலையில்லை. நேக்கு என் பொண்ணு என்னோட இருக்கா!! அது போறும் நேக்கு. நமக்கு சொந்த ஆம்(வீடு) இருக்கு, கொஞ்சம் பேங்க் பாலன்ஸ் இருக்கு, பென்ஷனும் வரது. நோக்கும் வேலை கிடைச்சுடுத்துன்னா அந்த வருமானமும் வரும். நம்ம ரெண்டு பேருக்கும் எதேஷ்ட்டம். சரி தானே மீரா?" என்று மறுபடியும் கேட்டார் கண்ணன்.

"சரி!" என்பதாக தலையை மட்டும் ஆட்டினாள் சமீரா. அவளுக்கும் சமர்த்தின் அன்னையின் மீது கோபம் இருந்தாலும் சமீரிடம் பேசாமல் எந்த முடிவையுமே எடுக்க விரும்பவில்லை.

சமீரா அன்று இரவு சமர்த்க்கு அலைபேசியில் அழைத்த போது, "Busy, will call you later!" என்ற பதிலை குறுஞ்செய்தி மூலம் அனுப்பினான் சமர்த்.

சமீராவிற்கு அவனின் வேலை பளு புரிந்து தான் இருந்தது. ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையை அவனுக்கு தெரிவித்துவிட விரும்பி குறுஞ்செய்தி அனுப்ப விழைந்தாள். அப்போது அங்கு கோவிந்த் வந்து சேர்ந்தான்.

"ஹே!! மீரா! இப்போ தான் ஆத்துக்கு வந்தேன்.. என்ன பண்ணின இன்னிக்கு? ரொம்ப போர் அடிச்சுடுத்தா?" என்று கேட்டவனுக்கு மௌனமாகவே 'இல்லை!' என்று தலையை ஆட்டினாள்.

"மௌன சாமியாரிணியே, கொஞ்சம் உங்கள் திருவாய் மலர்ந்தால், அடியேன் தன்யனாவேன்!!"

"மிஸ்டர். கோவிந்த்!!" என்று ஆரம்பித்தவளை "அச்சோ! இதுக்கு நீ வாயை மூடிண்டே இருந்திருக்கலாம்!!" என்றான். தொடர்ந்து,

"என்னை டேய் கோவிந்தான்னு கூட அழைக்க நோக்கு உரிமை இருக்கு. ஆனா தயவுசெஞ்சு இந்த மிஸ்டர் மிஸ்டர்ன்னு ஏலம் போடறதை மட்டும் நிறுத்திடுமா!! ரொம்ப கடுப்பா வர்றது.!!"

கோவிந்த் சமீராவின் முகத்தையே பார்த்திருந்தான். அப்படியாவது உரிமை எடுத்து பழகுவாளோ என்ற எதிர்பார்ப்பே அவனின் முகத்தில் தெரிந்தது.

வழக்கம் போல் கோவிந்திடம் பதிலேதும் பேசாமல், லேசாக புன்னகைத்த சமீரா, "கோவிந்த், நாளைக்கு அப்பா ஊருக்கு போய் அங்கேயே இருந்திடலாம்ன்னு சொல்கிறார். சமீர் பிஸியா இருக்காங்க! என்ன முடிவு எடுக்கிறது தெரியல!!" என்றாள்.

"என்னாச்சு மீரா?"

சமீரா நடந்த அத்தனையையும் கோவிந்திடம் பகிர்ந்துக்கொண்டாள்.

கோவிந்த்திற்கு மனது மிகவும் சங்கடப்பட்டது. ஏதோ இவள் 'மீரா' வாக இருக்கவே தான் இந்த அளவிற்காவது இவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் புரிந்து தான் இருந்தது கோவிந்த்திற்கு.

ஆனால் சமர்த்தின் தாய் திருமணத்திற்கு சம்மதிக்கமாட்டார் என்று சற்றும் எதிர்பார்த்தானில்லை. சிறிது நாட்கள் ஆறப்போடுவது எல்லோருக்கும் நல்லது என்று முடிவு செய்தவன்,

"மீரா, சித்தப்பாவோட கிளம்பி ஊருக்கு போய்ட்டு வா, சமர்த்தும் இதை தான் சொல்லுவான். வேலையெல்லாம் தேடவேண்டாம்!! கொஞ்ச நாள் கழித்து இங்கயே வந்துட்டு வேலை தேடிக்கோ."

"இல்லை நான் சமீர் கிட்ட பேசி." என்று ஆரம்பித்தவளை இடைமறித்தான் கோவிந்த்.

"நோக்கு அந்த கவலையே வேண்டாம். லேட் நைட்க்குள்ள அவன் நோக்கு கால் செஞ்சுடுவான். அவனும் இதை தான் சொல்வான். நீ போய் உன்னோட பேக் ரெடி பண்னு.

சமீரா மெளனமாக அவனைப் பார்த்தாள்.

"மீரா எல்லாம் சரியாகும். கொஞ்சம் டைம் ஆகும் அவ்ளோதான்!! ஊருக்கு போனதும் உன்னோட மௌனத்தை கோதைக்கு கத்துக்கொடுத்துட்டு, அவ கிட்ட இருந்து எப்படி பேசிண்டே இருக்கணும்ங்றத நீ கத்துக்கோ!! அவ்ளோ வாயடிப்பா கோதை!! உன்னோட சின்னவ தான, அப்படியே அவளுக்கு கொஞ்சம் தைரியத்தையும் கத்துக்கொடு!! அவ சரியான பயந்தாக்கோளி!! செய்யறயா மீரா?"

"ம்ம்!!" என்று சொல்லிக்கொண்டே தலையை ஆட்டினாள் சமீரா.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அங்கே கண்ணன் வந்தார்.

"என்ன சித்தப்பா நாளைக்கு ஊருக்கு போறேளாமே அதான் கோதையை பத்தி சொல்லிண்டு இருந்தேன்.!!" என்றான் கோவிந்த்.

"சீக்கிரம் அவளை கல்யாணம் பண்ணிக்கோ கோவிந்தா!"

"கண்டிப்பா சித்தப்பா, அதான் என் தங்க(தங்கை) கிடைச்சுட்டாளே!! சீக்கிரம் கெட்டிமேளம் கொட்டிட வேண்டியது தான்!!" என்றவாறே சமீராவின் தோளின் மீது கைப்போட்டு சகோதர வாஞ்சையுடன் அணைத்துக்கொண்டான்.

அந்த சகோதரனின் பாசத்தில் அவளுக்கு கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டது. அவளாகவே கோவிந்த் தோளின் மீது சாய்ந்துக்கொண்டாள். கோவிந்தின் கைகள் அவளின் தலையை லேசாக வருட ஆரம்பித்தன.

இவர்கள் இருவரையும் பார்த்த கண்ணனுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

சிறிது நேரத்திலேயே சமர்த் சமீராவை தொடர்பு கொண்டான். அவனிடமும் நடந்ததை சொன்ன சமீரா கோவிந்தின் முடிவையும் எடுத்து சொன்னாள்.

"மீரா நேக்கும் இது தான் தோணித்து!! நான் அம்மாட்ட பேசறேன்! ப்ளீஸ் உடைஞ்சு போய்டாத. இப்போதைக்கு நீ மாமா கூட போ மீரா!! எவ்வளவு சீக்கிரம் உன்ன கல்யாணம் பண்ண முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பண்ணிண்டு என் பக்கத்துலேயே வச்சுக்கறேன். கொஞ்சம் டைம் மட்டும் கொடு. அது போறும் நேக்கு!!"

"சமீர் நீங்க சொல்கிற மாதிரியே நடந்துக்கிறேன்.!!"

வார்த்தைகள் அவளிடம் என்றுமே குறைவு தான் அதில் குறை காண விரும்பவேயில்லை சமர்த். இந்தளவுக்காவது அவளின் மௌனத்தை கலைத்தாளே என்ற நிம்மதி தான் அவனுக்கு.

சமீரா அவள் அப்பா கண்ணனுடன் கிளம்பினாள்.

சுமித்ராவிற்கு சிறிது வருத்தம் இருந்தாலும், அவர்களின் எதிர்காலம் கருதி இந்த முடிவுக்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.
 
அன்பு வாசக தோழமைகளே!!

முடிக்காத கதை மட்டுமல்ல, முடித்த கதையை பதிவிடுவதற்கு நேரம், காலம் மற்றும் உடல் நிலையும் ஒத்துழைக்க வேண்டும்.
தாமதமான பதிவுகளுக்கு வருந்துகிறேன்.
கருத்துக்கள் மற்றும் விருப்பங்களை தெரிவித்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றி!! நன்றி!! மிக மிக நன்றி!!
தொடர்ந்து கதையை படித்து உங்கள் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களை பகிர்ந்துக் கொள்ளவும்.
மிக்க நன்றி!!!!
 
Top