Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MALARE MOUNAMAA? - 22

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 22
தன்னருகே அமர்ந்திருந்த சமீராவை காதலுடன் பார்த்தான் சமர்த். அவனின் பார்வையில் சிறு வெட்கத்துடன் தலையை குனிந்தாள் சமீரா.

சமர்த் அவளின் கைகளில் சிறு அழுத்தம் கொடுத்து அவளை நிமிர வைத்தான்.

சமீராவும் நிமிர்ந்து அவனை காதலுடன் பார்த்தாள்.

"இப்போ நீ பார்க்கற இந்த பார்வைக்கு, நோக்கு அர்த்தம் புரியறதா மீரா?" என்று மௌனத்தை முதலில் கலைத்தான் சமர்த்.

"ஏன் உங்களுக்கு புரியலையா?" என்றாள் சமீரா சற்றே வெட்கத்துடன்.

அவளின் வெட்கத்தில் சமர்த்தின் முகத்தில் புன்னகை தோன்றியது.

"கீழ விழுந்ததுல எங்காவது வலிக்குதா? ஹாஸ்பிடல் போலாமா?"

"இப்போதைக்கு இந்த இடத்தை விட்டு நானும் போக மாட்டேன்! உன்னையும் போகவிடமாட்டேன்!" என்றவன் குரலில் அந்த உறுதி நன்றாகவே தெரிந்தது.

"உங்க ஹெல்த் எப்படி இருக்குன்னு முதல்ல தெரிஞ்சிக்கிட்டா தான் எனக்கு திருப்தி! அதான் கேட்டேன்."

"டோன்ட்வொர்ரி!! ஐயம் பர்பெக்ட்லி ஆல் ரைட்!!"

"...."

"என்ன மீரா திரும்பவும் மௌனமா? சரி நீயா பேச போறதில்லை! விடு, நான் கேட்கிற கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லு!! அதுவே போறும் நேக்கு!" என்ற சமர்த் சிறிது நிறுத்தி,

"ஆத்துல இருக்கறச்ச நேக்கு இந்த பேச்சு வழக்கம் தான் வர்றது." என்றான்.

"பரவாயில்லை சமீர், அம்மா கூட பேசிக்கிட்டே இருந்ததால ஓரளவிற்கு என்னால இப்போ புரிஞ்சுக்க முடியுது." என்ற சமீரா சமர்த்தை பார்த்தாள்.

"பர்ஸ்ட் டைம் என்னை பார்க்கறச்சே கேட்டியே, 'உங்களுக்கு வேற ஏதானும் பேர் இருக்கா?' ன்னு, எப்படி, என்னை முன்னாடியே நோக்கு தெரியுமா?"

'ஆம்!!' என்பதாக தலையை ஆட்டினாள் சமீரா.

"ப்ளீஸ் மீரா உன் மௌனம் என்னை கொல்றது!! போறும் உன்னோட மௌனம், பேசு மீரா!!" என்று சமர்த் கடிந்தான்.

"எனக்கு உங்களை முன்பே தெரியும்?"

"எப்படி தெரியும்?"

"...."

"ம்ச்ச்!! சொல்லு மீரா!!"

"அம்ரு - ஸ்ரீநியை நினைவிருக்கா உங்களுக்கு?"

"ம்ம் இருக்கு!! இப்போ அவாளுக்கு என்ன வந்தது?"

"அம்ரு - ஸ்ரீநி கல்யாணம் அன்னிக்கு தான் உங்களை முதல்ல பார்த்தேன். அதிலும் ஸ்ரீநி உங்களை 'சமீர்' ன்னு சொன்ன போது எனக்கானவர் நீங்க தான்னு முடிவு செஞ்சு உங்களையே பார்த்துகிட்டே இருந்தேன். ஆனா," என்று நிறுத்தினாள் சமீரா.

"ஆனா! ஆனா என்ன ஆச்சு மீரா? சொல்லும்மா!!"

"அ..து, முதல்ல என் கண்கள்ல நீங்க விழறதுக்கே உங்க பேரான 'சமீர்' தான் காரணம். ஏன் என்றால் நான் இஸ்லாமிய குடும்பத்து பெண்! என் பேரு சமீரா!!"

"...."

இப்பொழுது மௌனம் சமர்த்திடம் இடம் பெயர்ந்தது.

அவனுக்கு தான் கேட்டது நிஜம் தானா என்று ஒரு சில நிமிடங்கள் புரியவில்லை. சமீராவை அதிர்ச்சியுடன் பார்த்தான் சமர்த்.

"இதுக்காகத்தான் நான் உங்களை விட்டு தள்ளி போகணும் நினைச்சேன்!"

சமர்த்திற்கு அவளின் ஒதுக்கத்திற்காண காரணம் இப்பொழுது புரிந்தது. ஆனால் அதற்காக அவளை விடவும் முடியவில்லை. மெதுவாக அவளிடம் நகர்ந்து, இடது கையை எடுத்து அவளின் தோளின் மீது போட்டு நன்றாக அணைத்துக்கொண்டான்.

சமீராவிற்கு அவனின் அந்த அணைப்பு ஆதரவாக இருந்ததால், அவன் மார்பின் மீது நன்றாக சாய்ந்துக்கொண்டாள்.

சமர்த் இப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கவேயில்லை. எப்படி குடும்பத்தில் விரிசல் விழாமல் காதலை காப்பாற்றிக் கொள்வது என்று புரிபடாமலே அமர்ந்திருந்தான்.

இது மிகவும் சென்சிட்டிவான விஷயம், இதில் யாரின் மனமும் புண் படாமல் எப்படி பேசுவது என்பது குறித்தான ஆழ்ந்த சிந்தனைக்கு சென்றான் சமர்த். அதில் அவனையும் அறியாமல் சமீராவை அணைத்திருந்த கையை விலக்கினான்.

அவனின் மார்பில் சாய்ந்திருந்த சமீரா, அவனின் அணைப்பு விலகியதால் எழுந்து நிமிர்ந்து அமர்ந்து அவனை 'ஏன்?' என்பதுப் போல் கேள்வியாகப் பார்த்தாள்.

சமர்த் தான் இந்த உலகத்திலேயே இல்லையே!! அவளுக்கு ஆறுதல் தருவதற்காக தான் அவளை அணைத்திருந்தான். ஆழ்ந்த சிந்தனைக்கு சென்றதால் மட்டுமே அவளை விலக்கியும் இருந்தான்.

ஆனால் அதை தவறாக புரிந்துக்கொண்ட சமீரா அந்த இடத்தை விட்டு செல்வதற்காக எழுந்தாள்.

அவளின் அசைவில் தன்னுணர்வுக்கு வந்த சமர்த், சமீராவின் முகத்தில் இருந்த அச்சமும், இதற்காக தானே விலகினேன் என்ற சோகமும் சேர்ந்திருந்ததை பார்த்தான்.

முதலில் அவளுக்கு தைரியம் கொடுக்க விரும்பினான். அதனால் அவளின் கையைப் பற்றி தன்னருகே இழுத்தான். அதில் அருகில் இருந்த கட்டிலில் விழுந்தாள் சமீரா.
 
"எங்க ஆகங்கள்ல எல்லாம்" என்றவன் சமீராவின் புரியாத பாவணையைப் பார்த்து, "ஐ மீன்" என்றவனுக்கு, 'பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இருக்கும் வீடுகளில் எல்லாம்' என்ற வார்த்தையை எப்படி உபயோகிப்பது என்று புரிபடவேயில்லை.

அதில் அவள் மனம் புண்பட்டு விடுமோ என்றும் பயந்தான். அதனால் சிறிது யோசித்து விட்டே பேச ஆரம்பித்தான்.

"நான் குழந்தையாய் இருக்கறச்ச பெரியவா எல்லாரும் பெருமாள் கதைகள் நிறைய சொல்லி இருக்கா!" என்றவனை, 'இந்த கதைகள் எல்லாம் இப்பொழுது தேவையா?' என்ற சமீராவின் பார்வையைப் பார்த்து லேசாக முறுவலித்தான்.

"இப்போ இது கொஞ்சமே கொஞ்சம் தேவை தான் மீரா!" என்றவன் தொடர்ந்து,

"பயப்படாத கதையெல்லாம் பெரிசா சொல்லப் போறதில்ல.! "

சமீராவோ தலையை 'சரி!' என்பதாக ஆட்டினாள்.

"அதுல ஒரு கதைல பெருமாள் அரச குடும்பத்து பெண்ணான சுரதானியை மணந்துக்கொண்டார்ன்னு வரும். அந்த தாயார் ஒரு இஸ்லாமிய அரச குடும்பத்துப் பெண். ஸ்ரீரங்கம் கோவிலிலேயே அந்த தாயாருக்கு தனி சந்நிதி உண்டு.. அந்த தாயாரை தான் நாங்க துலுக்க நாச்சியார், பீவி நாச்சியார்ன்னு சேவிச்சுண்டு தான் இருக்கோம். அந்த தாயார் கூட இருக்கிறதுனால தான் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு ரொட்டி கூட அம்சி (நெய்வேத்தியம்) ஆயிண்ட்ருக்கு!! இது சரித்திரம்!! வரலாறுன்னாலே வெறும் கதை தானேன்னு சொல்றவா இருக்கத்தான் செய்யறா!!

திருப்பதி பெருமாளை நாங்க எல்லாம் கலியுக தெய்வம்ன்னு சொல்லுவோம்!! அந்த பெருமாளுக்கு ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் தங்க தாமரைகளால் அர்ச்சனை செய்வதற்கு 108 தங்க தாமரைகளை தந்தவரும் ஒரு இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவரே!! இன்றளவும் அந்த சேவை நடந்துண்டு தான் இருக்கு.

[திருவேங்கடவனுக்கு அர்ச்சனை செய்யும் அஷ்டதள ஸ்வர்ண பாத பத்ம ஆராதனை ஆர்ஜித சேவையாக 1984ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அர்ச்சனை, செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் திருநாமம் ஒன்றுக்கு ஒரு தங்கத் தாமரை மலர் வீதம் 108 தங்கத் தாமரை மலர்களால் செய்யப்படுகினறது! இந்த சேவையை ‘அஷ்டோத்தர (108) ஸ்வர்ண பாத பத்ம ஆராதன சேவை’ என்கின்றனர்.]

இதெல்லாம் ஏன் சொல்றேன்னா, இறைவன் எப்பொழுதுமே ஜாதி மத, இன மொழி வேறுப்பாடே பார்க்கமாட்டார். உண்மையான பக்தி இருக்கிறவா கிட்ட அந்த வேற்றுமையை அவன் பார்க்கவேமாட்டான். இந்த வேறுபாடுகள் எல்லாம் வச்சதே, அவா அவா குடும்ப, குல வழக்கப்படி இறைவனை பூஜித்து, பக்தியையும் அன்பையும், பண்பையும் வளர்த்து, இறைவனின் திருவடியை அடையத்தான். அவற்றையெல்லாம் செய்யும் உண்மையான பக்தர்களை ரக்ஷிக்கவே வெவ்வேறு பெயர்களால் அழைக்கப் படுகிறான் இறைவன். நோக்கு அல்லான்னா, நேக்கு பெருமாள்.!! எங்க ஆபீஸ் பியூன் அந்தோணிக்கு ஜீசஸ்.!!

ஆனா, சில மனித மிருகங்களாலே, ஜாதி மத பேதங்கள் பற்றி தப்பான முறையில் போதிக்கப் படுவதால் தான் இன்னமும் ஆணவப் படுகொலைகள் நடந்துண்டிருக்கு. இதெல்லாம் மாறணும்!! அதுக்கு கல்வி அவசியம்!! ஆனா ஸ்கூல் அப்ளிகேஷன் பார்ம்ல கூட என்ன ரிலிஜன்ன்னு கேட்கறா!! என்னத்த சொல்றது!! " என்று பேசியவன்,

"இதெல்லாம் பேசினா பேசிண்டே இருக்கலாம் மீரா!! விடு!! இப்போ நம்ம விஷயத்துக்கே வரேன்.!

மேல சொன்ன இரண்டு விஷயங்களுமே உனக்காக, உனக்கு தைரியம் வரணும்ங்கிறதுக்காத்தான் சொன்னேன். இதை கேட்டவுடனேயே ரொம்ப எளிதாக நம்ம கல்யாணம் நடந்துடும்ன்னு நினைச்சுடாதே!! மதத்து பேரச் சொல்லிண்டு இனிமே நீ பயந்துண்டு இருக்காத, என்னை விட்டு என் குடும்பத்தை விட்டு ஒதுங்கியும் போகாத!! எல்லாம் சுமூகமா முடியணும்ன்னா கொஞ்ச நாள் ஆகத்தான் செய்யும். மெது மெதுவே தான் நம்பள அவா எல்லாருக்கும் புரியவைக்க முடியும். நிறைய பொறுமையும் நமக்கு தேவைப் படும்.

இதெல்லாம் நல்லபடியா நடக்கணும்ன்னா உன்னோட ஒத்துழைப்பு நேக்கு ரொம்ப முக்கியம். எந்த இடத்திலும் நீ உன் மன உறுதியை மட்டும் இழந்து விடக்கூடாது. உன்னோட ரிப்போர்ட்டர் வேலைல இருக்கிற தைரியமும், நிமிர்வும் நம்ம காதல்லையும் இருக்கணும். நம்மளே நம்ம காதலை குறைவா நினைச்சா மத்தவங்களுக்கு நம்மை எப்படி புரியவைக்க முடியும்?

அதுமட்டுமில்ல உன்னைப் பற்றியும் நேக்கு முழுசா தெரியணும். சகாயத்து மேல நோக்கு என்ன கோபம், உங்க அப்பாவை கொன்னவர்ன்னு விஸ்வநாதன் சார் சொன்னார். என்ன ஆச்சு?" என்றவன் சிறிது நிறுத்தி தயங்கியபடியே,

"நீ இங்க வந்தப்றம் உன்னோட தொழுகைகள் எல்லாம் விட்டு போய்டுத்தா? நாங்க எல்லாருமே எங்க தெய்வங்களை தினமும் சேவிச்சுண்டு தான் இருந்தோம்!! ஆனா நீ சாரி மீரா!!" என்று உண்மையாகவே வருத்தப்பட்டான் சமர்த்.

"என்னோட தொழுகைகளை எப்போதுமே நான் விட்டு கொடுக்க மாட்டேன். இங்க வந்த பிறகும் அந்தந்த வேளைக்கான தொழுகைகளை மாடியில் செய்துக்கொண்டு தான் இருந்தேன். முதல் நாள் மட்டும் கொஞ்சம் பயமிருந்தது, 'எங்கே உங்க எல்லாருக்கும் தெரிந்து விடுமோ' என்று, ஆனா, உங்க எல்லோருக்கும் தெரிந்தால் நல்லது தானேன்னு நினைச்சுக்கிட்டு, அன்னிக்கே நான் செஞ்ச அடுத்தடுத்த வேளை தொழுகைகளை உள்ளன்போடு தான் செய்தேன்." என்ற சமீராவைப் பார்த்து புன்னகைத்தான் சமர்த்.

"மீரா என்ன தான் இறைவன் வேற்றுமதத்து பெண்ணை கல்யாணம் செய்துண்டதை பல பேர் ஒத்துண்டாலும், சிலரின் விதண்டாவாதத்தால் அதுக்கு ஆயிரத்தெட்டு எதிர்மறை விமர்சனங்களும் எழுந்துண்டு தான் இருக்கு!! பெருமாளுக்கே அந்த நிலைன்னா என்னையெல்லாம் என்ன சொல்வாளோன்னு தெரியாது. மத்தவா ஏதாவது சொன்னா அதை உதறி தள்ளிண்டு போயிண்டே இருப்பேன். ஆனா நம்ம குடும்பத்துல இருக்கிறவாக் கிட்ட என்னால அது மாதிரி உதறிண்டு வரமுடியாது. சில சமயங்கள் அவா முன்னாடி நான் பொறுத்து தான் போவேன்!! அதுக்காக நீ என்னை விட்டு ஒதுங்கக் கூடாது.
நிறைய நிறைய கேள்விகளையும், விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உன்னோட" என்றவன் சற்று நிறுத்தி,

"இல்லை இல்லை நம்மோட பொறுமையை நிறையவே சோதிப்பா! இப்போன்னு இல்லை நாளைக்கு நம்ம கல்யாணம் நடந்தப்பிறகும் ஏதாவது பிரச்சினை வந்துண்டே தான் இருக்கும். உனக்காக அவாளையோ, இல்ல அவாளுக்காக உன்னையோ எப்போதுமே என்னால விட்டு கொடுக்க முடியாது.
எனக்கு வேண்டியது எல்லாம் உன்னோட அளவுக்கடந்த கடந்த காதலும், ஒத்துழைப்பும் தான். அதே காதலையும் ஒத்துழைப்பையும் எப்பவுமே உனக்கு நான் கொடுப்பேன். அதை நீ நம்பற மாதிரி நான் கண்டிப்பா நடந்துப்பேன் மீரா!!" என்றவன் சமீராவின் கைகளை பிடித்து தன் மார்பில் வைத்துக்கொண்டான்.

"எனக்கு மீரான்னு தான் கூப்பிட வர்றது. சமீரான்னு தான் சொல்லி கூப்பிடணும் நீ சொன்னா ட்ரை பண்ணி மாத்திப்பேன். பட் அது ஆர்டிபிசியலா இருக்கும். புரிஞ்சுக்கோ!!"

"தேவையில்லை சமீர்!! என்னோட வாப்பாக் கூட 'மீரா'ன்னு தான் சொல்லுவார். எனக்கு இது தான் பிடிச்சுருக்கு!!" என்றாள் சமீரா.

அவர்கள் இருந்த அறை கதவு தட்டப்பட்டது.

"சமர்த்தா! சாதம் எடுத்துண்டு வரவா? பசிக்க போறது.. மாத்திரை போடணுமே!!" என்றார் சுமித்ரா வெளியில் இருந்தபடியே.

"மாமி, இன்னும் கொஞ்சநாழி ஆகட்டும்!" என்று பதிலளித்தான் சமர்த்.

"சரிடா! ஹார்லிக்ஸ் மட்டும் கலந்து தரேன். மீராவை வெளில வந்து வாங்கிக்க சொல்லு. ரொம்ப நாழி வெறும் வையத்தோட இருக்கப்டாது.!"

"சரி மாமி!"

சுமித்ரா ஹார்லிக்ஸ் கொண்டுவந்து தரும்போது, மீராவின் முகத்தில் இருந்த ஒளியை கவனித்தார். மீராவின் தலையை தடவி "நன்னா இருடி கொழந்த!!" என்று ஆசிர்வதித்து சென்றார்.

ஹார்லிக்ஸ் உடன் உள்ளே நுழைந்த சமீராவிற்கு மீண்டும் குற்ற உணர்ச்சி பெருகியது.

"என்னைப் பற்றி சொன்னதுக்குப் பிறகும், சுமிம்மாவின் கவனிப்பு இப்படியே இருக்குமா சமீர்?" என்று கேட்டாள் சமீரா.

"இப்போ உடனே யாருக்குமே தெரியவேண்டாம் மீரா! என் உடம்பு சித்த தேவலை ஆகட்டும். ரெண்டு பேரும் சேர்ந்தே சொல்லலாம்." என்றான் சமர்த்.

"மிஸ்டர் கோவிந்திற்கு தெரியும்.!!"

"அவன் யாரிடமும் சொல்லமாட்டான். ஏன் என்னிடம் கூட அவன் சொல்லவில்லை.!! அதை விடு மீரா, இப்போ உன்னைப் பற்றி சொல்லு."

சமர்த்திடம் சொல்வதற்காக அவள் வாழ்க்கையில் நடந்ததை நினைத்துப் பார்த்தாள் சமீரா. அவளின் கண்களில் கண்ணீர் பெருகியது.

அவளின் கண்ணீரை கைகளால் துடைத்துவிட்டான் சமர்த்.

"வாப்பாவும், உம்மாவும் என்னை ஒரு மகாராணியை போல தான் வளர்த்தாங்க." என்று ஆரம்பித்தவள் எல்லாவற்றையுமே சொல்லி அழுதாள்.

அதிலும் சமர்த்தை பார்த்த அன்றே பெற்றவர்களை இழந்தாள் என்று கேட்டதும், சமர்த்தின் விழிகளிலும் நீர் கோர்த்துக்கொண்டது.

அவளின் தலையை லேசாக தடவிக்கொண்டே அனைத்தையும் கேட்டு முடித்தான் சமர்த்.

"அந்த சகாயத்தை கண்டிப்பா அழிப்பேன் சமீர். அதிலே நானே அழிஞ்சாலும் கவலைப்படமாட்டேன்!!" என்றவளை அடிப்பட்ட பார்வைப் பார்த்தான் சமர்த்.

அப்பொழுது தீடீரென்று கோவிந்த் அறைக்குள் வேகமாக நுழைந்தான்.

"மிமீ மீரா நீ 'சமீரா' இல்ல!! நீ எங்காத்து பொண்ணும்மா!! என்னோட தங்கை!! கண்ணன் சித்தப்பா பொண்ணுடா நீ!! என்று அவளின் முகத்தைப் பற்றிக்கொண்டு அலறினான் கோவிந்த்.

கிருஷ்ணனுடன் வெளியே சென்றிருந்த கண்ணன் வீட்டிற்குள் நுழையும்போதே கேட்ட 'கண்ணன் சித்தப்பா பொண்ணுடா நீ!!' என்ற வார்த்தைகளில் தன் வயதையும் மீறி சமர்த்தின் அறைக்கு ஓடினார்.
 
Top