Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MALARE MOUNAMAA? - 19

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 19



சமீரா அவர்களுடனேயே இருக்க ஒத்துக்கொண்டாலும், அவளிடம் சற்று ஒதுக்கம் இருந்துக்கொண்டே தான் இருந்தது.

அதை எல்லோரும் அறிந்திருந்தாலும், எதிலும் அவளை ஒதுக்காமல் அவர்களுடனேயே இருக்குமாறு பார்த்தும் கொண்டனர்.

சமர்த் காவல் துறையினரை சமீராவின் முன்னாலேயே அழைத்து, சற்று கடுமையாகவே நடந்துக்கொண்டான்..

மருத்துவவிடுப்பு முடிவதற்குள் அக்சிடன்ட் செய்தவர்களின் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் பணித்தான்.

அவர்கள் சென்றதும் காவல்துறையில் இருக்கும் உயர் அதிகாரியை அழைத்து, விக்கி மற்றும் சகாயத்தின் மீது இருக்கும் தன் சந்தேகம் தவறானது.. அதனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று சமர்த் சொல்வதை சமீரா அமைதியாகவே பார்த்திருந்தாள்..

இந்த நேரத்தில் இந்த முடிவை எடுப்பது தான் சரியான முடிவு என்று அவளுக்கு புரிந்து தான் இருந்தது..

அடுத்து வந்த நாட்கள் மருத்துவமனையிலேயே கழிந்தது..

அதற்குள்ளாக அந்த அக்சிடன்ட் செய்தது தாங்கள் தாம் என்று யாரோ இருவர் வந்து சரணடைந்ததாக காவல் துறை அறிக்கை சமர்ப்பித்து இருந்தது..

சமீராவிடம் தனியே பேச சமர்த் முயன்றான்..

ஆனால் அதைப் புரிந்துக்கொண்ட சமீரா அந்த சந்தர்ப்பங்களை அறவே தவிர்த்தாள்..

அவளின் நடவடிக்கையைப் பார்த்து சமர்த்தை சமாதானம் செய்த கோவிந்த், கூடிய விரைவிலேயே அவளைப்பற்றி தெரிந்து சொல்வதாக உறுதி அளித்தான்..

உடல்நிலை சற்றே தேறியதும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டான் சமர்த்..

வீட்டினுள் நுழையும் போதே கண்ணன் மாமா வந்தது அவனின் மனதிற்கு இதமாக இருந்தது. அதை அவரிடம் சொல்லவும் செய்தான்..

"சமர்த்தா! உன் அம்மா ரொம்ப கவலை பட்டுண்டு இருக்கா! அப்பாக்கும் சித்த உடம்புக்கு முடியல வேற, அது வேற உன் அம்மாக்கு மனச போட்டு படுத்திண்டு இருக்கு. ரெண்டு பேருமே உன்னை பார்க்க தவிச்சுண்டு தான் இருக்கா.. அநேகமா அடுத்த மாசம் வருவா போல இருக்கு.." என்று சமர்த்தின் தலையை தடவி விட்டவாறே கூறினார் கண்ணன்.

அவரின் கைகளைப் பற்றியபடியே "அம்மாட்டயும், அப்பாட்டையும் பேசறேன் மாமா.. அவாளுக்கு தைரியம் சொல்றேன்.." என்றான் சமர்த்..

"சித்தப்பா இவன் கூட பேசிண்டே இருந்தா போதுமே உங்களுக்கு, பொழுது போறதே தெரியாதே!" என்று கண்ணனை கேலி செய்தான் கோவிந்த்.

மூவரும் இணைந்து நகைத்தபடியே இருந்ததை கவனித்தும், கவனிக்காத மாதிரி உள்ளே நுழைந்தாள் சமீரா.

"சுமி! மீரா வரா பாரு! அவளுக்கு காபி கலக்கறச்ச நேக்கும் சேர்ந்து கலந்துடு." என்ற கிருஷ்ணனைப் பார்த்து லேசாக முறுவலித்தாள் சமீரா..

வீட்டிற்குள் நுழைந்த மீராவை பார்த்த கண்ணனுக்கு மனதெல்லாம் பாரமாக இருந்தது.. பவித்ராவின் முக ஜாடையில் சமீரா இருந்தாலும், கண்ணனுக்கு வயதாகி விட்டபடியால் அவரால் அவளை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் போனது.

'மீரா' என்ற பெயரே அவரின் மனதை அழுத்தியதால் மிகவும் பாரமாக உணர்ந்தார்.

அவரின் மன உணர்வுகளை குழந்தையிலிருந்தே புரிந்துகொள்பவன் சமர்த். இப்பொழுதும் சரியாக அவரைப் புரிந்துக்கொண்டவன், அவரின் மன பாரத்தை குறைக்க எண்ணினான்.. அதனால்,

"மீரா, இது என்னோட கண்ணன் மாமா!" என்று அறிமுகப்படுத்தினான் சமர்த்.

அவரின் அருகில் சென்று லேசாக முறுவலித்தாவாறே கை கூப்பி வணங்கி, "நான் மீரா!" என்று தன்னை அறிமுகம் செய்துக்கொண்டாள் சமீரா.

அவள் 'சமீரா' என்று தன்னை அறிமுகப்படுத்தி கொள்ள மறந்தாளோ, இல்லை 'மீரா' வாகவே இவர்களுடன் இருக்க நினைத்தாளோ அது அவள் மட்டுமே அறிந்த ரகசியம்.

கண்ணன் பதிலுக்கு வணக்கம் வைக்காமல், "நன்னா இரும்மா ராஜாத்தி!" என்று அவளின் தலையை லேசாக தடவி விட்டவாறே கூறினார்..

அவரின் கைகளின் நடுக்கத்தை உணர்ந்த சமீராவிற்கு தன் தந்தை இப்ராஹீம் தான் நினைவிற்கு வந்தார்.

சில நேரங்களில் எதையோ நினைத்து அமர்ந்தவாரே இருக்கும் இப்ராஹீமின் அருகில் அவள் உட்கார்ந்ததுமே இதே போல லேசாக தலையை தடவி கொடுப்பார்.. அப்போது அவர் கைகளின் நடுக்கத்தை உணர்ந்திருக்கிறாள்..

இப்பொழுது கண்ணனின் கைகளில் இப்ராஹீமை உணர்ந்தாள்..

அவளைப் பொறுத்தவரை, இப்ராஹீமே பெற்ற தந்தை!!

விதி வசத்தால் நிஜ பெற்றோரை இழந்து நிற்கும் அவளுக்கு, அவள் நிஜ தந்தையின் கைகளில் வளர்ப்பு தந்தையை உணர்ந்தது இறைவனின் க்ருபையோ!!

கண்ணனைப் பார்த்து லேசாக முறுவலித்தவள் அவரிடம் விடைபெறும் நோக்கத்துடன் தலையை ஆட்டி சுமித்ராவிடம் சென்றாள்.

அவள் கண்களில் துளிர்த்த நீர் சமர்த்தின் இதயத்தில் உதிரமாக இறங்கியது..

மீரா இப்படி அவளையே தனிமைப் படுத்திக் கொள்கிறாளே! என்று வருத்தமும் சேர்ந்து அவனின் இதயத்தை அழுத்தியது..

சமர்த்தின் குடும்பத்தினரை விட்டு தள்ளி நிற்க வேண்டும் என்று தான் நினைக்கிறாள் சமீரா, ஆனால் ஓவ்வொருவரும் காட்டும் பாசத்தில் தள்ளி நிற்க திணறி தான் போகிறாள்.

இப்பொழுது கண்ணனின் கண்களில் ஒரு வித சொந்தத்தை உணர்ந்தது போல் முதல் முறை கோவிந்தை பார்க்கும் போது அதே வித உணர்வு வந்ததும் அவளின் நினைவிற்கு வந்தது..

சமையலறையில் இருக்கும் சுமித்ராவிடம் செல்லுவதற்கு முன் சற்று திரும்பி கோவிந்தையும், கண்ணனையும் பார்த்தாள்.. அதே வித உணர்வு அவளை ஆட்கொண்டதும், ஒரு பெருமூச்சுடன் சமையலறையினுள் புகுந்தாள்..

அவள் செல்லும் வரை அவளையே பார்த்திருந்த சமர்த், 'தன்னை தவிர மற்ற எல்லோரையும் பார்க்கிறாள்.. இப்படியே பண்ணிட்டு இருந்தான்னா அவளை இழுத்து பிடித்து இறுக்கி அணைத்து காதலை சொல்லிவிடவேண்டியது தான்!!' என்று மனதினுள் பேசிக்கொண்டான்.

அவனிடமும் ஒரு பெருமூச்சு எட்டிப் பார்க்கத்தான் செய்தது.

"என்ன மீரா, போன காரியம் எல்லாம் ஆயிடுத்தா?" என்று கேட்டார் சுமித்ரா.

"ம்ம் ஆச்சும்மா!" என்றவளின் குரலில் சற்றும் சுரத்தே இல்லை என்பதை புரிந்துக்கொண்டார் சுமித்ரா.

"இப்போ என்னத்துக்கு இந்த சோகம்?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா!"

"ஒண்ணும் இல்லாம இருந்தா சரி தான். நாங்கெல்லாம் இருக்கோம்டிம்மா கவலை பட்டுண்டு நிக்காம, சின்ன பொண்ணா, லட்சணமா, சந்தோஷமா நீ இந்த ஆத்துல வலம் வரணும்.. சரியா மீரா பொண்ணே!!" என்று அவளின் மோவாய்கட்டையில் கை வைத்து கொஞ்சினார் சுமித்ரா.

அவரின் அன்பில் சமீராவின் முகத்தில் ஒரு பெரிய புன்னகை எட்டி பார்த்தது..

சுமி மாமியிடம் மட்டும் புன்னகைக்கும் மீராவைப் பார்த்து பொறுமியபடியே அங்கே வந்தான் சமர்த்.. கையில் ஊன்றுகோல் பற்றியபடியே நடந்து வந்ததால் முகத்தில் வலியின் வேதனையும் தெரிந்தது..

"மாமி உங்க கிட்ட மட்டும் தான் புன்னகை!!" என்று பொதுவாக சொன்னான்.

"சமீர் ஏண்டாப்பா இப்படி உடம்ப படுத்திக்கற? உள்ள போய் சித்த படுத்துக்கோ.. இட்லி ஆன விட்டு மீரா கொண்டு வந்து தருவா!" என்றார் சுமித்ரா..

அதில் சமர்த்தின் முகத்தில் ஒளி தெரிந்ததை சமீரா கண்டுக்கொண்டாள்.

மனதில் 'நான் கண்டிப்பா எடுத்துக்கிட்டு போக கூடாது!' என்று முடிவு செய்தாள் சமீரா.

"சரி மாமி! சும்மா படுத்துண்டே இருக்கறது என்னமோ மாறி இருக்கு.. அதான் நடக்க ட்ரை பண்ணினேன். இட்லியை கொடுத்து விடுங்கோ.." என்று சொன்ன சமர்த் மெதுவாக நடந்து சென்றான்..

தன் அறைக்கு சென்ற சமர்த் சமீராவின் வரவிற்காக காத்திருந்தான்..

முப்பது நிமிடங்கள் கழிந்து, இட்லியை எடுத்து வந்தான் கோவிந்த்.. அவன் பின்னால் வருகிறாளா? என்று கோவிந்தின் பின்னே எட்டி பார்த்தான்..
 
"யாரை எதிர்பார்த்துண்டு காத்துண்டிருக்கியோ அவா உள்ளே வேலையா இருக்கா!! உள்ளே பால் கொட்டி சிந்திடுத்து அதை துடைச்சுண்டு இருக்கா மீரா! நோக்கு மாத்திரை சாப்பிட நேரமாயிடுத்தோன்னோ அதான் அம்மா என்னண்ட கொடுத்துவிட்டா.. சாப்பிடாவாடா!"

"துடைச்சுட்டு அவளேயே எடுத்துண்டு வர சொல்லியிருக்கலாமோன்னோ! அவ கூட தனியா பேசறதுக்கு சான்ஸே கிடைக்க மாட்டேங்குது.. போடா கோவிந்தா!" என்று சலித்துக்கொண்டான் சமர்த்..

"விட்றா விட்றா!! இப்போவே எல்லாத்தையும் பேசிட்டா, கல்யாணத்துக்கு அப்புறம் என்ன தான் டா பேசப் போற?"

"டேய்ய்!!" என்று பல்லைக்கடித்தான் சமர்த்..

"சமீர் நாளை வரை கொஞ்சம் வெயிட் பண்ணு. மீராவோட ஆபீஸ்ல சீப் எடிட்டர் கிட்ட அப்பாய்ன்மென்ட் வாங்கிட்டேன்.. அவரை பார்த்துட்டு ஓரளவாவது அவளைப் பத்தி தெரிஞ்சுண்டு அவ கூட பேசு டா!! எனக்கு என்னமோ அது தான் கரெக்ட்ன்னு தோணறது.. நீ என்ன சொல்ற?"

"நீ சொல்றதும் ஒரு விதத்துல கரெக்ட் தான் கோவிந்தா!! பட்.." என்று இழுத்தவனை

"அது தான் கரக்ட்!!" என்றவாறே சமர்த்திற்கு இட்லியை எடுத்து கொடுத்தான் கோவிந்த்..

"கோவிந்த் மீரா ஒரு வாரம் தான் இருப்பேன்னு சொல்லி ஆறு நாள் ஆயிடுத்து. நாளைக்கு கிளம்பறேன்னு அவ சொல்றதுக்குள்ள அவ கிட்ட நான் பேசியே ஆகணும்டா!!" என்றான் சமர்த்..

"புரியறது சமீர், எனக்கு ஏர்லி மோர்னிங்கே அப்பாய்ன்மெட் கிடைச்சு இருக்கு. அநேகமா நாளான்னைக்கு கார்த்தால கிளம்புவான்னு நினைக்கிறேன்.. கவலையே படாதடா இந்த தடவை அவளை எங்கயும் போகாம பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு.."

"ம்ம் பொறுத்திருந்து பார்க்கலாம்!!" என்ற சமர்த்தின் குரலில் நம்பிக்கை அறவே இல்லை..

சமையலறையில் இருந்த சமீராவிற்கோ அதற்குள்ளாக ஒரு வாரம் முடிய போகிறதே என்ற கவலை தான் அதிகமாக இருந்தது.. இருந்தாலும் மனதை திட படுத்திக்கொண்டு சுமித்ராவிடம் பேசினாள்..

"அம்மா நான் நாளைக்கு ஈவினிங் கிளம்பறேன்." என்றாள் சமீரா..

"அச்சோ நாளைக்கா!! இன்னும் ரெண்டு நாள் கூட சேர்ந்து இருந்தா கொறைஞ்சா போய்டுவ மீரா?"

"இல்லைம்மா இன்டெர்வியு இருக்குல்ல அதான் கிளம்பலாம்ன்னு!!"

"நாளைக்கு சாயந்திரம் கிளம்பவேண்டாம் மீரா. நாளான்னைக்கு சாயந்திரம் வேணும்ன்னா கிளம்பிக்கோ.. உன்னை தொந்தரவே பண்ண மாட்டேன்.. வெள்ளி கிழமை சாயங்காலம் ஆத்துப் பொண்ண அனுப்பறதுக்கு மனசே வரலடிமா!!"

சமீராவிற்கு இன்னும் ஒரு நாள் சமர்த் மற்றும் அவன் குடும்பத்தினருடன் இருப்பதற்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது அதனால்,

"சரிம்மா, நான் டே ஆப்டர் டூமாரோ கண்டிப்பா கிளப்பிடுவேன். ப்ளீஸ் இதுக்கு மேல என்னை கட்டாயப் படுத்தாதீங்கம்மா!!" என்றாள்..

"கண்டிப்பா படுத்த மாட்டேன் மீரா பொண்ணே!! அதான் எல்லாம் தொடைச்சாச்சே, சீக்கிரம் சாப்பிட வா! நான் மோரை கடைஞ்சு அப்பாக்கு கொடுத்துட்டு வரேன்.. அவருக்கு பெருங்காய மோர் சாப்பிடலன்னா ராத்திரி தூக்கமே வராது!!" என்றவாறே மோரை எடுத்து மத்து வைத்து கடைய ஆரம்பித்தார் சுமித்ரா..

அன்றைய இரவு சுமித்ராவுடன் அழகாக கழிந்தது சமீராவிற்கு..

அதிகாலையிலேயே எழுந்த கோவிந்தைப் பார்த்து அதிசயித்த சுமித்ரா,

"ஏண்டாப்பா கோவிந்தா இன்னிக்கு என்ன அதிசயம் இவ்ளோ சீக்கிரம் எழுந்துனுட்ட? சமீர் வெர்ன(நல்லா) இருக்கானோன்னோ?"

"அவன் தூங்கிண்டு இருக்கான்ம்மா. காபி தரயா? வெளில போகணும்."

"இதோ தரேன். இங்க என்ன வேலை இருக்கு நோக்கு?"

"அதை சாயங்காலம் சொல்றேன் மா!"

"என்னவோ போடா வர வர நீ என்ன பண்ற, ஏது பண்றன்னே புரியமாட்டேங்கறது." என்று சொன்ன சுமித்ராவைப் பார்த்து சிரித்தான் கோவிந்த்.

"எது பண்றேனோ அது எல்லாமே நல்லதுக்கு தான், என்ன பண்றேனோ அதுவும் நன்மைக்கே!! எப்படி பண்றேனோ அதெல்லாமும் நன்மைக்கு மட்டும் தான்..!!" என்று வாயடித்தான் கோவிந்த்.

"போடா போக்கிரி!! பெரிசா புது கீதை சொல்ல வந்துட்டான்!! நேக்கு கிருஷ்ண பரமாத்மாவோட பகவத் கீதையே போறும். நீ போய் உன் வேலைய கவனி!" என்றார் சுமித்ரா.

சில நிமிடங்கள் கழித்து சமீரா கோவிந்திற்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள்..

"பார்றா மேடம் இந்த வேலை எல்லாம் செய்யறாங்க!! நல்லவேளை அம்மா போட்ட காபி, இல்லைன்னா குடிக்கறதுக்கு சித்த யோசிச்சிருப்பேன்.. தேங்க்ஸ் மீரா!!" என்று அவளை வம்பிழுத்தான் கோவிந்த்..

இன்னும் சில மணிநேரம் மட்டும் தான் இவர்களுடன் இருக்க முடியும் என்பதாலேயே, என்னவோ கோவிந்திடம் சண்டையிடாமல், அவனின் கேலிக்கு மெலிதான புன்னகையே பதிலாக கொடுத்தாள்..

"என்னே ஒரு ஆச்சர்யம்!! நெருப்பு கோழியின் முகத்தில் புன்னகை!! கோவிந்தா! இன்னிக்கு உன்னோட நாள் நல்லா விடிஞ்சுருக்கு மேன்!!" என்று அவனிடமே பேசிக்கொண்டான் கோவிந்த்.

அதற்கும் புன்னகையையே பதிலாக தந்து விட்டு உள்ளே சென்றாள் சமீரா..

அதன்பின் காலை கடன்களை முடித்து எடிட்டரை பார்க்க கிளம்பினான் கோவிந்த்..

இருவருக்குமே அருகில் இருக்கும் பூங்காவில் தான் சந்திப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்ததால் கோவிந்த் சற்று சீக்கிரமாகவே அங்கு சென்றான்.

ஓரிரு நிமிடங்களிலேயே அவர் வந்ததும் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டான்..

பத்திரிகை துறையில் இருக்கும் அவருக்கு அவனின் அறிமுகம் தேவையாய் இருக்கவில்லை, இருந்தாலும் சம்பிரதாயமாக கோவிந்த் சொல்லுவதை கேட்டுக்கொண்டார்.

"சோ மிஸ்டர். கோவிந்த், உங்களுக்கு மீராவை பத்தி தெரியணும். சொல்றேன் ஆனா.." என்று நிறுத்தியவர், "தெரிஞ்சதும் அவங்களை விட்டுவிட மாட்டீர்கள் தானே?" என்று கேட்டார்.

"ஏன் இப்படி கேட்கறீங்கன்னு எனக்கு புரியல தான். பட் கண்டிப்பா மீராவை விட்டு கொடுக்க மாட்டேன் என்ற உறுதியை அளிக்கிறேன் சார்!!" என்றான் கோவிந்த்..

"முதல்ல அவங்க பேரு மீரா இல்லை, சமீரா!! கோவைக்குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி இறந்த இப்ராஹீம் தான் அவங்களோட அப்பா!! அதே குண்டு வெடிப்புல பலியான பேகம் தான் அவங்க அம்மா!!" என்று சொல்லிவிட்டு கோவிந்தைப் பார்த்தவர்,

"இப்போ புரிஞ்சுருக்குமே நான் ஏன் அப்படி கேட்டேன்னு.!"

அவரின் கேள்வி புரிந்தாலும் பதில் சொல்ல த்ராணியற்று நின்றுக்கொண்டிருந்தான்..

மீராவின் பெயர் மற்றும் அவளைப் பெற்றவர்களை பற்றி அறிந்ததும் என்ன முடிவு எடுப்பதென்பதே அவனுக்கு புரியவில்லை..
 
Top