Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MALARE MOUNAMAA? - 12

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 12
காவலர்களின் மூலம் இருவரும் (லோகு மற்றும் சேரன்) சாலையில் நடந்த விபத்தினால் மரணம் அடைந்திருந்தனர் என்று அறிந்துக்கொண்டாள் சமீரா.
விபத்தின் மீது சந்தேகம் இருந்தாலும் சமீரா அவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேச முனையவில்லை.. அவர்கள் சொன்னதை மெளனமாக அப்படியே ஏற்றாள்.
மாவட்ட ஆட்சியர் உடனிருந்ததை கவனித்திருந்த அந்த காவலர்கள், சமீராவிடம் சற்று மரியாதையாகவே பதில் அளித்துக்கொண்டிருந்தனர்.
விஸ்வநாதனின் உடலோடு மற்ற இருவரின் உடலையும் எடுத்து செல்வதாக கூறிய சமீராவிற்கு துணையாக இருக்க முடிவு செய்தான் சமர்த்.
அதற்காக கோவிந்தையும் மேலும் இரு நாட்கள் விடுப்பு எடுக்குமாறு கேட்டுக்கொண்டான் சமர்த்.
கோவிந்த் அமைதியாகவே ‘சரி’ என்பது போல் தலையாட்டிவிட்டு, மீராவையே (கோவிந்திற்கும் அவள் மீராவாகி போனாள்) கவனிக்க ஆரம்பித்தான். மீரா என்றப பெயரும் அவளை யார் என்று கண்டுபிடிக்க கோவிந்தை தூண்டியது.
(ச)மீராவை பற்றி இந்த இரு நாட்களுக்குள் எப்படியாவது அறிந்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான் கோவிந்த். அவனின் மனதில் அன்று சாயங்காலம் விமலாவிற்காக காத்திருந்தது நினைவிற்கு வந்தது.
விமலாவிற்காக வெகுநேரம் காத்திருந்த கோவிந்தை தன்னுடைய அலுவலக பணி முடிந்ததும் அழைத்துக்கொண்டு கிளம்பினான் சமர்த். தங்களுடைய இரவு உணவை அருகிலிருக்கும் உணவு விடுதியில் முடித்துக்கொண்டனர். அங்கிருந்து பக்கத்தில் இருந்த சிறு பூங்காவிற்குள் நுழைந்து பேச ஆரம்பித்தனர்.
சமர்த் கோவிந்திடம் முதல் நாள் இரவு நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான்.
“கோவிந்த்! அவாள்ளாம் எங்கள தேடறச்சே நேக்கு உயிரே போயிடுத்து.. உன்ன கூடப் பார்க்காம போயிடுவேன்னே நினைச்சு ரொம்ப பயந்துட்டேன். இதுல அந்த மீரா வேற அங்க இருந்து நான் ஏறிண்டிருந்த மரத்துலேயே வந்து ஏறினாப் பாரு! நேக்கு கை காலெல்லாம் உதறிடுத்து.
அவளோட அரவம் கேட்டு திரும்பி போனவா எல்லோரும் வந்துடுவாளோன்னு நான் பயந்த பயம் இருக்கே!! பெருமாள் தான் எங்கள காப்பாத்தினார்..!!” என்று நிறுத்தி, இரு கைகளையும் கூப்பிய படி மேலே வானத்தைப் பார்த்து சேவித்துக் கொண்டான் சமர்த்..
பெருமாளை சேவித்த சமர்த், மேற்கொண்டு (ச)மீராவைப் பற்றி பேசினான். “விஸ்வநாதன் சாரை சுட்டதும் கத்தப் போனவளை, அப்படியே இருக்க அணைச்சுண்டு ஒரு கையாலேயே அவ வாயை மூடிண்டு இருந்தது நேக்கு ரொம்ப பிடிச்சதுடா கோவிந்தா.”
உயிரே பறிபோகிற மாதிரி இருக்கும் சூழ்நிலையில் ஒருப் பெண்ணின் அருகாமை தனக்கு பிடித்தது என்று கூறுபவனை(உளறியவனை) கோபப் பார்வைப் பார்த்தான் கோவிந்த்.
“ஏண்டா!! அப்படிப் பார்க்கிற?” – சமர்த்.
“சமீர்!! உன்னைப் பத்தி நேக்கு தெரியாதா? சின்ன வயசுலேர்ந்து நோக்கு கலெக்டர் ஆகணுங்கற கனவை தவிர உன் மனசுல வேறு எந்தவிதமான கனவுகளுக்கோ, சலனங்களுக்கோ இடமேயில்லைன்னு நேக்கு தான் நன்னா தெரியுமே!!
அதுக்காக கலெக்டர் ஆன மொதோ(முதல்) நாளேவா உன் மனச இப்படி அலைபாய விடுவ? அதும் மரத்துல தொங்கிண்டு.. ஆளப்பாரு முட்டாள்!! நோக்கு எதாச்சும் ஆச்சுன்னா நம்ம ஆத்துல இருக்கறவா கதிய கொஞ்சமாச்சும் நினைச்சுப் பார்த்தியா?” என்று கோபப்பட்ட கோவிந்த், சமர்த்திடமிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
அவனின் முகத்தை திருப்பிய சமர்த், “கோவிந்த்!! நேக்கு மட்டும் நம்ம ஆத்து மேல அக்கறை இல்லையா, என்ன?, இனிமே இன்னும் ஜாக்கிரதையா நடந்துப்பேண்டா..!!
அதான் நோக்கே தெரியறதே நான் இது மாதிரியெல்லாம் நடந்துண்டது இல்லைன்னு..அப்பறம் என்ன..? இப்போ நான் கேட்ட கேள்விக்கு பதில சொல்லு கோவிந்தா..!!
அவள அணைச்சுண்டு நிக்கறச்சே நேக்கு ஏன் ரொம்ப பிடிச்சது? இப்பவும் அவளை கைக்குள்ள வச்சுக்க தோணறதே அது ஏன்..?” என்றவன் மேலும் சமீராவைப் பற்றி எதேதோ சொல்லிக்கொண்டிருந்தான் என்பதை விட உளறிக் கொண்டிருந்தான் என்பது தான் சரி.
சிறு வயதில் இருந்தே இருவரும் நல்ல தோழர்கள்.. சமர்த் கோவிந்தை விட ஒரே வயது சிறியவனாக இருந்ததால், அவனுக்கு முளைக்கும் எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் கோவிந்தையே நாடுவான்..
இப்பொழுதும் அதே போல் சமீராவைப் பற்றி கோவிந்திடம் சொல்லிவிட்டு, அவளால் தன் மனதில் ஏற்பட்டிருந்த தாக்கத்தால் உண்டான சந்தேகத்தையும் கோவிந்திடமே கேட்டான் சமர்த்.
“இங்கப்பாரு சமீர் நீ ஒண்ணும் டீன் ஏஜ் பயனில்லை.. இதெல்லாம் இன்பாச்சுவேசன்ன்னு சொல்றதுக்கு.. உன் கரீயர உன்னோட விருப்பபடியே ஆரம்பிச்ச நீ அடுத்து குடும்பஸ்தன் ஆகறதுக்குண்டான காரியத்தையும் பார்க்க ஆரம்பிச்சுட்டியோன்னு என் பட்சி சொல்றது..” என்றான் கோவிந்த் சமர்த்தைப் பார்த்து ஒரு கண்ணை அடித்தபடி.
‘அப்படியும் இருக்குமோ? அவளை ஆத்துக்காரியா என்னால நன்னா பார்த்துக்க முடியுமா?’ என்று மனதினுள் நினைத்த சமர்த்திற்கு, அவள் சகாயத்தை போட்டு தாக்கியது நினைவிற்கு வந்தது.. ‘பெருமாளே!! அந்த அடாவடிக்காரி மீது தானா நேக்கு ஆசை வரவேணும்? கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் எந்த நேரமும் அலெர்ட்டா இருக்கணும் போல..!!’ என்று சிந்தித்தான் அலெர்ட் ஆறுமுகமாக.
“சமீர்!! நீ அவாளை தனியா விட்டுட்டு வந்திருக்க கூடாது டா.. பாவம் டா மீரா.. போலீஸ்காரா எல்லாம் படுத்திடுவா.. நேக்காவது கால் பண்ணி சொல்லியிருக்கலமில்ல.. மீரா கூட நானாவது இருந்திருப்பேன்..” என்றான் கோவிந்த்.
“போடா கோவிந்தா!! நீ ஏன் சொல்ல மாட்ட..? நான் கேக்கற எந்த கேள்விக்கும் பதில் சொல்லவேயில்லை. மௌனமாவே இருந்து மனுஷன கொன்னுட்டா..
அவளா முடிவு பண்ணி ஏதாவது சொல்லும்போது நாம உடனே அவ சொன்னத செஞ்சுடணும்ங்கற மாதிரி ஒரு குரல் அவளுக்கு. அவ வாய்ஸ் செம கமாண்டிங்..
அந்த குரலால ‘நானேப் பார்த்துகிறேன் நீங்க போங்க சார்.’ ன்னு சொன்னவுடனே நேக்கு தலையை ஆட்டி கிளம்பத்தான் தோணித்து.. அதை நான் இப்போ சொன்னா நோக்குப் புரியாது.. அவ உன் கிட்ட பேசும் போது நீயே புரிஞ்சுப்ப..” என்றான் சமர்த்.
சற்று இடைவெளி விட்டு அமர்ந்திருந்த சமர்த்தை நிமிர்ந்துப் பார்த்து சிரித்த கோவிந்தின் மனக் கண்ணில், அவனிடம் அவளுடைய பெயரைக் கூட சொல்லாமல் பக்கத்தில் இருந்தவளை(விமலா)யும் சொல்லவிடாமல் செய்தவள் ஒரு நிமிடம் வந்துப் போனாள்.
“புரியுது சமீர்..!! குடும்பஸ்தன் ஆகறத்துகுண்டான எல்லா தகுதியும் நோக்கு வந்துடுத்து.. இப்போவே அவ சொன்னதை உடனே செய்யற பழக்கம் வந்துடுத்தே..!! குட்.. வெரிகுட் கீப் இட் அப்..!!
 
உன்னோட சீனியரான நேக்கு இன்னும் அந்த தகுதி வரலை.. போய் கோதைக் கிட்ட கேட்டுப் பாரு.. அதெல்லாம் நேக்கு சுட்டுப் பட்டாலும் வராதும்பா..” என்று சிரித்த கோவிந்த்
“சமர்த் நீ இது காதல் தான் என்ற முடிவுக்கு உடனே வந்துடாத.. முதல்ல அவளுக்கு கல்யாணம் ஆயிடுத்தா இல்லையான்னு கன்பர்ம் பண்ணிண்டு உன் மனசுல ஆசைய வளர்த்துக்கோடா.. அதுக்கு இந்தப் சகாயத்தின் பிரச்சினையையே நீ யூஸ் பண்ணிக்கலாம்ன்னு நேக்கு தோணறது..
அவளைப் பத்தி தெரிஞ்சுக்க நானும் ஆவலாக் காத்துண்டிருக்கேன்.. பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு.. சரி.. சரி.. வா!! ஆத்துக்கு கிளம்பலாம், நாழியாயிடுத்து.. நாளைக்கு வேற நான் ஊருக்கு கிளம்பணுமே..!!” என்றான் கோவிந்த்.
இருவரும் பூங்காவை விட்டு கிளம்பி வெளியே வந்து நடக்க தொடங்கினர். சிறிது தூரத்திலே இருந்த அரசு மருத்துவமனை வளாகத்தில் எதையோ சிந்தித்தப்படி இருந்த (ச)மீரா அவர்களின் கண்களுக்கு தென்பட்டாள்.
மனதில் புதிதாக தோன்றிய சலனத்துடன் ஆவல் பொங்க அவளையேப் பார்த்திருந்தான் சமர்த்.
கோவிந்த் அவளருகே சென்று பேசுமாறு சமர்த்தை கண்களாலேயே பணித்தான். சமர்த்தும் அவனுக்கு ‘ஓகே’ என்று முனகி விட்டு (ச)மீராவை நோக்கி சென்றான்.
“சார்..!!” என்ற (ச)மீராவின் குரலில் நடப்பிற்கு திரும்பினான் கோவிந்த்.
பார்த்தது முதல் அவளுள்ளேயே லயித்திருந்த சமர்த்திற்கு, சில நிமிடங்களிலேயே இருக்கும் இடம் மற்றும் சூழ்நிலையும் புரிந்ததால் அவளை ரசிப்பதை ஒத்திவைத்திருந்தான்.
“சொல்லுங்க மீரா..!!” –சமர்த்.
“நீங்க கிளம்புங்க.. நான் பார்த்துகிறேன்..” என்றவளுக்கு கோவிந்த் பதில் அளித்தான்.
“மீரா..!! நீ மட்டும் தனியா இருக்க? உங்க பத்திரிகை ஆபீஸ்ல வேற யாரும் வேலைப் பார்க்கலையா?” என்று குத்தலுடன் கேட்டான் கோவிந்த்.
“எங்க வேலைய நாங்க, எப்போ, எப்படிப் பார்க்கணும்ன்னு எங்களுக்கு தெரியும்..!! அநாவசியமா எதுவும் பேசிட்டு உங்க டைம வேஸ்ட் பண்ணாதீங்க மிஸ்டர்..!! எனக்கு நிறைய வேலை இருக்கு.. உங்க கூட பேசி என் எனெர்ஜிய வேஸ்ட் பண்ணிக்கவும் நான் விரும்பல..” என்றவள்
சமர்த்திடம் திரும்பி, “சார்!! ப்ளீஸ்!! நீங்க கிளம்புங்க.. எங்களால சாரி என்னால எந்த தொந்தரவும் உங்களுக்கு வேண்டாம்.. ப்ளீஸ் இந்த இடத்தை விட்டு போயிடுங்க..” என்று கிட்டத்தட்ட கெஞ்சினாள் சமீரா.
“நோ மீரா!! உங்களை இப்படி தனியா விட்டுட்டு நாங்க எங்கயும் போகமாட்டோம்.. காலையில உங்களை விட்டு விட்டு போனது ஒரு மாவட்ட ஆட்சியரா தான். நீ சொன்னதிலும் ஒரு நியாயம் இருந்ததினால் தான் நான் மறு பேச்சு பேசாமல் அந்த இடத்தை விட்டு கிளம்பினேன்..
இதுக்கும் மேலயும் நீ சொல்றதை என்னால கேட்க முடியாது மீரா.. ப்ளீஸ் நீ புரிஞ்சுகோ..!! இனிமே என்ன ஆபத்து வந்தாலும் நீ தனியா இருக்க வேண்டாம்.. நாங்க உன் கூட எப்போதுமே இருப்போம்..” என்று கோவிந்தின் தோளில் கை போட்டு அணைத்து (ச)மீராவைப் பார்த்துக் கூறினான் சமர்த்.
“ஆமாம் மீரா..!!” என்றான் கோவிந்த்.
வந்தது முதலே சமர்த்தின் கண்களில் தெரியும் ஆர்வம் அவளுக்கு இதமாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள அவளால் முடியவில்லை.
அதனால், “சரி சார்..!! இவர்களோட இறுதி சடங்கு முடிந்ததுமே நீங்க இருவரும் என்னை விட்டு எப்போதுமே விலகி இருக்கணும்.. இதற்கு நீங்க ஒத்துக்கொண்டால் தான் நான் மேற்கொண்டு இந்த இடத்தில் இருப்பேன்..
இல்லையென்றால் இந்த இடத்தை விட்டு இப்போதே சென்று விடுவேன்.. மூன்று உடல்களையும் வைத்துக்கொண்டு நீங்க என்ன செய்வீர்களோ எனக்கு தெரியாது.. எதையோ செய்ங்க ன்னு நான் போய் கிட்டே இருப்பேன்.”
“என்ன மீரா இப்படி பேசற..?”
“இதை விட கொடூரமான மரணங்களை எல்லாம் நானும் பார்த்திருக்கேன்.. அதோ அவங்களும் பார்த்திருக்காங்க!!” என்று விஸ்வநாதனையும், லோகுவையும் சுட்டிக் காட்டி கூறினாள் சமீரா.
(சமீரா, விஸ்வநாதன் மற்றும் லோகு மூவருமே கோவையில் நடந்த குண்டு வெடிப்பினால் பாதிக்கப் பட்டவர்கள். சேரனைப் பற்றி சமீரா எதுவுமே அறிந்திருக்கவில்லை அவனுக்கு உறவுகள் என்பதே கிடையாது.)

நான் இப்படியே இந்த இடத்தை விட்டு சென்றாலும் விஸ்வநாதன் சாரின் ஆன்மா என்னை எப்போதுமே தவறாக நினைக்காது.. அதனால் என் மனசு இறுகிவிட்டது.. மரணத்தின் மீது எனக்கு பயமுமில்லை..
நீங்கள் என்னைப் பற்றி தவறாக நினைத்தாலும் எனக்கு கவலையில்லை.. என்னை ஏமாற்ற நீங்கள் நினைத்தால் உங்களிடமிருந்து என்னை மறைத்துக் கொள்ளவும் எனக்கு தெரியும்.. என்னை ஏமாற்ற நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்..” என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்துக்கொண்டாள்.
தங்களிடம் வாக்கு கேட்டாளா இல்லை கட்டளையிட்டாளா என்று புரியாமலே இருந்த சமர்த்தும் கோவிந்தும் மேற்கொண்டு எதுவுமே பேசாமல் சமீராவுக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தனர்.
மேலும் சில மணி நேரங்கள் கடந்தன.. மௌனம் மட்டுமே அவர்கள் மூவருக்கும் துணையிருந்தது.
மற்ற இரு உடல்களின் பிரேத பரிசோதனை முடிந்ததும் விஸ்வநாதன் உடலையும் அதோடு சேர்த்து எடுத்துக்கொண்டு புறப்பட்டனர். அம்மூவரும்.
கோவிந்தும் சமர்த்தும் மூன்று உடல்களுக்கும் இறுதி சடங்கு செய்வதை கண்களில் நீருடன் பார்த்திருந்தாள் சமீரா.
எல்லாவற்றையும் முடித்துவிட்டு வந்த அவர்களை எதிர்க்கொண்ட சமீரா, “தங்யூ வெரி மச் சார்..!! “ என்று இருவரிடமும் கூறியவள் கோவிந்திடம் திரும்பி, “மிஸ்டர்!! என்னோட டிடைல்சை நான் போலீஸ் கிட்ட கொடுக்கும்போது நீங்களும் நோட் செஞ்சதை கவனிச்சுட்டு தான் இருந்தேன்..
அது இனிமே உங்களுக்கு தேவைப்படாது.. உங்களுக்கு தெரிஞ்ச அட்ரஸ்ல நான் இனிமே இருக்க மாட்டேன்.. டெய்லி நியூஸ்லயும் இனிமே என்னைப் பார்க்க முடியாது..” என்ற சமீரா தொடர்ந்து அவளிடம் இருந்த இரு சிம்கார்டுகளையும் தீக்குச்சியின் உதவியால் எரித்தாள்.
இருவரிடமும் “குட்பை பார் எவர்..!!” என்றபடியே கிளம்பிச் சென்றாள்.
 
Top