Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maayam seithaayadi

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம்-8

வீட்டிற்குள் வந்ததும் வெடித்தாள் தாமரை....

‘’என்னம்மா....இந்த நந்தினி இவ்ளோ அல்பமாயிருக்கா...ஒரு ஸ்கூல் டீச்சர்க்கு உள்ள பக்குவம் அவகிட்ட சுத்தமா இல்ல...’’

‘’கத்தாதேடி....மெல்லப்பேசு...காதுல விழுந்துடப் போறது....அவளுக்கு தெரிஞ்சது அவ்ளோதான்..’’ என்று சரசு தனக்கிருந்த எரிச்சலையும் மறைத்துக் கொண்டு மகளை சமாதானப்படுத்த முயல,மேலும் கடுப்பானாள் தாமரை...

‘’அவங்களுக்கு உதவி செய்யணும்னுதான் நினைச்சு ஆரம்பிச்சோம்....அது இப்டி வந்து முடியும்னு யார்தான் எதிர் பார்த்தா...நாமளே இனிதான் நம்மளை எல்லா வகையிலும் தயார்படுத்திக்கணும்...இவ என்னடான்னா,நாம சதி பண்ணி அவளுக்கு அமைய விடாம ஆக்கிட்டாப்புல,நினைச்சு குழாயடி சண்டையாட்டம் பண்றா’’ என்றாள் தாமரை மனக் கொதிப்பு அடங்காமல்....

‘’சின்னப்புள்ளதானே....கோபம் தான் முன்னால நிக்கிது..அவளுக்கு சமமா நாமளும் போட்டி போட வேண்டாம்னுதான்,நான் இறங்கிப் பேசினேன்...’’

‘’சரி...அவளை விடு....தொலையறா....இந்த பெரியம்மாவைப்பாரேன்....என்னமோ ,நாம அந்த மாப்ளையை பிடிச்சி வச்சிண்டாப்புல இல்ல பேசறாங்க...’’

‘’நம்ம பொண்ணுக்கு நல்ல இடம் தகையிலையே அப்டிங்கற வருத்தம் அவளுக்கு...ஏற்கெனவே நந்தினி உன்னைக்காட்டிலும் கலர் கொஞ்சம் மட்டு அப்டிங்கற குறை உண்டு விஜயாவுக்கு...அந்த ஆத்தாமையும் சேர்ந்துடுத்து’’

‘’நந்தினிக்கு அமையலேன்றதை விட,எனக்கு அமைஞ்சிடுத்தேன்னுதான் பெரியம்மாவுக்கு ரொம்ப வருத்தம்....நன்னா முகத்திலயும்,பேச்சிலயும்,பளிச்சுன்னு தெரியறது’’

‘’நிஜம்தான்....அது எனக்கும்தான் தெரியறது,,,புரியறது ...என்ன செய்ய சொல்றே’’ என்றபடி அடுப்பில் தோசைக்கல்லைப் போட்டாள் சரசு....அது காய்வதற்குள் சட்னியைப் அரைத்து விடலாம் என்று மிக்ஸியை எடுத்து தேங்காய் ,மிளகாயைபோட்டாள் ....பக்கத்தில் இருந்த பொரிகடலை டப்பாவில் இருந்து ஒரு கை எடுத்து வாயில் போட்ட தாமரை

‘’ம்மா...நாம நல்லாருக்கணும்னு நினைக்கற நாலு பேரு,நம்மளைச் சுத்தி இருந்தாதான் நாம நல்லா இருப்போம்...இது மாதிரியான நெகட்டிவ் தாட்லாம் நம்மளை ரொம்ப பாதிக்கும்...’’ என்றாள்...

‘’பட்டிமன்ற நெனைப்புலேயே வீட்டுலயும் பேசப்டாது....நீ இன்னிக்கு வளர்ந்து நின்னுக்கிட்டு வாயி பேசறே...உங்கப்பா போனதிலேர்ந்து அவாதான நமக்கு ஆதரவு....! எனக்கு பொறந்தாத்துலெர்ந்தும் பெரிசா சப்போர்ட் இல்லே...பெரியப்பா தயவு இல்லேன்னா நாம இத்தனை வருஷம் கவுரமா காலங்கழிருக்க முடியுமாடி..சிந்தனை பண்ணிப் பாரு’’ என்றபடி மகளுக்கு நெய் தோசையை தேங்காய் சட்டினியுடன் பரிமாறினாள்....நல்ல பசியில் இருந்த தாமரை வேகமாக தோசையை பிட்டு வாயில் போட்டாள்.....விக்கியது....மூன்றாவது விக்கலில் கையில் தண்ணீர் வந்து சேர்ந்தது....இது தான் அம்மா...குரல் இறங்கியது தாமரைக்கு ....

‘’ஆதரவெல்லாஞ்சரிதான்...ஆனா,கால்ல கட்டுன சலங்கையே ,விலங்காயிரக்கூடாது...அதையும் பார்த்துக்க’’

‘’சரிடி....போன கதையை விடு.....இப்ப நடக்கற கதைக்கு வா....நாம ஓடாம,தேடாமலேயே,நம்ம வீட்டுல கல்யாணப் பந்தல் போட்டாச்சே....அதுக்கு என்ன செய்ய...’’

‘’என்கிட்ட கேட்டா....எல்லாத்தையும் நீங்களா பண்ணினீங்க..! இப்ப மட்டும் என்கிட்ட கேள்வி கேட்டா...’’ வாயில் தோசையுடன் முறைத்தாள் தாமரை..

தனக்கு ரெண்டு தோசை சுட்டு எடுத்துக் கொண்டு, மகளுக்கு எதிரே அமர்ந்தாள்..

‘’டீ தாமரை...உனக்குப் பையனை பிடிச்சிருக்கோல்லியோ’’

‘’பரவாயில்லையே...இப்பவாவது, என்கிட்ட கேக்கணும்னு தோணித்தே….’’
‘’பதிலைச் சொல்லுடி....டென்சன் பண்ணாம’’

‘’நாட் பேட்’’
‘’அப்டின்னா...’’

‘’மோசமில்லேன்னு சொன்னேன்...சரி! நடக்கறபடி நடக்கட்டும்...கை மீறி நடக்கறதுக்கு நாம என்ன செய்யறது? இன்னாருக்கு இன்னாரென்பது இறைவன் வகுத்தது...அதை மாத்தவும் முடியாது....மறுக்கவும் முடியாது....கொஞ்சம் குழப்பும்....கடைசியில சுபமாத்தான் முடியும்....சுபமா முடியலேன்னா,அது கடைசி இல்லேன்னு அர்த்தம்’’ என்றபடி கை கழுவினாள்...

‘’என்னடி நூத்துக் கிழவி மாதிரி ஏதோதோ பேசறே....’’
‘’இன்னிக்கு பட்டிமன்ற தீர்ப்பு இது....ஞாபகம் வந்துச்சு....சொன்னேன்...தொண்டை கார கரன்னு இருக்கு....பாலை சூடு பண்ணி ,மஞ்சள் ,தேன் போட்டு வையி.....நான் நைட்டி மாத்திட்டு வரேன்’’என்றபடி அவள் அறைக்குப் போனாள் தாமரை...பால் அருந்தி விட்டு ,படுக்கையில் விழுந்த

தாமரைக்கு,ரவி வர்மா கண் முன் நிழலாடினான்....ச்சே....எனக்கென்று தெரிந்திருந்தால்,இன்னும் நன்றாகப் பார்த்திருப்பேனே....நந்தினிக்கு உடைமையானது என்று நினைத்தேன்....ஆனால்,மாலை என் கழுத்துக்கு அல்லவா ஆர்டர் தரப்பட்டிருக்கிறது....நான் அறியாமலே,எனக்குப் பெண் பார்க்கும் படலம் நடந்திருக்கிறது..

..என்ன வேடிக்கை...என் தகுதி பார்த்தே தரப்பட்டிருக்கிறது....அவன் செயலோ,இவன் செயலோ....ஜாங்கிரி சாப்பிட்டது போல,இனிப்பாகத்தான் இருக்கிறது....ம்ஹூம்....நடக்கட்டும்....எங்கேயோ இருந்து கொண்டு,இந்த வீட்டை ஆட்டிப்படைக்கும், ரவி வர்மா இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பான்?..

..அவன் மீது தவறேதுமில்லை...அவன் என்னை டிக் செய்திருக்கிறான்...தனது விருப்பத்தை சொல்லியிருக்கிறான்....நிர்பந்தம் ஏதுமில்லையே....எங்களுக்கு இஷ்டமில்லை என்று சொல்லி விட்டால்,ஒரு கஷ்டமும்,இல்லைதான்....அதற்கு மனமுமில்லை....அவசியமுமில்லை..

..வீம்புக்காக வேண்டாமென சொல்வது,சரியில்லையே....கழிப்பதற்க்கு காரணமில்லை...அதுவும் போக,வெகு நாட்களாக,அம்மாவையே உலகமாகக் கொண்டிருக்கும்,என் மனம் ஒரு ஆரோக்கியமான,துணையை நாடுகிறதோ? அதில் கூடத் தவறேதுமில்லைதான்...தகுந்த வயது வந்ததும் துணை தேடுவது,உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவான ஒன்றுதானே...நான் மட்டும் விதி விலக்கா என்ன.
..மேலும்,இதில் தொடர்புடைய நாங்கள் யாருமே திட்டமிடாத ஒன்றல்லவா இது...ரவி வர்மா நந்தினியின் விலாசத்தை எடுத்துக் கொண்டு,என் வீட்டு நடையேறி வந்ததில்தான் இடறி விட்டது....விலாசம் மாறியது போல்,ஜோடியும் மாறிவிட்டது.
...அதனாலேன்ன..
.. சிலருக்கு அவர்களது கல்யாணங்களில் கலாட்டா நடக்கும்...சிலருக்கு கலாட்டா முடிந்து தான் கல்யாணம் நடக்கும்..நாம்
இரண்டாவது ரகம் போலிருக்கிறது...இதில் என்னுடைய சாமர்த்தியம் ஒன்றுமில்லை
..எல்லாம் அவன் செயல் என்ற எண்ணத்துடன் தூங்கிப்போனாள் தாமரை..படிப்பறிவும்,சிறு வயதிலேயே ஏற்பட்ட பட்டறிவும் தாமரைக்கு இப்படியொரு பக்குவத்தைத் தந்திருக்கிறது ..எப்படியிருப்பினும்,கண்ணிப்பெண்ணுக்கு காதல் குழப்பங்கள் வராவிட்டால்,அது நன்றாகவா இருக்கும்?.
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கண்ணம்மாள்ஸ்ரீதர் டியர்
 
Last edited:
Top