Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maayam seithaayadi-6

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம்---6

ஜெயராம் குடும்பம் மினி சுற்றுலாவுக்காக காரில் கும்பகோணம் சென்று கொண்டிருந்தது...ஒரு மாறுதலுக்காக தனது குடும்பத்தினரை, இது போல பல இடங்களை தேர்வு செய்து ,அங்கு அழைத்து சென்று வருவது ஜெயராமிற்கு பழக்கமான ஒன்றுதான்....சுற்றுலாக்கள் பார்வையை விசாலமாக்கும் என்பது அவன் கருத்து....

உதவிக்காக சுந்தரும் உடன் வருகிறான்....காரில் வைத்துதான் அம்மாவும் பெண்ணும் தலை வாரினார்கள்..

‘’ஜெயா.....எக்ஸ்ட்ராவா ரெண்டு பாட்டில்ல தண்ணீ பிடிச்சு வச்சேன்...அதை கார்ல ஏத்தியாச்சான்னு ஞாபகமில்ல...’’ என்றாள் சிவசங்கரி தலைப் பின்னலுக்கு ரப்பர் பேண்ட் மாட்டியவாறு....

‘ஒண்ணும் பிரச்சினையில்ல சிவா...இருந்தா ஓகே...இல்லேன்னா கும்பகோணத்துல வாங்கிக்கலாம்....எதையாவது வீட்டுல மறந்துட்டு கிளம்பலென்னா....அது டூருக்கு அழகா என்ன...’’ என்று குணமாக பதில் சொல்லத் தொடங்கி சற்று குத்தலாக முடித்தான் ஜெயராம்....

யுவன் அப்பாவின் கமெண்ட்டுக்கு வாய் பொத்தி சிரிக்க, சிவசங்கரி, கையிலிருந்த சீப்பால்,மகனின் தலையில் ஒன்று போட்டாள்...’’ அவ்ளோ அக்கறை இருக்கற,அக்கறை சிகாமணி தண்ணி பாட்டிலை எடுத்து வச்சிருக்கலாம்லா...’’

‘’ம்மா....கிளம்பறப்ப இவன் நம்மளோட, ஃபேஸ் கிரீம் எடுத்து போட்டுட்டு இருந்தான்...’’ யாமினி...

‘’யுவன்....ஏண்டா இப்டி....ஜெண்ட்சுக்கு தனியா ஃபேஸ் கிரீம் இருக்கு....வாங்கி தரேன்....அதைப் போடு..’’ என்றான் ஜெயராம்...கேலியாக சிரித்தாள் சிவசங்கரி..

‘’இவன்லாம் ஜெண்ட்ஸுன்னா.....அப்புறம் சுந்தரையெல்லாம் என்னானு சொல்லுவீங்க...நல்ல காமெடி போங்க....சுந்தர் ...உங்க வீட்டுல பொண்ணு பாத்துட்டு இருந்தாங்களே ...என்ன ஆச்சு?’’

‘’நடக்குதுக்கா...பாத்துட்டுதான் இருக்காங்க’’

‘’சுந்தர் அண்ணா...பொண்ணு பாக்க போறச்சே,என்னையும் கூட்டிட்டுப் போவீங்களா...’’---யுவன்...

‘’என்னையே அழைச்சுட்டுப் போறதில்ல ‘’


‘’ஏன்ப்பா....கல்யாணம் உனக்குத்தான’’

‘’எனக்குத்தான்....எல்லாம் நாங்க பாத்தா போதும்னுட்டாங்க அம்மாவும்,அக்காவும்....நானும் தலையாட்டிட்டேன்...’’

‘’அதான் சரி...இப்பவே தலையாட்டிப் பழகிட்டேன்னா,கல்யாணத்துக்கப்புறம் ஈஸியா இருக்கும்...’’--ஜெயராம்...அனைவரும் சிரிக்க சிவசங்கரி முறைத்தாள்....

‘’ஹலோ....நான்தான் மதியம் லஞ்ச் தரணும்....ஞாபகம் வச்சிக்கங்க....’’

‘’ஹா....பெத்த பெரிய லஞ்சு....அந்த புளி சாதம்தான....தராட்டா போ....கும்பகோணத்துல மெஸ் நிறைய இருக்கு....மாமி கை மனத்துல மணக்க,காய் கறியோட சாப்ட்டுட்டுப் போறேன்....’’

‘’இப்ப அப்டித்தான் இருக்கும்....மதியம் வயித்துல மணி அடிக்கும் இல்லையா...அப்ப பேசிக்கறேன்....’’
இப்படி கேலியும் கிண்டலுமாய் பேசியே கும்பகோணம் வந்தடைந்தனர்.....காரை விட்டு இறங்கியதும் யாமினி கேட்டாள்......


‘’சுந்தர் அண்ணா..குருபெயர்ச்சி ஆகியிருக்கறதால , இது ஒரு பரிகார ஸ்தலம்...படிப்பு நல்லா வரும்னுட்டு அம்மா இங்கே வரணும்னா... நீங்க எதுக்கு வந்தீங்க...’’

‘’அதான’’ என்று தலையாட்டினான் யுவன்...

‘’சுந்தர் வந்தது பரிகாரத்துக்கு இல்லடா....உபகாரத்துக்கு...எனக்கு முதுகு வலிச்சா , சுந்தரை கார் ட்ரைவ் பண்ண சொல்லலாம்ல...அதான் அழைச்சிட்டு வந்தேன்..அது சரி....உங்க அம்மா என்கிட்ட தொழில் நல்லா நடக்கும்ங்க,,,,அதனால போவோம்னா....’’

‘’யாரு யாருகிட்ட எதை சொன்னா வேலை நடக்கும்னு எனக்குத் தெரியும்ல...’’ என்றாள் சிவசங்கரி பெருமையுடன்....

‘’சுந்தர் கேட்டியாடா...ஒரு வில்லி கூட குடும்பம் நடத்தறேன் பாரு’’ என்றான் ஜெயராம்...

‘’உங்க ஆட்டத்துக்கு நான் வரலே’’ என்று எட்டி பிள்ளைகளுடன் நடந்தான் சுந்தர்.....சிரித்தபடி முன்னே நடந்தார்கள்.....முதலாக ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு சென்றார்கள்....பழமையான பெரிய கற்கோவிலாக இருந்தது..

..அப்பர் மற்றும் சம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம் என்று எழுதியிருந்தது...மூன்று பிரகாரங்கள் மற்றும் மூன்று கோபுரங்கள் இருந்தன.
...பிள்ளைகள் கோவிலைப் பற்றிய தல புராணங்களைத் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்க்காக ஒரு கைடு நியமித்தான் ஜெயராம்...செய்வதை திருந்தச் செய்யும் குணம் கொண்டவன் அவன்..கைடு முதலில் கும்பகோணத்துப் பெருமைகளைச் சொன்னார்....

‘’புண்ணிய ஸ்தலம்..ஆன்மீக பூமி..பொதுவா மனுஷாள்லாம் அவாளோட பாவங்களைப் போக்கிக்க, புண்ய நதிகள்ல,நீராடுவாங்க...ஆனா,அந்த நதிகளே, கும்பகோணத்துல வந்து நீராடித்தான் ,தங்களோட பாவங்களைப் போக்கிகறதா ஐதீகம்..பனிரெண்டு வருசத்துக்கு ஒரு முறைதான் குருபகவான் கும்ப ராசிக்கு வருவார்....அதைத்தான் மகாமகம்னு கொண்டாடுவாங்க...அந்த நாட்கள்ல லட்சக்கணக்கான மக்கள் வந்து நீராடுவாங்க...அப்டி நீராடல் பண்றப்போ,அவருக்கு மட்டுமில்ல,அவரோட ஏழு தலைமுறைக்கும்,பாவங்கள் தீர்ந்து போறதா நம்பிக்கை....அதோட,தீர்த்தவாரி நடக்கும் கோவில்கள்ல இதுவும் ஒண்ணு...உள்ள வாங்கோ’’ என்று கடைகள் நிரம்பிய நீண்ட மண்டபத்தை தாண்டி அழைத்துப் போனார் கைடு....கோவில் யானை அழகாகத் தலையாட்டியபடி நின்றிருந்தது...

கொடிமரம்,பலிபீடம்,பெரிய நந்தி ஆகியவற்றை வணங்கி முடித்து,ஸ்தல விநாயகர் மற்றும் முருகரை வழிபட்டனர்....அடுத்து மூலவர் சன்னிதானம்....


‘’மூலவர் கும்பேஸ்வரர்...அமுதமும் மணலும் கலந்து உருவான திருமேனி...ஆகையால,நித்ய அபிஷேகம் கிடையாது...விசேச நாட்கள்ல புனுகு சட்டம் சார்த்துவா...’’என்ற விளக்கம் தரப்பட்டது...அதன் பின்,நடராஜர் சன்னதி,சோமாஸ்கந்தர் சன்னதி, ஆகிய மூர்த்தங்களைக் கடந்து,நின்ற கோலத்தில் இருந்த தாயார் மங்களாம்பிகையை வழிபட்டனர்.... அம்பாளின் 51சக்தி பீடங்களில் இத்தலம் முக்கியமானதாம்...அப்படியே கஜாலக்ஷ்மி சன்னதி,மகாலக்ஷ்மி தாயார்,அஷ்ட புஜ துர்க்கை,லிங்கோத்பவர் ,முதலிய தெய்வங்களை வழிபட்டு
வணங்கி சுற்றி வந்தனர் .கைடின் ஆலோசனையின் பேரில்,அப்படியே தாராசுரம் சென்றனர்....

‘’இந்த கோயில்,ஐராவதேஸ்வரர் கோவில்...தாராசுரன் அப்டிங்கற அசுரன்,இங்க வந்து தவம் இருந்ததால,இப்படியொரு பேரால அழைக்கப்படுது...சோழர்களோட கட்டமைப்புத்திறனுக்கு இந்த கோயில் குட் எக்ஸாம்பிள்...அற்புதமான சிற்பங்கள்...உள்ள வாங்கோ...16 கற்தூண்கள் இருக்கு...அத்தனையிலும் நுணுக்கமான சிற்பங்கள்...புராணக் கதைகளை அசால்ட்டா சில மில்லிமீட்டர் சிற்பங்கள்லயே சொல்லியிருப்பாங்க....இந்த படிகள் இருக்கு பாருங்க. இதுகளைத் தட்டினா சரிகமபதநீ –ஸ்வரங்கள் வரும்,,,குழல் ஊதும் சிவன்,வீணையில்லாத சரஸ்வதியெல்லாம் இங்கதான் பார்க்கலாம்...கற்சாளரங்கள் பல வடிவுல இருக்கறது இந்த கோவி லோ ட கூடுதல் சிறப்பு.
..ஆகிய விளக்கங்களுடன்,தாராசுரம் கோவிலை சுற்றிப் பார்த்து விட்டு, வெளி வந்தனர்..டிபன் சாப்பிட்டு விட்டு மகாமாகக் குளத்தைப் பார்வையிட்டனர்..சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறதாம்..ரம்மியமாக இருந்தது...கால்நனைத்து விட்டு கரையேறினர்,,,,அடுத்து பூண்டி மாதா பேராலயத்துக்கு சென்றனர்...இயேசு பிரான் அரையப்பட்ட சிலுவையின் ஒரு பகுதி கோவிலுக்குள் இருப்பதாக சொல்லப்பட்டது....கொள்ளிடத்திற்ற க்கும்,காவேரி ஆற்றுக்கும் நடுவில் அமைந்திருந்த ஆலயம் நன்கு பரந்து விரிந்து இருந்தது..

‘’டாடி...கோவிலெல்லாம் போதும்...வேற எங்காவது பிளேசஸ் போலாமே.’’ என்று சிணுங்கினான் யுவன்...அதுவும் சரிதான் என்று தோன்றவே ,ஆவூருக்கு வெற்றிலைத் தோட்டத்தைப் பார்வையிட சென்றனர்

...அங்கு வரிசையாய் கம்புகள் நடப்பட்டு,ஆதி மேலோங்கி பச்சை பசேலென படர்ந்திருந்தது வெற்றிலை கொடி...வெற்றிலையில் ஆண் பெண் வகையுண்டாம்.... மங்கல அமங்கல காரியங்கள் எதற்கும்,வெற்றிலை பாக்கு தேவைப்படுவதால்,நல்ல சந்தை மதிப்பு உண்டாம்..

.கும்பகோணம் வெற்றிலைகள்,திருச்சி,புதுக்கோட்டை,சென்னை,மும்பை ஆகிய ஊர்களுக்கு ஏற்றுமதியாகிறதாம்...வெற்றிலைத் தோட்டத்திற்க்கு அருகிலேயே ஒரு பசுமையான இடம் அகப்பட,சாப்பாட்டுப் பையைக் கடை பரப்பிக்கொண்டு உணவுன்ன அமர்ந்தது ஜெயராம் குடும்பம்

..பேப்பர் பிளேட்டுகளில் புளியோதரை,தயிர் சாதம்,,தேங்காய் துவையல்,கூழ் வடகம என வாக்கியாகப் பரிமாறப்பட,பசி ருசியோடு ரம்மியமான சூழலும் ஒன்று சேர,அனைவரும் உணவை ஒரு கை பார்த்தனர்...

‘’சிவா...நீயும் சாப்பிடு...காரசாரமா புளியோதரை சூப்பர்’’ என்றான் ஜெயராம்...
‘’காலையில கார்ல வச்சி புளிசாதம்தானேன்னு கேவலமா ஒரு ரியாக்சன் குடுத்தீங்க’’
‘’அது வேற வாயீ’’—யுவன்...

‘’தயிர் சாதம் டிராவல்ல கூட புளிக்காம இருக்குதே எப்டிக்கா’’ என்று கேட்டான் சுந்தர்...

‘’அது வந்துப்பா...சாதத்தை குழைய பிசைஞ்சுட்டு,நிறைய பால் விட்டு பிசையனும்....நல்லா ஆரிணப்புரம்,ஒரு ஸ்பூன் தயிர் விட்டு கிளறி,தாளிதம் போட்டு வைக்கணும்...மதியம் தயிர் சாதமாயிடும்...’’
‘’ம்...அப்டியே வெண்ணை மாதிரி இருக்குக்கா’’

‘’நல்ல வேளை. சிவா...வீட்டுல சாப்பாடு ரெடி பண்ணிக்கொண்டு வந்தே....வெளி சாப்பாட்டுல இப்டி ஒரு நிறைவு கிடைக்காது’’

‘’தெரியும்ல...நம்ம வீட்டுல எல்லாருக்கும் நாக்கூ நீளம்னு’’ மீத உணவை அங்கு நின்றிருந்த ஒரு சிறுமிக்குத் தந்து விட்டு, மீண்டும் சுற்றக் கிளம்பினர்...அடுத்து கும்பகோணத்தின்,மற்றொரு சிறப்பான,பித்தளை மற்றும் வெண்கல விளக்குகள் செய்யுமிடத்திற்கு சென்றனர்.
..செம்மண் கொண்டு பதப்படுத்தி,வார்ப்பில் விளக்கு செய்வதையும்,நகாசு வேலை மூலமாக விளக்கில் நுணுக்கமான டிசைன் செய்யப்படுவதையும்,ஜெயராம் குடும்பம் பிரமிப்புடன் பார்த்துவிட்டு வெளி வந்தார்கள்....

‘’சிவா....நம்ம கடைக்கு, ஆள் உசர விளக்கு ஒண்ணு எடுப்பமா...?’’
‘’சூப்பர் ஜெயா...மேலே அன்னம் வச்ச விளக்கு ஒண்ணு வாங்கிடலாம்...எண்ட்ரன்சில வச்சு மல்லிப்பூ மாலை போட்டோம்னு வைங்க....தூக்கிடும்....அதுக்காகவே பிஸினஸ் நடக்கும்’’ என்றாள் சிவசங்கரி பரவசத்துடன்..இருவருக்கும் விளக்கு வாங்குவதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு விடவே,உடன் ஒரு பித்தளை சாமான்கள் கடைக்குள் நுழைந்தார்கள்....விட விதமாய் சைஸ் வாரியாக விளக்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது...அதில் உயரம் பார்த்து,ஐந்து முகமாக,தலைப் பகுதியில் அன்னம் வைத்து ,பாத அழகு அம்சம், லட்சணம் பார்த்து, ஒரு விளக்கைத் தேர்ந்தெடுத்தாள் சிவசங்கரி.

...விளக்கு மனதிற்கு பிடித்தாற்போல அமைந்து விட்டது...விலை மற்றும் பேக்கிங் குறித்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த போது ,யுவன் ஓடி வந்து அம்மாவின் காதில் படபடத்தான்,,,,

‘’அம்மா,,,அம்மா,,,அக்கா யாரோ ஒரு ஆள் கூட போயிட்டு இருக்கா....’’ என்று கண்களில் பயத்துடன் சொல்ல...
‘’என்னடா சொல்றே....ஜெயா....யாமினியை எங்கே...இவன் ஏதோ சொல்றான்’’ என்று கணவன் கை பிடித்து உலுக்கினாள் சிவசங்கரி..

‘’எனக்கென்ன தெரியும்...உன் பக்கத்துலதான நின்னுட்டு இருந்தா’’

‘’ஐயோ,,,,என் பொண்ணு’’ என்று அலறியபடி சிவசங்கரி வெளியில் ஓட,,,,ஜெயராம்,சுந்தர் அனைவரும் பின்னே ஓடி, இருபுறமும் பார்க்க....வலது புறம் யுவன் காட்டிய திசையில்,கருத்த மெலிந்த தேகமுடைய ஒரு நபருடன்,அவனுக்கு இணையாக வேகா வேகமாக நடந்து கொண்டிருந்தாள் யாமினி....சிவராமுக்கும்,சிவசங்கரிக்கும் நெஞ்சடைத்துப் போயிற்று....

‘’கடவுளே...அவன் யாருன்னே தெரியலியே...பிள்ள அவன் கூடப் போறாளே....’’ எம்ரு இயலாமையில் சிவசங்கரி அழுகையுடன் கதற....கணமும் தாமதிக்காமல்,சுந்தர் ஓடிபோய்,அந்த நபரை மடக்க,ஜெயராம் பின்னாலேயே போய் மக்களைப் பிடிக்க,,கூட்டம் கூடி விட்டது...

‘’யாருய்யா நீ....எதுக்கு எங்க வீட்டுப் பொண்ணை கூட்டிட்டு போறே’’ என்று சுந்தர் அவனின் சட்டையைப் பிடித்து இறுக்க, அவன் விழியும்,தடுமாறும் மொழியுமே அவனது திருட்டுத்தனத்தை பறை சாற்றியது...நிலைமையைப் புரிந்து கொண்ட கூட்டம் அந்த நபரை வார்த்தைகளால் வசை பாடியது...’’ இதுக்குன்னே அலைவானுக....மூக்கும் முழியுமா,பொம்பளைப் பிள்ளைகளைப் பாத்திரக் கூடாதே...’’

‘’அக்கா தங்கச்சிக கூடப் பொறக்காத நாய்க’’

‘’இதெல்லாம் ஒரு பொழைப்பு....த்தூ’’
பேசிக்கொண்டிருக்கையிலையே,ஒருவன் உணர்ச்சிவசப்பட்டு,அந்த நபரின் தலையில் ஒரு போடு போட்டான்...

‘’சார்....இவனை இழுத்துட்டுப் போயி போலீஸ் ஸ்டேசன்ல விடுங்க...நல்லா கவனிப்பு கிடைக்கும்’’
‘’அதெல்லாம் வேண்டாம்...நாமளே இவனை கைமா பண்ணிரலாம்’’ என்று ஆளாளுக்கு கை உயர்த்த,நிலைமை சீரியசாவதை உணர்ந்த ஜெயராம்,அந்த நபரை விடுவித்து,எச்சரித்து அனுப்பி விட்டு ,மாகாளி அழைத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தான்.
..சிவசங்கரி மகளைக் கட்டிக் கொண்டு கண்கலங்க....
‘’அம்மா! தாயி! காலங்கெட்டுக் கிடக்கு....நூத்துக்கணக்கான கோயில் இருக்கற புண்ணிய பூமிதான் இது....ஆனா,நாராசப்பயலுக, இங்கேயும்தான நோட்டம் விட்டுக்கிட்டு அலைதானுவ..புள்ள கிளியா இருக்கு...பாத்து பத்ரமா கூட்டிட்டு பொம்மா.'' ..என்று ஒரு மூதாட்டி ஆற்றாமையால் அறிவுரை சொல்ல,

உணர்ச்சி வசப்பட்டு அழுது விட்டாள் சிவசங்கரி..பெருமூச்சு விட்டபடி ,அவ்விடத்தில் ஏதும் பேச விரும்பாதவனாய், ஜெயராம் மனைவி மக்களுடன் காருக்கு நடந்தான்...காருக்குள் அமர்ந்து கதவை சாத்திய பின், மகளிடம் கேட்டான்...

‘’குட்டிம்மா...அவன் யாரு ? தெரியுமா உனக்கு?’’

‘’தெரியாதுப்பா’’ என்று யாமினி மலங்க மலங்க விழிக்க,
‘’அப்புறம் ஏன்மா அவன் கூடப் போனே’’

‘’நீங்கள்ளாம் உள்ள இருந்தீங்களா.....நான் கடை வாசல்ல நின்னுட்டு இருந்தேன்....அப்ப அவன் என்கிட்ட வந்து,உன் பேரென்ன....எந்த ஊரு அப்டின்னு கேட்டான்....நான் பதில் சொல்லிட்டு இருந்தேன்....அப்புறம் என்ன நடந்ததுன்னு ஞாபகமில்ல...’’ என்று அப்பாவியாய் யாமினி சொல்வதைக் கேட்ட சிவசங்கரி தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்...

‘’நாம இன்னும் கொஞ்ச நேரம் கவனிக்காம இருந்திருந்தா என்னாகும் ஜெயா...எனக்கு நினைக்கவே நடுங்குது....நம்ம பிள்ளையே நமக்கு இல்லேன்னு ஆகியிருக்குமே....’’
மென்று விழுங்கிய ஜெயராம் வரழைத்துக்கொண்ட தைரியத்துடன் சொன்னான்...’’ சிவா,,,,ரிலாக்ஸ்...தர்மம் தலை காக்கும்...நீ பண்ணின புண்ணியமெல்லாம் எங்க போகும்...!தோ ...நம்ம புள்ளைய நம்மகிட்ட கொண்டு வந்து சேர்த்துருச்சில்ல...நீ இப்பிடி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினா,யாமினி ரொம்ப பயந்துடுவா...அப்புறம் பின் விளைவுகள் ரொம்ப மோசமா ஆயிடும்...ப்ளீஸ் சிவா...கண்ட்ரோல் யுவர்செல்ஃப்...’’ என்று சொன்னவன்,சுந்தரை தனது குடும்பத்திற்கு துணையாக வைத்து விட்டு, பித்தளைக் கடைக்கு சென்று,பார்த்து வைத்த விளக்கை பில் போட்டு வாங்கி வந்து,டிக்கியில் போட்டு விட்டு,வண்டியைக் கிளப்பினான்...

‘’கொஞ்ச நேரத்துல ஆடிப்போயிட்டேன் சுந்தர்’’

‘விடுங்கண்ணே...இது மாதிரி ஃப்‌ராடுங்க உலகம் பூரா இருக்கு...என்ன ஒண்ணு ...நாய்ப்பயலை போலீஸ்ல மாட்டி விட்டிருக்கலாம்...நீங்க வேண்டாம்னுட்டீங்க’’

‘’செய்யலாம்தான்...எனக்கும் செம கடுப்புதான்....ஸ்டேசன்ல லேசுல விடுவானா..என்ன எதுன்னு துளைப்பான்....நம்ம பிள்ளை பேரு வெளியில வரும்...ப்ச்‌,,,,கோயிலுக்கு வந்த இடத்துல வம்பு எதுக்கு...ஒழிஞ்சு போறான்னு விட்டுட்டேன்...’’
‘’அதுவுஞ்சரிதான்...மன நிம்மதிக்காக வந்த இடத்துல,ஸ்டேசனுக்கு காவடி எடுக்கணும்...அதான் நானும் உங்களை வற்புறுத்தலை....அக்கா...அக்கா...இங்க பாருங்க...ஒண்ணும் ஃபீல் பண்ணாதீங்க...பரிகாரம் பண்ணியாச்சுன்னு நினைச்சுக்கங்க...அண்ணே...இந்த ஊர்ல டிகிரி காபி ரொம்ப ஃபேமஸ்..காபிக் கடையில நிறுத்துங்க....ஒரு காபி குடிப்போம்...உற்சாகமாயிடும்..’’ என்றான் சுந்தர்...அவன் சொன்னது போலவே

,தரத்திலு ம்,சுவையிலும்,குறையாத டிகிரி காபி குடித்ததும், புது தெம்பு வந்தது...அதன் பின் தேவையான பொருட்களை ஷாப்பிங் செய்தனர்...இரவு ஏழு மணி ஆனதும்,

‘’ரைட்....பர்ஸும் காலி...எனர்ஜியும் காலி...ஊருக்கு வண்டியை விடுவோமா’’---ஜெயராம்...
‘’அண்ணே...லாஸ்ட்..பட் ..நாட் லீஸ்ட்....ஒண்ணு இருக்கே...’’
‘’சொல்லி தொலை’’
‘’இங்கே தேவன் ஹோட்டல்ல,பலூன் பரோட்டா ரொம்ப பிரசித்தம்...சாப்ட்டுட்டு போயிருவோமே....’’

‘’ம்‌ம்....கும்பகோணத்துல கோயில்களைப் பத்தி கேட்டா..ஐடியா இல்லேனுட்டே...சாப்பாடு விஷ்யம்லாம் பக்காவா தெரியுது’’ என்று ஜெயராம் கிண்டல் செய்ய,யாமினி இறுக்கம் தளர்ந்து சிரிக்க,அக்காவைப் பார்த்து யுவன் சிரிக்க,பிள்ளைகளைப் பார்த்து சிவசங்கரி மனம் விட்டு சிரித்து மகிழ,மனைவி மக்களின் மகிழ்ச்சி ஜெயராமை தொற்றிக்கொண்டது...

‘’பார்ரா....என்னையக் கலாய்ச்சா குடும்பமே சிரிக்குது’’ என்று சுந்தர் சொல்லவும், மீண்டும் சிரிப்பு....அப்படியே அந்த சந்தோசம் குறையாமல்,தனது குடும்பத்தை, பொத்தினாற் போல வீடு கொண்டு வந்து சேர்த்தான் ஜெயராம்.
..காரணமின்றி காரியமில்லை...தனது குடும்பத்தை இன்னும் அதிக கருத்தோடும்,கவனத்தோடும்,கவனித்துக் கொள்ள வேண்டுமென,கும்பகோணம் ட்ரிப் உணர்த்துவதாகவே எடுத்துக் கொண்டான் ஜெயராம்..



v
 
Top