Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 22

Advertisement

ராமின் பெயரில் இருந்த அனைத்து சொத்துக்களும் மைதிலியின் பெயருக்கு கைமாறி இன்றோடு பத்து நாட்கள் கடந்துவிட்டது. தினம் ஒரு இடம் என, அவர்களின் கட்டுமான பணி நடக்கும் இடங்களை மேற்பார்வையிட்டு முடித்த மைதிலி, செய்ய வேண்டிய திருத்தங்களையும், குறைகளையும் பட்டியலிட்டு கொடுத்து சீர் படுத்த சொன்னாள்.

காணாமல் போன ராம், திடீரென ஒரு பெண்ணுடன் வந்திருப்பதை பலர் அவள் காது படவே தவறாய் சித்தரிக்க, அவள் பொறுப்பை கையில் எடுத்த இரண்டாம் நாளே அவர்கள் அலுவலகத்தில் ஒரு பொதுக்கூட்டம் கூட்டபட்டது. அதில் ஊழியர்கள் முதல் சப்ளையர்ஸ், வாடிக்கையாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

அதில் தன்னுடைய பின்புலத்தை எடுத்து சொன்னவள், தாங்கள் விருப்பப்பட்டு திருமணம் செய்துக்கொண்டதாகவும், விரைவில் அனைவரையும் தங்கள் திருமண வரவேற்ப்பிற்க்கு அழைக்க இருப்பதாகவும் சொல்ல, முழுதாக இல்லாவிடினும், பெரும்பான்மையானோர் 'பெரிய வீட்டு சமாச்சாரம்' என வாயை மூடிக்கொண்டனர்.

அங்கிருந்த பத்து நாட்களும் ராமை பற்றிய நிறைய தகவல்கள் அவள் காதிற்குள் கேட்காமலே நுழைந்தது.

ராம் கம்பெனி விவகாரத்தில் ஒரு நாளும் மூக்கை நுழைத்ததில்லை. மாதம் ஒருமுறை இங்கு வரும்போதும் கூட, அனைவரையும் வேலை செய்ய விடாமல் தொல்லை செய்து கொண்டு இருப்பதையே தன் முக்கிய வேலையாக கொண்டிருந்திருக்கிறான்.

அவன் வரும் நாட்களில் மட்டும் அங்கு இருக்கும் பெண்களுக்கு ரெக்கை முளைத்தது போல ஆகிடும். அவனை வால் பிடித்துகொண்டு சுற்றுவது தான் அவர்களின் அன்றைய முக்கிய வேலை.

அங்கிருக்கும் அனைவரையும் தன் குறும்புத்தனத்தால் அன்பர்கலாக்கி வைத்திருந்தான் ராம். மைதிலியுடன் ராம் அங்கு சென்ற போது, அவர்கள் அறை வாயிலில் ஒரு கூட்டமே கூடிவிட்டது. அவனை பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு அனைவரிடமும் நெருக்கமாய் பழகி இருந்திருக்கிறான் ராம். பெண்களை சொல்லவே வேண்டாம். மைதிலிக்காக பயந்து சற்று தள்ளி நின்றனர்.

கட்டிட வேலை நடக்கும் இடத்திற்கு சென்றால், அங்கிருக்கும் கொத்தனார், சித்தாள் கூட ராமை தழுவி கண்ணீர் விடுகையில் மைதிலிக்கே ஆச்சர்யமாய் இருந்தது.

அந்நேரம் சந்தோஷ் அவளிடம் முன்பு சொன்னது நினைவில் வர, "நான் ஜெய்பூர்ல இருந்தபோ, நீ ஒருமுறை சொன்ன...! ராமை பற்றி விசாரிச்சேன், யாரும் நல்லா விதமா சொல்லலன்னு. நான் பார்த்த வரைக்கும் அப்படி யாரும் சொல்லிருக்க வாய்ப்பே இல்லையே??" என்றாள் அவன் கண்களை பார்த்து.

"ஹிஹி.. அதுவா மைதிலி? நீ அவனை லவ் பண்றேன்னு சொல்லவும், ஒரு பைத்தியத்தை......" என அவன் தொடங்க மைதிலி முறைப்பதை கண்டு, "இல்லை இல்லை... நீ மென்டல்லி டிஸ்டர்ப்டு பெர்சன்ன எப்படி லவ் பண்ணலான்னு உன்னை டைவேர்ட் பண்ண அப்படி சொன்னேன். ஆனா எல்லாரும் நல்லா விதமா தான் சொன்னாங்க.." என சொல்லிவிட்டு குனிந்து கொண்டான் தவறு செய்த சிறுவன் போல.

அவனை முடிந்தமட்டும் முறைத்தவள், "இங்கிலிஷ்ல சொன்னாலும் தமிழ்ல சொன்னாலும் அர்த்தம் ஒண்ணுதான்.." என்றதோடு சென்றுவிட்டாள்.

இன்றும் அதேபோல் அவள் கிளம்பி கீழே வர, ஹாலில் இருந்த விஸ்வநாதன் அவளை சிரிப்புடன் ஏறிட்டார்.

"என்னம்மா? கிளம்பியாச்சா?"

"ம்ம்ம்... இன்னைக்கு ஆடிட்டிங் இருக்கு.. சீக்கிரம் போகணும்.." என்றாள் அவளும் சிரித்த முகமாய்.

"நல்லது.. சாப்புட்டு கிளம்பு... லக்ஷ்மி? மைதிலிக்கு டிபன் எடுத்து வை.." என உள்ளிருக்கும் தன் மனைவியை பணிந்தார் விஸ்வநாதன்.

உணர்ச்சி இல்லாத முகத்துடன் வந்த லக்ஷ்மி, அவளுக்கு வேண்டியதை பரிமாறிவிட்டு மீண்டும் சென்று விட்டார். இது சில நாட்களாய் தினமும் நடப்பதுதான் என்பதால் மைதிலி அதை ஒரு பொருட்டாய் எண்ணாமல் உண்டு முடித்து கிளம்பினாள்.

அலுவலகத்தில் தனக்கு முன் காத்திருந்த ஆடிட்டரை கண்டு அவசர புன்னகை சிந்தினாள் மைதிலி. "ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சுட்டேனா?" என்ற சம்பிரதாய கேள்வியுடன் தன் இருக்கையில் அமர்ந்தாள்.

"இல்லம்மா.. இப்போதான் வந்தேன்.." என சொல்லிவிட்டு அவளை பார்த்தவர், "ராம் தம்பிக்கு பொருத்தமா இருக்கம்மா..." என்றார்.

அவர் அப்படி சொல்லவும் பார்த்துக்கொண்டிருந்த பைலில் இருந்து தலையை நிமிர்த்தியவள், புன்சிரிப்புடன், "நான் வந்த பத்து நாள்ல அதிகமா கேட்ட வரி இதுதான்..." என சொல்லி சிரித்தாள்.

"பார்க்குற எல்லாருக்குமே தெரிஞ்சுருக்கு... அதான் சொல்றாங்க..." என்றவருக்கு புன்னகையை மட்டும் பரிசாய் தந்து தன் வேலையை தொடர்ந்தாள் மைதிலி.

கோப்புகளில் லயித்திருந்த அவள் திடீரென, "அங்கிள்...? என்ன இதெல்லாம்?" அவள் பைலை அவர் முன் நீட்ட, "இத்தனை வருஷம் இங்க நடந்த மோசடிக்கான தொகுப்பு" என்றார் அவர் குற்றவுணர்வோடு.

"எல்லாம் தெரிஞ்சும் எதுக்காக இவ்ளோ நாள் சும்மா இருந்தீங்க? ராம் அப்பா இருந்தபோவே அவர்கிட்ட சொல்லிருக்கலாமே?" என்றாள் கோவமாய்.

"அந்த வக்கீல் வரதன் என்னை மிரட்டுனான். வெளியூர்ல படிக்குற என் பொண்ணு வேணுமா வேணாமானு கேட்டான். பயமா இருந்துச்சும்மா. அதுல வாய மூடுன நான் இதபத்தி யார்ட்டையும் சொல்லாம விட்டுட்டேன்..." என்றார் சிறிய குரலில்.

"ஹும்ம்!! ஹௌ க்ரூவல் த்தே ஆர்....!!! இவ்ளோ பெரிய விஷயம்... மாமா எப்படிதான் கவனிக்காம விட்டாரோ தெரியல. தெரிஞ்சுருந்தா இத்தனை ப்ராப்ளம் வந்துருக்காது...!! " என தலையில் கைவைத்துக்கொண்டாள் மைதிலி.

"ஆனா,, இதைபத்தி ராம் கிட்ட சொன்னேன்ம்மா..." என அவர் சொன்னதும் விலுக்கென நிமிர்ந்தவள், "ராம்க்கு இதெல்லாம் தெரியுமா?" என்றாள் வியப்பாய்.

"ரவிச்சந்திரன் சார் தவறினதும், எனக்கு மனசே சரி இல்லமா போச்சு. அவர்கிட்ட விஸ்வநாதன் பண்றதெல்லாம் சொல்லிருந்தா ஒரு வேளை அவர் ஜாக்கிரதையா இருந்துருப்பாரோன்னு நினைச்சேன். அதனால ராம்கிட்ட எல்லாத்தையும் சொல்லி அவரையாது பாதுகாப்பா இருக்க சொல்லனும்ன்னு முடிவு பண்ணி பெங்களூர் போனேன்" என்றார்.

"ராம் வொர்க் பண்ணிட்டு இருந்த ஹாஸ்பிடல்க்கா??" என்றாள் மைதிலி.

"ஆமா... அவரை நேருல பார்த்து சொன்னப்போ முதல்ல நம்பல... அப்பறம் இந்த பைல்ல காட்டுனப்போ ரொம்ப நொறுங்கிட்டாறு... விஸ்வநாதன் இப்படி பண்ணுவாருன்னு அவர் எதிர்பார்கலன்னு அவர் முகத்துலயே தெரிஞ்சுது எனக்கு... இதையே அவரால தாங்கிக்க முடில.. இதுல ரவிச்சந்திரன் சார் சாவுக்கு விஸ்வநாதன்தான் காரணம்ன்னு எப்படி சொல்லுரதுன்னு தெரியாம அதை எனக்குள்ளையே முழுங்கிட்டேன்.. அடுத்த ரெண்டு நாள்ல அவர் சென்னை வந்தாருன்னு கேள்விப்பட்டேன்.. அதுக்கு அப்பறம் அவரை நான் ஹாஸ்பிடல்ல மனநிலை சரியில்லாதவராதான் பாத்தேன்" என சொல்லிமுடித்தார்.

"ஓ... அப்போ விஷயம் தெரிஞ்சு தான் ராம் இங்க வந்தாரா?" என கேட்கவும் அவர் அதை ஆமோத்திப்பதாய் தலை அசைத்தார்.

அதற்குமேல் அவள் வேலைகள் இயந்திரகதியில் நடந்து முடிக்க, உடல்சோர்வையுடன் மனசோர்வும் ஒன்றுசேர வீட்டிற்க்கு சென்றாள் மையு.

கார் வீட்டிற்க்குள் நுழைந்ததும், "ஊஊஊஊ... மையு வந்துட்டா!! உஹூ..." என கத்திக்கொண்டு வந்தான் ராம்.

சிறுப்பிள்ளையென அவன் துள்ளி வருவதை கண்டு சிரித்தபடி நின்ற மைதிலி,
அவன் பின்னால் கௌதமும் ஓடிவருவதை கண்டு, 'ஐயோ சண்டையா?' என நொடியில் கலவரமானாள் மைதிலி.

வேகமாக ஓடிவந்த ராம், என்ஜின் மீது ஏறி அமர்ந்தபடி "நாந்தான் பர்ஸ்ட்... எப்ப்ப்ப்பபூடி?" என்றான் கௌதமை பார்த்து.

"ஏன்டா ஓடி வரப்போ என்னை தள்ளிவிட்ட? பிராடு பண்ணி ஜெய்ச்சுட்டு, பெருமை வேற! ஹும்ம்!!" என்றான் கெளதம்.

"இதெல்லாம் ராஜதந்திரம்... போடா மங்குனி..."

"சொந்தமா பேசகூட தெரியல.. படம் பார்த்துட்டு பிட் அடிச்சு பேசுறான்.. இதுல இவன் என்னை மங்குனின்னு சொல்றான்...." என கெளதம் பதிலுக்கு சொல்ல, "உனக்கு எல்லாம் பிட் அடிச்ச டயலாக்யே அதிகம்.. என் ரேஞ்க்கு உன்கிட்ட எல்லாம் பேசவே கூடாது... அப்புடி ஓரமா நில்லு போ..." என்றான் ராம் காரில் சாய்ந்து அமர்ந்தபடி.

சந்தோஷ் கிடைத்த கேப்பில் நகர்ந்து விட, மைதிலி இவர்களிடம் மாட்டிகொண்டு நின்றாள். சோர்ந்து போய் வந்தவளுக்கு, இவர்களின் சண்டை மண்டைக்குள் சுத்தியலால் தட்டுவதை போல இருந்தது.

அதற்க்கு பிறகு அவர்கள் பேசுவதெல்லாம் குய்யோ முய்யோ என ஹை ஸ்பீடில் ஓட, கண்கள் இருட்டுவது போல இருந்தது. சிரமப்பட்டு தன் கண்களை விரித்து பார்த்தவள், ராமுடன் கெளதம் சரிக்கு சரி வாயாடுவதை கண்டு, "ஸ்டாப் திஸ் அண்ணா... எப்போபாரு ராமை வம்புக்கு இழுத்துகிட்டு... உள்ளே போங்க!" என கௌதமை திட்டிவிட்டு, "வா ராம்... லஞ்ச் சாப்பிட்டியா ஒழுங்கா?" என்றாள்.

அதற்க்கு பதில் சொல்லாமல் ராம் நமட்டு சிரிப்புடன் கௌதமை பார்த்துக்கொண்டிருப்பதை கண்ட மைதிலி, "என்னாச்சு?" என திரும்ப அங்கு கெளதம் ப்ரீஸ் ஆனதை போல மைதிலியையே பார்த்துக்கொண்டு நின்றான்.

"என் தங்கச்சி நியாயத்தின் பக்கம் தான் நிற்ப்பா... எனக்குதான் சப்போர்ட் பண்ணுவான்னு கெத்தா சொல்லிருந்தேன்... இப்படி அசிங்கப்படுத்திடியே தங்கச்சி!"

"உங்களை யாரு அப்படி சொல்ல சொன்னது?" என சொல்லி மேலும் அவனை பப்பி ஷேம் ஆக்கிவிட்டு ராமுடன் உள்ளே சென்றாள் மைதிலி.

மைதிலியுடன் சென்றுக்கொண்டிருந்த ராம், பக்கவாட்டில் இருந்த சந்தோஷை பார்க்க, அவன் தலையாட்டியபடி சிரித்தான். (ஏன்னு கேக்காதீங்க)

தன்னறைக்குள் சென்ற மைதிலி அலுப்பு தீர குளித்துவிட்டு ஹாலிற்கு வர, அங்கு கைகளில் காபியுடன் நின்றிருந்தான் ராம்.

வெகுநாட்களுக்கு பிறகு அவனிடம் இருந்து கிடைக்கும் காஃபி. அவனிடமிருந்து அதை வாங்கிக்கொண்டு அவனருகே அமர்ந்தாள் மைதிலி.

"இன்னைக்கு ஆடிட்டிங் எப்படி இருந்துச்சு மைதிலி..?" என விசாரித்தபடி வந்தார் விஸ்வநாதன். "டாலி பண்றதுல தான் கொஞ்சம் சிரமமாகிடுச்சு" என சொன்னபடி அவரை கவனித்தாள்.

"ஏன்ம்மா? ஆடிட்டர் எப்பவும் சரியா செஞ்சுடுவாறே!?" என வினவ, "நான் பழைய கணக்கை சொன்னேன்...!" என்றாள் அவர் முகம் பார்த்து.

அதில் அவர் முகம் கூம்பிவிட, "என்னை மன்னிச்சுடும்மா... எல்லாம் அறிவில்லாம பண்ணுனது...." என அவர் கைகூப்ப, "ஹய்யோ என்ன நீங்க?" என அவர் கையை இறக்கிவிட்டவள், "தப்பு பண்றது இயல்பு தான்... அதை திருத்திக்காம இருக்குறது தான் தப்பு... பரவல்ல.. விடுங்க..." என்றாள்.

அந்நேரம் ஹாலின் மத்தியில் இருந்த தொலைபேசி தன் இருப்பை உணர்த்த, அதை எடுத்து தன் காதுக்கு கொடுத்தான் ரிஷிகேஷ்.

"எப்படி ஆச்சு? என்ன செய்ய போறீங்க இப்போ? சரி நான் வந்து பாக்குறேன்.." என பேசிவிட்டு வைத்தான் ரிஷி.

அவன் பேச்சில் கவனம் சிதற, அவன் ரிசீவரை கீழேவைத்ததும் "என்னாச்சு ரிஷி? எனி ப்ரோப்ளம்?" என கேட்டாள் மைதிலி.

"சின்ன ப்ரோப்ளம் தான் அக்கா... எண்ணூர் பக்கத்துல இருக்க நம்ம பழைய கம்பனிய ரீமாடல் பண்ணிட்டு இருக்கோம்... அதுல வச்சுருக்க சில மெசின் இப்போ பொகஞ்சுடுச்சாம்... மெக்கானிக்கு சொல்லிடாங்கலாம்... இருந்தாலும் நான் வந்து பார்க்குறேன்னு சொன்னேன்.." என சொல்லிமுடித்தான் ரிஷி.

"பழைய கம்பனியா? சொல்லவே இல்லை என்கிட்ட" என மைதிலி கேள்வியாய் கேட்க, "ராம் அப்பா முதன்முதல்ல அங்கதான் கம்பனி ஆரம்பிச்சாரு... அதுக்கு பிறகு தான் இப்போ இருக்க கம்பனி... பழச விடகூடாதுன்னு அதை சீர்படுத்தி உபயோகத்துல வச்சுக்கனும்ன்னு அவர் அடிக்கடி சொல்லுவாரு.. அதான் இப்போ அதை புதுப்பிக்குறோம்..." என அவளுக்கு பதில் சொன்னார் விஸ்வநாதன்..

"ஹோ!! இப்போ நீ அங்க போக போறியா ரிஷி?" என்றாள் மைதிலி.

அவன் 'ஆம்' என்றதும், "எனக்கும் அதை பார்க்கணும் போல இருக்கு... உன்னோட நானும் வரேன்" என்றாள்.

"மணி இப்போவே ஆறாச்சு... நாளைக்கு போயி பார்த்துக்கலாம்.... நீங்க போறதுக்குள்ள இருட்டிடும்..." என விஷ்வநாதன் தடுத்தும் கேளாமல் "கார்ல போய்ட்டு கார்ல வந்துட போறேன்? ரிஷி கூடவே தானே இருப்பான். பின்ன என்ன? நான் போய்ட்டு டின்னர்க்கு சரியா வந்துடுவேன்... வா ரிஷி போலாம்..." என கிளம்பினாள் மைதிலி.

"மைதிலி... இரு.. நானும் வரேன்.. நீ தனியா போக வேணாம்..." என கெளதம் சொல்லவும், "நீங்க ராமை பார்த்துக்கோங்க அண்ணா.. நான் வந்துடுவேன்..." என அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே தன் அரைக்கால் சட்டையை முழுகாலுக்கு மாற்றிக்கொண்டு வந்தான் ராம்.

"மையு... நானு ரெடி... வா போகலாம்..." என்றான் அவளருகில் வந்து. அவனை செல்லமாய் முறைத்தவள் "உன்னை நான் கிளம்ப சொன்னேனா?" என்றாள்.

"ஹீஹீ.... என்னையும் கூட்டிட்டு போ மையு..." என அவன், அவளை சுரண்டவும், "அவன் வந்தா நானும் வருவேன்" என்றான் கெளதம்.

"எதுக்கு? அங்க வந்தும் பேசியே என் தலையை உடைக்க தானே?? ஹும்ம்... வாங்க... வந்துத்தொலைங்க.." என வெளிப்படையாக திட்டிவிட்டு அவர்களை கூட்டி சென்றாள் மைதிலி.

ரிஷி வழி காட்ட, சந்தோஷ் காரை ஓட்டிசென்றான். அவர்கள் சேர வேண்டிய இடத்தை அடைந்ததும், இறங்கி அவ்விடத்தை நோட்டமிட்டாள் மைதிலி.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் தொங்கிய கட்டைகள் கட்டிட சுற்றுவேலை நடப்பதை தெளிவாய் காட்ட, வெளியில் இருந்த காம்பவுண்ட் கேட்டை மூடிவிட்டு இவர்கள் அருகில் வந்தான் ரிஷி.

"இதான் அக்கா.. நம்ம கம்பனி..! முக்கால்வாசி வேலை முடிஞ்சுது... ரெண்டு மாசத்துல திறப்புவிழா வச்சிடலாம்ன்னு பிளான் பண்ணோம்..." என கட்டிடத்தை பார்த்துக்கொண்டு நின்ற மைதிலியிடம் சொன்னான் ரிஷி.

"ம்ம்ம்... வொர்கர்ஸ் எல்லாம் இல்லையா??" என்றாள் சுற்றிலும் பார்த்தபடி.

"நேரமாச்சுல்ல அக்கா.. அதான் எல்லாரும் கிளம்பிட்டாங்க... வாங்க உள்ளே போவோம்..." என ரிஷியுடன் ராம் கெளதம் முன்செல்ல பின் தங்கினாள் மைதிலி.

காரின் அருகே நின்ற சந்தோஷிடம், "நீயும் வா சந்தோஷ்" என்றாள். சில நொடி தயங்கியவன் பின்பு, 'சரி' என சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

அனைவரும் சென்றதும், சற்று தள்ளி காம்பவுண்டின் வெளியே எட்டி பார்த்தவள், மெதுவாய் உள்ளே சென்றாள். (இதும் ஏன்னு கேக்காதீங்க)

அங்கே டைல்ஸ் போடப்பட்ட தரையில் வேலை நடப்பதற்க்கான அடையாளமாய் புழுதி படிந்து கிடந்தது. இன்னும் கைப்பிடி சுவர் வைக்கப்படாத அந்த மாடிபடிகட்டுகளை நிமிர்ந்து பார்த்தபடி அந்த நீண்ட தளத்தை சுற்றி வந்தாள் மைதிலி.

அருகில் பேச்சுக்குரல் கேட்க, தரைதளத்தின் இறுதிக்கு சென்றாள். அங்கே பாதி எரிந்த ஒரு இயந்திரத்தை நால்வரும் தங்கள் பேச்சினால் ஆராய்ச்சி செய்ய, இடைப்புகுந்தாள் மைதிலி.

"என்ன பிரசன்னை இங்க?" என கேட்டுக்கொண்டே அந்த மெஷினை பார்த்தாள் மைதிலி.

"இதுல யாரு முதல்ல கை வைக்குறதுன்னு பேசிட்டு இருக்கோம்..." என்றான் சந்தோஷ்.

"கையை வைக்குறீங்களோ, கால்ல வைக்குறீங்களோ...!!! முதல்ல மெய்ன் சுவிட்ச் ஆப் பண்ணிட்டு வைங்க..." என சொன்னவள் "ராம் இவங்களோட நீ நிக்காத... என்னோட வா.." என அவனை தன்னுடன் இழுத்துக்கொண்டாள்.

"எங்களுக்கு என்ன ஆனாலும் பரவால்ல... உன் ஆளு தான் உனக்கு முக்கியம்? நல்லா வருவ தங்கச்சி நீ...!!!" என கெளதம் புலம்பிய கேப்பில் ரிஷி மெயின் சுவிட்ச்ஐ நிறுத்திவிட்டு வந்தான்.

"மைதிலி எனக்கு ஒரு ஐடியா...!!!" என கத்தினான் கெளதம்.

"தயவுசெஞ்சு சொல்லாதீங்க... உங்களுக்குள்ளயே வச்சுக்கோங்க.." என மைதிலி பட்டென சொல்லிவிட, "தொப்பி தொப்பி, ஹாஹா....." என ஆடவர் மூவரும் சிரிக்கதொடங்கினர்.

"நல்லது சொல்ல வந்தா கேட்டுக்கணும்... இப்படி அசிங்கப்படுத்த கூடாது" என அவன் சொல்ல, "நீ என்னனு சொல்லு, அது யாருக்கு நல்லதுன்னு நாங்க சொல்றோம்..." என்றான் சந்தோஷ்.

"அன்னைக்கு திவ்யா சொன்னமாறி, நம்ம ராம்க்கு ஷாக் அடிச்சு தானே இப்படி ஆச்சு... மறுபடி ஒரு ஷாக் கொடுத்து, முள்ளை முள்ளால எடுத்தா என்ன...?" என கேட்டுவிட்டு ராமை பார்த்து விஷமமாய் சிரித்தான் கெளதம்.

ராம் அவனை அடிக்க தொடங்க, ஆளில்லாத அவ்விடத்தில் அவர்களின் குரல் பெரும்முழக்கமாய் அதிர்ந்தது.

அனைவரும் சிரித்து விளையாடிக்கொண்டிருந்த நேரம், அவர்கள் நாசியை வினோதமான நெடி வந்து தாக்கியது. என்னவென்று சுதாரிக்கும் முன்னர் ஒருவர் பின் ஒருவராய் நினைவு தப்பி மயங்கி விழ தொடங்கினர்.

-தொடரும்...
enna mam ippadi ayiduchu super ud mam
 
விஸ்வநாதன் வேலைய காட்டிட்டானா...
 
Top