Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 28:

போகும் போது தனி ஆளாய் சென்றவன், வரும் போது மதியையும் அதுவும் தூக்கிக் கொண்டு வருவதைப் பார்த்த பெரியாமி,

“முகிலா, என்ன இது..? என்ன ஆச்சு மதிக்கு..?” என்றார் பதட்டத்துடன்.

“இனி என்ன ஆகணும்..? இவ அங்க இருந்தவரைக்கும் போதும்.நான் எங்க இருக்குறேனோ, அங்க தான் இவளும் இருப்பா...!” என்றவன், அவரை கண்டு கொள்ளாது, தன்னுடைய அறைக்குத் தூக்கி சென்றான்.

அவள் சாய்ந்திருந்த அவன் நெஞ்சுப் பகுதியில், உஷ்ணம் ஏறிக் கொண்டே போனது.

“இவ்வளவு பீவரா இருக்கு...என்ன பண்ணினாங்க ரெண்டு நாளா..?” என்று உள்ளுக்குள் மூண்ட கோபத்தை, பல்லைக் கடித்துக் கட்டுப் படுத்தியவன், நேராக அவளைக் கொண்டு போய், அவனுடைய கட்டிலில் படுக்க வைத்தான்.

மதியோ, அவனின் சட்டையை விடாமல் இறுகப் பிடித்துக் கொண்டிருக்க, அவள் கைகளையும், அவளையும் ஒரு நிமிடம் பார்த்தவன்,மெதுவாக அவள் கைகளை விலக்கி, எழுந்தான்.

அதற்குள் மலரும், பார்வதியும் அங்கு வந்து விட்டிருந்தனர்.கீழே வந்தவன் அவர்களை சட்டை செய்யாது, நேராக சமையல் கட்டிற்கு சென்றான்.

“என்ன வேணும் முகிலா..? நான் பண்ணித் தாரேன்..!” என்றார் மலர்.

“அவ இன்னும் சாப்பிடலை..! சாப்பிட்டாதான் இன்ஜெக்ஷன் போட முடியும்..!” என்று பதில் மட்டும் சொன்னவன், எதையோ தேடிக் கொண்டிருந்தான்.

“இட்லி இருக்கு...சக்கரை வச்சுத் தரட்டுமா..?” என்றார்.

“வேண்டாம், கொஞ்சம் லிக்யுடா இருந்தா பெட்டர்... நான் பார்த்துக்கறேன்..! நீங்க போங்க..” என்றபடி, அவன் வேலையை அவன் செய்து கொண்டிருந்தான்.

மலரும், பார்வதியும் வேடிக்கை பார்க்க, அவனோ...அரிசியை வறுத்து, மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, அதை கொதிக்க வைத்த நீரில் போட்டு, நிமிடத்தில் அந்த கஞ்சியை தயார் செய்தான். இரண்டு சிறிய இஞ்சித் துண்டுகளையும், இரண்டு மிளகையும் பொடித்து அதில் போட்டவன், கொஞ்சம் வெந்நீரையும் எடுத்துக் கொண்டு அவன் அறைக்கு சென்றான்.

“என்ன மதினி நடக்குது இங்க...? மருமவனுக்கு சமைக்கத் தெரியுமா..?” என்றார் பார்வதி ஆச்சர்யமாய்.

“அட நீங்க வேற மதினி..! இன்னைக்குதான் இப்படி பண்றான். ஒருநாள் கூட சமையல் கட்டு பக்கம் வந்தது கிடையாது. அவன் ஒவ்வொன்னையும் தேடுனதுலையே உங்களுக்குத் தெரியலையா..?” என்றார் மலர்.

“முகிலனுக்கு, மனசுல இவ்வளவு பிரியம் இருக்கும்ன்னு நான் நினைச்சுகூட பார்க்கலை மதினி..!” என்றார் பார்வதி.

“சும்மாவே அவனுக்கு மதிண்ணா உசுரு மதினி. அவன் விருப்பம் தெரிஞ்சுதான், நான் கல்யாணத்த நடத்துனேன். ஆனா, இடையில என்ன என்னமோ நடந்துடுச்சு..!” என்றார் மலர், வருத்தத்துடன்.

“விதி போட்ட முடிச்சை யாராலையும் மாத்த முடியாது மதினி...!” என்று கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டார் பார்வதி.

அங்கு முகிலனோ,”மதி..! மதி..!” என்று அவளின் கன்னத்தைத் தட்டிக் கொண்டிருந்தான்.

“ம்ம்ம்..!”

“இதைக் கொஞ்சம் குடி, இன்ஜெக்ஷன் போடணும்..!” என்றான்.

“ம்க்கூம்..!” என்று அவள் மறுக்க, அவளை முறைத்தவன், வம்படியாக அவளைத் தூக்கி, சற்று அணைத்தவாறே, அந்த கஞ்சியைக் கொடுத்து முடித்தான். அவளின் மறுப்பெல்லாம் அவனிடம் செல்லவில்லை. அவளின் வாயைத் துடைத்து, அவளை சீர் செய்தவன், ஒரு ஊசியையும் போட்டான்.(எப்படி போடுவாங்கன்னு, உங்களுக்குத் தெரியும் தானே..!)

அவளுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்தவன், இரண்டு மாத்திரைகளையும் கொடுத்து முழுங்க செய்தான். அவள் நன்றாக படுத்த உடன், அவளுக்கு போர்த்தி விட்டவன், விடி விளக்கை எரியவிட்டு, கீழே வந்தான்.

மலர் அவனையே முறைத்துக் கொண்டு நிற்க, அதைக் கவனிக்காதவன்...

“அம்மா..! டிபன் எடுத்து வைங்க..!” என்றான்.

“இப்ப தான் எங்களை உனக்குக் கண்ணுக்குத் தெரியுதா...? எத்தனை நாள் நான் முடியாம இருந்திருக்கேன். என்னைக்காவது எனக்கு ஒரு சுடுதண்ணீ வச்சுக் குடுத்திருப்பியா...?” என்றார் உள்ளே சிரிப்பும், வெளியே ஆதங்கமுமாய்.

“உங்களைப் பார்த்துக்க அப்பா இருந்தாரே..! அதுமட்டுமில்லாம, வேலை செய்ய முடியாத அளவுக்கு உங்களுக்கு இன்னமும் காய்ச்சல் வரலை. அப்படி வரும் போது, உங்களுக்கும் இப்படி பண்றேன்.ஆனா, இப்ப பசிக்குது...டிபன் வைங்கம்மா...!” என்றான் கொஞ்சம் இறங்கிய குரலில்.

“சும்மா சொன்னேன் முகிலா..! ஆனா உன்னை இப்படிப் பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா...?” என்றார்.

“எது, நான் சமைக்கிறதைப் பார்க்குறதா..?” என்றான் இட்லியை விழுங்கிக் கொண்டே.

“அது சரி..! வரும்போது உன் முகமே சரியில்லையே..போன இடத்துல ஏதாவது பிரச்சனையா முகிலு..” என்றார்.

அவர் கேட்டவுடன், சற்று மறந்திருந்த விஷயங்கள் நியாபகத்திற்கு வர, உடனே அவன் முகம் இறுகியது. ஆனாலும் வெளியே கட்டிக் கொள்ளவில்லை.

“அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா..! அலைச்சல்...அதான் அப்படி இருந்திருக்கும்..!” என்றான்.

பார்வதியைப் பார்த்தவன்,

“நீங்களும் சாப்பிடுங்க அத்தை..!” என்றான் உரிமையாக.

“இருக்கட்டும் மருமவனே...! நீங்க சாப்பிடுங்க..” என்றார்.

“இதென்ன...புதுசா.... நீங்க எப்பவும் போல முகிலன்னே கூப்பிடுங்க..!” என்றான்.

“அது சரி வராது.உங்களுக்கு ஒரு மதிப்பு இருக்கு. அது எங்களால கெட்டுப் போக கூடாது இல்லையா...?” என்ற பார்வதி சொல்ல,

“உங்களை எப்பவும் மாத்த முடியாது அத்தை..!” என்றான்.

“மதி என்ன பண்றா..? நான் ஒரு தடவை பார்த்துட்டு போகட்டுமா..?” என்றார் பார்வதி.

“இதுக்கு எதுக்கு கேட்குறிங்க...? உங்க மகளைப் பார்க்க, என் அனுமதி வேணுமா என்ன...?” என்றான் சற்று கோபமாய்.

அதற்குமேல் தயங்காமல் பார்வதி மதியைப் பார்க்க செல்ல, நடந்த அனைத்தையும் பெரியசாமி பார்வையாய் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். ஏதோ இப்போது தான் வீடே உயிர்ப்புடன் இருப்பதைப் போன்று தோன்றியது அவருக்கு.

பெரியசாமி அந்த பக்கம் நகர்ந்த பிறகு...

“முகிலா...வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுக்கு தான் காலம்,நேரம் பார்க்கலை.மத்த விஷயத்து எல்லாம் முறைன்னு ஒன்னு இருக்கு..!” என்று ஜாடையாக அடிக் கோடிட்டுக் காட்ட, அம்மாவை முறைத்தான் முகிலன்.

“என்ன முறைக்கிற...?”

“என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படித் தெரியுது...? அவ இருக்குற நிலைமை என்ன...? உங்களுக்கு நக்கலா தெரியுது...? காலக் கொடுமைடா சாமி..!” என்றபடி சென்றான்.

“முகிலா..! பால் ஆத்துறேன்..!”

“ஒன்னும் வேண்டாம்..! இதுவே போதும்..!” என்றபடி சென்று விட்டான்.

“என்ன அத்தை..? மதியைப் பார்த்தாச்சா...?” என்றான்.

“தூங்குறா...! அதான் வந்துட்டேன். பார்த்துக்கங்க மருமவனே..!” என்று பார்வதி தயங்க,

“நீங்க என்ன அவ்வளவு தூரத்துலையா இருக்கீங்க..? நான் அவளுக்காகத் தான் இந்த வீட்டையே வாங்குனேன். எட்டிப் பார்த்தா உங்க வீடு. அதனால கவலைப்படாம, போய் நிம்மதியா தூங்குங்க..! என் பொண்டாட்டியை எப்படிப் பார்த்துக்கணும்ன்னு எனக்குத் தெரியும்..!” என்றான்.

அதற்கு மேல் பேசுவதற்கு பார்வதியிடம் வார்த்தையில்லை. கொஞ்ச நேரத்திற்கு முன்பு அவன் அக்கறையை நேரடியாக பார்த்தவர் ஆயிற்றே. அதனால் நிம்மதியாக சென்றார் வீட்டுக்கு.

அறைக்குள் சென்று கதவை அடைத்த முகிலனுக்கோ, அப்படி ஒரு நிம்மதி. எத்தனை வருடங்கள்...முழுதாக பத்து வருடங்கள் கழித்து, அவனுடன் அவன் மனைவி. இத்தனை வருட காத்திருப்பு.

மெதுவாக சென்று அவளின் அருகில் அமர்ந்தான் முகிலன். ஏற்கனவே தூங்கி எழுந்ததால், அவனுக்குத் தூக்கமும் வரவில்லை.நிர்மலமான முகத்துடன் தூங்கிக் கொண்டிருந்தாள் வண்ண மதி. முகத்தில் அப்படி ஒரு அமைதி குடிகொண்டிருந்தது. ஏதோ சேர வேண்டிய இடம் சேர்ந்து விட்டதைப் போல்.

அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் முகிலன். அவனுக்கு மதியிடம் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தது. அவள் மீது நிறைய கோபங்கள் இருந்தது. ஆனால், எல்லாமே அவள் முகத்தைப் பார்க்கும் வரை மட்டும் தான். அவளின் முகத்தைப் பார்த்த உடன், அவனுக்குத் தான் அனைத்தும் மறந்து விடுகிறதே.

“அப்படி என்னடி மாயம் பண்ணி வச்சிருக்க...? எப்படி இருந்தவன், இன்னைக்கு உன்கிட்ட மயங்கிப் போய் கிடக்குறேன். இத்தனை வருஷத்துல ஒரு நாள் கூட என்னோட நினைப்பு உனக்கு வரலையா..? இல்லை இவனெல்லாம் ஒரு ஆளான்னு நினைச்சியா..?” என்றான் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே.

அவள் பதில் பேச மாட்டாள் என்று தெரிந்தும் அவனே பேசிக் கொண்டிருந்தான்.

“எனக்குத் தெரியும்டி..! என்னைக்காவது ஒரு நாள், நீ என்கிட்டே வருவேன்னு. ஆனா, இப்படி ஒரு நிலையில உன்னை இங்க கூட்டிட்டு வருவேன்னு நினைக்கலை. எல்லா விஷயத்திலும் சட்டுன்னு கோபம் வர்ற எனக்கு, உன் விஷயத்துல மட்டும் ஏன் வரமாட்டேங்குது..? நானும் எப்படி எல்லாமோ யோசிச்சுப் பார்த்துட்டேன். ஆனா காரணம் மட்டும் தெரியவே இல்லை. ஒன்னும் மட்டும் உண்மை மதி...என் உலகமே நீதான். என் வாழ்க்கையில நீ மட்டும் தான்..! இது ஒரு நாள் உனக்குப் புரியும்டி..!” என்று அவனாகவே பேசிக் கொண்டிருந்தான்.

காய்ச்சல் உறக்கத்தில் இருந்தவளுக்கு, அவனின் வார்த்தைகள் காதில் விழுந்திருக்க வேண்டும், அவள் இடது கண் ஓரத்தில் கண்ணீர் வழிந்தது.அது முகிலனின் கண்களுக்குத் தெரியவில்லை. அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு, அவன் போக்கில் பேசிக் கொண்டிருந்தான்.

தனியாகக் கீழே படுக்கப் போனவன், பிறகு ஏதோ நினைத்தவனாய், மதியின் அருகிலேயே படுத்துக் கொண்டான்.பல வருடங்களுக்குப் பிறகு அவனுக்கு நிம்மதியான உறக்கம்.மதியும் அப்படித்தான், அன்று தான் உறக்கத்தைக் கண்டவள் போல், தூங்கிக் கொண்டிருந்தாள்.

அங்கு மதியின் வீட்டிலோ...

“இதெல்லாம் எப்ப பெரியம்மா நடந்தது..?” என்று, இன்னமும் அதிர்ச்சி மாறாமல் கேட்டுக் கொண்டிருந்தாள் வினோதினி.

பார்வதி நடந்த விஷயங்களைச் சொல்ல,

“அடப்பாவிங்களா..? நான் ஒரு நாள் லீவ் போட்ட கேப்ல, ஒரு கல்யாணமே பண்ணி முடிச்சிருக்காணுக. அதை இத்தனை வருஷமா என்கிட்டே ஒருத்தி சொல்லாம இருந்திருக்கா...நானும் லூசு மாதிரி, அவ கல்யாணம் செஞ்சா தான் நானும் செய்வேன்னு, அம்மாகிட்ட டயலாக் எல்லாம் விட்டுட்டு வந்திருக்கேன்..!” என்றாள் சோகமாய்.

அவளின் முகத்தைப் பார்த்த சுமதிக்கு சிரிப்பாய் வர,

“என் நிலைமையைப் பார்த்து உனக்கு சிரிப்பா இருக்குல்ல. நீ நல்லா வருவடி..” என்றாள் வினோதினி.

“அக்கா, ஏதோ தெரியாம பண்ணிடுச்சு...விடு வினோக்கா..!” என்றாள் சுமதி.

“யாரு..? உங்க அக்கா...தெரியாம....அடிப் போடி...! அவ தெரிஞ்சே செஞ்சிருப்பா...ஆனா வெளிய ஒண்ணுமே தெரியாதவ மாதிரி நடிப்பா...! உங்க அக்காவுக்கும் டாக்டர் மாம்ஸ் மேல அப்படி ஒரு லவ்வு. இப்ப கூட கேட்டுப் பாரு...எனக்கு பிடிக்கவே பிடிக்காது...நான் லட்சியத்தோட இருக்கேன்...அப்படி இப்படின்னு கதையளப்பா..!” என்றாள் வினோதினி.

“அதான் அக்காவைப் பத்தி இவ்வளவு தெரிஞ்சிருக்குள்ள..! அப்பறம் ஏன் கவலைப் படுறிங்க...?” என்றாள் சுமதி.

“ஏன் சொல்ல மாட்டிங்க...? முதல்ல, ஒரு நல்ல பையனாப் பார்த்துக் கல்யாணம் பண்ணனும்...இல்லைன்னா, உனக்கு கூட கல்யாணம் பண்ணிடுவாங்கடி. நான் ஆன்ட்டி லிஸ்ட்ல சேர்ந்துடுவேன்..!” என்றாள் வினோதினி அழாத குறையாக.

“உனக்கும் ஒரு நல்ல இடத்துல பார்க்கணும் வினோதினி. நான் என் தங்கச்சிகிட்ட பேசுறேன்..!” என்று பார்வதி சொல்ல,

“நீங்க தெய்வம் பெரியம்மா..! அதை செய்ங்க முதல்ல.இவங்க லவ்ஸ் எல்லாம் என்னால கண் கொண்டு பார்க்க முடியலை..!” என்றாள்.

“மதி என்ன செய்யுது..? காய்ச்சல் குறைஞ்சிருக்கா..?” என்றார் மனோகர்.

“நல்லா தூங்குறாங்க..! முகிலன் அப்படி பார்த்துகிறாப்டி...இவளுக்கு சரியனதுக்கு அப்பறம், இவ ஏதும் ஏடாகூடம் செய்யாம இருந்தா சரி தான்..” என்று பார்வதி புலம்ப,

“கவலைப் படாதிங்க பெரியம்மா..! மதி முன்ன மாதிரி கிடையாது. இனி அப்படி எல்லாம் நடந்துக்க மாட்டா..!” என்றாள் வினோ, தோழியின் குணம் அறிந்தவளாய்.

“எனக்கும் தெரியும் வினோ...! இவளுக்கு இந்த காய்ச்சலே முகிலனைப் பார்க்காததுனால தான் வந்திருக்கும்..!” என்றார் சிரித்தபடி.

தாயறியாத சூழா...?



நடு இரவில், மதிக்கு அதிக குளிர் எடுக்க, நடுங்கிக் கொண்டே பிதற்றத் தொடங்கினாள்.

முதலில், அவள் குரல் முகிலனுக்குக் கேட்கவில்லை. அருகில் அவளின் முனங்கள் சத்தமும், வெப்பமான மூச்சும் அவனை எழுப்ப,

“மதி..மதி..! என்ன ஆச்சு..?” என்றான். அவளோ ஏதேதோ பிதற்றிக் கொண்டே, குளிருக்கு அவனிடம் தஞ்சம் அடைந்திருந்தாள். அவன் நெஞ்சிற்குள் முற்றிலும் புதைந்து போனாள்.

அவள் பிதற்றிய வார்த்தைகள் அவனுக்குத் தெளிவில்லாமல் கேட்டாலும், அந்த பிதற்றலில் ‘மணி மாமா..’ என்ற வார்த்தை மட்டும் அவனுக்கு அச்சுப் பிசகாமல் கேட்டது.

அந்த அழைப்பில் தன்னைத் தொலைத்தவன், மேலும் அவளை தனக்குள் இறுக்கிக் கொண்டான். இடையில் ‘அம்மா’ ‘சுமதி’ என்று ஏதேதோ சொல்ல,

அவளின் நெற்றியில் முத்தமிட்டவன், “ஒண்ணுமில்லை...! நீ தூங்கு..!” என்று அவளைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

இப்படி ஒரு இரவு முழுவதும் அவனைப் படுத்தி எடுத்தாள் வண்ண மதி. ஆழ்நிலை நினைவில், முகிலனின் நினைவுகள் மட்டுமே இருக்க, பருவ வயதில் இருந்து இப்போது வரை அவன் மேல் கொண்ட காதலை, வெறும் ஈர்ப்பு என்று எண்ணி ஒதுக்கியவள், இப்போது உணர்ந்து கொண்டாள், அவனன்றி அவள் இல்லை என்று. அந்த நிலையிலும் அவள் உணர்ந்திருக்க வேண்டும். அவளின் மனநிலையே, பிதற்றல்களாய் வெளி வந்திருந்தது.

இப்படி இரண்டு நாட்களாக முகிலனையும் படுத்தி எடுத்த பின்பு தான், அவளுக்குக் காய்ச்சல் குணமாகியது. அவளுக்கு குணமாவதற்குள் அவன் தான் ஒருவழியாகி இருந்தான்.

ஓரளவிற்கு உடல் தேறிய பின்...

“நான் வீட்டுக்குப் போகணும்..!” என்றாள் மொட்டையாக.

ஏற்கனவே, சரியான பின்பு..அவள், அவனிடம் அதிகம் பேசவில்லை. அந்த கோபத்தில் இருந்தவனிடம் இப்படிக் கேட்டு வைக்க,

“இதென்ன உனக்கு ட்ரீட்மென்ட் பார்க்குற ஹாஸ்பிட்டலா...? சரியான உடனே வீட்டுக்குப் போகணும்ன்னு சொல்ற..?” என்றான் எரிச்சலுடன்.

“நான் ஒன்னும் ட்ரீட்மென்ட் கேட்கலை..!” என்றாள்.

“ஆமா..! நானாதான் குடுத்தேன்..!” என்றான்.

“அதான் சொல்றேன்..! வீட்டுக்குப் போகணும்..!” என்று மீண்டும் அதே பல்லவியைப் படிக்க,

“இங்க பாரு..! மறுபடியும் முதல்ல இருந்தா...இனி பேச்சு வார்த்தை எல்லாம் கிடையாது. ஒன்லி ஆக்சன் மட்டும் தான். இப்படியே பேசிகிட்டு இருந்தேன்னு வையி....”என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க,

“என்ன செய்விங்க...? என்ன மிரட்டுறிங்களா...?” என்றாள் பதிலுக்கு.

“போனாப் போகுது...உடம்புக்கு இப்போதான் சரியாகியிருக்கு.. அப்படின்னு பார்த்தா...ரொம்ப ஓவரா பேசுற...? என்ன நினைச்சுட்டு இருக்க. என்னைப் பார்த்தா கேனைப் பயல் மாதிரி இருக்கா...நான் ஏற்கனவே சொன்னது தான், நீயா என் கண்ணில் பட்டா..அந்த நிமிஷத்தில் இருந்து நீ எனக்கு சொந்தம்ன்னு, எனக்கான உரிமையை எடுத்துப்பேன்னு...மறந்திருக்க மாட்டேன்னு நினைக்கிறேன்...” என்றான்.

“நான் ஒன்னும் மறக்கலை..! நீங்க மிரட்டுனா..நான் பயந்திடுவேனா...? இவ்வளவு வாய் கிழிய பேசுறவரு...முதல் ரெண்டு நாள் கண்டுக்காம தான இருந்தீங்க...?” என்றாள். கோபத்தில் பேசியதில், மனதில் இருந்த கோபம் வார்த்தைகளாய் வந்து விட்டிருந்தது.

“எந்த ரெண்டு நாள சொல்ற..?” என்றான் புரியாமல்.

“நடிக்கிறவங்களுக்கு எப்படிப் புரியும்..?” என்றாள் வெடுக்கென்று.

அவளின் கன்னத்தை ஒரு கையால் பிடித்தவன்...

“யாருடி நடிக்கிறது...? என்னைப் பார்த்தா நடிக்கிற மாதிரியாத் தெரியுது...?” என்றான்.

“ஸ்ஸ்ஸ்... வலிக்குது...விடுங்க..!” என்று அவள் வலியுடன் சொல்ல, அவளின் முகத்தைப் பார்த்தவன், பட்டென்று விட்டுவிட்டான்.முன்னுச்சி முடியைக் கோதி, கோபத்தைக் கட்டுப்படுத்தியவன், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளும் சளைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரின் கோபப் பார்வைகளும், ஒரே நேர்கோட்டில்.

அவன் ஊரில் இல்லாதது அவளுக்குத் தெரியும் என்று அவன் நினைத்திருந்தான். அவன் ஊரில் இருந்து கொண்டே, தன்னைப் பார்க்க வரவில்லை என்று அவள் நினைத்திருந்தாள்.

காதல் வளரும்....











 
ஹாய் பிரண்ட்ஸ்...

கொஞ்சம் சின்ன அப்டேட் தான்...நாளைக்கு கண்டிப்பா அத்யாயம் உண்டு.

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

இதுவரை கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும்...நன்றிகள் பல


( நானெல்லாம் இப்படி பார்மலா பேசுற ஆளே கிடையாது... கொஞ்சம் பொறுத்துக்கோங்க...:LOL::LOL::LOL::LOL::LOL:)
 
ஹாய் பிரண்ட்ஸ்...

கொஞ்சம் சின்ன அப்டேட் தான்...நாளைக்கு கண்டிப்பா அத்யாயம் உண்டு.

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

இதுவரை கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும்...நன்றிகள் பல


( நானெல்லாம் இப்படி பார்மலா பேசுற ஆளே கிடையாது... கொஞ்சம் பொறுத்துக்கோங்க...:LOL::LOL::LOL::LOL::LOL:)
ஹா ஹா ஹா
சூப்பர், உமா டியர்
???:love::love::love::cool::cool::cool:
 
Last edited:
Top