Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

மொபைலில் பேசினாலோ முகாரி பாடுபவளை சமாதானம் செய்யவே அவனுக்கு பெருத்த அவஸ்தையாக இருந்தது. அவளில்லாத அவர்களின் அறையின் வெறுமை அவனை பரிகாசமாய் பார்க்க உள்ளுக்குள் வெறுத்தே போனான்.


காதலித்து மணந்தும் தன்னிலை இப்படியா ஆகவேண்டும்? என உள்ளுக்குள் வெதும்பினாலும் அவளின் எதிர்காலத்தை முன்னிட்டு தன் உணர்வுகளை கட்டிவைத்தான்.


மேலும் ஒருவாரம் கடக்க மறுநாள் சென்னை கிளம்பியே ஆகவேண்டும் என்ற முடிவோடு வீட்டிற்கு வந்தவன் வாசலில் ஏகப்பட்ட கார்கள் இருப்பதை பார்த்ததும் துணுக்குற்றான்.


கேட்டிற்கு வெளியே தன் காரை நிறுத்தி வேகமாக வீட்டிற்குள் ஓட மொத்த குடும்பமும் கும்பலாக அங்கே சூழ்ந்து நிற்பதை பார்த்ததும் அவனின் இதயம் அளவிற்கதிகமாய் வேகமாக துடித்தது.


யாருக்கு என்னவோ என்ற பயம் நெஞ்சை கவ்வ அவர்களுக்குள் தன்னை வேகமாக நுழைத்தவன் கண்ட காட்சியில் விழியே தெறித்தது.


நடுநாயகமாக நேத்ரா அமர்ந்திருக்க அவளுக்கு மாறி மாறி உபசாரம் நடந்துகொண்டிருந்தது. ஒன்றும் புரியாமல் திருதிருத்தான். அவனை கண்டுவிட்ட நேத்ராவின் முகம் மகிழ்ச்சியில் மின்ன,


“ஹை கட்டுமரம்...” என்றாள் சுமங்கலியின் புறம் சாய்ந்து.


அவனை அப்போதுதான் பார்ப்பதை போல அனைவரும் கட்டியணைத்து வாழ்த்திவிட்டு செல்ல ஓரளவிற்கு அவனாலும் யூகிக்க முடிந்தது. கண்கள் கலங்க அவளையே பார்த்திருந்தான்.


அனைவரும் அவர்களுக்கு தனிமை கொடுத்து விலக சிவராமனோ,


“ரிஷி நீ நேத்ராவை உன் ரூம்க்கு அழைச்சிட்டு போப்பா...” பின்னே எல்லோரின் முன்பும் அவர்கள் சண்டை போட்டால் யார் சமாதானம் செய்ய என்ற பயம் தான்.


அவனையே அவள் பார்த்திருக்க ஒன்றும் பேச தோன்றாமல் அவன் தன்னறைக்கு சென்றுவிட்டான்.


“ப்ரெண்ட், எதாச்சும் டிப்ஸ் குடுங்க. மிஸ்டர் கட்டுமரம் ஓவர் ஆங்ரி...” சுமங்கலியின் காதை கடிக்க,


“அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீ போய் பேசு. சரியாகிடுவான்...” என அவளை அனுப்பிவிட்டு வந்தவர்களை கவனிக்க ஆரம்பித்தார்.


மெல்ல மேலே அறைக்குள் வந்தவள் ரிஷியின் நிலையை பார்த்து அப்படியே சமைந்துதான் நின்றாள்.


கட்டிலில் சாய்ந்து படுத்திருந்தவன் விழி மூடியிருக்க அங்கே ஈரம் கசிந்திருந்தது. இப்படி ஒரு தோற்றம் அவள் பார்த்திராதது. பரிதவித்து போனாள் பெண்ணவள்.


அவனருகே நெருங்கி அமர்ந்தவள், “சாரி ரிஷி. எங்க என்னை வரவேண்டாம்னு சொல்லிடுவீங்களோன்னு பயந்து தான் தாத்தாக்கிட்ட இப்படின்னு விஷயம் சொன்னேன். இன்னும் வீட்ல கூட யாருக்கும் தெரியாது...”


உண்மையான கவலையோடு பேசியவளை விழி திறவாமலே தன் மீது சரித்துக்கொண்டான். அவனின் நெஞ்சத்தில் சாய்ந்தவள்,


“என்னை திரும்ப சென்னைக்கே அனுப்பிடுவீங்களா? மாட்டீங்க தானே? ப்ளீஸ். என்னால உங்களை விட்டு இருக்க முடியலை மிஸ்டர் கட்டுமரம்...” என்றவள் முதுகு அழுகையில் குலுங்க,


“இப்பவும் சொல்றேன், என்னோட கண்ணீர் எல்லாமே உங்களுக்கா தான். நீங்க தான் நீங்க மட்டும் தான் என்னை அழ வைக்கிறீங்க...” சொல்லி மேலும் அழ அவள் புறம் திரும்பியவன் கழுத்து வளைவில் முகம் புதைத்து,


“ஒரு பைவ் மினிட்ஸ்டா. சைலண்டா இரு. எனக்கு இந்த நிமிஷத்தை, உன்னோட அருகாமையை, உன் வாசத்தை, உன் தீண்டலை நான் பரிபூரணமா அனுபவிக்கனும். நீ இல்லாமல் இங்க நான் ஒவ்வொரு நிமிஷமும் சிதைஞ்சி போய்ட்டு இருந்தேன் நேத்ரா. இனி உன்னை விட்டு ஒரு நிமிஷமும் நான் இருக்க மாட்டேன்...” சிறு விசும்பலோடு கூறி,


“உன்னை ரொம்பவே மிஸ் பண்ணினேண்டி தக்காளி. இனி உன்னை என்னை விட்டு எங்கயுமே அனுப்பவே மாட்டேன். மாட்டேன். அதுவும் இந்த நிலைல. என்னோட சந்தோஷத்தை வார்த்தையால சொல்ல முடியலை. அந்தளவுக்கு நான் ஹேப்பியா இருக்கேன்...”


அவளுள்ளே புதைந்துவிடுபவன் போல அவளை இறுக்கிக்கொள்ள அதில் திணறியவள்,


“ஹைய்யோ விடுங்க கட்டுமரம். உள்ள நம்ம பேபி ரொம்ப திட்டுது. ஏன் இப்படி போட்டு படுத்தறேங்கன்னு...” என்றதும் அவளை விட்டு கொஞ்சமே விலகியவன்,


“இனி முரட்டுத்தனமா நடக்கமாட்டேன். ஆனா இப்படி நடந்துக்கவே மாட்டேன்னு சொல்ல மாட்டேன்....” என புன்னகைக்க,


“அதானே பார்த்தேன்?...” நேத்ரா சொல்ல,


“பேபி என்னை போலவா? உன்னை போலவா? எதாச்சும் கெஸ்ஸிங் இருக்கா தக்காளி...” மீண்டும் அவளை தன் மேல் சரித்து கேட்க,


“உங்களமாதிரி இருந்தாலும், இல்லை என்னை போல இருந்தாலும் அதுவும் இல்லாம நம்ம ரெண்டு பேரை போலவும் இருந்தாலும் ஊர் தாங்காது மிஸ்டர் கட்டுமரம்...” என சொல்லி சிரிக்க அவளோடு தானும் இணைந்துகொண்டான்.


------------------------------------------------------------------


பத்து வருடங்கள் கழித்து....


ஆர் ஜே கல்லூரி.


“ஸ்டூடன்ஸ் இந்த சம் கொஞ்சம் டிபிகல்ட் தான். ஆனாலும் கொஞ்சம் ஈஸி மெத்தட்ல சொல்லித்தர ட்ரை பண்ணியிருக்கேன். புரியலைனா உடனே சொல்லிடுங்க...”


கண்களை உறுத்தாத நிறத்தில் அழகான உயர்ரக காட்டன் சேலையில் ஆசிரியருக்கே உரித்தான கணீர் குரலில் கம்பீரம் கலந்து மாணவர்களுக்கு புரியும் வகையில் கணக்கை சொல்லிகொடுத்துக்கொண்டிருந்தாள் நேத்ரா.


அதற்கான விளக்கங்களை மிக நேர்த்தியாக சொல்லிகொண்டிருந்தவள் கடைசி வரிசையில் வகுப்பில் கவனம் செலுத்தாத பெண்களை பார்த்து ஒரு நிமிடம் பேச்சை நிறுத்தி அவர்களையே கூர்மையாக பார்த்தாள்.


திடீர் நிசப்தம், அம்மாணவிகளும் இவளின் பார்வை வீச்சில் கவனம் நேத்ராவின் புறம் திரும்ப எழுந்து நின்றனர்.


“ஸாரி மேம்...” அவர்களாகவே மன்னிப்பையும் கேட்க,


“பேச்சு முக்கியம் தான். லைப் ஃபுல்லா பேசிட்டு இருக்க போறோம் தான். ஆனா பாடமும் படிப்பும் அதை விட முக்கியம். இதெல்லாம் சகஜம் தான் கேர்ள்ஸ். நானும் இதை தாண்டி வந்தவ தான். ஆனாலும் என்னோட படிப்பில் நான் கவனத்தை சிதறவிடலை. ஸிட்டவுன்...”


மீண்டும் பாடத்தில் கவனத்தை திருப்பியவள் வகுப்பு நேரம் முடிந்த பெல் சத்தத்தில்,


“ஓகே ஸ்டூடன்ஸ். பை....” என்றபடி தன்னுடைய புக்கை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டாள் நேத்ரா.


தன்னுடைய அறை வாசலில் லெக்சர் ரஞ்சனி, அவரோடு இன்னும் இரண்டு லெக்சரர்ஸ் நின்றிருக்க பார்வையாலே என்னவென கேட்டாள்.


“மேம் கல்சுரல்ஸ் பத்தி கரெஸ்பாண்டென்ட் ஸார் உங்ககிட்ட பேச சொல்லியிருந்தார். அதான் வெய்ட் பன்றோம்...” எனவும் பிரின்ஸிபல் நேத்ரா என்று அடையாளமிட்டிருந்த தன்னுடைய அறையை திறந்துகொண்டு உள்ளே சென்று தன்னுடைய இருக்கையில் அமர்ந்தாள்.


அவர்களையும் அமரும் படி கை காட்டியவள் அதுவரை பாடமெடுத்ததில் காய்ந்திருந்த தொண்டைக்கு இதமாக பாட்டிலில் அடைத்து சுமங்கலியால் அனுப்பப்பட்டிருந்த இளநீரை எடுத்து சரித்துக்கொண்டாள்.


“ஹ்ம் சொல்லுங்க...” என அவர்களை ஆரம்பிக்க சொல்லி அடுத்த இரண்டு மணிநேரமும் அந்த விவாதத்திலேயே சென்றது.


அனைத்தையும் அலசி ஆராய்ந்து ஒருவழியாக கல்சுரல்ஸ் பத்தின அட்டவணை சரியாக தயாராக அப்போதுதான் மற்ற மூவரும் நிம்மதியாகினர். இல்லைஎன்றால் சரியாக திருப்தியாக வரும் வரை நேத்ரா தங்களை விடப்போவதில்லை என்பது அவர்களின் திண்ணம்.


மூவரும் நன்றி சொல்லி வெளியேற கடைசியாக சென்ற ரஞ்சனி நேத்ராவை திரும்பி பார்த்தாள்.


பத்து வருடங்களுக்கு முன் இருந்த நேத்ராவிற்கும் இப்போதிருக்கும் நேத்ராவிற்கும் தான் எத்தனை எத்தனை வித்தியாசம். அவளை இந்த காலேஜை விட்டு விரட்ட தான் முயன்ற அனைத்து சின்னத்தனமான செயல்களும் ஞாபகம் வர இப்போது நினைக்கவே அசிங்கமாக இருந்தது.


ஆனால் நேத்ராவிற்கோ அது சிரிப்பாக இருந்தது. ரஞ்சனியின் பார்வையை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தவள் என்னவென புருவம் உயர்த்த,


“நத்திங் மேம்...”அவசரமாக சொல்லி வெளியேறிவிட்டாள்.


அதில் நேத்ரா வாய்விட்டு சிரிக்க சரியாக ரிஷியும் உள்ளே நுழைந்தான்.


“என்ன பிரின்ஸிபல் மேம். சிரிப்பு வெளிய வரை கேட்குது...” என்றபடி வர அவனிடம் ஒன்றுமில்லை என்று புன்னகைத்தாள்.


“உனக்கு ஏண்டா இந்த வேலை. பேசாம இந்த காலேஜை நீயே நடத்தேன். நான் அப்பாவுக்கு ஹெல்ப் பன்றேன். இல்லைனா பிரின்ஸிபால் போஸ்டிங் மட்டும் பாரு. எதுக்கு க்ளாஸ் எடுத்திட்டு உன்னை நீயே ஸ்ட்ரெயின் பண்ணிக்கிற?...”


“ஸி மிஸ்டர் கட்டுமரம். உடனடியா பெரிய பதவிக்கு வந்துட்டா அதுக்கான வேல்வ்யூ, கஷ்டம் என்னனு எனக்கு தெரியாமலே போய்டும். அதுக்கான வயசும் அனுபவமும் எனக்கில்லை. நீங்களும் அத்தை மாமாவும் சொன்னதால தான் இந்த போஸ்டிங் கூட. இல்லைனா எனக்கு பிடிச்ச டீச்சிங்ல நான் இருந்திருப்பேன். எனக்கு பாடம் எடுக்க பிடிச்சிருக்கு ரிஷி...”


லட்சமாவது முறையாக இதை ரிஷியிடமும் தன் குடும்பத்திடமும் சொல்லிவிட்டாள். ஆனாலும் அவர்களுக்கு இது ஒரு குறையாகவே இருந்து வருகிறது.


“என்னைக்கு என் பேச்சு உன்கிட்ட எடுபட்டிருக்கு? ஓகே கிளம்புவோம். நாளைக்கு லீவ். எங்கையாவது போக ப்ளான் பண்ணுவோம்...” என,


“என்ன ப்ளான் பண்ண? வழக்கம் போல தாத்தா வீடு தான். அதுல மட்டும் நோ சேஞ்ச் மிஸ்டர் கட்டுமரம்...” கட் அன்ட் ரைட்டாக கூறினாலும் அவள் விழிகளில் குறும்பு பூக்கள்.


அவளை அறிந்தவனால் சிணுங்கியபடி தரையில் காலை உதைக்க மட்டுமே முடிந்தது.


“பிடிவாதம் பிடிவாதம்...” முணுமுணுத்துக்கொண்டே அவளோடு சென்றான்.


இரண்டு மாதங்களுக்கு பின் நடைபெற இருக்கும் கல்சுரல் ப்ரோக்ராம் பற்றி பேசிய கருத்துக்களை ரிஷியிடம் பகிர்ந்தவாறே நேத்ரா வீட்டினுள் வர அமைதியாக இருந்தது.


சிவராமனையும் சுமங்கலியையும் காணாது தேடியவர்கள் பின்புறம் ஏதோ சத்தம் கேட்க அங்கே விரைந்தனர்.


இருவரின் வருகையை அறிந்ததை போல திடுதிப்பென்று அவர்களின் முன்னால் குதித்தான் அவர்களின் செல்ல புதல்வன் அபினவ்.


“ஹே அம்மாவும், அப்பாவும் வந்தாச்சு. ஆத்தா, ஐயா. வாங்க...” என்றபடி வீட்டின் பின்னால் இருந்த கெஸ்ட்ஹவுஸ் நோக்கி ஓடினான்.


ரிஷிக்குத்தான் பற்றிக்கொண்டு வந்தது மகனின் விளிப்பில். அவனின் எண்ணமறிந்தவள் வாய் பொத்தி சிரிக்க அவளை முறைத்தான்.


“நாளைக்கு மீசைக்கு இருக்கு வேடிக்கை...” என்றுவிட்டு,


“அவரை சொல்லி என்ன செய்ய? அவரோட சப்ஸ்டிட்யூட் நீ இருக்கும் போது? வா அங்க எதோ கிளீன் பண்ணிட்டு இருக்காங்க. நாம போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வருவோம்...” சொன்னதை போல விரைவில் அவர்களுடன் வந்து இணைந்துகொண்டான்.


“என்ன ப்ரெண்ட் நீங்க? நாங்க வந்ததும் இதையெல்லாம் பண்ணவேண்டியது தானே? நானும் ஹெல்ப் பண்ணியிருப்பேன்ல...” என நேத்ரா சுமங்கலியை கடிந்துகொண்டாள்.


இந்த சின்ன வீட்டில் இருப்பதனைத்தும் அவர்களின் மாமியார் நாயகியம்மாளும், சுமங்கலியின் வீட்டினரும் அவருக்கு கொடுத்த சீதனம். இப்போது நேத்ராவினதும் சில அங்கே. அதை வருடம் இரண்டுமுறை தாங்களே சுத்தம் செய்வது வழக்கம்.


ரிஷியின் திருமணத்தின் முன்பு திலகா வந்துவிடுவார் சுமங்கலியின் துணைக்கு. வேலையாட்களிடம் இதை கொடுக்காமல் தங்களின் கையாலே சுத்தம் செய்வதுதான் அவர்கள் வழக்கம்.


“நாங்களே இப்போதான் ஆரம்பிச்சோம் நேத்தும்மா. எனக்கு தெரியுமே இன்னைக்கு நீங்க மூணு மணிக்கெல்லாம் வந்துடுவீங்கன்னு. சாப்டீங்க தானே?...” என்றபடி பேச்சு பேச்சாக இருந்தாலும் கை அதன்பாட்டிற்கு வேலையில் இருந்தது.


அவர்களை வேலை செய்யவிடாமல் அபினவ் தன் பங்கிற்கு சேட்டையில் கலக்க, “ஏன்டா அபி. ஓரமா அங்க போய் உட்காரேன். ஊடால வந்து என்னை தொந்தரவு பண்ணாதே...” என சிவராமன் கூற,


“நீங்க வேலை செய்யறீங்களா இல்லையான்னு நான் இங்க உட்கார்ந்து பார்த்தாதான் தெரியும். அங்க போனா எப்படி தெரியுமாம்? என்னை ஏன் பார்க்கறீங்க? உங்க வேலையை நீங்க பாருங்க...” என,


“அப்படியே அப்பனை கொண்டு பிறந்திருக்குது. என்ன சொன்னாலும் கேட்கிறதே இல்லை...” சிவராமன் கத்திக்கொண்டிருந்தார்.


அவரை ஒருவித நமுட்டுச்சிரிப்போடு பார்த்தவன் மெல்ல நகர்ந்து உள்ளே நேத்ராவோடு இணைந்துகொண்டான்.


அங்கிருந்த பொருட்களை துடைத்துக்கொண்டிருந்தவளை இடையோடு அணைத்தவன் அவனும் வேலை செய்யாமல் அவளையும் பார்க்கவிடாமல் படுத்திவைத்தான்.


அவனை விலக்கியவள், “அங்கே உங்க பையன், இங்க நீங்களா? ஒழுங்கா போங்க. போய் வேலையை பாருங்க...” என மிரட்ட சிரிப்போடு இன்னும் நெருங்கினான்.


“தக்காளி நான் மட்டும் அன்னைக்கு திருச்சி வராம இருந்தா என்ன ஆகியிருக்கும்?...” நேத்ராவின் தோளை பற்றியபடி கழுத்தில் முகம் சாய்த்து கேட்க,


“எனக்கு வேற யாரோடையாச்சும் கல்யாணம் ஆகியிருக்கும் மிஸ்டர் கட்டுமரம்...” சொல்லி குறும்பாய் சிரிக்க அவளை முறைக்க முயன்று தானும் சிரித்தான்.


அவர்களை கலைக்கவென வந்த அவர்களின் மகன் அபினவ் ரிஷியின் ட்ராக் சூட்டை பிடித்து இழுக்க அவனோ மனைவியின் மதிமுகத்தை ஒருவித மோனநிலையோடு பார்த்திருந்தான்.


“ம்ஹூம் சரியில்லையே...” என்றபடி அவனின் காலில் நறுக்கென அபி கிள்ளிவைக்க ஆவென அலறினான் ரிஷி.


அதில் கலகலத்த அபினவ் தகப்பன் கையில் சிக்காமல் அவனிற்கு ஒழுங்கு காட்டிவிட்டு அங்கிருந்து ஓட,


“ஹைய்யோ ராமா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலையே...” என்றபடி தலையிலடித்து திரும்ப அங்கே பரிதாபமாக சிவராமனும் அவரின் அருகில் சுமங்கலியும். சற்றே அதிர்ந்துதான் விட்டான் ரிஷி.


“ஹைய்யோ தாத்தா உன்னை உம்ட்டு மவன் கொசுன்னு சொல்லிட்டான்...” என்று போட்டுகொடுத்துவிட்டு சிட்டாக வெளியில் பறந்துவிட்டான் அபினவ்.


அதில் கணவரின் பாவனையில் சுமங்கலி வாய்விட்டே சிரித்துவிட சிவராமனுமே மகன் முழித்த முழியில் புன்னகைத்துவிட்டார். அங்கே சிரிப்பலை ஆர்ப்பரித்து பொங்கி பிராவகம் எடுத்தது.


சிரித்துக்கொண்டே சுமங்கலியும் சிவராமனும் பேரனை தேடி செல்ல மீண்டும் ரிஷி நேத்ராவின் புறம் திரும்பினான்.


கலகலவென்ற அவளின் சிரிப்பில் என்றைக்கும் போல அவள் பால் நுரைத்து பொங்கிய தன் காதலில் தன்னை தொலைத்து கரைந்து நின்றான் ரிஷி.


அவளை காணாத நாட்களையும் கணக்கிலெடுத்து அனைத்திற்கும் சேர்த்து வட்டியும் முதலுமாக இன்றுவரை திகட்ட திகட்ட வாழ்ந்து அவளையும் வாழவைத்துக்கொண்டிருப்பவனின் காதலை இன்றளவும் பிரமிப்போடே உள்வாங்குகிறாள் நேத்ரா.


தன் மீதான நேத்ராவின் உயிரெல்லாம் நேசமணம் பரப்பும் காதலில் உலகமே அவனின் காலடியில் என்பதை உணர்ந்தவனின் நெஞ்சை நிறைத்தவளின் ஓயாத காதல் அலைகளில் மிதந்து அவளின் அன்பெனும் பேரலையில் சுகமாய் திளைத்திருந்தான்.


என்றும் என்றென்றும் நேத்ராவை தீண்டும் காதல் அலையாய் ரிஷி.


நிறைவுற்றது
Nice
 
Top