Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

AshrafHameedaT

Administrator
அலை – 20

இரண்டு நாட்களுக்கு பின் நேத்ரா ரிஷியின் அறையில் உடன் ரோஷினியும். ரிஷியும் இதை எதிர்பார்த்தே இருந்தான். நேத்ரா நிச்சயம் தனியாக வரமாட்டாள் என்று.

“ஸார் நாங்க க்ளாஸ்க்கு போகனும். எதுக்கு வர சொன்னீங்கன்னு இன்னும் நீங்க எதையும் சொல்லவே இல்லையே?...” தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ரோஷிணி கூற,

“நான் உங்களை கூப்பிடவே இல்லையே ரோஷிணி. சோ நீங்க க்ளாஸ்க்கு போகலாம்...” என தன்னுடைய லேப்டாப்பில் இருந்து பார்வையை விலக்காமல் பதில் மட்டும் கூறினான்.

ஆனாலும் சட்டமாய் நின்றாள் ரோஷிணி. அவளை கேள்வியாக நிமிர்ந்து பார்த்தவன் பேசாமல் மீண்டும் தலையை லேப்டாப்பினுள் புதைக்க அதில் கோபம் கொண்டாள் ரோஷிணி.

நேத்ராவோ இது எதையும் கண்டுகொள்ளாமல் மேம்போக்காக யாருக்கு வந்த விருந்தோ என வேடிக்கை பார்த்து நின்றிருந்தாள். சில நிமிடம் பொறுத்துபார்த்தவள்,

“ஓகே நேத்ரா நான் வெளில நிக்கிறேன். எதுவானாலும் என்னை கூப்பிடு...” என்று ரிஷியை பார்த்துக்கொண்டே கூறிச்செல்ல ரிஷியின் இதழ்களுக்குள் நமுட்டு சிரிப்பொன்று உதயமாகியது.

“தனியா தக்காளியை என்ன செஞ்சிடுவேணாம் நான்?. ரொம்பத்தான் ப்ரெண்ட்ஸா இருக்காங்கப்பா...” என்றபடி நிமிர அப்போதுதான் நேத்ராவும் அவனை திரும்பி பார்த்தாள்.

ரிஷியை பார்த்ததும் ஏனோ ஒரு எதிர்பார்ப்பு மனதின் மூலையில் முட்டிமோதிக்கொண்டு இருந்தது.

என்ன சொல்வானோ? என்ற கவலையெல்லாம் இல்லை. அவனை பார்த்ததும் தெரிந்துகொண்டால் அவன் ஏதோ திட்டுவதற்கு தான் அழைத்திருக்கிறான் என்று. ஆனாலும் ஒரு குறுகுறுப்பு.

“என்ன பாடிகார்ட் எல்லாம் பலமா இருக்கு?...” என கேலியாக ஆரம்பிக்கவும் நியாயத்திற்கு இதற்கு கோபம் கொண்டிருக்கவேண்டும் நேத்ராவின் இயல்பின் படி.

ஆனால் மாறாக அவள் மகிழ்ந்து போனாள். எத்தனை நாளாகிற்று இவன் தன்னை சீண்டி. அவனின் பார்வை தீண்டலின்றி சீண்டலின்றி தான் இத்தனையா தவித்திருந்தோம் என தன்னை நினைத்தே அதிசயத்து தான் போனாள்.

அவளின் எண்ணவோட்டங்கள் அவளின் பளிங்கு முகத்தில் பிரதிபளித்ததோ என்னவோ அவளின் நொடி நேர மலர்ச்சியையும் தன்னை எதிர்பார்ப்போடு நோக்கும் விழிகளையும் கண்டுகொண்டவன் சுதாரித்தான்.

“அடங்குடா ரிஷி. இன்னும் ஒரு வருஷம் இடையில நிக்குது. தக்காளியை டெம்ப்ட் பண்ணாதே...” என ஸ்டேண்டர்ட்டீஸ் அட்டென்ஷன் சொல்லிக்கொண்டு கஞ்சியை குடித்தவன் போல விடைத்து அமர்ந்தான்.

தான் பார்த்ததும் கேட்டதும் கனவோ என்னும் வகையில் ரிஷியின் கணநேர மாற்றம் நேத்ராவை குழப்பியது.

“காலேஜ் வந்தா படிக்க மட்டும் தான் செய்யனும். எவனோ பொக்கேவை நீட்டினா அப்டியே பார்த்து ரசிச்சிட்டே இருப்பீங்களோ?...”

“என்னமோ நான் அதை வாங்கினது போல பேசறீங்க?...” “அதை மறுத்தும் பேசலை தானே? அவன் குடுத்ததும் வேண்டாம்னு நகரவும் இல்லை. பிடுங்கி எறியவும் இல்லை. அப்போ உங்களுக்கும்...”

“ஷட்டப் ஸார். என்னை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு?...” மீண்டும் முருங்கை மரம் ஏறினாள் நேத்ரா.

“ஐ சே யூ ஷட்டப். இந்த காலேஜ்க்குன்னு ஒரு டிஸிப்ளின் இருக்கு...”

“தூக்கி போடுங்க உங்க காலேஜ் டிஸிப்ளினை. பெருமை பேச வேற ஆளை பாருங்க ஸார். நீங்களா கற்பனை பண்ணிட்டு எதயாவது பேசினீங்க?...”

“இன்னைக்கு இப்படி சொல்லுவீங்க. நாளைக்கே அவனால உங்களுக்கு ஒரு பிரச்சனைனா யார் பார்க்கிறது?...” ரிஷியும் விடாமல் பேச,

“அது உங்க வேலை கிடையாது. என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்...” விழிகளை மூடிக்கொண்டு உடல் சிலிர்த்துக்கொண்டு மூக்கு விடைக்க முகம் சிவக்க கிட்டத்தட்ட கத்தி கூறிய தொனியே அவனை ரசனைக்கு மாற்றியது.

“உன்னை நான் தான் பார்த்துக்கனும் நேத்ரா...” ஆழ்ந்த குரலில் சொல்ல அது நேத்ராவின் அடிமனதை கிழித்துக்கொண்டு சென்றமர்ந்தது.

திகைத்து விழித்துப்பார்க்க, “நீங்க இங்க தானே படிக்கிறீங்க? அதுவும் ஹாஸ்டல் ஸ்டூடன். அப்போ நீங்க என்னுடைய பொறுப்புதானே...” ரிஷியிடம் அதே மிடுக்கு.

“அவன் என்ன செஞ்சுட்டான்? ப்ரபோஸ் பண்ணினது ஒரு தப்பா?...” என்றவள்,

“எனக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க. அவரைத்தான் நான் கல்யாணம் செஞ்சுக்க போறேன். படிப்பை முடிச்சதும் கல்யாணம். அதுக்கு முன்னால இந்த காதல் கருவேப்பிலை எல்லாம் எனக்கு பிடிக்காத தேவையில்லாத விஷயம். அதனால என்னால் உங்க காலேஜ் டிஸிப்ளின்க்கு ஒரு பங்கமும் வந்திடாது...”

ஒவ்வொரு வார்த்தைகளையும் நிறுத்து நிதானமாக அழுத்தமாக கூறி அவனையே ஊடுருவி பார்க்க அவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

“ஹோ கங்க்ராட்ஸ்...” என்று மட்டும் முடித்துக்கொண்டான். அதற்கும் சேர்த்து அவனிடம் முறைத்து வெட்டும் பார்வையொன்றை வீசிவிட்டே கிளம்பினாள் நேத்ரா.

“மங்குனி கரெஸ். கட்டுமரம் கட்டுமரம்...” என அவனுக்கு கேட்கட்டும் என்றே சத்தமாக முணுமுணுத்து சென்றாள்.

“யூ ச்சோ ச்சுவீட்டு தக்காளி...” நேத்ரா வெளியேறியதும் ஒரு அமர்த்தலான புன்னகை ரிஷியிடம்.

ஆன்வெல் பங்ஷனில் நேத்ராவை கண்ட சுமங்கலிக்கு திருப்தியோ திருப்தி. நேத்ராவையே பார்த்து பார்த்து ரசித்திருந்தார். திலகாவிற்கும் உசிதமணிக்கும் கூட.

நேத்ராவின் குழப்பத்தை அறிந்த காவேரி, “இந்த மாமா தான் எதோ தில்லுமுல்லு பண்ணுது. என்னவோ அவங்களுக்குள்ள என்னவும் இருக்கட்டும். நாம புகுந்து குட்டையை குழப்ப வேண்டாம்...” என்று முதல் முறையாக நேராக யோசித்தாள் அதுவும் நேத்ராவிற்காக.

வீட்டில் வந்து ஒரே நேத்ரா புகழ் சுமங்கலிக்கு. அதுவும் ரிஷிக்கு அவ்வப்போது அறிவுரை வேறு. அவளை எந்த வகையிலும் தொந்தரவு செய்துவிடகூடாதென்று.

ரிஷியின் அறையை விட்டு வெளியில் வந்த நேத்ராவிற்கு அவன் புரியாத புதிராய் இருந்தான். ஆரம்பத்தில் இதே போல கோவம் கொண்டு கொந்தளித்தவன் உடனே குளிரும் பனியாய் தன்னை பார்வையாலேயே அரவணைத்தான்.

“மீண்டும் என்னவானது இவனுக்குள்? சரியான அண்டக்காக்கா அந்நியன் இவன்...” என அதற்கும் திட்டிக்கொண்டே சென்றவள் ரோஷிணி நிற்பதை கூட கவனித்தாள் இல்லை. ரோஷிணி தான் அவளை பின்தொடர்ந்து ஓடவேண்டியதாகிற்று.

இரண்டாம் வருடமும் முடிந்து மூன்றாம் ஆண்டு கல்வி தொடங்கியது நேத்ராவிற்கு. பெரியசாமியுடனான நட்பு இன்னுமின்னும் பலப்பட்டுகொண்டே இருந்தது.

மூன்றாம் வருடம் ஆரம்பித்த இரண்டு மாதத்தில் ஆனந்தின் தாய் இயற்கை எய்திவிட அனைத்து மாணவ மாணவியரும் சென்று வர நேத்ராவும் அவளின் தோழிகளும் மட்டும் ஒரு நாள் அங்கு தங்கி இருந்துதான் வந்தனர்.

அதற்கும் ரிஷியிடம் நன்றாக வாங்கிக்கட்டினாள் நேத்ரா. யாரை கேட்டு அங்கே தங்கினே என்பதில் இருந்து யாரிடம் பர்மிஷன் வாங்கினாய், தங்குவதை பற்றி யாருக்கு தெரிவித்தாய் என அவளை போட்டு தாளித்து எடுத்துவிட்டான்.

அதன் பின் வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றவென இல்லாத பிரச்சனைகளை இழுத்துவைத்தாள். தன்னால் முடிந்த அளவிற்கு ரிஷிக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருந்தாள்.

விசேஷங்கள் முடிந்து இரண்டு வாரங்களுக்கு பின் கல்லூரி வந்து சேர்ந்த ஆனந்தை இடைவேளை நேரத்தில் தோழிகள் சூழ்ந்துகொள்ள,

“எப்படி இருக்க ஆனந்த்? இப்போ நீ ஹாஸ்டல் மாறிட்டதா சொன்னாங்க. இப்போ நீ ஒகேயா?...” என நேத்ரா ஆரம்பிக்க ரோஷிணியும் வனமலரும் அவனுக்கு ஆறுதலாக பேசி அவனை துக்கத்திலிருந்து வெளியில் கொண்டுவர முயன்றனர்.

மூவருமாக மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருக்க அவர்களுக்கு ஆனந்த் பதில் கூறினாலும் அவனின் பார்வை அமைதியாக அவனையே பார்த்திருந்த ராகினியை தொட்டு மீண்டது.

ராகினியை பார்த்த நேத்ரா, “இப்போவாச்சும் போய் பேசேன் கூழ்வண்டி. இன்னும் என்ன உனக்கு? மத்த நாள் எல்லாம் ஆனந்த் பேசலைனாலும் நீயாவே பேசுவ. ஆனா பேசவேண்டிய நேரத்துல இப்படி சைலண்டா நிக்கிற?...”

நேத்ரா கூறியதை போல ஆனந்தின் தாய் இறந்த செய்தி கேட்டதும் அடித்துப்பிடித்து ஓடியது தான் அங்கு கேள்விப்பட்ட செய்தியில் ராகினி சுக்குநூறாக உடைந்திருந்தாள்.

எதை கூறி சமுதாயத்தின் பார்வையில் தான் பின்தங்கி விடகூடாது என்னும் வறட்டு கௌரவம் பிடித்த தந்தையின் பேச்சில் ஆனந்தை வதைத்தாளோ அந்த காரணமே பிசுபிசுத்து போனதை எண்ணி தனக்குள் சிறுத்துப்போனாள்.

“எப்படிப்பட்ட கேவலமான புத்தி என்னிது நேத்ரா. நீ சொல்லும் போது கூட என்னோட தவறை நான் ஒத்துக்காம தானே இருந்தேன். எங்கப்பா பேசினது தான் சரின்னு நம்பிக்கிட்டு இருந்தேன்...”என அவளை கட்டிக்கொண்டு கதற ஆனந்த் சலனமின்றி அவாளி பார்த்திருந்தான்.

“என்னதான் நீ பேசினாலும் உண்மை என்னனு தெரியும் முன்னாலையே ஆனந்தை மறக்கலை தானே. அவன் உன்னை அவாய்ட் பண்ணினாலும் நீ விடாம அவனோட அன்புக்காக காதலுக்காக போராடின தானே? உன்னை எப்படி அவன் விலக்கி வைப்பான்?...”

ஆனந்தை தவிர மற்ற மூவரும் நேத்ராவை ஆச்சர்யமாக பார்த்தனர். இதுவரை ஆனந்தை சப்போர்ட் செய்து ராகினியை வார்த்தைகளால் வாட்டியதும் இதே நேத்ரா தான். இன்று தோழிக்கு பரிந்து அவளை ஆறுதல் செய்து தேற்றுவதும் இதே நேத்ரா தான்.

“நான் எப்படியெல்லாம் பேசிட்டேன் ஆனந்த்கிட்ட. அவர் அம்மாவோட தனியா இருக்கிறதை பார்த்து அவர் ஒரு இல்லீகல் சைல்ட், அவங்க அப்பாவுக்கு செக்கன்ட் வொய்ப் சன். அப்படி இப்படின்னு ரொம்ப மோசமா...” கேவி கேவி அழுதாள் ராகினி.

“உண்மை இப்போ புரிஞ்சதுல. அதான் உங்கப்பாவையும் நாங்க வர சொல்லி சொன்னோம். அவரும் புரிஞ்சிக்கிட்டு கடைசி காரியங்கள் எல்லாத்தையும் அவர் கையிலெடுத்து செஞ்சுட்டாரே. ஆனந்தும் அதை ஏத்துக்கிட்டான் தானே?...” என வனமலரும் கூற ராகினி இன்னமும் அழுகையை நிறுத்தினாள் இல்லை.

“ஏன் ஆனந்த் நீயும் உன் அம்மாவும் உன் அப்பா மேல கம்ப்ளைன்ட் குடுக்கலை. குடுத்திருந்தா தெரிஞ்சிருக்கும் அந்தாளுக்கு தான் செய்தது எவ்வளோ பெரிய தவறுன்னு...” ரோஷிணி கூறவும் கசப்பாய் முறுவலித்தவன்,

“அவரை என் அப்பான்னு தயவு செய்து சொல்லாதீங்க ரோஷிணி. அதோட அவர் ஒரு சாக்கடை. அந்த அசிங்கதுல கல் எறிய என் அம்மாவுக்கு சுத்தமாய் விருப்பமே இல்லை...”

“முறையா தாலிகட்டின என் அம்மா இருக்கும் பொழுதே இன்னொருத்தியை சேர்த்துக்கிட்ட அவர் எங்களை பொறுத்தவரை செத்துட்டார். அதனால நாங்க ஒதுங்கி வந்துட்டோம். என்னுடைய ஓவியம் எனக்கு கை குடுத்துச்சு. அதுல வர வருமானத்தையும் கொஞ்சம் என் தாத்தா சேர்த்துவச்சிருந்த சொத்துக்களும் எங்களோட ஜீவனத்துக்கு வழியா இருந்தது...”

“எங்களை பொறுத்தவரை இது போதும்னு இருந்துட்டோம். ராகினியை நான் விரும்பினதும் அவளுக்கு முன்ன என் அம்மாக்கிட்ட தான் சொன்னேன். அவங்களும் அவளை பார்த்து ரொம்பவே சந்தோஷபட்டாங்க. அவ பேரன்ட்ஸ் அவளோட விருப்பத்தை மதிச்சு எங்களை ஏத்துக்கிட்டாங்க...”

“ஆனா எங்க வீட்டுக்கு வந்த அவ அப்பாகிட்ட யாரோ எதையோ சொல்ல போக அவரும் தவறா புரிஞ்சு எங்களை பேசினதும் இல்லாம இவளும் கொஞ்சமும் யோசிக்காம என்கிட்டயும் ஒருவார்த்தை என்னனு கேட்காம வார்த்தைகளை விட்டுட்டா...”

“இவளை பொறுத்தவரை ஸ்டேட்டஸ் பார்த்துதான் காதல் வரனும்னா எனக்கு அது தேவையில்லை...” முடிவாக ஆனந்த் கூற,

“நீ சொல்றது சரிதான் ஆனந்த். ஆனா ராகினி செஞ்ச தப்பை உங்களை பத்தின உண்மை தெரியறதுக்கு முன்னமே உணர்ந்திட்டா தானே? இது எந்த நம்பிக்கையின் பேர்ல? உங்கமேல உங்க காதல் மேல இருந்த நம்பிக்கை தானே?...”

“ப்ளீஸ் நேத்ரா...” மிதமிஞ்சிய வலி ஆனந்தின் முகத்தில்.

“நேத்ரா இப்போ இந்த பேச்சு தேவை தானா? ஆனந்த் ஏற்கனவே ரொம்ப வருத்தத்துல இருக்கான். நீயும் இதை பேசி நோகடிக்காதே...” ரோஷிணி கூற,

“இல்லை ரோஷி. அவனுக்கு தெரியனும். இப்போ விட்டா இதை பேச எப்போ சந்தர்ப்பம் கிடைக்குமோன்னு எனக்கும் தெரியலை...” என்றவள்,

“சொல்லு ஆனந்த் அவளோட தவறை உணர்ந்து உன்கிட்ட மன்னிப்பை கேட்டு வந்தப்போ கூட அவள் மனசுல உன்னோட அந்த பிம்பம் தான் நிறைஞ்சு இருந்தது. அதாவது அப்போவும் உன்னை உங்கப்பாவோட செகண்ட் ஒய்ப் பையனா தான் தெரிஞ்சது அவளுக்கு...”

“ஆனா அந்த நிமிஷத்துல இருந்து அவ இந்த ஸ்டேட்டஸ் சமுதாய பார்வை எதைப்பத்தியும் கவலைபடாம உன்னோட காதலை மட்டுமே யாசிச்சு வந்து நின்னா. ஆனா நீ நீ விரும்பற பொண்ணுக்கிட்ட வெளிப்படையா இருந்தியா?...” என்று கேட்க அவளை புரியாமல் பார்த்தான் ஆனந்த்.

“ஒருத்தரை ஒருத்தர் பார்த்த நிமிஷத்துல இருந்து காதலிச்சீங்க. ஓகே. ராகினி அவளோட பேமிலி பேக்ரவுண்ட் பத்தி உன்கிட்ட எல்லாமே ஷேர் பண்ணிக்கிட்டா தானே? அதே போல நீ ஏன் அவளுக்கு சொல்லலை?. அப்போ உன்னை தடுத்தது உன்னுடைய ஈகோ தானே?...”

நேத்ராவின் கேள்வியில் ஆனந்த் சற்று திணறித்தான் போனான்.

“இல்லை நேத்ரா அது வந்து சொல்ல வாய்ப்பு கிடைக்கலை...” எனவும்,

“சும்மா சாக்குபோக்கு சொல்லாதே. என்ன வாய்ப்பு கிடைக்கலை. உங்கம்மாக்கிட்ட உன் லவ் சொல்ல தானாவா வாய்ப்பு வந்துச்சு? அவளுக்கு ப்ரப்போஸ் பண்ண தானாவா வாய்ப்பு வந்துச்சு? அவங்க வீட்ல பேசி சம்மதம் வாங்கவும் தானாவே எடுத்துக்கோன்னு வாய்ப்பு வந்து நின்னுச்சா?...”

“எல்லாமே நீங்களாவே உருவாக்கினது தானே பாஸ்? நீ மட்டும் முதலயே அவக்கிட்ட விஷயம் இதுதான்னு சொல்லியிருந்தா இந்தளவுக்கு போகவேண்டிய அவசியமே இல்லை ஆனந்த்...” அனைவரும் அமைதியாக அங்கே.

“தப்புன்னு பார்த்தா ரெண்டு பேர்க்கிட்டையுமே இருக்கு. முதல்ல அதை பேசி சரிபண்ணிக்கோங்க. அதை விட்டுட்டு எப்போபார்த்தாலும் அவ வடக்கையும் நீங்க கிழக்கையுமா முகத்தை திருப்பிட்டு. இன்னொருக்க இப்படி திருப்பினா திருப்ப தலை இருக்காது சொல்லிட்டேன்....”

சீரியஸாக ஆரம்பித்து இறுதியில் கட்டளை தொனியில் விளையாட்டு போல முடித்துவிட்டு மற்ற இரு தோழிகளையும் இழுத்துக்கொண்டு காதலர்களுக்கு தனிமை கொடுத்து அகன்றாள்.

இனி இருவரும் இணைந்துவிடுவர் என்ற நம்பிக்கையோடு விலகி வர,

“உன்னை இன்னும் நாங்க சரியா புரிஞ்சுக்கவே இல்லையோ நேத்ரா?...” வனமலர் கேட்க அதில் புன்னகைத்துக்கொண்டாள் நேத்ரா.

“இதோ பாரு அமேஸான் ரெண்டு பேர் மேலையும் தப்பு இருக்கு. ராகினி எப்போவோ தன் தவறை ரியலைஸ் பண்ணிட்டா. ஆனாலும் ஆனந்தை காயப்படுத்தினதுக்கு அவன் இவளை அவாய்ட் செஞ்சது தப்புன்னு எனக்கு தோணலை...”

“ஆனா இப்போ ஆனந்தே உடைஞ்சு போய் இருக்கான். தனிமையும் அவங்கப்பா செஞ்ச துரோகமும் ராகினி குடும்பத்தோட பேச்சும் அவனை எதுக்கு வேணும்னாலும் தூண்டலாம். இப்போதைக்கு ஆனந்த் ஒரு நல்ல குடும்ப சூழ்நிலையில இருந்தா அவனோட ப்யூச்சர்க்கு நல்லது...”

“நம்ம கூழ்வண்டியோட அப்பா இப்போவே மருமகன் பக்கம் சாய்ஞ்சுட்டார். இனி அவனை பத்தின கவலை இல்லை. ஆனந்த் இப்போவே குடும்பஸ்தன் ஆகிட்டான். நமக்கு கண்டிப்பா ஒரு ட்ரீட் இருக்கு...”

குழந்தையென ஆர்ப்பரித்து கூறியவளை பார்த்த ரோஷிணிக்கு நேத்ராவை எதனத வகையில் சேர்ப்பதென தெரியவில்லை. ஆனாலும் தான் எதுவும் கேட்டு அவளை நோகடிக்கவும் விரும்பவில்லை.

அடுத்து வந்த நாட்கள் அலையென வேகமாய் அள்ளிச்செல்ல நேத்ரா இருக்கும் நாட்களை தனக்கே உரித்தான பாணியில் அனுபவித்துதான் நகர்த்தினாள்.

ஆங்கில வருடப்பிறப்பன்று ஹாஸ்டலில் இருந்த வார்டன், லெக்சரர்ஸ் என அனைவரின் அறைகளையும் வெளியில் இருந்து பூட்டிவைத்து இரவு முழுவதும் கொண்டாட்டமும் கும்மாளமுமாக உறங்காமல் கொட்டமடித்தனர்.

அதையும் ரிஷியின் பார்வைக்கு புகாராக எடுத்துச்செல்ல ரிஷிக்குத்தான் என்னசெய்வதென தெரியாமல் விழிபிதுங்கும் நிலை.

வேண்டுமென்றே தன்னை தர்மசங்கடத்திற்குள்ளாக்கும் தன்னவளை எப்படி கட்டுபடுத்தவென புரியவே இல்லை. அவனின் அவஸ்தை புரிந்தவளாக தன்னை தண்டிக்க அவன் தயங்குவதை நாற்றாக தெரிந்துவைத்திருந்தாள் நேத்ரா.

அதுவே ரிஷியை பலத்த சோதனைக்குள் தள்ளியது. முடிந்தளவிற்கு அவள் விஷயத்தில் அக்கல்லூரியின் நிர்வாகியாகவே நடந்துகொண்டான்.

சோதனையிலும் பெரிய சோதனையாக தான் செய்த சாதனைகளை ரிஷி என்னும் பெரியசாமியிடம் பெருமையாக அவிழ்த்துவிடும் பொழுது அவனின் பாடுதான் திண்டாட்டமாக போகும்.

கோவத்தில் ஆற்றாமையில் அவளை எதுவும் செய்யமுடியா இயலாமையில் ரிஷியாக அவளிடம் எதுவும் சொல்லிவிடுவோமோ என்று பயந்து பயந்துதான் பேசினான்.

தை மாதத்திலேயே திருமணத்தை நடத்தியே ஆகவேண்டும் என்று தையதக்காவென குதித்த துரைச்சாமியை அமைதிபடுத்தி வைப்பதற்குள் சிவராமனுக்கும் உசிதமணிக்கும் உயிர் போய் உயிர் வந்தது.

சரியாக நேத்ராவின் கடைசி தேர்வுகள் முடிந்த மூன்றே நாளில் திருமணம் என்ற நிலையில் மற்ற தோழிகள் யாரையும் அழைக்கும் எண்ணமும் இல்லை நேத்ராவிற்கு.

எத்தனை இன்விடேஷன் அனுப்ப என்று கேட்ட பெரியசாமியிடம் தன் நெருங்கிய தோழிகள் நால்வரையும் தவிர வேறு யாரையும் அழைப்பதற்கில்லை. இன்விடேஷன் எதுவும் வேண்டாம் என்று நேத்ரா மறுக்க அவனும் வற்புறுத்தவே இல்லை.

ஏனோ ஊருக்கு செல்லவே அவளுக்கு துளியும் விருப்பமில்லை. கடைசி வரை தன் மனதை நேத்ரா ரிஷியிடம் வெளிப்படுத்தவில்லை.

ஆனந்த் திருமணத்தன்று வந்துவிடுவதாக கூறவும் தோழிகள் நால்வரும் நேராக நேத்ராவின் வீட்டிற்கே சென்றுவிடுவதென முடிவாகியது. அதன் பின் அவரவர் ஊர்களுக்கு பயணம். இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் அனைவரும் ஒன்றாக இருக்கும் தருணம் எப்பொழுது அமையுமோ என்ற எண்ணமே.

தன்னை தன் தோழிகள் அனைவரையும் அழைத்துச்செல்லவென காத்திருக்கும் பாலகிருஷ்ணனை காத்திருக்க சொல்லிவிட்டு ஏற்கனவே பேக் செய்திருந்த தன்னுடைய பொருட்களை எடுத்துச்சென்றவள் அனைத்தையும் காரில் வைத்துவிட்டு மீண்டும் ஒருமுறை கடைசியாக தான் தங்கியிருந்த அறையை ஒருமுறை வளம் வந்தாள்.

கண்களில் இருந்து அவளறியாமல் கண்ணீர் கரகரவென வழிய சில நொடிகள் வாய்விட்டு அழுதவள் கப்பென அழுகையை நிறுத்தினாள்.

“எதற்கு அழனும்? தன்னுடைய நேசத்தை வாய்வார்த்தையாக உணர்த்தி அதை தான் உணரும் நேரத்தில் விலகிசென்றவனுக்காக தான் எதற்கு அழவேண்டும்?...”

வேகமாக கண்ணீரை துடைத்தாள். துடைக்க துடைக்க அவளின் சொல் கேளாமல் வழிந்த வண்ணம் இருக்க இப்படியே தன் தந்தையிடம் செல்லமுடியாது என்று அங்கேயே அமர்ந்துவிட்டாள்.

“நேத்ரா...” பின்னாலிருந்து ரோஷிணி அழைக்க முகத்தை துடைத்துக்கொண்டு எழுந்தாள் அவள்.

“ஏண்டி உனக்கு இத்தனை வீம்பு? அதுவும் எங்ககிட்ட. உன்னோட ஃபீலிங்க்ஸ ஷேர் பன்ற அளவுக்கு உனக்கு நாங்க நெருக்கமா இல்லையா? இல்லை அந்த நம்பிக்கையை நாங்க உனக்கு குடுக்கலையா?...”

“ரோஷி...” என்றவள் அவளை கட்டிக்கொண்டாள் கண்களில் கண்ணீரின்றி.

“அழுதுடேன் நேத்ரா. இதுல கூட உனக்கு என்ன பிடிவாதம்? உன் மனசுல இருக்கிற பாரமெல்லாம் கண்ணீர்ல கரைஞ்சிடும்டா...” என வாஞ்சையாக கன்னம் தடவ,

“நோ, நான் எதுக்கு அழனும்? என் கண்ணீருக்குன்னு ஒரு மதிப்பு இருக்கு. அதை இதுபோன்ற சின்ன விஷயத்துக்காக வேஸ்ட் பண்ணவே மாட்டேன்...”

“ஒருத்தர் மேல வர காதல் உனக்கு சின்ன விஷயமா நேத்ரா?...”நேரடியாக கேட்டேவிட்டாள்.

“ரோஷி...” அதிர்ந்துதான் போனாள் அவள்.

“எனக்கு முன்னாடியே தெரியும். நீயா சொல்லட்டும்னு இருந்தேன். நீ சொல்றமாதிரி இல்லை. கேட்டு உன்னை கஷ்டபடுத்த வேண்டாம்னு இருந்துட்டேன். ஆனா இப்போ நீ அழறதை பார்த்து என்னால தாங்க முடியலைடி...” கலங்கிபோய் கூறிய தோழியை ஆறுதலாக நேத்ரா அணைத்துக்கொண்டாள்.

“சில விஷயங்களை கடந்துதான் போகனும் ரோஷி. எனக்கு என்னோட அப்பாம்மா முக்கியம். அவங்க விருப்பம் முக்கியம். இதுல பேச எதுவுமே இல்லை. நிச்சயமில்லாத ஒன்னை எதிர்பார்த்து காத்திருக்கிறதில அர்த்தமில்லை...”

“எஸ் நேத்ரா அதேதான் நானும் சொல்றேன். பெரியசாமி அண்ணா நிச்சயம் உனக்கானவங்களா இருப்பாங்க. இதையெல்லாம் மறந்திட்டு நீ சந்தோஷமா வாழனும் நேத்ரா...” கிட்டத்தட்ட கெஞ்சலே நிறைந்திருந்தது ரோஷிணியிடம்.

“எப்போயிருந்து ரோஷி ரொம்ப பார்மலா பேச ஆரம்பிச்ச? ம்ஹூம் நமக்கு இது செட் ஆகாது. இருந்தா மூட் ஸ்பாயில் ஆகிறது உறுதி. கூழ்வண்டியும், அமேஸானும் ஆவின் பாலோட வெய்ட்டிங். போலாம்டா...”

நொடியில் தன்னை சுதாரித்து ரோஷிணியையும் தேற்றி அழைத்துவந்து சென்னை கிளம்பிவிட்டாள்.

திருமணம் சென்னையில். திருமணத்திற்கு முதல்நாள் இரவு நிச்சயதார்த்தம், மறுநாள் திருமணம், அதற்கு மறுநாள் வரவேற்பு காரைக்குடியில் என்று முடிவாகி இருந்தது. பெண் வீட்டில் தான் திருமணாம் என்பது காலங்காலமாக நடந்துவரும் முறை என்பதால் துரைச்சாமி மறுக்கவில்லை.

ஆனால் உள்ளுக்குள் ரிஷியின் திருமணத்தை தங்களுடைய பூர்வீக வீட்டில் வைத்துதான் நடத்த வேண்டும் என்பது அவரின் அவா. ஆனாலும் அதை வெளிக்காட்டவில்லை அவர்.

சென்னை வந்ததிலிருந்து பெரியசாமியிடமும் அவ்வளவாக அழைப்பில்லை நேத்ராவிற்கு. ஏனோ அவளுக்குமே அவனை அழைக்க தோன்றவில்லை.

இரண்டு நாளும் நிமிடங்களாக கையில் நிறைந்திருந்த நீராக கடகடவென நழுவி ஒழுகின. அதோ இதொவென்று நிச்சயதார்த்தமும் ஆரம்பிக்க இன்னும் சில மணி நேரங்களே என்னும் அளவில் மண்டபத்திற்கு கிளம்பினர்.

தாய் தந்தையை பார்த்தாள். எப்போதும் தன்னை எண்ணிய ஒரு படபடப்பும் பயமும் கண்டிப்பும் நிறைந்திருக்கும் பார்வையில் பூரிப்பும் சந்தோஷமும் வற்றாத அருவியென வழிந்துகொண்டிருந்தது.

அதற்காகவே மற்றவர்கள் மத்தியில் தன்னை படு உற்சாகமா காட்டிக்கொண்டவள் மனதில் அடித்துக்கொண்டிருந்த புயலை அடக்கியாண்டாள்.

அலங்காரம் முடிந்து அவளை விடுத்து மாப்பிள்ளை வீட்டாரை பார்க்க சென்றனர். அந்நேரம் சரியாக பெரியசாமியின் அழைப்பும் வர தோழிகள் எழுந்து வெளியில் சென்றனர்.

தனிமையில் நேத்ரா தன்னுடைய மொபைலை வெறித்து பார்த்தபடி.

மீண்டும் மீண்டும் அழைப்பு அவளிடம் படையெடுக்க ஆயாசமாக இருந்தது அவளுக்கு. நண்பன் என்ற முறையில் இதுவரை எந்த தயக்கமும் இன்றி பேசியவள் விடிந்தால் தனக்கு அனைத்தும் ஆகப்போகும் அவனிடம் பேச தயங்கினாள்.

“கால் அட்டென் பண்ணு நேத்ரா...” என்ற மெசேஜ் வர இதுவரை பன்மையில் மட்டுமே உரையாடிய அவன் முதன் முறையாக உரிமையாக ஒருமையில் அழைப்பதை கண்டு இவளிதயம் துணுக்குற்றது.

இனி இதையெல்லாம் தான் ஏற்றுதானே ஆகவேண்டும் என்று நினைத்தவள் மீண்டும் அழைப்பு வரவும் அதையும் ஏற்றாள் மிகுந்த படபடப்போடு.

“ஹலோ நேத்ரா...” குரலில் எந்த மாறுபாடும் இல்லை. வழக்கமாகவே பேசுகிறான் என்று அறிந்த பின்புதான் சுவாசம் சீரானது இவளின் நெஞ்சாங்கூட்டில்.

“ஹம் சொல்லுங்க...”

“இல்ல சும்மா தான் போன் பண்ணினேன்...”

“அப்போ ஓகே. பை...” என இணைப்பை திண்டிக்க போக,

“ஹைய்யோ வச்சிடாத நேத்ரா...” என மறுபுறம் அலற இவளுக்குத்தான் பொறுமை போனது.

“சும்மா கால் பன்றதுக்கு நான் என்ன வெட்டியாவா இருக்கேன்? இங்க எல்லோரும் வந்துட்டாங்க. நான் கால் கட் பன்றேன்...” என,

“நிச்சயத்துக்கு இன்னும் டைம் இருக்கு நேத்ரா. நம்ம வழக்கத்துல நிச்சயதார்த்தத்துல மாப்பிள்ளை இருக்கமாட்டாங்க. அதான் நான் வரலை. உன்னிடம் பேசனும்னு தோணுச்சு. அதான் கால் பண்ணினேன்...”

அப்போதும் அமைதி மட்டுமே அவளிடம்.

“நாளைக்கு நமக்கு மேரேஜ். இப்போ கூட என்னை பார்க்கனும்னு உனக்கு தோணலையா நேத்ரா?...” அதில் பரிதவிப்பு இவாளி அடைந்ததோ என்னவோ,

“ப்ளீஸ் மிஸ்டர் பெருசு. என்னால இன்னும் இந்த மேரேஜை டயஜிஸ்ட் பண்ண முடியலை. ஏனோ உங்களை என் ப்ரெண்டா மட்டும் தான் நினைக்க தோணுது. உங்களை தெரிஞ்சிக்கனும், பார்க்கனும்னு கூட எனக்கு இப்போ வரைக்கும் தோணவே இல்லை...”

“நல்ல ப்ரென்ட் நல்ல ஹஸ்பண்டா இருக்க முடியாதா?. நான் இருப்பேன்...”

“எனக்கு ப்ரெண்ட் ஹஸ்பண்டா வேண்டாம். நான் விரும்பினவன் தான் ஹஸ்பண்டா வேணும்...” என கத்தனும் போல வந்தது இவளுக்கு. இருக்கும் இடம் உணர்ந்து வாயை மூடிக்கொண்டாள்.

பேசும் மனநிலையற்று இருந்தவள் இன்னும் சிறிது நேரம் இருந்தால் தானே எதையாவது உளறிவிடுவோம் என்று எண்ணி,

“யாரோ வராங்க. நான் கட் பன்றேன்...” என வைத்துவிட்டாள்.

அங்கிருந்த டேபிளில் தலைசாய்ந்து அமர்ந்தவளுக்கு இங்குமங்குமென அலைபாய்ந்துகொண்டிருந்தது உள்ளம்.

தான் செய்வது சரியா தவறா என்று முடிவெடுக்க தோன்றவில்லை. அதற்கான காலம் கடந்துவிட்டதை தான் தவறவிட்டதை எண்ணி மருகிக்கொண்டிருந்தாள்.

குழம்பிய குட்டையாக மனம் துவழ அவளை குழப்பியவனே நேரில் வந்து நின்றான் அவ்வறையில்.

“நேத்ரா...” என்ற ரிஷியின் அழைப்பில் உடல் துள்ள எழுந்து நின்றாள்.

தான் காண்பது கனவா நனவா என்னும் பிரம்மையில் விழிகளை அழுந்த துடைத்து பார்க்க அவன் அங்கேயே தனது ட்ரேட்மார்க் அசத்தும் புன்னகையோடு நின்றிருந்தான்.

கண்கள் குளம் கட்டியது நேத்ராவிற்கு.




அலை தீண்டும்...
 
Top