Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

அலை – 16

பைப் மாற்றும் வேலைகள் அதன்போக்கில் நடைபெற்றுக்கொண்டிருக்க சிறிது நேரம் அனைத்தையும் மேற்பார்வையிட்டவன் இன்னொருவரின் பொறுப்பில் அதை விட்டுவிட்டு தன்னுடைய வேலைகளை கவனிக்க கல்லூரியை நோக்கி கிளம்ப எத்தனித்தான்.

“ஸார் உடைஞ்ச பைப்புகளுக்கு மட்டும் புது பைப்ஸ் மாத்தவேண்டியது தானே? இப்படி உடையாத பைப்பையும் மாத்தனுமா?. தேவையில்லாத செலவு தானே?...” ஹாஸ்டலை விட்டு கிளம்பும் தருவாயில் ரிஷியிடம் ராணியம்மாள் கேட்டார்.

“என்னைக்கா இருந்தாலும் அதையும் நாம மாத்தித்தானே ஆகனும் மேடம். இன்னும் நாலு வருஷம் கழிச்சு மாத்தினா அன்னைக்கும் செலவு தானே? அப்போ மட்டும் என்ன சும்மாவா தர போறாங்க?...” என்றவன்,

“எனக்கு வேலை வைக்கனும்னே தக்காளி இல்லாத வேலையை இழுத்துவிட்டுட்டு இருக்காளே. பாதியை மாத்தி நாளைக்கே மீதியையும் மாத்த வேண்டிய நிலைக்கு ஆளாக்கிடுவா. எதுக்கு வம்பு? அதான் நானே முந்திக்கிட்டேன்...”

தனக்குள் கூறிக்கொண்டே அந்த வளாகத்தை விட்டு வேகமாக வெளியேற ஹாஸ்டலுக்கென்று தனியாக அங்கிருந்த கேண்டீனில் சத்தமாக சிரித்துக்கொண்டே வெளியில் வந்து நின்றாள் நேத்ரா.

அவளை கண்டதும் ராணியம்மாவிடம், “நீங்க கிளம்புங்க மேடம். நான் இதோ வந்திடறேன்...” என கூறி நேத்ராவை நோக்கி வந்துகொண்டிருந்தான்.

அவனின் வருகையும் முகத்தில் இருந்த கோபமும் நேத்ராவினுள் பயத்தில் குளிரை பரப்பினாலும் வெளியில் அதை காட்டிக்கொள்ளாது தெனாவெட்டாக நின்றாள்.

தன்னிடம் தான் பேச வருகிறான் என்று வேண்டுமென்றே சிறு அலட்டலோடு முகத்தை திருப்ப அவனோ இவளை கண்டுகொள்ளாமல் கேண்டீன் உள்ளே சென்றுவிட்டான்.

அவனின் அலட்சியத்தில் பெரிய மொக்கை வாங்கிய பாவனை அப்பட்டமாகவே வெளிப்பட்டது நேத்ராவின் முகத்தில்.

அவனையே விடாமல் பார்த்திருக்க கேண்டீன் நிர்வாகியிடம் பேசிக்கொண்டே நேத்ராவை திரும்பி பார்த்து இரு புருவத்தையும் உயர்த்தி என்னவென கேட்க இவள் முறைக்க அவன் நொடியில் கண்சிமிட்டல் ஒன்றை நிகழ்த்தி இவளை விட்டு திரும்பியிருந்தான்.

சட்டென கோபத்தில் உடல் முழுவதும் சூடான வெப்பம் பரவ கையில் வைத்திருந்த ஐஸ்க்ரீமை வேகவேகமாக முழுங்கினாள்.

அவன் மீதான கோபத்தில் தோழிகளையும் மறந்து வேகமாக அங்கிருந்து கிளம்பியவள் தரையில் காலை அழுத்தமாக ஊன்றி உதைத்தபடி நடந்தாள்.

“தக்காளி இன்னும் நாலு உதை உதைச்சனா நாலடி உள்ள இறங்கிடுவ பார்த்துக்கோ...” கேலிக்குரலில் சீண்டலாக பேச பார்க்காமலே அது ரிஷி என்பதை கண்டுகொண்டாள்.

திரும்பியும் பார்க்காமல் மீண்டும் நடக்க ஆரம்பிக்க அவளை வழிமறித்து நின்றவன்,

“இங்க ஒருத்தன் பேசிட்டு இருக்கேன் ஒரு கட்டர்சிக்கு கூட நின்னு என்ன ஏதுன்னு கேட்காம போய்ட்டே இருக்க. அவ்வளோ அழுத்தமா உனக்கு?...” முகம் கோபமாக தெரிந்தாலும் அவனையறியாத ஒரு குழைவு அவனின் பேச்சில்.

அதை சரியாக கண்டுகொண்ட நேத்ரா, “நான் எதுக்கு உங்க கூட பேசனும்?...”என,

“பேச விஷயமா இல்லை தக்காளி?...” என்றவனின் விழிகள் எதையோ உணர்த்த துடிக்க அதை கண்டுகொள்ளாமல் இரு கைகளையும் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு,

“அதான் எதுவும் இல்லைன்னு சொல்றேன்ல கட்டுமரம்...” என வேண்டுமென்றே கூற,

“வாட்? தொலைச்சிடுவேன் பார்த்துக்க. எவ்வளோ தைரியம் இருக்கனும் உனக்கு? என்னையே கட்டுமரம்னு கூப்பிடற?...” என சீற அதில் கொஞ்சமும் அசராத நேத்ரா,

“இவர் வேற எப்ப பார்த்தாலும் எதையாச்சும் தொலைச்சுட்டு இருக்காரு...” சலிப்பாக முணுமுணுத்து,

“உங்களைத்தான் சொன்னேன் மிஸ்டர் கட்டுமரம். நீங்க என்னை தக்காளின்னு கூப்பிடறப்போ நான் உங்களை கட்டுமரம்னு கூப்பிடறதுல எந்த தப்பும் இல்லையே?...” தோரணையாக அவள் கூற ரிஷியால் பதில் சொல்ல முடியவில்லை.

“லுக் மிஸ்டர் கரெஸ், நீங்க என்னை இந்த தக்காளி வெங்காயம்னு கூப்பிட்டா நானும் நாளுக்கொரு பேரை உங்களுக்கு வைக்கிறதுமில்லாம போஸ்டர் அடிச்சு ஒட்டுவேன்...” துணிச்சலாக அவள் பேச,

“ஆஹாங், ஆனாலும் உனக்கு ரொம்ப துணிச்சல் தான். நீ பண்ணின வேலைக்கு உன்னை...”

ரிஷி தன் வலது கையை அவள் முன் எச்சரிப்பதை போல காட்ட முதலில் மிரண்டாலும் என்ன செய்துவிடுவான் என்ற அசட்டு தைரியத்தில்,

“என்ன செய்வீங்க? என்னை சஸ்பென்ட் செய்வீங்க, இல்லைனா பனிஷ் பண்ணுவீங்க. எக்ஸ்ட்ரீம்னா டிஸ்மிஸ் பண்ணுவீங்க. எதுவா இருந்தாலும் எனக்கொண்ணும் பிரச்சனை இல்லை. அதுக்கெல்லாம் வேற ஆளை பாருங்க...”

அவளின் பேச்சில் தெறித்த திமிரில் ரிஷிக்கு உண்மையிலேயே கோபம் வந்தேவிட்டது.

“ஏய்...” என்றபடி இவளின் தோளை தொட வந்தவன் அவளின் அசையா பார்வையில் அப்படியே நிற்க,

“என்ன என்ன பண்ணுவீங்க? என்ன பண்ண முடியும்? எங்க என்னை டச் பண்ணிடுங்க பார்க்கலாம்?...” என்றபடி அவனை நோக்கி முன்னே வர அவன் பின்னே சென்றான்.

ஒவ்வொரு வார்த்தையாக கேட்டுக்கொண்டு அடியெடுத்து நேத்ரா முன்னேற அவளின் அருகாமையில் ஏதாவது விபரீதமாக நடந்துகொள்வோமோ என அஞ்சி ரிஷி பின்னே நகர்ந்தான்.

முன்பே அவளை விட்டு விலகமுடியாது என்ற தவிப்பில் இருந்தவன், இன்று அவள் தனக்கு தான் என்ற உரிமையும் சேர்ந்துகொள்ள அவனின் ஆண்மைக்கு பெரும் சோதனையாக போனது நேத்ராவின் நெருக்கம்.

இன்னமும் குளிக்காமல் நைட் சூட்டிலேயே அவள் இருக்க கொஞ்சமும் கூச்சமில்லாமல் அவள் தன்னை நெருங்க உள்ளுக்குள் வியர்த்துப்போனான் ரிஷி.

“என்னை தொட்டா தொட்ட கையை ஒடச்சிட்டு தான் மறு வேலை பார்ப்பேன். என்னை எல்லோரையும் போல நினைக்காதீங்க. இதுவே வேற யாராவதா இருந்தா நடக்கிறதே வேற. ஜாக்கிரதை...”

தன் சுட்டுவிரல் நீட்டி ரிஷியை எச்சரித்து திரும்பி நடக்க அவளின் போனிடெயில் அவள் அசைவிற்கேற்ப நர்த்தனம் ஆடியது.

“இவ நான் எடுத்த முடிவை செயல்படுத்த விடமாட்டா போலவே...” என யோசனையோடு அவள் அருகில் அடங்கமாட்டேன் என்று அவள் மீது மதம் பிடித்த மனதை கட்டுக்குள் கொண்டுவர முடியாத தன் மீதே கோபமாக வந்தது.

அவள் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்திருந்தவன் அப்போதுதான் சுற்றம் உணர்ந்து திரும்பி நடந்தான் சுற்றிலும் பார்வையை சுழட்டிக்கொண்டே.

“நல்லவேளை யாரும் பார்க்கலை. தக்காளி என்னையே பின்வாங்க வச்சுட்டாளே? கொஞ்சமாவது அச்சம் இருக்கா?...”

“நான்றதால சும்மா விட்டுட்டு போறாளாம். இதை ஏன்னு யோசிச்சா என்னவாம் இவளுக்கு? கொஞ்சம் யோசிச்சா கூட இவளுக்கு புரிஞ்சிருக்கும். மரமண்டை. ட்யூப்லைட்...” என முணுமுணுத்தான்.

அவளின் பேச்சுக்களை அசைபோட்டவன் அவள் தன்னை நெருங்கிய நிமிடம் நேத்ராவிடம் வெளிப்பட்ட பரிமணம் இவன் நாசிக்குள் நுழைந்து ரத்தநாளங்களில் பேயாட்டம் ஆடியது.

தன்னறைக்கு வந்தும் அவளின் நினைவு சுழலில் இருந்து வெளிவர முடியாமல் விரும்பியே திளைத்திருந்தான். இன்னும் எத்தனை நாள் இப்படி தள்ளியிருந்தே அவளை பார்க்கமுடியும்? நினைக்கவே மலைப்பாக இருந்தது.

முயன்று தன்னை வேலையில் ஆழ்த்திக்கொள்ள அடுத்த ஒருமணி நேரத்தில் தன் வீட்டின் தொலைபேசியில் இருந்து சுமங்கலி அழைத்திருந்தார்.

“அதற்குள்ளாகவா அனைவரும் தாத்தா வீட்டிலிருந்து வந்துவிட்டனர்!!!...” என்ற சிந்தனையோடு எடுத்தவன்,

“மாம் என்ன அதுக்குள்ளே வந்துட்டீங்க? மாமாவும் அத்தையும் கிளம்பிட்டாங்களா? நான் அவங்களை பார்த்து பேசனும்னு இருந்தேன்...”

தாயை பேசவிடாமல் இவனே படபடவென ஆரம்பிக்க,

“ஏன் ரிஷி இப்படி ஆகிட்ட? என்ன சொல்லவரேன்னு கேட்டுட்டு அடுத்து நீ பேசு. இப்போலாம் ரொம்ப வேகமா இருக்க. சரியில்லை...” என கடிய,

“இதை சொல்லத்தான் கால் பண்ணுனீங்களா? எனக்கு வேலை இருக்கு பை...” என கட் செய்ய போக,

“அடங்குடா. கொஞ்சம் சொல்றதை கேட்டுட்டு பேசு. உன் மாமனாரும் மாமியாரும் மாப்பிள்ளை வீடு பார்க்க நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க. கூடவே உன் தாத்தா, பெரியப்பா, மாமா எல்லோரும் குடும்பத்தோட வந்திருக்காங்க...”

ஒருநிமிடம் திகைத்து பின் முகத்தில் முறுவல் படர அமைதியாக இருந்தான்.அவனை புரிந்தவராக சுமங்கலி,

“என்ன வெட்கமாக்கும்? அட ச்சீ. கிளம்பி வீட்டுக்கு வா. வரும் போது கொஞ்சம் முகத்துக்கு டிங்கரிங் செஞ்சுட்டு வா...” என கேலியில் இறங்க,

“மாம், கலக்கறீங்க. இந்த மாதிரி வேர்ட்ஸ் உங்களுக்கு எப்படித்தான் தெரியுதோ? மிஸ்டர் ராமன்கிட்ட உங்க பராக்கிரமங்களை ஒளிச்சு வச்சு ஒளிச்சுவச்சு இப்போ அங்க முடியாததுக்கு என்னை வச்சு ட்ரையல் பார்த்துட்டு இருக்கீங்க...”

தன் பங்கிற்கு அவரை சீண்ட அதில் கடுப்பான சுமங்கலி கொஞ்சம் சத்தமாகவே,

“என்ன ரிஷி உனக்கு காலேஜ்ல முக்கியமான வேலை இருக்கா? இட்ஸ் ஓகே. நத்திங் வொரி. வொர்க் தான் பர்ஸ்ட். நீ உன் வேலையை பாரு. நாங்க சம்பந்தி வீட்டாளுங்களை கவனிச்சுக்கறோம்...” வேண்டுமென்றே கூற,

“எனக்கொண்ணும் வேலையில்லை, வேலையில்லை...” என கூறியவாறே வேகமாக கார் சாவியை எடுத்துக்கொண்டு மொபைலை அணைத்து பாக்கெட்டில் போட்டவன் மின்னல் வேகத்தில் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

அப்போதுதான் யாரிடமும் சொல்லாமல் வந்ததை எண்ணி தலையில் அடித்துக்கொண்டவன் ஆபீஸ் ரூமிற்கு கால் செய்து ஆகவேண்டிய வேலைகளை பட்டியலிட்டு பார்க்க சொல்லிவிட்ட பின் தான் நிம்மதியானான்.

“ஹ்ம் பரவாயில்லை தாத்தா கூட வந்திருக்காரே? இல்லைனா புதூரை விட்டு எங்கயும் நகரமாட்டார்...” என நினைக்கும் போதே கேட் வந்துவிட உள்ளே நுழைந்து காரை அதனிடத்தில் பார்க் செய்யும் பொழுதே சட்டென ஒரு நொடி ஜெர்க் ஆனான்.

“தாத்தாவும் வீட்ல எல்லோரும் வந்திருக்கிறப்போ மாம் எப்டி இங்க்லீஷ் பேசினாங்க? ம்ஹூம் என்னவோ இருக்கு...” என்றபடி சுற்றிலும் பார்க்க அங்கே வேறெந்த கார்களும் நிற்பதற்கான அறிகுறியே இல்லை.

வேண்டுமென்றே தன்னை அரக்கபறக்க வரவழைத்த சுமங்கலியை இன்றைக்கு ஒரு கை பார்த்துவிடவேண்டும் என்ற முடிவுடன் கை சட்டையை முழங்கை வரை மடித்துவிட்டபடி வேகமாக உள் நுழைந்து,

“மாம்...” என கூவ உள்ளிருந்து காவேரியின் அன்னை எட்டி பார்த்து வெளியில் வந்தார். அவரை பார்த்ததும் முகம் மாறியவன் சுற்றிலும் பார்வையை ஓட்ட,

“வாங்க தம்பி. அண்ணி மாடியில இருக்காங்க...” என்று தானாகவே வந்து இன்முகமாக பேச அவரை அவமதித்து செல்ல அவனின் வளர்ப்பு இடமளிக்கவில்லை.

“வாங்க அத்தை எப்போ வந்தீங்க?...” வரவேற்பாக புன்னகைத்து கேட்க,

“கொஞ்சம் முன்னமா தான் வந்தாங்க ரிஷி...” என்றதும் சிறு தலையசைப்போடு அங்கிருந்து உள்ளே செல்ல முயல அவனின் தவிப்பை உணர்ந்த சுமங்கலி,

“எல்லோரும் காரைக்குடி காலேஜை பார்த்துட்டு இங்க வருவாங்க. உங்க பெரியப்பா தான் கூட்டிட்டு போய்ருக்காரு. மதினியும் திலகாக்காவும் எனக்கு ஒத்தாசையா இருக்க என்னோட வெரசா கிளம்பிட்டாங்க. வரவங்களுக்கு பலகாரம் செய்யனும்ல...”

கூறிக்கொண்டே அடுக்களையில் என்ன நடக்கிறது என பார்க்க செல்ல அவரின் பின்னே சென்றவன்,

“ஏன் என்கிட்டே எல்லோரும் வந்தாச்சுன்னு பொய் சொல்லி வரவச்சேங்க? நான் கொஞ்சம் ரிலாக்ஸா வந்திருப்பேன்ல...” என,

“அதுக்கென்னைய்யா?...” என சுமங்கலி அவனின் கன்னம் வருட வர,

“முதல்ல இந்த லாங்க்வேஜ் மாத்துங்க. செம இரிட்டேட்டிங்கா இருக்கு. நீங்க போன்ல சொல்லும் போதே நோட் பண்ணாம விட்டுட்டேன். பண்ணிருந்தா மெதுவாவே வந்திருக்கலாம்...”

அவரிடம் எரிந்துவிழுந்தவன் ஹாலில் போய் அமர ஏற்கனவே சூடாக இருப்பவனுக்கு குடிக்க ஜில்லென மாதுளை ஜூஸ் போட்டு எடுத்துவந்து நீட்ட அதை கண்டுகொள்ளாமல்,

“ஒன்னும் வேண்டாம். இன்னும் எல்லோரும் கிளம்பற வரைக்கும் உங்களோட இந்த லாங்க்வேஜை கேட்டுட்டு இருக்கனும்னு நினைச்சாலே எரிச்சலா இருக்கு. நீங்க நீங்களா இருங்களேன் மாம். ஏன் மத்தவங்களுக்காக உங்களையே மாத்திக்கறீங்க?...” குரலில் தாயின் மீதான கவலை கொட்டிக்கிடந்தது.

“நேத்ராவினால் இந்த பழக்கங்களை, தன்புற கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியுமா?...” என்று இப்போதே கவலையானான். அதே நேரம் அவளின் இயல்பு புரிய,

“யார் கண்டா? தக்காளி போற போக்குல மீசையையே அவ கவுத்தாலும் கவுத்திடுவா?...” அவளை பற்றி எண்ணிக்கொண்டான் குறுஞ்சிரிப்போடு.

அப்போதும் தன் முன் நீட்டப்பட்டிருந்த க்ளாஸ் அப்படியே இருக்க, “எல்லாம் பிடிவாதம் உங்களுக்கு...” என்றபடி அதை வாங்க நிமிர்ந்தவன் அங்கிருந்த திலகாவை பார்த்து சட்டென எழுந்துகொண்டான்.

“பெரியம்மா நீங்க ஏன் இதை செய்யனும்?...” சங்கடமாக நெளிய,

“ஏனப்பா நான் கொண்டுவந்தா வாங்கமாட்டியலோ?...” என சிரித்துக்கொண்டே அவனருகில் அமர்ந்து அவனையும் அமர செய்ய,

“இல்லை அப்படியெல்லாம் இல்லை பெரியம்மா...” என்றவன் ஜூஸை வாங்கி குடித்துவிட்டு டீப்பாயில் அதை வைத்துவிட்டு திலகாவை பார்த்து புன்னகைத்தான்.

அவனுக்கு தெரியும் தான் பேசியதற்கான பதிலாக திலகா பெரிய சொற்பொழிவொன்றை இப்போது நிகழ்த்துவார் என்று. ஆனால் அவன் பயந்தது போலெல்லாம் இல்லாமல் எதுவும் பேசாமல் அவனின் தலையை கோதிவிட்டு,

“போய் குளிச்சு கிளம்பி வா. இன்னும் அரைமணி நேரத்துல எல்லோரும் வந்திடுவாங்க. பாக்குவெத்தலை மாத்தறப்போ நீ இல்லை. ஆனா அவங்க வீட்டுக்கு வரப்போ நீ முன்ன நின்னு வாங்கன்னு கேட்கனும்ல. அதுக்குத்தான் அவசரமா உன்னை கிளம்பி வர சொன்னா சுமா...”

காரணத்தை கேட்டதும் அசடு வழிந்தவன் மனமோ நல்ல வாய்ப்பு நினைத்தனை இப்போதே மாமனாரிடமும் மாமியாரிடமும் கூறிவிட வேண்டும் என முடிவெடுத்துக்கொண்டான்.

சொன்னது போல அரைமணிநேரத்திற்கு முன்னதாகவே கிளம்பி வந்து ஹாலில் தோரணையாக அமர்ந்துகொள்ள அனைவரும் வரும் அரவத்தில் வீட்டு பெண்கள் பரபரப்பாக ரிஷி எழுந்து வாசலுக்கு விரைந்தான்.

அனைவரையும் வரவேற்று அமரசெய்தவன் தானும் உடன் அமர்ந்துகொள்ள ஆண்டாளுக்கும் பாலகிருஷ்ணனுக்கும் மனதில் சொல்லொண்ணா திருப்தியும் சந்தோஷமும் பொங்கி பூரித்தது.

தன் மகளுக்கு காத்திருக்கும் நிறைவான வாழ்க்கையை கண்கள் பனிக்க பார்த்து மகிழ்ந்து போய் இருந்தனர்.

அமைதியான, அமரிக்கையான, பாந்தமான, அழகான, அன்பான ஒரு மாப்பிள்ளை கிடைத்ததற்கு கடவுளுக்கு கோடானகோடி நன்றிகளை வாரியிறைத்தபடி ரிஷிக்கு சூட்ட இன்னும் பட்டங்கள் தேடிக்கொண்டே அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்தனர்.

சம்பிரதாயமான பேச்சுக்கள் முடிந்து திருமணத்தை பற்றி ஆரம்பித்தனர். ரிஷியின் உடலிலோ புதுரத்தம் பாய்வதை போன்ற ஒரு பரவச நிலை.

வெளிப்படுத்தமுடியாத நுட்பமான ஒரு உணர்வு அங்கே பேசப்பட்ட கல்யாண பேச்சுவார்த்தையில் தனக்குள் ஊற்றெடுக்க முகம் சிவந்து கனவுகள் ஊர்வலம் பாட புன்னகை விரிந்து இதழ்களில் நிறைந்தது.

துன்பமான அந்த இன்ப உணர்வுகளை பகிர்ந்துகொள்ள நேத்ராவின் அருகாமையை நாடினான்.

“தக்காளி நான் பக்கத்துல போனாலே பத்திரகாளியா மாறிடறா. இதுல நான் எங்க போய் என் பீலிங்க்ஸ் ஷேர் பன்றது?...” சிணுங்கலாக மனதினுள் அவளிடம் நொடித்துக்கொண்டான்.

“எம்ட்டு பேரன் பொறப்புலையே ரொம்பவே புத்திசாலி. ஏனோ ஒரு வேகத்துல பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டு வந்துட்டான். ஆனா அதுக்கப்பறமா பெரியவங்க எங்க பேச்சை மதிக்கலையோன்னு ரொம்பவே மறுகிப்போய்டுச்சு...”

“மனசு தாங்காம எங்ட்ட வந்து நீங்க பாத்த பொண்ணையே கட்டிவைங்கன்னு சொன்னதும் நானே உங்கள பாக்கனும்னு இருந்தேன். நல்ல சோலிக்கு நீங்களே நம்ம ஊருக்கு வந்துட்டீங்க. நாம தான நம்ம புள்ளைகளுக்கு நல்லது பண்ணனும்...”

குடும்ப பெருமைகளை வாரி வழங்கிக்கொண்டிருந்தார் துரைச்சாமி. அந்த பெரிய ஹாலில் அவரின் பேச்சை தவிர மற்ற அனைவரும் வெறும் தலையாட்டுதலோடு அமைதியாக அவரை கவனித்து இருந்தனர்.

“சும்மா சொல்லக்கூடாது பாலகிருஷ்ணா, எம்ட்டு குடும்பத்துல காதலன்ற பேச்சுக்கே இடம் இல்லை. நாங்க காட்டற பொண்ணோ பையனோ அவுகளை தான் கட்டிக்குவாக...”

துரைச்சாமி தன் கணீர் குரலில் பீற்றல் களஞ்சியமாக மாறி இருக்க சிவராமனுக்கு சட்டென புரையேறியது. அவருக்கு அவசரமாக தண்ணீரை எடுத்துக்கொடுத்த சுமங்கலி ரிஷியை பாவமாக பார்த்தார்.

அவனோ சிரிப்பை அடக்கமுடியாமல் வாயில் கையை வைத்து சமாளிப்பாக அமர்ந்திருந்தான். அவனின் சிரிக்கும் கண்கள் அவனை தாயிடம் காட்டிக்கொடுக்க அவனை முறைத்தார் சுமங்கலி.

அனைத்தையும் பாலகிருஷ்ணனும் ஆண்டாளும் வேடிக்கையாக பார்த்திருந்தாலும் அவர்களின் மனதை குடைந்தது நேத்ராவின் மீதான ரிஷியின் விருப்பம்.

“அப்போ இவர்களுக்கு மாப்பிள்ளையின் காதல் எதுவும் தெரியாதா?...”என்பதை போல ரிஷியை கேள்வியாக அவர் பார்க்க மாமனாரின் அப்பாவித்தனத்தில் அவரை பார்த்து கண்ணடித்தான் ரிஷி.

அவனின் அலும்பில் அவருக்கு புரையேறும் போல் ஆனது. ஆண்டாளுக்கோ கணவரின் நிலை சிரிப்பை உண்டாக்க சுமங்கலியின் அருகில் வந்து நின்றுகொண்டார்.

ஆண்டாளால் ரிஷியை புரிந்துகொள்ள முடிந்தது. நன்றாக போய்க்கொண்டிருக்கும் திருமணம் பேச்சுவார்த்தையில் தேவையில்லாமல் தானாக எதுவும் பேசி குழப்பிவிட வேண்டாம் என்று அமைதியாகிவிட்டார்.

மற்ற பேச்சுகள் முடிந்ததும் இங்கேயே ஒப்பு தாம்பூலம் மாற்றிவிட்டதால் நேரடியாகவே நிச்சயதார்த்தத்திற்கு ஒரு நல்ல நாளாக பார்த்துவிட்டு தகவல் அனுப்புகிறோம் என்று துரைச்சாமி கூற ஆண்டாளுக்கும் பாலகிருஷ்ணனுக்கும் பரம திருப்தி அதில்.

சுமங்கலியும் திலகாவும் சில பலகாரங்களை அன்போடு ஆண்டாளிடம் கொடுக்க சந்தோஷமாக அதை பெற்றுகொண்டார் ஆண்டாள். பெண்களிடையே ஒரு நல்ல தோழமை உருவானது அவ்விடம்.

அவர்களை வழியனுப்ப ரிஷியே அவர்களை லாட்ஜில் சென்று விட உடன் கிளம்பினான்.

லாட்ஜினுள் நுழையவும் ஆண்டாள் அவனை அமர சொல்லி குடிக்க ஏதாவது சொல்வதாக கூற ரிஷி அதை மறுத்தவன் அவர்களிடம் பேசவேண்டும் என்றான்.

“சொல்லுங்க மாப்பிள்ளை...” என உரிமையோடு கூற,

“மாமா இப்போதைக்கு நேத்ராக்கிட்ட நான்தான் அவளுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளைன்னு சொல்லவேண்டாம்...” என அதிர்ந்து போயினர் மற்ற இருவரும்.

“அதெப்படி மாப்பிள்ளை சொல்லாம எப்படி இருக்க? எப்போவேணாலும் தெரியவேண்டியது தானே?...” ஆண்டாள் படபடக்க,

“நான் சொல்லவரதை கொஞ்சம் அன்டர்ஸ்டேன்ட் பண்ணிக்கோங்க அத்தை. இப்போ சொன்னா காலேஜ் ஃபுல்லா விஷயம் தெரியவரும். நேத்ரா படிக்கிற பொண்ணு. மைண்ட் டிஸ்டர்ப் ஆகும். படிப்பில் கான்சன்ட்ரேஷன் மிஸ் ஆகும்...”

“அடேய் நல்லவனே, அந்த பொண்ணை சைட்டோ சைட்டுன்னு சைட்டிட்டு இல்லாத வம்பையும் இழுத்துவச்சு அவளை டென்ஷன் ஆக்கிட்டு மைண்ட் டைவர்ட் ஆகும்னு விஷயத்தை சொல்லகூடாதுன்னு நீ சொல்றியே? காலக்கொடுமைடா இது...” என காறி துப்பியது ரிஷியின் மனசாட்சி.

“உண்மையில நீதான் மாப்பிள்ளைன்னு தெரிஞ்சா ஊரைவிட்டு ஓடினாலும் ஓடுவாளே தவிர உன்னை கட்டிக்கமாட்டான்ற பயத்துல தானே இந்த தலையை சுத்தி மூக்கை தொடுற வேலை...” என சரியாக பாயின்ட்டை பிடித்தது.

மனசாட்சியின் மண்டையில் கட்டையை வைத்து இரண்டு போட்டு படுக்கவைத்தவன் அவர்களை பார்த்து அப்பாவியாக புன்னகைத்தான்.

ரிஷி சொல்வது அனைத்தும் சரியாகவே தோன்ற அமைதியாக அவனை பார்த்திருந்தனர்.

“இது எல்லாத்தையும் விட நான் மாப்பிள்ளைன்னு தெரியும் போது உங்க பொண்ணால இயல்பா அங்க இருக்க முடியாது. அவ நார்மலா இருக்கனும்னு நினைச்சாலும் மத்த ஸ்டூடன்ஸ் கேலி கிண்டல்ன்ற பேர்ல அவளோட மைண்ட்செட்டை டைவர்ட் பண்ணுவாங்க...”

“இது எல்லாத்தையும் விட முக்கியம் உங்க பொண்ணோட மனசுல நான் இடம் பிடிக்கனும். அதுக்கு எனக்கு டைம் வேணும்...” என்று கூறி,

“கண்டிப்பா பிடிச்சுடனும்...” சொல்லிக்கொண்டான் தனக்கு மட்டும்.

“அப்போ கல்யாணம்?...” என பாலகிருஷ்ணன் இழுக்க,

“நிச்சயமா அவ படிப்பு முடியவும் தான். இன்னும் ஒன் இயர் தானே. நான் வெய்ட் பண்ணுவேன் மாமா...”

முகத்தில் தெளிவாக சிந்தனையோடு இதழ்களில் அழகான புன்னகை ரிஷியின் பக்குவத்தை எடுத்துக்காண்பிப்பதை போல.

அவனின் பேச்சை மறுக்க இயலாமல் மறுக்க தோன்றாமல் அப்படியே ஏற்றனர் ஆண்டாளும் பாலகிருஷ்ணனும். பாலகிருஷ்ணன் முகம் இன்னமும் தெளிவில்லாமல் இருக்க,

“நேத்ராக்கிட்ட அவளோட கல்யாண விஷயத்தை நிச்சயம் மறைக்க முடியாது எங்களால...” என்ற ஆண்டாள்,

“இப்போ என்ன? மாப்பிள்ளை அவ காலேஜ் கரெஸ்பாண்டென்ட் நீங்கன்னு சொன்னா தானே? பெரியசாமியே மாப்பிள்ளையா இருக்கட்டும்....”

புன்முறுவலோடு ஆண்டாள் கூற ரிஷியின் முகமும் பளிச்சிட்டது. அவனுக்கும் இதில் சம்மதமே.

“தாராளமா அத்தை. மாப்பிள்ளை கண்டிப்பா பெரியசாமி தானே?...” விரிந்த புன்னகையோடு கூற மூவரும் வாய்விட்டு சிரித்தனர்.

இன்னும் சிறிது நேரம் அவர்களோடு இருந்தவன் மூத்த மகன் அனய் பற்றி கூற அவனின் மொபைல் நம்பரையும் வாங்கிக்கொண்டவன்,

“நான் நம்ம வீட்டு ட்ரைவரை வர சொல்லியிருக்கேன் மாமா. அவர் உங்களுக்கு ட்ரைவிங் பண்ணுவார். நீங்க இன்னைக்கு கொஞ்சமும் ரெஸ்ட் எடுக்கவே இல்லையே...” என,

“எங்களுக்கு பழக்கம் ஆகிடுச்சு மாப்பிள்ளை. பரவாயில்லை...” என்று மறுக்க,

“தாத்தா தான் சொன்னார்...” என்று சொல்லி சிரிக்க அது பொய் என்ற போதும் அவனை மறுக்கவில்லை.

அவர்களிடமிருந்து விடைபெற்றவன் தன் காரை கிளப்பியவன் வீட்டை நோக்கி செல்ல நேத்ராவின் நினைவில் மனம் முழுவதும் உல்லாசமும் உற்சாகமும் கரைபுரண்டு ஓடியது.

“தக்காளி, தக்காளி...” என்ற பிதற்றலோடு தன் இதயப்பகுதியை நீவிவிட்டுக்கொண்டான் ரிஷி.

இவனின் இதயத்தை ஆக்ரமித்தவளோ அன்றைய பொழுது சரியாக சாப்பிடாமல் தூக்கம் வராமல் அப்போதுதான் உறங்க ஆரம்பித்து இருந்தாள்.

விழிகளை மூடினாலே ரிஷியின் கண்சிமிட்டல் கண்முன் தோன்றி அவளை பார்த்து புன்னகைத்தது. அதனோடு போராடி போராடி அவள் இமைகளே சிவந்து களைத்துப்போய் ஒருவழியாக கண் மூடியது.

உறங்கினாலும் உன்னை விடேன் என்பதை போல அவளின் உறங்கும் விழிகளுக்குள் தன் உறங்கா நினைவுகளை கனவுகள் என்னும் வண்ணதூரிகைகளால் நேசத்தின் சாயம் பூசி நிலவுமகளின் வெள்ளித்திரையில் காதல் நாடகத்தை அரங்கேற்றினான் கள்வனவன்.


அலை தீண்டும்...
Nice
 
Top