Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

அலை – 15

ரிஷியின் வருகையை சற்றும் எதிர்பாராதவர்கள் சிறிது நேரம் என்ன பேசுவதென்றே புரியாமல் அமைதியாக இருக்க ரிஷிக்கும் கொஞ்சம் படபடப்பாக தான் இருந்தது.

இப்படியே இருந்தால் வந்த வேலை நடந்தது போலத்தான் என முதலில் ஆரம்பித்ததும் அவன் தான்.

“என்ன மாமா உங்களை தேடி வந்திருக்கேன். ஒரு காபி, டீ, ஜூஸ் இப்படி ஏதாவது சொல்லமாட்டீங்களா?...” என பளிச்சென கேட்க அதில் திகைத்த ஆண்டாள்,

“அதுக்கென்ன ஸார், சொல்லிடுவோமே. எங்க பொண்ணோட காலேஜ் கரெஸ்பாண்டென்ட் இவ்வளோ தூரம் எங்களை தேடி வந்திருக்கீங்க. என்னவா இருக்கும்னு கொஞ்சம் டென்ஷன் அவ்வளோ தான்...” என கூற பாலகிருஷ்ணன் லாட்ஜ் ரிசப்ஷனுக்கு அழைத்து மூவருக்கும் குடிக்க எடுத்துவருமாறு சொன்னார்.

ஆண்டாளின் பேச்சே ரிஷியை அவனின் எல்லைக்குள் நிறுத்த முயல அதை சரியாக கண்டுகொண்டவனின் விழிகள் யோசனையில் சுருங்கி பின் தெளிவாகி அவனின் இதழ்களில் குறுஞ்சிரிப்பு அரும்பியது.

“ஓஹ் கோபமா இருக்காங்களாமா? அதையும் பார்த்திடுவோமே?...” அவர்களின் விலகளில் அவனுள் இருந்த பிடிவாதக்காரன் விழித்துக்கொண்டான்.

“ஹைய்யோ அத்தை நான் காலேஜ்ல தான் கரெஸ். இங்க உங்க மருமகன். உங்களை தாத்தா அப்படித்தான் கூப்பிட சொல்லியிருக்காரு...” என,

“இல்லை, நான் என்ன சொல்றேன்னா...” என்ற ஆண்டாளை இடைமறித்து,

“நீங்க எங்களுக்கு தூரத்து சொந்தம். உங்க பொண்ணை மேரேஜ் பண்ணலைனாலும் நான் உங்க மருமகன் தான். நம்மோட உறவு முறையை சொன்னேன். நீங்க எதோ தவறா புரிஞ்சிட்டீங்க...”

ரிஷியின் பேச்சில் ஆண்டாள் தான் அசடுவழிய தலையாட்ட வேண்டியதாகிற்று.

“இப்படி ஒரு அர்த்தத்தில் தான் இவர் அழைத்திருக்கிறார் போலும்...” என எண்ணிக்கொண்டே கணவனை திரும்பி பார்த்தார்.

“இப்போ ஓகேவா? நான் உங்ககிட்ட நடந்துக்கிட்ட விதத்துக்கு நீங்க என் மேல கோபமாவும், கொஞ்சம் வருத்தத்துலயும் இருப்பீங்கன்னு நினைக்கிறேன். அதான் மனசு கேட்கலை. உங்ககிட்ட பேசிட்டு போகலாமேன்னு வந்தேன்...”

மீண்டும் ரிஷி ஆரம்பிக்க அவன் திருமண பேச்சுவார்த்தையை பற்றி சொல்கிறான் என நினைத்த பாலகிருஷ்ணன்,

“அதெல்லாம் இல்லைங்க தம்பி. கல்யாணம்னா சாதாரண விஷயமா? உங்க விருப்பத்தை நீங்க சொன்னீங்க. இதுல எங்களுக்கு ஒன்னும் வருத்தமோ கோபமோ இல்லையே...”

சட்டென தம்பிக்கு தாவி மிக இயல்பாகவே கூறுவதாக காட்டிக்கொண்ட பாலகிருஷ்ணனை ஒரு நமுட்டு சிரிப்போடு பார்த்தவன்,

“மாமா நான் அதை பத்தியே பேச வரலை. இன்னைக்கு காலையில் நீங்க காலேஜ் வந்திருந்தப்போ உங்ககிட்ட கொஞ்சம் ரஃப்பா பிகேவ் பண்ணிட்டேன். அதை பற்றி தான் பேச வந்தேன்...”

ரிஷி கூறியதுமே ஆண்டாள் பாலகிருஷ்ணன் தம்பதியின் முகமே விழுந்துவிட்டது. அவர்களை பார்க்க கொஞ்சம் பாவமாக தோன்ற அவனின் மனசாட்சி,

“பாவமா இருந்தா பேசாம கிளம்பு...” என விரட்ட, “அதெப்படி விடமுடியும்?...” என நினைத்து அதற்கொரு குட்டுவைத்து அடக்கினான்.

“ஒஹ், பரவாயில்லை தம்பி...”

ஆண்டாள் சமாளிப்பாக கூற எதையோ எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த பாவம் நன்றாகவே தெரிந்தது பாலகிருஷ்ணனின் முகத்தில் மிக அப்பட்டமாக.

சற்று நேரம் அமைதியாக கழிய கதவை தட்டும் ஓசை கேட்டதும் ஆண்டாள் எழுந்து சென்று ரூம் பாய் கொண்டுவந்திருந்த காபியை வாங்கி வந்து இருவருக்கும் கொடுத்துவிட்டு தனக்கொன்றை எடுத்துக்கொண்டு அமர்ந்தார்.

காபியை குடித்து முடித்ததும் கிளம்புவதாக பாசாங்கு செய்தபடி எழுந்து நின்று கதவு வரைக்கும் சென்றான். செல்லும் அவனையே பாலகிருஷ்ணன் பரிதவிப்பாக பார்க்க அதை ஒரு திருப்தியோடு கண்டுகொண்டான் ரிஷி.

பின் ஏதோ ஞாபகம் வந்ததை போல சுட்டுவிரலால் நெற்றியை தட்டிக்கொண்டே திரும்பியவன்,

“மாமா, நீங்க வந்திருக்கிறதை பத்தி வீட்ல சொன்னேன். தாத்தாவும் அப்பாவும் உங்ககிட்ட பேசனும்னு சொன்னாங்க. உங்களுக்கு அப்ஜெக்ஷன் இல்லைனா பேசறீங்களா?...” என கேட்க,

“அதுக்கென்ன தம்பி. பெரியவரே பிரியப்படறப்போ நாங்க மறுத்தா நல்லாவா இருக்கும்? கண்டிப்பா பேசுவோம்...” பாலகிருஷ்ணன் படபடவென பேச,

“இதோ இப்போவே கால் பன்றேன்...” என தன் மொபைலிலேயே டயல் செய்ய அவனையே யோசனையாக பார்த்திருந்தார் ஆண்டாள்.

துரைச்சாமிக்கு அழைத்தவன் அவர் அழைப்பை எடுத்ததும்,

“தாத்தா, மாமாவை பார்த்துட்டேன். நீங்க பேசிடுங்க...” தேனொழுகும் குரலில் ரிஷி கூற மறுபுறம் அவனின் பேச்சில் வியந்த துரைச்சாமி மீசையை முறுக்கி,

“ ம்ம், ம்ம்...” என ரிஷியின் மொபைல் பாலகிருஷ்ணனின் கைக்கு மாறியது.

“சொல்லுங்கய்யா. நலமா இருக்கீங்களா?. வீட்ல எல்லோரும் சௌவுக்கியம் தானுங்க?...” என்ற பாலகிருஷ்ணனின் பணிவில் இப்போது வியப்பது ரிஷியின் முறையாகிற்று.

“காலையில் இவர் காட்டிய மிதப்பென்ன? இப்போது காட்டும் பணிவென்ன? எதுவானா எனக்கென்ன? இவர் மிதப்பா இருந்தா என்ன, மிதந்துட்டே இருந்தா என்ன? பொண்ணு வேணும்னா இதையெல்லாம் பார்த்துதானே ஆகனும்...” என தனக்குள் சிரித்துக்கொண்டான்.

“ஆனாலும் ரிஷி காதல்ன்னு வந்துட்டா நீ ஒரு ரோமியோன்னு நிரூபிச்சிட்ட. உன்னை யாராலும் அசச்சுக்க முடியாது. அசச்சுக்க முடியாது...” தனக்குத்தானே மகுடம் சூட்டியபடி வருங்கால மாமனாரின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தான்.

“பொண்ணை நம்ம காலேஜ்ல தானுங்க சேர்த்திருக்கோம். அதான் சும்மா பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்ங்க...”

“....”

“வீட்டுக்கா? பெரியவங்க மன்னிக்கனும். இன்னொரு முறை வரப்போ வரோமே...”

“....”

“அப்படியெல்லாம் இல்லைங்கய்யா. நாங்க நாளைக்கே வரோம். கண்டிப்பா வருவோம்ங்க...”

“....”

“சரிங்க வச்சிடறேன் ஐயா...” என்று மொபைலை ரிஷியிடம் கொடுக்க,

“மீசை இன்னும் பேச்சை ஆரம்பிக்கலை போலவே?...” என நினைத்தவன் பாலகிருஷ்ணனை ஏறிட்டு பார்த்து,

“இவர் உசிதமணி, சிவராமனையே மிஞ்சிருவாரோ? இன்னொரு சிவராமனா இருப்பார் போலவே?...” என நினைத்தபடி வாங்கி தன் பேன்ட் பாக்கெட்டினுள் போட்டுக்கொண்டு விடைபெற,

“தம்பி ஒன்னு கேட்டா தவறா எடுத்துக்க கூடாது. கொஞ்சம் பேசலாமா?...” இதை கேட்டது சாட்சாத் ஆண்டாளே தான்.

“இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...” என்ற பிஜிஎம் ரிஷியின் முதுகின் பின் ஒலிக்க மனதில் எழுந்த ஆவலை முகத்தில் காட்டாமல் சாதாரணம் போல்,

“வொய் நாட்? பேசலாமே அத்தை. நான் ஏன் தவறா எடுத்துக்க போறேன். நான் உங்க மருமகன் அத்தை...” என்றபடி மீண்டும் அமர்ந்த இடத்திலேயே அமர்ந்துகொண்டான்.

“எங்க பொண்ணுக்கு பெரியவர் பேசின மாப்பிள்ளை நீங்கதானா?...” என்றவரை புரியாமல் பார்த்தவன்,

“நான் தானே உங்களை பார்க்க சென்னை வந்திருந்தேன். இன்னும் என்ன டவுட் அத்தை?...” என,

“உங்க பேர் பெரியசாமின்னு...” என ஆண்டாள் தயங்கி இழுத்து,

“இல்லை உங்க தாத்தா தான் இந்த ப்ரப்போசல் பத்தி பேசறப்போ இந்த பேரைத்தான் சொன்னாங்க. அதுவும் இல்லாம நீங்க காலேஜ் பொறுப்பில இருக்கிறதை பத்தி எதுவும் அவர் சொல்லலை...”

“உங்ககிட்ட பேசினது என்னோட தாத்தாவாச்சே. அதனால தான் அப்படி சொல்லிருப்பாரு. பெரியசாமி என் பெரியதாத்தா பேரு. அவர் ஞாபகமா எனக்கு வச்சாங்க. ஆனா யாரும் கூப்பிட்டதில்லை என் தாத்தாவை தவிர...” என்றவன்,

“அவர் எனக்குன்னு இல்லை யாருக்குமே தன்னோட பிள்ளை, பேரன்றதை தவிர வேற எந்த அடையாளத்தையும் சொல்லமாட்டார். எப்பவும் அப்படித்தான்...” புன்னகை முகமாக கூற ஆண்டாளும் பாலகிருஷ்ணனும் அதை தலையாட்டி ஏற்றனர்.

பேசும் பொழுதே அவர்களுக்கு ரிஷியுடன் ஏதோ பிணைப்பு ஏற்பட்டதை போல ஒரு உணர்வு அவர்களை ஆட்கொள்ள ஒருவித நிறைவோடு ஏற்றனர்.

அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் இருவரும் திருதிருவென முழிக்க,

“தயக்கமில்லாம நீங்க என்கிட்டே கேட்கிறதை கேளுங்க அத்தை. நான் உங்க வீட்டு பிள்ளை. நான் எதுவும் நினைச்சுப்பேனோன்னு நீங்க சங்கடப்பட தேவையில்லை...” என்று ஊக்கம் கொடுத்தவன் உள்ளம் அவர் கேட்கவேண்டிய கேள்விக்காக உள்ளுக்குள் எகிறி குதித்தது.

“ரெண்டுபேரும் காலையில திறந்த வாயை மூடலை. என்கிட்ட சட்டம் பேசறப்போ மட்டும் அவ்வளோ பேச்சு. இப்போ தேவையான நேரத்தில எதுவும் பேசாம முகத்தை முகத்தை பார்க்கிறாங்களே? என் அவஸ்தை புரியாம, ஹைய்யோ ரிஷி உனக்கு இப்படியா சோதனை சுத்தி அடிக்கனும்?...”

மனதினுள் ரத்தக்கண்ணீர் வடித்தான். ரிஷி கொடுத்த தெம்பில் நேரடியாக கேட்டுவிடுவதென முடிவெடுத்த ஆண்டாள்,

“என் பொண்ணை பிடிக்கலைன்னு சொன்னீங்களே? என்ன காரணம்னு நாங்க தெரிஞ்சிக்கலாமா?...” என,

“அப்படி வாங்க வழிக்கு...” என கண்கள் மின்ன, “தக்காளி சிக்கினடி. என்னை என்ன பேச்சு பேசின? இன்னைக்கு உன்னை வச்சு செய்யறேன்...” என்று குதூகலித்த வண்ணம்,

“அது வந்துங்க அத்தை. நான் இதை உங்ககிட்ட எப்படி சொல்லுவேன்?...” வேண்டுமென்றே தயங்குவது போல பாசாங்கு காட்ட,

“என்கிட்டே சொல்ல என்ன தயக்கம் தம்பி? எதுவானாலும் சொல்லுங்க...” என அவன் கூறியதையே திருப்பி ஆண்டாள் சொல்ல,

“நீங்க நேத்ராவை கோச்சுக்க கூடாது. அவக்கிட்ட கேட்கவும் வேண்டாம்...” என்றுவிட்டு,

“உங்களை பார்க்க வர அன்னைக்கு முதல்நாள் நேத்ரா கால் பண்ணி அவளுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னும், நானே பிடிக்கலைன்னு சொல்லனும்னும் கேட்டுக்கிட்டா...” என வகையாக அவளை போட்டுக்கொடுத்தான்.

ரிஷியின் பேச்சில் பாலகிருஷ்ணன் அதிர்ந்து பார்க்க ஆண்டாள் அவள் கண்டிப்பா இதை செய்திருப்பாள் என கோபமானார்.

“இன்னும் ஒன்னு சொல்லனும் அத்தை. இவ்வளோ பேசிட்டோம். இதையும் சொல்லிடறேன். நான் பார்க்க வந்த பொண்ணு நேத்ரான்னே எனக்கு தெரியாது. இன்னைக்கு காலையில உங்களை பார்க்கவும் தான் எனக்கே புரிஞ்சது...” என,

“என்ன?...” என இருவரும் பார்க்க,

“தாத்தா பொண்ணு போட்டோ வேண்டாம்னு சொல்லிட்டாரு. நானும் உங்க பொண்ணு பேரை கூட வீட்ல கேட்டுக்கலை. அதுக்கும் காரணம் இருக்கு மாமா...” என பாலகிருஷ்ணனின் கைகளை பற்றிக்கொண்டு,

“எனக்கும் பொண்ணு பார்க்க வரதில அவ்வளவா இன்ட்ரெஸ்ட் இல்லை. இஷ்டம் இல்லாம தான் வந்தேன். அதுவும் பிடிக்கலைன்னு பொண்ணுக்கிட்ட இருந்து போன் வரவும் எனக்கு ஹேப்பியா தான் இருந்தது. அதுக்கு காரணமும் உங்க பொண்ணுதான்...”

“இவன் என்ன குழப்புகிறான்?...” என்று அவர்கள் பார்த்திருக்க,

“எனக்கு நேத்ராவை ரொம்பவே பிடிக்கும் மாமா...” காதல் மின்ன கூறியவனின் குரலில் சிறு வெட்கம் இழையோடியது.

அவன் கூறிய விஷயம் ஜில்லென உள்ளிறங்க ஆண்டாளுக்கும் பாலகிருஷ்ணனுக்கும் இன்ப அதிர்ச்சியாக போனது.

“ஆனா நேத்ராவுக்கு இது தெரியாது. அதான் எனக்கு பார்த்த பொண்ணு என்னை வேண்டாம்னு சொல்லும் போது ரொம்ப சந்தோஷப்பட்டேன். இப்போ நேத்ராவை மிஸ் பண்ணிட்டேனோன்னு ரொம்ப பீல் பன்றேன்...” வருந்தியவன் விழிகளில் உண்மையான நேசமே இருந்தது.

அதை கண்ட பாலகிருஷ்ணன் ஆண்டாள் இருவருக்கும் ஒருவித திருப்தி தோன்ற அந்நேரம் நேத்ராவின் மீது மிகுந்த ஆத்திரம் தோன்றியது.

“எப்படிப்பட்ட மாப்பிள்ளை? எப்பேர்ப்பட்ட குடும்பம்? இப்படி அனைத்தையும் ஒரு நொடியில் பழாக்கிக்கொண்டாளே?...” என ஆற்றாமையாக வந்தது.

“நல்லவேளை இவர் வந்து எந்தவித கர்வமும் இல்லாமல் பெருந்தன்மையாக பேசப்போய் இந்த விஷயம் தெரிந்தது. இல்லை என்றால் எப்பேர்ப்பட்ட சம்பந்தத்தை இழந்திருப்போம்?...” நினைக்கவே திடுக்கென்று ஆனது.

“அப்போ நான் கிளம்பறேன் அத்தை. நான் தான் நேத்ராவுக்கு பார்த்த மாப்பிள்ளைன்னு அவளுக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன். இனியும் தெரிய வேண்டாம். நீங்களும் இது சம்பந்தமா எதுவும் கேட்டு அவளை திட்டிட்ட வேண்டாம். எனக்காக...” என்றவன்,

“நாளைக்கு நீங்க தாத்தா வீட்டுக்கு வருவீங்க தானே? எப்போ கிளம்பி இருப்பீங்கன்னு சொன்னா நான் கார் அனுப்பி வைக்கிறேன்...” என்க உருகி போயினர் இருவரும்.

“கண்டிப்பா தம்பி. ஐயா காலையில ஒன்பது மணிக்கெல்லாம் அங்க இருக்கனும்னு சொல்லியிருக்காங்க. நாங்க அதுக்கு முன்னமே தயாரா இருப்போம். எங்க கார்லயே வந்திடறோம் தம்பி...” ஆண்டாள் கூற,

“ஹைய்யோ அது மரியாதை இல்லைங்க அத்தை. நம்ம கார் இங்கயே இருக்கட்டும். நம்ம வீட்டு ட்ரைவரை அனுப்பி வைக்கிறேன். நானே உங்களுக்கு கால் பண்ணி சொல்றேன்...” என்றவன் வந்த காரியம் நிறைவேறிய சந்தோஷத்தோடு விடைபெற்று சென்றான்.

செல்லும் முன் அவனின் மாமனார் மாமியார் மனதை மொத்தமாக அள்ளியும் சென்றான். அவனை எண்ணி உச்சிகுளிரும் அளவிற்கு அவர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டே வெற்றியோடு கிளம்பினான்.

மறுநாள் துரைச்சாமி வீட்டில் இதை பற்றி பேசுவார்களா என்கிற சந்தேகமே இல்லாது நிச்சயம் மீண்டும் திருமண பேச்சுவார்த்தைக்காக தான் அவர் அழைத்திருப்பார் என்பது இவர்கள் இருவரின் திண்ணம்.

மறுநாள் காலை கல்லூரிக்கு வந்ததும் முதல் வேலையாக நேத்ராவை சந்திக்க ஆவல் கொண்ட மனம் அவள் எங்கேனும் தென்படுகிறாளா? என தேடி அலைபாய்ந்தது.

அவளை காணாத ஏமாற்றத்தில் விழிகள் சுருங்க தன்னறைக்குள் நுழைந்தவன் அன்றைய வேலைகளை பார்க்க ஆரம்பிக்க வகுப்புகள் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே ஹாஸ்டல் வார்டன் இவனை தேடி வந்தார்.

அவர் கூறியதை முதலில் அசட்டையாக கேட்க ஆரம்பித்தவனின் முகம் கோப சிவப்பை தத்தெடுக்க வேகமாக எழுந்து ஹாஸ்டல் நோக்கி செல்ல ஆரம்பித்தான். அவனை பின் தொடர்ந்து ஓடிவந்த வார்டன்,

“ஸார் ப்ளம்பரை மட்டும் நீங்க அனுப்பி வச்சீங்கன்னா போதும். நீங்க எதுக்கு இதுக்கெல்லாம் அலைஞ்சிட்டு? எதுவானாலும் உங்ககிட்ட தான் முதல்ல சொல்லனும்னு சொல்லியிருக்கீங்க. அதான் விஷயம் பெருசுன்னு சொல்ல வந்தேன்...” என,

“நீங்க எனக்கு ஆடர் போட வேண்டாம் மேடம்...” என்றவன் பிரின்ஸிபால் ராணியம்மாவையும் அழைத்துக்கொண்டு ஹாஸ்டல் செல்ல அங்கிருந்த பாத்ரூம் பைப்கள் சில உடைக்கப்பட்டு தண்ணீர் மொத்தமும் காரிடாரில் ஓடியிருந்தது.

அங்கிருந்த பெண்கள் பாதிபேர் இன்னும் கல்லூரிக்கு கிளம்பாத நிலையில் அவர்களுக்கெல்லாம் முன்பாக நேத்ரா தலைமை ஏற்று நின்றிருந்தாள்.

அவளை பார்த்ததும் பளிச்சிட்ட கண்கள் இருக்கும் தற்போது நிலைமையை கருத்தில் கொண்டு மற்றவற்றை ஆராய்ந்தது. நிச்சயம் இது வேண்டுமென்றே செய்த காரியமாக தான் தோன்றியது.

“இதெல்லாம் எப்படி?...” என ரிஷி ஆரம்பிக்க அவனை மேலும் பேசவிடாத நேத்ரா,

“அதைத்தான் ஸார் நாங்களும் கேட்கிறோம். நேத்து நைட் நல்லா இருந்த பைப்ஸ் காலையில இப்படி ஆகிருக்கு? அப்போ நைட் யாரோ வந்து பார்த்த வேலை தானே இது? எங்க எல்லோரோட பாதுகாப்புக்கு இங்க என்ன உத்திரவாதம்?...” என அவனிடம் பாய்ந்துவிட்டு,

“கேளுங்க ப்ரெண்ட்ஸ். கேள்வி கேட்க நமக்கு எல்லா உரிமையும் இருக்கு. நாம இதை இப்படியே விடக்கூடாது...” என மற்றவர்களையும் தூண்டிவிட்டவள் ரிஷியின் புறம் திரும்பி,

“மவனே கட்டுமரம் சைட்டா அடிக்கிற சைட்டு? உன் கண்ணுமுழியை பிதுங்கவைக்கலை நான் நேத்ரா இல்லை...” என நக்கலாக அவனை பார்த்தாள்.

வம்பாக நேத்ரா அனைவரையும் தூண்டிவிட்டு போராட்டம் நடத்துவதை போல கேட்க அவளின் விழிகளில் தெரிந்த சவாலில் முதலில் துணுக்குற்றவன் நொடியில் கண்டுகொண்டான் அவளின் திருட்டுத்தனத்தை.

“தக்காளி உன் வேலையா இது? ஆடு ஆடு இன்னும் எவ்வளோ நாளைக்கு இந்த ஆட்டம்னு நானும் பார்க்கிறேன்? எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா திருப்பி தரேண்டி உனக்கு...” என காதலாய் மனதினுள் நினைத்துக்கொண்டவன் தொண்டையை செருமியபடி,

“சாரி பாஃர் தி இன் கன்வினியன்ஸ் கேர்ள்ஸ். இது எப்படி நடந்ததுன்னு நாங்க சீக்கிரமே கண்டுபிடிக்கிறோம். கண்டுபிடிச்சு அவங்களுக்கு தக்க தண்டனையும் கண்டிப்பா குடுப்போம். உங்க பாதுகாப்புக்கு இங்க எந்த பங்கமும் வந்திடாது. எங்களை நீங்க நம்புங்க...” இன்னும் சிலநொடிகள் பேசியவன்,

“இன்னைக்கு நீங்க லீவ் எடுத்துக்கலாம். இன்னைக்கே இந்த ப்ராப்ளத்தை நாங்க சரிபண்ணிடுவோம். நீங்க எல்லோரும் அவங்கவங்க ரூம்க்கு போகலாம்...” என்றவன் ப்ளம்பரை அழைத்து பிளாஸ்டிக் அல்லாது இரும்பில் அனைத்து பைப்புகளையும் போட உத்தரவிட்டான்.

வேலைகள் அனைத்தும் துரிதகதியில் நடக்க மாணவிகள் கூட்டம் கலைந்து செல்லும் முன் நேத்ரா அவனை திரும்பி பார்க்க அதை எதிர்பார்த்திருந்தவன் போல ஒற்றை புருவம் உயர்த்தி என்னவென கேட்க அவள் முறைத்துச்சென்றாள்.

“தக்காளி குளிக்காம அழுக்கா இருக்கும் போது கூட அழகா தாண்டி இருக்க. அப்படியே மனசை அள்ளிட்டு போறியே? ஹ்ம்...” என பெருமூச்சொன்றை வெளியேற்ற சரியாக மொபைலில் அழைப்பு வந்தது.

தாயிடமிருந்து என்றதை கண்டதும் அவசரமாக எடுத்து காதில் வைக்க,

“ரிஷி கங்க்ராட்ஸ். ஒப்பு தாம்பூலம் மாதிரி உறுதிக்கு பாக்கும் வெத்திலை பூ மட்டும் வச்சு மாத்திருக்கோம். இப்போ உனக்கு சந்தோஷமா?...” என்றார் மகிழ்ச்சியில் பூரித்த குரலில்.

கேட்ட நிமிடம் அங்கேயே வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்குள் உணர்வு உந்தித்தள்ள இருக்கும் இடம் உணர்ந்து தன் மனதின் ஆர்ப்பரிப்பை அடக்கி அமரிக்கையான புன்னகையோடு சுகந்தமாக அனுபவித்தான்.

அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை தாயிடம் சொல்லிவிட்டு நேத்ராவின் பெற்றோரை அங்கேயே இருக்கும் படி கேட்டுக்கொண்டு மொபைலை அணைத்தவன்,

“தக்காளி வசமா மாட்டின நீ...” உதட்டில் உறைந்த மந்தகாச புன்னகையோடு தூரத்தில் செல்லும் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் ரிஷி.


அலை தீண்டும்...
Nice
 
Top