Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

6. Ivan Vasam Vaaraayo!

Advertisement

Annapurani Dhandapani

Well-known member
Member

6.

"அயிர மீன அப்டியே உசுரோட புடுச்சாந்து உப்பு மஞ்சதூளு போட்டு அப்டியே மூடி வெச்சி உசுரோடவே வேவெச்சி புளி மொளகாத்தூளு சேத்து கொதி வுட்டு தாளிச்சி எடுத்தா ஹ்ம்... கம்முணு மணம் ஊரத் தூக்கும்..

பிரிட்சிலல்லாம் வக்கவே வேணாம்.. ஒரு வாரம் வச்சாலும் கெடாது..

கெளுத்தி மீன கொழம்புலேர்ந்து எடுத்து அப்டியே ஒரு உறிஞ்சி உறிஞ்சினா... நடுல முள்ளு மட்டும் தனியா எடுத்து புடலாம்.. ஸ்ஸ்.. என்னா ருசியா இருக்கும் தெரியுமா..

அயிர மீனு.. கெளுத்தி.. விரால்.. நெத்திலி எல்லாம் எறா வகை மீனுங்க... இதெல்லாம் குட்டி குட்டி மீனு.. இதெல்லாம் புளி வெச்சிதான் சமைக்கணும்.. அதாவது வழக்கமா செய்யிற குழம்புக்கு வெக்கிற புளிய விட கொஞ்சம் தூக்கலா புளியும் காரமும் வெச்சி சமைக்கணும்.. வத்த மொளகா, மொளகு, மல்லி வெரை எல்லாம் தனியா வறுத்துக்கினு திட்டமா தண்ணி தெளிச்சி அம்மியில மைய அரைச்சி செய்யணும்..

சீலா மீனு வஞ்சிர மீனு மாதிரி பெரிய பெரிய மீனெல்லாம் புளி வெக்கலனாலும் பரவால்ல.. வெங்காயம் தக்காளி வதக்கி பச்ச மொளகா சேர்த்து இஞ்சி பூண்டு விழுது வச்சி தேங்கா பால் ஊத்தி சமைக்கலாம்.. ரொம்ப நல்லா இருக்கும்.. கேரளாவில எல்லாம் இப்டி செய்வாங்க.. நம்ம தமிழ்நாட்டுல எப்பவும் புளி குழம்புதேன்..

மீனு சட்டுன்னு வெந்து புடும்.. இந்த கோழிக்கறி, ஆட்டுக்கறி மாதிரிலாம் ரொம்ப நேரம் வேவிட வேணாம்.. கொழம்பு தயாராகிடுச்சின்னாலே மீனத் தூக்கி போட்ருலாம்.. நிமிசமா கொழம்பு தயாராகிடும்..

ஆனா மீனுக்கு உப்பு கொறச்சலாதேன் போடணும்.. மீனு கடல்லதானே இருக்கு.. அது மட்டுமில்ல.. மீன உப்புத் தண்ணியிலதானே அலசி கொடுக்கறாங்க.. அதனால மீனுக்கு உப்பு பாத்துகிட்டுதேன் போடணும்..

எறாவ கொழம்பும் செய்யலாம்.. அப்டியே உப்பு மொளகாத்தூளு பெசறி வெச்சி சின்ன தீயில சுட்டும் சாப்பிடலாம்.. இப்பல்லாம் கபாப்புன்னு விக்கிறாங்களே.. அது மாதிரி..

எங்க ஐத்த ஊர்லல்லாம் மீன மண்ணுல பொதச்சி வச்சி கருவாடு செய்வாங்க.. அது ரொம்ப ருசியா இருக்கும்.. நம்மூருல அப்டியே வெயில்ல காய வுடறதுதேன்..

ஒவ்வொரு மீனுக்கும் ஒவ்வொரு வாசம் உண்டு.. நல்லா சமைக்க தெரிஞ்சவங்க கொழம்பு கொதிக்கறத வெச்சே என்னா மீனு போட்டு கொழம்பு செய்யறாங்கன்னு சொல்லி புடுவாங்க.."

அந்த மீன்கார பாட்டி பேசிக் கொண்டே சென்றாள்.

கருப்பாக இருந்தாள். தோல் சுருங்கிப் போயிருந்தது. அவள் கண்டாங்கிச் சேலை அணிந்திருந்த விதம் அவளின் பிறப்பிடம் தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் ஒன்று என்று காட்டியது. உடம்பில் தளர்வு இருந்தாலும் நெஞ்சில் ஈரம் இன்னும் பசுமை மாறாமல் உள்ளதென்று காட்டும் விதமாக சுருங்கிய இதழ்களில் படிந்திருந்த சிரிப்பு, அந்தச் சிரிப்பு நிரந்தரமானது என்று கூறும் விதமாக அமைந்திருந்த முக வெட்டு!

வாய் பேசிக் கொண்டிருந்தாலும் கை பரபரவென்று வேலை செய்து கொண்டிருந்தன.

ஒரு பக்கம் பெரிய குண்டானில் இட்லி வெந்து கொண்டிருந்தது. மறு பக்கம் மீன் குழம்பு கொதிக்கும் வாசம் அந்தப் பிரதேசம் முழுதும் நிறைந்து போவோர் வருவோரையெல்லாம் நின்று ஹ்ம்.. என்று வாசம் பிடிக்க வைத்துக் கொண்டிருந்தது. தேங்காய் சட்னிக்கு தாளித்துக் கொண்டிருந்தாள் பாட்டி.

"எத்தினி மீனு இருக்கு தெரியுமா.. கெண்ட, கெளுத்தி, கடுவா, வவ்வா, எறா, சொறா, சன்னாங்குன்னி, வஞ்சிரம், சீலா மீனு.. இன்னும் நெறைய.. சிலதுல நிறைய முள்ளு இருக்கும்.. சிலதில நடுவில மட்டும் பெரிசா ஒரே ஒரு முள்ளு இருக்கும்.. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு மாதிரி குணம்.. ஒவ்வொரு வாசம்.. அத்தனையும் உடம்புக்கு வலு.. மீன் அடிக்கடி சாப்பிட்டா ஒடம்பில கொளுப்பு சேராது.. நெஞ்சில நோவு வராது..

இந்தா கண்ணு.. இந்த இட்லிய துன்னு கண்ணு.. தொட்டுக்க இந்த நெத்திலி மீன் தொக்கு வச்சிக்க.. நல்லா மணக்க மணக்க மண் சட்டியில செஞ்சது.. தல சுத்தல் அல்லாம் அண்டவே அண்டாது.." சொல்லிக் கொண்டே தமிழ் மறுக்க மறுக்க அவனுடைய தட்டில் மேலும் இரண்டு இட்லிகளை வைத்தாள்.

ரக்ஷணாவும் அவள் கணவன் ஜேக்கும் கூட பாட்டி அன்புடன் பரிமாறிய இட்லிகளை மொக்கிக் கொண்டிருந்தனர்.

தமிழுக்கு என்னமோ ஏதோவென்று பதறியடித்து ஓடி வந்த கயலும் அவள் கணவன் முகிலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தமிழை கொலை வெறியுடன் பார்த்தனர்.

"ஹே.. கயல்.. முகில்.. எங்க இவ்ளோ தூரம்.. என்ன ரெண்டு பேரும் புள்ளைய இந்த வேகாத வெயில்ல தூக்கிட்டு வந்திருக்கீங்க.." என்று கேட்டுக் கொண்டு கயலிடமிருந்து தன்னிடம் தாவிய குழந்தையை வாங்கிக் கொண்டான் தமிழ்.

"ஆரு தம்பி இது.. உன் கூடப் பொறந்தவளா.. முக சாடை அப்பிடியே காட்டுது.. வா தாயி.. இப்டி குந்து.. இந்தா.. புள்ளைக்கு இட்லி ஊட்டு தாயி.." என்று பாட்டி அவளையும் அன்புடன் வரவேற்று உபசரித்தாள்.

"வேணாம் பாட்டி.." என்று அவள் பதில் சொல்ல, பாட்டி விடவேயில்லை.

கயலையும் முகிலையும் அமர வைத்து இட்லிகளோடு சேர்த்து அன்பையும் பரிமாறினாள் பாட்டி.

"சாரி முகில்! எல்லாம் அப்றம் சொல்றேன். இங்கேந்து கிளம்பற வரைக்கும்.. ப்ளீஸ்.." என்று தன் தங்கை கணவனிடம் கிசுகிசுக்க, முகில் தன் பல்லைக் கடித்துக் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

பாட்டி அன்புடன் பரிமாறிய இட்லிகளை சாப்பிட்டனர். தமிழும் ரக்ஷணாவும் பாட்டியை பல வித கோணங்களில் படம் பிடித்துக் கொண்டனர். மீன் சமையல், கருவாடு செய்முறை பற்றியெல்லாம் மேலும் சில கேள்விகளைக் கேட்டு பாட்டி கூறிய விளக்கங்களை தன்னுடைய கைப்பேசியில் பதிவு செய்து கொண்டனர்.

பாட்டி அவர்களிடம் பேசிக் கொண்டே புதிதாக எதோ சமைத்தாள்.

தமிழும் ரக்ஷணாவும் தாங்கள் எடுத்த புகைப்படங்களையும் ஒலிப்பதிவையும் சரி பார்க்க, முகிலும் ஜேக்கும் பேசிக் கொண்டிருக்க, பாட்டி, தன் குழந்தையுடன் அமர்ந்திருந்த கயலிடம் வளவளத்தாள்.

பாட்டி கயலைப் பார்த்து,

"தாயி! கூடப் பொறந்தவனுக்கு என்னமோ ஏதோன்னு அடிச்சி புடிச்சி ஓடியாந்தியா தாயி! ஒண்ணுல்ல கண்ணு.. இங்க எங்கள போட்டோ புடிக்க வந்தாப்ல.. காலையில சாப்புடாம வண்ட்டாரு போல.. அதான் வெயில்ல நிக்க முடியாம மயக்கம் போட்டு வுழுந்துட்டாரு.. நாந்தேன் நம்ம வூட்டுக்கு தூக்கியாந்து படுக்க வெச்சேன்.. தம்பி முழிச்சதும் சாப்பிட வெச்சேன்.. ஒண்ணுல்ல தாயி..

இந்தா.. சன்னாங்குன்னி கருவாடு.. எடுத்துட்டு போயி கொழம்பு வச்சி குடு தாயி.. மயக்கம்லாம் வராது.. இதுல நெத்திலி தொக்கு வச்சிருக்கேன்.. இத உன் புருசனுக்கு குடு.." சொல்லிக் கொண்டே தற்போது செய்து கொண்டிருந்த பதார்த்தத்தை ஒரு எவர்சில்வர் டப்பாவில் போட்டு கயலிடம் கொடுத்தாள்.

"இது.. இது என்ன பாட்டி.." கயல் தயக்கத்துடன் கேட்க,

"ஒண்ணுல்ல தாயி.. சொறா புட்டுதேன்.. பாவம் பச்ச புள்ளய வச்சிருக்க.. பால் குடுக்கறதானே.. இத சாப்பிடு தாயி.. பால் ஊறும்.. அவசரப்பட்டு பால் குடுக்கறத நிப்பாட்டிடாத தாயி.. புள்ளைக்கு தாய்ப்பால்தேன் வலு.. புள்ளைக்கு என்னா பேரு.." என்று படபடவென்று சொல்லி வாஞ்சையுடன் கேட்டாள்.

"முத்தழகி!" என்றாள் கயல் புன்னகைத்தபடி.

"முத்தழகியா.. அழகான பேருதேன்.. முத்தழகி! ஆயாகிட்ட வாடி.. வாடி ராசாத்தி.." என்று கை நீட்ட, கன்னம் குழியச் சிரித்தபடி பாட்டியிடம் தாவினாள் முத்தழகி.

பாட்டி குழந்தையை ஆசை தீர உச்சி முகர்ந்து விட்டு, கயலிடம் கொடுத்தாள்.

கயலுக்கு கொடுத்தது போலவே ரக்ஷணாவின் கையிலும் கொஞ்சம் சென்னாங்குன்னி கருவாட்டு பொட்டலமும், ஒரு பாட்டிலில் நெத்திலி மீன் தொக்கும் கொடுத்தாள் பாட்டி.

"சீக்கிரமா நீயும் ஒரு புள்ளைய பெத்துக்க தாயி.." என்று ரக்ஷணாவிடம் பாட்டி சொல்ல, ரக்ஷணாவின் முகம் சிவந்து போனது. இதைப் பார்த்த ஜேக் வியப்புடன் என்னவென்று விசாரிக்க, முகிலன் இதையெல்லாம் பார்த்து மனதுக்குள் கடுகடுத்துக் கொண்டான்.

பாட்டியிடம் நன்றி சொல்லி விடை பெற்றுக் கொண்டு அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.

ரக்ஷணாவும் ஜேக்கும் தமிழை முகிலுடன் அனுப்பி விட்டு தங்கள் வழி பார்த்துப் போனார்கள்.

"ஓகே.. நாளைக்கு ஆஃபீஸ்ல பாக்கலாம்.." சிரித்துக் கொண்டே ரக்ஷணாவுக்கு விடை கொடுத்த தமிழ், முகிலன் அழைத்திருந்த கால் டேக்சியில் ஏறினான்.

கால் டேக்சி தாம்பரம் நோக்கி பயணிக்கத் தொடங்க, முகிலனும் கயலும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

"சாரி முகில்! ரொம்ப சாரி.."

முகில் எதுவும் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

"ஹே கயல்! சாரி மா!" என்று கயலிடம் கூற, அவளும் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

தமிழ் மீண்டும் எதோ பேசத் தொடங்க,

"உனக்கு உடம்பு சரியில்லல்ல.. பேசாம கண்ண மூடிட்டு வா.. எல்லாம் வீட்ல போய் பேசிக்கலாம்.." என்று கூறினான் முகில்! குறிப்பாக, மூடிட்டு வா.. என்ற சொல்லில் அதிக அழுத்தம் கொடுத்து!

தமிழ் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

ஆனால் முகில் மற்றும் கயலின் நியாயமான கோபத்தின் காரணம் அவனுக்குப் புரிந்திருந்ததால் அமைதியாகக் கண்ணை மூடிக் கொண்டான்.

சரியாக அப்போது அவனுடைய தலையைப் பிடித்து இழுத்து விளையாடத் தொடங்கினாள் முத்தழகி. குழந்தை தன் தலை மயிறை இறுகப்பற்றி இழுத்ததால் தமிழுக்கு வலித்தது.

"ஆ.." என்று அவன் அலற,

"அப்டிதான்.. நல்லா போடுமா மாமாவ.." என்றாள் கயல்.

"நோ பேபி.. மாமாவுக்கு வலிக்கும்.." என்று முத்தழகியின் கையை விலக்கி விட்ட முகில்,

"குழந்தைக்கு அடிக்க சொல்லிக் குடுக்காத கயல்! இது தப்பு!" என்று தன் மனைவியை அதட்டினான்.

கயல் மெல்லிய குரலில் சாரி என்று கூறிவிட்டு தலையைத் திருப்பிக் கொண்டாள்.

முத்தழகி தன் மாமாவிடம் செல்ல வேண்டும் என்று சிணுங்க, முன் இருக்கையில் ஓட்டுனரின் அருகே அமர்ந்திருந்த தமிழ் அவளை வாங்கிக் கொண்டான். தமிழிடம் போனதும் அங்கிருந்தபடி தன் தாய் தந்தையரைப் பார்க்க, அவனிடமிருந்து இவர்களிடம் தாவினாள். தாய் தந்தையின் அருகிலிருந்து மாமனைப் பார்த்து மீண்டும் மாமனிடம் தாவினாள். இப்படியே மாறி மாறித் தாவி விளையாடிக் கொண்டிருக்க, பெரியவர்களும் அவளுடைய விளையாட்டுக்கு ஈடு கொடுத்து விளையாடி, வீடு வருவதற்குள் தங்களின் மன இறுக்கத்தை சரி செய்து கொண்டனர்.

வீட்டுக்குள் வந்ததும் தமிழ் முகிலிடமும் கயலிடமும் நடந்ததை சுருக்கமாகக் கூறினான்.

"ஹே.. நா ஒரு முக்கியமான வேலையா ராயபுரம் போயிருந்தேன்.. காலையில சரியா சாப்பிடல.. வெயில்ல நின்னதில மயக்கம் வந்திடுச்சு.. பக்கத்தில கிரிகெட் விளையாடிட்டு இருந்த பசங்கல்லாம் சேர்ந்து என்ன தூக்கிட்டு போய் அந்த பாட்டி நடத்தற இட்லி கடை பெஞ்சில படுக்க வெச்சிட்டு என் ஆஃபீஸ் ஐடி பார்த்து என் ஆஃபீஸ்க்கு போன் பண்ணி சொல்லியிருக்காங்க. ரக்ஷணாவும் அவ புருஷனும் என்ன பாக்க ஓடி வந்தப்ப கூட நா மயக்கத்திலதான் இருந்தேன்.. அதான் அவ உனக்கு ஃபோன் பண்ணிட்டா.. நா மயக்கம் தெளிஞ்சி எழுந்ததும் அவள நல்லா திட்டினேன்.. அப்றம் அந்த இட்லி பாட்டிதான் என்னை சமாதானம் செய்தாங்க.. நீ மயக்கமா இருக்கறத பாக்க எனுக்கு பதைக்கிது.. இந்த பொண்ணுக்கு பதைக்காதான்னு கேட்டாங்க..

நீ கிளம்பியிருப்பன்னு தெரியும்.. சரி.. நீ வந்தப்றம் உன்ன சமாதானம் செய்துக்கலாம்னுதான் இருந்தேன்டா.. சாரி.." என்றான் தமிழ்.

"அப்றம் ஏன்டா என்னமோ ஊருக்கு லீவுக்கு வந்த மாதிரி பாட்டி கையால இட்லியும் மீன் குழம்புமா மொக்கிகிட்டிருந்தீங்க.." என்று முகில் கோபமாகக் கேட்டான்.

"பின்ன என்ன என்ன செய்ய சொல்ற.. பாட்டி ஆச ஆசயா போட்டுச்சி.. நானும் பசியில இருந்தேன்.. அதுவும் நெத்திலி தொக்கு வேற.. அம்மா கையால சாப்பிடற மாதிரி இருந்துச்சி.. அதான்.. சாப்ட்டேன்.." என்று அப்பாவியாய் கூறிவிட்டு ஏவ்.. என்று ஒரு ஏப்பத்தையும் விட்டுவிட்டு அவசரமாய் வாய் பொத்திக் கொண்டான்.

அவன் சொல்வதையும் செய்வதையும் கேட்டு நமுட்டு சிரிப்பு சிரித்தாள் அவனுடைய தங்கை கயல்விழி.

"ஹூம்.. உனக்காக கமிஷ்னரோட நடந்துட்டு இருந்த மீட்டிங்க பாதியில வுட்டுட்டு அவசர அவசரமா கால் டேக்சி புடிச்சிகிட்டு வீட்டுக்கு வந்து உன் தங்கச்சியையும் கூட்டிட்டிகிட்டு தவிச்சபடி ஓடி வந்தா.. நீ அங்க நல்லா மொக்கிகிட்டு பாட்டியோட செல்ஃபீ எடுத்துகிட்டு இருக்க.. மனுஷனுக்கு கோவம் வராது.." முகில் இன்னும் அடங்காத கோபத்துடன் கேட்டான்.

"இப்ப நீ மீட்டிங்க் மிஸ் ஆச்சேன்னு கோவப்படறியா.. இல்ல.. நீ பசியோட ஓடி வரும்போது நான் அங்க மொக்கிட்டிருந்தேன்னு கோவப்படறியா.." என்று தமிழ் நிதானமாகக் கேட்டான்.

"அடேய்.." என்று கையை காட்டி ஏதோ கெட்ட வார்த்தையை தன் வாய்க்குள் முழுங்கினான்.

தமிழ் நிதானமாக உள்ளே சென்று ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து வந்து முகிலிடம் கொடுத்து,

"குடி.. உனக்கு பிபி எகிறிடப் போகுது.. உங்கள தொந்திரவு செய்தது தப்புதான்.. இனிமே ரக்ஷணாட்ட சொல்லிடறேன்.. எனக்கு ஏதாவது ஆச்சுன்னா முடிஞ்சா என்ன கவனி.. இல்லன்னா விட்டுடு தாயே.. என் தங்கச்சி தங்கச்சி புருஷனுக்கு எல்லாம் சொல்லிடாத.. அப்டீன்னு சொல்லிடறேன்.." என்றான்.

"டேய்.. நா எதுக்கு கோவப்படறேன்.. நீ என்ன பேசற.." என்று முகில் மீண்டும் கோபமாய்க் கேட்க,

"தமிழ்! நீ போய் கொஞ்ச நேரம் படு.. உனக்குதான் உடம்பு சரியில்லல்ல.. போ.. நீங்க வாங்க.. நீங்க வாங்க முகில்.." என்று கயல் தன் அண்ணனை அனுப்பி விட்டு கணவனை அவ்விடத்திலிருந்து அழைத்துச் சென்றாள்.

தமிழுக்கு மனம் முழுதும் வேதனை அழுத்திக் கொண்டிருந்தது.

முகிலின் அறைக்கு அடுத்த அறையில் வந்து படுத்தவன் கண்களை மூடிக் கொண்டான். மனம் முழுதும் நிரஞ்சனாவைப் பற்றிய நினைவுகள்தான்.

எங்க போனாளோ.. என்ன ஆனாளோ.. அவள எப்டி கண்டு பிடிப்பேன்.. கண்டு பிடிப்பேனா மாட்டேனா.. என்றெல்லாம் நினைத்து நினைத்து மருகிக் கொண்டிருந்தான்.

அரை மணி நேரம் கடந்திருக்கும். தன்னருகில் யாரோ வந்து அமர்வது போலிருக்க, தன் கண்களைத் திறக்காமலேயே தமிழ் கூறினான்.

"என்ன? உன் புருசன் கோவம் குறைஞ்சுதா? எதுக்காம்.. அவனுக்கு இப்ப கோவம்?"

"ஆங்.. அவனுக்கு அவனோட மச்சான் இப்டி தேவையில்லாம ஒரு பொண்ணத் தேடித் தேடி தன் உடம்ப பாழ் பண்ணிக்கறானேன்னு கோவமாம்.." என்று முகிலின் குரல் கேட்டதும் அவசரமாகக் கண் திறந்து பார்த்தான் தமிழ்.

"நீ இன்னும் தூங்கலயா.." என்று அசடு வழிந்தான் தமிழ்.

"மூஞ்சியப் பாரு.. இல்ல நா தெரியாமதான் கேக்கறேன்.. என்ன பாத்தா உனக்கு கேண மாதிரி தெரியுதா?"

"லைட்டா.." என்று குறும்பாகக் கூறி முகிலின் கையில் சில பல மொத்துக்களை வாங்கிக் கொண்டு சிரித்தான் தமிழ்.

"டேய்.. ஏண்டா இப்டி பண்ற.. அவதான் அவங்கம்மாவோட டார்ச்சர்லேர்ந்து தப்பிச்சிட்டால்ல.. பிரச்சனை பண்ணின புருஷனும் ஓடிட்டான்.. அந்த பொண்ண தேடற முயற்சிய கைவிடுடா.. அவ எங்கியோ நல்லா இருப்பான்னு நெனச்சிக்கோ.. அவ நல்லா இருக்கணும்னு வேண்டிக்கோ.. அவளுக்காக இப்டி உன் உடம்ப கெடுத்துக்காத.." என்று உரிமை கலந்த அக்கரையுடன் கூறினான் முகில்.

"அப்டி நெனச்சி விட முடியல.."

"ஏன்டா.. அவ அண்ணியோட ஃப்ரண்ட் கிட்ட தானே போயிருக்கா.. பத்திரமா இருப்பாடா.."

"இல்ல முகில்.. அவ அண்ணி, தன்னோட ஃப்ரண்ட் வீட்டுக்குதான் அவள அனுப்பினதா சொன்னாங்க.. ஆனா அவ அங்க வரலன்னு அவங்க ஃப்ரண்டு போன் பண்ணாங்களாம்.. அவ சேலம் போற பஸ்ல ஏறுறதுக்கு பதில் சென்னை பாேற பஸ்ல ஏறினான்னு தெரிஞ்சவங்க பார்த்ததா அவ அண்ணிகிட்ட சொல்லியிருக்காங்க.. அவங்கண்ணி எனக்கு பத்து நாள் முன்னாடி போன் செய்தாங்க.." என்றான் தமிழ்.

"என்னடா சொல்ற?" என்று அதிர்ச்சியாகக் கேட்டான் முகில்.

"ஆமாடா. அது மட்டுமில்ல.. அவ அவங்க வீட்ட விட்டு கிளம்பினப்ப ப்ரக்னன்சி டெஸ்ட் பாசிடிவ்னு வந்துச்சாம்.. அத கலைக்கணும்னுதான் அவங்கம்மாவும் அண்ணனும் முயற்சி செய்தாங்களாம்.. அதனாலதான் அவ அங்கிருந்து வெளியேறினதே.. அதான்.. எனக்கு தெரிஞ்ச சோர்ஸ் மூலமா அவ சென்னையில எங்கியாவது இருப்பாளான்னு.. இப்பல்லாம் ஒவ்வொரு லேடியும் ப்ரக்னன்சி கன்ஃபர்ம் ஆச்சுன்னா அந்தந்த ஊர்ல இருக்கற ஆரம்ப சுகாதார மையத்தில பதிவு செய்து RCH ID வாங்கணும்ங்கறது கட்டாயம்ல.. நம்ம கயல் கூட இத வாங்கினாளே.. ஞாபகம் இருக்குல்ல.. நிரஞ்சனா இப்ப அந்த ஐடி வாங்கலன்னாலும் குழந்தை பிறந்ததும் குழந்தைக்கு பர்த் சர்டிஃபிகேட் வாங்க, இந்த ஐடி இருக்கணும்ங்கறது கட்டாயம். இது தமிழ்நாடு அரசாங்கத்தோட புது ரூல்.. அவ அப்டி எதுவும் வாங்கியிருந்தா அத வெச்சி அவள கண்டு பிடிக்க முடியுமான்னுதான் பாக்கறேன்.." என்றான் தமிழ்.

"அடப்பாவமே.. இந்தக் கொடுமை வேறயா? பாவம்டா அவ.." என்றான் முகில் உண்மையான வருத்தத்துடன்.

"ம்.." என்றான் தமிழ்.

"நீ அவள லவ் பண்றியாடா?" நேரடியாகக் கேட்டான் முகில்.

"ம்ச்.. தெரிலடா.. ஆனா அவள கண்டுபிடிச்சி பத்திரமா பாத்துக்கணும்னு தோணுது.. இதுதான் லவ்வான்னு தெரில.." என்றான் தமிழ்.

"சரி! அவள பத்திரமா பாத்துக்க உன் உடம்பில தெம்பு வேணும்.. ஞாபகத்தில வெச்சிக்க.." என்றான் முகில்.

"புரியுது!"

"இங்க பார்.. உனக்கு ஒண்ணுன்னா உன் தங்கச்சி தாங்க மாட்டா.. ஏன்.. என்னாலயே தாங்க முடியாது.. நீதான் எங்க பலம்.. நம்ம மூணு பேரும்தான் நம்மள பெத்தவங்களுக்கு பலம்.. அவளத் தேடு.. தேடிக் கண்டுபிடி.. அப்றம் காதலி.. கல்யாணம் பண்ணு.. ஆனா உன்ன கவனிச்சிக்கோ.. இப்டி அங்க போனேன்.. இங்க போனேன்.. காலையில சாப்பிடல.. மயக்கம் போட்டு விழுந்தேன்னு சொல்லாத.. இன்னிக்கு கார்ல வரும் போது கயல் என்ன மனநிலையில இருந்தாள்னு தெரிஞ்சா உன்னால தாங்க முடியாது.." என்றான்.

"அதுக்குதான் அப்போலேர்ந்து சாரி சொல்றேன்.." என்று தமிழ் மீண்டும் தொடங்க,

"யப்பா.. டேய்.. நீ எல்லா கோட்டையும் அழிச்சிட்டு மறுபடியும் மொதல்லேர்ந்து பரோட்டா சாப்பிடாத.." என்று தன் கைகளைக் குவித்து கூறினான்.

"சரிடா.." என்றான் தமிழ்.

"சரி! அந்த இட்லி பாட்டிய எதுக்கு போட்டோல்லாம் புடிச்சிட்டிருந்த.."

"தட் இஸ் ஜர்னலிஸ்ட் மைன்ட்.. என்னைச் சுத்தி செய்திகள் குவிஞ்சி கிடக்கு.. பாட்டியோட மீன் கொழம்பு வாசத்திலதான் எனக்கு மயக்கமே தெளிஞ்சது.. பாட்டிகிட்ட ஜஸ்ட் மீன் குழம்பா பாட்டின்னு கேட்டேன்.. உடனே பாட்டி கடகடன்னு மீன் சமையல் பத்தி ஒரு கதா காலாட்சேபம் கொடுத்தாங்களா.. அப்டியே என் மொபைல்ல ரெக்காடிட்டேன்.. பாட்டியோட ரெண்டு மூணு செல்ப்பீ.. நாலஞ்சு போட்டோ.. வர சண்டே ஃபுட் என் கல்சர் (food & culture) செக்ஷனுக்கு தரமான தேசி (desi) ஆர்டிக்கல் ரெடி.. எப்டி ஐயாவோட ஐடியா.." என்று தமிழ் தன் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.

"ப்ரமாதம்.." என்றான் முகில்.

இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்க,

"ஒரு ஊர்ல.. ஒரு காக்கா இருந்துச்சாம்.. அந்த காக்கா அங்க வடை சுட்டுகிட்டிருந்த பாட்டி கிட்ட போய் வடை வேணும்னு கேட்டுச்சாம்.. அந்த பாட்டி அந்த காக்காவ வெரட்டி வுட்டாங்களாம்.. உடனே அந்த காக்கா பறந்து போய் ஒரு மரக்கிளையில உக்காந்து கிட்டு பாட்டி பாக்காதப்ப பாட்டி சுட்ட ஒரு வடைய சுட்டுகிட்டு வந்துச்சாம்.." என்று மதுரை தாண்டி ஒரு சிறிய கிரமத்திலிருந்த ஒரு பால்வாடியில் தன் முன்னால் அமர்ந்திருந்த சின்ன சின்ன குழந்தைகளின் முன் தானும் அமர்ந்து அவர்களைப் பார்த்து ரைமிங்காக கதை சொல்லிக் சொல்லிக் கொண்டிருந்தாள் நிரஞ்சனா!



- தொடரும்...

 
???? தமிழ்க்கு என்ன ஆச்சுன்னு நினைத்தால், இந்த புள்ள மீன் குழம்பை விதவிதமா சாப்பிட்டுக் கொண்டு இருக்காவலே, கொரோனா வந்ததில் இருந்து மீனையே பார்க்கல, இப்ப தலையைச் சுற்றி மீன் விதவிதமா போகுது.......????
 
அடலூசுப்பக்கி தமிழு...நான் கூட என்னாச்சோனு பதறிட்டேன்....

எல்லாரையும் பதற வச்சுட்டு சொகுசா மீன் துன்னுட்டு இருக்கான்...

அம்மாடி நிரஞ்சனா காலம் மாறிப்போச்சு மா...நீ இன்னும் பாட்டி வடை சுட்டுச்சு காக்கா தூக்கிட்டு போச்சுனு கதை சொல்லிட்டு இருக்க....
 
Top