Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

22. Ivan Vasam Vaaraayo!

Advertisement

Annapurani Dhandapani

Well-known member
Member


22. இவன் வசம் வாராயோ!


நிரஞ்சனா தன்னிடம் உள்ள குழந்தையைப் பற்றிய எல்லா உண்மைகளையும் தமிழ் குடும்பத்தினரிடம் சொல்லி முடிக்க, கயல் வந்து நிரஞ்சனாவின் கையைப் பிடித்துக் கொண்டு,

"யாருடைய குழந்தையையோ காப்பாத்த உன் உயிரையே பணயம் வெச்சிருக்க.. அதக் காப்பாத்த ஊர் ஊரா ஓடிட்டிருக்க.. ஒனக்கு உண்மையாவே ரொம்ப பெரிய மனசு ரஞ்சி!" என்று சொல்லி அவளைப் பாராட்ட,

"இல்லண்ணி.. இத யாரோட குழந்தையாவோ என்னால நெனக்கவே முடியல.. இது என் குழந்தைன்னுதான் மனசுக்குள்ள தோணிட்டிருக்கு.. இத அந்த ஹாஸ்பிடல் டீன் கிட்ட ஒப்படைக்க கூட மனசு வருமான்னு தெரியல.. கொஞ்ச நாளா இத நானே வெச்சிக்கணும்னு ஒரு சுயநல எண்ணம் தோணிட்டே இருக்கு.." என்றாள் மனதை மறைக்காமல்.

"அப்ப நீயே வெச்சிக்கோ.. அவ்ளோதானே.. சிம்பிள்.." என்றாள் கயல்.

நிரஞ்சனா வியப்பும் அதிர்ச்சியும் கலந்து புன்னகைத்து,

"ஆங்.." என்று கூற,

"ஆங்ங்.." என்றாள் கயல், அஜித் படத்தில் வருவது போல!

இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.

"சரி! சரி! சிரிச்சது போதும்! எப்ப கேட்டாலும் எதையாவது சொல்லி மழுப்பிட்டிருந்த.. இப்ப ஒழுங்கு மரியாதையா நா கேக்கற கேள்விக்கு பதில் சொல்லு.. குழந்தைக்கு இப்ப ஒம்பது மாசமாகுது.. என்னன்ன தடுப்பூசி போட்ட.. எதல்லாம் போடலன்னு சொல்லு.." வளர்மதி கண்டிப்புடன் கேட்டாள்.

"அது.. வந்து.. இதப்பத்திலாம் எனக்கு எதுமே தெரியாது.. தேவகி டீச்சர்தான் அத பாத்து பாத்து செய்தாங்க.. அங்கேந்து இங்க வந்தப்றம் நா எதையும் செய்யல.." என்று தயங்கித் தயங்கி கூறினாள் நிரஞ்சனா.

"அத்த! இந்தாங்க.. குழந்தைக்கு என்னென்ன தடுப்பூசி போட்டிருக்குன்னு இதுல இருக்கு.." என்று தமிழ் கூறிக் கொண்டே தன் கைப்பேசியை எடுத்துக் காட்டினான்.

நிரஞ்சனா அவனை வியப்பாகப் பார்க்க,

"இது நீ பெத்த குழந்தை இல்லன்னு நான் உன்ன இங்க கூட்டிட்டு வந்த அன்னிக்கு நைட்டே எனக்கு தெரியும்.. அதாவது நாம ரெண்டு பேரும் லாரியில வரும்போதே.." என்றான் தமிழ்.

"எ.. என்ன.. சொல்றீங்க?" என்று நிரஞ்சனா அதிர்ந்து போய்க் கேட்டாள்.

"அது மட்டுமில்ல.. உன்னோட அந்த தேவகி டீச்சருக்கு நா உன் புருஷன் இல்லன்னு என்னப் பாத்ததுமே தெரியுமாம்.." என்றான்.

"எ.. எப்டி.. நா.. நீங்க.." எதுவும் சொல்லத் தெரியாமல் திணறினாள் நிரஞ்சனா.

"பத்திரிகைல நா எழுதற ஆர்ட்டிகல் எல்லாம் வழக்கமா அவங்க படிப்பாங்க போல.. அதனால அவங்களுக்கு என்னை நல்லாவே தெரிஞ்சிருக்கு.. நா உன் புருஷன்னு சொன்னதுமே அவங்க நா உன்ன காப்பாத்ததான் இப்டி சொல்றேன்னு புரிஞ்சிகிட்டு தைரியமா உன்ன என் கூட அனுப்பினாங்களாம்.

அன்னிக்கு நைட் அந்த லாரி ட்ரைவர் செல்வம் நம்பர்ல என்னை கூப்பிட்டு, இது நீ பெத்த குழந்தையில்ல.. இந்த குழந்தைய காப்பாத்ததான் நீ ஓடிட்டிருக்கன்னும் உன்னயும் குழந்தையையும் பத்திரமா பாத்துக்கணும்னும் என்கிட்ட கேட்டுகிட்டாங்க.. நானும் உன்ன பத்திரமா பாத்துக்கறதா அவங்களுக்கு வாக்கு கொடுத்தேன்." என்றான்.

கயலும் முகிலும் தமிழை வியப்புடன் பார்த்தனர்.

"எப்டிடா.." என்று முகில் வியப்புடன் கேட்க, தமிழ் புன்னகைத்தான்.

"நடத்து.. நடத்து..".என்று சொல்லிக் கொண்டே முகில் அவன் தோளில் தட்டினான்.

"தமிழ்! அவனுங்க இந்தக் குழந்தைக்காக அங்க தேடி இங்க தேடி கடைசியில் நம்ம வீட்டுக்கே வந்துட்டானுங்க.. இனிமே காலம் கடத்தக்கூடாது.. கல்யாணத்துக்கு இன்னும் பதினஞ்சு நாள்தான் இருக்கு.. நாமல்லாம் இன்னிக்கு நைட்டுக்கே ஊருக்கு கிளம்பறோம்.. எதுன்னாலும் நம்ம ஊர்ல பாத்துகிடலாம்.. கிளம்புங்க.." என்றார் ஈஸ்வர பாண்டி.

"சரி மாமா!" என்று தமிழ் கூற,

"ரஞ்சி! இனிமே எதப்பத்தியும் கவலப்படக் கூடாது.. நீ இனிமே யாரப் பாத்தும் ஓடி ஔிய வேணாம்! எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுவோம்.. சரியாம்மா.." என்று சொக்கலிங்கம் கேட்க, நிரஞ்சனா தன் தலையை சம்மதம் என்பது போல அசைத்தாள்.

அதன் பிறகு, எல்லா வேலைகளும் தங்கு தடையின்றி நடந்தன. எல்லாரும் கல்யாணத்துக்காக வாங்கி வைத்த பொருட்களை கவனமாக எடுத்து கட்டிக் கொண்டனர்.

வீட்டில் மளிகைப் பொருட்களை பூச்சி பொட்டு வந்து விடாதபடி பத்திரமாக மூடி வைத்துவிட்டு உணவுப் பொருட்களை வீட்டு வேலையாட்களுக்கு விநியோகம் செய்து அவர்களுக்கு விடுமுறையும் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

தமிழும் கயலும் மின்னஞ்சல் மூலம் அலுவலகத்துக்கு விடுப்பு வேண்டி கோரிக்கை அனுப்பி வைக்க, முகில் மட்டும் நேரில் சென்று அலுவலகத்துக்கு விடுப்பு எழுதிக் கொடுத்துவிட்டு வந்தான்.

எல்லாவற்றையும் கவனமாக எடுத்துக் கொண்டு அவர்கள் அன்றிரவே தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டார்கள்.

ரயிலில் பயணம் என்பதால் கும்பலாகச் செல்வது அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்க, நிரஞ்சனாவுக்கு அது புதுமையான அனுபவமாக இருந்தது.

நிரஞ்சனாவுக்கு ரயிலில் பயணிப்பது மிகவும் பிடிக்கும் என்றாலும் அதற்கு வாய்ப்பு என்னமா அவளுக்கு மிக அரிதாகவே கிடைத்திருந்தது.

இதற்கு முன்பு திருமணமாகி கணவனுடன் மணப்பாறையிலிருந்து சென்னை வரும்போதும் சரி, கணவன் அவளை உதறிச் சென்ற பின் அவளுடைய தாய் மற்றும் சகோதரனுடன் திரும்பவும் மணப்பாறைக்கே செல்லும் போதும் சரி, இரண்டுமே சாலை வழிப் போக்குவரத்தில்தான்.

இரண்டு பயணங்களின் போதும் அவளுடைய மனநிலை என்னமோ குழப்பமாகத்தான் இருந்தது.

தாம்பரத்தில் குடியிருக்கும் போது இரண்டு முறை ரயிலில் பயணம் செய்ய வாய்ப்பு அமைந்தது என்றாலும் அது சில நிமிடங்களில் முடிந்து விட்டது.

மதுரையிலிருந்து நிரஞ்சனாவை லாரியில் சென்னைக்கு அழைத்து வந்த தமிழ், தாம்பரத்திலிருந்து ரயிலில்தான் தன் வீட்டுக்கு அழைத்து வந்தான்! ஆனால் அப்போதைய மனநிலையில் அவளால் அந்தப் பயணத்தையும் ரசிக்க முடியவில்லை.

ஆனால் இந்த ரயில் பயணம் அவளுக்கு மன அமைதியாகவும் இன்னும் சொல்லப் போனால் தன் வாழ்வின் மீது நம்பிக்கையும் பிடிப்பும் ஏற்படுத்தும் வண்ணம் அமைந்தது.

அன்பைப் பொழியும் மதுரமும் அன்போடு கண்டிப்பையும் கலந்து தரும் வளர்மதியும், பாதுகாப்பை வழங்குவது போல நடந்து கொள்ளும் சொக்கலிங்கமும் ஈஸ்வர பாண்டியும், கூடப் பிறந்த தங்கையாகவே தன்னை நடத்தும் முகிலனும், தோழமையோடு பாசத்தைப் பொழியும் கயல்விழியும் அவளை அன்பில் திக்குமுக்காட வைத்துக் கொண்டிருந்தார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, முத்தழகியின் அத்தைப் பாசம், அஞ்சத்த.. அஞ்சத்த.. என்று அவளையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பது நிரஞ்சனாவை மனம் நிறையச் செய்து கொண்டிருந்தது.

இப்படி ஒரு குடும்பத்தில் நானும் ஒருத்தியா என்ற ஆச்சர்யம் ஒரு புறம் இருந்தாலும் இது நிலைக்காதே என்ற கலக்கமும் தோன்றியபடி இருந்தது நிரஞ்சனாவுக்கு.

அதுவும் தமிழ் தன் குழந்தையை மிகவும் பாசமுடன் பார்த்துக் கொள்வதும், அதைவிட மிகவும் அக்கரையுடன் தன்னிடம் நடந்து கொள்வதையும் பார்க்கப் பார்க்க, அவளுடைய மனதில் பயத்தின் அளவு அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

குழந்தைகள் இருவருக்கும் உணவூட்டித் தூங்க வைத்துவிட்டுப் பெரியவர்கள் ஒவ்வொருவராகப் படுக்க, அவர்கள் அனைவரும் வசதியாகப் படுக்க ரயிலின் பர்த்தை எடுத்து சரியாக மாட்டிக் கொடுத்து அவர்கள் படுத்ததும் போர்வை போர்த்தி உதவினார்கள் தமிழும் முகிலும்.

எல்லாரும் படுத்ததும் கடைசியாக முகிலும் மேல் பர்த்தில் ஏறிப் படுக்க, தமிழ் மின்விளக்கை அணைத்துவிட்டு அவனுக்கு எதிர் பர்த்தில் ஏறப் போனான். அப்பாது அவனுடைய கைப்பேசி சிணுங்கியது. எடுத்துப் பார்த்தவன்,

"ஹே! எடிட்டர் சார் கூப்பிடறார்.. பேசிட்டு வந்துடறேன்.." என்று கூறிவிட்டு ரயிலின் கதவருகில் நின்று பேசினான்.

கம்பார்ட்மென்ட்டில் மிகக் குறைந்த வெளிச்சமே இருக்க, நிரஞ்சனா திரும்பிப் பார்த்தாள். கதவருகே நிற்கும் தமிழ், வரி வடிவமாகத் தெரிந்தான்.

அவனைப் பார்க்கும் போதே அவளுடைய மனதில் எதுவோ ஒன்று பொங்கியது.

இத எப்டி சொல்வேன்.. இவர் ஏன் என்னையே கல்யாணம் செய்துக்கணும்னு நெனக்கிறாரு.. இவரோட அழகுக்கும் படிப்புக்கும் சம்பாத்தியத்துக்கும் பொண்ணுங்க வரிசையில வந்து நிப்பாங்க..

என்னைக் கட்டினா இவருக்கு எந்தப் பலனும் இல்ல.. சொல்லப் போனா அவமானம்தான் மிஞ்சும்..

எப்டியாவது கல்யாணத்த நிறுத்த சொல்லணும்.. கடவுளே.. இதுக்காவது எனக்கு உதவி செய்.. நா எனக்காக இதக் கேக்கலனனு உனக்கே நல்லா தெரியும். என்ன கட்டிகிட்டா இவரு வாழ்க்கைதான் பாழாகும்.. நா நல்லா இருக்கணும்னு நெனக்கிற இவரும் இவங்க குடும்பமும் எப்பவும் ஒரு குறையுமில்லாம நல்லா இருக்கணும்னுதான் நா கேக்கறேன்.. இந்த கல்யாணத்த நிறுத்திடு.. ப்ளீஸ்.. இந்த ஒரு உதவி மட்டும் செய் கடவுளே.. அப்றம் வேற எதையுமே நா உன் கிட்ட கேக்க மாட்டேன்.. கேக்கவே மாட்டேன்.. ப்ளீஸ் கடவுளே.. என்று நினைத்தபடி படுத்திருந்தாள்.

அவன் கைப்பேசி அழைப்பை பேசி முடித்த பின்பும், ரயிலின் வேகத்தில் முகத்தில் மோதும் காற்றை அனுபவித்தபடி அங்கேயே நின்றிருந்தான்.

நிரூ இனிமே எந்தப் பிரச்சனையுமில்லாம வாழணும்.. அவளத் தொரத்திட்டு வர்றவனுங்க அவள மனசில நெனச்சா கூட அவனுங்களுக்கு சரியான தண்டனை கொடுப்பேன்.. அவ இவ்ளோ நாளா பல கொடுமைய அனுபவிச்சிட்டா.. இனிமே அவ வாழ்க்கையில சந்தோஷத்தத் தவிர வேற எதுவும் இருக்கக் கூடாது.. அந்தக் குழந்தை இனிமே அவளுக்கு மட்டுமில்ல.. எப்ப அது என் கையில தூக்கினேனோ அப்பலேர்ந்து அது என் குழந்தை.. இந்தக் கல்யாணத்தினால ரெண்டு பேரும் சட்டப்படி எனக்கு சொந்தமாகிடுவாங்க.. என் நிரூவையும் என் குழந்தையையும் அப்டி.. என் கண்ணுக்குள்ள வெச்சி பாத்துக்கணும்..

தமிழ் தன் மனதில் நிரஞ்சனாவையும் அவளுடைய குழந்தையையும் நினைத்தபடி நின்றிருந்தான்.

வெளியிலிருந்து வந்த நிலவொளியில் அவனுடைய முகமும் அலை பாயும் கேசமும் உடற்பயிற்சி செய்து முறுக்கேறிய கட்டுக் கோப்பான உடலும் அவனை ஒரு ஆணழகனாக நிரஞ்சனாவின் கண்களுக்குக் காட்டியது.

இல்ல.. இவரு நல்லா இருக்கணும்.. அழகான நல்ல பொண்டாட்டிய கட்டிகிட்டு நிறைய புள்ள குட்டி பெத்து ரொம்ப வருஷம் சந்தோஷமா வாழ்ந்து பேரன் பேத்தில்லாம் பாக்கணும்.. இவரோட பேர் புகழ் எல்லாம் இந்த ஊர் உலகம் பேசணும்..

கடவுளே.. எனக்கு துணையிரு.. இந்த கல்யாணத்த நிறுத்தறதுக்கு எனக்கு துணையிரு.. ப்ளீஸ்.. என்று மனதுக்குள் இறைவனை துணைக்கழைத்துக் கொண்டு ஒரு முடிவுடன் எழுந்து அவனருகில் சென்றாள்.



எல்லாம் சரியாகக் கைகூடி வருகையில் நிரஞ்சனா ஏன் இப்படி ஒரு விபரீத முடிவு எடுத்திருக்கிறாள்? அடுத்த அத்தியாயத்தில்..


- தொடரும்....



 
மிகவும் அருமையான பதிவு,
அன்னபூரணி தண்டபாணி டியர்

நிரஞ்சனா பாவம்
சுய பட்சாதாபத்தில் கழிவிரக்கத்தில் தப்பு தப்பா முடிவு எடுக்கிறாள்
அடுத்த அப்டேட் சீக்கிரமா கொடுங்க, அன்னம் டியர்
 
Last edited:
Top