Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

21. Ivan Vasam Vaaraayo!

Advertisement

Annapurani Dhandapani

Well-known member
Member


21. இவன் வசம் வாராயோ!



நிரஞ்சனாவை சேலம் போகமல் சென்னைக்கு வரச் சொல்லி பைரவியின் தோழியுடைய சகோதரன் சொல்ல, நிரஞ்சனாவும் சென்னைக்கு பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு சென்னை செல்லும் பேருந்தில் ஏறினாள்.

அவளுடைய கெட்ட நேரமோ என்னவோ, அந்தப் பேருந்து சில அடி தூரம் சென்றதுமே பழுதடைந்து நின்றது.

பேருந்தின் நடத்துனர் இதே பயணச்சீட்டினை பயன்படுத்தி வேறு பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று எல்லாருக்கும் அவரவர்களின் பயணச்சீட்டில் குறித்துக் கொடுத்தார்.

நிரஞ்சனாவும் தன் பயணச்சீட்டில் நடத்துனரின் கையொப்பத்தை பெற்றுக் கொண்டு அடுத்த பேருந்துக்காக மற்ற பயணிகளுடன் காத்திருக்கலானாள்.

அப்போது கரிய பெரிய உருவத்துடன் பெரிய வீச்சருவாளுடன் அவளை நோக்கி வேகமாக ஓடி வந்தான் முரடன் ஒருவன்.

அவன் பின்னால் இன்னும் சிலர் கத்தி கம்புகளுடன் ஓடி வந்தனர்.

அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே நிரஞ்சனாவின் அடிவயிற்றில் பயப்பந்து உருளத் தொடங்க, அதன் விளைவாக அவளுக்குத் தலைசுற்றத் தொடங்கியது.

பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் பயத்தோடு விலகி ஓட, நிரஞ்சனாவால் அப்படி ஓடக் கூட முடியவில்லை.

அந்த முரடன் இவளுக்கு முன்னே இன்னும் ஐந்தடி தூரத்தில் இருக்க, இவளுக்குப் பின்னால் நின்றிருந்த பெண் ஒருத்தி அழுகையுடனும் பயத்துடனும் கதறினாள்.

"வேண்டாம் தம்பி.. என்ன ஒண்ணும் செஞ்சிடாதீங்க.. ப்ளீஸ்.. நாந்தான் இந்த ஊர விட்டு போயிடறேன்னு சொல்றேன்ல.."

"ஏய்.. வாய மூடுடீ.." என்று ஆரம்பித்து மேற்கொண்டு காதில் கேட்கச் சகிக்காத வார்த்தைகளைச் சொல்லி திட்டிக் கொண்டே அவளை வெட்ட வந்தான்.

ஒரு கால் சூம்பிப் போன நிலையில் முதுகில் கூன் விழுந்து நிற்கக் கூட முடியாமல் நடப்பதற்கு ஊன்றுகோல் (crutches) வைத்திருந்தாள். ஆனால் இப்போதைய அலைச்சலிலும் பயத்திலும் பொலிவிழந்து காணப்பட்டாலும் அவளுடைய முகம் களையாக அழகாக இருந்தது. அவளுடைய வயிறு கொஞ்சம் மேடிட்டிருக்க, அவள் ஒரு உயிரைச் சுமந்து கொண்டிருக்கிறாள் என்பது தெளிவாகத் தெரிந்தது.

அவளுடைய கர்ப்பத்தைப் பார்த்ததும் நிரஞ்சனாவுக்கு எங்கிருந்துதான் அத்தனை ஆவேசம் வந்ததோ, அந்த முரடனைக் கீழே தள்ளிவிட்டுவிட்டு அவன் கையிலிருந்த வீச்சரிவாளைப் பிடுங்கி,

"டேய்.." என்று கத்திக் கொண்டே அவன் கையில் ஓங்கி வெட்டினாள்.

மற்றவர்கள் எல்லாரும் பயந்து ஓட, சிலர் ஓடி வந்து வெட்டு வாங்கியவனைப் பார்க்க, அவன் மயங்கினான்.

"யம்மா.. போய்டுங்கம்மா.. இங்கேந்து போய்டுங்க.." என்றார் ஒரு பெரியவர். அப்போதுதான் நிரஞ்சனா தன் சுயநினைவுக்கு வந்தாள் போலும். அவனுடைய கையில் வெட்டுக் காயமும் அதிலிருந்து வழியும் ரத்தமும் தன் கையில் அரிவாளையும் கண்டுவிட்டு மயங்கத் தொடங்கினாள்.

அந்தப் பெரியவர், அங்கு வந்த ஆட்டோவை நிறுத்தி நிரஞ்சனாவையும் அந்த கருவுற்ற பெண்ணையும் அவர்களுடைய பைகளையும் அதில் ஏற்றி அனுப்பினார்.

நிரஞ்சனா அரை மயக்கத்திலிருக்க, அந்தப் பெண் தன் கைப்பையிலிருந்து தன் கைப்பேசியெடுத்து யாருக்கோ அழைத்துப் பேச, அந்த ஆட்டோ எங்கோ சென்று கொண்டிருந்தது.

அரை மணி நேரப் பயணத்துக்குப் பின் அந்த ஆட்டோ எங்கோ நின்றது. அந்த ஆட்டோ நின்ற இடத்தில் ஒரு கார் நின்றிருந்தது. அந்தக் காரில் அந்தப் பெண் ஏறிக் கொண்டு நிரஞ்சனாவையும் ஏற்றிக் கொண்டாள். கார் கிளம்பியது.

காரினுள் இவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. ஓட்டுனர் மிக மரியாதையுடன் அந்தப் பெண்ணிடம் பேசினான்.

ரொம்ப தூரம் போன பின் அவர்கள் நம்மைத் தொடரவில்லை என்று உறுதி செய்து கொண்டு ஒரு சிறிய உணவகத்தின் முன்னே வண்டியை நிறுத்தச் சொன்னாள் அந்தப் பெண்.

அப்போதும் அவள் காரை விட்டு இறங்காமல் அந்த காரோட்டியையே எல்லாம் வாங்கி வரச் சொல்லி சாப்பிட்டாள். நிரஞ்சனாவையும் சாப்பிடச் சொன்னாள்.

நிரஞ்சனா மறுத்தபோது வற்புறுத்தி உண்ண வைக்க, அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்து வண்டியை விட்டு இறங்கி ஓடிப்போய் சாலையோரமாக வாந்தியெடுத்துவிட்டு வந்தாள்.

"ஒனக்கு ஒடம்புக்கு என்ன.." என்று அவள் பதறிப் போய்க் கேட்க,

"இல்ல.. நானும் கர்ப்பமா இருக்கேன்.. இப்பதான் மூணு மாசமாகுது.." என்று தயங்கியபடி சொன்னாள் நிரஞ்சனா.

"ஓ.. சாரிமா.. என்னால ஒனக்கு வீண் அலைச்சல்.. நீ எங்க இறங்கணும்னு சொல்லு.. அங்க இறக்கி விடறேன்.."

நிரஞ்சனா தன் திருமண வாழ்வைப்பற்றி மட்டும் சுருக்கமாகச் சொல்லி,

"எங்கம்மாவும் அண்ணனும் ரொம்ப கொடுமை படுத்தறாங்க.. என்ன வெச்சி சோறு போடறதே வேஸ்ட்டு.. இதுல இந்த குழந்தை வேறயான்னு கேட்டு அத கலைக்க முயற்சி செய்யறாங்க.. நா பண்ணின பாவம்.. இப்டி கஷ்டப்படறேன்.. இன்னும் முழுசா உருவாகக் கூட இல்ல.. இந்த பச்ச மண்ணு என்ன பாவம் பண்ணிச்சு.. அதான்.. எங்கியாவது போய் பாத்திரம் தேய்ச்சாவது பொழச்சிக்கலாம்னு.. வீட்ட விட்டு ஓடி வந்துட்டேன்.." என்று கூறி முடித்தாள்.


"நீ என் உயிர காப்பாத்தியிருக்க.. உனக்கு நான் உதவி செய்யறேன்.. வா.." என்று கூறி அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள் அந்தப் பெண்.

"உங்க பேர் என்னக்கா.."

"வரலட்சுமி.. உன் பேரு.."

"நிரஞ்சனா!"

"அழகான பேர்! சரி.. மொதல்ல.. உன் போன்லேர்ந்து சிம்மை தூக்கிப் போடு.. இல்லன்னா இத வெச்சி உங்கண்ணனும் அம்மாவும் உன்ன கண்டுபிடிச்சிடப் போறாங்க.." என்றாள் வரலட்சுமி.

"ஐயோ.. இன்னிக்கு சாந்தரம்தான் ரீசார்ஜ் பண்ணிச்சு.." என்று அவசரமாக மறுத்தாள் நிரஞ்சனா.

"எத்தன லட்சத்துக்கு பண்ணின.." என்று பொய்யான கோபத்துடன் வரலட்சுமி கேட்க,

"ஹூம்.. பத்து ரூபாய்.."

"ஏய்.. பத்து ரூபாய்க்கா இவ்ளோ பதட்டப்படற.."

"அதில்ல.. என்ன திட்டிகிட்டே அண்ணன்தான் பண்ணிச்சி.."

"ஹையோ.. நிரஞ்சனா.. நீ ஒரு லூசுதான்.."

"ஆமா.. ஓடிப் போன எம்புருஷன் கூட இப்டிதான் சொல்வாரு.." என்றாள் நிரஞ்சனா.

"ஹா.. ஹா.. ஹா.." என்று வாய்விட்டு சிரித்தாள் வரலட்சுமி. அவளுடைய சிரிப்பையே கண் கொட்டாமல் பார்த்தாள் நிரஞ்சனா.

"என்ன? என்னையே பாக்கற.." வரலட்சுமி கேட்க, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அக்கா.." என்றாள் நிரஞ்சனா.

அதற்கும் சிரித்தாள் வரலட்சுமி.

இருவரும் சில நிமிடப் பேச்சில் நல்ல நட்பாகி விட்டனர்.

ஆங்காங்கே வண்டியை நிறுத்தி நிரஞ்சனாவுக்கு பால் ஜூஸ் என்று வாங்கிக் கொடுத்தாள் வரலட்சுமி.

மூன்றரை மணிநேரப் பயணத்துக்குப்பின் கிட்டத் தட்ட இரவு பதினொரு மணியளவில் அவர்கள் தேனியை அடைந்திருந்தனர்.

தேனிக்குள் நுழைந்து டவுனைத் தாண்டி சிமென்ட் வீடுகள் குறைந்து குடிசைகள் ஆரம்பிக்கும் பகுதியில் கார் சென்று ஒரு வீட்டின் போர்ட்டிக்கோவில் நின்றது.

ஓட்டுனர் இறங்கி வந்து வரலட்சுமி காரிலிருந்து இறங்க உதவி செய்ய, நிரஞ்சனாவும் இறங்கி வந்து அவளுடைய ஊன்றுகோலை எடுத்துக் கொடுத்தாள்.

அதற்குள் கார் சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து வீட்டு வாசலில் மின் விளக்கு போட்டார்கள். அதுவரை கும்மிருட்டாக இருந்த அந்த இடத்தில் லேசாக வெளிச்சம் வந்தது.

வீட்டுக்குள்ளிருந்து ஒரு பெண் ஓடி வந்தாள். அவள் அந்த ஓட்டுனரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு வரலட்சுமியிடம் வந்தாள்.

"என்ன தங்கம்.. இன்னும் தூங்கலயா? புருஷனப் பாக்க முழுச்சிட்டிருந்தியா?" வரலட்சுமி கேட்க, அந்த தங்கம் புன்னகைத்தாள்.

வரலட்சுமி காரிலிருந்து இறங்கி மெல்ல நடக்க ஆரம்பித்தாள். ரொம்ப நேரம் உட்கார்ந்த நிலையிலேயே இருந்ததால் கால்களை தரையில் ஊன்ற முடியாமல் தவித்தாள்.

நிரஞ்சனாவும் அந்த தங்கமும் அவளை விழாமல் பிடித்துக் கொள்ள, அவள் கொஞ்சம் கொஞ்சமாய் சுதாரித்துக் கொண்டு நடக்கலானாள்.

வீட்டுக்குள்ளிருந்து ஐம்பது அல்லது ஐம்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி அவசரமாக ஓடி வந்தாள்.

அவள் பார்ப்பதற்கு வரலட்சுமியின் முகசாடையில் இருக்க, வரலட்சுமியின் அம்மாவாக இருக்க வேண்டும் என்று நிரஞ்சனா கணித்தாள்.

"லட்டு.. லட்டு.. என்னம்மா.. ஐயோ.. இப்டி ஆய்டுச்சேம்மா உன் வாழ்க்கை.." என்று கலங்கியபடி அவள் கையைப் பிடித்துக் கொண்டாள் அந்த முதியவள்.

"அம்மா.." உடைந்து போய் அழுதாள் வரலட்சுமி.

"அழாதம்மா.. அம்மா இருக்கேன் உனக்கு.. வாம்மா.. உள்ள வாம்மா.." என்று தன் மகளை அழைத்துப் போனாள் அவள். பின்னாலேயே நிரஞ்சனாவும் சென்றாள்.

இரவு ரொம்ப நேரம் ஆகி விட்டதால் எளிதாக செரிக்கும் படி இட்லியும் இடியாப்பமும் செய்திருந்தாள் அவள். வந்தவர்களுக்கு அதை சாப்பிடக் கொடுத்தாள்.

அவளுக்கு கூட மாட தங்கம் உதவி செய்தாள்.

நிரஞ்சனா தயங்க, வரலட்சுமி அவளை சாப்பிட வைத்தாள்.

"மணி! இந்தா.. நீயும் சாப்பிடு.. நீ எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டன்னு தெரியும்.. ம்.. சாப்பிடு.." என்று அந்த ஓட்டுனருக்கும் சாப்பிடக் கொடுத்தாள் அவள்.

அனைவரும் சாப்பிட்டு முடித்த பின், மணி தன் மனைவியை அழைத்துக் கொண்டு அந்த வீட்டின் பின்னாலிருக்கும் அவுட் ஹவுஸுக்குச் சென்றுவிட்டான்.

அந்த வீடு சிறியதுதான் என்றாலும் நிரஞ்சனாவின் கண்களுக்கு அது பெரியதாகத்தான் தோன்றியது.

வரலட்சுமியை அவளுடைய கட்டிலில் படுக்க வைத்த அவளுடைய அம்மா விவரம் கேட்டாள்.

"மாப்ள எங்கம்மா?"

"அவர் அப்புறம் வரேன்னு சொல்லி என்ன அங்கேந்து தப்பிச்சுப் போக சொல்லிட்டு அவங்க கிட்ட சண்டை போட்டுட்டு இருந்தாரு.. நா எப்டியோ தப்பிச்சி வந்தேன்.. ஆனாலும் என்ன கண்டுபிடிச்சி வெட்ட வந்தானுங்க.. அப்ப தெய்வம் மாதிரி இந்த பொண்ணுதான் என்ன காப்பாத்தினாம்மா.. இவ நிரஞ்சனா!" என்று நிரஞ்சனாவைக் காட்டினாள்.

"நிரஞ்சனா! ரொம்ப நன்றிம்மா.. குழந்தை குட்டியோட நல்லா இருக்கணும்.." என்று வாழ்த்தினாள் அவள்.

"நிரஞ்சனா.. இவங்க எங்கம்மா ரேணுகா! இவங்க நர்சா இருந்து ரிடைர் ஆனவங்க!" என்று தன் தாயை நிரஞ்சனாவுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

நிரஞ்சனாவுக்கு அவள் நர்ஸ் என்றதும் தன் தாயின் நினைவு வந்தது. ஒரு வேளை அம்மா உயிரோட இருந்திருந்தா இப்டிதான் இருந்திருப்பாங்கல்ல.. என்று நினைத்துக் கொண்டாள்.

வரலட்சுமி, நிரஞ்சனாவின் திருமண வாழ்வு தோற்றுப் போனதைக் கூறி அவளுடைய தற்போதைய நிலையை தன் தாயிடம் சுருக்கமாகக் கூற,

"ஹூம்.. பொண்ணுங்களுக்குதான் எவ்ளோ பிரச்சனை.. நிரஞ்சனா.. நீ எதுக்கும் கவலப்படாத.. நீயும் என் பொண்ணு மாதிரிதான்.. எவ்ளோ நாள் வேணும்னாலும் நீ இங்க இருக்கலாம்.. இத உன் வீடு மாதிரி நெனச்சுக்கோ.." என்று சொல்லி ஒரு காலி அறையை அவள் படுப்பதற்கு காட்டினாள்.

"இங்க படுத்துக்கம்மா.. எதப்பத்தியும் கவலப்படாத.. நிம்மதியா தூங்கு.." என்று சொல்லிவிட்டுப் போனாள் ரேணுகா.

நிரஞ்சனா அந்த அறையிலிருந்த மெத்தையில் படுக்காமல் தரையில் ஒரு போர்வையை விரித்துக் கொண்டு படுத்தாள்.

மனம் தவித்தபடி இருந்தாலும் உடல் அசதியினால் லேசாகக் கண்ணயற, அவளுடைய அடி வயிற்றில் சுருக்கென்று வலித்தது.

பயந்து போய் கண்ணைத் திறந்து வயிற்றைத் தொட்டுப் பார்த்தாள். வலி இல்லை.

ஏதோ பிரமை போல என நினைத்து மீண்டும் கண்களை மூடினாள். சில நிமிடங்களில் மீண்டும் சுருக்கென்ற வலி. பயந்து போய் எழுந்து அமர்ந்தாள்.

ஒரு வேள.. ரொம்ப நேரம் வண்டில உக்காந்து வந்தது ஒத்துக்கலயோ.. சரியா வேற சாப்பிடல.. ரெஸ்ட் எடுக்கல.. என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டு வயிற்றை லேசாக நீவி விட்டுக் கொண்டு மீண்டும் படுத்தாள்.

சில நிமிடங்களில் உயிர் போகும் அளவு வலி..

அம்மாஆஆஆஆ என்ற நிரஞ்சனாவின் அலறல் கேட்டு ரேணுகா எழுந்து பதட்டத்துடன் ஓடி வர, வரலட்சுமியும் நொண்டியபடி அந்த அறைக்குள் வர,

நிரஞ்சனா உதிரப் போக்கினால் துடிதுடித்தபடி மயங்கியிருந்தாள்.

ஆமாம். அவளுடைய கரு அன்றைய அலைச்சலினால் கலைந்து விட்டிருந்தது.

அவுட் ஹவுசிலிருந்து மணியின் மனைவி தங்கத்தை உதவிக்கு வைத்துக் கொண்டு ரேணுகா, நிரஞ்சனாவுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளைச் செய்து அவளை படுக்க வைத்தாள்.

வரலட்சுமிக்கும் ரேணுகாவுக்கும் நிரஞ்சனாவின் கரு கலைந்ததில் மிகவும் வருத்தம் ஏற்பட்டது.

மறுநாள் மதியத்துக்கு மேல்தான் கண் விழித்தாள் நிரஞ்சனா.

கண் விழித்ததுமே தன்னுடைய நிலை புரிந்து கண்ணோரம் லேசாக ஈரம் உண்டானது.

இது எதுக்குன்னு நெனச்சேன்.. இது பொறந்து வளரும் போது இதோட அப்பா எங்கன்னு கேட்டா என்ன பதில் சொல்வேன்னு தவிச்சேன்.. அதான் நீ தவிக்காதடீ.. உனக்கு இது மாதிரி கஷ்டமெல்லாம் வேணாம்னு நீயே எடுத்துகிட்டியா கடவுளே.. அப்டீன்னா இத நீ எனக்கு குடுக்காமலேயே இருந்திருக்கலாமே.. எதுக்கு குடுக்கற மாதிரி குடுத்து எடுக்கற மாதிரி எடுத்துட்ட.. ஒண்ணு மட்டும் புரியுது.. என்ன வெச்சி நீ பெரிய ட்ராமா போடற.. அதுக்கு எப்ப க்ளைமேக்ஸ் வெக்க போறியோ.. எப்டி வெக்க போறியோ.. க்ளைமேக்ஸ்ல ஹேப்பி எண்டிங்க் வெப்பியா.. இல்ல என்ன போட்டு தள்ளிட்டு வாழ்வே மாயம்னு முடிக்க போறியா.. கடவுளே.. என்று கடவுளிடம் பேசிக் கொண்டாள்.

"நிரஞ்சனா.." மெல்லிய குரலில் அழைத்தபடி வரலட்சுமி அங்கே நொண்டியபடி வந்தாள்.

"அக்கா.. நீங்க ஏன் க்கா சிரமப்படறீங்க.." நிரஞ்சனா கேட்டாள்.

"என்னாலதானே.. என்ன காப்பாத்த போய்தானே உன் குழந்தைய இழந்த.. ம்ச்.. நா அந்த பஸ்ல ஏறியிருக்கவே கூடாது.." என்று கண் கலங்கினாள் வரலட்சுமி.

"அப்டி சொல்லாதீங்கக்கா.. அந்த பஸ்ல ஏறினதாலதான் நான் இப்ப உங்க உதவியால நல்லா இருக்கேன்.. யோசிச்சி பாருங்க.. ஒரு வேளை நா சென்னைக்கு போயி, எங்கண்ணியோட ஃப்ரண்ட கண்டு பிடிக்க முடியாமப் போயிருந்தா.. அங்க வெச்சி நடுத் தெருல எனக்கு இப்டி ஆகியிருந்தா.. அப்டியே செத்து போயிருப்பேன்.. அந்த தெய்வம் மாதிரி என்னை காப்பாத்தி உங்களோட கூட்டிட்டு வந்திருக்கீங்க.. இங்கயும் உங்கம்மா எனக்கு வைத்தியம் பார்த்திருக்காங்க.. இல்லன்னா எனக்கு என்னாகியிருக்கும்.. தெய்வம்.. இப்ப இந்த குழந்தை உனக்கு வேணாம்டீ.. வரலட்சுமி அக்காவுக்கு பிறக்கப் போற குழந்தைய பாத்துக்க.. அப்டீன்னு எனக்கு சொல்லாம சொல்லியிருக்காரு.." என்று சொல்லி புன்னகைத்தாள்.

"இந்த நிலையும் நல்லதுக்குன்னு நெனக்கிறியே.. உண்மையாவே உனக்கு ரொம்ப பெரிய மனசு நிரஞ்சனா.. எல்லாம் சரியாகிடும்.. நீ ரெஸ்ட் எடு.." என்று சொல்லிவிட்டுப் போனாள் வரலட்சுமி.

தள்ளியிருந்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரேணுகாவுக்கும் தங்கத்துக்கும் கூட நிரஞ்சனாவைப்பற்றி உயர்ந்த எண்ணம் தோன்றியது.

ரேணுகா மற்றும் தங்கத்தின் உபசரிப்பில் ஒரு வாரத்தில் நிரஞ்சனா உடல் நலம் தேறி எழுந்து அமர்ந்தாள்.

அதன் பிறகு அந்த வீட்டில் நிரஞ்சனாவும் ஒருத்தியாய் மாறிப் போனாள்.

வரலட்சுமிக்கு பணிவிடை செய்து ரேணுகாவுக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்து தங்கத்துடன் சமையலறையில் சமையல் செய்து என அந்த வீட்டில் தன்னை அழகாய் பொருத்திக் கொண்டாள்.

ஓட்டுனர் மணியிடமும் சகோதர பாசத்துடன் பழகினாள்.

அந்த வீடும் வீட்டின் பின்புறமுள்ள அழகான பூந்தோட்டமும் அங்குள்ள ரம்மியமான சூழலும் நிரஞ்சனாவுக்கு மிகவும் பிடித்துப் போயின.

வெகு நாள் கழித்து அவள் நிம்மதியாய் உணர்ந்தாள் எனலாம்.

வரலட்சுமி தன் கணவனின் வருகைக்காக ஒவ்வொரு நாளும் ஆவலுடன் காத்திருக்க, அவளுடைய பிரசவ நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது.





- ctd...
 
Last edited:
- ctd...


ஒரு நாள் வரலட்சுமியின் அறையை வரவிருக்கும் குழந்தைக்காக தயார் செய்ய வேண்டுமென்று ரேணுகா சொல்ல, நிரஞ்சனாவும் தங்கமும் அந்த அறையை சுத்தம் செய்தனர்.

அப்போது அந்த அறையின் பரணிலிருந்து பழைய திருமணப் பத்திரிகை ஒன்று நிரஞ்சனாவின் கைகளில் கிடைத்தது.

அதை எடுத்துப் பார்த்தவள் அதிர்ந்தாள்.

அது அவளுடைய அம்மா அப்பாவின் திருமணப் பத்திரிகை என்பதை அதிலிருந்த பெயரையும் ஊரையும் வைத்து தெரிந்து கொண்டாள்.

ஓ.. மனோகர் அப்பா சாகும் போது எங்கம்மா குணசுந்தரிய ஏமாத்தின டாக்டர் பெயர் சொன்னாரே.. ராம்மோகன்னு.. அந்த ராம்மோகன் அடிச்ச பத்திரிகை இதானா.. என்று புரிய, அதை வெறுப்போடு கிழிக்கப் போனாள்.

ஆனால் என்ன தோன்றியதோ.. அதை கிழிக்காமல் பத்திரமாக வைத்தாள்.

இந்த பத்திரிகை எப்டி இங்க வந்தது.. ஒரு வேளை இவங்களுக்கு எங்கம்மாவ பத்தி தெரிஞ்சிருக்குமோ.. என்று நினைத்துக் கொண்டே அந்த பத்திரிகையை எடுத்துப் போய் ரேணுகாவிடம் காட்டி விவரம் கேட்டாள்.

"அம்மா.. இது யாருதுமா.. உங்களுதா.. ஆனா பேர் வேற போட்டிருக்கே.." என்று மெதுவாகக் கேட்டாள்.

"என்னுது இல்லம்மா.. இது என் ஃப்ரண்டு குணசுந்தரியோட கல்யாணப் பத்திரிகை.." என்றாள்.

ஓ.. அப்டீன்னா அம்மாவ இவங்களுக்குத் தெரியும்.. என்று தன் மனதுக்குள் குறித்துக் கொண்டாள் நிரஞ்சனா.

"இப்ப இவங்க எங்கம்மா இருக்காங்க.. இன்னமும் இவங்களோட பேசுவீங்களா.." போட்டு வாங்க முயற்சித்தாள்.

"இந்த டாக்டர் இப்ப உயிரோட இல்ல.. என் ஃப்ரண்டு உயிரோட இருக்காளா இல்லையான்னு தெரியாது.. சரியா சொல்லணும்னா இந்த கல்யாணமே நின்னு போச்சும்மா.." என்றாள் நிரஞ்சனா.

"ஐயோ.. என்ன சொல்றீங்கமா" என்று வேண்டுமென்றே கேட்டாள்.

"ஆமாம்மா.. இந்த கல்யாணம் நடக்கல.. அந்த விரக்தியில அந்த டாக்டர் தனக்குத் தானே மயக்க ஊசி போட்டுகிட்டு செத்துட்டாரு.. என் ஃப்ரண்டும் ஊர விட்டு போய்ட்டா.. அப்றம் அவ எங்க போனா.. என்ன ஆனா.. எதும் தெரியாதும்மா.." என்று சொன்னாள் ரேணுகா. அவளுடைய கண்கள் லேசாகக் கசிந்தது.

"ஓ.." என்ற நிரஞ்சனா, தன் தாயை ஏமாற்றிய அந்த டாக்டர் திருமணம் நின்ற விரக்தியில் மயக்க ஊசி போட்டு செத்தானா.. இது என்ன புதுக்கதை.. அப்ப அவன் நல்லவனா.. என்று யோசித்தாள்.

ச்கே.. கல்யாணத்துக்கு முன்னால ஒரு பொண்ண நாசம் பண்ணினவன் எப்டி நல்லவனா இருக்க முடியும்.. ஹூம்.. கடைசியில் செத்தும் தொலஞ்சானா.. வேறு எதாவது சமாளிக்க முடியாத பிரச்சனை வந்திருக்கும்.. அதான்.. அந்தாள் தனக்குத் தானே மயக்க ஊசிய போட்டுகிட்டு போய்ச் சேர்ந்துட்டான்.. என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்.

"சரிமா.. வேலைய பாரு.." என்று சொல்லிக் கொண்டே வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள் ரேணுகா.

நிரஞ்சனாவுக்கு தன் தாயைப் பற்றி தெரிந்து கொள்ள ஏதோ ஒன்று கிடைத்ததே என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு, அந்த பத்திரிகையை யாருக்கும் தெரியாமல் தன்னுடைய பையில் வைத்துக் கொண்டாள்.

வரலட்சுமியின் பிரசவ நாள் நெருங்க, அவள் ஆவலாகக் காத்திருக்கும் அவளுடைய கணவன் வந்து சேர்ந்தான்.

"வந்துட்டீங்களா பாலன்.. எங்க நீங்க வராம போய்டுவீங்களோன்னு ரொம்ப பயந்தேன்."

"என்ன செய்யம்மா.. எங்க வீட்ல உன்ன வரவே கூடாதுன்னு சொல்லி ஒரே ரகளை.. கடைசியா உங்க சொத்து எதுவும் எனக்கு வேணாம்னு சொன்னேன்.. ஒரே அடி தடி ரகளை.. கட்டி வெச்சிருந்தாங்க.. எப்டியோ அவங்க கண்ல மண்ணத் தூவிட்டு தப்பிச்சி வந்துட்டேன்.." என்று வருத்தத்துடன் கூறினான் வரலட்சுமியின் கணவன் பாலன். அவனை ரேணுகாவும் வரலட்சுமியும் தேற்றினர்.

நிரஞ்சனாவுக்கு வரலட்சுமியின் கணவன் பாலனை தெரிந்திருந்தது. அவன் அவர்களின் ஊரில் மிகப் பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளை. அவனுடைய அம்மாவும் அப்பாவும் பெரிய அரசியல் பிரமுகர்கள். தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் கட்சியில் பெரும் புள்ளி. எப்போதும் தங்களைச் சுற்றி பத்து பேரை வைத்துக் கொண்டு திரிபவர்கள்.

ஒரு சாதாரண நர்சின் மகளை, அதுவும் கூன் முதுகோடு காலும் சூம்பிப் போய் இருக்கும் ஒரு ஊனமுற்ற பெண்ணைத் தன் மருமகளாக ஏற்றுக் கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை.

அதனால் அவளை விரட்டியடிப்பதில் குறியாய் இருந்தனர்.

அவளை மகன் அங்கிருந்து காப்பாற்றி அனுப்பி விட்டான் என்று அவன் மேல் கோபமாக இருந்தனர். ஆனால் இப்போது மகனைத் தாங்களே தப்பிக்க வைத்து அவனைத் தொடர்ந்து வந்து இந்த நொண்டிப் பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர். அது புரியாமல் அவன் தன் மனைவியைப் பார்க்க வந்திருக்கிறான்.

அரசியல் பலமும் பண பலமும் கொண்டவர்கள் வீட்டுப் பிள்ளை ஒருவனா இப்படி உயிருக்குப் பயந்து ஓடி வருகிறான் என்று நிரஞ்சனாவுக்கு வியப்பாக இருந்தது.

பணம் இருந்தா எந்த பிரச்சனையும் வராது.. எல்லாம் சரியாகிடும்னு நெனச்சேன்.. இந்தாள் என்னடான்னா அவ்ளோம் பெரிய பணக்காரன்.. எதுக்கு இப்டி கஷ்டப்படறான்.. ஆச்சர்யமா இருக்கு என்று நினைத்துக் கொண்டாள்.

அன்று மாலையே வரலட்சுமிக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்தை ரேணுகாவேதான் அந்த வீட்டிலேயே பார்த்தாள்.

அவர்கள் அனைவரும் குழந்தை பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டிருக்க, பாலனின் சகோதரர்கள்.. வரலட்சுமியையும் பிறந்த குழந்தையையும் விட்டு பாலனை பிரித்து அங்கிருந்து அழைத்துப் போக வந்துவிட்டனர்.

அவர்கள் வருவதை தெரு முனையிலேயே தெரிந்து கொண்ட மணி வேகமாக வீட்டுக்கு ஓடி வந்து சொல்ல, பிறந்த குழந்தையை நிரஞ்சனாவின் கையில் கொடுத்த வரலட்சுமி,

"உன்னால மட்டும்தான் என் குழந்தைய காப்பாத்த முடியும் நிரஞ்சனா.. ப்ளீஸ்.. அவங்க என்னை இனிமே உயிரோட விட மாட்டாங்க.. எப்டியாவது மதுரைல இருக்கற எஸ் என் ஹாஸ்பிடல் (SN HOSPITAL) டீன் எஸ் டி. ராஜ் (SD Raj) கிட்ட என் குழந்தைய ஒப்படைச்சிடு.. ப்ளீஸ்.. என் குழந்தைய காப்பாத்து.." என்று மன்றாடினாள்.

"ஐயோ.. என்னக்கா.. நா எப்டி.." என்று நிரஞ்சனா பதற,

"ஆமா நிரஞ்சனா.. ப்ளீஸ்.. ராஜா சார் கிட்ட இந்த குழந்தைய ஒப்படைச்சிடு.. இனிமே எது வந்தாலும் அவரு பாத்துக்கட்டும்.. ப்ளீஸ் ம்மா.." என்று ரேணுகாவும் கூறினாள்.

பாலன் என்ன சொல்வது என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான்.

அவர்கள் பெரிய சத்தத்துடன் வருவது கேட்க,

"ஏம்மா பொண்ணு.. அதான் அத்த சொல்றாங்கல்ல.. போம்மா.. குழந்தைய தூக்கிட்டு போ.. என் குழந்தைய அந்த பாவிங்க கிட்டேந்து காப்பாத்தும்மா.." என்றான் மன்றாடலுடன்.

நிரஞ்சனா தயங்கி நிற்க, ரேணுகா மணியையும் தங்கத்தையும் அவளுடன் போகச் சொன்னாள்.

"மணி.. நிரஞ்சனாவ ராஜா சார் கிட்ட கூட்டிட்டு போ.. நீ இல்லன்னா இவ யார்ன்னு அவருக்கு தெரியாது.. போப்பா.. இங்கேந்து போங்க.." என்றாள்.

நிரஞ்சனா வேறு வழியின்றி குழந்தைக்கு மட்டும் சில துவாலைகளை எடுத்துத் தன் பையில் வைத்துக் கொண்டாள். ஞாபகமாக தன் தாய் தந்தையின் கல்யாணப் பத்திரிகையையும் எடுத்து தன் பையில் வைத்துக் கொண்டாள். அங்கிருந்து வேகமாக வெளியேற முயற்சிக்க அதற்குள் பாலனின் சகோதரர்கள் வீட்டுக்குள் நுழைந்தனர்.

அதனால் மணி, நிரஞ்சனாவையும் பிறந்த குழந்தையையும் அவுட் ஹவுசிற்கு அழைத்துச் சென்று குளியலறையில் அமரவைத்துவிட்டு துணைக்கு தன் மனைவியையும் அமர வைத்து உள் பக்கமாகத் தாழிட்டுக் கொள்ளச் சொன்னான்.

பாலனின் சகோதரர்கள், பாலனின் வலது முழங்காலில் நன்றாக அடித்துக் காயம் செய்து மயக்கமடையச் செய்து அவனைத் தூக்கிப் போய் தங்களுடைய வாகனத்தில் படுக்க வைத்தனர்.

அடுத்ததாக வரலட்சுமியின் தலையில் அடிக்க, அவள் அப்போதே தன் உயிரை விட்டாள்.

ரேணுகாவின் தலையிலும் ஓங்கி அடிக்க அவள் அப்படியே மயங்கிச் சரிந்தாள்.

"எங்க அந்த டிரைவர் பய.. அவந்தான் இந்த கூனிக்கு பக்க வாத்தியம்.. அவனப்புடி.. அவங்கிட்டதான் குழந்த இருக்கணும்.." என்று கறுவிக் கொண்டே வீடு முழுதும் தேடி அவுட் ஹவுசிற்கு வந்தனர்.

அங்கே பதுங்கியிருந்த மணியைப் பார்த்து அவன் கழுத்தைப் பிடித்துக் கேட்க, அவன் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி சாதித்தான்.

"அண்ணே.. இந்த பாத்ரூம்பு உள் பக்கமா பூட்டிருக்குண்ணே.." ஒரு அல்லக்கை குரல் கொடுத்தான்.

"கதவ ஒடடா.." என்றான் பாலனின் தம்பி.

"ஐயோ.. வேணாங்க.. எம்பொஞ்சாதி குளிக்கிது.." என்று கூறி அவர்களைத் தடுத்தான் மணி.

அப்போது குளித்து விட்டு வருவது போல தங்கம் மார்பு வரை பாவாடையைக் கட்டிக் கொண்டு, பூந்துவாலையால் தன் மேனியைப் போர்த்திக் கொண்டு, தலை முதல் கால் வரை சொட்ட சொட்ட நனைந்த நிலையில் குளியலறையிலிருந்து வெளியே வந்தாள்.

அவளைப் பார்த்தவர்கள் அதிர்ந்தாலும், உடனே குளியலறையை எட்டிப் பார்த்தனர். அங்கே யாருமில்லாததைப் பார்த்தவர்கள் ஏமாற்றத்துடன் மணியின் பக்கம் திரும்பினார்கள்.

வெளியில் நின்றிருந்தவர்களைப் பார்த்து பயப்படுவதைப் போல நடுங்கிக் கொண்டே,

"யா.. யார்.. நீங்கல்லாம்.. என் மா.. மாமா.. மாமா.. எங்க.." என்றாள்.

"ஐய.. ப்பெ.. உம் மாமன்.. இங்கதான் இருக்கான்.." என்று கூறிவிட்டு மணியிடம் வந்தனர்.

"டேய்.. மரியாதையா சொல்லிடு.. அந்தக் குழந்தை எங்க.. சொல்லுடா.."

"நெஜமாவே எனக்கு தெரியாதுங்க.." என்றான் மணி. அவனுமே நிரஞ்சனா அங்கே இல்லாததை நினைத்து குழம்பினான்.

"எங்க போனாலும் விட மாட்டோம்டா.. அத எங்க கையால கொன்னு போட்டாதான் நிம்மதி.." என்று சொல்லிக் கொண்டே அவர்கள் மீண்டும் அந்த வீடு முழுதும் தேடிவிட்டு அங்கிருந்து கிளம்ப, ரேணுகாவின் வீட்டிலிருந்து மூன்று வீடு தள்ளி இருக்கும் ஒரு வீட்டிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.

மணியும் தங்கமும் அதிர்ந்தனர்.

"ஏய்.. அந்த குழந்தைதானே அது.." என்று அவர்கள் மணியை மிரட்ட,

அவனோ இல்லை என்று சாதித்தான்.

பாலனின் சகோதரர்கள் அந்த குழந்தையின் சத்தம் வந்த வீட்டுக்குள் சென்று பார்க்க, நிரஞ்சனா பிரவித்த பெண் போல படுத்துக் கொண்டு தன் முந்தாணையால் குழந்தையை மூடிக் கொண்டிருந்தாள்.

அந்த வீட்டிலிருந்தவர்கள் அவர்களை அடித்து விரட்டினர்.

"யார் வீட்ல வந்து உங்க அதிகாரத்த காட்றீங்க.. இவ எங்க வீட்டு பொண்ணு.. எங்க மருமக.. இப்பதான் பாவம்.. பிரசவமாகியிருக்கு.. நீங்க பாட்டுக்கு திறந்த வீட்ல நாய் நுழையிற மாதிரி நுழையிறீங்க.. போங்க.. போங்க இங்கேந்து.."என்று சொல்லி விரட்டினர்.

"டேய்.. வாங்கடா.. அந்த குழந்தையால இனிமே நமக்கு எந்த பிரச்சனையும் வராது.. அவ அம்மாவும் செத்திட்டா.. அந்த கிழவியும் செத்திட்டா.. அந்த குழந்தைக்கு அப்பன அடையாளம் தெரியப் போறதில்ல.. பாலனாலயும் தன் குழந்தைய இனிமே கண்டு பிடிக்க முடியாது.. வாங்க.. பாலன் கால் ஒடஞ்சிருக்கு.. அத சரி பண்ணுவோம்.. இல்லன்னா அவன் காலம் முழுக்க நொண்டியாகிடுவான்.. வாங்க போலாம்.." என்று சொல்லிக் கொண்டே தங்கள் வாகனத்தை கிளம்பிக் கொண்டு அங்கிருந்து சென்று மறைந்தனர்.

அவர்கள் போய் விட்டார்கள் என்று உறுதியான பின், அந்த வீட்டிலிருந்தவர்களுக்கு நிரஞ்சனா நன்றி கூறினாள்.

"சமயத்தில உதவி செய்தீங்க.. ரொம்ப நன்றிங்க.."

"இதுல என்னம்மா இருக்கு.. யார் எவர்ன்னே தெரியாத பொண்ணு.. நீயே இந்த குழந்தைய காப்பாத்தணும்னு இவ்ளோ ரிஸ்க் எடுக்கற.. ரொம்ப வருஷமா ரேணுகாவ தெரியும்.. அவளுக்காக இதக் கூட செய்ய மாட்டோமா.. இந்தா.. இந்த பணத்த வெச்சிக்க.. பத்திரமா போம்மா.. குழந்தைய காப்பாத்து.. போ.." என்று சொல்லி அவளுடைய கையில் கொஞ்சம் பணத்தை திணித்து அவளை பத்திரமாக அனுப்பினார்கள்.

அதற்குள் அங்கு ஓடி வந்த மணியும் தங்கமும், நிரஞ்சனாவும் குழந்தையும் பத்திரமாக இருப்பதைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

"ஐயா.. வரலட்சுமிம்மா.." என்று மணி அழுதான்.

"ஒண்ணும் சொல்றதுக்கில்ல மணி.. ரேணுகா எப்டி இருக்கா.."

"அம்மாவுக்கு லேசா மூச்சு இருக்குன்னு நெனக்கிறேன்.." என்றாள் தங்கம்.

"மணி.. ரேணுகாவ நாங்க பாத்துக்கறோம்.. முதல்ல குழந்தைய காப்பாத்து.. அவனுங்க போற மாதிரி போக்கு காட்டிட்டு திரும்பி வந்தாலும் வரலாம்.. ஓடுங்க.. ம்.. போங்க.." என்றார் அந்த பக்கத்து வீட்டு பெரியவர்.

மணியும் தங்கமும் நிரஞ்சனாவையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு மதுரை வந்து சேர்ந்தனர்.

அங்கு சென்று வரலட்சுமி கூறிய அந்த மருத்துவமனையின் டீனைப் பார்க்கச் சென்ற போது அவர் வெளிநாடு சென்றிருப்பதாகத் தகவல் கிடைத்தது.

"ஐயோ.. இப்ப என்ன செய்யறது.." என்று அவர்கள் தவித்துக் கொண்டு நிற்கையில் தேவகி மணியைப் பார்த்துவிட்டு அவனருகில் வந்தாள்.

"ஏய்.. மணி.. நீ எங்க இங்க.. வரலட்சுமி வீட்ல வேலைய விட்டுட்டியா.." என்று கேட்டாள்.

தேவகி வரலட்சுமியின் நெருங்கிய தோழியின் தமக்கை. அவளைப்பற்றி நன்கறிந்த மணி, அவளிடம் நடந்ததைக் கூறி டீனைப் பார்க்க வந்திருப்பதாகக் கூற,

"அடப்பாவமே.. ஒனக்கு விஷயமே தெரியாதா.. அந்த டீனுக்கு கொஞ்ச நாளா ஒடம்பு சரியில்ல.. இங்க வெச்சி வைத்தியம் பாத்துகிட்டா.. ஹாஸ்பிடலுக்கு கெட்ட பேர் வரும்னு வைத்தியம் பாத்துக்கதான் அந்தாள் வெளிநாடு போயிருக்கான்.." என்றாள்.

"அவன் எப்ப வருவானோ.. பொழச்சி வருவானோ மாட்டானோ.." என்று வேறு சொன்னாள்.

"இப்ப நா என்ன செய்வேன்.." என்று நிரஞ்சனா கேட்க,

"நீ ஏம்மா இவ்ளோ கஷ்டப்படற.. இந்தக் குழந்தைய அநாதை ஆசிரமத்தில சேர்த்துட்டு நீ உன் பொழப்ப பாரு.." என்றாள் தேவகி.

"ஐயோ.. அது தப்பு.. வரலட்சுமி அக்கா என்ன நம்பி ஒரு பொறுப்ப குடுத்திருக்காங்க.. அத என் தலைய அடமானம் வெச்சாவது செஞ்சி முடிப்பேங்க.." என்றாள் நிரஞ்சனா.

"ம்.. உன் தலையெழுத்து அதுவா இருந்த என்ன செய்ய.." என்று நகர்ந்தவளை பிடித்துக் கொண்டு கேட்டாள் நிரஞ்சனா.

"எனக்கு ஏதாச்சும் வேல பாத்து குடுங்க.. ப்ளீஸ்.. அந்த டீன் வர வரைக்கும் நா இங்கியே இருந்து அவர் வந்ததும் அவர் கிட்ட இந்த குழந்தைய ஒப்படைச்சிட்டு அப்றம் நா என் வழியில போறேன்.. அது வரை உதவி செய்ங்க.. ப்ளீஸ்.." என்று கெஞ்சினாள்.

தேவகி தயங்க, மணியும் தங்கமும் தேவகியிடம் நிரஞ்சனாவுக்காகப் பரிந்து பேச, சரி என்று தேவகி ஒப்புக் கொண்டு தன் அதிகாரத்துக்கு உட்பட்டு அந்த பால்வாடியில் நிரஞ்சனாவுக்கு கதை சொல்லும் வேலையைக் கொடுத்து அவள் தங்குவதற்கு ஒரு குடிசையையும் காட்டினாள்.

அதன் பின் அவளுடைய வாழ்க்கை தேவகியின் கண்காணிப்பில் என்று ஆனது.

*****************

"ஒரு நாள் மணியண்ணனும் தங்கமும் என்ன பாக்க வந்திருந்தாங்க.. அத எதேச்சையா பாலன் சாரோட தம்பி பாத்துட்டார். அதனாலதான் என்ன அங்கேந்து தேவகி டீச்சர் சென்னைக்கு அவங்களோட மாமா வீட்டுக்கு அனுப்புனாரு.. அப்பதான் நீங்க என்ன இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க..

அன்னிக்கு பொடவ வாங்க மார்கெட் போனோம்ல.. அங்க வெச்சி என்ன பாத்தவன் அந்த பாலன் சாரோட தம்பியோட ஆளுங்கள்ல ஒருத்தன்தான்.. என்கிட்ட குழந்தை எங்கன்னு கேட்டுதான் என் கழுத்தை பிடிச்சிட்டிருந்தான்.." என்று நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறி முடித்தாள் நிரஞ்சனா.

தமிழும் சொக்கலிங்கமும் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர்.

ஏனெனில் நிரஞ்சனாவுக்குத் தெரியாத பல ரகசியங்கள் அவர்கள் இருவருக்கும் தானே தெரியும்!



அப்படி என்ன ரகசியங்கள்? அடுத்தடுத்த அத்தியாயங்களில்..







- தொடரும்....
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அன்னபூரணி தண்டபாணி டியர்
 
Last edited:
அருமையான பதிவு
என்ன என்ன ரகசியமோ
 
Top