Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

2. Ivan Vasam Vaaraayo!

Advertisement

Annapurani Dhandapani

Well-known member
Member
Sorry Friends! Konjam late agiduchu! Next epi correctah vandhudum! here comes the 2nd epi!



2. இவன் வசம் வாராயோ!



அழைப்புமணிச் சத்தம் கேட்டு கதவைத் திறந்த கயல்விழி தன் வீட்டு வாசலில் நின்றிருந்த நெடியவனைப் பார்த்து ஆச்சர்யத்துடன் புன்னகைத்து வரவேற்றாள்.

"ஹே! தமிழ்! எவ்ளோ நாளாச்சு உன்ன பாத்து! வா! வா! உள்ள வா!" என்று கூறி அவன் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள்!

"அதெல்லாம் இருக்கட்டும்! நீ வெச்சிருக்கற டப்பா வண்டிய உன்னையே ஓட்டாதன்னு நா கத்திட்டு கெடக்கறேன்.. நீ என்னடான்னா அத பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு வாடகைக்கு விட்டு சம்பாதிக்கறியா? எங்க உன் புருசன்? அவன் வேல வெட்டிக்கு எதும் போகறதில்லையா?" என்று படபடவென பொரிந்தான் தமிழ் என்று கயல்விழியால் அழைக்கப்பட்ட அந்த நெடியவன்!

"டேய்! வந்ததும் வராததுமா என் மண்டைய ஏண்டா உருட்டற?" என்றபடியே அங்கு வந்தான் கயல்விழியின் கணவன் முகிலன்.

"அப்ப கன்ஃபர்ம்டா வேலைக்கு போறதில்ல.. அப்டிதான?" என்று தமிழ் நக்கலாகக் கேட்டு, முகிலனின் கையால் தன் முதுகில் சில பல மொத்துகளை இலவசமாக வாங்கிக் கொண்டான்!

"ஏய்! பாவி! கூடப் பொறந்த அண்ணன ஒம்புருசன் போட்டு இப்டி அடிக்கறான்.. பாத்துட்டு சும்மா நிக்கறியே.. நீல்லாம் ஒரு தங்கச்சியா.." என்று அலறினான் தமிழ் என்று அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்வாணன்!

அவளோ இவர்கள் அடித்துக் கொள்வதைப் பார்த்து சிரித்தபடியே சமையலறைக்குச் சென்று காபி போட்டு எடுத்து வந்தாள்!

"சரி! சரி! இந்தா! காபி குடி! ஆமா! பஸ்ஸில தான வந்த.. பல்லு வௌக்கினியா?" என்று கயல்விழி காபி கோப்பையை அவனருகே கொண்டு போய்விட்டு திரும்பவும் கையை இழுத்துக் கொண்டே தன் அண்ணனைக் கேட்க, தமிழ் தன் தலையில் அடித்துக் கொண்டான்!

"மச்சி.. டோட்டல் டேமேஜ்!" என்று கூறி சிரித்தான் முகிலன்!

"என்னை என்ன உம் புருசன் மாதிரின்னு நெனச்சியா? பல்லெல்லாம் நேத்தே வௌக்கியாச்சு! நீ காபியக் குடு!" என்று தன் தங்கை கணவரை வாரியபடியே காபியை வாங்கிக் கொண்டான் தமிழ்!

இதையும் கேட்டு சிரித்தாள் கயல்விழி.

"ஏண்டீ? உங்கண்ணன் என்னப் பாத்து வேலைக்கு போக மாட்டானா.. பல்லு வௌக்க மாட்டானான்னு கேணத்தனமா கேள்வி கேட்டு நக்கலடிக்கறான்.. பாத்துட்டு பல்லிளிக்கற.. என்ன நக்கலா?" என்று மனைவியைப் பார்த்து முகிலன் கோபமாகக் கேட்க, அதற்கும் சிரித்துக் கொண்டே உள்ளே சென்றாள் கயல்விழி!

"என்னடா உன் தங்கை! சூடு சொரணையே கிடையாதாடா அவளுக்கு?" என்று தமிழைப் பார்த்து கேட்க,

"எங்க வீட்ல இருந்த வரைக்கும் அவளுக்கு சூடு சூலாயுதம்.. வெக்கம் வேலாயுதம் எல்லாம் இருந்துச்சு.. உங்க வீட்டுக்கு எப்ப அனுப்பினோமோ அப்பவே அவள விட்டு அதெல்லாம் போயிருச்சுடா.." என்றான் தமிழ்!

இப்போது முகிலன் தன் தலையில் அடித்துக் கொண்டான்!

"யேய் கயலு! நா கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லல.. உன் ஓட்ட வண்டிய எதுக்கு பக்கத்து வீட்டு பொண்ணுக்கெல்லாம் ஓட்டறதுக்கு குடுக்கற.. சரி! குடுத்ததுதான் குடுத்த.. என்ன மாதிரி யாராவது பலசாலிக்கு குடுக்கறதுதானே.. இஸ்கூல் படிக்கற மாதிரி ஒரு ஓமக்குச்சிக்கு குடுத்திருக்க.. அந்த ஓமக்குச்சியால உன் ஓட்ட வண்டிய ஸ்டார்ட் பண்ண முடியல.. பேலன்ஸ் பண்ண முடியல.. ஸ்டேண்ட் போட முடியல.. அதுவும் ஹெவி ட்ராஃபிக் இருக்கற உங்க ஊர் மார்கெட் வரைக்கும் எடுத்துட்டு போயிருக்கு.. அது எங்கியாவது வண்டிய போட்டுகிட்டு விழுந்து வெச்சிருந்தா எவன் பதில் சொல்றதுக்கு.. அது கிட்ட லைசன்ஸ் இருக்கோ இல்லியோ.." என்று படபடவென மீண்டும் பொரிந்தான்!

"டேய்! பக்கத்திலதான்.. ஓட்டிப் பாத்துட்டு தரேன்னு சொன்னா.. சரின்னு குடுத்தேன்.. இதுக்கு போய் இப்டி குதிக்கறியே.. ஆனா.. அவ ஒண்ணும் ஸ்கூல் படிக்கற பொண்ணு இல்ல! பெரிய பொண்ணுதான்! அதும் கல்யாணம் ஆனவ.."

"ஆமா.. ஆமா.. பாத்தேன்.." என்று முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு தெளிவாக முணுமுணுக்க.. அவன் முகம் போன போக்கை கவனித்துவிட்டு,

"டேய்.. சோண முத்தா.. போச்சா.." என்று சத்தமாகக் கூறி சிரித்தான் முகிலன்!

தமிழ் அவனை கோபமாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்து அது முடியாமல் போக, கூடச் சேர்ந்து சிரித்தான்!

கயல்விழி இவர்களுடைய சிரிப்பில் எதுவும் புரியாமல் தன் அண்ணனையும் கணவனையும் மாறி மாறிப் பார்த்து என்னவென்று கேட்க,

"ஹையோ.. ஹையோ.. கயல்! உங்கண்ணன் செம்ம பல்ப்பு வாங்கிட்டு வந்திருக்காண்டீ.. இந்த சந்தோசத்த நா இப்ப கொண்டாடணுமே... எதாவது பண்ணனுமே..." என்று பரபரத்தான்!

"என்ன முகில் சொல்றீங்க? தெளிவா சொல்லுங்க!" என்று மறுபடியும் கேட்டாள் கயல்!

"இன்னுமா உனக்கு புரியல! உங்கண்ணன் எதிர் வீட்டு பொண்ண எல்லா ஆங்கிள்லயும் வளைச்சி வளைச்சி சைட்டு அடிச்சிட்டு கடைசியா அவ கல்யாணம் ஆனவன்னு தெரிஞ்சு தலைய தொங்க போட்டுகிட்டு வந்திருக்காண்டீ..." என்று விம் பார் போட்டு விளக்கிச் சொல்லிவிட்டு மீண்டும் பெருங்குரலில் சிரித்தான்!

"நா ஒண்ணும் அவள எல்லா ஆங்கிள்லயும் பாக்கல.. மூஞ்சிய மட்டும்தான் பார்த்தேன்!" என்று முணுமுணுத்தான் தமிழ்!

கயல் தன் அண்ணனை விந்தையாகப் பார்த்து என்ன இதெல்லாம் என்பது போல தன் கைகளால் சைகை செய்ய,

"ஆமா.. அவ யெல்லோ துப்பட்டா போட்டிருந்தா.. அவ துப்பட்டாவும் அவ கழுத்தில இருந்த தாலியும் ஒரே கலர்ல மேச்சிங் மேச்சிங்கா இருந்ததால மொதல்ல கவனிக்கல.." என்று தன் தவறை நியாயப்படுத்தினான்!

"சோ.. அப்றம்தான் அவ மாற்றான் தோட்டத்து மல்லிகைப்பூன்னு தெரிஞ்சுதாக்கும்.." என்று சொல்லி அவன் தங்கை கயல்விழியும் தன் கணவனுடன் சேர்ந்து சிரிக்க,

"யேய்! அடங்குடீ.. புருசனோட சேர்ந்து என்ன கலாய்க்கறியே.. உனக்கு வெக்கமயில்ல.." என்று தமிழ் கேட்க,

"அதான் இவர கல்யாணம் பண்ணிட்டு வந்ததும் எல்லாம் போயிடுச்சுன்னு நீயே சொல்லிட்டியே.." என்று மேலும் சிரிக்க,

"அப்டி சொல்லுடீ என் ராசாத்தி!" என்று முகில் தன் மனைவியின் கன்னத்தில் முத்தம் பதிக்க,

தமிழ் தன் தலையில் அடித்துக் கொண்டான்!

"கருமம்! கருமம்! டேய்! உன் ரொமான்செல்லாம் தனியா வெச்சிக்க மாட்டியா? இங்கியே இப்டி பப்ளிக்காவா நடத்துவ.." என்று தமிழ் கேட்க,

"ஒழுங்கா பேசு மேன்! இது என் வீடு! இவ என் பொண்டாட்டி! ரெண்டுமே முழுசா என்னோட ப்ரைவேட் ப்ராப்பர்டி! என் வீட்ல என் பொண்டாட்டியோட கொஞ்சிட்டிருக்கும் போது நீதான் இங்க அத்து மீறி நுழைஞ்சிருக்க.." என்று சொன்னான் முகிலன்!

இதற்கும் கயல்விழி சிரித்தாள்.

"என்னை கலாய்க்கறதுல ரெண்டு பேரும் சரியான ஜோடிதான்! சந்தோசமா இருங்க.." என்று முகத்தை கோணலாக வைத்துக் கொண்டு தமிழ் கூறினான்!

"விடு மச்சி.. நீ என்னை வாரி வுடறதும்.. நா உன்னை வாரி வுடறதும்.. இன்னிக்கு நேத்திக்கா நடக்குது.. சரி! எப்டி இருக்க? என்ன திடீர்ன்னு இவ்ளோ தூரம்?" என்று தமிழின் தோளில் கைபோட்டு குசலம் விசாரித்தான் முகிலன்!

"நல்லா இருக்கேண்டா! இந்த பக்கம் ஒரு முக்கியமான வேலை! அதான் அப்டியே உன்னையும் தங்கச்சியும் என் மருமகளையும் பாத்துட்டு போலாம்னு வந்தேன்! ஆமா நீ எப்டி இருக்க? இன்னிக்கு டூட்டி இல்லயா? ஆஃபா?!" என்று பதிலுக்கு விசாரித்தான் தமிழ்!

"நாங்க எல்லாம் நல்லா இருக்கோம்! இந்த வாரம் நைட் டூட்டி! அதான்! இப்பதான் வந்தேன்! தூங்கலாம்னு போகும்போதுதான் உன் குரல் கேட்டுது.."

"ஹையோ! போய் தூங்குடா.. நாம அப்றம் பேசலாம்!"

"பரவால்லடா! நாளைக்கு ஆஃப்தான்! டைம் வேற ஆயிடுச்சு.. இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் தங்கச்சி சமைச்சி முடிச்சிடுவா.. சாப்பிட்டுட்டு அப்றம் தூங்கிக்கலாம்!" என்றான் முகிலன்!

அப்போது பக்கத்து அறையிலிருந்து தூக்கக் கண்களுடன் எழுந்து வந்தாள் முகிலன் - கயல்விழி தம்பதியின் ஒன்பது மாதம் நிரம்பிய ஒரே மகள், முத்தழகி!

கன்னம் குழியச் சிரித்தபடி கொலுசுச் சத்தத்துடன் பாதி தவழ்ந்தும் பாதி தளிர் நடை போட்டு நடந்தும் வந்தவள் நேராகச் சென்று முகிலனின் கால்களைக் கட்டிக் கொள்ள,

"செல்லக்குட்டி! எழுந்துட்டீங்களா... வாங்க.. வாங்க.. உங்கள பாக்க யாரு வந்திருக்காங்கன்னு பாருங்க..." என்று அவளைத் தூக்கி செல்லம் கொஞ்சி முத்தமிட்டுவிட்டு தன் மைதுனனிடம் நீட்ட,

"டேய்! நெஜமாவே இன்னும் பல்லு வௌக்கல.. குளிக்கலடா.. பஸ்ல வந்தது.. வேணாம்! குழந்தைக்கு இன்ஃபெக்ஷன் ஆகிடும்! குளிச்சிட்டு வந்து கொஞ்சறேன்..." என்று முகிலனிடம் மறுத்தவன், குழந்தையைப் பார்த்து,

"அழகம்மா.. மாமா அழுக்கா இருக்கேண்டா செல்லம். குளிச்சிட்டு வந்துடறேன்.. நீயும் நானும் வெளையாடுவோமாம்.. சரியா.." என்று தன் தலையை ஆட்டி ஆட்டி சொல்ல, அது புரிந்தது போல தானும் தலையை ஆட்டி ஆட்டி சிரித்தது குழந்தை!

"ஐயைய.. மாமா அயிக்கு மூட்டையாம்டா.." என்று சொல்லி முகிலன் சிரிக்க,

"அயிக்கு மூட்டதான் போடா.." என்று தானும் சிரித்தபடியே கூறிவிட்டு தன் பையிலிருந்து பூந்துவாலையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தான் தமிழ்.

முகிலன் மகளைக் கொஞ்சிக் கொண்டே மனைவியிடம் வந்தான்!

"கயல்! பாப்பா முழிச்சிக்கிட்டா! இங்க என்ன பண்ணனும்னு சொல்லு! நா பாத்துக்கறேன்! இவளுக்கு எதாச்சும் குடும்மா!" என்று கூறினான்!

"எல்லாம் முடிச்சிட்டேங்க! நல்ல வேளை.. அண்ணன் குக்கர் வெக்கிறதுக்கு முன்ன வந்திச்சி.. அவனுக்கும் சேர்த்தே சாதம் வெச்சிட்டேன்! மூணு விசில் வந்ததும் கேஸை அணைச்சிடுங்க!" என்று சொல்லிக் கொண்டே குழந்தைக்கு வேக வைத்த காய்கறியை மசித்து கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு குழந்தையை வாங்கிக் கொண்டு அறையின் பால்கனிக்கு சென்று வேடிக்கை காட்டியபடியே குட்டி ஸ்பூனால் ஊட்டத் தொடங்கினாள்!

முகிலனின் குடும்பம் செல்வச் செழிப்பானது! முகிலனின் தந்தை ஈஸ்வர பாண்டியும் தமிழ்வாணனின் தாயார் மதுரம்மாளும் அண்ணன் தங்கை!

ஈஸ்வர பாண்டிக்கு படிப்பின் மீது அவ்வளவாக நாட்டம் இருந்ததில்லை! அவன் ஒன்றாம் வகுப்பு தாண்டுவதே பெரும்பாடாக இருக்க, அவன் படிப்புக்கு இரண்டாம் வகுப்போடு முழுக்கு போட்டு விட்டான்!

ஏராளமான சொத்தும் வேலை செய்ய ஆட்களும் இருந்ததால் அவனுடைய படிப்பு என்ற நல்ல விஷயம் அவனுடைய குடும்பத்தாருக்கு பெரிய விஷயமாகத் தெரியவில்லை!

ஆனால் அவனுடைய தங்கை மதுரம், இயற்கையிலேயே மிகுந்த அறிவும் புத்திசாலித்தனமும் நிறைந்தவளாக இருந்ததால் பள்ளியிறுதி வரை படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றாள்! அதன் பின்னர் பெண்களை படிக்க வைப்பது அவர்கள் குடும்பத்தில் ஏற்றுக் கொள்ளாத ஒன்றாய் இருந்ததால் அவளுடைய மேற்படிப்பு ஆசை கனவாகவே கலைந்து போனது!

மேற்கொண்டு படிக்க முடியாவிட்டாலும் தங்கள் பண்ணையின் வரவு செலவு கணக்குகள் பார்ப்பது, தங்கள் பகுதி பிள்ளைகளுக்கு இலவசமாக ட்யூஷன் எடுப்பது, இதனுடன் சேர்த்து, கைவேலைகள் செய்து வீட்டை அலங்கரிப்பது, வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வது என்று எந்நேரமும் தன்னை உற்சாகமாக வைத்திருந்தாள்! பண்ணையில் வேலை செய்பவரிடமும் வீட்டுக்கு வரும் பெரியவர்களிடமும் மரியாதையுடன் நடந்து கொள்வதனால் எல்லாருக்கும் அவளை மிகவும் பிடிக்கும்! அதுவும் அவளுடைய அண்ணன் ஈஸ்வர பாண்டிக்கு தங்கையின் மீது கொள்ளைப் பிரியம்! தங்கையின் புத்திசாலித்தனம் குறித்து தனிப் பெருமை எப்போதும் உண்டு!

இப்படி எல்லாருக்கும் பிடித்த பெண்ணாய் இருக்கும் மதுரமோ, தங்கள் பண்ணையில் வேலை பார்க்க வந்த சொக்கலிங்கத்தை விரும்பினாள்!

சொக்கலிங்கம் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக, கல்லூரி முதலாண்டு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பண்ணை வேலைக்கு வந்தான்!

"ஏன் படிப்ப நிறுத்தினீங்க?" என்று மதுரம் அக்கரையுடன் வினவ,

"அப்பா அம்மா ரெண்டு பேரும் ஒரு ஆக்சிடென்ட்ல தவறிட்டாங்க! என்னை ஆதரிக்க சொந்த பந்தங்களுக்கு மனசில்ல! வயிறுன்னு ஒண்ணு இருக்கே! அத நிறைக்கறதுதான் இப்ப எனக்கிருக்கற பெரிய பொறுப்பு! ஆனா பிச்சையெடுக்க மனசில்ல! அதான் வேற வழியில்லாம பண்ணை வேலைக்கு வந்தேன்!"

"உங்க படிப்ப தொடர உங்களுக்கு உதவி செய்தா படிப்பீங்களா?" மதுரம் கேட்டாள்!

"ஆனா.. எப்டி.. காலேஜுக்கும் போய்கிட்டு.. இங்கயும் எப்டி வேலை பண்ணுவேன்.." என்று தயக்கமாகக் கேட்டான் சொக்கலிங்கம்!

"இப்பதான் ஏதோ வீட்ல இருந்தபடியே படிக்கற மாதிரி வசதில்லாம் வந்திருக்காமே.. அத பத்தி விசாரிங்க.. பகல் நேரத்தில பண்ணையில வேலை செய்துட்டு ராத்திரியில படிங்க! உங்க படிப்புக்கு நா பணம் கட்ட ஏற்பாடு செய்றேன்!" என்று கூறி மதுரம் அவன் படிப்பைத் தொடர உதவ, அவனும் உற்சாகமாய் தன் படிப்பைத் தொடர்ந்தான்!

மதுரம் அவனுடைய புத்தகங்களை வாங்கி அதைப் படித்து குறிப்புகள் எடுத்துக் கொடுத்து அவன் எளிதாகப் படிப்பதற்கு உதவி செய்தாள்!

அவளுடைய உதவியினால் அவனும் தன் பட்டப்படிப்பில் நல்ல மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றான்!

அவர்களுக்குள் படிப்பு சம்மந்தமாக அடிக்கடி சந்திப்புகள் நிகழ, அது நட்பாக மலர்ந்து காதலாக முகிழ்ந்தது!

ஒரே இனமாயிருந்தாலும் சொக்கலிங்கம் பெற்றவர்கள், சொந்த பந்தம் யாருமில்லாத அநாதையாய், சொந்த வீடு, நிலம் போன்ற சொத்துக்கள் எதுவுமில்லாத ஏழையாய் இருந்ததனால் அவளுடைய விருப்பம் அவளுடைய குடும்பத்தாரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை!

ஆனால் அவளுடைய அண்ணன் தன்னுடைய குடும்பத்துக்கு உரிய வகையில் புரிய வைத்து தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தான்!

மதுரத்தைக் கைப்பிடித்த சொக்கலிங்கம், அவள் மீது அபரிமிதமான அன்பு செலுத்தினான்! திருமணத்திற்கு முன்னரே தன் வாழ்வில் ஔியேற்றிய மதுரமே, தன் வாழ்க்கை முழுவதற்கும் வெளிச்சமாய் வந்துவிட்டதை எண்ணி எண்ணி மகிழ்ந்தான்!

ஊரார் முன் தேவதையாய் வளைய வந்தவளை தன் கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்ற வேண்டும்; அதே நேரத்தில் அவளுடைய குடும்பத்தார் முன்னிலையில் எப்போதும் அவள் ராணியாகவேதான் இருக்க வேண்டும் என்பதற்காக தன் பண்ணை வேலையை துறந்து விட்டு சொந்தமாக காய்கறிக் கடை ஒன்று ஆரம்பிக்க, அவளுடைய அண்ணன் தன் மாப்பிள்ளைக்கு பக்க பலமாக நின்று அவன் முன்னேற பெரிதும் உதவினான்!

இதனிடையே ஈஸ்வர பாண்டிக்கு பெரிய செல்வந்தரின் வீட்டுப் பெண்ணான வளர்மதியுடன் திருமணம் இனிதே நடைபெற்றது!

வளர்மதி மூன்றாம் வகுப்பைக் கூட தாண்டவில்லையென்றாலும் தன் கணவனை விட ஒரு வகுப்பு அதிகம் படித்தவள் என்பதாலும், தன் செல்வச் செழிப்பாலும் தலைக்கனம் மிகுந்திருக்க, புகுந்த வீட்டுக்குள் வந்ததுமே தன் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கிவிட்டாள்! ஆனால் தன் கணவனிடம் மட்டும் அன்பும் மரியாதையும் வைத்திருந்தாள்! அதே நேரத்தில் தன் நாத்தனார் மதுரத்தையும் அவளுடைய கணவனையும் கண்டாலே வெறுப்பை காட்டினாள்!

ஆனால் ஈஸ்வர பாண்டி தன் குணத்திலிருந்து மாறாமல் எப்போதும் தன் தங்கையையும் தங்கையின் கணவனையும் ஆதரித்தபடிதான் இருந்தான்!

சொக்கலிங்கத்தின் அயராத உழைப்பினால் அவனுடைய பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக உயரத் தொடங்க, ஆரம்பத்தில் முகம் சுளுக்கிய ஊராரும் உற்றாரும் இப்போது அவர்களின் வளர்ச்சியை வியந்து பார்க்கத் தொடங்கினர்! சிலர் பொறாமையுடனும் பார்த்தார்கள் எனலாம்! மதுரம் திருமணமாகி கிட்டதட்ட இரண்டாண்டுகளுக்குப் பின் கருவுற்றாள்! சொக்கலிங்கம் ஆனந்தக் கூத்தாடினான்! மனைவியை அலுங்காமல் குலுங்காமல் பார்த்துக் கொண்டான்!

கருவுற்றிருக்கும் மனைவியிடம், உன் விருப்பம் என்னவென்று கேட்டு அதை நிறைவேற்ற ஆவலாய் இருப்பதாக சொக்கலிங்கம் சொல்ல, அவளும் குழந்தை பிறந்த பின் தன் விருப்பத்தை சொல்வதாய்ச் சொன்னாள்! அவனும் அது என்னவென்றாலும் நிறைவேற்றுவதாய் அவளிடம் வாக்கு கொடுத்தான்!

அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்க, அதற்கு தமிழ்வாணன் என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்!

இதனிடையே வளர்மதியும் கருவுற்றாள்! அவளுக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது! அதற்கு முகிலன் என்று பெயரிட்டனர்!

இரு குழந்தைகளுக்கும் மூன்று மாதமே வயது வித்தியாசம் என்பதால் இருவரும் ஒன்றாக வளர்ந்தனர்!

வளர்மதிக்கு மதுரத்தைப் பிடிக்கவில்லையென்றாலும் அவளை ஒதுக்கவில்லை; ஆதலால் தமிழ்வாணனும் முகிலனும் ஒன்றாக விளையாடுவதை / வளர்வதை அவள் தடுக்கவில்லை!

குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் கழித்து மதுரத்திடம் அவளுடைய விருப்பம் என்னவென்று மீண்டும் சொக்கலிங்கம் கேட்க, தன் மேற்படிப்பு கனவு பற்றி தயங்கித் தயங்கி மதுரம் கூறினாள்! இதைக் கேட்ட அடுத்த நொடியே,

"இவ்வளவுதான? இதுக்கா இவ்ளோ தயங்கின? உன்ன நா படிக்க வெக்கறேன்!" என்று சொக்கலிங்கம் முகம் மலரக் கூறி அவளை அடுத்த ஊரிலிருந்த கல்லூரியில் சேர்த்து படிக்கவும் வைத்தான்!

ஒரு பெண் படிப்பதே பெரிது எனக் கூறும் ஊரில், அவள் பள்ளியிறுதி வரை படித்ததே பெரிய விஷயம் என்றிருக்க, திருமணமாகி குழந்தையும் பெற்ற பின் அவளுக்கு கல்லூரிப்படிப்பு எதற்கு என அவ்வூர் மக்களும் அவளுடைய குடும்பத்தினரும் எதிர்த்தனர்!

ஆனால் சொக்கலிங்கமோ பெண்களுக்கு படிப்புதான் முதல் சொத்து என்று படிப்பின் அவசியத்தைப் பற்றி எடுத்துக் கூறி அதற்கு நானும் என் மனைவியுமே முன்னுதாரணமாகத் திகழ்வோம் என்று தன் முடிவில் உறுதியாக நின்றான்!

இதனால் சொக்கலிங்கத்துக்கும் மதுரத்தின் அண்ணன் ஈஸ்வர பாண்டிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதுவே அவர்களுக்குள் பிரிவு ஏற்படக் காரணமாகிவிட்டது!

இது சொக்கலிங்கத்தின் தொழில் வரை பாதிக்க அவனுடைய வருமானம் குறையத் தொடங்கியது!

ஆனால் என்ன பிரச்சனை வந்தாலும் என் மனைவியின் கல்விக் கனவை நிறைவேற்றியே தீருவேன் என்ற தன் முடிவிலிருந்து சொக்கலிங்கம் கடைசி வரை மாறவேயில்லை! அதை அவன் நிறைவேற்றியும் முடித்தான்!
 
மதுரம் தன் கணவனின் அசைக்க முடியாத அன்பினாலும் ஆதரவினாலும் கல்லூரிப் படிப்பை முடித்து பட்டம் வாங்கினாள்! சொக்கலிங்கத்துக்கு பெருமையாக இருந்தது!

தன் படிப்பினால் தன் கணவனின் தொழிலில் ஏற்பட்ட தொய்வினை சரி செய்யும் விதமாக அவள் வேலைக்குச் செல்ல முடிவெடுக்க,

"இது மட்டும் வேணாம் மதுரம்! வீட்டு பொம்பளைய வேலைக்கு அனுப்பி, அது கொண்டு வர வருமானத்தில நா சாப்பிடணுமா?" என்று சொக்கலிங்கம் மறுக்க,

"என்ன மாமா? நீங்களே இப்டிலாம் சொல்லலாமா? வீட்டு பொம்பளைங்களை படிக்க விடாம செய்றதுக்கும் படிச்சப்றம் சும்மா இருக்க செய்யறதுக்கும் என்ன வித்தியாசம்! உங்க கஷ்ட நஷ்டத்தில தோள் குடுக்கதானே நானும் என் படிப்பும்! படிக்க வெக்கறதுக்கு முன்னுதாரணமா இருந்த நாமளே பொண்ணுங்களை வேலைக்கு அனுப்பறதுக்கும் முன்னுதாரணமா இருப்போம்! சரின்னு சொல்லுங்க மாமா!" என்று எடுத்துக் கூறி அவனை சம்மதிக்க வைத்தாள்!

அவனும் மனம் தெளிந்து அவளை வேலைக்குச் செல்ல அனுமதித்தான்!

அவள் தான் பயின்ற பள்ளியிலேயே ஆசிரியையாகச் சேரந்தாள்! ஆரம்பத்தில் அவள் வேலைக்குச் செல்வதை எதிர்த்த ஊர் மக்கள், அவள் அங்கு ஆசிரியையாக இருப்பதாலேயே தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்தனர்!

அந்த நேரத்தில் வளர்மதியின் சொந்தம் என்று கூறிக் கொண்டு ஒரு புல்லுருவி ஈஸ்வர பாண்டியின் மாளிகைக்குள் நுழைந்து அவனுடைய வீட்டை புதுப்பிப்பதாய் சொல்லி, சொத்துக்களை அபகரிக்கத் திட்டமிட, இது ஏதேச்சையாக மதுரத்தின் காதுகளுக்கு எட்டியது!

சரியான சமயத்தில் அண்ணன் வீட்டுக்குள் புயலாய் நுழைந்த மதுரம், அந்த சொந்தக்காரனின் ஏமாற்று வேலைகளையும் அவன் தயாரித்த பத்திரங்களையும் அபகரித்து உண்மையை வளர்மதிக்கும் ஈஸ்வர பாண்டிக்கும் எடுத்துக் கூறினாள்.

"அண்ணே! இவர நம்பாத! இது உன் வீட்ட மராமத்து பண்ணறதுக்கான கான்ட்ராக்ட்டு பத்திரம் இல்ல! இவர் உங்க சொத்து எல்லாத்தையும் தன் பேருக்கு எழுதி வெச்சிகிட்டு அதுல உன்னிய கையெழுத்து போட சொல்றாரு! உன்னையும் அண்ணியையும் ஏமாத்தறதுக்காக இந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்காருண்ணே!" என்று கூறி பத்திரத்தில் இருந்ததைப் படித்துக்காட்ட, ஈஸ்வர பாண்டியும் வளர்மதியும் ஆடிப் போய்விட்டார்கள்!

வளர்மதி தன் சொந்தக்காரனை உடனடியாக அடித்து விரட்டினாள்! தன் நாத்தனாரிடம் மனமாற மன்னிப்பு கேட்டு அவளிடம் அன்பு செலுத்தத் தொடங்கினாள்!

ஈஸ்வர பாண்டியோ ஒரு படி மேலே போய், வளர்மதி கல்வி கற்றே ஆக வேண்டும்; அதுவும் தன் தங்கையிடம்தான் அவள் படிக்க வேண்டும் என்று உத்தரவிட்டான்!

"இனிமேல் போய் எனக்கெதுக்குங்க படிப்பு?" என்று அவள் மறுக்க,

"இன்னிக்கு நடந்தத கவனிச்சல்ல! இன்னிக்கு தங்கச்சி வந்து காப்பாத்திச்சு! நாளைக்கே வேற யாராவது வந்தாங்கன்னா! எல்லார் கிட்டேந்தும் எப்பவும் தங்கச்சியால காப்பாத்த முடியுமா? இன்னிக்கு நம்ம வீடு! நாளைக்கு இதே ஆளு உன் பொறந்த வீட்டுல உங்கம்மா அத்தாச்சிய ஏமாத்த மாட்டான்னு என்ன நிச்சயம்! அங்கெல்லாம் தங்கச்சியா வரும்! ஒரு தப்பு நடந்தா அதிலிருந்து ஒரு பாடத்த கத்துக்கணும்! நாம மட்டும் படிச்சிருந்தா அந்தாளு இப்டி நம்மள ஏமாத்தணும்னு நெனச்சிருப்பானா? இது வரைக்கும் நாம படிக்காம இருந்தது தப்பில்ல! ஆனா இந்த தப்புக்கு அப்றமும் நாம படிக்காம இருந்தா அது தான் தப்பு! அதனால நீ படிக்கணும்! நீ மட்டுமில்ல! நானும் படிக்கணும்! இனிமே நானும் படிப்பேன்!" என்று கூறி அவள் படிப்பதை உறுதி செய்தான்! தானும் படிப்பதற்கு உறுதி பூண்டான்!

அதன் பிறகு வாழ்க்கை அவர்களுக்கு தெளிந்த நீரோடையாய்ச் செல்ல, மதுரமும் வளர்மதியும் சகோதரிகளாய் பழக, ஈஸ்வர பாண்டியும் சொக்கலிங்கமும் நண்பர்களாய் மாறிப் போனார்கள்! தமிழ்வாணனும் முகிலனும் உடன்பிறவாத சகோதரர்களாய் வளர்ந்தனர்! மதுரம் மீண்டும் கருவுற்று கயல்விழியைப் பெற்றெடுத்தாள்!

கயல்விழி தன் அன்னையைப் போன்றே அழகிலும் அறிவிலும் படுசுட்டியாய் வளர்ந்து, ஆங்கில இலக்கியத்தில் பட்ட மேற்படிப்பு படித்து முடித்து ஆசிரியப் பணிக்குச் செல்ல ஆரம்பித்தாள்!

அத்தை மகளுக்கு மாமன் மகன் என்ற எழுதாத சட்டப்படி முகிலனிடம் கயல்விழி தான் உம்பொண்டாட்டி என்று சொல்லியே வளர்க்கப்பட, அதுவே நிஜமும் ஆனது!

முகிலன் வளர்ந்து நன்றாகப் படித்து பெரியவனானதும் தமிழக அரசின் வணிக வரித்துறையில் வேலை கிடைத்தது! வேலை கிடைத்த கையோடு கயல்விழியைத் திருமணமும் செய்து கொண்டுவிட்டான்!

இதோ, அவர்களின் அன்புக்குச் சாட்சியாக ஒன்பது மாதக் குழந்தை முத்தழகி, அவர்களுடைய வாழ்வில் வசந்தம் சேர்த்துக் கொண்டிருக்கிறாள்!

முகிலன் தற்போது வேலை நிமித்தம் சிருங்காரச் சென்னையில் தாம்பரம் அருகே ஒரு பெரிய அடுக்கு மாடிக் குடியிருப்பில் தன் மனைவியுடன் குடியிருக்கிறான்! வணிகர்களின் சரக்குந்துகளை (Lorry) சோதனை செய்யும் சோதனைச் சாவடியில் (Check Post) தான் அவனுக்கு இப்போது வேலை என்பதால் இரவு நேரப் பணிதான் கடந்த ஆறு மாதங்களாக பார்த்து வருகிறான்!

தமிழ்வாணனும் தன் தங்கையைப் போன்றே ஆங்கில இலக்கியத்தில் பட்ட மேற்படிப்பு படித்துவிட்டு, மேற்கொண்டு புலனாய்வு இதழியல் (investigative journalism) படித்து முடித்து இந்தியாவின் முதன்மையான ஆங்கில செய்தித்தாள் நிறுவனம் ஒன்றில் நிருபராகப் பணியாற்றுகிறான்!

நிருபராகப் பணியாற்றுவதால் ஊர் ஊராகச் சுற்றும் வேலை என்பதால் நிரந்தரமாக எந்த ஊரிலும் தங்காமல் எங்கே யார் வீடு அருகில் இருக்கிறதோ அங்கே செல்வான்! அல்லது இருக்கவே இருக்கிறது ஹோட்டல்களும் லாட்ஜுகளும்!

இப்படி நாடோடி வாழ்க்கை நடத்துகிறான் தமிழ்!

சிறியவர்கள் எல்லாம் வளர்ந்து தங்கள் வாழ்க்கையைப் பார்க்க வேறு வேறு இடங்களுக்குச் சென்று விட, பெரியவர்கள் எல்லாம் தங்கள் பிறந்த ஊரை விட்டு வர மனமில்லாமல் சொந்த ஊரிலேயே இருக்கிறார்கள்!

தன் வீட்டு அழைப்பு மணி சத்தம் கேட்டு முகிலன் சென்று கதவைத் திறந்தான்!

"கயலக்கா!" கயல்விழியைக் கூவி அழைத்தபடியே உள்ளே வந்த எதிர்வீட்டு நிரஞ்சனா, முகிலனைப் பார்த்து விட்டு,

"முகிலண்ணா! இந்தாங்க சாவி! அக்காகிட்ட வண்டி வாங்கிட்டு போனேனா.. வண்டி ரெண்டு வாட்டி ஸ்டார்ட் ஆகாம மக்கர் பண்ணிச்சா.. அப்றம் பக்கத்தில இருந்தவங்க ஸ்டார்ட் பண்ணி குடுத்தாங்க.. அப்ப ஒரு லூசு அது என்னோட வண்டின்னு நெனச்சிகிட்டு வண்டி கண்டிஷன்ல இல்ல.. சர்வீசுக்கு குடுன்னு சொல்லிச்சு.." என்று சொல்லி கடகடவென்று சிரித்தாள்!

உள்ளறையில் உடை மாற்றிக் கொண்டிருந்த தமிழுக்கு இதைக் கேட்டு கோபம் வர,

உனக்கு வண்டிய ஸ்டார்ட் பண்ணி குடுத்தேன்ல.. என்ன சொல்லணும்.. இருடீ.. தோ வரேன்.. என்று மனதில் நினைத்தபடியே வீட்டுக் கூடத்துக்கு வந்தான் தமிழ்!

தன் பாட்டில் சிரித்துக் கொண்டிருந்த நிரஞ்சனா, அங்கு வந்த தமிழைப் பார்த்துவிட்டு அவள் அங்கிருந்து ஓட எத்தனிக்க,

"ஏய்.. இங்க வா.." என்று அதட்டலாய் அழைத்தான் தமிழ்!

"ம்.." என்று குரல் தந்தியடிக்க அவள் நின்றாள்!

"ஆமா.. அது என்ன இவன முகிலண்ணான்னு கூப்பிட்டு அவள கயலக்கான்னு கூப்பிடற? அண்ணனும் அக்காவும் கல்யாணம் பண்ணிப்பாங்க?" என்று கோபமாகக் கேட்க,

"அது.. அது.." என்று அவள் தடுமாறினாள்!

"அண்ணன் மனைவிய எப்டி கூப்பிடணும்?"

"அ.. அ.. அண்ணின்னு.." என்றாள் கம்மிய குரலில்!

"ம்.. இனிமே கயல அண்ணின்னுதான் கூப்பிடணும்.. புரிதா!" என்று மிரட்டலாகச் சொன்னான் தமிழ்!

"ச.. சரிங்க.." என்றாள்.

"எங்க சொல்லு பாக்கலாம்! இவன் யாரு?" என்று முகிலனைக் காட்டி தமிழ் கேட்க,

"மு.. முகிலண்ணா!" என்றாள் அவள்.

"ம்! இவ யாரு?" என்று இப்போது தன் தங்கையைக் காட்டிக் கேட்டான் தமிழ்!

"க.. கயலக்.. கயல் அண்ணி.." என்று கூறினாள் அவள்!

"ம்.. குட்! எப்பவும் இப்டிதான் கூப்பிடணும் புரிதா?" என்று திரும்பவும் அவன் மிரட்ட, அவள் சரியென்று தலையாட்டியபடியே ஓடிப்போனாள்!

முகிலன் தமிழை விநோதமாகப் பார்க்க, தமிழோ குறும்பாகச் சிரித்தான்!

"டேய்! என்னடா நடக்குது இங்க?" என்று முகிலன் கேட்க,

"சொல்ல மாட்டேனே?!" என்று குறும்பு கொப்பளிக்க கூறிவிட்டு உள்ளே போனான் தமிழ்!

"ஏழு கழுத வயசானப்றம் இவனுக்கு ஒரு சைட்டு மாட்டியிருக்கு.. அதுவும் தேறாத கேஸு.. பாவம்.. பொழச்சுப் போ.." என்றான் முகிலன் நக்கலாக!

ஏண்டா சொல்ல மாட்ட? எங்கம்மா உனக்காக பொறுப்பா ஒரு பொண்ண பெத்து உன் கையில பிடிச்சி குடுத்தாங்க! நீ சைட்டு அடிக்கற தொல்லை எதுவுமில்லாம நிம்மதியா எந்தங்கச்சிய கட்டிகிட்டு வந்திட்ட.. அந்த பொறுப்பு என் மாமனுக்கில்லையே.. என்னடா.. மாப்ள தனியா இருக்கானே! ஒரு பொண்ண பெத்து குடுக்கணும்னு தோணிச்சா.. சரி! அத வுடு! பெத்துக்கதான் இல்ல! மாப்ள வளந்துட்டானே! ஒரு பாெண்ண பாத்து கட்டி வெக்கணும்னாவது தோணிச்சா அந்த மனுசனுக்கு.. அதுவுமில்ல.. சரி! அந்தாளுக்குதான் வயசாச்சி.. மூளை மழுங்கிப் போச்சி.. நீ இருக்கியே.. எனக்கு ஒரு பொண்ணு பாக்கணும்னு உனக்காவது தோணிச்சா.. பெரிசா வந்துட்டான் பேச..

இது அத்தனையும் தமிழின் மைண்ட் வாய்சேதான்! இது மட்டும் முகிலனின் காதில் கேட்டிருந்தால் தமிழை துரத்தித் துரத்தி அடித்திருப்பான்! ஏனெனில் தமிழுக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்த பின்தான் கயல்விழியை கல்யாணம் செய்து கொள்வேன் என்று நிபந்தனை இட்டான் முகிலன்! ஆனால் தமிழோ பார்க்கும் பெண் யாரையும் பிடிக்கவில்லை என்று நழுவி நழுவி இரண்டு ஆண்டுகளை கடத்தினான்! அதன் பிறகே, இது வேலைக்காகாது என்று முகிலன் கயல்விழியைத் திருமணம் செய்து கொண்டான்!

இன்னும் தமிழ் தனக்குப் பார்க்கும் பெண் அனைவரையும் பிடிக்கவில்லை என்று சொல்லி மறுத்தபடிதான் இருக்கிறான்!

அவன் தலையில் இந்த எதிர் வீட்டு (மாற்றான் தோட்டத்து) மல்லிக்கைப் பூவின் பெயர் எழுதியிருக்கும் போது அவன் எப்படி வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வான்! என்ன நான் சொல்றது.... ?????



- தொடரும்....
 
Top