Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

19. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
உங்களுக்கான தீர்வ நீங்க தான் தேடிக் கண்டுபிடிக்கணும். ம்ம் சீக்கிரம் தேடுங்க நாதன்.

தீர்வு எங்கு இருக்கிறது எப்படி இருக்கிறது என ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அதை நாதன் தான் கண்டுபிடிக்க வேண்டும். வேறு வழி எதுவும் இல்லை.

நிமிர்ந்து நிற்கும் மரங்களில், அடர்ந்து கிடக்கும் முள் செடிகளில், இண்டு இடுக்கு என ஒவ்வொரு இடமாக தடவித் தடவி தேடிக் கொண்டிருந்தார் நாதன். ம்ம்கூம் நேரம் தான் கடந்து கொண்டிருந்தது. கையில் வித்தியாசமாக எந்த பொருளும் கிடைக்கவில்லை.

கைகளை தரையில் தடவி தடவி தேடியதில் கைகளிலும் இப்போது இரத்தம் வடிந்தது. சோர்ந்து போய் ஒரு பாறையில் அமர்ந்த நாதன் முகத்தில் அடித்த படியே கதறி அழ, குமரவேல் தான் தட்டிக் கொடுத்து மீண்டும் ஊக்கப்படுத்தினார்.

தளராதீங்க நாதன், முயற்சி பண்ணுங்க கண்டிப்பா ஏதாவது வழிக் கிடைக்கும்.

புறங்கையால் கண்களைத் துடைத்தவர், மீண்டும் ஒவ்வொரு இடமாக கூர்ந்து கவனித்தார். நேரம் சூரிய அஸ்தமனத்தையும் நெருங்கியது.

சூரியன் மலைகளின் பின்னே மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்க, அப்போது தான் ஒன்றை அறிந்தார் நாதன்.

சாமி.... சாமி இங்க வாங்க...

என்ன நாதன் கண்டுபிடிச்சிட்டீங்களா... ஆர்வமாய் அவரும் ஓடி வந்தார்.

எனக்கு சரியா தெரியல சாமி. ஆனா இதை பாருங்க.

அப்போது தான் குமாரவேலும் பார்த்தார்.

சூரியன் மலையின் பின் புறம் மறைந்து கொண்டிருப்பதால் அங்கு சூரிய வெளிச்சம் இல்லாதிருக்க, ஒரே ஒரு இடத்தில் மட்டும் சூரிய வெளிச்சம் பளிர் என வந்து எதிரே இருக்கும் பாறைகளில் விழுந்து கொண்டிருந்தது.

குனிந்து, நிமிர்ந்து அண்ணாந்து என பார்த்த நாதன் சாமி சாமி இங்க பாருங்க, இங்க ஒரு பாதை இருக்கு.

ஆமா நாதன். நீங்க கண்டுபிடிச்சுடீங்க. சீக்கிரம் வாங்க உள்ள போகலாம்.

முன்னே இருந்த செடி கொடிகளை உடைக்காமல் மெதுவாக உள்ளே அடி எடுத்து வைத்தனர். நிமிர்ந்து நடக்கும் அளவு எல்லாம் இல்லை அந்த பாதை. கூன் விழுந்து நடப்பவர்களை போல, உடலை குறுக்கி தான் நடந்தாக வேண்டும். கிட்டத்தட்ட பத்து நிமிடம் வரை அப்படியே குனிந்து கொண்டு செல்ல, இப்போது இருவருக்குமே முடியவில்லை. அப்படியே முட்டி மோதி தரையினில் அமர்ந்து விட்டனர்.

சாமி இது தான் நான் தேடி வந்த தீர்வுக்கான வழியா. சரியாத்தான் நாம போய்கிட்டு இருக்கோமா.

தெரியலயே நாதன். போய் தான் பாப்போமே. இல்லனா மறுபடியும் முயற்சி பண்ணுவோம்.

அதுவும் சரி தான் சாமி.

சிறிது நேர அசுவாசத்திற்குப் பிறகு மீண்டும் நடக்க இப்போது அங்கு பாதை சற்று நிமிர்ந்து நடப்பது போல இருந்தது. இப்போது அரைமணி நேரம் கடந்திருக்க வெளிச்சம் முற்றிலும் மறைந்து இருள் சூழந்து போகும் பாதை கண்களுக்கு புலப்படாமல் போனது.

சாமி இப்போ என்ன சாமி பண்ணுறது. போக வேண்டிய பாதை கண்ணுக்கே தெரியாத அளவு கும்மிருட்டா இருக்கே...

இருங்க நாதன் என்கிட்ட போன் இருக்கு. அதை வச்சு எப்படியாவது முன்னேறுவோம். இல்லயினா மறுபடியும் மெதுவாகவே வந்த வழியாவே கிளம்பிடலாம். இப்போதைக்கு நமக்கு இருக்குற உதவி இந்த சின்ன போன் மட்டும் தான். வாங்க அப்படியே நடக்கலாம்.

இன்னும் சிறிது தூரம் நடக்க, இருவரும் அப்படியே ஆணி அடித்தார்ப் போல் நின்று விட்டனர்.

ஏனெனில் அவர்களுக்கு முன் ஏராளமான சர்பங்கள் ஜீவசமாதி அடைந்து அப்படியே படமெடுத்த நிலையில் ஆங்காங்கே இருக்க, அவர்களுக்கு பின்னிருந்து ஓர் கம்பீரமான குரல் அவர்களை அழைத்தது.

வரவேண்டிய இடத்திற்கு தான் வந்திருக்கிறீர்கள் இருவரும். ம்ம்.. இடது புறம் திரும்பி உள்ளே நுழைந்து வாருங்கள்.

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு இடப்புறம் செல்ல, அங்கே இதுவரை இருந்ததற்கு மாறாக பளபளவென தீப ஒளியால் அந்த இடமே ஜொலித்துக் கொண்டிருந்தது.

ஆச்சரியமாக இருவரும் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டிருக்க, அந்த குகையின் மையத்தில் இவர்களையே பார்த்தபடி ஓர் சர்பம் லிங்கத்தின் திருமேனியில் அமர்ந்திருந்தது.

இப்போது வந்த சத்தம் எங்கிருந்து வந்தது என இருவரும் தேடித்தேடி பார்க்க, ஓர் சிறு சிரிப்பு சத்தம் கேட்க, அந்த சர்பம் அப்படியே ஓர் சித்த யோகியாக மாற்றம் கண்டு அவர்கள் முன் நின்றது.

இருவரும் அடுத்து வேற எதுவும் யோசிக்கவில்லை. படாரென்று அவரது காலடியில் விழுந்து வணங்கி அடிபணிந்து நின்றனர்.

அதற்கும் ஓர் சிறு சிரிப்பு மட்டுமே அவரது இதழில்.

ஆனால் அடுத்த நிமிடமே அவர் காணாமல் போக, பெரும் கோபத்தோடு மற்றொரு குரல் அவர்களை அழைத்தது. குரல் வந்த திசையை பார்க்க, வயது முதிர்ந்த பெரியவர்,

சொல் உனக்கு எப்படி அந்த பொருள் கையில் கிடைத்தது. ம்ம் உண்மையை உடைத்துச் சொல்.

ஐயா என, ஆரம்பித்து அந்த பொருள் கிடைத்தது முதல் வீட்டில் நடந்த அனைத்தையும் கூறி முடிக்க....

உன் சிறு ஆசை உன்னை எந்த அளவிற்கு ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறது என பார்த்தாயா?

ம்ம்ம்கூம்... விடாது.. அது உன்னை உயிருடன் விடாது. இன்னும் மூன்றே நாள் தான் உன் இறப்பு நடந்தே தீரும்.

ஐயா...

ம்ம்... அதுவே உன் விதி. இதில் மாற்று உபாயம் ஏதும் இல்லை. உன்னை மட்டுமல்ல உன் குலத்தையே நாசம் செய்ய காத்திருக்கிறது அது. உன்னால் அதை தடுத்து நிறுத்தவே முடியாது.

ஐயோ ஐயா... நான் செஞ்சது தப்புதான்.. அதுக்காக இவ்வளவு பெரிய தண்டனை வேண்டாம் ஐயா..
என் குடும்பத்தை எப்படியாவது காப்பாத்துங்க ஐயா.

அழுது மன்றாடினார் நாதன். பாவம் அவர் என்ன வேண்டும் என்றா அதை தேடி எடுத்து வந்தார். வினை வரும் என்று அவர் எதிர்பார்க்க வில்லை தான். ஆனால் அவரின் ஆசை தான் அந்த பொருளை அவர் கைகளால் எடுக்க வைத்தது. வேண்டாம் என்று மட்டும் விட்டு வந்திருந்தால் இவ்வளவு கஷ்டங்கள் வந்திருக்குமா?

ம்ம் எல்லாம் ஓர் காரணத்தோடு தானே நடந்து கொண்டிருக்கிறது.

பார்க்கலாம் என்ன தான் நடக்குமென்று.

ஐயா என் குடும்பத்தை காப்பாத்துங்க ஐயா... ஐயா என சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்க, அந்த பெரியவரோ,

உண்டு... வழி உண்டு ஆனால் அதை அறிவதற்கு கூட உன்னால் முடியாது.

உன்னில் பிறந்த ஒருவன் மட்டுமே அதற்கான வழியை அடைய முடியும்.

அவனே உன் குலமகன்... ம்ம் அவனுக்கான வழியை நீயே சொல்..



விடை தேடி பயணம் தொடரும்....
Prabhaas....
 
Top