Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

11. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
தனா பக்கத்தை திருப்ப தரணி நாதனின் கையெழுத்தில் அவரின் பெயரோடு தொடர்ந்திருந்தார் இரண்டாம் பக்கத்தை.

தரணி நாதனின் கூற்றாக இனி....

இதிலிருக்கும் வார்த்தைகள் அனைத்தும் நான் அடைந்த வேதனைகளின் வெளிப்பாடு. வாழும் போதே நான் அனுபவித்த நரக வேதனையின் அனுபவம்.

படத்திலும் கதைகளிலும் மட்டுமே நான் கேட்டறிந்த, பார்த்தறிந்த நிகழ்வுகள் என் வாழ்க்கையிலும் நடக்கத் தொடங்கிய போது முதலில் அதை நம்ப என் மனமே மறுத்தது. நடப்பதை எல்லாம் நான் வெளியே சொன்னால் நம்புவார்களா என்பது சந்தேகம் தான். ஏனெனில் எனக்கு நடந்த அனைத்தும் விநோதமாக தான் இருந்தது.

ஏதோ சுழலில் சிக்கிக் கொண்ட உணர்வு. வெளியே சொல்லவும் முடியாமல் பிள்ளைகளின் முன்பும் காட்டமுடியாமல் நான் அடைந்த அவஸ்தைகள் எண்ணிலடங்காதவை. எல்லாவற்றிற்கும் காரணம் அது தான். அந்த உருவம் தான். தினமும் என்னை பாடாய் படுத்தி எடுத்தது. சிக்கலில் மாட்டிக் கொண்ட நான் அதிலிருந்து வெளிவரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

எத்தனையோ கோவில்களுக்கும் சென்று வந்தேன்... ம்ம்கூம்.. எனக்கான தீர்வு கிடைக்கவில்லை. தினமும் நரக வேதனையைத் தான் அனுபவித்தேன்.

வேதனை தாங்க முடியாமல் செத்து விடலாம் என்று முடிவெடுத்தால், அந்த உருவம் என் முன் வந்து நின்று உருமும். உன் உயிர் உனக்கானது அல்ல, அது என்னுடையது. என்னுடைய உடைமையை நீ எப்படி அழிக்க நினைக்கலாம் என என்னையே சித்திரவதை செய்தது.

வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமலே நான் அந்த உருவத்திடம் கைதியாகி போனேன்.

தினமும் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டேன். பல நல்ல மனிதர்களின் நட்பு கிடைத்தது. அதில் மிகவும் நெருக்கமாக அமைந்த நண்பர் ஒருவரிடம் என் கஷ்டங்களை எல்லாம் கூறினேன்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த அவர், என் கூட வாங்க நாதன் என்று அழைத்துச் சென்ற இடம் தான் நாகர்மலை.

எனக்கான தீர்வு கிடைக்கும் என்று போக, அங்கே என்னை கண்டதுமே அந்த முதியவர் அறிந்து விட்டார் நான் எப்பேர்ப்பட்ட சிக்கலில் உள்ளேன் என்பதை...

தரணி நாதன்.... குடும்பத்தை கண்ணென நினைக்கும் உனக்கு குடும்பமே இல்லாமல் போக போகிறது. உன் வீட்டு வாரிசுகள் அனைத்தும் அந்த உருவத்திற்கே பலியாக போகிறது.

ஐயா!!!!

ம்ம் கூறு... அது உன்னிடம் எப்படி வந்து என்று மறைக்காமல் என்னிடம் கூறு தரணி நாதா... ம்ம் என அழுத்தமாக கேட்டார் அந்த பெரியவர்.
.....................

தாமரைக்குளம்...

தரணி நாதனின் குடும்பம் நல்ல வசதியான குடும்பம் தான். தரணி நாதனின் அப்பா சிங்கபெருமாள் பர்மாவில் வேலை செய்து சம்பாதித்து கட்டியது தான் இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வீடு.

வீடு பணம் என போதுமான அளவிற்கு இருக்க, தரணி நாதன் சொந்தமாக பாத்திரக் கடை வைக்க போவதாக பெருமாளிடம் கூறினார்.

அதுவும் நல்ல தொழில் தான் என நினைத்த பெருமாள் முதலீட்டை போட்டு மகனுக்கு பாத்திரக் கடையை வைத்துக் கொடுத்தார். முதலில் சிறிய அளவில் ஆரம்பித்த தரணி நாதனின் தொழில், நல்ல பொருட்கள் அதற்கேற்றார் போல் விலை என நியாயமாக இருக்க ஐந்து ஆண்டுகளில் பெயர் பெற்றுப் போனது. தொழிலில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் மகனுக்கு நல்ல குணவதியான மகாலட்சுமியை மணமுடித்து வைத்தார் பெருமாள்.

குணத்திலும் அழகிலும் சொக்க தங்கம் தான் மகா. அவருடைய தம்பி தான் வேலன். மாமனுக்கு துணையாக பாத்திரக் கடையில் உதவி செய்ய, அவரின் உழைப்பை பார்த்து அவருக்கென தனியே ஒரு கடையை ஆரம்பித்து கொடுத்தார் நாதன்.

மாமனும் மச்சானும் சேர்ந்து தொழிலை நல்ல முறையில் மேம்படுத்த, வேலனுக்கும் திருமணம் நடந்தது. அடுத்தடுத்து குழந்தைகள் பிறக்க கடைசியாக பிறந்தவன் தான் கீரத்தனன். வீட்டிற்கே செல்லப் பிள்ளை. அண்ணன்கள் அகிலனும் முகிலனும் கம்பீரமான உடல்வாகில் வசீகரமாக இருக்க, கீர்த்தனன் மெலிந்து கொஞ்சம் சோதாங்கி போல தான் இருப்பான். அதனாலேயே அண்ணன்கள் அவனை அன்பாக கவனித்துக் கொள்வார்கள்.

முதலில் சுமதியை திருக்குமரனுக்கு மணமுடித்து வைத்தார்கள். நாட்கள் அதன் போக்கில் நகர அவளுக்கும் குழந்தைகள் பிறந்தது. அதன் பிறகே அகிலனுக்கும் முகிலனுக்கும் திருமணம் நடைபெற்றது. அகிலனுக்கு நாதன் பெண் பார்த்து முடிக்க, முகிலன் காதலிப்பதாக கூறவும் அதையும் பேசி முடித்து திருமணத்தை நடத்தி வைத்தார்கள் நாதன் மகா தம்பதியினர்.

மகன்களுக்கு திருமணம் முடிந்த மறுவாரம் நாதன் எப்போதும் செல்லும் ஊர் எல்லை குளக்கரை கோவிலுக்கு சென்றிருந்தார். தாமரைக்குளம் பெயர் பெற்றுப் போனதே இந்த கோயிலாலும் குளத்தாலும் தான்.

உள்ளே அன்னையவள் அருள்தர பரந்து விரிந்து கிடக்கும் இந்த கோயில் குளத்தில் எப்போதும் தண்ணீர் வற்றவே வற்றாது. கோடையிலும் சரி மழை,குளிரிலும் சரி எப்போதும் தாமரை மலர்கள் இங்கு பூத்துக் குலுங்கும். மிகவும் ஆழமான குளம் என்பதால் பாதி வரை மட்டுமே ஆட்கள் அனுமதிக்கப்படுவர். முன்பு சொல் பேச்சு கேட்காமல் நீந்துகிறேன் என்று போனவர்கள் தாமரை கோடிகளில் மாட்டி உயிரை மாய்த்துக் கொண்டதால் இப்போது கால் நனைக்க மட்டுமே அனுமதி உள்ளது.

ஊருக்குள் நிறைய கோவில்கள் இருந்தாலும் சிறு வயதில் இருந்தே இக்கோவிலுக்கு வந்து குளக்கரையில் நேரங்களை செலவிடுவது நாதனின் வழக்கம்.

இப்போது மகன்களின் திருமண வேலை காரணமாக பல நாட்கள் வராமல் இருந்துவிட்டு, இப்போது தான் வந்திருக்கிறார். ஆனால்

இன்றைய நாள் தான் தன்னுடைய தலையெழுத்தை மட்டுமின்றி தன் குடும்பத்தின் தலையெழுத்தையும் மாற்றியமைக்க போகிறது என பாவம் அவருக்கு தெரியவில்லை.

உள்ளே சென்று அம்மனை வணங்கி வந்தவர் குளக்கரையில் அமைத்திருக்கும் சிமெண்ட் படியில் நீரில் கால்களை நனைத்த படி அமர்ந்து விட்டார். அமர்ந்திருந்தவர் சூரிய அஸ்தமனத்தில் குளம் தங்கம் போல ஜோலிப்பதை ரசனையாக பார்த்துவிட்டு எழ, அவரது காலில் வந்து மாட்டி நின்றது ஒரு பாசி படிந்த பை.

தடுமாறி நின்றவர், குனிந்து அதை காலிலிருந்து எடுத்து விட முயல, அதுவோ நன்றாக அவரின் விரல்களில் மாட்டிக் கொண்டது. சூரியன் மறைந்து இருளும் பரவிக் கொண்டிருக்க, வேறு வழியில்லாமல் காலிலேயே அதை இழுத்துக் கொண்டு நீரில்லாத படிக்கட்டில் நின்று அதை பார்த்தார். எப்படியும் அந்த பை இரண்டு மூன்று மாதங்களாக நீரில் கிடந்திருக்கும் போல, பாசி படிந்த அந்த பையின் நிலை அப்படித் தான் இருந்தது.

மீண்டும் அதை கால்களை விட்டு எடுக்க அந்த பை இரண்டாக கிழிந்து அதற்குள் இருக்கும் அந்த பொருள் அவர் முன்னே விழுந்தது.




விடை தேடி பயணம் தொடரும்....
Prabhaas....
 
Top