Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

1. விழிமயங்கும் இரவு

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
இப்போது தான் புதிதாக போடப்பட்ட நெடுஞ்சாலையின் வடக்கே மூன்று மையில் தொலைவில் இருந்த அந்த கிராமத்தின் கடைக்கோடியில் இருந்தது மக்கள் உயிர் காக்கும் பொது மருத்துவமனை. ஊரும் காட்டிற்கு அருகே என்பதால் அந்த மருத்துவமனையையும் தாண்டி வெறும் காடு காடு என்று அடர்ந்த காடு மட்டுமே. காட்டின் முன் பகுதியிலும், ஊரின் கடைசி பகுதியிலும் தான் அமையப்பட்டிருந்தது அந்த மருத்துவமனை. எல்லாவற்றிற்கும் தனித்தனியே என அறைகள் இருக்கும் பெரிய மருத்துவமனை இல்லையென்றாலும் சிறு சிறு அறைகளை கொண்ட மருத்துவமனை கட்டிடத்தின் பின் பகுதியில் தான் பிரசவ அறை ஒதுக்கப்பட்டிருந்தது.

அங்கே,

பிறந்ததிலிருந்து இப்போது அவளிருக்கும் இந்நிலை வரை தான் அனுபவித்தது முழுதும் கொடுமை கொடுமை என்று கொடுமைகள் மட்டுமே..... என்றிருக்க, இனியாவது இந்த இன்னல் வாழ்விலிருந்து விடுதலை கிடைக்குமா என்றும் காத்துக்கொண்டிருக்கிறாள் அந்த கடைசி அறையில் இறுதி மூச்சை பிடித்தபடி அவள்.

வார விடுமுறை என்பதாலும் இரவு நேரம் என்பதாலும் மருத்துவமனையில் அதிக ஆட்கள் இல்லாமல் இருக்க.... இவளின் உதவிக்கும், வலியில் துணை நிற்க வேண்டிய கணவன், உற்றார் என்று யாரும் இல்லாமல் தனி ஒருத்தியாய் தானே தன் பிரசவத்திற்காக வலியோடும் வேதனையோடும் நெடுந்தூரம் நிறைமாத சிசுவின் உயிரோடு ஓடி வந்திருந்தாள் அவள். பத்து மாதங்களாக தன் மடி நிறைந்த தன் உயிரை கையிலேந்தும் நொடிக்காக காத்திருக்காமல், இப்போதே இவ்வுலகை விட்டு சென்றால் போதுமே என்றே காத்திருக்கும் அவள் அடைந்த துன்பங்கள் குறிப்பிட்ட சொல்லில் அடங்காது என்றால் அது மிகையாகாது. அவள் செல்ல வேண்டிய இடமோ வேறு தான் ஆனால் வழி தவறி வந்தவளுக்கு பாதியிலேயே வலி கண்டிட இதோ இந்த மருத்துவமனையிலேயே தஞ்சம் அடைந்து விட்டாள். அவளின் நிலை கண்டு அங்கிருப்பவர்களும் அனுமதித்து கொள்ள..... ஒவ்வொரு நொடியும் வலி கூடிக் கொண்டே போகிறது. இந்த வலியோடும், வேதனையோடும் இப்போதே உயிர் பிரியாதா????... என் பிள்ளையும் இன்னல் அடைய வேண்டுமா என்று நினைத்து சாவிற்க்காக துடித்துக் கொண்டிருந்தாள் அம்சவேணி


இதோ அவளின் உயிரின் உதிரமும் ஜனித்து விட்டது, அழகான பெண் ரோஜா மொட்டாய்..... கையிலேந்தும் போதே கணவனின் முகம் நிழலாடியது. எப்படியாவது பிள்ளையை அந்த கூட்டத்திடமிருந்து காப்பாற்று என மனம் கூப்பாடு போட ...... வேண்டாம் என் நிலை மீண்டும் என் பெண்ணிற்கும் வேண்டாம் என்று எண்ணியவளாய் தன் நிலையையும் பொருட்படுத்தாது வெளியே செல்ல அடியெடுத்து வைக்கும் போதே வெளியே அந்த இரவு நேரத்திலும் பத்து பதினைந்து பேருக்கு மேல் ரகளை செய்து கொண்டிருக்க, பிள்ளையை கையில் ஏந்திக் கொண்டு பின் வாசல் வழியாக காட்டின் உள்ளே நுழைகிறாள் வேணி.

இன்று பௌர்ணமி என்பதால் பூமிக்கு வெளிச்சமாய் நிலவு பிரகாசமாய் ஒளிவீசிக் கொண்டிருந்தது. ஆனால் காட்டில் அது சிறு வெளிச்சமாக தான் தெரிந்தது. அந்த சிறு வெளிச்சத்திலும் காட்டின் நடுப்பகுதிவரை வந்திருந்தாள் வேணி. மனம் எப்படியும் இங்கிருந்து வெளியேறிவிட வேண்டும்.... தன் பிள்ளையை காப்பாற்றி யாரிடமாவது ஒப்படைக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவளது உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. குழந்தை பெற்ற உடலோடு அவளால் ஓடவும் முடியவில்லை... உடலில் வலி... அசதி என்று அனைத்தும் சேர, தலையின் மத்தியில் ஏதோ ஒன்றை சுண்டிவிட்டார் போல இருக்க... குழந்தையோடு அங்கேயே தொப்பென்று விழுந்தாள் வேணி. விழுந்த அசைவில் குழந்தையும் விழித்துக் கொள்ள அதன் அழுகுரல் அந்த காட்டில் இரவு வேளை என்பதால் அதிர்ந்து ஒலித்தது. அவளை துரத்தி வந்தவர்களும் சத்தத்தை கேட்டு காட்டிற்குள் நுழைந்திருக்க பாவம் அவளால் அதற்கு மேல் ஏதும் செய்ய முடியவில்லை. நகர்ந்து சென்று மரத்தின் மறைவில் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டவள், பசியோடு அழும் தன் குழந்தைக்கு பாலூட்டினாள் இறுதியாய். ஆம் தன் குழந்தைக்கு பாலூட்டி முடித்ததுமே அவள் உயிர் அவள் உடலை விட்டு பிரிந்தது. குழந்தையும் பசியாறி உறங்கிவிட.... யாருமற்ற அனாதரவாய் இறந்த அன்னையின் மடியில் துயில் கொண்டிருந்த குழந்தை கயவர்களின் கண்களுக்கு சிக்காமலே போனது கடவுளின் செயலோ என்னவோ. வேணியை தேடிவந்தவர்களும் அவ்விடத்தை கடந்து சென்றிட..... புது உலகின் விடியலும் தொடங்கியது அந்த குழந்தைக்கு.

........................................................................


சில ஆண்டுகளுக்கு பின் அதே ஊர், ஆனால் ஏராளமான மாற்றங்கள். நன்கு வளர்ச்சியடைந்த, மாநகராட்சி எல்லைக்கு உட்படுத்தப்பட்ட பலதரப்பட்ட வசதிகளை கொண்டதாக மாறியிருந்தது அந்த ஊர். முன்பு சிறிதாக இருந்த ஊர்... இப்போது பெரிதாக விரிவடைந்து அந்த நெடுஞ்சாலை ஊரின் நடுவே என்பது போல ஆனது. காடும் சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கப்பட்டு ஓரம்கட்டப்பட்டிருந்தது. நான்கு பெரும் மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள் என அனைத்தும் உருவாகியிருந்தது இந்த இடைப்பட்ட வருடங்களில்.

அந்த நான்கு பெரும் மருத்துவமனைகளில் தரத்தில் முதலிடம் வகிக்கும் மருத்துவமனையின் புதிய பொறுப்பாளர் பதவியேற்றுக் கொள்ளும் விழாவானது மருத்துவமனையின் முன்பு வெகு ஜோராக துவங்கியிருந்தது... பெரும் பெரும் பணக்காரர்களின் கார்கள் வரிசைகட்டி நிற்க.... விழாவை கண்டுகளிக்கும் முதல் வரிசையில் மேலைநாட்டு நவநாகரீக உடையில் ஏராளமான பெண்கள் அணிவகுத்து அமர்ந்திருந்தனர். அனைவரும் வசதி படைத்தவர்கள் என்பது அவர்களின் ஆடை அலங்காரங்கள் மூலமே தெரிந்தது. அவ்வளவு நேரமும் தங்களின் அலங்காரங்களை சரி செய்து கொண்டிருந்தவர்கள்.... ஆங்கிலத்தில் வரவேற்றுக் கொண்டிருந்தவர் கூறப்பட்ட அவனின் பெயரில் மயக்கும் புன்னகையை முகத்தில் பூசி ஓரே நேரத்தில் வலப்புறம் திரும்பிட.... கம்பீரமான தோற்றத்தில் மெருன் வித் சாண்டில் கலர் கோர்ட் சூட்டில் ஆளை கொள்ளும் அழகனாய், எவரையும் வீழ்த்தும் திமிரான பார்வையோடும், உதட்டில் மின்னும் சிறு சிரிப்போடும் மேடை ஏறிக் கொண்டிருந்தான் ஒருவன். அவனை பார்த்ததுமே, இவனுக்காக தான் இத்தனை அலங்காரங்கள் என்றால் அனைத்தும் சரி என்றே தோன்றியது. எல்லோருக்கும் பொதுவாக வணக்கத்தை வைத்துவிட்டு அமர்ந்த,

அவனின் பார்வையும் முதல் வரிசையில் வரிசைகட்டி அமர்ந்திருக்கும் பெண்களின் மீது தான் இருந்தது. அது என்ன விதமான பார்வை என்பது போக போக தானாகவே தெரியும்...

அதுவரை காத்திருங்கள் நாயகனின் பெயர் அறிய....



தொடரும்....... Prabhaas ???
 
Top