Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வேழம்

Advertisement

siva69

New member
Member
Hi,
நான் உங்கள் சிவா.


இந்த கதை மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.


இந்த கதை ஒரு சரித்திர நிகழ்வு.

என் மனதில் பல காலமாக அரித்துக்கொண்டிருந்த, பல நாள் என் கனவில் அடிக்கடி தோன்றும் சில நிகழ்வுகளை, முக்கியமாக அந்த கனவில் ஒரு பழைய மொட்டை மண்டபம், ஒரு போர் வீரன் கவலையுடன் அந்த மண்டபத்து தூணில் சாய்ந்து கொண்டிருக்க, அங்கே ஏதோ ஒரு மங்களகரமான நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது.

இதே எனக்கு அடிக்கடி கனவில் வந்து கொண்டிருந்தது. இதையே கொஞ்சம் Develop பண்ணி, ஒரு கதையாக கொடுக்க Try பண்ணியிருக்கேன். ஒரு Change க்கு இந்த சரித்திர நாவலை படித்து பார்க்கலாமே.

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
[email protected]

இனி கதை..
வேழம் ( யானை )

ஆண்டு கி.பி 1015
( முதல் para )..

என் பெயர் கருதிருமண்... சோழ நாட்டை சேர்ந்தவன். எனக்கு பல கலைகள், வித்தைகள் தெரியும். குறிப்பாக விலங்குகள் பாஷை அத்துப்படி, அதிலும் யானைகளை பழக்குவதில் எத்தன். எப்பேர்பட்ட யானையும் என்னிடம் பழக ஆரம்பித்தால் நான் சொல்வதை கேட்டு அப்படியே அடிபணிந்து நடக்கும்.

நான் சோழ தேசம் தஞ்சை அருகே காவிரி கரையோர கிராமம் திருமண்காட்டை சேர்ந்தவன். சிறுவயது முதலே எனக்கு வீர விளையாட்டுகளில் குறிப்பாக சிலம்பாட்டம், வாள்போர், குதிரையேற்றம் மற்றும் மற்போர் இவைகளில் அதிக நாட்டம்.

திருமணம் அதன் பின் குடும்பம்... போன்ற லௌலீக சம்பிரதாய வாழ்க்கையில் விருப்பம் இல்லாமல் என் போக்கில் யாருக்கும் எந்த வித தொந்தரவும் கொடுக்காமல் இருந்து வருகிறேன்.

இதில் என் அன்னைக்கு மிகவும் வருத்தம். தன் மகன் ... இப்படி கல்யாணம் பண்ணி கொள்ளாமல் பிரம்மச்சாரி யாக இருந்தால் யாருக்கு தான் வருத்தமிருக்காது. அவளுக்கு எப்படியாவது என் அக்காளின் மகள் அதாவது அவளின் மகள் வயிற்றுபேத்தி பொம்மியை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கொள்ளை ஆசை.

இதில் என் அக்கா இலட்சுமி க்கும் விருப்பம். என்றாவது ஒரு நாள் தன் தம்பி ஒரு படைத்தலைவன் ஆகி விடுவான், தன் மகள் மற்றும் அவள் குடும்பம் ஊரில் நல்ல கவுரவத்துடன் வாழலாம் என்று நினைத்து கொண்டிருந்தாள்.

ஆனால் நான் இதற்கெல்லாம் பிடி கொடுக்காமல் என் லட்சியத்தில் குறியாக இருந்து வந்தேன்.

அதற்காக என் கிராமத்து இளைஞர்களை எல்லாம் ஒன்று திரட்டி, அவர்களுக்கு ஆசானாக இருந்து, பயிற்சி கொடுத்து, என்னை யும் தயார் படுத்திக் கொண்டு வந்தேன்.

அதோடு நில்லாமல் நிறைய ஆக்கப்பூர்வமான பணிகளில்... வெள்ள பெருக்கு காலங்களில் ஊருக்குள் வெள்ளம் வராமல் கரைகளை பலப்படுத்துவது, கல்வி, விவசாயம், மருத்துவம் கோவில் சார்ந்த மற்றும் கிராமத்து திருவிழா போன்ற அத்தியாவசிய பணிகளில் அவர்களையும் ஈடுபடுத்தி நன்னெறி படுத்துவது போன்ற செயல்களால் எங்களுக்கு குறிப்பாக எனக்கு ஊரில் நல்ல பெயர் மற்றும் மரியாதை.

எனக்கு எப்படி யாவது எங்கள் அரசர் இராஜேந்திர சோழரின் படையில் ஒரு சிறிய குழுவிற்கு படைத்தலைவன் ஆக வேண்டும் என்ற லட்சியம்.. நாளுக்கு நாள் அந்த எண்ணம் வலுப்பெற்று வந்தது. அதற்காக நான் என்னை உரமேற்றி அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ச்சி பெற்று வருகிறேன்.

எங்களின் இந்த நல்ல செயல்களால் எங்களை பற்றிய செய்தி குறிப்பாக என்னை பற்றி செவி வழி யாக அரசருக்கும் தெரியவந்திருந்தது.

அவரிடமிருந்து என்றாவது ஒரு நாள் எப்படியாவது படையில் சேர அழைப்பு வரும் என எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்தேன்.

மேலும் எங்கள் கிராமத்தை போன்று பல கிராமங்களை உள்ளடக்கிய ஊர்களின் தலைவர் மற்றும் பத்துஆயிரம் வீரர்கள் குழுவின் படைத்தலைவர் சோமன்னா கடந்த முறை எங்கள் ஊர் திருவிழாவிற்கு வந்த போது.. என்னை தனியே அழைத்து.,

• திருமா! உன்னை பற்றி நல்ல செய்தி கள் நம் அரசருக்கு வந்து கொண்டு இருக்கிறது..

பலே.. உன்னால் எனக்கும் நல்ல பெயர்தான். அவரை சில தினங்களுக்கு முன்பு சந்தித்த போது உன்னை பற்றியும் நம்முடைய கிராமத்து இளைஞர்களை பற்றியும் என்னிடம் கேட்டு அறிந்து கொண்டார். நல்லவிதமாக சொல்லி இருக்கிறேன்.

கூடிய சீக்கிரத்தில் மேலிடத்திலிருந்து அழைப்பு வரும்.. அப்போது என்னை மறந்து விடாதே.. என்று என் தோளில் தட்டி பலமாக சிரித்தார்..

• ஆனால் காலம் ஒரு கணக்கு வைத்திருக்கும் அல்லவா.. நாட்கள் உருண்டோடி கொண்டிருந்த தருணத்தில் என் அக்காள் மகள் பொம்மி யும் என் குழுவில் ஒரு வீரன் பெயர் வடிவனும் ஒருவரை ஒருவர் ஆத்மார்த்தமாக காதலிப்பது தெரிய வந்தது..

வடிவனை நான் தனியாக கூப்பிட்டு விசாரித்ததில் .. என் மேல் உள்ள மரியாதை காரணமாக.. தயக்கத்துடன் என் கண்ணை பார்த்து பேசாமல் தலை குனிந்தபடியே இருந்தான்.

நான் வற்புறுத்தி கேட்டதில் .. ஆசானே.. நீங்கள் எனக்கு தாய்,. தந்தை மற்றும் குரு ஸ்தானத்திற்கும் மேலானவர் .. என்னை மன்னித்து விடுங்கள்..

தங்களுக்கு என்று பிறந்து , தங்களை திருமணம் செய்யவிருக்கும் பெண்ணை நான் விரும்புவது தகாது.. ஆனால் நானும் பொம்மியும் ஒருவரை ஒருவர் காதலிப்பது உண்மைதான். எங்கள் காதல் சத்தியம். என் ஆசான் நீங்கள் என்ன சொன்னாலும் அதை என் சிரசின் மேல் ஆனையாக ஏற்றுக் கொள்கிறேன். அது எந்த விதமான தண்டனை யாக இருந்தாலும் பரவாயில்லை.. என்றான்.

இனி சொல்ல என்ன இருக்கிறது என்று யோசித்து, அவனிடம் வடிவா.. உன் காதல் உண்மை என்றால் அதற்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன். எனக்கும் இந்த திருமண பந்தத்தில் அத்தனை பிரியமில்லை.

உங்கள் திருமணத்தை நான் முன்னின்று நடத்தி வைக்கிறேன். கொஞ்சம் பொறு.. காலம் கனியட்டும்.. அவசர படாதே.. என் அக்காவையும், அம்மாவை யும் முதலில் சம்மதிக்க வைக்க வேண்டும். இதில் பல பிரச்சினைகள் உள்ளன. எல்லா வற்றையும் சமாளிக்க வேண்டும்.. என்னை நம்பு.. என்று சொல்லி தேற்ற.. கண்ணீர் மல்க பல முறை நன்றி கூறி என்னிடம் விடை பெற்று சென்றான்.

• இன்று வடிவனுக்கும் பொம்மிக்கும் திருமணம்.. கிராமத்து காவல் தெய்வம் துர்க்கை அம்மன் கோவிலில்... பிரகாரத்தில் ஊர் மக்கள், பெரியவர்கள் , இரு தரப்பு சொந்த பந்தங்கள் அனைவரும் கூடியிருந்தனர்.

பிரகாரம் என்றால் மேல் கூரை இல்லாத ஒன்று.. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இப்படித்தான் இந்த பிரகாரம் இருந்து வருகிறது.

கிராமத்து மக்கள் அனைவராலும் மொட்டை பிரகாரம் , மொட்டை மண்டபம் என்று அழைக்கப்படும். பழைய கருவறை மட்டும் கற்கூரை வேய்ந்து கொஞ்சம் சிதிலமான நிலையில் இருந்தது.

அம்மனுக்கு புது சிவப்பு புடவை சார்த்தி மஞ்சள் குங்குமம் அலங்காரம் செய்து மலர் மாலைகள் அணிவித்து அந்த இடமே திவ்யமாக இருந்தது..

கருவறையில் இரு பக்கங்களிலும் சர விளக்குகள் மிகுந்த பிரகாசத்துடன் சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தன. வேல்கம்பு, ஈட்டி, வாட்கள், கேடயங்கள் இன்ன பிற போர் சாமக்கிரிகைகள் எண்ணெய் விட்டு சுத்தம் செய்யப்பட்டு அம்மன் காலடியிலும் மற்றும் இரு புறமும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வித விதமான பூக்கள், பொரி, செந்நெல் மற்றும் மஞ்சள் கலந்த அரிசியினால் அம்மனின் பல உருவங்கள் மற்றும் சேவல், சிங்கம் போன்ற உருவங்களும் வரையப்பட்டு வீரத்தை பறை சாற்றி கொண்டிருந்தன.

பெரிய மற்றும் சிறிய தாம்பாளங்களில் பல விதமான பண்டங்கள், பழங்கள், தேங்காய், மஞ்சள், வெற்றிலை மற்றும் இன்ன பிற மங்களகரமான பொருட்கள் தனித்தனியே வைக்கப்பட்டிருந்தன.

சாம்பிராணி புகை, குத்து விளக்கு மற்றும் அகல் விளக்குகளின் தீப வாசனை எல்லாம் கலந்து மனதை கிறங்க செய்து கொண்டிருந்தது.

மொட்டை பிரகாரம் கொஞ்சம் நீண்டு நல்ல அகலத்துடன் இரு பக்கமும் நீண்ட படிகளுடன் ஆறு, ஆறு கருப்புநிற கல் தூண்கள் வீதம் வரிசை யாக இருந்து அதன் மேல் குழிவான பாகத்தில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, கல் தூண்கள் மலர் மாலைகளாலும் மற்றும் மா விலை தோரணங்களாளும் அலங்கரிக்க பட்டிருந்தன.

மண்டபத்தின் கீழ் சுவர் மற்றும் கருவறையின் உள், வெளி சுவர்களும் புதிதாக சுண்ணம் அடிக்கப்பட்டு காவி வர்ணம் பட்டை பட்டையாக பூசப்பட்டிருந்தது.

அம்மன் கோவிலின் வலப்புறம் சற்று தூரத்தில் அய்யனார் கோவில் பெரிய அய்யனார் சிலைகளுடன் கம்பீரத்துடன் காணப்பட்டது.

கிராமத்து மக்கள் அவரவர் வேண்டுதலுக்கேற்ப படைத்த மண்ணினால் செய்த பெரிய சிறிய மாடு, குதிரை மற்றும் சிறுவர் சிறுமியர் போன்ற உருவ சிலைகள் சுற்றி காணப்பட்டன.

பலிபீடமும் அதைச்சுற்றி சமீபத்தில் பூசை இதர சடங்குகள் செய்ததற்கான அறிகுறிகள் தென்பட்டன.

அவ்வப்போது காற்றினால் மரத்தில் கட்டப்பட்டிருந்த மணிகளின் கிண்... கிணி ஓசை கேட்டுக்கொண்டிருந்தது.

சற்று சிறிய கிராமம் என்பதினால் அநேகமாக அனைவரும் திருமணத்திற்கு வந்திருந்தனர்.

பெண்கள் தங்கள் கூந்தலை மல்லிகை, முல்லை, கனகாம்பரம், செங்காந்தள், போன்ற விதவிதமான மலர்களால் அலங்கரித்து, கண்ணை பறிக்கும் பல விதமான அணிகலன்கள் அணிந்து, நேர்த்தியான ஒப்பனை களுடன் அந்த மண்டபத்தையே தேவலோகம் போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

பெரிய பெரிய ஜமுக்காளங்கள் மண்டபத்தின் தரையில் விரிக்கப்பட்டு வந்தவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். சில பெண்கள் குழுக்களாக அமர்ந்து பேசி சிரித்துக் கொண்டே.. இடையே பூச்சரம் கட்டிக்கொண்டும் மற்ற இதர திருமண த்திற்கு தேவையான பணிகளை செய்து கொண்டிருந்தனர்.

உள் மண்டபத்தின் ஓர் மூலையில் மங்கள வாத்தியம் இசைக்க பட்டுக்கொண்டிருந்தது. மண்டபம் பல விதமான சப்தங்களால் நிறைந்திருந்தது...

முகூர்த்ததிற்கு இன்னும் நேரம் உள்ளதால் கோவில் பூசாரி அம்மனுக்கு நைவேத்தியம் படைத்து பூஜை செய்து கொண்டிருந்தார்.

மண்டபத்தின் முன் வாசல் குலை தள்ளிய வாழை மரங்களால் கட்டபட்டு தென்னங்குருத்து, மாவிலைத் தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. முன் வாயிற் படிகள் மற்றும் அதைச்சுற்றி பல விதமான கண்கவர் கோலங்கள் போடப்பட்டிருந்தன.

மண்டபத்தில் ஆங்காங்கே தீபங்களும் எரிந்து கொண்டிருந்தது. சந்தனமும் குங்குமமும் வந்தவர்களுக்கு கொடுக்கபட்டு கொண்டிருந்தது.

கருவறையின் முன்பு திருமண நிகழ்வு க்காக மலர் பந்தல் அமைத்து பலகைகள் போடப்பட்டு குத்து விளக்கு கள் ஏற்றப்பட்டு அனைத்து ஏற்பாட்டுகளுக்கும் தயாராக இருந்தது.

பெண்களின் கேலிப்பேசுக்களுக்கும், கிண்டல்களுக்கும் குறைவில்லை, அடிக்கடி எழுந்த வெடிச்சிரிப்புகள் இன்னும் குதுகாலத்தை அதிகப்படுத்தி கொண்டிருந்தன. . சில பெண்கள் பொம்மி யை மேலும் மேலும் முடிவில்லாமல் அலங்கரித்து கொண்டே பல திருத்தங்களை செய்து கொண்டிருந்தனர். சுற்றியிருந்த இளம் பெண்களின் பரிகாசமும் கிண்டலும் பொம்மியின் கன்னங்களை அடிக்கடி சிவக்க செய்தன. .

இந்தப்பக்கம் இளந்தாரிகள் வடிவனை உண்டு இல்லை என்று ஒரு வழி பண்ணி கொண்டு இருந்தார்கள். வடிவன் புது மாப்பிள்ளை யாக புது வேஷ்டி, தலைப்பாக மற்றும் மேல் சட்டையில்லாமல் மார்பு, கை மற்றும் தோள் களில் சந்தனம் பூசப்பெற்று அங்கவஸ்த்திரத்துடன் சற்றும் பொருத்தமில்லாமல்... நண்பர்களின் கிண்டல் மற்றும் கேலி களுக்கு வெட்கப்பட்டு கொண்டு பரிதாபமாக நெளிந்து கொண்டிருந்தான்.

பொம்மி , வடிவன் இருவர் பார்வைகளும் அடிக்கடி சந்தித்து கொண்டு... உடனே விலகின.

அம்மன் கோவில் காவிரி ஆற்றின் கரையில் கொஞ்சம் உள்வாங்கி பெரிய ஆலமரத்தடியில் அமைந்திருந்தது.

கரை நெடுகிலும் ஏனைய மரங்கள் வேரூன்றி ஏகத்திற்கும் பரவி படர்ந்திருந்தன. ஆல மரத்தின் சல சலவென இலைகளின் சப்தத்தோடு பட்சிகளின் சப்தமும் கேட்ட வண்ணம் இருந்தது.

வானத்தில் ஆங்காங்கே கரு மேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக இருந்தது. புரட்டாசி மாத முன்மழை வாடைக்காற்று சுற்றி சுழன்று அடித்துக் கொண்டிருந்தது.

கதிரவன் சில நேரங்களில் மேகக் கூட்டத்திற்குள் மறைந்தும் பின் வெளி வருவதாகவும் போக்கு காட்டிக்கொண்டிருந்தான். சற்று தூரத்தில் ஆற்றின் சல சல வென்ற பிரவாகத்தின் சப்தம் திருமண மங்கள இசையை தாண்டி கேட்டு கொண்டிருந்தது.

முதல் நாள் இரவு நல்ல மழையாதலால் தெருவெல்லாம் நனைந்து ஈரமாக இருந்தது. வீதியில் ஆங்காங்கே மாட்டு வண்டி களின் சப்தமும், குதிரைகளின் கனைப்பு மற்றும் குளம்படி சப்தங்களும் கலந்து இடைவிடாது ஒலித்து கொண்டிருந்தது.

தயிர்,மோர், வெண்ணெய் மற்றும் இதர பட்சணங்கள் விற்போர் குரல்களும் கலந்து ஒலித்து கொண்டிருந்தது. தூரத்தில் கொல்லன் பட்டறையில் இரும்பை அடிக்கும் சத்தம் விட்டு விட்டு கேட்டுக் கொண்டிருந்தது.

ஒருபக்கம் மதியத்திற்கான திருமண விருந்து ஆற்றின் கரையில் ஆலமரத்தடியில் கல் அடுப்பில் தயாராகி கொண்டிருந்தது. கதம்ப சாதத்தின் மணமும் இன்ன பிற பட்சணங்களின் மணமும் மூக்கைத் துளைத்தது.

தயாராகி கொண்டிருந்த விருந்துக்கு சற்று தள்ளி பனை மரக்காட்டில் கள் விருந்து வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. இளந்தாரி களும் ஏனைய ஆண்களும் சென்று வந்த வண்ணம் இருந்தனர். என் மாணாக்கர் சிலர் எனக்கு தெரியாது என நினைத்து கள் அருந்தி விட்டு மரியாதை நிமித்தமாக கூச்சத்துடன் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்தனர்.

இதையெல்லாம் பார்த்தும் பார்க்காமலும் நான் பிரகாரத்தின் தூண் ஒன்றில் சாய்ந்த வண்ணம் ஆழ்ந்த சிந்தனையில் நின்று கொண்டிருந்தேன். என் மன ஓட்டத்தில் என் அம்மா, அக்காள், பொம்மி முக்கியமாக சோமன்னா வந்த வண்ணம் இருந்தனர். இருக்கமான முகத்துடன் அதை வெளிக்காட்ட முடியாமல் பெரும் அவஸ்த்தையில் இருந்தேன்.

• வடிவன் நண்பர்கள் சிலர் அவனை சுற்றி நின்று அவனுக்கு ஒப்பனை செய்ததோடு நில்லாமல் திருஷ்டி பொட்டு வைத்து வேடிக்கை செய்து பரிகசித்து கொண்டிருந்தனர்.

• பிரகாரம் காலியில்லாமல் ஜனங்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தினால் நிறைந்திருந்தது. மூன்று பேர்களை தவிர.. அது நான் என் அம்மா மற்றும் என் அக்காள். முதலில் என் அம்மா- தன் மகனுக்கும் பொம்மி க்கும் நடக்க வேண்டிய திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொள்ள வேண்டிய தருணத்தில் தான் ... இப்படி ஒற்றை மரமாக நின்று கொண்டிருக்கும் தன் மகன்.. இதையெல்லாம் வெளிக்காட்ட முடியாமல்.. அவஸ்தை யுடன்...

• அடுத்து என் அக்காள்... தன் மகளுக்கு எப்பாடுபட்டாவது தன் தம்பிக்கே திருமணம் செய்து முடித்து விட்டால்.. என்று நினைத்து கொண்டு இருந்த நேரத்தில்... இப்போது அது நடக்கவில்லை என்ற ... துக்கம்...

• இந்த திருமணத்திற்கு எல்லோரையும் பேசி சம்மதிக்க வைத்த எனக்கு இதையெல்லாம் தாண்டி ஒரு பெரிய பிரச்சினை சோமன்னா ரூபத்தில் காத்துக் கொண்டிருந்தது...

• பொம்மி வடிவன் திருமணம் நிச்சயமான பிறகு ஊரில் அனைவருக்கும் இந்த சந்தோஷமான செய்தியை முறைப்படி தெரிவித்த பின் அதே மகிழ்ச்சி யுடன் சோமன்னா வை பார்த்து அவர் தலைமையில் இந்த நல்நிகழ்வு நடக்க வேண்டும் என்று வேண்டி அவரை நேரடியாக சந்தித்து சம்மதிக்க வைக்க அவர் இல்லம் இல்லை .. இல்லை...அரண்மனை சென்றேன். ஆனால் அங்கே எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

• அது நல்ல நடுத்தரமான அரண்மனை. முகப்பில் வாயிற் காவலர்கள், தோட்டம், கொட்டடி அப்பால் யானை மற்றும் குதிரை லாயங்களை தாண்டி சென்று உள்ளே காவல் அனுமதி கிடைத்தபின் சிறிய காத்திருப்புக்கு பின் சோமண்ணா வந்தார்...

என்ன திருமா...
இப்போது தான் என்னை காண நேரம் கிடைத்ததா?. நானே உன்னை காண வேண்டும் என எண்ணி யிருந்தேன். நல்ல வேளை நீயே வந்து விட்டாய்.. உன் வீட்டில் திருமண விஷேசம் போல.. எல்லாம் எனக்கு செய்தி வந்தது.. என்ற படி நலம் விசாரித்தார்.

• நானும் ஆமாம் ஐயா.. தங்கள் தலைமையில் இந்த திருமணம் நடக்க வேண்டும். இன்னும் பத்து நாட்களில் நல்ல முகூர்த்தம் உள்ளது. அந்த நாளிலே திருமணம் என்று பெரியவர்கள் சேர்ந்து முடிவு செய்துள்ளோம். அதற்காகவே தங்கள் சம்மதம் வாங்க வந்தேன் என்று சொல்ல,..

• அதற்கென்ன திருமா.. கண்டிப்பாக வருகிறேன்...வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து தருகிறேன்.. இன்னொரு முக்கியமான விஷயம் ஒன்று உன்னிடம் சொல்ல வேண்டும்.. கொஞ்சம் வேட்டை மண்டபம் வரை செல்வோம் வா.. என்று என்னை நடத்திய படி ...

திருமா... என் மனதில் உள்ளதை உள்ளபடி சொல்கிறேன்.. நீ எனக்கு மிகவும் வேண்டப்பட்ட வன் தான், வீரக்குல மறவர் நாம்... நமக்கு என்று பழைய மரபுகள் உண்டு. அதன்படி நம் குலத்தில் பெண்கள் பூப்பெய்தியவுடன் அவர்களை எங்களை போன்ற பெரிய மனிதர் களின் அரண்மனை க்கு அனுப்பி வைப்பர்..

கொஞ்ச காலம் அரண்மனையில் அவர்கள் இருந்து பணிவிடை செய்து அனைத்தையும் தெரிந்து கொண்ட பிறகு நாங்கள் பார்த்து அவர்களுக்கு நேரம் வரும்போது பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைப்போம்... இது நம் கோவில் களில் வழி வழியாக நடைபெரும் தேவதாசி குல பெண்கள் சார்ந்த மரபு போன்றதுதான்.

பொம்மி உனக்கு தான் என்று இருந்த போது நான் இதை பெரிது படுத்தவில்லை. ஆனால் இப்பொழுது பொம்மி வேறு ஒருவனுக்கு மனைவி ஆகப்போகிறாள் என்று வரும் போது நம் பழைய சடங்கு சார்ந்த சம்பிரதாயங்களை புறந் தள்ளி விட முடியாது... உனக்கு எல்லாம் புரியும் என நினைக்கின்றேன்.

அதனால் நீ பொம்மி யை என் அரண்மனைக்கு நல்ல வார்த்தைகள் கூறி அனுப்பி வை. அதுவும் நான் இன்றே அலுவல் விஷயமாக தஞ்சை புரி செல்ல வேண்டியிருக்கிறது. திரும்பவும் பொம்மி யின் திருமண நாள் காலையில் வருவேன்..

அதனால் அன்று சாயங்காலம் போல் பொம்மியை என் அரண்மனை க்கு அனுப்பி விடு. இரண்டு மூன்று நாட்கள் கழித்து நான் அனுப்பி வைக்கிறேன். திருமா... இதில் தவறேதும் இல்லை.. எல்லாம் உனக்கும் தெரியும்.

நான் தஞ்சை செல்வதும் உன்னைப்பற்றி அரசரிடம் நல்ல முறையில் பேசுவதற்காக.. நல்ல வாய்ப்பு களை ஏற்படுத்தி கொடுக்க.. நீ விரும்பிய கனவு கண்ட வாழ்க்கை யை கெடுத்து கொள்ளாதே . மற்றதை அப்புறமாக பேசலாம்.. ஆனால் மறந்து விடாதே.. திருமண நாள் அன்று பொம்மி இங்கு வந்தே ஆக வேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லி சென்று விட்டார்.

• எனக்கு தலைசுற்றியது.. பூமி அப்படியே பிளந்து கொண்டு என்னை விழுங்க கூடாதா என்று தோன்றியது.. பாவம் சின்ன பெண் பொம்மி.. இவன் காம பசிக்கு இரையாக வேண்டுமா?

மகளை போன்ற ஒருத்தி யை எப்படி இந்த வாரு கேட்க முடியும்? அவனை அப்படியே என் வெறும் கைகளால் அவனுடைய கழுத்தை நெரித்து கொல்ல வேண்டும் போல் இருந்தது.

என் கையாலாகாத நிலைமை யை நினைத்து என் மீதே வெறுப்பு உண்டாயிற்று. என்ன செய்வது..

சோமன்னாவுடைய செல்வ பலம், அதிகாரம் , தஞ்சை யில் அவனுடைய செல்வாக்கு அப்படிபட்டது.. அவன் யார் மீது குற்றம் சுமத்தினாலும் முதலில் சிறைச்சாலையில் அடைப்பது உறுதி.. பின்னர் விசாரணை யில் வெளி வருவதற்குள் ஏகப்பட்டது நடந்துவிடும். நாம் சிறையில் கைதியாக இருக்கும் நேரத்தில் நம்முடைய குடும்பத்தையே நிர்மூலமாக்கி விடுவான்.

ஏழை சொல் அம்பலம் ஏறாது. இங்கு நடக்கும் அநியாயத்தை தஞ்சை யில் காது கொடுத்து கேட்க எவருக்கும் நேரமும் இல்லை தைரியமும் இல்லை.. ஏனெனில் இவன் அதிகாரம் அப்படி பட்டது.

மன்னரின் காதுக்கு கொண்டு செல்லாமல் எத்தனையோ காரியங்களை இவன் இந்த மாதிரி குறுக்கு வழியில் நடத்தி கொண்டுள்ளான். இதனை வெகு கவனத்துடன்தான் கையாள வேண்டும்.

முதலில் இங்கிருந்து புறப்பட வேண்டும்.. ஏதாவது வழி பிறக்கும்... என்று எண்ணியபடி ஊர் வந்து சேர்ந்தேன். பின் திருமண வேலையில் மூழ்கிப் போனேன். ஆனால் இந்த பிரச்சினை க்கு என்ன தீர்வு என்று மனம் அவ்வப்போது குழம்பியது..

• இதோ இன்று பொம்மிக்கும் வடிவனுக்கும் திருமணம். சோமன்னா புறப்பட்டாயிற்று என்ற செய்தி காலையிலேயே வந்து சேர்ந்தது.

வேண்டா வெறுப்பாக வரவேற்பதற்காக ஏற்பாடுகள் செய்து விட்டு நிராயுதபாணி போல் இதோ இப்போது தூணில் சாய்ந்து செய்வதறியாது நின்று கொண்டிருக்கிறேன்.

• திருமண சடங்குகள் மற்றும் மங்கள ஓசை களை தாண்டி முரசுகளும், எக்காளங்களும், துந்துபிகளின் ஆரவாரமும், மக்களின் பரபரப்பு சப்தங்களும் வரிசையாக கேட்க துவங்கின. கூடவே யானையின் பிளிரலும். இங்கிருந்து மொட்டை மண்டபத்திலிருந்து பார்க்கையில் சோமன்னா யானையின் அம்பாரி மீது அமர்ந்து அனைவர்க்கும் முகமன் கூறிய படி யானையின் அசைந்தாடும் ஆட்டத்திற்கு ஏற்றார் போல் அசைந்தபடி வந்து கொண்டிருந்தார்.

• நான் பிரகாரத்திலிருந்து கீழிறங்கி அவரை வரவேற்று மண்டபத்திற்கு அழைத்து சென்றேன். சிறிது நேரத்தில் எல்லா சடங்குகளும் இனிதே நிறைவேறிய பின் திருமணமும் நல்லபடியாக சோமன்னா தலைமையில் நடந்து முடிந்தது.

எல்லா உபசரிப்பு களையும் ஏற்றுக் கொண்டு சோமன்னா என்னை அழைத்துக் கொண்டு வெளியே வருகையில்.. என் காதில் மெல்லிய குரலில் ஆனால் கண்டிப்புடன் ..

திருமா .. மறந்து விடாதே.. பொம்மி இன்று இரவுக்குள் என் அரண்மனை வந்ததாக வேண்டும். என்ன செய்வாயோ, ஏது செய்வாயோ எனக்கு தெரியாது.. சில விஷயங்களில் நான் பிடிவாதமாக இருப்பேன். அதில் இதுவும் ஒன்று.. ஆகையால் புரிந்து நடந்து கொள். அதுதான் உனக்கும், உன்னை சேர்ந்தவர்களுக்கும் நல்லது என்று சொல்லியபடி யானை அருகில் வந்தவுடன்..

யானை என்னைப் பார்த்து செல்லமாக பிளிறியது... என்னால் நம்ப முடியவில்லை.. கஜன்.. சில வருடங்களுக்கு முன் நான் பார்த்து பார்த்து பயிற்சி அளித்த அதே கஜன். நான் சொல்வதை கேட்டு அவ்விதமே நன்றாக நடப்பான்.. இப்போது எவ்வளவு பெரியவனாக ஆகி விட்டான்...

எங்கள் அளவளாவை பார்த்த சோமன்னா.. என்ன திருமா... மறந்து விட்டேன்.. நான் முன்பே உன்னிடம் சொல்ல வேண்டும் என்று இருந்தேன்.. நம்முடைய கஜன் தான்.. சில காலம் தஞ்சை சென்று இன்னும் சில பல பயிற்சிகளை முடித்து நேற்று தான் வந்தான். நம் யானைப்படையில் சேரப்போகிறான். பார் அவன் ஞாபக சக்தியை... உன்னை மறக்கவேயில்லை... என்று சொல்லிக் கொண்டே போக..

நான் மடிந்து ஏறுவதற்கு வசதியாக உட்கார்ந்திருந்த கஜனின் காது மடலை தடவிய வாறு அவன் கண்களையே பார்த்துக்கொண்டு இருந்தேன். மனதுக்குள் இருவரும் பேசிக்கொண்டோம். பின் அவன் காதில் சில வார்த்தைகளை சொல்ல, அவனும் தன் தலையை ஆட்டியபடியே என்னை பார்த்து தன் துதிக்கையால் அளைந்தபடியே இருந்தான்.

• போதும் திருமா என்ற சோமன்னா வின் குரல் என்னை இந்த உலகிற்கு அழைத்து வந்தது.. என் புன்முறுவலை அவர் கவனிக்க தவறவில்லை.. யானைகள் என்றாலே உனக்கு கொள்ளை பிரியம் தான் போ.. என்ற படி திருமா.. ஆகட்டும் பார்க்கலாம்... மறந்து விடாதே.. என்று அம்பாரியில் ஏறி புறப்பட ஆயத்தமானார்.

நானும் கை கூப்பியபடி ஆகட்டும் ஐயா என்று சொல்லி மனநிறைவுடன் மண்டபத்தின் உள்ளே எதையோ எதிர்பார்த்தபடி வந்து துர்க்கை அம்மன் முன்வந்து கண்களை மூடி கை கூப்பியபடி நின்றேன்.

• சிறிது நேரத்தில் பின்னால் ஒரே ஆராவாரம்.. பலரும் சப்தமிட்டபடி கலைந்து ஓடும் சப்தம்.. பாத்திரங்கள் உருண்டோடும் ஓசை... யாரோ பயத்துடன் கூறும் சப்தம்.. உள்ளே ஓடுங்கள்... ஓடுங்கள்... ...யானைக்கு மதம் பிடித்து விட்டது.. பாவம் திருமண த்திற்கு வந்த சோமன்னா வை அம்பாரியில் இருந்து கீழே தள்ளி மிதித்து கொன்று விட்டதாம்.. பாகனும் மற்றவர்களும் ஓடி தப்பித்தனராம்...என்ற அலறல் என் காதில் கேட்டது...

நான் கை கூப்பிய படி அம்மா துர்க்கா தேவி என்று கண்ணை திறந்து அம்மனின் சாந்தமான முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தேன்.

• மறுபடியும் கதையின் முதல் பாரா வை படிக்கவும்.

உங்கள் கருத்துக்கள்,
suggestions
வரவேற்கப்படுகின்றன.
[email protected]

- உங்கள் சிவா
 
நிறைய பேர் பெரிய மனிதன் என்ற போர்வையில் இப்படித்தான் கேடு கெட்டவர்களாக உள்ளனர்.....
 
Top