Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் இமையாக நீ--27

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
27

வெண்ணிலா, தன்னிடம் நீட்டிய ஃபைலைக் கண்டதும் ஒரு நிமிடம் திகைத்துப் போனான் வாசு. பின் சுதாரித்துக் கொண்டவன், " ஓ,இதை மறந்து போயிட்டேனா, அதனால என்ன? என் கிட்ட கொடுத்துடும்மா. இது உனக்குத் தேவையில்லாத விஷயம். இங்கே குடு அதை " என்று கடுங் குரலில் கர்ஜித்தான்.

" இல்லை, எனக்கு நீ முதல்ல பதில் சொல்லு. பாவி, ரம்யாவைப் பத்தி நீ புலம்பி அழுததைக் கேட்டு நானும் உன்னை நம்பித் தொலைச்சிட்டேன். ஏன்டா, உனக்கு இந்த மாதிரி கேடு கெட்ட வேலை எல்லாம் ? சரி, நீ எக்கேடும் கெட்டுப் போ. அதைப் பத்தி எனக்கு என்ன கவலை. ஆனா என்னை எதுக்காக இப்படி கடத்திட்டு வந்து வச்சிட்டு இருக்கே? நான் உனக்கு என்னடா பாவம் பண்ணினேன் ? என்னை விட்டுடு வாசு " என்று தனது சுற்றம், சூழலை மறந்து கத்தத் தொடங்கினாள்.

வாசு ஒரு கணம் அமைதி காத்தான். பின், " இது ஒரு வழிப் பாதை . இங்கே இருந்து நீ திரும்பி உன் வாழ்க்கையைத் தேடிப் போக முடியாது , மரணத்தைத் தான், சேர முடியும் . ஒழுங்கா நான், சொல்றபடி கேட்டுட்டு இருந்தேன்னா, நீ தான் இந்த சாம்ராஜ்யம் மொத்தத்துக்கும் மகாராணி. புரியுதா வெண்ணிலா " என்று கடுமையான தொனியில் கேட்டபடி அவளை நெருங்கி வந்தான்.

வெண்ணிலா, சட்டென சுதாரித்துக் கொண்டாள். ' ம் ம், இவன் கிட்ட கோபம் எடுபடாது. முள்ளை, முள்ளால தான் எடுக்கணும். இவன் எப்படி காதல்னு ஒரு பொய்யைச் சொல்லி, நம்மளை மடக்கினானோ அதையே தான் நாமளும் ஃபாலோ பண்ணனும் ' என்று தனக்குள் எண்ணிக் கொண்டவள் , அவன் எடுத்து வந்திருந்த உணவுப் பொட்டலத்தைப் பிரித்து உண்ணத் தொடங்கினாள்.

பசி, அதிகம் இருந்தால் புத்தி மந்தித்துப் போய் விடும் என்பது உண்மை தானே !

ஒரு கணம் அவள் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த வாசு, பின் அவளிடம் இருந்து, தான் பெற்றுக் கொண்ட ஃபைலை, மீண்டும், அங்கிருந்த அலமாரிக்குள் வைத்துப் பூட்டினான்.
வெண்ணிலாவின் துப்பறியும் மனம் இப்போது முழுமையாக விழிப்புற்றது .

' ம் ம், முதல்ல நாம பக்கத்து ரூமுக்குப் போகணும் அப்பத் தான் நமக்கு இந்த இடத்தைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்க முடியும். எப்படி போறது ? அப்புறம் என்னோட போன், அது எங்க இருக்கு. அதையும் கண்டு பிடிக்கணும்.
முதல்ல, இங்கே நடக்கிற விஷயங்களைப் பத்தி எப்படியாவது நாம வெளி உலகத்துக்குத் தெரியப் படுத்தி ஆகணும். அது எப்படி நடக்கும்? இதெல்லாம் என்னால முடியுமா? ' என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.

சாவியை எப்படி தேடறது? என்ற கேள்வி மட்டுமே, அவளது இதயத்தைக் குடைந்து கொண்டிருந்தது.

ஒரு வாறு, சாப்பிட்டு முடித்ததும், அங்கே இருந்த சிங்கில் கையைக் கழுவிக் கொண்டு வந்தவள், அப்படியே கவிழ்ந்து படுத்துக் கொண்டாள் .

வாசு தோளைக் குலுக்கிக் கொண்டு, அங்கிருந்து அகன்றான்.

சிறிதும் அரவம் இல்லாமல் எழுந்து கொண்ட வெண்ணிலா, அவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.

அது ஒரு சறுக்குப் பாதை என்பதைக் கணித்துக் கொண்ட, வெண்ணிலா , ' அப்போ இது வெளியே போற பாதையா இருக்கணும் ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் .ஆயினும், விடாது அவனைத் தொடர்ந்து சென்றாள் .ஒரு கட்டத்தில் , சிறிது இயற்கை சூரிய ஒளி அவ்விடத்தில் பரவி எழுந்திட, ' ம் ம், அப்ப நாம கெஸ் பண்ணினது கரெக்டு தான் ' என்று தன்னையே மெச்சிக் கொண்டாள்.
ஆனால், அதற்கு மேல் அவளால், அவனைப் பின் தொடர்ந்து செல்ல முடியவில்லை .
நிலவறையின் மேல் கதவு அடைக்கப்பட்டு விட்டது. வெண்ணிலா, திரும்பி நடக்கத் தொடங்கினாள். அந்த சறுக்கில் நடக்கும் போது , தான் பாதை மாறிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று அவளுக்குப் பட்டது.

ஒரு நீண்ட குகை போலத் தென்பட்ட அந்த இருள் பாதையில், திடீரென எங்கிருந்தோ வெளிச்சப் புள்ளி தென்பட்டது.

சட்டென, நீண்டு, வந்த அந்தப் புள்ளி, அவளுக்கான வழியைக் காட்டியது.
இப்போது, வெண்ணிலா இருந்தது ஒரு மின் விளக்குகளால் ஒளி சேர்க்கப்பட்ட ஒரு அறையில்.

அங்கே அவள் கண்டது, ஃபார்மலின் கரைசலுக்குள் பதப்படுத்தி வைக்கப்பட்டு இருந்த, சிறு குழந்தைகளின் உயிரற்ற உடல்களை.

அதனைக் கண்டதும் அவளது உயிரே கலங்கிப் போய் விட்டது, போன்ற பதட்டம் எழுந்தது. கத்தி அழக் கூட திராணி அற்றவளாய் அங்கேயே, சரிந்து அமர்ந்து, சன்னமாய் விசும்பத் தொடங்கினாள் வெண்ணிலா.

அவளைச் சுற்றிலும், நடை பழகிக் கொண்டிருந்த குழந்தைகள், 'அம்மா, ம்மா ' என்று குரல் எழுப்புவதைப் போன்ற உணர்வு எழுந்தது அவளுக்கு.

மெதுவாகத் தன்னிலைக்கு வந்த அவள், அங்கே கிளிப் போர்டில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று ஆராயத் தொடங்கினாள்.

ஒவ்வொரு, குழந்தைக்கு அருகிலும், எந்த விதமான மரபணுக் குறைபாட்டின் காரணமாக, அந்தக் குழந்தையின் மரணம் ஏற்பட்டது என்ற குறிப்புகள் தான் எழுதப்பட்டு இருந்தன.

அப்போது , அறைக்குள் யாரோ வரும் ஓசை கேட்டதும், சட்டென அங்கிருந்த மர அலமாரிக்குப் பின் தன்னைத் திணித்துக் கொண்டாள்.

வந்தது ஆணா, பெண்ணா என்பதைக் கூட, அறிந்து கொள்ள முடியாத வண்ணம் , முழுவதும் மருத்துவர்கள் அணிந்து கொள்ளும் , பிரத்தியேக உடுப்பிற்குள், இருந்தது அந்த உருவம்.
வந்ததும், ஒவ்வொரு கேஸ் ஷீட்டிலும், ஒரு சிறு குறிப்பினை எழுதி விட்டு, அங்கிருந்து கிளம்பிச் செல்லவிருந்த போது, அலைபேசி ஒலித்தது .

" எஸ், தனசேகரன் ஹியர், நீங்க யாரு பேசறது? " என்று கேட்ட பொழுது தான், அந்த உருவம் ஒரு ஆணுடையது என்பது, தெரிந்தது அவளுக்கு.

ஓரிரு நிமிடங்களில், அவனும் அங்கிருந்து வெளியேறிச் சென்று விட, மெதுவாக, மறைந்து கொண்டிருந்த இடத்தை விட்டு வெளியே வந்தாள் வெண்ணிலா.

மீண்டும் ஒரு முறை, அந்த அறையை நோட்டமிட்ட அவளது கண்களில் , அங்கே, அவன் விட்டுச் சென்றிருந்த அலைபேசி தென்பட்டது.

சரேலென பாய்ந்து, அதனைத் தன் கையகப் படுத்திக் கொண்ட வெண்ணிலா, உடனே அதில் அவசர அழைப்புகளைத் துருவி எடுத்து அதில்
இருந்த காவல் துறையின் எண்ணைத் தட்டினாள்.

" யாராவது எனக்கு உதவி பண்ணுங்க . இங்கே நான், ஒரு பெரிய ஆபத்தில சிக்கிட்டு இருக்கேன். என்னைக் கடத்தி வச்சிருக்காங்க. ஆனா இது எந்த இடம்னு தெரியலை.please help me " என்று சொல்லி விட்டு, அலைபேசியைத் தான் எடுத்த இடத்திலேயே திரும்பவும் வைத்தாள் .

பின்னர் தான், தான் அழைத்த எண்களை டிலீட் செய்திட வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.
மீண்டும், அந்த அலைபேசியைக் கையில் எடுத்த போது, யாரோ, தனக்கு அருகில் நடந்து வந்து கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு எழுந்திட, உடனே அலமாரிக்குப் பின்னே ஒளிந்து கொண்டாள் .

ஆனால் அலைபேசி, அவளது கைகளில் தான் இருந்தது.

மருத்துவருக்கான சீருடையுடன் வந்த அந்த உருவம், தனது அலைபேசியைக் காணாமல் ' இதென்ன இங்கே தான் வச்சதா ஞாபகம். ஆனா எங்கே போச்சுன்னு தெரியலியே ' என்றவாறே, ஒவ்வொரு மேஜையிலும் தேடத் தொடங்கியது.

அப்போது, வெண்ணிலாவின் கையில் இருந்த அலைபேசி நீண்டதாக ஒலி எழுப்பியது.

இதனைச் சிறிதும் எதிர்பாராத வெண்ணிலா, பதட்டத்தில் கையில் இருந்த அலைபேசியைக் கீழே நழுவ விட்டாள்.

தனது அலைபேசியைக் கையில் எடுத்துக் கொண்ட அந்த உருவம், " யாரது ? யாராவது இங்கே இருக்கீங்களா? ஹலோ, யாரு? " என்று சில நொடிகள் முன்னும் பின்னுமாகத் தேடிப் பார்த்து விட்டு, அங்கிருந்து, ஒரு வழியாகக் கிளம்பிச் சென்றது, அந்த உருவம்.
வெண்ணிலா, மேலும் சில நொடிகள் அங்கேயே மறைந்து நின்று கொண்டாள்.
பின் மெதுவாக எட்டிப் பார்த்தாள். அங்கே, தற்போது யாரும் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு தனது மறைவிடத்தை விட்டு வெளியே வந்தாள்.
×÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
ரவியுடன் இணைந்தபடி வாசுவின் இருப்பிடத்தை அடைந்த தீபக்கை அங்கிருந்த செக்யூரிடி, உள்ளே நுழைய விடாமல் தடுத்தார்.

அப்போது, தீபக்கின் அலைபேசி ஒலித்திட, அங்கிருந்து நகர்ந்து கொண்டவன், அலைபேசிக்கு உயிரூட்டி, " ஹலோ தீபக் ஹியர் " என்றான் .

மறு முனை, " சார், சார் இப்ப இதே லொகேஷன்ல இருந்து, இங்கே போலீஸ் கன்டிரோல் ரூமுக்கு ஒரு கால் வந்தது சார். ஒரு பொண்ணு, என்னைக் காப்பாத்துங்கன்னு கத்தினாங்க " என்று சொன்னது.

" நம்பர் நோட் பண்ணினீங்களா?
அது, யாரோட நம்பர், அதைத் தேடினீங்களா ? . கொஞ்சம் சீக்கிரமா பாருங்க " என்று பரபபரத்த குரலில் அவன் சொல்லவும், " சார், அந்த நம்பர், டாக்டர் தனசேகரன்னு டிரூ காலர்ல காட்டுது " என்று சொன்னான்.

டாக்டர் தனசேகரன் என்ற பெயரைத் தன் மனத்திற்குள் குறித்துக் கொண்டான் தீபக்.

' அப்படின்னா வெண்ணிலா கடத்தப்பட்டதுல ஒரு நெட்வொர்க்கே சம்பந்தப் பட்டிருக்குமோ ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், இனியும் அங்கே தாமதிப்பதில் துளிக் கூட புண்ணியம் இல்லை என்ற முடிவுடன், தனது பைக்கை ஸ்டார்ட், செய்து, அந்த நீண்ட வளாகத்திற்குப் பின், புறமாகச் சென்றான்.

எதுவும் புரியாமல், அவனைப் பின் தொடர்ந்து வந்த ரவி, " என்னடா இது ? ஏன் இந்தப் பக்கமா வந்துட்டே ?." என்று கேட்டான்.

" டேய், வெண்ணிலா இங்கே தான் இருக்காங்க. அது மட்டும் உறுதியாத் தெரியுது. ஆனா எங்கே, அடைச்சு வச்சிருக்காங்கன்னு தான் தெரியலை . வா இந்தப் பக்கம் சுவர் ஏறிக் குதிச்சு உள்ளே போய்டுவோம் " என்று சொல்லி விட்டு அவ்வாறே செய்தான் .

குதித்த நொடியில் அவனது கண்ணில் பட்டது, பார்பி பொம்மையுடன் அவனை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்த சுஷ்மிதா.

" ஏய், நீ திருடனா. இரு, இரு
மாமா கிட்டயே சொல்றேன். அப்ப நீ தான், என்னோட அத்தையைத் திருடிட்டுப் போய்ட்டியா? அத்தையைக் குடு என் கிட்ட, இல்லைன்னா நான் போலீஸ்ல சொல்லிடுவேன் " என்று மழலைக் குரலில் மிரட்டிய அந்தக் குழந்தையை அவள் சொன்னதற்கான அர்த்தம் முழுதும் புரியாமல் ,பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் தீபக்.
(வரும்)

ஹாய் ஃபிரெண்ட்ஸ் அடுத்த எபி போட்டுட்டேன். படிச்சுப் பார்த்துட்டு, உங்க கமெண்ட்ஸை சொல்லுங்க.









 
நிஐமா முடியல ஆத்தர் ஜி 😂ஒவ்வொரு முடிச்சுகளா அவிழும் என்று நினைத்தால் கூடிக்கிட்டு இல்ல போகுது 😀
சூப்பர் விறு விறுப்பாக கதை நகர்கிறது👌
சூப்பர் ❤️
 
Top