Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான்; இமையாக நீ--17

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
அத்தியாயம் 17

தீபக் சொல்வதைக் கேட்ட தமிழ்ச்செல்வன், கோபம் தலைக்கு ஏற, தன்னுடன் வந்த அடியாட்களை, உள்ளே அழைக்க முற்பட்டான்.

அதற்குள், தீபக் மூலமாக மருத்துவமனையில் நிகழ்ந்தவற்றை அறிந்து கொண்ட, அருகில் இருந்த காவல் நிலையத்தில் இருந்து, காவல் படையினர் மருத்துவமனைக்குள் வந்து விட, ரிசப்ஷனில இருந்த பிருந்தா மருத்துவர் ஷீபாவின் அறைக்குள் ஓடிச் சென்று , " டாக்டர், இங்கே வெளியே ஒரே பிரச்சினையா, இருக்கு. அந்த எம்.எல்.ஏ வந்துருக்காரு. அதோட, யாருன்னு தெரியலை, காலையில் இருந்து, ஒருத்தர் வெயிட்டிங் ஹால்லயே உங்களைப் பார்க்கறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காரு. இப்ப அவரு தான், ..."

அவள் முடிப்பதற்குள், அங்கிருந்த டியூட்டி டாக்டரிடம் தனது பணியை ஒப்படைத்து விட்டு அறையை விட்டு வெளியே வந்தாள் ஷீபா.

அதற்குள் , தீபக் மூலமாக அங்கு வரவழைக்கப்பட்ட, காவல் துறையினர் தமிழ்ச்செல்வனைக் கைது செய்து, அழைத்துச் சென்றனர்.

இதனைச் சற்றும் எதிர்பாராத தமிழ்ச்செல்வன், " நான் யாருன்னு தெரியாம என் கிட்டயே மோதிட்டே, எண்ணி வச்சிக்க, இன்னும் பத்தே நாள் தான். உன்னைக் காலி பண்றேன் பாரு " என்று சவால் விடும் தோரணையில் கத்தி விட்டு , அங்கிருந்து அகன்றான்.

தீபக்கிற்குத் தனது பணியில் இது எல்லாம் சகஜமான, ஒன்று தானே!

தனது அறையை விட்டு வெளியே வந்த ஷீபா, ரிசப்ஷனில நின்று கொண்டிருந்த தீபக்கைப் பார்த்து, " சார், என்ன நடக்குது இங்கே. அவரு இந்த ஹாஸ்பிட்டல்ல ரெகுலரா டிரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்காரு. ஏதோ ஒரு சின்ன பிரச்சினை காரணமா, வந்து கத்தினாரு. அதுக்காக இப்படி பண்ணிட்டீங்களே. முதல்ல நீங்க யாரு சார் " என்று கேட்க

தீபக் ரவியைப் பார்த்து, " இங்கே பாருடா, நம்ம இது ஒரு ஹாஸ்பிட்டல் : ஒரு பொது இடம், மத்தவங்களுக்குப் பிரச்சினை வரக் கூடாதுன்னு, அவனைப் பிடிச்சு உள்ளே போட்டா, இவங்க நம்மளையே இப்படி பேசறாங்களே. அப்படின்னா காசைக் கொடுத்தா, இங்கே எல்லாமே சாத்தியம் தான் போல... " என்று ஏளனக் குரலில் பேசினான்.

பின் தனது அடையாள அட்டையை எடுத்து, அவளிடம் காட்டினான்.

" நான் போரூர், ஏரியா சப் இன்ஸ்பெக்டர் மேம்.உங்க மேல ஒரு கம்பிளைண்ட் , வந்திருக்கு, இதோ இவர் மூலமா.
இங்கே நர்ஸா வேலை செய்துட்டு இருக்கிற வெண்ணிலாவை, நேத்து சாயங்காலத்துல இருந்து காணோம். அதுல நீங்களும் சம்பந்தப்பட்டு இருப்பீங்கன்னு நான் சந்தேகப் படறேன். ஏன்னா, அதுக்கான ஆதாரமும் என் கைல இருக்குது. பார்க்கறீங்களா? " என்று கேட்டான்.

அதனைக் கேட்ட ஷீபா அதிர்ந்தே போனாள்.

' என்னது, வெண்ணிலாவைக் காணோமா? எப்படி, எங்கே ? அதான் இந்த ஆளு இப்படி ரகளை பண்ணிட்டு இருந்தானா.நானே அவளுக்காகத் தானே வெயிட் பண்ணிட்டு இருக்கேன். ' என்று எண்ணியவள் அடுத்து என்ன பேசினால், தீபக்கின் வாயை அடைக்கலாம் என்று தனது மனத்திற்குள்ளேயே ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

" என்னது நான் சம்பந்தப்பட்டு இருக்கேனா? அவ இங்கே ஒரு நர்ஸ். அவ்வளவு தான். நேத்திக்குப் பகல் டியூட்டி முடிஞ்சு கிளம்பிப் போயிட்டா. அதுக்குப் பிறகு அவளுக்கும், இந்த ஹாஸ்பிட்டலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இன்னிக்குக் காலையில அவ வராததுனால, இங்கே லேப்ல வேலை எல்லாம் அப்படியே, கிடக்குது. இனி தான், அதுக்கு இன்னொரு ஆளை வச்சி நான் எல்லாம் பார்க்கணும் . காணோம்னா போய் வேற எங்கேயாவது தேடுங்க. அதை விட்டுட்டு, இங்கே வந்து ஏன் இப்படி பிரச்சினை பண்ணிட்டு இருக்கீங்க " என்று தீபக்கிடம் தனது ஆளுமையை உணர்த்தி விட்டுத் தனது அறைக்குத் திரும்பிட எத்தனித்தாள் ஷீபா.

ஆனால் தீபக் அவளை விடவில்லை.
" அப்படின்னா, இதோ இந்த லெட்டருக்கு என்ன அர்த்தம் டாக்டர் " என்று பிரீத்தாவின் கடிதத்தை அவளிடம் நீட்டினான் தீபக்.

எரிச்சலுற்ற குரலில், "சார் நீங்க என்னோட டியூட்டி ஹவர்ஸை ஸ்பாயில் பண்ணிட்டு இருக்கீங்க . நான் உங்களை எதிர்த்துக் கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் போடலாம் . உங்களுக்குத் தெரியும் இல்லை " என்றாள் ஷீபா.

" ஓ, போடுங்க கண்டிப்பா செய்யுங்க. நான் அதுக்கு மேலயும் போவேன். இப்ப, இந்த லெட்டரை மட்டும் படிச்சுப் பாருங்க. அதுக்குப் பிறகு யாரு எங்கே போறதுன்னு நாம முடிவு பண்ணிக்கலாம் "
உடனே அவனது கைகளில் இருந்த கடிதத்தை வெடுக்கெனப் பிடுங்கி, அதனை வாசிக்கத் தொடங்கினாள் ஷீபா.
வரிக்கு, வரி அதனைப் படிக்கும் போதே அவளுக்குக் குப்பென வியர்க்கத் தொடங்கியது.

பிரீத்தா தன்னைப் பற்றி இப்படி விலாவாரியாக எழுதி வைத்து விட்டு சென்று விடுவாள் என்பதை , அவள் சிறிதும் எதிர்பார்க்கவேயில்லை.

' என் கிட்ட சம்பளம் வாங்கிற நாய்க்கு இவ்வளவு திமிரா. இருக்கட்டும், இருக்கட்டும். எப்படியும் ஒன்னாந் தேதி ஆச்சுதுன்னா நீ என் கிட்ட தானே வருவே .அப்ப நான் உன்னைப் பார்த்துக்கறேன் ' என்று தனக்குள் கருவிக் கொண்டாள் ஷீபா.

" இந்த லெட்டர் யார் கொடுத்தது. உங்களுக்கு எப்படி கிடைச்சுது " என்று பரபரப்பான குரலில் கேட்டாள்.

அத்தனை நேரம் மௌனமாக நடப்பவற்றை வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்த ரவி இப்போது பேசத் தொடங்கினான்.

" ம் இங்கே தான், இதே ரிசப்ஷனில வச்சித் தான் அவங்க என் கிட்ட
இந்த லெட்டரைக் கொடுத்தாங்க,

வெண்ணிலா கிட்ட கொடுக்கச் சொல்லி. சொல்லுங்க டாக்டர், என் வெண்ணிலாவை எங்கே மறைச்சு வச்சு இருக்கீங்க சொல்லுங்க, இல்லைன்னா, நான் இந்த லெட்டரைக் கமிஷனர் வரைக்கும் எடுத்துட்டுப் போவேன் " என்றான் ரவி .

அது வரையில், அமைதியான குரலில் பேசிக் கொண்டிருந்த , டாக்டர் ஷீபா கமிஷனர் என்ற பெயரைக் கேட்டதும் வெலவெலத்துப் போனாள்.

" சார், சத்தியமா வெண்ணிலா காணாமப் போனது பத்தி எனக்கு இப்ப வரைக்கும் தெரியாது .நான் முன்னே சொன்னது போல அவளுக்காகத் தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். இப்ப வந்துட்டுப் போன ...சார் இது கொஞ்சம் கான்ஃபிடன்ஷியல் மேட்டர். நீங்க கொஞ்சம் ரூமுக்கு வாங்க. நான் பேசணும் " என்று சொல்லி விட்டு தீபக்கைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றாள் ஷீபா.

அவளுக்குப் பெரிதான குழப்பம் ஏற்பட்டது. முந்தைய தினம், தான் கரு முட்டை தானமாகக் கொடுக்கும்படி, , கேட்டதால் தான், வெண்ணிலா இன்று விடுப்பு எடுத்துக் கொண்டாள், என்று தான் அவள் எண்ணிக் கொண்டிருந்தாள் .
ஆனால் , இப்போது வெண்ணிலாவைக் காணவில்லை, என்று தீபக் சொன்ன செய்தியைக் கேட்டு அவளுக்குப் பலத்த அதிர்ச்சி ஏற்பட்டது.

இதில், எத்தனையோ பெண்கள் சத்தமில்லாமல், இப்படி ஒரு நிகழ்வினைக் கடந்து சென்றிருக்கையில், நர்ஸ் பிரீத்தா மட்டும் இப்படி தனக்கு எதிராகத் திசை மாறிப் போவாள் என்று அவள் எண்ணி இருக்கவில்லை .

' ம், விஷயம் போலீஸ் வரைக்கும் போயிடுச்சு. இப்ப இவங்களோட ஆக்ஷன் எது வரைக்கும் போகும்னு தெரியலை. கொஞ்ச நாளைக்கு, நாம எங்காவது அவுட் ஸ்டேஷன் போயிட வேண்டியது தான் ' என்று தனக்குள் எண்ணிக் கொண்டாள்.

தீபக்கைத் தன் முன் அமரச் செய்து, " சார், பிரீத்தா ஒரு தப்பான பொண்ணு. அவ என் கிட்ட, தான் கல்யாணம் பண்ணிக்காமலேயே கர்ப்பம் ஆயிட்டதாச் சொல்லிட்டு, அபார்ட் ( கருக் கலைப்பு) பண்ணிடச் சொன்னா. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். அதான் இப்படி எல்லாம் ஹாஸ்பிட்டல் பத்தியும், என்னைப் பத்தியும் தப்புத் தப்பா, எழுதி உங்க கிட்ட கொடுத்து இருக்கா " என்று நா கூசாமல் பொய்களை அவிழ்த்து விட்டாள் .

அதனைக் கேட்ட ரவி கொதித்துப் போனான். சட்டென்று தனது இருக்கையை விட்டு எழுந்து கொண்ட அவன், " இங்கே பாருங்க டாக்டரம்மா. யாரு உண்மை சொல்றாங்க, யாரு பொய் சொல்றாங்கன்னு, தெரிஞ்சுக்க முடியாத அளவுக்கு , நாங்க எல்லாம் முட்டாள்கள் கிடையாது. இப்ப உண்மையைச் சொல்லப் போறீங்களா இல்லையா? " என்று கடுங் கோபத்துடன் கேட்டான்.

தீபக் அவனை அமைதிப் படுத்தினான். " ரவி, அமைதியா இரு. இன்னும் இவங்க என்ன எல்லாம் சொல்றாங்கன்னு கேட்டுப்போம் " என்றவனின் மனத் திரையில், காலையில் தான் கண்ட பிரீத்தாவின் வீடு ஒரு கணம் வந்து போனது.

பிரீத்தாவின், தவிப்பைத் தாங்கிய பெண்மையைக் காட்டிய முகம் , அவனுக்குள் ஏதோ செய்தது. ' ம், நம்ம கண்ணுக்குத் தெரிஞ்சு இவங்க. இன்னும் தெரியாம எத்தனை பேரு இருக்காங்களோ?.' என்று அந்தக் கணமே அவனுக்குத் தோன்றியது.

' ம்ம், இந்த டாக்டரம்மாவைக் கண்காணிக்கணும். அதுக்கு என்ன செய்யறது ' என்று யோசித்தபடி அங்கிருந்து எழுந்து கொண்டான்.

பின் ரவியிடம், " ரவி வா நாம போகலாம். அதான் இவங்களுக்கு வெண்ணிலா பத்தி எதுவும் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க இல்ல " என்று சொல்லி அவனையும் எழுப்பி, அறையை விட்டு வெளியேறச் செய்தான்.

ஆனால் ரவிக்கு, இன்னமும் வெண்ணிலாவைக் கடத்திய நபர் பற்றியும் இப்போது அவள் இருக்கும் இடம் பற்றியும் ஒரு சிறு துரும்பைக் கூட தன்னால் கண்டு பிடிக்கமுடியவில்லையே , என்ற ஆற்றாமை தான் மிகுந்தது.

பேச்சற்றவனாகத் தனக்கு அருகில் நடந்து வந்து கொண்டிருந்த, ரவியைப் பார்த்த தீபக், " ரவி, அப்செட் ஆகாதேடா.
எனக்கு என்னவோ, நாம தேட வேண்டிய இடம் பத்தின விவரம் இன்னமும் அகப்படலையோன்னு மனசுக்குப் படுது."

" நீ கார் கிட்ட வெயிட் பண்ணு. நான் இதோ வர்றேன் " என்று சொல்லி விட்டு ரிசப்ஷனில் இருந்தவாறு தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த, பிருந்தாவை நெருங்கினான்.

" என்ன சிஸ்டர்? ஏதாவது சொல்லணுமா என் கிட்ட? " என்று கேட்டான்.

" அதெல்லாம் எதுவும் இல்லை சார். காலையில இருந்து மேடமும் வெண்ணிலாவைக் கேட்டு தான், எனக்கு ரெண்டு தடவை கால் பண்ணினாங்க. சார், அப்போ வெண்ணிலா, நிஜமாவே காணாமப் போயிட்டாளா? " என்று கேட்டாள்.

தீபக் அவளை முறைத்தான். பின் பிருந்தாவினால் தனக்கு, டாக்டரைப் பற்றி ஓரளவிற்கு உளவறிந்து சொல்ல முடியும், என்று எண்ணிக் கொண்ட அவன், அவளிடம் " உங்களால எனக்கு ஒரு வேலை ஆகணுமே " என்று கேட்டான்.


( வரும்)


















 
என்னமா புழுகுது இந்த டாக்டர்... உன்னை மாட்டிவிடனும்னு.முடிவு ட்
பண்ணி தான் கப்லைன்ட் கொடுத்து இருக்க ப்ரீதா ...இனிமே ஏன் உன்கிட்ட சம்பளம் வாங்க வர போற அது கூட புரியல இந்த டாக்டர் க்கு....
 
மாட்டிக்கிட்ட பிறகும் என்ன தெனாவட்டா பேசுது இந்த டாக்டர் அம்மா.. ப்ரீத்தாவை தப்பா சொல்லி தப்பிக்க வேற பார்க்குது... ????
 
என்னமா பொய்களையும் அவிழ்த்து விடுறாங்க இந்த டாக்டர் 😀
 
Top