Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் இமையாக நீ 11

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
அத்தியாயம் 11

ரோகிணி, ஃபெர்டிலிடி கிளினிக்கில் இருந்து, தான், அலைபேசியில் படம் எடுத்து, வந்திருந்த ரகசிய ஃபைலை, ஆராயத் தொடங்கினான் தீபக்.

அதில் , சில தம்பதிகளின் பெயர்களும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் பற்றிய குறிப்புகளும் இருந்தன. அதற்கு அடுத்த தாளில், கான்ஃபிடன்ஷியல் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ' Patients in need of surrogacy ' என்று குறிப்புடன் இருந்த, அந்தத் தாளிலும், கிட்டத்தட்ட, ஐம்பதுக்கும் மேற்பட்ட தம்பதிகளின் பெயர்கள் இருந்தன.

அதற்கு அடுத்தாற் போல, இருந்த தாளில் தான், தீபக்கிற்குத் தேவையான செய்தி இருந்தது. ' Eligible workers for surrogacy ' என்று குறிப்பிட்டு இருந்த அதில், தான் வெண்ணிலாவின் பெயர் காணப்பட்டது. கிட்டத்தட்ட, இருபது பெண்களின் பெயர்களுள், பிரீத்தாவின் பெயருக்கு அடுத்தாற் போல, வெண்ணிலாவின் பெயர் தான் இருந்தது.அதனைக் கண்டதும் தீபக்கின் மனம் பெரிதான யோசனைக்குள் ஆழ்ந்து விட்டது.

' வாடகைத் தாயாய் இருந்து பிள்ளை பெத்துக் கொடுக்கிறதுக்குப் பெரும்பாலும் கஷ்டப்படற கீழ்த் தட்டுப் பெண்களுக்கு , அதுவும் கல்யாணம் ஆன பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணத்துக்காக அவங்களை , அப்படி செய்யச் சொல்வாங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன். இப்ப என்ன தான் நடக்குது இங்கே. இப்படி கல்யாணம் ஆகாத பெண்களைப் போய் இதுக்குப் பயன்படுத்திக்கறது எவ்வளவு பெரிய துரோகம். இது ஒரு வகையில அவங்களை விபச்சாரத்தில ஈடுபடுத்தறது மாதிரி இல்ல இருக்கு. நெனச்சுப் பார்த்தாலே பகீர்னு இருக்கே ' என்று தனக்குள் புலம்பிக் கொண்டான் தீபக்.

அதன் பின், அவன் தற்சமயம் மருத்துவர் ஷீபாவிடம், சிகிச்சை பெற்று வரும், தம்பதிகளின் பெயர் பட்டியலை, மீண்டும் ராய்ந்தான் .
அதில் , அந்த நாளுக்கு என்று ஏதேனும் குறிப்பிடத் தகுந்த, பெயர் எதுவும் காணப்படுகிறதா என்று அலசிய போது, அவன் கண்களில் பட்டது, சமூகத்தின் முக்கிய பிரமுகர் ஒருவருடைய மகனின் பெயர்! ஆனால், அதற்கு அருகிலேயே (WL) என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.

' wl அப்படின்னா, வெயிட்டிங் லிஸ்ட்ன்னு தானே அர்த்தம். அப்படின்னா, அடுத்தபடியா, டாக்டர் கிட்ட டிரீட்மெண்ட்டுக்காகக் குறிச்சு வச்சிருக்கிற பேரா?.இல்லை வேற ஏதாவதா? ' என்று மீண்டும் தனக்குள் கேள்வி எழுப்பிக் கொண்டான்.

ஒரு, கேஸ் சம்பந்தமாக இப்படி, அவனுக்குள் நிறைய கேள்விகள் எழுந்தால் தான், அவனது தேடலும் சரியான திசை நோக்கிப் பயணித்திடும் என்பது அவன் அனுபவ பூர்வமாக கண்டறிந்த உண்மை.

' ம், சரி எதுவா இருந்தாலும், நாளைக்குக் காலையில, நம்ம முதல் வேலை அந்தப் பிரீத்தாவைப் போய்ப் பார்க்கிறது தான் ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், தனது படுக்கையறைக்குள் புகுந்து கொண்டான்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மேனகாவும், சபாபதியும் , அழுது கொண்டே, தங்கள் வீட்டின் முகப்பறையிலேயே அமர்ந்து கொண்டிருந்தனர். சுமதியும், ரவியும் கிளம்பிச் சென்றவுடன், சமையலறையை ஒதுக்கி, சாமான்களைக் கழுவிப் போட்டு விட்டு தனது தந்தையிடம் வெற்றிலை பாக்கினைக் கொடுத்தாள் மிருதுளா.

வெற்றிலை போடாமல் சபாபதியின் நாளே முடியாது. ஆனால், அன்று வெற்றிலையை நீட்டிய தனது மகளிடம், வேண்டாம் என்று தலை அசைத்து மறுத்து விட்டார் சபாபதி.

தனது தந்தையின் அழுத முகம் கண்டு , மிருதுளாவின் மனம் மிகவும் பதைத்துப் போய் விட்டது.' அக்கா சீக்கிரம் வந்துடுவா அப்பா ' என்று சொல்வதைத் தவிர, அவளால் அவரிடத்தில் வேறென்ன சொல்ல முடியும்,அதுவும் கூட, இப்போது வரைக்கும் நிச்சயமாகத் தெரியாத ஒரு செய்தி தானே!

தனது அக்காவுக்கு எந்த விதமான தீங்கும், நேர்ந்திடாமல் அவள், நல்லபடியாக வீடு வந்து சேர்ந்திட வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறென்ன செய்ய முடியும், என்று தனக்குள் கேட்டுக் கொண்ட அவள், வீட்டில் ஆங்காங்கே எரிந்து கொண்டிருந்த விளக்குகளை அணைத்து விட்டுத் தானும், அம்மாவுக்கு அருகில் சென்று படுத்துக் கொண்டாள் மிருதுளா!

அவளது பிரார்த்தனை ஜெயித்திடுமா,?


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தூக்கம் கலையாத விழிகளுடன், கண்ணை மூடிக் கொண்டே அழுது கொண்டிருந்த, சுஷ்மிதாவைச் சமாதானம் செய்து உறங்க வைத்து விட்டு சாரதாவும் தன்னை மறந்து உறங்க ஆரம்பித்து விட்டிருந்தாள்.வெண்ணிலாவைப் பார்த்த போது அவளும், ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாகத் தான் அவளுக்குத் தெரிந்தது.

' பாவம், இந்தப் பொண்ணு அழுது, அழுதே களைச்சுப் போய்த் தூங்கிட்டா போல. ம், இவ எழுந்திரிச்சவுடனே சபாவைப் பத்திக் கேக்கணும். நல்ல மனுஷங்க அவங்க ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

நீள் இரவுகளும், ஒரு கட்டத்தில் முடிந்து தானே ஆக வேண்டும்! அது தானே இயற்கையின் நியதி!பார்ப்போம் வெண்ணிலாவின் விடியல் என்ன சொல்லப் போகிறது என்று??

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முன் தினம் தான் திட்டமிட்டபடியே, வடக்கு மாம்பலத்தில் இருப்பதாக, சொன்ன பிரீத்தாவின் முகவரியைத் தேடிக் கொண்டு கிளம்பிச் சென்றான் தீபக்.அந்த முகவரி ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு வளாகத்தினைக் காட்டியது. கீழ்த்தளத்தில், இருந்த அந்த வீடு, ஒற்றைப் படுக்கை அறை மட்டுமே கொண்ட, சிறிய வீடாகத்தான் அவனுக்குத் தெரிந்தது.

' நம்ம வீடு பார்க்க வரலை, பாஸ். ஞாபகம் இருக்கட்டும் ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், திறந்திருந்த கதவினைத் தட்டி, " ஹலோ , யாராவது இருக்கீங்களா? " என்று கேட்டான்.

நைட்டி, அணிந்து கொண்டு உள்ளிருந்து வந்த, அந்தப் பெண் தான் பிரீத்தீயாக இருக்க வேண்டும், என்று எண்ணியவன், " இங்கே, ரோகிணி ஹாஸ்பிட்டல்ல வேலை பார்க்கற பிரீத்தா சிஸ்டர் வீடு இது தானே " என்று அவளிடம் கேட்டான்.

" நான் தான் பிரீத்தா. நீங்க யாரு சார்? " என்று கேட்டாள் அந்தப் பெண்.

தீபக் பதில் எதுவும் சொல்லாமல், பிரீத்தா தனது கைப்பட எழுதிக் கொடுத்த கடிதத்தைத் தன் சட்டைப் பையில் இருந்து எடுத்து அவளிடம் கொடுத்தான்.

பின், " சிஸ்டர், நான் கொஞ்சம் உங்க கிட்ட பேசணும். இப்படி வாசல்ல நின்னுட்டே பேச முடியாது . அதனால நான் உள்ளே வந்து, உக்கார்ந்துக்கலாமா? " என்று அவளிடம் கேட்டான்.

" ஓ, வாங்க சார், உள்ளே வாங்க " என்று அவனை அழைத்த பிரீத்தா, தீபக்கின் முகத்தில் எதையோ தேடினாள்.

' நம்ப ஹாஸ்பிட்டல்ல வச்சி இவர் கிட்டயா லெட்டரைக் கொடுத்தோம் ? இல்லையே! அப்புறம் இந்த லெட்டர் எப்படி இவர் கிட்ட, வந்தது ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

அவளது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட தீபக், " மேடம் இந்த லெட்டரை என் கிட்ட கொடுத்தது என்னோட ஃபிரெண்டு ரவி. நான், அவன் கொடுத்த புகாரைப் பத்தி விசாரிக்கத் தான், இங்கே வந்தேன். சொல்லுங்க மேம், வெண்ணிலாவை நேத்து சாயங்காலம், நாலு மணியில இருந்து காணோம் , அப்படிங்கறது தான் ரவியோட கம்பிளெயின்ட். துரதிர்ஷ்டவசமாக, நீங்க அவன் கிட்ட கொடுத்த இந்த லெட்டரை, அவன் , வெண்ணிலா கிட்ட கொடுக்க மறந்து போயிட்டான். உங்களுக்கு இதைத் தவிர, வேற தகவல்கள் எதுவும் தெரிஞ்சாக் கூட என் கிட்ட தாராளமா சொல்லலாம் " என்று சொல்லி விட்டுத் தனது அடையாள அட்டையை, எடுத்து அவளிடம் காண்பித்தான் தீபக்.

அவன் சொன்னதைக் கேட்ட பிரீத்தா, மிகுந்த அதிர்ச்சி அடைந்து விட்டிருந்தது, அவளது முக பாவனையில் இருந்தே, அவனுக்கு நன்கு புலப்பட்டது.

" என்னது, வெண்ணிலாவைக் காணோமா? நானே, அவ கிட்ட இந்த லெட்டரைக் கொடுக்கறதுக்காகத் தான், பத்து நிமிஷத்துக்கு மேல, அங்கேயே அவளுக்காக வெயிட் பண்ணினேன். எனக்கு உடம்பு சரி இல்லாததனால, தான் அதுக்கு மேல அங்கே உக்கார்ந்து இருக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டு லெட்டரை அவர் , அவர் ஒரு மெடிக்கல் ரெப்னு தெரியும் ; ஆனா பேரெல்லாம் தெரியாது. அவர் கிட்ட கொடுத்துட்டு அங்கே இருந்து கிளம்பினேன் " என்றாள் பிரீத்தா.

அப்போது, உள் அறையில் இருந்து ஒரு பெண்ணின் தீனமான குரல் அவளை அழைத்தது.

" இதோ வந்துட்டேன்மா " என்று சொல்லி விட்டு, உள்ளே சென்றாள் பிரீத்தா.

ஐந்து நிமிடம் கழித்து வெளியே வந்த அவள், தானாகவே பேசத் தொடங்கினாள்.

" சார், இப்பக் கூப்பிட்டது என்னோட அம்மா. எனக்கு அப்பா கிடையாது. அம்மா தான் என்னை வளர்த்தாங்க. என்னோட படிப்புச் செலவை எல்லாம், என்னோட தாய் மாமா வீட்டில் ஏத்துக்கிட்டாங்க. அதனால தான் என்னால நர்சிங் படிக்க முடிஞ்சது. படிச்சு முடிச்சவுடனே என்னோட முதல் அப்பாயின்ட்மெண்ட்டே, ரோகிணி கிளினிக்ல தான். வேலையில், சேர்ந்த உடனேயே , எங்க எல்லாருக்கும், அங்க டிரீடமெண்ட்டுக்கு வர்ற பேஷன்ட்ஸுக்கு செய்யற மாதிரி, ஹார்மோன் டெஸ்ட், சுகர் டெஸ்ட், ஹீமடாலஜி, எல்லாம் பண்ணிடுவாங்க. ஆனா ரிப்போர்ட் எங்க கைக்கு வராது. முதல்ல, சாதாரணமா தான் தெரிஞ்சுது, அவங்களோட இந்த நடவடிக்கைகள் எல்லாம். ஆனா போன மாசம் எனக்கு நடந்த , அந்தக் கொடுமைக்குப் பிறகு தான் அந்த டாக்டர் அம்மாவோட, சுயரூபமே எனக்குத் தெரிய வந்தது " என்று சொல்லி, தேம்பத் தொடங்கினாள் பிரீத்தா.

அவளே, மேலும் தொடர்ந்தாள். " கரு முட்டை, சேகரிப்புன்னு சொல்லிட்டு, என்னை அரை மயக்கத்துக்குக் கொண்டு போயிட்டு, சோதனைக் குழாய், முறையில கருத்தரிக்க, வைக்க ஐ.வி.எப் பண்ணிட்டாங்க, சார். அது மட்டுமில்ல சார், இருபது நாளா என்னை வீட்டுக்கும் அனுப்பலை. அம்மா கிட்ட, நான் மெடிக்கல் கேம்ப் போறதா, சொல்லச் சொன்னாங்க சார் .ஆனா பத்து நாள் மட்டுமே , தள்ளிப் போயிட்டு, நல்ல வேளையா நான்...." என்று சொல்லி, நிறுத்தி விட்டாள், பிரீத்தா.

தீபக்கிற்குப் புரிந்தது. " இதைக் கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்குது எனக்கு. ம், சரி, இதுக்காகப் பணம் எவ்வளவு கொடுத்தாங்க உங்களுக்கு ? " என்று கேட்டான்.


அதற்கு அவள் சொன்ன பதிலைக் கேட்டு, மேலும் அதிர்ச்சி அடைந்தான் தீபக்.

( வரும்)
 
ஹாஸ்பிடல்ன்ற பேர்ல எவ்ளோ மோசடி பண்றாங்க...
 
அவளுக்கு எப்படி பணம் கொடுத்து இருப்பாங்க அவளுக்கு தெரியாமல் தானே பண்ணினாங்க ..?
சூப்பர் 😀
 
Top