Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வசந்த கால நதிகளிலே....1

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
வசந்தகால நதிகளிலே....


அத்தியாயம் 1:

பிறந்து 6 மாதமே ஆன கைக்குழந்தையை தொட்டிலில் போட்டு பெயர் வைக்கும் வைபவம் அமோகமாக நடந்து கொண்டிருந்தது அந்த வீட்டில். தாய் கவிதா, தகப்பன் தன சேகர் இருவரும் மகிழ்ச்சியே உருவாக தொட்டிலின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தனர். தனசேகரின் தாய் சிவகாமியம்மாளும், கவிதாவின் தாய் அலமேலம்மாவும் பேசிக்கொண்டிருந்தனர். வீட்டில் உறவினர்களின் கூட்டமும் நண்பர்களின் கூட்டமும் நிரன்பி இருந்தது. அந்தச் சிறிய வீடு இது வரை கண்டிராத கூட்டம். இவை எல்லாவற்றையும் அமைதியாக ரசித்தபடி ஓரமாக நின்று கொண்டிருந்தாள் ஜெயபாரதி என்ற ஜெயா.

அவளுக்கு இப்போது வயது 35ஐத் தாண்டி விட்டது. ஆனால் தனி மனுஷி தான். தங்கை கவிதா, தம்பி தீபன் இவர்களை வளர்த்து ஆளாக்குவதே தன் லட்சியம் என இருந்து விட்டாள். அப்பா இறந்து இப்போது தான் 3 ஆண்டுகள் முடிந்திருக்கின்றன. அம்மா பாவம்! சோகத்தை மறந்து விட்டு வளைய வருகிறாள்.

"ஏம்மா! ஜெயா! குழந்தைக்கு ரெண்டு பவுன்ல சங்கிலி போடௌறதாச் சொன்னியே? கழுத்துல ஒண்ணையும் காணோமே?" என்றபடி அம்மாவையும் அழைத்துக்கொண்டு வந்தாள் சிவகாமியம்மாள். அம்மாவின் முகத்தில் கலக்கம்.

"சங்கிலியை போட்டா, குழந்தைக்கு இடைஞ்சலா இருக்குமேன்னு தான் போடல்ல. வாங்கி வெச்சுட்டேன். இதோ கொண்டு வரேன்" என்றபடி உள்ளே போனாள் ஜெயா. அம்மா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் அம்மா.

"அக்கா! சங்கிலி கொண்டு வரப் போயிருக்கா." என்றாள் அம்மா கவிதாவிடம்.

"ஹூம்! வாங்குற சங்கிலியை எங்களையும் கூட்டிக்கிட்டுப் போய் வாங்கக் கூடாதா? எல்லாமே அவ விருப்பம் தான். சரியான சர்வாதிகாரி" என்றாள் கவிதா வாய்க்குள்.

"இந்தா பாருங்க! ரெண்டு பவுனுக்கு 3 மில்லி கூடத்தான் இருக்கே தவிர குறையல்ல. பாக்சுக்கள்ளயே பில் இருக்கு." என்றபடி பெட்டியை நீட்டினாள் ஜெயா. கவிதாவின் கைகளுக்கு அது போகுமுன் சிவகாமியம்மாள் பாய்ந்து வந்து வாங்கிக்கொண்டாள்.

"நல்ல கனமான சங்கிலி தான். பரவாயில்ல. இன்னும் கொஞ்சம் வேலைப்பாடோட வாங்கியிருக்கலாம். மொழுக்குனு இருக்கு" என்றாள்.

"வேலைப்பாடு அதிகம்னா சேதாரமும் அதிகம் அத்த! என்னால இது தான் முடிஞ்சது" என்றாள் ஜெயா சற்றே எரிச்சலுடன்.

"அத்தை! இது என் மகனுக்கு எங்கக்கா போட்ட சங்கிலி. நானே பார்க்கல்ல. அதுக்குள்ள நீங்க எதுக்கு தேவையில்லாம பேசுறீங்க? என்றாள் கவிதா.

"ஏம்மா? நான் பார்க்கக் கூடாதா முதல்ல?" என்றாள் சிவகாமியம்மாள்.

"ஓ! பார்க்கலாமே? பார்த்தா அதை உடனே பெட்டிக்குள்ள வைக்கணும்னு தோணும். அப்புறம் அதை என் கண்ணுலயே காட்ட மாட்டீங்க. இந்த கதையெல்லாம் வேண்டாம். முதல்ல தை என் கையில குடுங்க" என்றாள் கவிதா.

மானியாருக்கும் மருமகளுக்கும் நடக்கும் வாக்கு வாதத்தை விரும்பாதவளாக சற்றே விலகி நின்றாள் ஜெயா. அவள் எப்போதுமே வித்துயாசமானவள். நகை, புடவை எல்லாம் பிடிக்கும். ஆனால் மற்றவர் மனதைப் புண்படுத்தித்தான் அதை அடைய வேண்டுமென்றால் அது அவளுக்குப் பிடிக்காது. சற்று நேரத்தில் வாக்கு வாதம் நின்று விட்டது. கவிதாவின் கழுத்தில் அந்தப் புது செயின் மின்னியது. சிவகாமியம்மாளின் முகம் கடுகடுவென்றிருந்தது. இதில் எதிலும் பட்டுக்கொள்ளாமல் கேசரியை உண்பதில் முனைந்திருந்தான் கவிதாவின் கணவன் தனசேகர். கூட்டம் இப்போது சாப்பாட்டை ஒரு கை பார்த்துக்கொண்டிருந்தது. தன்னைச் சுற்றி பார்த்துக்கொண்டாள் ஜெயா. கூட்டத்தில் தனியாக நிற்பதாகப் பட்டது அவளுக்கு. யாரும் அவளைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை அம்மாவையும் சேர்த்து. அம்மாவின் காலத்துக்குப் பிறகு தனக்கு யார் ஆதரவு? என்ற பெரும் கேள்வி வழக்கம் போல மனதில் எழுந்தது.

"தம்பிக்கும் திருமணமாகி விட்டால், அவன் என்னைப் பார்த்துக்கொள்ள மாட்டானா? என் மேல் தான் அவனுக்கு உசிராச்சே?" என்று மூளை பைத்தியகாரத்தனமாக யோசித்தது. ஆனால் அவளது அனுபவமும் அறிவும், திருமணத்துக்குப் பிறகு அம்மாவே பஞ்சாய்ப்பறந்து போகிற காலத்தில் அக்காவாவது ஒன்றாவது? எனக் கண்டித்தது. நீண்ட பெருமூச்சஒன்றை இழுத்து விட்டாவள் விருந்தினர்களை கவனிக்கச் சென்றாள்.

இரவு ஒன்பது மணிக்கு வீடே காலியானது. இருக்கும் சாதம், சாம்பார், பொரியல் என எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கவிதாவின் குடும்பம் கிளம்பி விட்டது. தீபன் ஆசுவாசமாக சொஃபாவில் அமர்ந்திருந்தான்.

"பாவாண்டா நீ தீபன்! சரியாவே சாப்பிடல்ல. உனக்காக நான் கொஞ்சம் பாயசம் மட்டும் எடுத்து வெச்சேன். குடி" என்று கிளாசை நீட்டினாள் அம்மா.

சுருக்கென்றது ஜெயாவுக்கு. அவள் உணவே உண்ணவில்லை. தம்பி பாயசம் சாப்பிடவில்லை என்பதைக் கவனித்த அம்மாவுக்கு, மூத்த மகள் சாப்பிடவே இல்லை எனத் தெரியவில்லையா? எனக்கென்று ஏதாவது எடுத்து வைத்தாளா? என யியசித்தாள்.

"ஏம்மா? எனக்குன்னு ஏதாவது எடுத்து வெச்சிருக்கியா நீ?"

"ஐயையோ! ஏன் ஜெயா? நீயும் பாயசம் சாப்பிடலியா?" என்றாள் அம்மா.

"ஹூம்! நான் சாப்பிடவே இல்லையேம்மா?" என்று சொல்ல நினைத்தவள் வழக்கம் போல மௌனமானாள்.

"விழா சிறப்பா நடந்ததுது ஜெயா. சாப்பாடு ரொம்பப் பிரமாதம்னு அந்த ராட்சசியே சொல்லிட்டாங்க." என்றாள் அலமேலம்மாள். சிரித்தான் தீபன்.

"ஏம்மா? கவிதா மாமியாரை இப்பிடிச் சொல்ற?" என்று மேலும் சிரித்தான்.

"ஆபீசுல எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் கிட்ட சொல்லி ஏற்பாடு செஞ்சேன்மா. எல்லாருக்கும் பிடிச்சிருந்தா சந்தோஷம் தான்." என்றாள் மெல்ல.

"சரி சரி! போய்ப்படு ஜெயா! நாளைக்கு ஆபீசுக்குப் போகணும் இல்ல! தீபன் நீயும் ஃபோனைப் பார்த்துக்கிட்டு இருக்காம போய்ப் படுப்பா. நாளைக்கு இண்டர்வியூ இருக்குன்னு சொன்னியே?" என்றாள் கனிவாக அம்மா.

தனக்கென உள்ள அறையில் போய்ப்படுத்தாள் ஜெயா. சிறியது என்றாலும் அவளுக்கு என பிரத்தியேகமானது. எந்த இடையூறும் இல்லாமல் சிந்திக்கலாம். அழலாம். எல்லாம் அவளது இஷ்டம் தான். அதனால் அவளுக்கு அந்த அறை ஒரு தோழி போல.

"என் வாழ்க்கை ஏன் இப்படி உப்புச் சப்பே இல்லாமல் இருக்கிறது? அப்படி ஒன்றும் வறுமையோ இதர பிரச்சனைகளோ இல்லையே வீட்டில்? நான் சம்பாதித்து தான் கவிதாவையும் தீபனையும் படிக்க வைத்தேன் என்பது உண்மை தான். ஆனால் நான் அப்படிச் செய்யாமல் இருந்திருந்தாலும் அப்பாவின் பணத்தில் அது நடந்திருக்கும் அல்லவா? அப்படியானால் நான் ஏன் இப்படி ஆனேன்? என் விதியே இது தானா?"

சட்டென்று மனதில் ராமகிருஷ்ணனின் முகம் ஆடியது. அவளுக்கே அதிர்ச்சியாக இருந்தது.

"இந்த நேரத்தில் அவர் முகம் ஏன் வர வேண்டும்? அலுவலகத்தில் ஒன்றாக வேலை பார்க்கிறோம் என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது? காதல் கொள்ளவோ, வெட்கப்படவோ எனக்கு என்ன வயதா இருக்கிறது? அப்படியே இருந்தாலும் ராமகிருஷ்ணனின் மேல் எப்படிக் காதல் வர முடியும் எனக்கு? ஒல்லியாக கறுப்பாக நெடுநெடுவெறு இருக்கிறார். தேவையற்ற பேச்சு, தேவையற்ற பார்வை என எதுவும் இல்லை. சுமுகமாகத்தான் பேசுவார். ஆனால் யாரும் வரம்பு மீறிப் பேச முடியாது.

"இப்போது எனக்கு அவர் நினைவு வருவது போல, அவருக்கும் என் நினைவு வருமா? எப்படி வரும்? வீட்டில் மனைவி குழந்தைகளோடு பேசிக்கொண்டு ஒன்றாக டிவி பார்த்துக்கொண்டு இருப்பாராக இருக்கும். ஹூம்" என்றவள் ஏதேதோ எண்ணங்கள் தாலாட்ட உறங்கிப் போனாள்.
 
Top