Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வசந்தகால நதிகளிலே....5

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 5:


ராஜா விஜி திருமணத்துக்குப் போய் வந்ததிலிருந்து ஜெயாவுக்கும் ராமகிருஷ்ணனுக்கும் நெருக்கம் மிகவும் அதிகமானது. ஒரு முறை அவரது தாய் வேலம்மாள், ஊரிலிருந்து வந்திருக்கும் போது தங்கள் ஊரில் இருக்கும் பழமையான கோயில்களை அழைத்துச் சென்று காட்டினாள் ஜெயா. வேலம்மாள் மிகவும் நல்ல மாதிரியாகத் தோன்றினார். நெல்லைத் தமிழ் மணக்கும் அவளது பேச்சு ஜெயாவுக்கு மிகவும் பிடித்துப் போனது. அப்படி ஒரு நாள் கோயில் பிராகாரத்தில் பிரசாதங்களைச் சுவைத்தபடி இருவரும் அமர்ந்திருந்தனர்.

"ஏன் தாயீ! நீ பாக்க இம்புட்டு அழகா இருக்கியே? நல்லாவும் படிச்சு வேலைக்குப் போற? ஆனா ஏன் இன்னமும் கல்யாணம் கட்டிக்கிடாமா இருக்கே?" என்றார் பட்டென.

என்ன பதில் சொல்வது எனத் திணறிப் போனாள் ஜெயா.

"அது வந்தும்மா! வந்து...எங்க வீட்டுல...." என்று இழுத்தாள்.

"அப்படி ஒண்ணும் கஷ்டமில்லேன்னு ராமு சொன்னானே?"

மனதில் கூடைப் பூ பூத்தது ஜெயாவுக்கு. அப்படியானால் என்னைப் பற்றித் தன் தாயிடம் பேசியிருக்கிறான்.

"அது என்னவோ உண்மைதாங்கம்மா. ஆனா எங்கம்மாவுக்கு என் மேல ரொம்பப் பாசம். கட்டிக்குடுத்து அனுப்ப மனசு வரலேன்னு நெனக்கிறேன்." என்றாள். அவள் சொல்லும் காரணம் அர்த்தமற்றது என அவளுக்கே தெரிந்தது.

"ஆத்தா! ஜெயா! நான் உலகத்தைப் பார்த்தவம்மா! சில சமயம் மூணு நாலு பிள்ளைங்க இருக்குற வீட்டுல இப்படி ஒரு பிள்ளை தங்கிடும். பொதுவா அது கடைசிப் பிள்ளையாத்தான் இருக்கும். ஏன்னா அந்தக் கடைசிப் பிள்ளை வளர்ந்து ஆளாகும் போது பெற்றோருக்கு வயசாயிரும். அவங்களால ஓடியாடி எதுவும் செய்ய முடியாது. தங்களைப் பார்த்துக்கவும், வருமானத்தும் அந்தக் கடைசிப் பிள்ளையை அப்படியே விட்டிருவாங்க. ஹூம்! ஆனா நீ முதப் பிள்ளையாப் போயிட்ட." என்றாள்.

சற்று நேரம் மௌனமாகக் கடந்தது.

"ஏன் ஜெயா? நான் வேணும்னா உங்க அம்மா கிட்ட வந்து பேசட்டுமா?"

"என்னன்னு பேசுவீங்க?"

"இந்த மாதிரி என் மகனுக்கு உங்க மகளைக் கட்டிக்குடுன்னு கேக்கறேன்." என்றாள்.

ஒரு சில விநாடிகளுக்கு முதியவள் சொன்னதன் அர்த்தம் முழுமையாகப் புரியாமல் பேந்தப் பேந்த விழித்தாள் ஜெயா.

"என்ன?....என்ன சொன்னீங்க?" என்றாள் குழறலாக.

"அதான் கண்ணு! என் மகன் ராமுவுக்கு உன்னைப் பெண் கேட்டு வரேன்னு சொன்னேன் தாயீ" என்றாள் சாவதானமாக.

மகிழ்ச்சி, குழப்பம் எல்லாவற்றுக்கும் மேலாக அதிர்ச்சி எனத் தவித்து ஜெயாவின் உள்ளம். 35 வயதுக்கு மேல் இப்படி ஒரு வாழ்க்கை தனக்கு அமையும் என அவள் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. ராமகிருஷ்ணன் மிகவும் மென்மையான குணம் உடையவர். அவரைக் கணவராக அடையக் குடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அம்மா? அம்மாவும் தம்பியும் என்ன சொல்வார்களோ? எல்லாவற்றுக்கும் மேலாக ஏன் ராமு விவாகரத்துச் செய்தார்? அந்த விவரம் எதுவுமே எனக்குத் தெரியாதே? என்று பலவாறு சிந்தித்தவாறு அமர்ந்திருந்தாள்.

"உன் குழப்பம் எனக்குப் புரியுது தாயீ! உனக்கும் என் மகன் மேல இஷ்டம் தான். அதுவும் தெரியும் எனக்கு. என் மகன் விவாகரத்து ஆனவன் அது தானே உன் பிரச்சனை?" என்றாள் வேலம்மாள்.

"அது என் பிரச்சனை இல்லம்மா! ஆனா என்ன காரணம்? நான் பழகுன வரையில அவர் ரொம்ப கண்ணியமான நல்ல மனிதர். ஆனா.....ஏன்..." முடிக்க முடியாமல் தயங்கினாள்.

நீண்ட பெருமூச்சொன்று புறப்பட்டது அந்தத் தாயிடமிருந்து.

"விதி தாயீ! எல்லாம் விதி! எனக்கு அழகுப்பிள்ளை ஒருத்தி பொறந்தா...."

"தெரியும்மா! ராமு சார் சொல்லியிருக்காரு."

"பெறகென்ன? நல்லதாப் போச்சு. என் மக இறந்ததும் ராமு வேலை தேடி இங்க வந்துட்டான். ஆனா அவன் மனசுல ஒரு வைராக்கியம். தன் தங்கச்சி மாதிரி வாழ்க்கை இழந்தவளுக்கு வாழ்வு குடுக்கணும்னு நெனச்சான். நானும் சரீன்னு சொல்லிட்டேன்."

உடல் சிலிர்த்தது ஜெயாவுக்கு. எத்தனை பரந்த நல்ல மனது?

"அவன் வேற ஒரு ஆபீசுல வேலை செஞ்சுக்கிட்டு இருந்தான். அப்பந்தான் அவன் கூட வேலை செய்யுற துரைராஜ் ரொம்ப நெருக்கமானான். துரைக்கு ஒரு தங்கச்சி. அது யார் கிட்டயோ நெருங்கிப் பழகி கெட்டுப் போயிடிச்சுன்னு ஊரெல்லாம் ஒரே வதந்தி. பல தடவை கல்யாணம் பேசுனா ங்க. மாப்பிள்ளை வீட்டார் வருவாங்க, அக்கம் பக்கத்துல விஷயத்தைக் கேள்விப்பட்டுப் போயிருவாங்க. இப்படியே 8 தடவைக்கு மேல ஆயிடிச்சு."

"பாவம் அந்தப் பொண்ணு" என்றாள் ஜெயா.

அவளை விநோதமாகப் பார்த்து விட்டுத் தொடர்ந்தாள் முதியவள்.

"அப்ப துரைராஜும் அவங்க அம்மாவும் ராமுவை கெஞ்சுனாங்க. தன் தங்கச்சிக்கு வாழ்க்கைக் குடுக்கும்படி கேட்டுக்கிட்டாங்க. ராமுவும் பாவம் அந்தப் பொண்ணுன்னு சொல்லி ஒத்துக்கிட்டான். அந்தப் பொண்ணையும் கேட்டான். அதுவும் சம்மதம்னு சொல்லிடிச்சு. கல்யாணம் ஏற்பாடாச்சு. நானும் எங்க ஊர்ல இருந்து சாதி சனத்தைக் கூட்டிக்கிட்டு வந்துட்டேன். கல்யாண மண்டபம் சின்னதுன்னாலும் அதுலயும் நிறைய ஆளுங்க. முத நாளு மாப்பிள்ளை அழைப்பு நடந்து முடிஞ்சது. ஃபோட்டோ எல்லாம் எடுத்து சாப்பாடும் முடிஞ்சது."

"உம்"

"ராத்திரி மணி 11 இருக்கும் துரைராஜும் அவங்கம்மாவும் எங்களைத் தேடி வந்தாங்க. வந்து...அவங்க பொண்ணு வேற ஒருத்தரை விரும்புறதாகவும் அவன் இத்தனை நாள் எங்கியோ வெளி நாட்டுல இருந்ததாகவும் இப்பத் திரும்பி வந்தாச்சுன்னும் சொன்னாங்க."

புடைவைத்தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டாள் வேலம்மாள்.

"எனக்கு பக்குன்னு ஆகிப் போச்சு. இப்ப அதுகென்னான்னு கேட்டோம். அந்தப் பொண்ணு அவனைத் தவிர வேற யாரையும் கட்டிக்கட மாட்டேன்னு சொல்லுது. இல்லேன்னா மருந்தைக் குடிச்சுட்டு செத்துடுவேன்னு மிரட்டுதுன்னு துரையும் அவங்கம்மாவும் ஒரே அழுகை. எனக்கு வந்த கோபத்துல கத்த ஆரம்பிச்சேன். ஆனா ராமு என்னை சமாதானப்படுத்தினான். இஷ்டமில்லாத பொண்ணைக் கட்டிக்கிட்டு வாழ்க்கையை தொலைக்க முடியாதுன்னு சொல்லிட்டான். நாங்க மௌனமா அவமானத்தோட வெளிய வந்துட்டோம். மறு நாள் கல்யாணம் அந்தப் பொண்ணுக்கும் அவ காதலிச்ச பையனுக்கும் நடந்தது. ஆனா பாவம் ராமு! மன நிம்மதி போயி நிலை குழலைஞ்சு போயிட்டான்."

தன் கண்களிலும் அப்போது தான் நீர் வடிவதை உணர்ந்தாள் ஜெயா. அவசரமாக துடைத்துக்கொண்டு வேலம்மாளை ஏறிட்டாள். பெரியவளின் பார்வை தொலைவில் எங்கோ நிலைத்திருந்தது.

"அப்புறம்?" என்றாள் ஜெயா.

"அப்புறம் என்ன? வேலையை மாத்திக்கிட்டு இடத்தை மாத்திக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா அவமானத்தை மறந்தான் என் மகன். அப்பந்தான் உன்னைப் பார்த்தான். அவனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சுப் போச்சு. ஆனா சூடு பட்டுட்டான் இல்ல? அதனால பேச ரொம்ப தயங்குனான். உனக்கும் விருப்பம் இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு என்னைக் கூப்பிட்டான். இப்ப நான் இங்க வந்தது எதுக்குன்னு நெனச்சே? உங்க கல்யாணத்தை முடிக்கத்தான்." என்றாள் வேலம்மாள்.

மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. ஆனாலும் சற்றே எங்கோ நெருட அமைதியானாள்.

"என்னமும் கேக்கணுமா தாயீ? மனசுல வெச்சுக்காதே! கேட்டுப்புடு"

"ஆனா...இன்னமும் அவரு கல்யாண ஃபோட்டோவை ஏன் வெச்சிருக்காரு. அதனால தான் அவரை விவாகரத்து ஆனவருன்னு எல்லாரும் சொல்றாங்க?"

"நீ இதைக் கேக்கல்லன்னா தான் நான் ஆச்சரியப்பட்டிருப்பேன். அவனுக்கு ஒவ்வொரு தடவையும் சலனம் வரும் போது அந்த ஃபோட்டோவைப் பார்த்துப்பான். அந்த அவமானமும் கேவலமும் நினைவு வரும். சலனம் போயிரும். ஆனா உன் கூட வெளியூர் வந்து திரும்புனதிலிருந்து அந்தப் படம் அங்க இல்லை தாயீ." என்றாள்.

மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள் ஜெயா.

"அம்மா..."

"உனக்கு என் மகனைக் கட்டிக்க சம்மதம்னா என்னை அத்தைன்னு கூப்பிடு. இல்லேன்ன்னா அம்மான்னே கூப்பிடு. நல்லா யோசி தாயீ. நான் பூக்கடையில நிக்கேன்." என்று சொல்லி விட்டுப் போய் விட்டாள் வேலம்மாள்.

பிரகாரத்தில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்தாள் ஜெயா.

"இத்தனை வயதுக்கு மேல் நான் திருமணம் செய்து கொண்டாள் ஊர் உலகம் என்ன பேசும்? முதலிம் அம்மாவும் தம்பியும் என்ன நினைப்பார்கள்? இந்த வயதில் கல்யாணத்துக்கு அலைக்கிறாள் எனக் கேவலமாக நினைக்க மாட்டார்களா? ஆனால் 25 வயதுத் தம்பிக்குக் கல்யாணம் செய்ய வேண்டும் என நினைக்கும் அம்மா, எனது பருவ வயதில் ஏன் அப்படி நினைக்கவில்லை? கவிதாவுக்குத் திருமணம் என யோசித்தாளே தவிர, என்னைப் பற்றி மறந்து தானே போனாள்? எனக்கென்று ஒரு குடும்பம் வேண்டாமா? அம்மாவின் காலத்துக்குப் பின் நான் தம்பியின் ஆதரவிலோ, கவிதாவின் ஆதரவிலோ ஒரு அனாதையைப் போலவா காலம் கழிக்க வேண்டும்? எனக்கும் நல்ல வாழ்க்கை வாழ உரிமை இருக்கிறது. 36 வயதெல்லாம் ஒரு வயதே அல்ல. ராமுவுக்கும் 42 தான் ஆகிறது. எங்களால் புதிய வாழ்க்கை தொடங்க முடியாதா என்ன? இதில ஊர் என்ன பேசினால் என்ன? அவர்களா என்னை கடைசி காலத்தில் கவனித்துக்கொள்ளப் போகிறார்கள்? அவர்களா என் வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்கப் போகிறார்கள்?"

முடிவு செய்தாள் ஜெயா. பூக்கடைக்குப் போய் "அத்தை" என்றாள்.

மகிழ்ச்சியும் ஆனந்தமும் போட்டி போட மூன்று முழம் மல்லிக்கைப்பூ வாங்கி ஜெயாவின் தலையில் சூட்டினாள் வேலம்மாள்.

"என் கவலையெல்லாம் பறந்து போச்சு தாயீ! எங்கே என் மகன் ரெண்டாந் தடவையும் அடிபட்டிருவானோன்னு நெனச்சேன். என்னை அத்தையின்னு கூப்பிட்டு வயத்துல பாலை வார்த்தேம்மா" என்று அணைத்துக்கொண்டாள்.

"அத்தை! எங்கம்மாவையும் தம்பியையும் நெனச்சாத்தான் எனக்கு பயமா இருக்கு."

"அதைப் பத்தி நீ கவலைப் படாதே! நானும் ராமுவும் வரோம். வந்து பேசி சரி பண்ணிடறோம். வீட்டுல உங்கம்மா காதுல விஷயத்தைப் போட்டு வெச்சிரு தாயீ! இன்னைக்கு வெள்ளிக்கிழமையா? வர ஞாயித்துக்கிழமை நாள் நல்லா இருக்கு. உன்னைப் பெண் பார்க்க அன்னைக்கு என் மகனோட வரேன்." என்றாள் வேலம்மாள்.

இது வரையில் அனுபவித்தறியாத புதிய உணர்வுகள் அலை மோத வீடு நோக்கிப் பறந்தாள் ஜெயா.
 
Top