Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வசந்தகால நதிகளிலே....4

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அன்பு நட்புகளே, நேற்று எங்கள் இல்லத்தில் திதி நடந்ததால் என்னால் பதிவு போட முடியவில்லை. தாமதத்துக்கும் உங்களைக் காக்க வைத்ததற்கும் வருந்துகிறேன். திங்கள் முதல் வெள்ளி வரை என் பதிவுகள் இறைவவன் அருளால் தொடரும்.

அத்தியாயம் 4:
மதிய உணவுக்குப் பிறகு ஒரு மணி நேரத்தில் ஊருக்குப் போய்ச் சேர்ந்தது பஸ். ஜெயாவுக்கும் மற்ற பெண்களுக்கும் முதல் தெருவில் இருந்த வீட்டில் இடம் கொடுத்தார்கள். ராமகிருஷ்ணன் மற்ற ஆண்களோடு அதற்கு நேர் எதிரே இருந்த வீட்டில் தங்கினார். தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் தன் பெட்டியை வைத்து விட்டு வெளியில் வந்தாள். வெயிலே தெரியவில்லை. அத்தனை மரங்கள் சூழ்ந்து பசுமையாக இருந்தது அந்தச் சிறிய கிராமம். ஒரு வீட்டுத் திண்ணையில் இளநீர்க் காய்கள் வெட்டி வைக்கப்பட்டிருந்தன. குடித்தால் எத்தனை நன்றாக இருக்கும்? என எண்ணியபடி அதை நோக்கி நடந்தாள். கூடவே இன்னொரு பெண் வந்தாள்.

"வாங்கக்கா! நானும் இளநீர் குடிக்கத்தான் போறேன்." என்றாள். பஸ்ஸில் பார்த்துச் சிரித்ததோடு சரி. அதிகம் பேசவில்லை. ஆனால் அந்தப் பெண் சகஜமாகப் பேசினாள்.

"எவ்வளவு ரூவான்னு தெரியலையே?"

சிரித்தாள் அந்தப் பெண்.

"அக்கா! இது ராஜாண்ணன் வீட்டு இளநீர். வந்தவங்களுக்குக் குடுக்கத்தான் வெட்டி வெச்சிருக்காங்க. சும்மா குடிங்க" என்றாள்.

கொதித்த வயிற்றுக்கு இளநீர் அமுதமாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் சேர ஆரம்பித்தனர். அதில் ராமகிருஷ்ணனும் இருந்தார்.

"சார்! எங்க ஊர்ல நிறைய தோப்பு, வயல் இதெல்லாம் இருக்கு சும்மா சுத்திப் பார்த்துட்டு வாங்க" என்றான் ராஜா.

ஜெயாவுக்கும் ஆசையாக இருந்தது. அவள் இதுவரையில் இவற்றையெல்லாம் படங்களில் பார்த்ததோடு சரி.

"நானும் வரேன் சார்" என்றாள் உடனடியாக.

ராஜா சொன்ன வழியில் மௌனமாக நடந்தனர். சங்கடமாக உணர்ந்தாள் ஜெயா. தெரியாத ஊர், தெரியாத மனிதர்கள். இப்படி நான் இவருடன் நடந்தால் தவறாக நினைக்க மாட்டார்களா? என்று எண்ணி பின்னால் வந்தாள்.

அவர்கள் நடக்க நடக்க அழகான காட்சிகள் முன்னால் விரிந்தன. ஒரு தோப்பில் முழுவதும் வாழை மரங்கள் நிறைந்திருந்தன. பக்கத்தில் நெல் வயல். பம்பு செட்டிலிருந்து நீர் போய்க்கொண்டிருக்க அதில் சில சிறுவர்கள் ஆனந்தமாகக் குளித்துக்கொண்டிருந்தனர். பார்க்கப் பார்க்க பரவசமாக இருந்தது ஜெயாவுக்கு. தன்னை அறியாமல் ராமகிருஷ்ணனுடன் சேர்ந்து நடந்தாள்.

"வாழறதுன்னா இப்படி வாழணும் சார்! கவலை கலக்கம் எதுவும் இல்லை பாருங்க. யாருக்கும் கை கட்டி நிக்க வேண்டாம். இயற்கையை நம்பின வாழ்க்கை." என்றாள்.

அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தார் ராமகிருஷ்ணன்.

"என்ன சார் அப்படிப் பார்க்கறீங்க?"

"நீங்க இந்த நாட்டுல தான் இருக்கீங்களா? இல்லை வெளி நாட்டுல இருந்து வரீங்களான்னு பாக்கறேன்."

இப்போது விழிப்பது ஜெயாவின் முறை.

"இல்ல! நம்ம நாட்டுல விவசாயிங்களோட நிலைமை தெரியாமப் பேசுறீங்களே? அதான் கேட்டேன்."

"அவங்களுக்கு என்ன சார்? இயற்கையோட ஒட்டி வாழுறாங்க. குடுத்து வெச்சவங்க."

"என்னத்தைச் சொல்ல ஜெயா? நம்ம தமிழ்நாட்டுல விவாசியிங்க நல்லா வாழல்ல. மழை பெஞ்சாலும் தப்பு, பெய்யாட்டாலும் நஷ்டம். கால நிலை மாறிக்கிட்டு வர இந்தக் காலத்துல அவங்களால எதுக்குன்னு ஈடு குடுக்க முடியும்? அரசாங்கம் நெனச்சு நெனச்சு ஒண்ணு சொல்லுது, இன்னொண்ணு செய்யுது. இவங்க என்ன செய்வாங்க?" என்றார்.

"ஏயப்பா! இவங்க வாழ்க்கையிலயும் இத்தனை கஷ்டம் இருக்கா?"

"யார் வாழ்க்கையில தான் கஷ்டம் இல்ல ஜெயா? ஆனா விவசாயிங்க வாழ்க்கை ரொம்ப கஷ்டம். ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க. ஒரு ஃபேக்டரி வெச்சு தண்ணி கேன் விக்குறங்க கூட அவங்க விக்கிற பொருளுக்கு அவங்க தான் விலை வெக்கறாங்க இல்லியா?"

இது என்ன கேள்வி? என்பது போலப் பார்த்து விட்டு ஆமெனத் தலையசைத்தாள்.

"ஆனா விவசாயிங்க விக்குற பொருளுக்கு அவங்க விலை வெக்க முடியாது. அரசாங்கம், நடுவுல ஏஜெண்டுங்கன்னு ஏகப்பட்ட கைகள் தாண்டி இவங்க கைக்கு வர பணம் ரொம்பவே கம்மி. அதனால தான் இயற்கையை வளர்க்குற விவசாயிங்க ஏழையாவும், அதை அழிக்குற முதலாளிங்க பணக்காரங்களாவும் இருக்காங்க." என்றார்.

பேசிய ராமகிருஷ்ணனை ஏறிட்டுப் பார்த்தாள்.

"இவ்வளவு விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியும் சார்?"

"நானும் விவசாயக் குடும்பத்துல இருந்து வந்தவன் தான் ஜெயா. எங்கப்பா கடன் தொல்லை தாங்காம பூச்சி மருந்து குடிச்சு இறந்து போனாரு." என்றார்.

பரிதாபமாக இருந்தது ஜெயாவுக்கு. பாவம் ராமகிருஷ்ணன். இவர் மனதில் எத்தனை பிரச்சனைகளோ?

இருவரும் பாலத்தின் மேலிருந்த ஒரு கல்லில் அமர்ந்து கொண்டனர். இளமாலை வெயில் சுகமாக இருந்தது.

"சார்! இது வரைக்கும் உங்களைப் பத்தி நம்ம ஆபீசுல யாருக்குமே தெரியலியே?" என்றாள் ஜெயா.

"உங்களைப் பத்தியும் கூட அதிகம் தெரியாது ஜெயா. உங்களுக்கு இன்னமும் கல்யாணம் ஆகலைன்றது தவிர வேற எதுவும் தெரியவே இல்லையே?" என்றார்.

"ம்ச்! என்னைப் பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் பெருசா இல்லை சார்! எங்க அப்பா வேலையே பார்க்கல்ல. மூதாதையர் சொத்து இருந்தது. இப்ப மிஞ்சியிருக்குறது நாங்க குடியிருக்குற வீடு ஒண்ணு தான். நான் வேலைக்கு வந்த புதுசுல எங்கப்பா காலமாயிட்டாரு. இப்ப வீட்டுல நான் எங்கம்மா, தம்பி தீபன் இவ்வளவு தான். இன்னொரு தங்கச்சி கவிதாவைக் கட்டிக் குடுத்தாச்சு. "

"ரொம்ப சுருக்கமா சொல்லிட்டீங்க. ஆனா என் வாழ்க்கை அத்தனை சுருக்கமா சொல்ற கதை இல்லியே?"

"உங்களுக்கு இஷ்டமில்லேன்னா சொல்ல வேண்டாம்."

"இஷ்டமில்லைன்னா எங்கப்பா பூச்சி மருந்து குடிச்சதையே கூட நான் சொல்லியிருக்க மாட்டேனே?" என்றார்.

இருவரின் பார்வையும் ஒரு கணம் சந்தித்து மீண்டது. அவசரமாகப் பார்வையை அகற்றினாள் ஜெயா.

"எனக்கு சொந்த ஊரு திருநெல்வேலிப்பக்கம் சின்ன கிராமம். எங்களுக்கு 3 ஏக்கரா நிலம் இருந்தது. நான் எங்கம்மா, எங்கப்பா என் தங்கச்சின்னு சந்தோஷமாத்தான் இருந்தோம். என் தங்கச்சி எங்க மாமன் மகனை விரும்பினா. எங்கம்மாவுக்கு இதுல கொஞ்சம் கூட இஷ்டமில்ல. ஏன்னா அவன் சரியான குடிகாரன் அதோட பொண்ணுங்க பின்னாடி சுத்துறவன். ஆனா என் தங்கச்சி அவனைத்தான் கட்டிக்குவேன்னு ஒத்தைக் கால்ல நின்னா. வேற வழியில்லாம எங்கம்மாவும் அப்பாவும் மாமா வீட்டுல போய்ப் பேசினாங்க."

கையில் கிடைத்த கல்லை எடுத்துத் தூர எறிந்தார் ராமகிருஷ்ணன். முகம் இறுக்கமாக இருந்தது.

"ஆனா எங்க மாமாவும் அவர் மகன் துரைச்சாமியும் சேர்ந்துக்கிட்டு 3 லட்சம் பணம் குடுத்தாத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு பிடிவாதம் பிடிச்சாங்க. எங்கப்பாவும் வேற வழியில்லாம நிலத்தை அடமானம் வெச்சு பணத்தைக் குடுத்துக் கல்யாணமும் செஞ்சு வெச்சாங்க."

இப்போது மற்றொரு கல் இன்னமும் தூரப் பறந்தது.

"உம் சொல்லுங்க" என்று ஊக்கினாள் ஜெயா.

"ஹூம்! ஆனா என் தங்கச்சி அங்க சந்தோஷமா இல்ல. கல்யாணமான ரெண்டே நாள்ல தான் தப்பு செஞ்சிட்டோம்னு அவளுக்குத் தெரிஞ்சு போச்சு. எங்களையும் கடங்காரங்க ரொம்ப தொந்தரவு பண்றாங்கன்னு புரிஞ்சுக்கிட்டா. நானும் எங்கம்மாவும் ஆறுதல் சொல்லி அவளை சமாதானப்படுத்துனோம். ஆனா...ஆனா பிரச்சனை விமலா ரூபத்துல வந்தது."

"யாரு விமலா?"

"துரைச்சாமிக்கு இருந்த இன்னொரு தொடர்பு. அந்தப் பொண்ணு படிச்சிருந்தது. எனக்கு பதில் சொல்லு, எனக்குத்தான் நீ முதல்ல தாலி கட்டியிருக்கேன்னு வீட்டுக்கு வந்து ஒரே கலாட்டா. என் தங்கச்சி இடிஞ்சே போச்சு. அப்ப அவ முழுகாம வேற இருந்தா." என்று கண்கள் பனிக்க நிறுத்தினார்.

ஜெயாவின் நெஞ்சும் கனமாக இருந்தது.

"சொத்துல பங்கு இல்லைன்னா கோர்ட்டுக்குப் போவேன் அது இதுன்னு ரொம்ப கௌரவமா வாழ்ந்த எங்க குடும்பத்தை அசிங்கப்படுத்திட்டா அந்த விமலா. எங்களுக்கு என்ன செய்யன்னே தெரியல்ல. ஒரு கட்டத்துல நான் அவளை வெட்டவே போயிட்டேன். அப்பத்தான் எங்கம்மா தன் நகையெல்லாம் குடுத்து அவளை அனுப்பி வெச்சாங்க. ஆனா இதையெல்லாம் தாங்கவே முடியாத என் தங்கச்சி பிரசவத்துல இறந்தே போயிட்டா. குழந்தையும் இறந்தே தான் பிறந்தது." என்று நிறுத்தினார்.

அவரது தோள்கள் குலுங்குவதிலிருந்து அழுகிறார் எனப் புரிந்து கொண்டாள். தோள் மேல் கை வைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் என எழுந்த துடிப்பை அடக்கிக் கொண்டாள்.

"சே! ரொம்ப சோகமா இருக்குங்க சார்! பாவம் உங்க தங்கச்சி."

"உண்மை தான் ஜெயா! ஆனா அதை விடப் பாவம் எங்கம்மா! இன்னமும் கிராமத்துல எங்க வீட்டுல தனியா உக்காந்துக்கிட்டு இருக்காங்க. எங்கூட வந்து இருன்னாலும் கேக்க மாட்டேங்குறாங்க." என்று சொல்லி நிறுத்தினார்.

"சார்! உங்க கல்யாணம்.....அது எப்ப...ஏன் வந்து....." முடிக்க முடியாமல் நிறுத்தினாள்.

"ம்ச்! அதுல ஒண்ணும் பெருசா சொல்றதுக்கு இல்ல ஜெயா. சரி வாங்க போவோம். இருட்டுறதுக்கு முன்னால போனாத்தான் நல்லது. இல்லேன்னா இங்க சில சமயம் பாம்பு கூட வரலாம்." என்றார்.

தனது திருமணத்தைப் பற்றி அவர் பேச விரும்பவில்லை எனப் புரிந்து கொண்டு அதைப் பற்றி பிறகு பேசாமல் நடந்தாள்.

"ஏன் ஜெயா! உங்க தங்கச்சிக்குக் கல்யாணம் ஆயிடிச்சுன்னு சொன்னீங்க. ஆனா நீங்க ஏன் செஞ்சுக்கல்ல? லவ் ஃபெயிலியரா?" என்றார்.

"அப்படியெல்லாம் எதுவும் இல்ல சார்! ஏனோ எங்க வீட்டுல என் கல்யாணத்தைப் பத்தி யாரும் யோசிக்கல்லேன்னு நினைக்கறேன்." என்றாள்.

அந்த மாலை நேரத்தில் குளுவென்ற தென்றல் காற்றில் ராமகிருஷ்ணனோடு நடப்பது இதமாக இருந்தது. தன்னைப் போல தனியாகத் தவிக்கும் ஒரு மனிதர். வாழ்வில் பல துன்பங்களை அனுபவித்தவர் என்ற முறையில் அவர் மேல் மரியாதை ஏற்பட்டிருந்தது அவளுக்கு. மெல்லிய காதல் அரும்பியது என்று கூடச் சொல்லலாம். ஆனால் அவர் தன் திருமணத்தைப் பற்றிப் பேசத் தயங்குவது ஏன்? இதில் என்ன மர்மம் இருக்கும்? ஒருவேளை அந்தப் பெண்ணை இவர் இன்னமும் மனதில் வைத்திருக்கிறாரோ? மறக்கவே முடியாத உண்மைக் காதலோ?

அந்த நினைப்பே பிடிக்கவில்லை ஜெயாவுக்கு. இத்தனை சொன்ன மனிதர் அதையும் சொல்ல மாட்டாரா என்ன? பொறுமையாகவே இருப்போம். என் மேல் நம்பிக்கை வைத்து அவராகவே சொல்கிறாரா பார்ப்போம். என எண்ணிக் கொண்டாள். இருட்டும் நேரம் அவர்கள் தெருவை நெருங்கி விட்டார்கள். மாலை கோயிலில் வைத்து முறையாக இரு குடும்பங்களும் தட்டு மாற்றிக்கொள்ள இருப்பதாகவும் உடனே கோயிலுக்கு வரச் சொன்னதாகவும் ஒரு ஆள் வந்து சொல்லிச் சென்றான்.

ஏனோ தன்னை அழகாக அலங்கரித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்ற கொண்டு வந்திருந்த புடைவைகளில் அழகான ஆழ்ந்த நீல நிறத்தில் இருந்ததை எடுத்து அதற்கு மேட்சிங்கான தோடுகள், வளையல்கள், சங்கிலி எல்லாம் அணிந்து கொண்டாள். பூக்காரம்மா நிறைய மல்லிகைப் பூ கொடுத்து விட்டுப் போயிருந்தாள். அதிலிருந்து இரு முழம் எடுத்து தளரப் பின்னிய கூந்தலில் சூட்டிக்கொண்டாள்.

"அக்கா! இப்ப உங்களைப் பாக்க தேவதை மாதிரி இருக்கு" என்று சொல்லி பக்கத்தில் வந்து கிள்ளினாள் அந்த இளநீர்ப்பெண். மனம் முழுக்க மகிழ்ச்சியில் மிதக்க கோயிலை நோக்கிச் சென்றாள் ஜெயா.
 
Top