Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் விதி அத்தியாயம் 9

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 9
சௌம்யா நடந்ததை உணர்ந்து வெட வெட என்று நடுங்கினாள்.
காலையில் லேட்டாய் எழுந்ததில் தொடங்கி அவசர அவசரமாய் எல்லா வேலைகளையும் முடித்ததில் சாமி கும்பிடுவதும், மாமா போட்டாவை பார்ப்பதும் நின்று விட்டது. அதுவும் முட்டாள்தனமாய் போட்டாவை புத்தகத்தில் வைத்து விட்டாள்.
சிறு வயதில் பொம்மலாட்டம் பார்க்க பள்ளிக்கு ஒரு ரூபாய்த் தாளை புத்தகத்தில் வைத்துக் கொண்டு வந்ததும், அதற்கு மிஸ் புத்தகத்திலல்லாம் எதுவும் வைக்கக் கூடாது என்று திட்டியதும் இப்போது ஞாபகம் வந்து தொலைத்தது.
நிலைமையை உணர்ந்த சுமதி 'டக்' என்று தனது பாக்ஸை போட்டோவின் மீது வைத்து விட்டாள்.
'என்ன அங்க சத்தம்?' என ரோஸி சிஸ்டர் கண்களை உருட்டியவாறு கேட்க, 'பா...க்...ஸ்.. வச்சேன் சிஸ்டர்' என்று மருட்சியுடன் எழுந்தாள் சுமதி.
'சத்தம் இல்லாம வைக்கத் தெரியாது? பாத்திரத்த டப் டப்னு வைக்கற பழக்கம் இருக்கற பொம்பளைங்களுக்குத்தான் இந்த பழக்கம் இருக்கும். எதயும் டம் டமார்னு வைக்கறது..சிட்.' என அலறவே சுமதி சட் என்று உட்கார்ந்தாள்.
அந்த பீரியட் முடியும் வரை சௌம்யாவும், சுமதியும் பாடம் கவனிக்கவே இல்லை. சுமதி ஒம்பித்தெட்டு என்று சிஸ்டர் கேட்க, எம்பத்திரண்டு என்று சொல்லி பாவாடையில் டப் என்று சத்தமிட ஒரு அடி வாங்கிக் கொண்டாள்.
சிஸ்டர் பீரியட் முடிந்து நகர்ந்ததும் அந்த போட்டோவை யாரும் கவனிக்காமல் பேக்கில் பத்திரப்படுத்துவதற்குள் சௌம்யா திணறிப் போனாள்.
அன்று இரவு உணவு முடித்து ரூமிற்கு வந்ததும் சுமதி பாத்ரூம் போகவும் இவளும் உடன் வந்தாள்.
'தாங்க்ஸ் சுமதி' என்றாள்.
சுமதி 'ப்ரெண்ட்ஸுக்குள்ள..' எனத் தொடங்கவும், 'அது என் மொறப் பையன். நான் கட்டிக்கப் போறவரு' என்று சொல்லி விட்டு வெட்கத்துடன் மேலே சொல்ல முடியாமல் பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.
ரூமுக்கு வந்து லைட்டை ஆஃப் பண்ணி விட்டு பெட்டில் படுத்து சுமதியிடம் கிசு கிசுப்பாய் தனது 'தல'புராணத்தைப் பாடினாள்.
'என்ன சத்தம்?' என்ற சிஸ்டரின் சத்தம் கேட்டதும் இருவரும் வாய் மூடித் தூங்கிப் போனார்கள்.
மறு நாள் வெள்ளிக்கிழமை.
வீக் எண்ட் என்பதால் மாணவியர் சந்தோஷத்துடன் ஊருக்குச் செல்ல பாக் பண்ண ஆரம்பித்தார்கள். சௌம்யாவின் சந்தோஷத்தை சொல்லவே வேண்டாம். ஊருக்குச் செல்லும் கடிதம் நிரப்பும்போது சிஸ்டர் ரோஸியின் கண்டிப்பான குரல் கேட்டது.
'இந்த ஒரு வாரம் தான். இனி க்வார்டர்லி லீவுக்குத் தான் ஊருக்குப் போக முடியும்'
பக்கத்தில் ஃபார்ம் நிரப்பிக் கொண்டிருந்த ஒரு பெண் 'ஊருக்கு சந்தோஷமாப் போகவிடாதெ..இப்ப இதச் சொல்லாட்ட என்ன' என்று முணுஂமுணுப்பது சௌம்யாவிற்கு கேட்டது.
மெலிதாய் சிரித்துக் கொண்டே வெளியேறினாள்.
அன்று வகுப்புகள் மிகவும் நீண்டு கொண்டு போவது போல் தோன்றின. தமிழ் அம்மா 'ஓ இன்னிக்கி வெள்ளிக்கிழமயா? அதான் கவனிக்க மாட்டேங்கறிங்க..' என்று எழுத்து வேலை கொடுத்தார்.
மாலை 4.30 ஆனதும் எல்லோரும் ஹாஸ்டலுக்கு சிட்டாய் பறந்தனர்.
முகம் கழுவிக் கொண்டிருந்த போது சுமதி ஓடி வந்து சொன்னாள்.
'சௌமி! உங்க மாமா வந்திருக்கு'
சௌம்யாவிற்கு இருப்பு கொள்ள வில்லை.
சுமதியிடம் கூட ஒன்றும் சொல்லாமல் ரூமை நோக்கி ஓடினாள். முகத்தை துடைத்து பொட்டு வைத்து விட்டு கண்ணாடியில் ஒரு முறை தன் முகத்தைப் பார்த்து விட்டு ரெடியாய் வைத்திருந்த பேக்கை எடுத்து வாசலுக்கு வந்தாள்.
'ஆள் வந்தா போதும் ஃபிரண்ட மறந்துருவீங்களே!'
சுமதி கலாய்க்க, 'வரேன் சுமதி. நி?' என சௌம்யா கேட்க, 'அப்பா நாளைக்குத்தான் வருவாரு. நீ ஜாலியா போய்ட்டு வா. வந்து கத சொல்லணும்' என்று கண்ணை சிமிட்ட 'சீ போடி' என்று வெட்கத்துடன் வார்டன் ரூமை நோக்கி பேக்குடன் ஓடி வந்தாள் சௌம்யா.
அறையில் வார்டனுடன், ரோஸி சிஸ்டர் அமர்ந்திருக்க, எதிரே சந்துரு நின்றிருந்தான்.
மற்ற மாணவியர் அவரவர் பேரண்ட்ஸோடு சிஸ்டரிடம் சொல்லி விட்டு நகர, சௌம்யாவின் பார்வை சிஸ்டரிடம் பேசிக் கொண்டிருக்கும் சந்துருவின் மீதே நின்றது. மூன்று நாட்களில் இளைத்துப் போன மாதிரி தெரிந்தான். சவரம் செய்யாத முள் தாடி. அவள் கண்களில் கண்ணீர் திரையிட, ரோஸி சிஸ்டரின் வாய்ஸ் உயர்ந்தது.
'இங்க பாருங்க. ஒண்ணு அப்பா, இல்ல அம்மா. உங்களோடல்லாம் வயசுப் பொண்ண அனுப்ப முடியாது.'
சௌம்யாவை ஒரு கோடி வோல்ட் மின்சாரம் தாக்கியது.

 
Top