Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் விதி அத்தியாயம் 8

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 8
சௌம்யா சொன்னது போலவே ரோஸி சிஸ்டர் நன்றாக பாடம் நடத்தினார். கவனித்ததும், எழுதியதும் டைம் போனதே தெரிய வில்லை. அடுத்தடுத்து பாடங்கள் போகவே, உணவு இடைவேளை வந்தது. ஹாஸ்டலில் சென்று லஞ்சை முடித்து விட்டு மறுபடியும் வகுப்புகள்.
மாலை 4. 30 ஆனதும் பள்ளி முடிந்து ஹாஸ்டலுக்குத் திரும்பினார்கள்.
சுண்டலும், டீயும் சாப்பிட்டு முடித்து விட்டு க்ரௌண்டுக்குப் போனார்கள். அனைவரும் ஏதோ ஒரு விளையாட்டு விளையாட வேண்டும் என்று கண்டிப்பு. மாணவிகள் பேஸ்கட் பால், புட்பால் டென்னிஸ் என்று பிரிய, சுமதியும் சௌம்யாவும் கேரம் எடுத்துக் கொண்டு வராண்டாவில் அமர்ந்தார்கள். அவர்களைப் போலவே ஆங்காங்கே மாணவியர் செஸ், கேரத்துடன் விளையாடத் துவங்கினார்கள். அப்போது லாரல் ஹார்டி போல் இரு மாணவியர் வந்தனர். ஒடிசலாய் உயரமாய் இருந்த பெண் தன்னை சுதா என்று அறிமுகம் செய்ய, குள்ளமாய் சற்று பூசினாற் போல் இருந்த பெண் கரோலின் என்றாள். இருவரும் ஒரே ஊராம். ஒரே பள்ளியில் படித்தவர்களாம். கேரம் விளையாட இவர்களுடன் அமர்ந்தார்கள்.
தங்களது அலைவரிசை ஒத்துப் போவதை உணர்ந்து சினேகமானார்கள். 6 மணிக்கு ப்ரேயர் ஹால். 6. 30 முதல் 8 வரை படிக்க ஸ்டடி ஹாலுக்கு வந்தார்கள். அத்தனை மாணவியரும் அமரும் அளவுக்கு பெரிய ஸ்டடி ஹால். இரண்டு சிஸ்டர்கள் கண்காணிப்பிற்கு. அமைதியாய் அன்று நடத்திய பாடங்களைப் படித்து முடிக்கவும் 8 மணிக்கு டைனிங் ஹால். சுடச் சுட தோசையும் தண்ணீராய் வழிந்த தேங்காய் சட்னியும் சாப்பிட்டு விட்டு ரூமுக்கு வந்தார்கள். அவர்களுடன் சுதாவும், கரோலினும் அவர்களது ரூமுக்கு வந்தார்கள். சௌம்யா அம்மா தந்திருந்த முறுக்கை அவர்களுக்குத் தந்தாள். அனைவரும் சிரித்து பேசிக் கொள்ள 8.30 பெல் அடித்தது. அவர்கள் விடை பெற்றுக் கொண்டனர். தங்களது ரூம் எண்ணைச் சொல்லி அடிக்கடி வரவேண்டும் என்றனர்.
கிறித்துவப் பாடல் ஒலிபெருக்கியில் அலறியது.
'இயேசுவே உந்தன் வார்த்தையால் வாழ்வு வளம் பெறுமே..'
மாணவியர் அனைவரும் ரூம் வாசலில் வந்து நின்றனர். பாடல் முடியவும் ரூமுக்குள் நுழைந்தனர்.
சுமதி, 'பாத்ரூமுக்கு வர்ரியா?' என, சௌம்யா பிரகாசத்துடன், 'எனக்கு வரல்லே. நீ போய்ட்டு வா' என்றாள்.
சுமதி நகர்ந்ததும் கதவைத் தாழிட்டு விட்டு சந்துருவின் போட்டாவை எடுத்து பார்த்துக் கொண்டே இருந்தாள்.
மாமாவும் என்னை நினைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் ஆம்பளைங்க வேலை, நண்பர்கள்னு நம்மள நினைக்கற நேரம் கொறவா இருக்கும். ஆனால் பொம்பள மனசு..அவங்க வாழ்க்க மாதிரியெ இரண்டு மனசு. எந்த நேரத்துலயும் நெனப்பு வந்து மனசுல புகுந்துரும். கண்ணீர் சிறிது சிறிதாக திரள கதவு பிரம்பால் தட்டப்படும் சப்தம் கேட்டது.
போட்டோவை டக் என்று புத்தகம் ஒன்றில் வைத்து விட்டு வாசலைத் திறந்தாள்.
ரோஸி சிஸ்டர்!
'என்ன லைட் ஆஃப் பண்ணல?'
'சுமதி பாத் ரூமுக்கு போயிருக்கா.'
'சரி. அவ வந்ததும் லைட் ஆஃப் பண்ணிட்டு தூங்கணும்.'
'சரி சிஸ்டர்'
சிஸ்டர் நகரவும், சுமதி வரவும் சரியாய் இருந்தது.
'என்ன சொல்லிட்டுப் போறாங்க?'
'தூங்கணுமாம்'
சொல்லிவிட்டு சௌம்யா லைட்டை ஆஃப் பண்ண இருவரும் அவரவர் பெட்டில் படுத்தனர்.
மறு நாள் திரும்பவும் அதே ரொட்டீன்.
இரண்டாவது பீரியட் மேத்ஸ்.
ரோஸி சிஸ்டர் சௌம்யாவை அந்தக் கணக்கை வாசிக்கச் சொல்ல சௌம்யா எழுந்தாள்.

புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டியதும், காலையில் பார்க்காத நேற்று நைட் புத்தகத்தில் சோம்பேறித் தனமாய் வைத்திருந்த சந்துருவின் புகைப்படம் டான்ஸ் ஆடிக் கொண்டே டெஸ்க்கின் மேல் விழுந்தது.
 
Top