Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் மண்ணில் விழுந்த நட்சத்திரம் அத்தியாயம் 17

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 17

அந்த போட்டோவைப் பார்த்தவள் எழுந்தாள்.
முகம் வியர்த்தது.
சமாளித்துக் கொண்டு அனிலைப் பார்த்து கேட்டாள்.
'இ...இ...இது எங்க எடுத்தீங்க?'
'எது?' என்ற அனில் அவள் நீட்டிய பிக்சரைப் பார்த்ததும், 'ஓ உங்களுக்குப் பிடிச்சிருக்கா? எடுத்துக்கோங்க..' என்றான்.
அவள் மெதுவாய் அந்தப் புகைப்படத்தை ஆணியில் இருந்து கழட்டி உற்றுப் பார்த்தாள். வாய் 'தாங்க்ஸ்' என்றது.
சட் என்று அவனைப் பார்த்து மறுபடியும் கேட்டாள்.
'இது எங்க எடுத்தீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?'
அவளை ஒரு மாதிரியாய் பார்த்தவன் 'ஏன் அந்த பிச்சைக்காரன் உங்கள அவ்ளோ டச் பண்ணிட்டானா? பெங்களூரு போனப்ப ராஜேஸ்வரி நகர் சிக்னல்ல கார் நின்னப்ப விண்டொவ தட்டினான். டக்னு க்ளிக்கினேன். இது ஒரு காப்பி தான் இருக்கு. பரவால்ல. நீங்க எடுத்துக்கங்க.'
ஒரு நிமிடம் யோசித்தவள் அனிலைப் பார்த்து கேட்டாள்.
'எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?'
'ம்' என்றான் அனில்.
'என் கூட பெங்களூர் வந்து இவனக் கண்டுபிடிச்சுத் தர முடியுமா?'
அனில் மறுபடியும் அவளை ஏன் என்ற பார்வை பார்த்தான்.
'நீங்க பிஸின்னா வேண்டாம்.' என்றாள்.
'அ..அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல. உங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ண கசக்குமா என்ன?'
ம்ம்ம் என்று யோசித்தவன் 'எப்ப போறோம்?' என்றான்.
'அடுத்த பிளைட்டில்' என்றவளை 'ஙீ' என்று பார்த்தான்.
சொன்ன மாதிரியே அடுத்த பிளைட்டில் ஏறி இருவரும் பெங்களூரு விமான நிலையம் வந்தார்கள். பர்தாவை அணிந்து கொண்டிருந்த ஸ்ரீலதா ஒரு வாடகைக் கார் பிடித்து அனிலுடன் அந்த குறிப்பிட்ட சிக்னல் அருகில் வந்தாள்.
ஏதோ ஒன்றிரண்டு பிச்சைக்காரர்கள் அங்கு வந்து காசு கேட்டனர். அவனைக் காணவில்லை.
ஸ்ரீலதா ஏமாந்து போனாள். அவளும், அனிலும் வாடகை காரை கட் பண்ணி விட்டு அந்த சிக்னலில் இருந்த பிச்சைக்காரர்களிடம் அந்த குறிப்பிட்ட பிச்சைக்காரனின் படத்தைக் காட்டி விசாரித்தார்கள்.
ஒரு பிச்சைக்காரன் நூறு ரூபாய்த் தாளைப் பார்த்ததும் வாங்கிக் கொண்டு அந்தப் பிச்சைக்காரன் இருந்த இடத்திற்குக் கூட்டிச் சென்றான்.
ரோட்டில் சிறிது தூரம் நடந்து ஒரு பாலம் கட்டுவதற்காக சாலையோரமாய் போடப்பட்டிருந்த பெரிய உருளைகளில் ஒன்றிற்கு அழைத்துச் சென்றான். ஒரு கிழிந்த பாயில் சுருண்டு கிடந்தான் அவன்.
'அண்ணே!' என்று அலறினாள் ஸ்ரீலதா.
மெதுவாய் விழித்துக் கொண்டு யார் என்று பார்த்தான் சேகர்.
கால் கைகளில் வெண்குஷ்டம் கண்டிருந்தது. மிகவும் வயதானவன் போல் இருந்தான். தலை முழுவதும் நரைத்து ஒரு ஓரமாய் வழுக்கை விழுந்திருந்தது. கண்கள் மிகவும் இடுங்கி இருந்தன. ஓரமாய் அழுக்கடைந்த துணிப்பை. அதிலிருந்து கிழிந்த துணிகள் எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தன. உடலில் இருந்து ஒருவித நாற்றம் காற்றில் பரவிக் கொண்டிருந்தது.
'யா...யாரு..?' என்றான்.
ஸ்ரீலதாவின் கண்களில் இருந்து கண்ணீர் பீறிட்டு வந்தது. தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் அல்லவா? ஆடியது.
'அண்ணா! நான் ஆறுமுகம்.'
'ஆ... ஆறுமுகமா?' இடுங்கிய கண்களின் வழியே அவளது முகத்தைப் பார்த்தான் சேகர். ஸ்ரீலதா முகத்திரையை தூக்கி இருந்தாள். சேகரால் அடையாளம் கண்டுபிடிக்க முடிய வில்லை.
'ஆறுமுகமா? உங்களுக்கு ஆறுமுகம் தெரியுமா?' என்றான்.
'அண்ணா! நான் தான் ஆறுமுகம். எப்ப பாத்தது? இன்னும் அப்படியேவா இருப்பேன்? ஏண்ணா ஒனக்கு ஏன் இப்படி ஆச்சு?'
சேகரால் அவளது முகத்தைப் பார்க்க முடியவில்லை. தலை குனிந்து கொண்டான். ஒன்றும் பேசவில்லை. அவனது கண்களிலும் நீர் பெருகத் தொடங்கியது.
'சொல்லுண்ணா! என்ன ஆச்சு ஒனக்கு?' கதறினாள் ஸ்ரீலதா.
அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
'ஒன் மொகத்தப் பாக்கக் கூட எனக்கு அருகதை இல்லை ஆறு. ஒனக்கு பண்ண பாவத்துக்கு கடவுள் என்ன தண்டிச்சிட்டாரு. நீ நல்லா இருக்கேல்ல. இங்கல்லாம் வராத. போ. போயிடு.'
'நான் போகறதுக்கு சென்னையில் இருந்து இவ்ளோ தூரம் வரல்ல. ஒன்ன ஒரு நல்ல எடத்துல சேக்கத்தான் வந்தேன்.'
அவன் திரும்பினான். கண்களில் ஒளி வந்திருந்தது.
'நீ என்ன சொல்ற ஆறு? என்ன நீ மன்னிச்சிட்டியா?'
'இல்லண்ணா. இல்ல. ஒன்ன என்னால மன்னிக்கவே முடியாது. ஆனால் நீ இப்படி கஷ்டப்படக் கூடாது. நீ தெரிஞ்சு பண்ணினாலும் இன்னைக்கு ஒன்னாலத் தான் நான் உலகமே தெரிஞ்ச ஸ்ரீலதாவா ஆயிருக்கேன்.' என்றாள்.
'என்னது! சினிமா நடிகை ஸ்ரீலதா நீயா?'
'ம்ம்ம்.'
'சே! என் கெட்ட புத்திய பாத்தியாம்மா! சினிமா நடிகை ஸ்ரீலதாட்ட கூட்டிட்டுப் போறேன்னு சொல்லி ஒரு பத்து ஆட்கள ஏமாத்திருப்பாம்மா இந்த பாவி!' அவன் மறுபடியும் அழ ஆரம்பித்தான்.
'அண்ணா! போதும். இனி நீ அழ வேண்டாம். நான் போன் பண்ணி சொல்லி இருக்கேன். இங்க இருக்கற ஒரு ஆதரவற்ற இல்லத்துல இருந்து ஒன்னத் தேடி வருவாங்க. நீ அங்க போய் இரு. நான் இடைல இடைல ஒன்ன வந்து பாக்கறேன். எனக்கு அப்பாவ ரொம்ப புடிக்கும். அப்பாவுக்கு ஒன்ன ரொம்பப் புடிக்கும். இப்ப கூட ஒன் மொகத்துல அப்பா ஜாட தெரியுது. நீ என்ன நெனச்சியோ, நான் ஒன்ன அண்ணனாத்தான் நெனச்சேன். இப்பவும் அப்படித்தான். சரி. எனக்கு அடுத்த பிளைட்ட பிடிக்கணும். வரெண்ணா. இத வச்சுக்க' ஒரு கட்டு ரூபாய்த் தாளை எடுத்து அவன் கையில் திணித்தாள்.
ஒரு ரூம் எடுத்து முடி வெட்டி குளிச்சு நல்ல ட்ரெஸ் போட்டு இந்த இடத்துல நின்னு. ஒன்ன கூட்டிட்டு போக நாளைக்கு காலைல ஆளுங்க வருவாங்க. வரேன்னா.'
அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு நகர்ந்தாள்.
அனில் சேகரிடம் தலை அசைத்து விட்டு அவளுடன் புறப்பட்டான்.
'என்னது இவன் ஒன் அண்ணனா? ஒன் பேரு ஆறுமுகமா? வாவ் ஒரு நியூஸ் கிடச்சிருச்சி. பொம்மைக்கு அனுப்பி காசு பாத்திரலாம்.'
'என்ன அனில் இது? என் கஷ்டம் ஒனக்கு காசா தெரியுதா?'
'ஐயோ சும்மா சொன்னென்.'
இருவரும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அடுத்த பிளைட்டில் ஏறினார்கள்.
வாழ்க்கை தான் எவ்ளோ புதிரானது. யார் யார் எப்படி மாறிப் போவார்கள் என்று தெரியவில்லை. கணேஷிடம் தன்னை அண்ணன் தான் அனுப்பினான் என்பதை அறிந்ததும் அண்ணனை வெறுத்த தான் இப்படி ஒரு கோலத்தில் அண்ணனைப் பார்த்ததும் ஷூட்டிங்கை கேன்சல் செய்து அவனுக்கு ஒரு வழி செய்யும் வரை பரபரத்தது எப்படி? மனதின் போக்கை யாரால் கண்டுபிடிக்க முடிகிறது? அதுவும் நான்?
ஒருவித பச்சாதாப உணர்ச்சிகளை பழைய நினைவுகள் கிளறி விட பக்கத்தில் இருந்த அனிலின் திண் என்ற கையில் சாய்ந்து கொண்டாள். ஒரு கணம் திகைத்த அனில் கையை உயர்த்தி அவளைத் தன் மார்பில் சாய்த்துக் கொண்டான்.
அனிலையும் அவளையும் இணைத்து பத்திரிகைகளில் கிசுகிசுக்கள் வரத் துவங்கின. மெல்ல மெல்ல அவர்கள் இருவரிடையேயும் காதல் துளிர்க்கத் துவங்கியது.
ஒரு தடவை அனில் கார் ஓட்ட பக்கத்தில் பர்தாவுடன் உட்கார்ந்திருந்தாள் ஸ்ரீலதா. சிக்னல் ஒன்றில் கார் நின்றிருந்தது. ஸ்பீடாய் பக்கத்தில் வந்து நின்ற புல்லட்டைப் பார்த்தால் எதேச்சையாக. ஒரு நவ நாகரீக வாலிபன் பபுள் கம்மை மென்று கொண்டு அலட்சியமாக சிவப்பு சிக்னலைப் பார்க்க அவனது முதுகில் பல்லி மாதிரி ஒட்டிக் கொண்டு வலது கையை அவனது ஜீன்ஸ் அணிந்த தொடையில் பதித்திருந்தாள் செவ்வந்தி.

(தொடரும்)
 
Top