Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் நித்யகல்யாணி அத்தியாயம் 20

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 20

நித்யா துரிதமாக செயல்பட்டாள். அம்மாவிடம் ரவி ரொம்ப நாட்களாக காத்திருப்பதை நினைவுபடுத்தினாள். மேரி டீச்சர் புரிந்து கொண்டு கல்யாணி-ரவி, நித்யா-ப்ராங்க்ளின் கல்யாணத்தை ஏற்பாடு செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
அடுத்து வந்த இரு மாதங்களும் கல்யாண காரியங்களில் கழிந்தன. ஒரே மண்டபம் புக் செய்தார் மேரி டீச்சர். தன் மகளுக்கு எத்தனை பவுன் போடுகிறாரோ அதே பவுனை கல்யாணிக்கும் செய்தார். ஜேம்ஸ் சார் லீவு போட்டு சர்ச்சில் டேட் வாங்கி வந்தார். இன்விடேஷன் ப்ரிண்ட் கொடுத்தார். ரவி வீட்டில் ஏக சந்தோஷம். பையன் காத்திருந்ததில் டாக்டர் பொண்ணு கிடைத்ததும் அவனுக்குப் பிடித்த பொண்ணு கிடைத்ததும் என்று. குளோரியோ தன் மருமகளே தனக்கு மருமகளாய் வருவது குறித்து அந்தோணியாருக்கு நேர்ந்து கொண்டாள். முத்தம்மாள் தன் பங்கிற்கு தான் சேர்த்து வைத்திருந்த பணத்தில் கல்யாணிக்கும், நித்யாவுக்கும் பட்டுப் புடைவைகளும் விரலுக்கு நெளிவும், காதிற்கு ஆளுக்கு ரெண்டு பவுனில் ஜிமிக்கியும் மூன்று பவுனில் ஒரு லாங் செயினும் வாங்கித் தந்தாள். மாப்பிள்ளைகள் இருவருக்கும் பட்டு வேட்டி சட்டையோடு ஒரு பவுனுக்கு மோதிரமும் பரிசளித்தாள். அந்த ஏழைத் தாயின் அன்பில் அனைவரும் நெகிழ்ந்தனர்.
நித்யாவும், கல்யாணியும் புதுப் பொண்ணுகள் போல் அல்லாது டிவிஎஸ் ஒன்று வாங்கி ஜோடி போட்டு அலையோ அலை என்று அலைந்தனர். முதலில் கோயிலில் ரவி-கல்யாணி கல்யாணம் அது முடித்த பின்பு பக்கத்தில் உள்ள சர்ச்சில் நித்யா-ப்ராங்க்ளின் கல்யாணம். திருப்பலி முடிந்த பிறகு இரு ஜோடிகளும் மண்டபத்திற்கு வந்து விட வேண்டியது. மண்டபத்தில் உறவினர் வாழ்த்திய பிறகு லஞ்ச். பின்பு சாயந்திரம் ரிசப்ஷன். அப்புறம் முதலிரவு அந்த மண்டபத்திலேயே. குளோரி தன் வீட்டில் முதலிரவை இரு தம்பதிகளுக்கும் வைத்துக் கொள்ளலாம் என ரவியின் அம்மா தன் வீட்டில் இரு தம்பதிகளும் ராத் தங்கிக்கொள்ளலாம் என மேரி டீச்சர் மண்டபத்திலேயே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார். அனைவரும் அரை மனதோடு சம்மதித்தனர். மணமக்களை அலைய வைக்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டனர்.
நித்யாவும், கல்யாணியும் தத்தம் நண்பர்களுக்கு வீட்டிலேயே சென்று பத்திரிகை வைத்தனர். மனிஷாவை மட்டும் பிடிக்க முடியவில்லை கல்யாணியால். போன் செய்தாள். வந்து விடுவேன். பத்திரிகையை போஸ்டில் அனுப்பி விடு என்றாள். இவ்வாறு இருவரும் பாதி பத்திரிகையை நேரிலும், பாதி பத்திரிகையை போஸ்டிலும் அனுப்பினர். ஜேம்ஸும் மேரி டீச்சரும் தத்தம் உறவுக்காரர்களை நேரில் சென்று அழைக்க, முத்தம்மாள் நித்யாவை வீட்டில் கல்யாணி அப்பாவை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு கல்யாணியை கூட்டிக் கொண்டு தம் உறவை அழைக்க சென்றாள்.
அடுத்து புடைவை எடுக்கும் வைபவம். முத்தம்மாள் எடுத்து வைத்து விட்டாலும் மேரி டீச்சர் மாப்பிள்ளைக்கு கோட் சூட், பெண்ணிற்கு வெள்ளை கவுன், லாங் நெட் என்று வாங்கிக் கொடுத்தார். அதோடு கல்யாணிக்கு தன் பங்காக அவள் டேஸ்ட் படி காஞ்சிபுரம் பட்டும் மாப்பிள்ளைக்கு ரிசப்ஷனுக்கு கோட் சூட்டும் வாங்கித் தந்தார். அதோடு இரு மகள்களுக்கும் பத்து பத்து சாரிகள் இத்யாதிகள் வாங்கித் தந்தார்.
இன்னொரு நாள் நகை எடுக்கும் வைபவம். தன் பழைய நகைகளை இருவருக்கும் பகிர்ந்து கொடுத்த மேரி டீச்சர் கையில் உள்ள பணத்தைக் கொண்டு புது டிசைன் நகைகளையும் எடுத்துக் கொடுத்தார். குறிப்பாக நித்யா கேட்ட காசு மாலையும் கல்யாணி கேட்ட மாங்காய் மாலையும். இதோடு இருவரும் பரீச்சைக்கும் படித்தனர். பகல் எல்லாம் ஊர் சுற்றும் வேலை. இரவில் பரீச்சைக்கு படிப்பு என்று பொழுது டைட்டாக இருந்தது.
எக்சாம் இந்த சமயத்தில் எழுத வேண்டுமா என்று அனைவரும் கேட்டனர். அவர்கள் இருவரும் ஏற்கனவே படித்திருக்கிறோம் ரிவிஷன் செய்தால் போதும் என்று அனைவரையும் சமாதானப் படுத்தினர். எக்சாம் டைம் வந்தது. மனிஷாவை சந்தித்த கல்யாணி இன்விடேஷன் வந்ததா என்றாள். மனிஷா ஆம் என்று அவளை கட்டி அணைத்து வாழ்த்தினாள்.
தொடர்ந்து இரு வாரங்கள் பரீச்சையில் கழிந்தன.
அடுத்த வாரம் கல்யாணம்.
நெருங்கிய உறவுகள் வந்து குவியத் தொடங்கினர். முத்தம்மாள் குடிசையின் வாசலில் வாழைமரம் கட்டி இருக்க, மேரி டீச்சரின் வீட்டு வாசல் ஸ்பீக்கர் லைட்டிங் என்று அமர்க்களப்பட்டது.
கல்யாண வேலைகள் மும்முரமாக நடக்க இவ்வளவு நாள் கல்யாணியை விட்டு அகன்றிருந்த சூரஜின் நினைவுகள் மெல்ல ஆக்கிரமிக்கத் தொடங்கின. ரவியிடம் சொல்லி விடலாம் என்று மனசாட்சி உறுத்தியது. ஆனால் சொன்னால் விளைவு விபரீதமாகி விட்டால் தன்னால் தாங்க முடியுமா என்ற தயக்கம் ஏற்பட்டது. முடிவெடுக்க முடியாமல் தடுமாறினாள். திருவுளச் சீட்டு சொல்ல வேண்டாம் என்று சொன்னதை நினைத்துக் கொண்டு சமாதானப்படுத்திக் கொண்டாள். ஆனாலும் அந்த சம்பவம் தொண்டையில் சிக்கிய முள்ளாய் உறுத்திக் கொண்டே இருந்தது.
கல்யாணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு. அடுத்தடுத்த கார்களில் ப்ராங்க்ளினும், ரவியும் குடும்பத்தோடு மண்டபத்திற்கு வந்தனர். நைட் டிபன் சொந்தக்காரர்களின் விசாரிப்பு என்று மண்டபமே அதகளப்பட்டது. கல்யாணியால் ரவியை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை. ஆனால் நித்யா ப்ராங்க்ளினோடு சகஜமாய் பேசினாள்.
மறுநாள் காலை.
உற்றார் உறவினர் எல்லோரும் புடை சூழ காத்திருக்க, மாரியம்மன் கோயில் கர்ப்பகிரகம் முன்பு ரவியும் கல்யாணியும் எதிர் எதிரே மாலையும் கழுத்துமாக நிற்க, பூசாரி திருமாங்கல்யத்தட்டை சாமியின் முன்பு வைத்து எடுத்து வந்து முத்தம்மாளிடம் கொடுத்தார். முத்தம்மாள் எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கி அட்சதையைக் கொடுத்தார். கல்யாணியின் நண்பிகள் அவள் பக்கம் நின்று அவள் காதில் ராத்திரி விஷயங்களைக் கூறி கேலி செய்ய, கல்யாணி தலை குனிந்து நின்று கொண்டிருந்தாள். பூசாரி மாங்கல்யம் தந்துனானெ பாட ரவி தாலியை எடுத்து கல்யாணியின் கழுத்தில் கட்டினான். உறவுக்காரப் பெண் ஒருத்தி கொழுந்தியாள் முறைக்கு இரண்டு முடிச்சு போட கல்யாணியின் கண்களிலும் முத்தம்மாளின் கண்களிலும் மேரி டீச்சர் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. கல்யாணம் முடிந்ததும் கல்யாணி நேரே மேரி டீச்சர் ஜேம்ஸ் சாரின் கால்களில் விழுந்தாள். அவர்கள் ஆசீர்வாதம் பண்ண மேரி டீச்சர் அவளை அன்போடு அணைத்து 'எப்படியோ நித்யா மாதிரி நீயும் எங்க ஊருக்குத் தான் மருமகளாகப் போற. நல்லா இரும்மா.' என்றார்.
அடுத்து ரவியின் பெற்றோரின் கால்களில் விழுந்த தம்பதியர் அடுத்து முத்தம்மாளின் காலிலும், ப்ராங்க்ளினின் பெற்றோர் கால்களிலும் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். ப்ராங்க்ளின் ரவியின் கையை குலுக்கு அவனை அணைத்து வாழ்த்துக்கள் சொல்ல, நித்யா தோழியை கட்டிப் பிடித்துக் கண்ணீருடன் தன் வாழ்த்துக்களைப் பகிர்ந்தாள்.
அடுத்து நண்பிகள் நித்யாவைக் கூட்டிக் கொண்டு போயினர் அலங்காரம் செய்ய. எல்லோரும் சர்ச்சுக்கு விரைந்தனர். ப்ராங்க்ளின் ஏற்கனவே கோட் சூட்டுடன் இருக்கவே ஆயர் திருப்பலி ஆரம்பித்தார். சிறுமிகள் நெட்டை தூக்கிக் கொண்டு வர, வெள்ளை உடை அணிந்த தேவதையாய் வந்தாள் நித்யா. ஆயரின் சொற்படி கேட்ட ப்ராங்க்ளின் நித்யாவின் கை விரலுக்கு மோதிரம் அணிவிக்க திருப்பலி நிறைவுற்றது. பின்னர் வழக்கமான ஆசீர்வாத நிகழ்வுகள். ஊரே மேரி டீச்சரும் முத்தம்மாளும் வெவ்வேறு மதங்களாய் இருந்தாலும் பாசம் காட்டுவதையும் போட்டி போட்டுக் கொண்டு மகள்களுக்கு செய்வதையும் கண்டு ஆச்சரியப்பட்டு அவர்களது நல்ல குணங்களை சிலாகித்தனர்.
அடுத்து டிபன் சாப்பிட்டு விட்டு முத்தம்மாளின் குடிசைக்கு இரு மணமக்களும் கல்யாணியின் அப்பாவைக் காண சென்றனர்.
முத்தம்மாளின் கணவரின் ஒளி மிகுந்த கண்கள் அவர்களது வருகையை ஆவலுடன் எதிர்பார்த்தன. முத்தம்மாள் கட்டிலில் ஒரு தலைகாணியை சுவற்றில் சாய்த்து அதில் அவரை சாய்த்து உட்கார்ந்த நிலையில் இருக்கச் செய்தாள். பக்கத்தில் இருந்து அவரைப் பிடித்துக் கொண்டாள்.
முதலில் நித்யாவும் ப்ராங்க்ளினும் அவர் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். அடுத்து கல்யாணியும் ரவியும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி எழவும் கல்யாணியின் வயிற்றில் அந்த அழற்சி. அடிவயிற்றில் இருந்து ஏதோ ஒன்று வெளித்தள்ள 'உவ்வே' என்ற சப்தம் வர வாயைக் கையால் பொத்திக் கொண்டு குடிசையை விட்டு வெளியே வந்து வாசலில் நட்டு வைத்திருந்த செம்பருத்தி செடி அருகே வாந்தி எடுத்தாள்.


(தொடரும்)
 
நல்லா இருக்கு பதிவு
திருமணம் அருமையா நடந்தது


என்ன ஆச்சு
கர்ப்பமா இருக்காளா
கல்யாணி
 
Nice update
கடவுள் சொல்ல வேண்டாமென சீட்டை கொடுத்துட்டு கல்யாணத்தன்றே இப்படி சிக்கலை கொடுத்துட்டாரே, பாவம் கல்யாணி
கல்யாணி டாக்டருக்கு படிக்கிறாளே கொஞ்சமாவது விசயம் தெரியுமில்லை,
ஏதாவது பண்ணியிருக்கனும்.
 
Top