Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் நித்யகல்யாணி அத்தியாயம் 10

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 10

அந்த வருட கோடை விடுமுறை.
ப்ராங்க்ளின் வந்து விட்டான் நித்யாவின் ஊருக்கு.
'அத்தை, என்ன இந்த வருசம் இவ்ளோ நாளாயும் லீவ்ல வரல ஊருக்கு?' என்றான்.
கண்கள் நித்யாவைத் தேடின.
'என்ன மருமகப் புள்ள இந்த கிராமத்துல என்ன இருக்கும் அத்த. அங்க வந்தா பொழுதே போகாதுன்னு சொல்லுவ. இப்ப வந்து நிக்கிறது அதிசயமால்ல இருக்கு. வா. உக்காரு.' என்றார் மேரி டீச்சர்.
உள் அறையில், கல்யாணி நித்யாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
'ஏய்! ஒன் ஆளு வந்துருக்கு. நீ போய் பாக்காம இருக்க?'
'அய்யோ அம்மாக்கு தெரிஞ்சுது அவ்ளோ தான்.' என்றாள் நித்யா.
'பாவம் ப்ராங்க்ளின்! வராத பய்யன் ஒன்ன பாக்கறதுக்காகவே வந்துருக்கு. ஒரு எட்டு பாத்துட்டு வந்துரலாம். பாக்காம இருக்றது எவ்ளோ கஷ்டம்னு எனக்குத் தான் தெரியும் நித்யா.'
கண்கள் கலங்கின கல்யாணிக்கு.
'சரி. விடு. வா போயி பாத்துட்டு வரலாம்.'
இருவரும் வெளியே வந்தார்கள்.
நித்யாவைக் கண்டதும் ப்ராங்கிளினின் முகத்தில் சூரியன் வந்து குடி கொண்டது.
'இவங்க ரெண்டு பேரும் பரீச்ச எப்படி எழுதி இருக்காங்க அத்த?'
'நீயே கேளு. மொதல்ல நீ எப்படி எழுதி இருக்க?'
'ம்ம்.. கண்டிப்பா இஞ்சினியரிங் கெடச்சிரும். என்ட்ரன்ஸ் எழுதணும் அத்த.'
'சரி. நித்யா, கல்யாணி. ஒக்காந்து பேசிகிட்டுருங்க. நான் காப்பி போட்டுட்டு வரேன்.'
இரண்டு பேரும் நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள்.
ப்ராங்க்ளின் நித்யாவை விழுங்கி விடுவது போல் பார்த்தான். நித்யாவின் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொல என்று வந்தது.
கல்யாணி வாய் திறந்தாள்.
'எப்ப ஊருக்கு போறீங்க?'
ப்ராங்க்ளின் நித்யாவயே வெறிக்க பார்த்தான். அவள் தலை குனிந்து கொண்டாள்.
'ஏங்க. நான் ஒருத்தி இங்க இருக்கென்.'
ப்ராங்க்ளின் பார்வையை நித்யாவிடம் இருந்து கல்யாணிக்கு நகர்த்தினான்.
'எப்ப ஊருக்கு போறீங்கன்னு கேட்டேன்.'
'இப்பவே..காப்பி சாப்பிட்ட பொறகு. அம்மா தங்கக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அத்தய பாத்துட்டு போலாமேன்னு..'
சிரித்தாள் கல்யாணி.
'ஆஹா! அத்த மேல தான் எவ்ளோ பாசம்? இங்க பாருங்க டீச்சர் வந்துருவாங்க. நீங்க இந்த ஊர்ல எல்லைல ஒரு பாழடஞ்ச கோயில் இருக்கு. அது பக்கத்துல நில்லுங்க. பஸ் ஸ்டாண்ட் தாண்டி கொஞ்ச தூரம் போனா வந்துரும். நான் இவள கூட்டிட்டு வாரேன். அங்க போயி பேசிக்கலாம்.'
மேரி டீச்சர் வருவது தெரிய, சட் என்று கண்களைத் துடைத்துக் கொண்டாள் நித்யா.
'எத்தன மார்க் வரும் தோராயமா?' என்றாள் கல்யாணி.
'ம்ம். ஆயிரத்துக்கு மேல கண்டிப்பா வரும்.' என்றான் ப்ராங்க்ளின்.
'இந்தா எல்லாரும் காப்பி எடுத்துக்குங்க.' மேரி டீச்சர் காப்பி டம்பளர்கள் இருந்த ப்ளேட்டை நீட்ட நித்யா ஒன்றை எடுத்துக் கொள்ள, கல்யாணி ஒன்றை எடுத்து ப்ராங்க்ளினிடம் நீட்டினாள். ப்ராங்க்ளின் அதை வாங்கிக்கொண்டு உறிஞ்சினான். காப்பி குடித்து முடித்ததும் எழுந்தான் ப்ராங்க்ளின்.
'அப்ப நான் வரேன் அத்த. அப்பா லீவுக்கு வரச் சொன்னாரு.'
'நீ அப்பாட்ட சொல்லிரு ப்ராங்க்ளின். இவங்க ரெண்டு பேரும் ப்ளஸ் டூ எக்ஸாம்முடிச்ச பொறகு தான் வருவேன்னு சொல்லிரு. பாட்டிய வருசம் வருசம் ஒரு தடவ இங்க கூட்டிட்டு வா. அண்ணனையும் மதினியையும் அடிக்கடி வரச் சொல்லு.'
'சரிங்க அத்த.'தொங்கிப்போன முகத்தோடு எழுந்தான் ப்ராங்க்ளின்.
வாசலைத் தாண்டி அவன் சென்ற சில நிமிடங்கள் கழித்து கல்யாணி டீச்சரிடம் கேட்டாள்.
'டீச்சர்! நாங்க முருகன் கோவில் தெரு வர போயிட்டு வந்துர்றொம்.'
'சரிம்மா! சீக்கிரம் வந்துருங்க.'
ரெண்டு பேரும் குதியாட்டம் போட்டு முருகன் கோவில் தெரு போயி அங்கிருந்து குறுக்கு வழியாக பஸ் ஸ்டாண்ட் வந்தார்கள். அதில் இருந்து கொஞ்ச தூரம் சென்றால் பாழடஞ்ச கோவில் ஒன்று வரும். அந்த காலத்தில் அங்கு ஓர் கோவில் இருந்ததாகவும், இந்த முருகன் கோவில் கட்டிய பிறகு மக்கள் அதை மறந்து விட்டதால் பாழடைந்து போய் வவ்வால்களின்ம, பாம்புகளின் இருப்பிடமாகவும் மாறி விட்டதாக அங்கே பேசிக் கொள்வார்கள்.
ஒரு பிரகாரம். பிரகாரம் முழுக்க, முட்செடிகளும், அரளிச்செடிகளும். பிரகாரத்தின் நடுவில் பழங்கால மண்ணில் எழுப்பப்பட்ட கோபுரம் சிதிலமடைந்து தெரியும். அவர்கள் அந்த வழியாகப் போவார்களே தவிர, அதனுள் ஒரு தடவை கூட சென்றதில்லை.
அவர்கள் அதன் அருகில் செல்ல ப்ராங்க்ளின் வாசலில் நின்றிருந்தான். இவர்களைக் கண்டதும் அவன் கோயிலின் உள்ளே செல்ல, இவர்களும் யாரும் பார்க்காததை உறுதி செய்து கொண்டு உள்ளே நுழைந்தனர். உள்ளே நுழைந்த அடுத்த வினாடி ப்ராங்க்ளினை அணைத்து அவன் நெஞ்சில் சாய்ந்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள் நித்யா. கல்யாணி திரும்பி நின்று கொண்டாள்.
'அழாத நித்யா. நீ வீட்ல அழுதப்பவே எனக்கு மனசு தாங்கல. அத்த இருந்ததால அடக்கிகிட்டேன்.'
'பா...பாத்..பாத்து எத்தன நாளாச்சு....' என்று விசும்பினாள் நித்யா.
'அதான் வந்துட்டேன்ல.' என்று அவளது முகத்தை நிமிர்த்தி கண்களைத் துடைத்து விட்டு அவளது நெற்றியில் முத்தமிட்டான் ப்ராங்க்ளின்.
'எ..எல்ல்லல்ல்லாம் இவளால தான்.. ' என்று சீற்றத்துடன் கல்யாணியைப் பார்த்தாள் நித்யா அவனது நெஞ்சில் சாய்ந்தபடி.
சொல்லிவிட்டு ப்ராங்க்ளினிடம் நடந்ததைச் சொன்னாள்.
'பரவால்ல விடு. நான் ஒவ்வோரு தடவ வந்துர்றென். பாட்டிய கூட்டிகிட்டு. அல்லது அப்பா ஏதாவது குடுத்தா வாங்கிகிட்டு.'
'ஆமாம்... நான் கேக்கறென்னு தப்பா எடுத்துக்க மாட்டில்ல?'
'கேளு நித்தி..'
'அடுத்த ரெண்டு மாசத்துல காலேஜ் போகப் போற? அங்க டவுண் புள்ளைங்கல்லாம் வரும். என்ன மறந்துர மாட்டியே?'
ப்ராங்க்ளின் அவளை மெல்ல இறுக்கினான்.
'அசடு. நாம என்ன இன்னைக்கு நேத்தா லவ் பண்றோம்? ஆறாம் க்ளாஸ் இருக்குமா? ஏன் நீ ஒவ்வொரு தடவ ஊருக்கு வறப்பவே நீ எப்படா வருவேன்னு காத்திருப்பேன். அம்மாவ நச்சரிப்பேன். அம்மா கூட வெளயாட்டா இப்பவே பாரு அத்த பொண்ணு இவன கைக்குள்ல போட்டுட்டான்னு அப்பாட்ட சொல்லி சிரிப்பாங்க. காலேஜ் என்ன காலேஜ். இப்ப கூட என் ஸ்கூல் புள்ளைங்க இல்லயா. ஊர் புள்ளைங்க இல்லயா. யார் இருந்தாலும் என் நித்தி மாதிரி வருமா.'
அவனது பதிலில் உள்ளம் குளிர்ந்த நித்யா அவனின் முதுகைச் சுற்றியுள்ள கைகளை மேலும் இறுக்கிக் கொண்டு அவனது மார்பில் மறுபடியும் தலையைப் புதைத்தாள்.
இருவரும் பேசாமல் ஒரு ஐந்து நிமிடம் அப்படியே இருக்க, என்ன சத்தத்தயே காணொம் என்று நினைத்த கல்யாணி திரும்ப இருவரும் கண்களை மூடி கனவுலகில் சஞ்சரிப்பதை உணர்ந்தாள். அவளுக்கு ரவியின் நியாபகம் வந்தது. ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டு நித்யாவை உசுப்பினாள்.
'நித்யா! இருட்டப் போவுது. இது வேற சாராயம் குடிக்குற இடம். எவனாவது வந்தா வம்பா போயிரும். போதும் வா.'
நித்யா மெதுவாய் நிமிர்ந்து ப்ராங்க்ளினைப் பார்த்தாள்.
ப்ராங்க்ளின் அவளிடம் கேட்டான்.
'நான் வேணா லெட்டர் போடவா?'
'அய்யோ. அம்மா எடுத்துப் படிச்சுருவாங்க.'
கல்யாணி உடனே உதவிக்கு வந்தாள்.
'எங்க வீட்டு அட்ரசுக்கு போடுங்க. தோட்டத்துல வந்து போஸ்ட்மேன் குடுத்துருவாரு. நான் இவட்ட குடுத்துர்ரென்.'
'சரி. அட்ரஸ் சொல்லு, கல்யாணி.'
கல்யாணி அட்ரஸ் சொல்ல மனதில் குறித்துக் கொண்டு நித்யாவை விலக்கினான் ப்ராங்க்ளின்.
'நித்யா! கல்யாணி! நல்லா படிங்க. நீங்களும் காலேஜ் போகணும். சரியா? கல்யாணி! நித்யாவ பாத்துக்க.'
கல்யாணி அவனிடம் சொன்னாள்.
'ஒரு ஹெல்ப் பண்றிங்களா? ரவிய பாத்தா நான் கேட்டதா சொல்றிங்களா?'
'நிச்சயமா. சகலைட்ட சொல்றென்.'
'சகலை'ங்ற வார்த்தை பிரயோகத்தை கேட்டதும் சிலிர்த்தாள் கல்யாணி. அந்த குடும்பத்தில் ஒரு அங்கமாக தான் மாறி விட்டதை ப்ராங்க்ளினும் அங்கீகரித்து விட்டதையே அது காட்டியது.
'சரி. நான் வரேன். அடிக்கடி லெட்டர் போடறேன், நித்தி. நீ பதில் போட வேண்டாம். காலேஜ்ல நான் ஹாஸ்டல்ல தான் படிப்பேன்.அப்ப நீ என் பேருக்கு லெட்டர் போடு. அட்ரஸ் எல்லாம் அப்புறம் அனுப்பி வைக்கறேன். வரட்டுமா?'
அவன் நித்யாவை ஒரு முறை பார்த்து விட்டு சட் என்று திரும்பி வெளியெ வந்து பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான். அவன் சென்ற சில நிமிடங்களுக்கு பிறகு கல்யாணியும் நித்யாவும் மெதுவாய் வெளியே நோட்டமிட்டு வந்தார்கள். ரோட்டில் இறங்கி அவர்களும் பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்தார்கள். அவர்கள் நடக்கையில் எதிரே வந்த பஸ்ஸில் ஜன்னலோர சீட்டில் ப்ராங்க்ளின் உட்கார்ந்திருப்பதைக் கண்டார்கள். கண்களால் மூவரும் விடை பெற்றுக் கொண்டார்கள்.
முருகன் கோவில் தெருவில் ஜானகி வீட்டிற்குச் சென்று பேருக்கு ரெண்டு வார்த்தை பேசி விட்டு வீட்டுக்கு வந்து நித்யாவை விட்டு விட்டு தோட்டத்துக்கு சென்றாள் கல்யாணி.
குடிசையினுள் முத்தம்மாள் கத்துவது கேட்டது.
யாரிடம் அம்மா சண்டை இடுகிறாள்?
உள்ளே 'அம்மா' என்று கூப்பிட்டவாறு நுழைய முத்தம்மாள் அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் நாராய் படுத்திருந்த ஒரு ஆணுக்கு காப்பி டம்பளரை நீட்டிக் கொண்டிருந்தாள்.

(தொடரும்)

 
அது யார் கல்யாணியின் அப்பாவா. காதலுக்கு நல்லா உதவிக்கறாங்க நித்யகல்யாணி
 
Top