Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 16

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 16:

ராஜ் நந்தன் மதுவிடம், “என்ன கார்னர் செய்றியா…?” என்றான் கோபத்துடன். கண்கள் எல்லாம் சிவக்கக் கேட்டக் கணவனைக் கண்டு பயந்த போதும் தைரியமாக அவனை எதிர்கொண்டாள் மதுரவசனி.

சில நேரங்களில் துணிந்து தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டி தான் உள்ளது.

“ஆமா… அப்படிதான்… கார்னராவும் எடுத்துக்கலாம்.. என்னோட ஆசைன்னு நினைச்சிக்கலாம்…” என்று மிடுக்காய்ச் சொல்ல

ராஜ் நந்தனின் மனதிலும் அதே எண்ணம் தான்.சில காலங்களாக தாயின் மடிக்குத் தவிக்கத் தொடங்கியிருக்கிறான். தாயை மனம் மிகவும் தேடியது. அதுவும் ‘வெறுப்பை அழிக்க முடியாது… வெறுப்பவர்களை அழிக்க முடியும்…’ என்பதைப் போல அன்பானவர்களை விலக்கி வைத்தாலும் அன்பை விலக்கி வைக்க முடியுமா என்ன…? ஆனாலும் அவர்களிடம் தாமாகச் செல்ல ஈகோ தடுத்தது. இப்போது மதுரவசனியும் அதே சொல்ல ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் இருமனதாய்த் தவித்தான் ராஜ் நந்தன்.

ஆனால் அவன் நிலையிறங்காமல் மதுவே அப்படி ஒரு யோசனை சொல்லவும் அவனுக்கு அது பிடித்து இருந்தது. அது மட்டுமின்றி தன் மனைவியின் ஆசை என்று வந்து விட்டப் பின் அதை நிறைவேற்றாமல் அவனால் இருக்க முடியாதே…!

“உன்னிஷ்டம்… அப்போ நாம வரோம்னு நீயே போன் செஞ்சு உன் மாமியார்கிட்டச் சொல்லிடு…” என்றபடி அவன் உறங்க,

தலையணையில் சாய்ந்துக் கொண்டு ரசனையோடு கணவனின் முகம் நோக்கினாள். எவ்வளவு பிடிவாதம் இருந்தாலும் பாசத்தின் முன் அவன் இன்னும் சிறுகுழந்தை தான் என்ற நினைவுத் தோன்ற அவனின் கேசத்தை நேசத்தோடு கோதினாள்.

‘எனக்கு தெரியும் நந்து... நீங்க என்னை இங்க என் அப்பா அம்மா… ஆத்தான்னு சொந்தம் கூடப் பார்க்கும்போது உங்க வீட்டை ரொம்ப மிஸ் பண்றீங்கன்னு…. இனிமே நீங்க மிஸ் பண்ண வேண்டாம்… இப்ப உங்களுக்கு என் மேல கோவம் இருந்தாலும் கொஞ்ச நாள் கழிச்சு என்னைப் புரிஞ்சிப்பீங்க..’ என்று மனதில் நினைத்தவள் தன் மன்னவனோடு மஞ்சத்தில் உறங்கினாள்.

அடுத்த நாள் காலையிலேயே நந்தன் கிளம்ப வேண்டும் என்று சொல்ல,

மதுரவல்லி, “தம்பி…. மாசமா இருக்கப் பொண்ணு… நல்லா பாத்துக்கோப்பா… நீ நல்லா பாத்துப்பேன்னு தெரியும்… இன்னும் மூணு மாசம் கழிச்சு ஐஞ்சாம் மாசம் மருந்து கொடுக்கனும்.. நான் அம்மாகிட்ட பேசுறேன்.. நீங்க அப்போ இவளை அழைச்சிட்டு வாங்க…” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

மாசமாக இருக்கும் மகள் என்பதால் பலவிதமான அறிவுரைகள் பலகாரங்கள் என்று தடபுடலாக அவர்களை வழியனுப்பினார்கள் மதுரவசனியின் பிறந்த வீட்டினர்.

சென்னை விமான நிலையத்தில் ரகு காருடன் காத்திருக்க, அவனது காரில் ஏறிய ராஜா வீடு வரும் வரையில் அமைதியாக இருந்தான்.

அவன் அறையில் ஓய்வெடுக்கப் போக, மதுரவசனியோ எல்லா துணிகளையும் அடுக்கி பேக் செய்ய,

அதைக் கண்டவன் ,

“அடியே…. கொஞ்ச நாள் பார்ப்போம் டி.. பிடிக்கலன்னா வரலாம்.. அப்படியே மூட்டை முடிச்சைக் கட்டாத…” எனச் சத்தம் போட

“அதெல்லாம் அங்க போனதும் அம்மா முந்தானையை பிடிச்சிட்டு சுத்துவீங்க நீங்க… பேசாம இருங்க..”என அவனை அதட்டியவள் எல்லாவற்றையும் அடுக்க

ராஜா எழுந்து சென்று கிச்சனில் அவளுக்காக ஜூஸ் போட்டு எடுத்து வந்து ,

“முதல்ல இதைக் குடி டி…” எனச் சொல்ல

“இப்ப தானேங்க… ஏர்ப்போர்ட்ல எனக்குக் காபி வாங்கித் தந்தீங்க.. அதுக்குள்ள எனக்குப் பசிக்குமா… அப்புறம் சாப்பிடுறேன்..” எனத் துணியை எடுக்கப் போனவளின் கையில் இருந்தத் துணியை எறிந்தவன்

“ஏன் டி ஒரு மனுஷன் ஆசையாய் ஜூஸ் போட்டுக் கொடுத்தா குடிக்காம.. சும்மா என்ன பேச்சு.. அது உனக்குக் காபி.. என் புள்ளைக்கு ஜூஸ்…. வாயைத் திறந்து குடி…” என்றான் மிரட்டலாய்.

அவனை குண்டு கண்களால் முறைத்த வண்ணம் அவள் ஜூஸை வாங்க,

“சிரிச்சிட்டே குடி…டி… என் புள்ளை அப்போதான் சிரிக்கும்.. டக்குனு குடிக்கிறியா இல்லை.. நான் வாயில ஊத்துவா.. இம்சையாகிட்ட நீ….” என வைதவாறே அவள் வாயில் ஜூஸை ஊற்ற,

அவன் கைவளைவில் இருந்து கொண்டு ஜூஸைப் பருகியவள், அவன் சட்டையில் வாயை வைத்துத் துடைக்க, ராஜாவோ அவள் தலையில் குட்டினான்.

“லூசு…வைட் ஷர்ட்….” என்று அதட்ட

“வைட் ஷர்ட் முக்கியமா… இல்லை வைஃப் முக்கியமா..?” என மது கேட்க

“என்னடி ரொம்பத்தான் மிரட்டுற….? ஊருக்குப் போயிட்டு வந்த கொழுப்பா..?”

“இல்ல.. ஜூனியர் ராஜா உள்ள இருக்கக் கொழுப்பு..” என்றவளை அணைத்து அழுத்தமாய் அவள் கன்னத்தில் இதழ்ப் பதித்தவன்

“சூப்பர் டி பொண்டாட்டி…” என்றவன் அவளை இன்னும் அழுத்தமாய் அணைத்து அவளுள் புதைய முயற்சித்தான். அவளது மேனியின் மென்மையில் தன்னைத் தொலைத்தவன், சுற்றுமும் மறந்தான்.

இப்படி இவர்கள் இருக்கையில் வாசல் மணி ஓசைக் கேட்டு மனைவியை விட்டு விலகிய ராஜா,

“நம்ம வீட்டுக்கு எந்த கரடி டி வந்திருக்கு…? போய் பார்க்கிறேன்.." என்றபடி அவன் கதவைத் திறக்க,

அங்குப் பார்த்தால் வைரமும் சுந்தர் ராஜனும் நிற்க, ஒரு நொடி அவர்களைப் பார்த்து திகைத்தவன் பின்னர் வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்கும் பொருட்டு,

“வாங்கம்மா…. வாங்கப்பா…” எனச் சொல்ல, வைரத்தின் முகம் மலர்ந்துப் போனது.
உள்ளே வந்தவர்களை மதுரவசனி மருமகளாய் வரவேற்றாள்.

“இருங்கத்த… நான் போய் குடிக்க எதாவது எடுத்துட்டு வந்துடுறேன்…” எனச் சொல்ல

அவள் கையைப் பிடித்து அமர வைத்த வைரம்,
“புள்ளத் தாச்சிப் பொண்ணு.. நீ அலையாத… சும்மா உட்காருடா…” எனச் சொல்ல

ராஜாவோ அவன் அறைக்குள் புகுந்தான். மூவரும் அவனை யோசனையாய் பார்க்க, மதுரவசனியோ ,

“ஒன்னுமில்லத்த… இருங்க வந்துடுவார்… அவர் தான் வீட்டுக்கு வர ஓகே சொல்லிட்டாரே….” எனச் சொல்ல

சுந்தரமும், “ரொம்ப தேங்க்ஸ்டா மது….. உன்னை மாதிரி ஒரு மருமக கிடைக்கக் கொடுத்து வைச்சிருக்கனும்…. குடும்பத்தைப் பிரிக்கிற மருமகளுங்க இருக்க இந்த காலத்துல என் குடும்பத்தைச் சேர்க்கிற நீ கிடைச்சது நாங்க செஞ்ச புண்ணியம்… ரொம்ப நாள் கழிச்சு என் மனசு லேசா இருக்கு… நீ எனக்கு நல்லா ஸ்வீட்டாவே எடுத்துட்டு வா… அதுவும் என்னோட பேரக்குழந்தையை வேற சீக்கிரம் எங்களுக்குப் பெத்துத் தரப்போற..” என்றார் உணர்ச்சிமிகுதியில்.

வைரமும், “இவர் இவ்வளவு பேசுற ஆளே இல்ல மது…. உன்னைப் பார்த்ததும் என்னமோ பேசுறார்..” எனச் சொல்ல

“இருங்க அத்த..ஒரு பத்து நிமிசம்…. சாப்பிட ரெடி செஞ்சுட்டு வந்துடுறேன்… நீங்க அவர்ட்ட பேசுங்க.. நான் உங்க புள்ளையைக் கூப்பிடுறேன்…” என மதுரவசனி தங்கள் அறைக்குள் போனாள்.

அங்கே ராஜா சட்டையை மாற்றிக்கொண்டு இருந்தான் ,

“ஏன் டி…. நான் சரின்னு சொன்னதுமே உடனே தகவல் அனுப்பிட்டியா.. பொசுக்குன்னு வந்து நிக்குறாங்க..?”

“நான் ஊர்ல இருக்கும்போதே சொல்லிட்டேங்க… அது இருக்கட்டும்.. என்னங்க… அவங்க வந்துருக்காங்க… நீங்க பாட்டுக்கு வந்துட்டீங்க… எங்கப் போறீங்க.. சட்டை மாத்துறீங்க…?” எனப் பரபரக்க,

“உஷ்…. மெதுவா பேசுடி…. நான் என்ன அப்படியே வா உள்ளே வந்தேன்.. வாங்கன்னு சொன்னேன் தானே…. நீ நல்லா சாஞ்சு வெள்ளைச் சட்டையில ஜூஸ் கரை நல்லா தெரியுது…. பெரியவங்க முன்னாடி அப்படி போய் நிக்கவா நான்…ம்ம்….முதல்ல நீ வந்தவங்களுக்கு சாப்பிடக் கொடு…” என அவளை அதட்ட

அவளும் தலையசைத்து விட்டு சமையலறைக்குள் புகுந்தாள். பார்த்தால் பின்னாடியே ராஜாவும் உள்ளே வர,

“என்னங்க… அங்க போய் பேசாம.. இங்க ஏன் வரீங்க..?” என மது வினவ

“மது…. நான் ஒரு நிமிசம்னு சொல்லிட்டு தான் வந்தேன்.. இம்சை பண்ணாத…. தள்ளு நான் டீ போடுறேன்…” எனச் சொல்ல
“ப்ச்… நான் ஒன்னும் அவ்வளவு வீக் இல்ல… நானே போடுவேன்..” என அவள் மறுக்க

“மது….. நீ வீக்னு நான் சொல்லல… அது…. நீ போ…” என அவன் மழுப்ப

“என்ன… நான் நல்ல டீ தான் போடுவேன்…” என அவள் கோபமாய்ச் சொல்ல

“லூசு பொண்டாட்டி.. அது அப்பா டீன்னா ரொம்ப ஆசையாக் குடிப்பாரு…. அதான்.. நீ டீன்னு சொல்லி தண்ணியைக் கொடுத்தாலும் நான் குடிப்பேன்… நீ போடுற டீ சூப்பர் தான் இல்லன்னு சொல்ல மாட்டேன்.. ஆனா நான் அப்பாவுக்குப் பிடிச்ச மாதிரி போடுவேன்.. சரியா…” என்று சொல்லி விட்டு டீ போட்டான்.

சமையல் மேடையில் ஏறியமர்ந்தவள், அவனை ஆழமாக நோக்கினாள். எப்படி இவன் இவ்வளவு பாசமாக இருக்கிறான்….? ஒரு நேரம் வெயிலாய் காய்கிறான்… சில நேரம் நிலவாய் குளிர்கிறான். ஆனால் இவனைப் போல் ஒருவரை உளமாற நேசிக்க யாருமில்லை என்பதை மது உணர்ந்து கொண்டாள். அவன் மேல் கொண்ட காதல் இன்னும் இன்னும் பெருகி உள்ளம் உடையவன்பால் உருகியது.

ஆழமான அன்பு சில நேரம் ஆதிக்கமாக மாறிப் போகிறது என்று தான் மதுவுக்குத் தோன்றிற்று.

இவனது அன்பிற்கு வரையறை… வரைமுறை விதிமுறை எதுவும் இல்லை.. சொல்லப்போனால் பொதுவாகவே அன்பு என்பது விதிமுறைக்கு அப்பாற்பட்டது. அது கண்டிஷன்ஸ் அப்ளை பிரிவில் வராது. அன்கண்டிஷனல் அதாகப்பட்டது நிபந்தனையற்றதுதான் அன்பு…!!

நீ கொடுக்கிறாய் நானும் திருப்பிக் கொடுக்கிறேன் என்றால் அது அன்பாகாது…! கடனாகிவிடும்…!! நீ கொடுத்தாலும் மறுத்தாலும் விலக்கினாலும் விலகினாலும் நான் கொடுப்பேன் என்ற நிலைதான் தூய நேசம்…!! அது தான் அன்பின் விலாசம்..!!

அடியாழம் வரை ஆழ்ந்து அக்கறைக் கொண்டு அர்த்தமான அன்பைப் பல்வேறு அர்த்தங்களாய் வெளிப்படுத்த இவனால் மட்டுமே முடியும். எதுவாகினும் அதீது தான். கோபமானாலும் சரி அன்பானாலும் சரி என்று கணவனைக் கண்டு பெருமைக் கொண்டாள் மதுரவசனி.
 
அவள் குதிக்கப் போக,

“லூசு…” என அதட்டிவனை முறைத்தவள்,

“என்ன சும்மா சும்மா லூசுன்னு திட்றீங்க… வெளியே மாமியார் மாமனார் இருக்காங்களேன்னு பார்க்கிறேன்.. இல்லன்னா..” என மதுரவசனி முகத்தைத் தூக்கி வைத்து மிரட்ட,

“என்னடி செய்வ… லூசு மாதிரி குதிக்கிற… குழந்தையா நீ… உள்ள ஒரு குழந்தை இருக்கு…. சீரியஸா இரு மது…” என்றவனின் முகம் சீரியசாகவே இருக்க

அவனுக்கு குழந்தை எவ்வளவு முக்கியமென உணர்ந்தவள் அவன் மன நிலையை மாற்றும் பொருட்டு, “என்ன செய்வேன் தெரியுமா..” என்றபடி அவன் சட்டையைப் பிடித்து அருகில் இழுத்தவள் அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

“உன்னை..” என்று சிரித்தவன்

“ஹே…!! டைம் ஆகுது.. டீயை எடுத்துட்டுப் போ..” எனச் சொல்ல அவளும் அவனும் புன்னகையோடு வந்த கோலத்தைக் கண்டு வைரமும் சுந்தர் ராஜனும் மனம் குளிர்ந்தனர்.

“அத்தை.. டீ கொண்டு வந்தது நான்.. ஆனா போட்டது உங்க புள்ளை…” என்று ரஜினிகாந்த் போல் சொல்ல அனைவர் முகத்திலும் சிரிப்பு.

ஆனால் ராஜ் நந்தனோ மனைவியை முறைத்தான்.

அவர்கள் டீ குடிக்கும் வரை அமைதியாக இருந்த சூழ்நிலையை வைரம் தான் கலைத்தார்.

“ராஜா… ரொம்ப வருஷம் கழிச்சு வர… நல்ல நேரத்துல… இன்னும் அரை மணி நேரம் கழிச்சு கிளம்பலாமாப்பா…?” எனக் கேட்க

“ நான் என்ன விருந்தாளியா…? அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. இப்ப வரதுன்னா வரேன்.. இல்லன்னா... உங்க இஷ்டப்படி என்னால நடக்க முடியாது…” என அவன் பட்டென்று சொல்ல

“அய்யோ.. ராஜா… அப்படி இல்லடா… இப்ப மருமகளும் வர… கூடவே பேரப்புள்ளையும் வரப்போகுது.. அதான் நல்ல நேரம்…” என வைரம் தயங்கித் தயங்கி எங்கே அவன் மறுத்து விடுவானோ எனப் பயந்து உரைக்க,

சுந்தர் ராஜனுக்கு அப்படி எதுவும் இல்லை. மகன் அவருக்குப் பிடித்தாற் போல் இஞ்சித் தட்டி ஏலக்காய்த் தூவி அவருக்குப் பிடித்தத் திடத்தில் டீ போட்டுக் கொடுத்ததிலேயே அவருக்கு மகனின் மனம் புரிந்து விடத் தைரியமாகவே பேசினார்.

“டேய்.. என்னடா… அம்மா தான் சொல்றா இல்ல.. பேரக்குழந்தையை சுமந்திட்டு மருமக வரப்போறா.. அதனால நேரம் காலமெல்லாம் பார்க்கத் தான் வேணும்… எதாவது பேக் பண்றதுன்னா போய் செய்மா மது… நான் என் புள்ளை வீட்டை சுத்திப் பார்க்கப் போறேன்..” என்றபடி அவர் எழுந்து வீட்டை சுற்றினார்.

வைரம் மதுவுக்கு உதவச் செல்ல, ராஜாவோ தந்தையின் கூற்றுக்கு மறுபேச்சு பேச இயலாமல் அமைதியாக அமர்ந்திருந்தான். எப்போதுமே அவன் அவரை எதிர்த்துப் பேசியதில்லை. சில கசப்பான தருணங்களைத் தவிர..! இப்போது அவரது உரிமையான பேச்சில் உள்ளே என்ன என்னவோ உணர்வுகள் அலையென எழும்ப , மனம் பாரமாய்க் கனத்துப் போனது.

மறந்து விட நினைக்கும் நினைவுகள் தான் மெல்ல மெல்ல எழும்பி நெஞ்சில் கீறி வலியை உண்டு செய்ய அப்படியே கண் மூடிச் சாய்ந்தவன் சிறிது நேரம் கழித்து தனதறைக்குள் நுழைய, வைரம் உடனே அவர்களுக்குத் தனிமைக் கொடுத்து வெளியேறினார்.

“மது…” என அவன் மெதுவாக அழைக்க அவனருகில் போய் ‘என்ன’ என்பதைப் போல் மது பார்க்க

அவளைக் கலக்கத்தோடு பார்த்தவன், “என்னமோ பயமா இருக்கு மது… திரும்ப இதையெல்லாம் இழந்தா தாங்கவே மாட்டேன் நான்… என்னமோ ஒரு மாதிரி இருக்குடி..” என முகம் சிவந்துப் போய் உரைக்க, அவனின் டென்ஷன் உணர்ந்து ,

அவனை ஆதரவாக அணைத்துக் கொண்டவள்,
“எது போனாலும் நான் போக மாட்டேன்ல… அப்புறம் என்ன…? இப்பப் பாருங்க அவங்களே வந்து கூப்பிடுறாங்க… என் ராஜா எப்பவுமே இறங்கல…. இனியும் இறங்கப்போறதில்லை… அவங்களே அவங்க புள்ளையைக் கூப்பிட வந்திருக்காங்க… எல்லாரையும் சந்தோஷமா வைச்சிக்கலாம் நந்து… ஆனா அதே சமயம் நீங்க கஷ்டப்பட கூடாதுங்க. ஏன்னா எல்லாரையும் விட உங்க சந்தோஷம் எனக்கு முக்கியம்…. உங்களுக்குப் பிடிக்கலன்னா போக வேண்டாம்..” என கடைசியில் அவள் குண்டைத் தூக்கிப் போட நந்தனுக்கு உள்ளுக்குள் பக்கென்றது. அதே நேரம் கோபமும் கனன்றது. அது எதனால் என்று அவனுக்கே தெரியவில்லை.

“ஏய்…. லூசாடி நீ… சும்மா பாவம் அவங்களுக்கு ஆசைக் காமிச்சு… இப்ப வேண்டாம்னு சொல்வியா…? அதெல்லாம் பார்த்துக்கலாம்… அதான் நீ இருக்கியே டி…. உன் மாமியார் கிட்ட நல்ல நேரம் வந்துடுச்சான்னு கேளு.. வீட்டைப் பூட்டிட்டு வா… நான் போய் காரை எடுக்கிறேன்…” என்றவன் கீழே இறங்கிச் சென்றான்.

கீழே இறங்கிச் சென்றவன் ரகுவிடம், “டேய்…ரகு…மது ….அம்மா….நான் அங்கேயே போகலாம்னு இருக்கேன்… நீ வீட்டைப் பார்த்துக்கோடா… நாளைக்கு மீட் பண்ணலாம்…” என்றான் திக்கித் திணறி. அவன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுள்ளான் என்பது ரகுவுக்குப் புரிந்துப் போனது.

அவனை சமாதானம் செய்யும் பொருட்டு, “சரிண்ணா.. நாளைக்கு மியுசிக் டைரக்டர் மிருணாளன் கூட ரெகார்டிங் இருக்குண்ணா.. காலையில அவர் வீட்டுக்கு வர சொன்னார்.. நம்ம வீட்டுக்குத் தானேண்ணா போறீங்க… பார்த்துப் போங்க… நான் நாளைக்கு பார்க்கிறேன்..” என்றான்.

அதன்பின் ராஜாவும் மதுவும் அவர்கள் காரில் வர, சுந்தரும் வைரமும் அவர்கள் காரில் ‘ராஜ்பவனம்’ சென்றனர்.

அங்கே அண்ணனையும் அண்ணியையும் வரவேற்க தீபனும் கீர்த்தியும் வாசலிலே நின்று வரவேற்றனர். கீர்த்தி ராஜாவைக் கண்டதும் ,

“அண்ணா..” என ஓடிச் செல்ல,

“கீதும்மா..” என்றபடி அவன் தங்கையை அணைத்துக் கொள்ள, அவளோ ஓவென்று அழுதாள். இத்தனை வருடம் அண்ணனைப் பிரிந்து இருந்த ஏக்கம் தீர அழுதாள்.

அதுவரை பழைய நினைவுகள் சுழன்று அடிக்க, இறுகிப் போய் நின்றிருந்தான் ராஜ் நந்தன். எல்லாமே இல்லையென்றாகி நடுத்தெருவில் யாருமற்று அநாதையாய் நின்ற காலம் நினைவில் வர, மனமும் உடலும் சேர்த்து இறுக்கத்தோடு நின்றான். ஆனால் கீர்த்தியின் அழுகை அவனை கரைக்கவே செய்தது.

“ஐ மிஸ்…யூண்ணா….நீ இல்லாம வீடு நல்லாவே இல்லண்ணா…..” என அழுது கொண்டே இருக்க

“கீதும்மா…அழாதடா…அண்ணா வந்துட்டேன்ல…” என ராஜா சமாதானம் செய்தான். அவன் தங்கை மீது என்றுமே கோபம் கொண்டதே இல்லையே..!

“இனிமே போக மாட்டே இல்ல.. போய்டுவியா…?” என கீது மேலும் அழ

“கீதும்மா… அண்ணா இனிமே போகவே மாட்டேன் டா.. இப்படியே வாசல்ல நிக்க வைக்கிற அண்ணாவுக்கு கால் வலிக்குதுடா..” என்று சொல்லவும் தான் அனைவரும் உள்ளே சென்றனர்.

“வெல்கம் ஹோம் டா… அண்ணா..” எனத் தீபன் கைகுலுக்க, அவனின் தோளில் தட்டி,

“எப்படிடா இருக்க..?” என விசாரிக்க,

“நல்லா இருக்கேன் அண்ணா…” என்றான் தீபன்.

ஆத்தா வைதேகியும் பேரனின் வருகையில் மகிழ்ந்தவர், மதுரவசனி உண்டான செய்திக் கேட்டு மதுரவசனியை ஆசிர்வதித்தார்.

கீர்த்தி வளவளவென்று வெகுவருடம் கழித்து வந்த தமையனிடம் பேசிக்கொண்டிருக்க, அதைப் புன்னகையோடு அனைவரும் பார்த்திருந்தனர்.

ஆனால் சிறிது நேரத்துலேயே ராஜாவுக்கு மனம் பிசையத் தொடங்க ,

“நான் ரூம்க்குப் போகனும்..” என்றான் மொட்டையாக.

அவனும் சராசரி மனிதன் தானே. சிலவற்றை மறக்க சிந்தை இடம் கொடுப்பதே இல்லை. மறக்க இடம் கொடுக்கவும் காலம் இடம் கொடுக்க வேண்டுமல்லவா..? மறக்க முடிகிறதோ இல்லையோ ஆனால் இனி தன்னால் யாரும் காயப்படக் கூடாதென்பதில் தெளிவுடன் இருந்தான் ராஜா. பதினான்கு வயது கீர்த்திக்கு அவன் இவ்வீட்டை விட்டுச் செல்லும்போது, அவள் இப்போதும் சிறுகுழந்தைப் போல் அழுதது மனதைப் பிசையத் தன்னுணர்வுகளை அடக்க முயற்சி செய்தான். முடிந்தவரை அதை மற்றவர்களிடம் மறைக்க நினைத்தான்.

அவன் திடீரென அப்படி கேட்கவும், வைரம் உடனே,

“உன் ரூம்க்குப் போடா ராஜா…” என்று சொல்லவும் எழுந்து நின்றவன் ஒரு நொடி தயங்கியவன் பின்னர் வேகமாக அவனது அறைக்குச் சென்றான்.

அவன் சென்ற பின் வைரம் மதுவிடம், “மதும்மா….நீயும் கொஞ்சம் நேரம் அவனோடு போய் இருடா… கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடும்மா” எனவும் அவளும் அவர் காட்டிய அறைக்குள் சென்றாள்.

அங்கு சென்று பார்த்தால், அவள் கணவன் தலையைத் தாங்கியவாறு தலையணையில் சாய்ந்து கால்களை நீட்டி அமர்ந்திருந்தான்.

அவனருகில் சென்றவள் அவன் காலருகில் உட்கார்ந்து நெட்டி முறித்தாள். எப்போதுமே அவள் அப்படிச் செய்தால் விடுடி என்று கத்துபவன் இன்று அமைதியாகவே இருந்தான். அதை உணர்ந்தவள், அவன் தோள் தொட்டுக் கரம் பற்றி,

“என்னாச்சுங்க….?” என வாஞ்சையாகக் கேட்க

“ஒன்னுமில்ல… என்னோட ரூம் இது.. கிட்டத் தட்டப் பன்னிரெண்டு வருஷம் நான் இந்த ரூம்ல இருந்திருப்பேன்.. இன்னமும் அப்படியே இருக்கு… நீட்டா.. க்ளீனா.. பார்த்தியா… காலண்டர் டேட் கூட நான் கிழிச்சிடுவேன்… அப்படியே நான் இருந்தா எப்படி இருக்குமோ அப்படியே இருக்கு… இங்க எதுவுமே மாறல… என்னைத் தவிர.. இவ்வளவு பாசம் இருக்கவங்க ஏன் அன்னிக்கு அப்படி நடக்கனும்… எனக்காக என்னோட யாராவது ஒருத்தர் வந்திருக்கலாம் இல்லையா..? ம்ம்ம்… அந்த நாள் லைஃப்ல வராமயே போயிருக்கலாம்னு அடிக்கடி தோணுது மது…”

“முடியல… எல்லாத்தையும் மறந்துட்டு மூளையைக் கழட்டி ஒரு பக்கம்.. இதயத்தைக் கழட்டி இன்னொரு பக்கம்னு வைச்சிட்டு அமைதியாத் தூங்கனும்… ரோபோவா இருந்தா நல்லா இருந்திருக்கும்…” என விரக்தியாகப் பேச,

“விடுங்க…. எல்லாருக்கும் தானே அந்த கஷ்டம் இருக்கும்… பிடிக்காத விசயத்தைப் பேசி.. மனசுதானே கஷ்டம்.. ரிலாக்ஸா இருங்க…” என அவள் கொஞ்சம் கணவனின் நிலைக் கண்டு கலவரமாக உரைக்க

மாசமாக இருக்கும் நிலையில் இவள் இப்படி கவலைக் கொள்கிறாளே.. என வருந்தினான் ராஜா. மற்றவர்களிடம் மறைக்க நினைப்பவைக் கூட மனைவியான அவளிடம் மறைக்கத் தோன்றவில்லை. அது முடியவும் முடியாது..!!

அவளை மென்மையாக அணைத்தவன், “நீ இப்படி முதல்ல டென்ஷன் ஆகாத.. எனக்கு ஒன்னுமில்ல.. எதுனாலும் நான் பார்த்துப்பேன்.. அதுவும் இப்ப நீ மாசமா இருக்க..அதனால எனக்கு எதுவுமில்ல.. மனசுல நீ எதையும் ஏத்துக்காத… மறக்கறது நினைக்கறது எல்லாம் என்னோடப் போகட்டும்..” என்றபடி அவளை இன்னும் இறுக்கியணைத்தவன், அதற்குமேல் முடியாமல் எப்போதும் அவனுக்கு சுகசாந்தி தரும் அவளது சுகமேனிக்குள் சுகமாய் நுழைந்து புதைந்து அவளோடு புணர்ந்தான்..!

இப்புவியை… அதன் கசடுகளை.. கவலைகளை… எல்லாம்.. மொத்தமாக மறந்து….. துறந்து அவளிடம் சரண்புகுந்தான்.

சங்கமம் முடிந்த பின் அவள் களைத்து உறங்க, அவளிடமிருந்து விலகியவன் கீழே வந்துக் கீர்த்தியைக் கண்டு,

“நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்… கீது.. அண்ணி நல்லா தூங்கற… அவ முழிச்சதும் சாப்பிடச் சொல்லு…” எனக் கிளம்ப எத்தனிக்க

“ராஜா நீயும் சாப்பிட்டுப் போப்பா…” என வைரம் கூற

“நான் வந்து சாப்பிடுறேன்..” என்றவன் காரை எடுத்துக் கொண்டு சென்றான்.

மாலை சூழும் நேரத்தில் மதுரவசனி எழுந்தவளுக்குத் தலைப் பாரமாகிப் போக, அப்படியே கொஞ்சம் நேரம் அங்கேயே அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்தியவள் கீழிறிங்கி வந்தாள்.

கணவனைக் காணாமல் அவனை கண்கள் தாமாய்த் தேட,கீர்த்தி தான் ,

“அண்ணி.. அண்ணா… உங்களை சாப்பிடச் சொன்னார்… அவர் வெளியே போய்ட்டு வரேன்னு போனார்…. நீங்க வாங்க… பாப்பா வேற இருக்கு.. சாப்பிடுங்க… நேரம் ஆச்சு..” என அழைக்க

அவளும் மறுக்காது சாப்பிட்டாள். பின்னர் மாமியாருடனும் நாத்தனாருடனும் கதையளந்தவள், இரவில் கணவனுக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.

இரவு பத்து மணி வரை கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்தவன் மனம் கொஞ்சம் ஒரு நிலைக்கு வந்த பின் வீட்டுக்குச் சென்றுப் பார்க்க, அங்கே அனைவரும் உறங்காமல் உண்ணாமல் இவனுக்காகக் காத்திருக்க,

சுந்தரம் தான, “டேய்… மதியம் போனியே…. இப்ப தான் வீட்டுக்கு வருவியா… நீ…. சாப்பிடக் கூட இல்ல… என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல…?” எனக் கத்த

“அப்பா…. கொஞ்சம் மனசு சரியில்ல.. அதான்..”

அவன் அப்படிச் சொன்னதும் அனைவரும் சில நொடிகள் அமைதியாக இருக்க, ராஜாவே அதைக் கலைத்து,

“மது சாப்பிட்டியா நீ..?” என மனைவியிடம் கேட்க

இல்லை என்பதாக அவள் தலையசைக்க,

“உன்னை.. அறிவு இல்லயாடி உனக்கு..?” எனத் திட்ட,

உடனே கீர்த்தி, “யாருமே சாப்பிடலண்ணா.. ஆத்தா மட்டும் சீக்கிரமே எப்பவும் சாப்பிடும்.. தூங்கிட்டாங்க… அண்ணியை சாப்பிடச் சொன்னா நீ வராம சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. நானும் சாப்பிடல..” எனப் பாவமாய் சொல்ல

தீபனை நன்றாக முறைத்த மூத்தவன் ,

“ஏன் டா… கழுத வயசாகுது இல்ல உனக்கு… இவங்கத் தான் சாப்பிடாம இருக்காங்கன்னா நீ சொல்லக் கூடாது.. நான் சாப்பிடலன்னா சாப்பிட மாட்டீங்களா…? என்ன ஈர வெங்காயத்துக்கு வெயிட் பண்ணின்னீங்க… எல்லாரும்… அப்படியே ஏன் மண்ணு மாதிரி நிக்கிறீங்க… சாப்பிட வாங்க…” என்றான் உத்தரவாய்.

தந்தையை நோக்கி ,

“உங்களுக்கு ப்ரஷர் இருக்கா இல்லையா… மாத்திர சாப்பிட வேண்டாம்…?” என அக்கறையைக் கூட ஆத்திரமாய்க் காட்ட,

அவரோ தனக்குப் ப்ரஷர் இருப்பது மகனுக்கு எப்படித் தெரியும் என ஆச்சரியப்பார்வைப் பார்க்க,

“ரகு சொன்னான்… இப்ப அதுவா முக்கியம்… சாப்பிடலாம் வாங்க..” என்றவன் சாப்பிட அமர,

அனைவரும் உணவுண்ணச் சென்றனர்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே ,

“மதுவுக்குக் கொஞ்சம் பால் கலக்கித் தாங்க..” எனத் தாயைக் கண்டு உரைக்க

வைரமும் “சரி ராஜா..உனக்கும் கலக்கவா..?” என அன்போடு கேட்க

“இல்ல வேண்டாம்…” என மறுக்க, அவருக்கு மகனிடம் ஏதோ ஒன்று குறைந்தாற்போல் தோன்றியது. எப்போதும் தன்னைச் சுற்றி வரும் மகனுக்காக அவர் மனம் மிகவும் ஏக்கம் கொண்டது.

ஆனால் ராஜாவோ தாயை விட தந்தையிடம் மீண்டும் இயல்பாய்ப் பொருந்திப் போனான். வைரமோ மகனிடம் தயங்கித் தயங்கிப் பேச அதுவே அவர்கள் அன்யோன்யத்துக்குத் தடையாய்ப் போனது. தடைகள் உடையுமா…??

மீண்டும் அவர்கள் அறைக்குள் வந்தவுடன் ராஜா மதுவின் மடியில் படுத்துக் கொண்டு வெகு நேரம் தூங்காமல் அப்படியே அமைதியாக இருக்க
“என்னாச்சுங்க.. ஏன் அத்தைக் கிட்ட சரியா பேசல.. மாமா கிட்ட மட்டும் பேசுறீங்க?”

“ப்ச்..அப்பா கிட்ட நான் எப்பவுமே க்ளோஸ் இல்ல.. நான் மட்டும் இல்ல… தீபனும் தான்.. கீர்த்தி தான் அவர்ட்ட க்ளோஸ்.. ஆனா நானும் அம்மாவும் அப்படி இல்லை.. மது.. ரொம்ப ரொம்ப தேடுவேன் அவங்களை… அப்போ… எல்லாத்துக்குமே… ரொம்ப அம்மாப்புள்ளன்னா பார்த்துக்கோ.. இப்ப நான் அம்மா கூட இருந்திருந்தா சத்தியமா உன்னை லவ் பண்ணிருக்க மாட்டேன்.. ஏன்னா எனக்கு அவங்களைத் தவிர எதையும் கவனிக்க நேரமிருக்காது.. எல்லாம் மாறிடும் மது… நீ நான் முன்னாடியே சொன்ன மாதிரி மனசுல எதையும் ஏத்தாத… லீவ் இட்…. எல்லாத்தையும் சரியாக்க எனக்குத் தெரியும்… நான் நினைச்சா முடிச்சிருவேன்.. இப்ப விரிசல் தான் இருக்கு.. விலகல் இல்லை இல்லையா…? நீ தூங்கு…” என்று அவளை விட்டு விலகிப் படுத்தான். அவளும் களைப்பில் உறங்கிப் போனாள்.

ஆம் விரிசல் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் விலகல் இல்லையே… கண்ணாடி இதயங்கள் உடைந்தப் பின்னும் அன்பென்னும் பசைக் கொண்டு ஒட்டவே அனைவரும் முயற்சித்தனர். சிலர் விரிசலைப் பெரிதாக எண்ணி கண்ணாடியையே தூக்கி எறிந்து விடுவர். ஆனால் விரிசல் இருந்தாலும் கூடக் காலப்போக்கில் பசை இறுகிப் பாசத்தைப் பலப்படுத்தி விடும்.

மது உறங்கியப் பின்னும் அவன் உறங்கவே இல்லை. தாயிடம் சென்று சண்டைப் போட வேண்டும். அவர் மடி சாய்ந்து அழ வேண்டும். அவரிடம் இத்தனை ஆண்டுகள் நடந்த எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்று மனதில் ஆசைகள் தோன்றத் தடுமாறிப்போனான். அவரை எங்கே மனம் நோக பேசி விடுவோமோ எனப் பயந்து போனதன் காரணமாகவே அவரிடம் பேச்சைக் குறைத்தான். ஏனெனில் கோபம் கொண்டப் பின் அவன் சொற்கள் அவன் வசமிருக்காது. அந்த காரணத்திற்காகத் தான் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு நிதானம் காக்கிறான்.

ஒரு வேளை தீபன் குடித்து விட்டு வந்த அன்று, அவன் கொஞ்சம் பொறுமையாக நடந்திருந்தால் அவன் தாத்தா அவ்வளவு மோசமாக நடந்திருக்க மாட்டாரோ..? இந்த உண்மை தெரியாமலே போயிருக்கும்…. நிம்மதி தொலைந்திருக்காது…! என்ற எண்ணம் கூடச் சில நேரம் அவனுக்கு வருவதுண்டு.

தூக்கம் வராமல் நெஞ்சில் பாரம் அழுத்த, எழுந்தவன் கீழே சென்று நடக்கலாம் எனப் படிகளில் இறங்கி வர, பார்த்தால் சாமியறையில் உட்கார்ந்திருந்தார் வைரம். அவர் கண்கள் கடவுளையே நோக்க, கண்ணீர் கன்னங்களில் வழிந்தோடிய கரைத் தெரிய, அப்படியே சுவற்றில் சாய்ந்து தூங்கினார்.

அதைக் கண்ட நொடி ஒரு மகனாய் தான் தோற்றுவிற்றதாக உணர்ந்தான் ராஜ் நந்தன்.

அவர் நிலையைக் கண்டும் கலங்காமல் இருக்க அவன் என்ன கல்நெஞ்சக்காரனா…?

கலங்கியவன் உடனே தாயின் அருகில் சென்று அவர் கையைப் பிடித்துத் தன் கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டான். அது சிறுவயதிலிருந்தே ராஜாவின் பழக்கம். வைரம் எப்போது சோகமாக இருந்தாலும் அவன் இப்படிச் செய்கையில் அவருக்கு அது பெருத்த ஆறுதலாய் இருக்கும். நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தவர் , உள்ளுணர்வு ஊந்த,

கண்ணைத் திறந்தால் அவர் கண்ணாய் மணியாய் கருவில் சுமக்காத போதிலும் காலமெல்லாம் மனதில் சுமந்த மகன் அமர்ந்து அவர் கைகள் அவன் கைக்குள் இருக்க,

“ராஜா…” எனக் குரல் தழுதழுக்க அவர் அழைக்க
ராஜாவும் கண்ணில் நீரோடு “ஏன் மா இப்படி உட்கார்ந்திருக்க..?” எனக் கேட்க

“ஒன்னுமில்லப்பா.. நீ வந்துட்டியா… அந்த சந்தோஷம் தான்.. அதான் சாமி கிட்டப் பேசிட்டு இருந்தேன்…”

“சந்தோசமா இருக்கவங்க தான் அழுவாங்களா…?” எனக் கொஞ்சம் சத்தமாய்க் கேட்டவன் கொஞ்சம் அழுத்தமாய்,

“நீங்க எதை நினைச்சு அழுதீங்கன்னு சொல்லுங்கம்மா… என்னப் பிரச்சனை… யார் என்ன சொன்னா..?” என மிரட்டலாய்க் கேட்க

“யார் என்ன சொல்லப்போறாங்க… நீ தான் எங்கிட்டப் பேசல… யார்கிட்டையோ பேசற மாதிரி ஒட்டாம பேசுற… அப்புறம் எப்படி டா சந்தோசமா இருக்க முடியும்..” என அழுத வண்ணம் கேட்க

ராஜாவும் கண்ணீரோடு “நீ மட்டும் இப்படி சாதாரணமா பேசினியா..? யார்கிட்டையோ பேசற மாதிரி பயந்துப் பயந்துப் பேசினே…. நான் உன் புள்ளை தானே… ஏன் என்னை நீ உன் மகன் இல்லன்னு சொன்ன….?” என்று கேட்க

“டேய்… அப்படி சொல்லாதடா ராஜா… நீ தான் டா என் மகன்… வேற யாராவது வந்து உன் அம்மான்னு சொன்னா நீ போயிடுவியா என்னை விட்டு…?” என விசும்பலோடு கேட்க

“நான் போக மாட்டேன் மா.. அதெப்படி உன்னை விட்டுப் போவேன்… நீதான் என் அம்மா…” எனச் சிறுபிள்ளை போல் உரிமையோடு உரைக்க

“அப்புறம் ஏன் டா… நீ வீட்டை விட்டுப் போன…?”

“நானா போனேன்… உன் மாமனார் தான் என்னை விரட்டினார்… நீயும் கேட்கல…” என்றான் கோபத்தோடு.

“ராஜா…. அன்னிக்கு அம்மாவுக்கு அதிர்ச்சிடா.. எதுவுமே நான் எதிர்ப்பார்க்கல…”

“உனக்கே அதிர்ச்சின்னா… அப்போ எனக்கு… எனக்கு நீ அம்மா இல்லனு சொன்னப்போ எப்படி இருந்திருக்கும்.. நான் உன் புள்ளை இல்லன்னு உனக்குத் தெரியும்… ஆனா எனக்கு எதுவுமே தெரியாதே… அப்போ எப்படி வலிச்சிருக்கும்…?” என்றவனுக்குக் கண்ணீர் முட்டிக் கொண்டு கன்னத்தை நனைக்க, குழந்தையாய் வேதனைக் கொண்ட தன் மகனை மடியில் சாய்த்துக் கொண்டார் வைரம்.

“ஏன் மா அப்படி செஞ்ச…?” என மடியில் படுத்த வண்ணமே கேட்க

“ராஜா நான் தானே உன் அம்மா… இப்படி என் புள்ளை இல்லன்னு சொல்லாதடா… நான் சாகும்போது நீ தான் என் தலைப்புள்ளயா கொள்ளிப் போடனும்…” எனச் சொல்ல

“லூசாம்மா… நீ… சும்மா சாவுறது பத்திப் பேசுற…” என்று அதட்டினான்.

“சரி பேசல.. அன்னிக்கு எல்லாமே தப்பா போச்சுடா ராஜா… தாத்தா அப்பாவை மிரட்டினாரு டா…. அப்பாவால தாத்தா பேச்சை மீற முடியல.. நீன்னு இல்ல.. அன்னிக்கு தீபனே எதாவது தப்பு செஞ்சு வீட்டை விட்டு போயிருந்தாலும் தாத்தா தடுத்திருந்தா அப்பா எதுவுமே செஞ்சிருக்க மாட்டார்.. நீயே உன் மனசு தொட்டுச் சொல்லு… அந்த நாள் வரைக்கும் என்னைக்காவது ஒரு விஷயத்துல நானோ உன் அப்பாவோ ஒரு சின்ன வேறுபாடாவது காட்டியிருக்கோமா…? அதுக்கு அப்புறம் தாத்தா நெஞ்சைப் பிடிச்சிட்டு சாஞ்சிட்டார்…”

“நாலு நாள் ஹாஸ்பிட்டலே போச்சு… உன்னைப் பார்க்க அப்பா வந்தார்.. நீ வரல… என் புள்ளை புரிஞ்சிப்பான்னு நினைச்சு தான் நாங்க நினைச்சோமே தவிர… பிரிவான்னு நினைக்கல… இந்த எட்டு வருஷமா நான் நிம்மதியா தூங்கவே இல்லடா… தினமும் இப்படி சாமி முன்னாடி வந்து என் புள்ளையைத் திருப்பித் தானு தான் கேட்பேன்…”

“இப்ப கூட நீ நான் எதாவது சொல்லப்போய் போய்டுவியோன்னு பயத்துல தான் பேசாம இருந்தேன்… இன்னொரு தடவ நீ போயிட்டா அம்மா நிஜமா செத்துடுவேன் டா..” என்றார் கதறலோடு.

ராஜாவின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. அவன் மதுவிடம் சொன்ன அதே வார்த்தைகள்.. வார்த்தைகளும் ஒன்று..! வலிகளும் ஒன்று தான்..!! காயம் ஒன்றானாலும் காரணம் வேறல்லவா..??

வேறாக இருக்கட்டும்.. அவன் வேர் எதுவானாலும் இருக்கட்டும்..! ஆனால் அவன் உயிர் இங்குதான் நிலைக்கொண்டுள்ளது. அதை அவனும் அறிவான்.
உறவுகளைப் பிரிந்து அவன் உயிர் பிரியும் வேதனையைத் தானே அனுபவித்தான்.

சில சமயம் ஆராய்ச்சிகள் அற்றதாகி விடுகிறது வாழ்க்கை. அன்புக்கு ஆராய்ச்சி தேவை இல்லை. ஆராய்ச்சி செய்யும்போது அங்கு அன்பற்றதாகி விடுகிறது வாழ்க்கை. பேருந்தில் ஒரு குழந்தையைப் பார்த்து சிரிக்கிறோம். அன்பின் சிறு செயல்.. அர்த்தமில்லாத ஒன்று. ஆனால் அவைதான் வாழ்க்கையை அர்த்தமாக்கி விடுகிறது.

தாயை அணைத்துக் கொண்டவன், “இனிமே நீ இப்படி சொல்லாத மா… ப்ளீஸ்… மனசு வலிக்குது… நானும் இனிமே உன்னை விட்டுப் போக மாட்டேன்..” என்றான் கலங்கிய கண்களோடு.

அவனுக்கு அன்னையிடத்தில் இல்லாத அன்பா…? அந்த அதீதத்தின் காரணமாய்த் தானே அகத்தினில் அடி வாங்கி வீழ்ந்தான். இப்போது தாய் அழவும் அதுவும் முன்பு எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பவர் அவன் இப்போது சில வருடங்களாய்ப் பார்க்கும்போதெல்லாம் அவரது தோற்றத்தில் உள்ள மாற்றம்.இப்போதும் கூடத் தனக்காக கதறியழும் தன் தாய். அவர் பெற்ற பிள்ளைகள் அவருடனே இருந்தும் கூட அவனுக்காக ஏங்கி இருக்கிறார்.

இப்போதும் அவரது ஏக்கத்தினை அவன் கண்கூடாகப் பார்க்கத் தானே செய்தான். மனம் கதறியழத்தான் செய்தது. அவன் வலிகள் அவனோடு இருக்கட்டும். இனி தாய் அழுகையை அவனால் காண சகிக்காது. இத்தனை வருடமும் அழுதவர் தான். ஆனால் அப்போது அது கண்முன் நிகழவில்லை. அவன் நெருங்க விடவில்லையே. அவனது பலமும் பலவீனமும் அவன் நன்றாக அறிவானே. அவர்களது அன்புக் கண்டிப்பாக அவனை அசைக்கும் என்று.

இப்போது தான் கொஞ்சம் தெளிவு வந்திருக்கிறது. இனி எல்லாம் தெளியும். எதுவும் மறையவில்லை. காயங்கள்...! அதற்குண்டான காரணங்கள்…! எதுவும் மறையவில்லை….! மாறவும் இல்லை…!!

ஆனால் காலம்…! காலம் மட்டுமே மாறியுள்ளது. இனி காலமும் மாறும் காயமும் ஆறும்..!!அ
 
“போர்க்களத்தில் தீயாவாய்..!
தாய் மடியில் பூவாவாய்..!
ஆண்டவனே ஆணையிட்டும்
தாய் இட்ட கோட்டை தாண்டிட மாட்டாய்…!!”

அடுத்த நாள் காலையில் அனைவரும் உணவுண்ண அமர்ந்திருக்கையில் ராஜ் நந்தன் மட்டும் சாப்பிட வரவில்லை.அவன் பாட்டிற்கு உட்கார்ந்து நியூஸ் பார்க்க, சுந்தரம்,

“ஹே..! ராஜா வாப்பா சேர்ந்து சாப்பிடலாம்..” என அழைக்க

“இல்லப்பா.. நீங்க சாப்பிடுங்க… நான் அப்புறமா சாப்பிடுறேன்..” என மறுக்க

மது அவனருகில் சென்று “வாங்க… சாப்பிடலாம்… எல்லாரும் வருத்தப்படுவாங்க… சும்மா தானே இருக்கிங்க.. ஒண்ணா சாப்பிடலாம்…” எனக் கூப்பிட

“ஹே..! எனக்குப் பசிக்கும்போது சாப்பிட்டுக்கிறேன்.. முதல்ல நீ சாப்பிடு… என் பையன் சாப்பிட்ட பின்னாடி நான் சாப்பிடறேன்..போ..போ..” என விரட்ட

அவளும் பெருமூச்செறிந்து விட்டு சாப்பிடச் சென்றாள்.

கீர்த்தியும் , “ அண்ணா… அம்மா நீயாவது சொல்லேன்மா” எனக் கூப்பிட

வைரமோ, “அவனுக்கு இஷ்டப்படுறப்போ சாப்பிட்டுப்பான்… நீங்க அமைதியா சாப்பிட்டு கிளம்புற வழியைப் பாருங்க.. நீ ஏதோ ப்ராஜ்க்ட் விஷயமா போகனும்னு சொன்னியே… கிளம்பு கீர்த்தி..” எனச் சொல்ல, ராஜா தாயைப் பார்த்து கண்சிமிட்ட, அதை அனைவரும் கண்டுகொண்டனர்.

சுந்தரம் தீபனிடம், “டேய்…. என்னடா நடக்குது இங்க…. நேத்து அப்படி சீறினான் உங்கண்ணன்.. இன்னிக்கு இவளைப் பார்த்துக் கண்ணடிக்கிறான்..?” எனக் கேட்க

“அதான் தெரியலப்பா… ஏய் கீர்த்து… உனக்குத் தெரியுமா…?” எனத் தங்கையிடம் கேட்க

அவளோ “அண்ணா…என்ன நடக்குது இங்க…?” எனக் கத்த

“என்ன நடந்துச்சு… நீ சாப்பிடு..” என வைரம் மகளை அதட்ட,
மதுரவசனியோ அனைத்தும் புன்னகையோடு பார்த்தாள். கணவனின் முகத்தில் தெரிந்த நிர்மலமான அமைதி அவளுள்ளும் அமைதியைத் தோற்றுவித்தது.
“ஏன் வைரம்… நீ எங்கூட தானே இருந்த… எப்ப உன் புள்ளையை சமாதானம் செஞ்ச..?” என சுந்தருமும் மனைவியைக் கேட்டுப் பார்க்க

“பேசாம சாப்பிட மாட்டீங்களா..? அதெல்லாம் எனக்கும் என் புள்ளைக்கும் ஆயிரம் இருக்கும்…” என்று சொல்ல அவரும் புன்னகையோடு சாப்பிடத் தொடங்கினார். மனைவியை இப்படிப் பார்த்து எத்தனை வருடங்கள் ஆயிற்று…!

பின்னர் சுந்தரும் ராஜ தீபனும் வேலைக்குச் செல்ல, கீர்த்தியும் வெளியே போக, மதுரவசனியை அழைத்த ராஜா

“மதும்மா… கொஞ்சம் நேரம் போய் ரெஸ்ட் எடு….” எனச் சொல்ல

“ப்ச்.. இப்ப தானே சாப்பிட்டேன்… அதுக்குள்ள என்னங்க..” எனச் சிணுங்க,

“மது சொன்னா கேட்க மாட்டியா நீ…. கொஞ்சம் ரிலாக்ஸா தூங்குன்னு சொல்றேன்ல..” என்றபடி அவளை கையை இழுத்துப் பிடித்து மாடிக்கு அழைத்துச் சென்றவன் அவளைக் கட்டிக் கொண்டவன் பின்னே குனிந்து ,

அவள் வயிற்றில் முத்தமிட்டு ,

“செல்லக்குட்டி….. டயர்டா இருக்கா… இப்ப ரெஸ்ட் எடுப்பீங்களாம்…” எனச் சொல்ல

“யாருக்காகவும் கீழ இறங்க மாட்டேன்னு சொல்வீங்க..” எனப் புருவம் உயர்த்தி அவனை நக்கலாகப் பார்த்தவாறே மதுரவசனி கேட்க
அவள் தலையோடு முட்டியவன் “என் புள்ளைக்காக மட்டும் தான் இறங்கிப் போவேன் போதுமா.. என் ரத்தம்… எனக்கு ஸ்பெஷல்.. இவன் வந்த பின்னாடி தான் எனக்கு எல்லாரும் வேணும்னு தோணுது…” என உரைக்க

“அப்போ.. நான் என்ன எல்லாரையும் பிரிச்சேனா..?” எனச் சண்டையிடுவது போல் கேட்க

“ஏன் இவ்வளவு கோவம்.. ம்ம்… நீ என் கூட இருந்தா எல்லாத்தையும் மறக்க வைச்சிடுற… என்னையே மறந்துடுறேன்.. அப்புறம் எங்கிருந்து எல்லாரையும் நான் நினைக்கறது…ம்ம்… என்னை அப்படி மயக்கிற டி நீ… அதனால் யாரையும் நினைக்க முடியல..” என அவள் காதில் உரசிய வண்ணம் சொல்ல, அவளுள் இதமாய் ஒரு நடுக்கம். சுகமாய் ஒரு குளிர்…!! அனல் மேல் பனித்துளி என்ற நிலையில் அவள் நிற்க,

“மது….. நேத்து நீ சரியாவே தூங்கல… இப்ப கொஞ்சம் சும்மா படுத்துக்கோ… நான் உனக்கு ஜூஸ் எடுத்துட்டு வரேன்… கொஞ்ச நேரம் கழிச்சு..சரியாடா..” எனச் சொல்ல

அவன் மயங்கினான் என்று சொல்ல சொல்ல அவளும் மயங்கினாள்.

“ம்ம்.. இப்படி பேசியே ஏமாத்துங்க… என்னமா பல்டியடிக்கிறீங்க….” என்றவாறே அவள் மெத்தையில் படுத்தாள்.

பின்னர் கீழே இறங்கிய ராஜா,

“ம்ம்மா….பசிக்குதும்மா” எனக் கத்த
“வந்துட்டேன் டா… உன்னை தான் சாப்பிடக் கூப்பிட்டாங்களே…. உனக்கு பிடிவாதம்…. இப்ப பாரு பசின்னு கத்துற..” என்றவாறே இட்லியைப் பிட்டு அவனுக்கு ஊட்டப் போக

“எல்லா இம்சையும் போயாச்சாமா…?” என்றான் சுற்றும் முற்றும் பார்த்தவாறே.

“நாங்களாம் உனக்கு இம்சையாடா..” என்றபடி தீபன் வந்து முதுகில் அடிக்க

“ஆ…….டேய்…லூசு…” என அண்ணன் திட்ட

“டேய்.. பேராண்டி ஆத்தாவையுமா இம்சை சொன்ன…?” என வைதேகி கேட்க

வைரமோ “ நீ இன்னும் வெளியே போகலயா…?” என மகனிடம் கேட்க

“நான் மட்டுமில்ல யாரும் போகல… உங்களை வாட்ச் செய்ய வெயிட் பண்ணோம்..” என்றவுடன் சுந்தரும் கீர்த்தியும் வந்து நின்றனர்.

“அதானே அம்மாவும் புள்ளையும் தனியா கொஞ்சுக்கவா எங்களை விரட்டினீங்க..?” எனச் சிரிப்போடு கீர்த்திக் கேட்க

“ஏய்… என்ன கீது எங்களுக்கு என்ன பயமா… அம்மா.. நீ ஊட்டுமா…” என ராஜா அதிகாரமாய்ச் சொல்ல

வைரமும் சிரிப்புடனே மகனுக்கு உணவூட்டினார். இதையெல்லாம் மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மதுரவசனிக்கு மனம் கொள்ளா மகிழ்ச்சி கொண்டாள்.

இப்படி அவர்கள் வாழ்வில் பல வருடங்கள் கழித்து ஆனந்தம் தாண்டவமாடியது.

அப்படிப்பட்ட அழகிய தருணத்தில் எந்த தினத்தை ராஜ் நந்தன் மறக்க நினைத்தானோ… எது தன் வாழ்வில் வந்திருக்க கூடாது என்று அல்லும் பகலும் எண்ணினானோ அந்த நாள் வந்தது. அதாகப்பட்டது ராஜ தீபனின் பிறந்த நாள்…! ராஜ் நந்தன் தன் அடையாளத்தை இழந்த நாள்…!!

ஆட்டம் தொடரும்…!!

 
Top