Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரம்யா ராஜன் அனிதாவின் அப்பா 5 1

Advertisement

Admin

Admin
Member
பகுதி – 5

ஹரி ஒருபக்கம் இளைத்துக்கொண்டே செல்ல...அனியும் தேய்ந்து கொண்டே சென்றாள்... சரியாகச் சாப்பிடுவதே இல்லை.... மீனாவை பற்றிச் சொல்லவே வேண்டாம். அவள் நல்ல நாளிலேயே அப்படித்தான் இருப்பாள். மகள் சிறிது நாட்களில் பழையபடி ஆகிவிடுவாள் என்று நினைத்ததற்கு மாறாக.... அவள் தனக்குள்ளேயே வைத்து மறுகிகிறாள் என அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

மறுநாள் காலை மீனா மகளைப் பள்ளியில் விடச் சென்ற போது.... ஹரியின் அத்தை, “சின்ன விஷயத்தை ஏன் இப்படி ஆள் ஆளுக்குப் பெரிசு பண்றீங்க? சின்னக் குழந்தைக்கு நம்ம நிலைமை புரியுமா....அவ கிளாஸ்க்கு வந்தா என்ன? மொரட்டுத்தனமா குழந்தைங்க கிட்ட எதுவும் திணிக்கக் கூடாது. பக்குவமா பார்த்து தான் செய்யணும்.”

“நான் ஹரிகிட்ட சொல்றேன் முன்ன மாதிரி ரொம்ப இல்லாம சாதாரணமா பேசி பழகிட்டு இருக்கட்டும். அவளே கொஞ்ச நாள்ல சரியாகிடுவா....” என்றார்.

அவர் சொன்னதும் சரி என்று பட்டதால்... மாலை சீக்கிரம் வீட்டிற்கு வந்த மீனா மகளைத் தயார் செய்து, எங்கே என்று சொல்லாமலே அழைத்துச் சென்றாள். அவளுக்கு மகள் பழைய மாதிரி இருந்தால் போதுமென்று இருந்தது.

ஹரியின் அத்தை தேவ்விடம் விஷயத்தைச் சொல்லி இருந்ததால்... அவனும் ஹரியை பார்க்க வந்திருந்தான்.

“டேய் தப்பு உன் மேல தான். சின்னக் குழந்தை மனசுல ஆசையை உண்டு பண்ணது நீ.... அப்பான்னா யாருன்னே தெரியாம இருந்த குழந்தைக்கு, இவர் நமக்கு அப்பாவா இருந்தா நல்லா இருக்குமேன்னு நினைக்க வச்சது நீ.... மரியாதையா மீனாவை கல்யாணம் பண்ணிக்கிற வழிய பாரு....”

“எதாவது உளறாத தேவ்...”

“நான் ஒன்னும் உளறலை.... உண்மையா உன் மனசை தொட்டு சொல்லு... உன்னால அனி இல்லாம இருக்க முடியுமா... நீ அந்தக் குழந்தையோட பழகிறதை நானே பார்த்திருக்கேன். நீ ஊரான் வீட்டு பிள்ளை மாதிரி இல்லை... உன் சொந்த குழ்நதை மாதிரி தான் அனிதாவை பார்த்துகிட்ட.... அதனால தான் அந்தக் குழந்தை உன்னை அப்பாவா நினைக்க ஆரம்பிச்சிடுச்சு.”

தேவ் ஹரியை திட்டிக்கொண்டு இருந்த போது தான் மீனா அனியுடன் வந்தாள்.
அவர்கள் வருவதைப் பார்த்துத் தேவ் பேச்சை நிறுத்த.... ஹரி அனியையே பார்த்துக்கொண்டிருந்தான். தேவ் அன்று தான் மீனாவை பார்க்கிறான். அவளைப் பார்த்ததும் அவனுக்கு மனதிற்குள் திருப்தியாகத்தான் இருந்தது.

“அனி இன்னையில இருந்து திரும்பக் கிளாஸ் வருவா.... கிளாஸ் முடிஞ்சதும் அவளை அனுப்பிடுங்க.” மீனா ஹரியிடம் சொல்ல.... அவனிடமும் அவன் அத்தை பேசி இருந்தார். அதனால் சம்மதமாகத் தலையசைத்தான்.

ஹரி அனியிடம் வா என்பதாகக் கை நீட்ட மீனாவும் மகளையே ஆர்வமாகப் பார்த்திருந்தாள். அனி இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.... ஹரி புன்னகையுடன் அவளிடம் சென்றவன் “என்ன ஆச்சு மேடம்? கிளாஸுக்கு வர இஷ்ட்டம் இல்லையா...” என்றான்.

“நான் உங்களை எப்படிக் கூப்பிடனும்?” முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு அனி கேட்டதும், ஹரி மீனா இருவரும் அவளைப் புரியாமல் பார்க்க.... தேவ் சுவாரசியமாகப் பார்த்திருந்தான்.

“புதுசா என்ன சந்தேகம்? எப்பவும் போலச் சார்ன்னு கூப்பிடு இல்லைன்னா அங்கிள்ன்னு கூப்பிடு.” ஹரி சொல்ல.... அனியின் முகத்தில் ஏமாற்றம் பரவியது.

“எனக்கு உங்களை அப்பான்னு கூப்பிட தான் பிடிக்கும். வேற எப்படியும் கூப்பிட வேண்டாம்.” என்றவள், திரும்பி அங்கிருந்து அவள் வீட்டிற்குச் சிட்டாக ஓடி விட்டாள்.

அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த ஹரி மீனா இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்க்க கூட முடியவில்லை. மகள் மனதை மாற்றிக்கொள்ளவே மாட்டாள் என்று நினைத்த மீனா அங்கிருந்து தளர்ந்த நடையுடன் செல்ல.... ஹரி தலையைக் கைகளில் தாங்கியபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட்டான்.


“நீ எனக்கு அப்பாவா இருக்கிறதுன்னா இரு.... இல்லைன்னா வேண்டாம்.” எனத் தெளிவாகப் புரியவைத்த அனியை மனதிற்குள் பாராட்டிய தேவ் “நல்லா யோசி ஹரி.... எத்தனை நாள் தனியாவே இருப்ப.... உன்னைப் பத்தி அம்மா எவ்வளுவு கவலைப்படுறாங்க.”

“உனக்காக இல்லைனாலும் அந்தக் குழந்தைக்காக யோசி...” என்றவன் விடைபெற்று செல்ல... ஹரி வகுப்பு எடுக்க எழுந்து சென்றான்.
வீட்டிற்கு வந்த அனி கட்டிலில் சென்று படுத்துவிட.... மீனா அவள் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். அவள் இனி எதையும் பற்றி யோசிப்பதாக இல்லை.... மகளே சில நாட்களில் சரியாகி விடுவாள் என்று நம்பிக்கை மட்டுமே கொள்ள முடிந்தது.

அன்றும் ஹரி வகுப்பு முடிந்து செல்லும் போது மாடியில் இருந்து அனி பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தக் காட்சி அவனுக்கு எதோ சோக சித்திரத்தை பார்ப்பது போல் இருந்தது. துறுதுறு விழிகளுடன் பட்டாம்பூச்சியாகப் பறந்து திறந்த குழந்தையை.... இப்படியாக்கி விட்டோமே என்று அவனுக்குக் கவலையாக இருந்தது.

வீட்டிற்கு வந்தவன் அதே யோசனையாக இருந்தான். அவனுக்கு அனியை மகளாக ஏற்றுக்கொள்ள மிகவும் விருப்பம். ஆனால் அவளை மகளாக அடைய வேண்டும் என்றால்.... மீனாவை திருமணம் செய்ய வேண்டுமே அது தான் இடித்தது. இந்த அனி எல்லாவற்றையும் மறந்து விட்டுத் தன்னிடம் பழைய மாதிரி இருக்க மாட்டாளா என்று ஏக்கமாக இருந்தது.

அவளை விட்டு விலகி செல்லவும் மனமில்லை... அவனாலும் அவளைப் பார்க்காமல் இருக்க முடியாது. இதற்கு என்ன தான் தீர்வு என்று யோசித்தவனுக்கு, எந்த விடையும் கிடைக்காமல் போக... தனது செல்லை எடுத்து அதில் யாரையோ அழைத்தான். அந்தப் பக்கம் அழைப்பு எடுக்கப் பட்டதும்,

“அம்மா, நீங்க இங்க பெங்களூர் வாங்க.” என்றான் நேரடியாக....

தன்னால் ஒரு விஷயத்திற்குத் தீர்வு காணமுடியவில்லை என்றால் தான், மகன் தன்னை அழைப்பான் என்று வைஷ்ணவிக்கு நன்றாகத் தெரியும்.

“என்ன டா பண்ணி வச்சிருக்க?” என்றார் அவரும் மகனை அறிந்தவராக....

“நீங்க இங்க வாங்க சொல்றேன்.” என்றவன், அழைப்பை துண்டித்து விட.... வைஷ்ணவி தன் கணவர் வெங்கட்டை தேடி சென்றார்.


இரண்டு நாட்கள் சென்று பேருந்து நிலையத்தில் இருந்து தன் அம்மாவை அழைத்துச் செல்ல ஹரி வந்திருந்தான். காட்டன் சுடிதாரில் ஒரு பையுடன் பஸ்சில் இருந்து இறங்கியவரை பார்ததும் ஹரியின் முகத்தில் முறுவல் அரும்பியது.

“அம்மா....” என்று உறச்சாகமாக அழைத்தவனைத் திரும்பி பார்த்த வைஷ்ணவி “ஹாய் டா.... வந்து ரொம்ப நேரம் ஆச்சா?” என்றார் மலர்ந்த முகத்துடன்.

“இல்லை.... இப்ப தான் கொஞ்ச நேரம் முன்னாடி வந்தேன்.” என்றவன், அவரிடம் இருந்த பையை வாங்கி வண்டியின் முன்பு வைத்துக்கொண்டதும், வைஷ்ணவி மகனின் தோளைப்பிடித்து வண்டியில் ஏறி அமர்ந்தார்.

“நீங்க என் அம்மான்னு சொன்னா யாரும் நம்பவே மாட்டாங்க. ஒரு புடவையாவது கட்டிட்டு வரக் கூடாது. பார்க்கிறவங்க இவங்க உன் அக்காவான்னு கேட்கணும் அதுக்குத் தான...” வண்டி ஓட்டிக்கொண்டே ஹரி தன் அம்மாவை வம்பிழுக்க....

“ஹே இப்ப என்ன சொன்ன உனக்கு அக்கா மாதிரியா..... இல்லைடா மகனே உனக்குத் தங்கச்சி மாதிரி இருக்கணும். அது தான் என்னோட டார்கெட்.” அவரும் மகனுக்கு ஈடாகப் பேச...

“தங்கச்சியா.... அதுக்குத் தான் ஒரு பிசாசு இருக்கே... அப்புறம் நீங்க வேற எதுக்கு?.... அந்தப் பிசாசு என்னைத் தினமும் போன் செஞ்சு டார்ச்சர் பண்ணுது. ஒரு நாள் அவளுக்கு அடி இருக்கு....” என்றான் கடுப்பாக.

மகன் ஏன் அப்படிப் பேசுகிறான் என்று தெரியும் என்பதால்.... அவர் அமைதியாக இருந்தார். சிறிது நேரத்தில் ஹரியே திரும்பப் பேச்சை ஆரம்பித்தான்.

“அப்புறம் வெங்கட் என்ன பண்றார்? உங்களை எப்படி மனசு வந்து அனுப்பி வச்சார்? கண்டிப்பா எனக்கு அர்ச்சனை நடந்திருக்குமே.....”

“ம்ம்.... ம்ம்.... நடந்தது நடந்தது..... அவன் இங்க வர வேண்டியது தான.... எதுக்கு உன்னைக் கூப்பிடுறான்னு சத்தம் போட்டுட்டு தான் இருந்தார்.” என்றவர், மகன் எதற்கு அழைத்தான் என்று மட்டும் கேட்கவே இல்லை... அவனே சொல்லட்டும் என்று இருந்தார்.



தந்தையைப் பற்றிய நினைவில் ஹரியின் முகத்திலும் முறுவல் அரும்பியது. அவர்களும் எல்லா அப்பா மகன்களைப் போல்... ஏட்டிக்குப் போட்டியாகத் தான் செய்வார்கள்.


வீட்டிற்கு வந்ததும் ஹரியே தன் அம்மாவிற்குக் காபி கலந்து எடுத்து வந்தவன், அதைச் சென்று அவரிடம் கொடுக்க.... அதை வாங்கிப் பருகியவர் “ம்ம்... பேஷ் பேஷ் காபி நல்லா இருக்கு.” என்றபடி பால்கனிக்கு சென்றார்.

அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்த வைஷ்ணவி பெங்களூரின் குளிரை அனுபவித்தவர் “நல்ல கிளைமேட் ஆனாலும் எங்க ஊர் போல வராது.”என்றார் அலட்டுவது போல்... பின்னே அவர் இருப்பது ஊட்டியில் அல்லவா.... அவரைப் பொய்யாக முறைத்தபடி எதிரில் தரையில் அமர்ந்தான் ஹரி.

அவன் முகத்தில் இருந்தே தீவிரமாக எதையோ சொல்லப்போகிறான் என்று புரிந்தது. கடவுளே நல்ல விஷயமா இருக்கட்டும் என்று மனதிற்குள் வேண்டியபடி இருந்தவர், வெளியே அமைதியாக இருப்பதைப் போலக் காட்டிக்கொண்டார்.

எப்படி ஆரம்பிப்பது என்று யோசனையில் இருந்த ஹரி, சிறிது நேரத்தில் எப்படியும் பேசிவிடுவது என்ற முடிவோடு அனிதாவை பற்றிச் சொல்ல ஆரம்பித்தான். வைஷ்ணவியும் மகனின் பேச்சில் குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டு இருந்தார். அவன் முழுவதும் சொல்லி முடித்ததும்,

“அந்தக் குழந்தைக்கு அப்பா இருந்திருந்தா... நீ பண்றது எல்லாம் சாதாரணமா எடுத்திருக்கும். அப்பா இல்லாததுனால.... அந்த இடத்தில உன்னை வச்சு அந்தக் குழந்தை பார்த்திருக்கு.... இதுல அந்தக் குழந்தை மேல எந்தத் தப்பும் சொல்ல முடியாது.”

தாய் பேசப்பேச ஹரி அமைதியாக இருந்தான்.

“இப்ப இதுல நான் என்ன செய்யணும்ன்னு எதிர்ப்பார்க்கிற ஹரி?”

“எனக்குத் தெரியலை மா....” என்றான் பாவமாக.... அது உண்மையும் கூடத்தான். உண்மையிலேயே அவனுக்கு என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை.... வைஷ்ணவியும் அப்போதைக்கு ஒன்றும் பேசவில்லை..... இது சட்டென்று முடிவெடுக்கும் விஷயம் இல்லை. நன்றாக யோசித்துச் செய்ய வேண்டும் என்று நினைத்தார்.

சமையல் செய்பவரை விலக்கி விட்டு அவரே மகனுக்குச் சமையல் செய்து பரிமாறினார். இருவரும் வீட்டு விஷயங்களைப் பேசிக்கொண்டு சாப்பிட்டு முடித்தனர். ஹரிஹரன் வெளியே கிளம்பியதும் வைஷ்ணவி தேவ்வை அழைத்தார்.

“ஹாய் தேவ் எப்படி இருக்க?”


“நல்லா இருக்கேன் மா.... நீங்க இங்க வந்திருக்கீங்களா.... ஹரி சொல்லவே இல்லை.... எப்ப வந்தீங்க??

“இன்னைக்குத் தான் வந்தேன் தேவ். அப்புறம் உன் ப்ரண்ட் என்னவோ சொல்றான்னே? உனக்கு அதைப் பத்தி தெரியுமா....” என்றதும், தேவ் ஒன்றுவிடாமல் கொட்ட துவங்க.

“எனக்கு நீ ஒரு உதவி பண்ணனும். அனிதாவோட குடும்பத்தைப் பத்தி நல்லா விசாரிச்சு சொல்லணும்.” என்றார்.

“கண்டிப்பா மா....எல்லா விவரத்தோட சீக்கிரமே உங்களைப் பார்க்க வரேன்.” என்றவன், மகிழ்ச்சியுடன் கைபேசியை வைத்தான்.




ஹரியே அவன் அம்மாவை வர சொல்லி எல்லாவற்றையும் சொல்லி இருக்கிறான் என்றால்.... கண்டிப்பாக நல்ல முடிவே ஏற்படும் என்று நினைத்தான்.


வைஷ்ணவி வீட்டை சுற்றிப் பார்த்துக்கொண்டு இருந்தார். மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட அபார்ட்மெண்ட். ஒவ்வொரு அறையாக எல்லாம் சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே வந்தவர், ஹரிஹரனின் அறைக்குள் சென்ற போது.... அங்கே அவனும் பிருந்தாவும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் நிறைய இருந்தது.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் பொருத்தமான ஜோடி இருந்தாலும் இருவரில் ஹரியே நிறம் அதிகம். பெண் பார்க்க சென்ற போது... ஹரியை பார்த்ததும் பிருந்தாவுக்கு உடனே பிடித்து விட்டது. அவன் என்ன சொல்லப்போகிறானோ என்று கவலையாகப் பார்த்துக்கொண்டு இருந்தவள், அவன் தனக்கும் சம்மதம் என்று சொன்ன நொடியில் இருந்து ஹரியை அவளுடையவனாகவே எண்ண ஆரம்பித்து விட்டாள். அவள் காட்டிய அதிக அன்பில் ஹரி கட்டுண்டு தான் இருந்தான்.

 
:love::love::love:

அனி குட்டி நீ கேட்டியே ஒரு கேள்வி & உன்னோட பதில் :love:

ஹரி மீனாக்குchoice இல்லை இப்போ.....
முடிவெடுத்தே ஆகணும்......

வைசு களத்தில் இறங்கியாச்சு......
பையனுக்கு என்ன ஐடியா குடுப்பங்களோ???
 
Last edited:
Top